Saturday, September 13, 2014

மனிதன் மீது ஜின் மேலாடுமா?

மனிதன் மீது ஜின் மேலாடுமா?

 1996 ஆம் ஆண்டு அல்ஜன்னத்தில் பீஜே அளித்த பதிலை ஹஃபீழ் அனுப்பி வைத்துள்ளார். அவருக்கு நன்றிகள்.
 மனிதன் மீது ஜின் மேலாடுமா?
 மதீனாவில் ஒரு பெண்ணுக்குப் பேய் பிடித்து விட்டது. உடனே மதீனா யுனிவர்சிடியில் உள்ள ஆலிமை அழைக்க வந்தனர். முஸ்லிமான ஜின் அந்தப் பெண்ணைப் பிடித்துள்ளதை அவர் கண்டுபிடித்தார். நீ ஒரு முஸ்லிம். இன்னொரு முஸ்லிமுக்கு நோவினை செய்யலாமா? என்று அவர் கேட்டார். அதற்கு அவளைப் பிடித்திருந்த ஜின், “பாத்ரூமில் குளிக்கும் போது என் மேல் இவள் வெந்நீரை ஊற்றினாள்” என்று என்று பதிலளித்தது. ’நீ இருப்பது தெரியாமல் தானே அவள் வெந்நீரை ஊற்றினாள்’என்று அந்த ஆலிம் விளக்கினார். அதற்கு அந்த ஜின், “நபி (ஸல்) அவர்கள் பதிரூமில் ஓத வேண்டும் என்று கூறியதை அவள் ஓதியிருந்தால் நான் அங்கிருந்து வெளியேறி இருப்பேன்” என்றது. தெரியாமல் நடந்து விட்டது; நீ போய் விடு என்று அந்த ஆலிம் கூறியதும் ஜின் ஓடிவிட்டது. இந்தச் சம்பவத்தை உமர் அலி (இலங்கை) என்பவர் யாஸீன் விளக்கவுரை என்ற ஒலி நாடாவில் பேசி உள்ளார். இவ்வாறு நடக்க குர்ஆன் ஹதீஸ்படி சாத்தியம் உள்ளதா?
 ஹயாதுல்லாஹ், அல்கோபார்.

பாத்ரூமுக்குச் செல்லும் போது கெட்ட ஷைத்தான்களை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறு நபி (ஸல்) நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். முஃமினான நல்ல ஜின்கள் பாத்ரூமில் இருக்க முடியாது என்பது இதிலிருந்து தெரிகின்றது. எனவே நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்ததை அவள் ஓதியிருந்தால் நான் ஓடியிருப்பேன் என்று முஃமினான ஜின் கூறியிருக்க முடியாது. சவூதி அரேபியாவின் பத்திரிகைகள் சிலவற்றில் இந்தக் கதை இடம் பெற்றிருந்தாலும், உமர் அலி என்ற மவ்லவி இதைக் கூறி இருந்தாலும் இது இட்டுக்கட்டப்பட்ட பொய் என்பதில் சந்தேகமில்லை.

ஜின்கள் என்றொரு படைப்பு உள்ளதாகக் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளன. அதை நம்பியாக வேண்டும். ஆனால் ஒரு படைப்பு இன்னொரு படைப்புக்குள் நுழைந்து ஊடுறுவும் என்பதற்கோ, கூடுவிட்டுக் கூடு பாயும் என்பதற்கோ எந்தவிதமான ஆதாரமும் இல்லை. மாறாக இதை மறுக்கக் கூடிய வகையில் ஆதாரங்கள் உள்ளன.

அவர் மீது ஒரு மலக்கு (வானவர்) இறக்கப்பட வேண்டாமா? என்று இவர்கள் கூறுகின்றனர். மலக்கை நாம் இறக்கியிருந்தால் காரியம் முடிக்கப்பட்டிருக்கும். பின்னர் அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருக்காது. நம் தூதரை மலக்காகவே நாம் அனுப்புவதாக இருந்தாலும் அவரையும் நாம் மனிதராகவே ஆக்கியிருப்போம். அவர்கள் (இப்பொழுது) குழம்பிக் கொள்வது போல் (அப்பொழுதும்) குழப்பத்தை நாம் ஏற்படுத்தியிருப்போம். (அல்குர்ஆன்: 6:8-9)
முதலில் இந்த வசனம் என்ன கூறுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். “அவர் மீது மலக்கு இறக்கப்பட வேண்டும்” என்றால் அவருக்குப் பக்க பலமாக அவருக்குத் துணையாக மலக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது இதன் பொருளா? அல்லது அவருக்குள்ளேயே ஒரு மலக்கு அனுப்பப்பட்டு மனிதராக இருந்தும் அதே நேரத்தில் மலக்காகவும் அவர் இருக்க வேண்டும் என்பது அதன் பொருளா?
மலக்குகள் என்ற படைப்பு இருப்பதை அந்த மக்கள் நம்பினார்கள். அவர்கள் கண்களால் காண முடியாதவர்கள் என்றும் அவர்கள் நம்பினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்களுடன் மலக்குகள் இருக்கத் தான் செய்தனர். எனவே அந்த மக்கள் இதை எதிர்பார்க்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதராக இருக்கும் அதே நேரத்தில் மலக்காகவும் இருக்க வேண்டும்.
ஒரு மலக்கு, “அவர் மீது” (அவருடன் அன்று) இறக்கப்பட்டு இரண்டறக் கலந்துவிட வேண்டும். சில சமயம் இவரிடமிருந்து மனிதப் பண்புகள் வெளிப்பட வேண்டும் என்பதைத் தான் அவர்கள் எதிர்பார்த்தனர்.
 இதைத் தான் இறைவன் மறுக்கிறான். அவரை மலக்காகவே நாம் ஆக்கியிருந்தாலும் அவரையும் மனிதராகவே ஆக்கியிருப்போம் என்ற வாசகம் இதை உறுதிப்படுத்துகின்றது.
 ஒவ்வொரு படைப்பும் தனித் தனியான தன்மைகளைக் கொண்டவை. ஒரு படைப்பு இன்னொரு படைப்புக்குள் ஊடுறுவ முடியாது. மனிதனை ஜின் பிடிக்கிறது என்றால் மனிதனாகவும், ஜின்னாகவும் அவன் மாறி விடுகிறான், அல்லது சில நேரம் மனிதனாகவும் சில நேரம் ஜின்னாகவும் ஆகிறான் என்ற கருத்து அதற்குள் அடங்கியுள்ளது.. அல்லாஹ்வின் படைப்பில் இத்தகைய குழப்பத்துக்கு இடமில்லை.
 நாம் எடுத்துக் காட்டியதில் ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் இந்த ஆதாரங்கள் திருப்தியளிக்காவிட்டாலும் - ஜின்கள் மனிதனுக்குள் ஊடுறுவும் என்று கூறுபவர்கள் அதற்கான சான்றுகளைக் குர்ஆனிலிருந்தும் ஹதீஸ்களிலிருந்தும் எடுத்துக் காட்டக் கடமைப்பட்டுள்ளனர்.

அல் ஜன்னத் 1996 ஜுன், ஜுலை

No comments:

Post a Comment