Friday, November 17, 2017

கஸ்ர்_எத்தனை_நாளைக்கு?

#தொழுகை

#கஸ்ர்_எத்தனை_நாளைக்கு?

#பதில்_வரையறை_இல்லை_எனினும்…..

ஒருவர் எத்தனை நாட்கள் பயணத்தில் இருந்தால் ஜம்வு, கஸ்ர் செய்யலாம் என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரையறை எதுவும் கூறவில்லை. எனவே இத்தனை நாள் தங்கினால் மட்டுமே கஸ்ர் செய்ய வேண்டும்; அதற்கு மேல் தங்கினால் கஸ்ர் செய்யக் கூடாது என்று கூறுவதற்கு மார்க்கத்தில் யாருக்கும் அதிகாரம் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாட்கள் தங்கினார்கள். அந்நாட்களில் கஸ்ர் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது நாட்களுக்குப் பிரயாணம் செய்தால் கஸ்ர் செய்வோம். அதிகமானால் முழுமையாகத் தொழுவோம். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1080

இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தொன்பது நாட்கள் தான் கஸ்ராகத் தொழுதுள்ளார்கள் என்பதால் அதற்கு மேல் தங்குபவர்கள் முழுமையாகத் தொழ வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றை இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

ஆனால் பத்தொன்பது நாட்களுக்கு மேல் முழுமையாகத் தொழுவோம் என்பது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகவே கூறப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியூரில் அதிகப்பட்சமாகத் தங்கியது பத்தொன்பது நாட்கள்; அவர்கள் தங்கிய அத்தனை நாட்களிலும் சுருக்கித் தொழுதுள்ளார்கள் என்பதைத் தான் இந்த ஹதீஸிலிருந்து விளங்க முடியும்.

அதற்கு மேல் தங்கினால் சுருக்கித் தொழக் கூடாது என்றால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியிருப்பார்கள். அவ்வாறு வரையறை எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறாததிலிருந்து, இதற்குக் காலவரை இல்லை என்பதை அறியலாம்.

அதே சமயம் வெளியூரில் தங்குபவர்கள் சுருக்கித் தொழுவது கட்டாயமில்லை. விரும்பினால் முழுமையாகத் தொழுவதற்குத் தடையில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மதீனாவிலிருந்து மக்கா நோக்கி உம்ரா செய்யப் புறப்பட்டேன். நான் மக்காவை அடைந்த போது, ‘அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும், தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் கஸ்ர் செய்கிறீர்கள்; நான் முழுமையாகத் தொழுகிறேன். நீங்கள் நோன்பு நோற்கவில்லை; நான் நோன்பு நோற்கிறேன்’ என்று நான் கேட்ட போது ‘ஆயிஷாவே! சரியாகச் செய்தாய்!’ என்றார்கள். என்னைக் குறை காணவில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 1439

ஒருவர் எத்தனை நாட்கள் பயணத்தில் இருந்தால் ஜம்வு, கஸ்ர் செய்யலாம் என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரையறை எதுவும் கூறவில்லை.

ஒருவர் உள்ளூரில் இருக்கும் போதும் எப்போதாவது ஜம்வு செய்து (சேர்த்துத்) தொழுவதற்கு அனுமதி உள்ளது. எனினும் இதையே வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும், அஸ்ரையும், மஃரிபையும், இஷாவையும் ஏழு, மற்றும் எட்டு ரக்அத்களாகத் தொழுதார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 543

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். மஃரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது (போர் அபாயம் மிகுந்த) அச்ச நிலையிலோ, பயணத்திலோ அவர்கள் இருக்கவில்லை. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1267

இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு காலமெல்லாம் உள்ளூரில் ஜம்வு செய்யலாம் என்று யாரும் புரிந்து கொள்வதில்லை. எப்போதாவது சில நேரங்களில் உள்ளூரில் ஜம்வு செய்யும் நிலை ஏற்படலாம். அது போன்ற நேரங்களில் இச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்கிறோம். எல்லா நேரத்திலும் ஒருவர் இச்சலுகையைப் பயன்படுத்தி வந்தால் அவரைப் பொருத்தவரை காலமெல்லாம் மூன்று வேளைத் தொழுகையாகி விடும்.

இந்தச் சலுகையைப் புரிந்து கொள்வது போல் மாதக் கணக்கில் வெளியூரில் இருப்பவர்கள் அன்றாடம் இச்சலுகையைப் பயன்படுத்தாமல் அரிதாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் தொடர்ந்து ஜம்வு செய்து வந்தால் தொழுகை குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும் என்ற இறைவனின் கட்டளைக்குப் பொருள் இல்லாமல் போய்விடும்.

No comments:

Post a Comment