Wednesday, February 21, 2018

ஒரே_பயணத்தில்_பல_உம்ராக்கள்_செய்யலாமா

#ஹஜ்_உம்ரா

#ஒரே_பயணத்தில்_பல_உம்ராக்கள்_செய்யலாமா?

#துல்ஹஜ்_மாதத்திற்கு_முன்பே_ஹஜ்ஜுக்குச்_சென்றவர்கள்_பலமுறை_உபரியான_உம்ராக்கள்_செய்யலாமா?

#பதில்:  #செய்யலாம்

ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது சிலர் பித்அத் என்று கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு பயணத்தில் ஒரு உம்ராவைத் தவிர கூடுதலாக எந்த உம்ராவையும் செய்யவில்லை. எனவே இது பித்அத் என்று வாதிடுகின்றனர்.

இந்த வாதம் சில அடிப்படைகளைப் புரியாததால் வந்த விளைவாகும். எந்த நல்லறங்களையும் உபரியாக அவர் வசதிக்கு ஏற்றவாறு ஏற்ற நேரத்தில் செய்வதை மார்க்கம் தடை செய்யவில்லை.

ஒருவர் அவருக்கு வசதியான ஒருநாள் சனிக்கிழமை நோன்பு நோற்கிறார். இந்த நாளில் நபிகளார் நோன்பு நோற்றார்களா? இதற்கு ஆதாரம் உள்ளதா? என்று கேட்கக்கூடாது. காரணம் பொதுவாக நோன்பு வைக்கலாம் என்ற அனுமதியே இதற்குப் போதுமானது.

தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் இஸ்லாமைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)” என்றார்கள்.

அவர் “இதைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, “இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், “இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” எனக் கேட்க, “இல்லை, நீ தானாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், “இதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) வேறு தர்மத்தை தவிர” என்றார்கள்.

அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றைவிட கூட்டவுமாட்டேன்; குறைக்கவும் மாட்டேன்’ என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்து விட்டார்” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 46

கடமையான அமல்களில் ஒருவர் கூடுதலாக விரும்பி செய்யலாம் என்பதை “நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர’ என்ற நபிகளாரின் வாசகம் நமக்கு உணர்த்துகிறது.

இதைப் போன்று ஹஜ் உம்ரா பற்றி பேசும் வசனத்திலும் அல்லாஹ் இதைத் தெளிவுபடுத்துகிறான்.

ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன் 2:158)

ஸஃபா, மர்வாவில் சுற்றுவது உம்ராவில் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாகும். இது தொடர்பாகப் பேசும் போது, “நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன்’ என்று நன்மைகளை கூடுதலாகச் செய்ய விரும்புபவர் அதிகம் செய்யலாம் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

இதைப் போன்று ஹஜ் என்பது வாழ்நாளில் ஒருதடவை செய்ய வேண்டிய கடமையாகும். அதை ஒருவர் விரும்பினால் கூடுதலாகவும் செய்யலாம் என்பதை நபிகளார் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்ய வேண்டுமா? அல்லது (வாழ்நாளில்) ஒரே ஒரு தடவை செய்ய வேண்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒரே ஒரு தடவை தான் கடமையாகும். இதற்கு மேல் ஒருவர் கூடுதலாக செய்தால் அது உபரியானது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: அபூதாவூத் (1463)

எனவே ஒருவர் விரும்பினால் ஒரு பயணத்தில் கூடுதலாக உம்ரா செய்யலாம். ஆனால் கூடுதலாக உம்ரா செய்ய வேண்டுமென யாரையும் நிர்பந்தம் செய்ய முடியாது.

No comments:

Post a Comment