Wednesday, March 16, 2011

இஸ்லாம் மட்டும் தான் முழுமையான மார்க்கமா

இஸ்லாம் மட்டும் தான் முழுமையான மார்க்கமா



இஸ்லாத்தைப் போன்று மற்ற மதங்களும் முழுமை பெற்றவை தானே?


காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள். அது போல் ஒவ்வொரு மதத்தவரும் தங்கள் மதம் முழுமையானது என்று தான் கூறுவார்கள். நம்புவார்கள்.

ஆனால் முழுமையான மார்க்கம் என்று நாம் நம்பினால் மட்டும் அது முழுமையான மார்க்கமாக ஆகாது. மாறாக அது முழுமையானது என்பதற்கான ஆதாரங்களையும் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும்.

ஒரு மார்க்கம் ஒரு காலத்தில் பொருந்தி பின்னர் பொருந்தாமல் போனால் அது முழுமை பெற்ற மார்க்கம் எனக் கூற முடியாது. இஸ்லாத்தைப் பொருத்த வரை அதன் கொள்கையோ கோட்பாடோ சட்டதிட்டங்களோ இன்றைக்கோ அல்லது இதற்கு முன்னரோ இதற்குப் பின்னரோ பொருந்தாமல் உள்ளது என்று ஆதாரத்துடன் கூற முடியாது. ஆனால் மற்ற மதங்களின் சட்ட திட்டங்களில் ஏராளமானவை அந்த மதத்தின் உறுப்பினர்களால் மாற்றப்படுகின்றனர். காலத்திற்கு ஒவ்வாதவை எனக் கூறி தூக்கி வீசப்படுகின்றன. எனவே மற்ற மதங்களை முழுமையானவை எனக் கூற முடியாது.

ஒரு மதம் முழுமையான மதம் என்றால் அந்த மதத்தைப் பின்பற்றுவோர் சந்திக்கும் எல்லா பிரச்சனைகள் பற்றியும் அந்த மதத்தில் தீர்வு இருக்க வேண்டும். எதைப் பற்றியும் அந்த மதம் ஒரு கருத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் வெறும் கடவுள் வழிபாட்டை மட்டும் பேசி விட்டு வியாபாரம் கொடுக்கல் வாங்கல் அரசியல் நவீன கண்டுபிடிப்புகள் போன்றவை குறித்து ஒரு மதம் மவுனம் சாதித்தால் அதை முழுமையான மார்க்கம் எனக் கூற முடியாது.

இஸ்லாத்தில் நோ கமாண்ட்ஸ் என்று சொல்லும் நிலை ஏற்படவே செய்யாது, எதைப் பற்றி கேட்டாலும் அது கூடும் என்றோ கூடாது என்றோ இஸ்லாத்துக்கு கருத்து இருக்கும். மற்ற மதங்களில் இதை காண முடியாது.

மேலும் முழுமை பெற்ற மார்க்கம் என்றால் மனித குலத்துக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் அதில் சொல்லப்பட்டிருக்க வேண்டும். வெறுமனே ஆன்மிக நம்பிக்கைகள் மட்டும் உள்ள மதம் முழுமை பெற்ற மதமாக ஆக முடியாது. மாறாக மனித குலத்துக்குத் தேவையான அனைத்து வழிகாட்டல்களும் அதில் கூறப்பட்டிருக்க வேண்டும்.

சொர்க்கம் நரகம் போன்ற நம்பிக்கை தொடர்பான விஷயங்களை இஸ்லாம் பேசுவதுடன் இந்த உலகத்தில் ஒரு மனிதன் மனிதனாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் சட்டத்திட்டங்களையும் கற்றுத் தருகின்றது.

உதாரணமாக ஒரு மனிதன் எப்படி வியாபாரம் செய்ய வேண்டும்? எவ்வாறு குடும்பம் நடத்த வேண்டும்? குடும்பத்தில் கணவன் ஆற்ற வேண்டிய கடமை. மனைவி ஆற்ற வேண்டிய கடமை. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஆற்ற வேண்டிய கடமை. பிள்ளைகள் பெற்றோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை. கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வது? அண்டைவீட்டாருடன் நடந்து கொள்ள வேண்டிய முறை? சமுதாயத்துக்குச் செய்ய வேண்டிய கடமை? இப்படி ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் வாழ்வில் சந்தக்கின்ற ஒவ்வொரு பிரச்சனைகளையும் எவ்வாறு அறிவார்ந்த முறையில் எதிர்கொள்வது? என்பதை இஸ்லாம் மனித குலத்துக்கு வழிகாட்டுகிறது.

இஸ்லாம் உலகுக்குக் கற்றுக் கொடுக்கும் இது போன்ற அற்புதமான வழிகாட்டல்கள் வாழ்க்கை நெறி முறைகள் மற்ற மதங்களில் இல்லை. இந்த வகையில் சிந்தித்துப் பார்த்தாலும் இஸ்லாம் மட்டுமே முழுமை பெற்ற மார்க்கம் என்று கூற முடியும்.

முழுமையான மார்க்கம் என்றால் அதில் யாரும் எதனையும் சேர்க்கவோ நீக்கவோ முடியாத நிலையில் இருக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் ஒரு மதத்தில் சேர்க்க முடியும் என்றால் அது எப்படி முழுமையாக இருக்க முடியும்? முழுமையாக இல்லாத காரணத்தால் தானே அதில் மற்றவர்கள் தமது கருத்தைச் சேர்க்க முடிகிறது!

எனக்கே அஞ்சுங்கள்! இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

(அல்குர்ஆன் 5:3)

No comments:

Post a Comment