Tuesday, July 12, 2011

மறுமை நாளில் நபியிடம் பரிந்துரை வேண்டுவது இணைவைப்பதாகாதா?

மறுமை நாளில் நபியிடம் பரிந்துரை வேண்டுவது இணைவைப்பதாகாதா?

கியாமத் நாளில் மக்கள் தங்களுக்கு நேர்ந்துள்ள சிரமத்தை நபிமார்களிடம் முறையிடும் போது அல்லாஹ்விடம் தானே அவர்கள் முறையிடுமாறு கூறி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் முஹம்மத நபியிடம் பரிந்துரையைக் கேட்குமாறு கூறுவது இணைவைப்பதாக ஆகாதா என்று நண்பர் ஒருவர் கேட்கிறார். இது சரியா...?


மறுமையில் மக்கள் நபிமார்களிடம் வந்து அல்லாஹ் விரைவாகத் தீர்ப்பளிப்பதற்கு அவனிடம் பரிந்துரை செய்யுமாறு கேட்பார்கள். அனைத்து நபிமார்களும் தங்களுக்கு இது இயலாது என்று கூற இறுதியாக முஹம்மது (ஸல்) அவர்களிடம் வருகை தருவார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அனுமதி கொடுத்த பின் அவர்கள் பரிந்துரை செய்வார்கள் என ஹதீஸ் கூறுகின்றது.

பரிந்துரை வேண்டி மக்கள் தங்களிடம் வந்த போது நபிமார்கள் அவர்களை அல்லாஹ்விடம் கேட்கச் சொல்லாமல் மற்ற நபியிடம் ஏன் அனுப்பினார்கள்? நபிமார்களுக்கு தவ்ஹீத் தெரியாதா? என்று உங்கள் நண்பர் கேள்வி கேட்டுள்ளார்.

தவ்ஹீதைப் பற்றிய சரியான தெளிவு இல்லாத காரணத்தாலே இந்தக் கேள்வி கேட்டுள்ளார்.

பரிந்துரை வேண்டுவது அனைத்தும் இணை கற்பிப்பாக ஆகாது. மாறாக சில பரிந்துரைகள் இணை வைப்பில் சேரும். சில பரிந்துரை வேண்டுதல் இணை வைப்பில் அடங்காது.

ஒருவரை இம்மையிலோ மறுமையிலோ நேருக்கு நேராக நாம் சந்திக்கும் போது அவர்களுக்கு எது இயலுமோ அது பற்றி பரிந்துரைக்குமாறு வேண்டுவது இணை கற்பித்தல் ஆகாது. ஏனெனில் இது போல் பரிந்துரை வேண்டும் போது அவருக்கு இறைத் தன்மை இருபதாக யாரும் கருதுவதில்லை. ஆனால் நாம் கண்ணால் பார்க்காத நம் முன்னே இல்லாத அல்லது செத்துப் போய்விட்ட ஒருவரிடம் நாம் பரிந்துரை வேண்டினால் அது தான் இணை வைப்பாகும். ஏனெனில் இறைவனை எப்படி நாம் பார்க்கா விட்டாலும் அவன் நம்மைப் பார்க்கிறானோ அப்படி அவர்களும் நம்மைப் பார்க்கிறார்கள் என்ற நம்பிக்கை இத்ற்குள் அடங்கி உள்ளது. இந்த வகையில் இது இணை வைப்பாக ஆகி விடுகின்றது.

நாம் கேட்பது போல் அதே நேரத்தில் இன்னும் பலர் அவர்களிடம் கேட்பார்கள். அதை எல்லாம் அவர்கள் செவியுறுகிறார்கள் என்ற நம்பிக்கை இதனுள் அடங்கி உள்ளது. எங்கிருந்து அழைத்தாலும் எத்தனை பேர் அழைத்தாலும் அத்தனையையும் ஒரே நேரத்தில் இறைவன் எப்படி கேட்பானோ அது போல் இவர்களும் கேட்பார்கள் என்ற நம்பிக்கை இதனுள் அடங்கியுள்ளதால் இது இணை வைப்பாக ஆகி விடுகிறது.

ஆனால் இம்மையிலோ மறுமையிலோ நாம் நேருக்கு நேர் பார்த்து கேட்கும் போது அதில் இணைவைக்கும் எந்த அம்சமும் இல்லை.

நபிகள் நாயகம் ஸல் அவர்களை இந்த உலகில் நாம் பார்ப்பதில்லை. எனவே நபியே நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டால் அவர்கள் எங்கிருந்து அழைத்தாலும் செவியுறூவார்கள் என்ற கருத்து அதற்குள் உள்ளதால் அது கூடாது. ஆனால் நபித்தோழர்கள் நேரடியாக நபியை சந்திக்கும் போது பரிந்துரை செய்யுங்கள் என வேண்டி இருந்தால் இதில் எந்த இணை வைத்தலும் ஏற்படவில்லை.

அது போல் மறூமையில் நாம் நபியை சந்திக்கும் போது அவர்களை நேரடியாகக் கண்ணால் கண்டு அவர்களின் பரிந்துரை வேண்டினால் அவர்களுக்கு எந்த இறைத் தன்மையும் இருப்பதாகக் கருத இடமில்லை.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூட மிஃராஜில் மூஸா நபியை நேருக்கு நேர் பார்த்த போது அவரிடம் உதவி பெற்றது இந்த அடிப்படையில் தான்.

இணை கற்பிக்கும் தன்மை எதில் அடங்கியுள்ளதோ அது தான் இணை கற்பிப்பாகும்

No comments:

Post a Comment