Thursday, December 2, 2010

அதிகமாக தர்க்கம் புரிவது..????

அதிகமாக தர்க்கம் புரிவதுஇருட்டறையில் தூங்குவது போன்ற பல காரணங்களினால் ஒருவருக்கு அறிவு குறைவடையும்." என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சிலர் கூறுகின்றனர். இது உண்மையா?விளக்கம் தேவை??  




அதிகமாக தர்க்கம் புரிவதால் அறிவு குறையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஹதீஸையும் நம்மால் பார்கக்கமுடியவில்லை. இவ்வாறு ஹதீஸ் இருப்பதாக யார் கூறுகின்றார்களோ அவர்களிடம் இந்த செய்தி எந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது எனக் கேளுங்கள்.
இதன் கருத்து குர்ஆனுக்கு முரணாகவும் அமைந்துள்ளது. 

ஏனென்றால் அழகிய முறையில் விவாதம் செய்ய வேண்டும் என குர்ஆன் கூறுகின்றது.
ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ(125)16
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன் அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்.
அல்குர்ஆன் (16 : 125)

இறைத்தூதர்கள் இறைமறுப்பாளர்களிடம் விவாதம் செய்த வரலாறுகளை திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது. எனவே அழகிய முறையில் விவாதம் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் வந்து ஒருவர் அதிகமாக விவாதம் செய்தால் அது நன்மையான காரியமே.
மேலும் ஒருவர் முறையான அடிப்படையில் விவாதம் செய்தால் அதன் மூலம் அவருடைய அறிவு அதிகரிக்கும் என்பது தான் சரியானக் கருத்து.
எனவே அதிகமாக விவாதம் செய்தல் கூடாது குறைவாக விவாதம் செய்யலாம் என்று முடிவெடுக்காமல் அழகிய விவாதம் செய்யலாம் தேவையற்ற விவாதம் செய்யக்கூடாது என்று முடிவெடுப்பதே சரியானது.
அடுத்து இருட்டு அறையில் படுத்தால் அறிவு குறையும் என்ற கருத்தும் தவறானதே. இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை. 

ஹதீஸ்களை ஆராயும் போது நபியவர்கள் காலத்தில் நபியவர்கள் உட்பட அனைத்து நபித்தோழர்களும் இருட்டில் தான் உறங்கினார்கள் என்பதை அறிய முடியும்.
5624 حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَطْفِئُوا الْمَصَابِيحَ إِذَا رَقَدْتُمْ وَغَلِّقُوا الْأَبْوَابَ وَأَوْكُوا الْأَسْقِيَةَ وَخَمِّرُوا الطَّعَامَ وَالشَّرَابَ وَأَحْسِبُهُ قَالَ وَلَوْ بِعُودٍ تَعْرُضُهُ عَلَيْه رواه البخاري
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்'' என்று சொன்னார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நான் எண்ணுகிறேன்.
நூல் : புகாரி (5624)

எரியும் விளக்குகளை எலிகள் இழுத்துச் சென்று வீட்டை எரித்துவிடும் என்பதால் விளக்கை அணைக்குமாறு நபியவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அன்றைய காலத்தில் இன்றைக்கு இருப்பது போல் மின் விளக்குகள் விடி பல்புகள் ஆகியவை இல்லை. எண்ணெய் ஊற்றி பற்ற வைக்கப்படும் விளக்குகளே இருந்தன.

அன்றைக்கு விளக்குகளை அணைத்துவிட்டால் எந்த வெளிச்சமும் இன்றி இருட்டு அறையில் தான் உறங்க வேண்டிவரும். இருட்டு அறையில் உறங்குவதால் அறிவு குறையும் என்றால் இவ்வாறு நபியவர்கள் உத்தரவிட்டிருக்கமாட்டார்கள். எனவே இருட்டில் உறங்குவதற்கும் அறிவு குறைவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அறிய முடிகின்றது. விஞ்ஞான ரீதியிலும் இக்கருத்து சரியானதல்ல. 

No comments:

Post a Comment