Saturday, July 24, 2010

படுத்திருக்கும் போது ஸ்கலிதம் ஏற்பட்டாலோ ??

? படுத்திருக்கும் போது ஸ்கலிதம் ஏற்பட்டாலோ அல்லது இல்லறத்தில் ஈடுபட்டாலோ பாய், போர்வை போன்றவற்றைத் துவைக்க வேண்டுமா?




ஸ்கலிதம் அல்லது உடலுறவின் காரணமாக ஆடையில் அசுத்தம் ஏற்பட்டால் அந்த இடத்தை மட்டும் கழுவி விட்டால் போதுமானது. ஆடை முழுவதையும் துவைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அந்த அசுத்தம் காய்ந்து விட்டால் அந்தப் பகுதியைச் சுரண்டி விட்டால் போதும்.

நான் நபி (ஸல்) அவர்களுடைய ஆடையில் இந்திரியம் பட்ட இடத்தைக் கழுவுவேன். அந்த ஆடையோடு நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வார்கள். ஆடையில் ஈரம் தெளிவாகத் தெரியும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 229

நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். இரு ஆடைகளில் (உறங்கிய) எனக்கு உறக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டது. எனவே அவ்விரு ஆடைகளையும் தண்ணீரில் முக்கி வைத்தேன். இதை ஆயிஷா (ரலி) அவர்களின் பணிப்பெண் பார்த்து விட்டு, ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவித்து விட்டார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் என்னை வரச் சொல்லி ஆளனுப்பினார்கள். அப்போது அவர்கள், ''உங்கள் ஆடைகளை இவ்வாறு நீங்கள் செய்வதற்குக் காரணம் என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், ''தூங்கக் கூடியவர் எதைக் கனவில் காண்பாரோ அதை நான் கண்டேன்'' என்று கூறினேன். ''அந்த ஆடைகளில் ஏதேனும் (இந்திரியத் துளி) பட்டிருக்கக் கண்டீர்களா?'' என்று கேட்டார்கள். இல்லை என்று நான் பதிலளித்தேன். ''அப்படியே எதையேனும் நீங்கள் பார்த்திருந்தால் கூட அதைக் கழுவத் தான் வேண்டுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் பட்டுக் காய்ந்து விட்ட இந்திரியத்தை நான் என் நகத்தால் சுரண்டித் தான் விடுவேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷிஹாப் அல் கவ்லானீ
நூல்: முஸ்லிம் 437


-- Q/A Ehathuvam Jan 07

No comments:

Post a Comment