Friday, July 30, 2010

ஜின்கள் மனிதர்களுக்குத் தொந்தரவு செய்ய முடியுமா?

? ஜின்கள் மனிதர்களுக்குத் தொந்தரவு செய்ய முடியுமா? ஜின்கள் தன்னை மூச்சுத் திணற அமுக்கியதாகவும் சிலர் கூறுகின்றனர். இவ்வாறு நடக்குமா?


ஜின் என்ற பெயரில் ஒரு படைப்பினம் உள்ளதாகத் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. இந்த இனத்தவர் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் மனிதர்களின் கண்களுக்குத் தென்பட மாட்டார்கள். இந்த விஷயத்தில் இந்தப் படைப்பு வானவர்களைப் போன்றது எனலாம். ஆயினும் இந்தப் படைப்பினர் மனிதர்களைப் போலவே பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள். மனிதர்களைப் போலவே சொர்க்கம், நரகத்தை அடைவார்கள்.

வானங்களுக்குச் சென்று வரும் ஆற்றல் படைத்தவர்களாக திருக்குர்ஆன் ஜின்களைப் பற்றிக் கூறினாலும் மனிதர்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும், அடிக்கும், உதைக்கும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.

மனிதர்களின் எண்ணங்களில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். அதன் மூலம் இறைக் கடமைகளை நிறைவேற்றா வண்ணம் இடையூறுகளை ஏற்படுத்தும்.

மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டு, மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.

(அல்குர்ஆன் 114:1-6)

பலம் பொருந்திய ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காகத் திடீரென்று வந்து நின்றது. அல்லாஹ் எனக்கு அதை வசப்படுத்தித் தந்தான். நான் அதைப் பிடித்துக் கொண்டேன். நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பார்ப்பதற்காக அதைப் பள்வாசலின் தூண்கல் ஒன்றில் கட்டி வைக்க விரும்பினேன். அப்போது, என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த, என் இறைவா! எனக்குப் பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் அதிகாரத்தை எனக்கு வழங்குவாயாக! (38:35) என்னும் பிரார்த்தனையை நினைவு கூர்ந்தேன். உடனே, அதைச் சபித்து எறியப்பட்டதாகத் திருப்பியனுப்பி விட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி (3423), முஸ்லிம் (4862)

மனிதனுக்கு நீங்கள் குறிப்பிட்டது போல் தீங்கு செய்யும் என்பதற்கு திருகுர்ஆன், நபிமொழிகளில் ஆதாரங்கள் இல்லை.

--> Q/A Dheengula Penmani Apr 2008

No comments:

Post a Comment