Friday, July 30, 2010

முஹர்ரம் மாதம் பிறை 10ல் மட்டும் நோன்பு வைத்தால் போதுமா? அல்லது 9, 10 ??

? முஹர்ரம் மாதம் பிறை 10ல் மட்டும் நோன்பு வைத்தால் போதுமா? அல்லது 9, 10 ஆகிய இரு தினங்கள் சேர்த்துத் தான் நோன்பு வைக்க வேண்டுமா? அதாவது 9ஆம் நாள் கண்டிப்பாக நோன்பு வைக்க வேண்டுமா? என்பதை விளக்கவும்.




அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நால் நோன்பு நோற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கடம் அது பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர்கள் இது தான் மூசா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னை வெற்றி கொண்ட நாள் என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் இவர்களை விட மூசா (அலை) அவர்களுக்கு நாமே அதிக உரிமையுடையவர்கள். ஆகவே, நீங்கள் இந்நால் நோன்பு வையுங்கள் என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 4737

இந்த ஹதீஸின் அடிப்படையில் முஹர்ரம் 10ம் நாள் நோன்பு நோற்பது நபிவழியாகும். இந்த ஹதீஸில் 10வது நாள் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் மற்றொரு ஹதீஸில் 9வது நாளும் சேர்த்து நோன்பு நோற்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே? என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2088

இந்த ஹதீஸில், அடுத்த ஆண்டில் 9வது நாளும் நோன்பு நோற்போம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அடுத்த ஆண்டில் அவர்கள் இறந்து விட்டார்கள். எனவே 9ம் நாள் சேர்த்து நோன்பு வைப்பது தான் நபி (ஸல்) அவர்களின் இறுதிக் கட்டளை என்பது தெளிவாகின்றது. அதாவது முஹர்ரம் 10ம் நாள் மட்டுமே நோன்பு வைத்த நபி (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாறு செய்யும் விதமாக 9ம் நாளும் சேர்த்து நோன்பு வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். எனவே 9, 10 ஆகிய இரு நாட்களும் சேர்த்து நோன்பு வைப்பது தான் நபிவழியாகும். 10ம் நாள் மட்டும் தனித்து வைப்பது விரும்பத்தக்கதல்ல.

எனினும் ஒருவர் 9ம் நாள் நோன்பை வைக்க இயலாமல் விட்டு விட்டால், 10ம் நாள் மட்டும் தனியாக வைப்பது குற்றமாகாது. ஏனெனில் பொதுவாகவே ஆஷூரா நோன்பைப் பொறுத்த வரை ரமளான் நோன்பைப் போன்று கட்டாயக் கடமையல்ல! விரும்பியவர் வைக்கலாம்; விரும்பியவர் விட்டு விடலாம் என்ற சலுகை உள்ளது.

அறியாமைக் கால மக்கள் (குறைஷியர்) முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று நோன்பு நோற்று வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்பு வரை முஹர்ரம் பத்தாவது நாளில் நோன்பு நோற்றனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முஹர்ரம் பத்தாவது நாள் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாளாகும். நாடியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம்; நாடியவர் அ(ந்நாளில் நோன்பு நோற்ப)தை விட்டு விடலாம் என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2072

--> Q/A Ehathuvam Magazine Apr 2009

No comments:

Post a Comment