Tuesday, February 12, 2019

ஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்

ஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்

எம்.ஐ.சுலைமான்

முஸ்லிம்கள் அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும். அதன் வெளிப்பாடாக அவர்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளோம்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அதிகமாக ஸலவாத் கூற வேண்டும் என்பதையும் நாம் அறிந்து வைத்துள்ளோம். இது முஸ்லிம்கள் மீது கடமையான ஒரு நற்செயல் என்பதில் சந்தேகமில்லை.

3468حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ حَدَّثَنَا رِبْعِيُّ بْنُ إِبْرَاهِيمَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَقَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ عِنْدَهُ أَبَوَاهُ الْكِبَرَ فَلَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ رواه الترمذي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒருவனிடம் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவன் என் மீது ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால், அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும். ஒருவன் ரமளான் மாதத்தை அடைந்து அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும். ஒருவன் வயது முதிர்ந்த பெற்றோர்களைப் பெற்றும் அவனை அவர்கள் சொர்க்கத்திற்குள் கொண்டு செல்லவில்லையென்றால் அவனுடைய மூக்கும் மண்ணைக் கவ்வட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : திர்மிதீ

3469حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى وَزِيَادُ بْنُ أَيُّوبَ قَالَا حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَلِيِّ بْنِ حُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَنْ أَبِيهِ عَنْ حُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَخِيلُ الَّذِي مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ رواه الترمذي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒருவனிடம் என்னைப் பற்றி கூறப்பட்டு என் மீது அவன் ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால் அவனே கஞ்சனாவான்.

அறிவிப்பவர் : அலீ பின் அபீ தாலிப் (ரலி)

நூல் : திர்மிதீ

இவ்விரு ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் மார்க்கம் நினைவூட்டும் குறித்த இடங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவதன் அவசியத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றது.

ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஒரு முறை ஸலவாத் கூறுவதால் அல்லாஹ்வின் அளப்பரிய அருளுக்குரியவராகிறார். ஏனெனில் ஒரு முறை ஸலவாத் கூறுபவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள் புரிகிறான்.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع – (2 / 4)

616 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِىُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ حَيْوَةَ وَسَعِيدِ بْنِ أَبِى أَيُّوبَ وَغَيْرِهِمَا عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ النَّبِىَّ -صلى الله عليه وسلم- يَقُولُ إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَىَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَىَّ صَلاَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِىَ الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِى الْجَنَّةِ لاَ تَنْبَغِى إِلاَّ لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِىَ الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள் புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல் : முஸ்லிம்

இதனடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவது சிறப்பிற்குரிய, அல்லாஹ்வின் அருளை பெற்றுத்தருகிற ஓர் உன்னதச் செயல் என்பதைச் சந்தேகமின்றி அறிகிறோம்.

السنن الكبرى للنسائي – (2 / 77(

1221- أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ ، قَالَ : أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ ، حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى عَلَيَّ صَلاَةً وَاحِدَةً ، صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرَ صَلَوَاتٍ ، وَحُطَّتْ عَنْهُ عَشْرُ خَطِيئَاتٍ ، وَرُفِعَتْ لَهُ عَشْرُ دَرَجَاتٍ.

யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகிறான். அவருடைய பத்து தவறுகளை அழிக்கின்றான். பத்து உயர்வுகள் அவருக்கு அளிக்கப்படுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : நஸாயீ

இதுவும் ஸலவாத் ஓதுவதால் கிடைக்கும் சிறப்பை எடுத்துரைக்கின்ற ஆதாரப்பூர்வமான நபிமொழியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதுவதால் நமது பாவங்கள் சில மன்னிக்கப்பட்டு நமது அந்தஸ்தும் இறைவனிடத்தில் உயர்கின்றது என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

எனவே ஒரு முஸ்லிம் தமக்கு வாய்ப்பு கிடக்கும் போதெல்லாம் நாம் உயிரினும் மேலாக நேசிக்கின்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் அருளை வேண்டி பிரார்த்தனை செய்யும் ஸலாவத்தை ஓத வேண்டும்.

எது ஸலவாத்?

ஸலவாத் ஓதுவதால் மேற்கண்ட சிறப்புகளை அடைய வேண்டும் என்றால் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தாக இருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனக்காக எவ்வாறு ஸலவாத் ஓத வேண்டும் என்பதைப் பின்வரும் நபிமொழியில் கற்றுத் தந்துள்ளார்கள்.

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போது நான் உங்களுக்கு ஓர் அன்பளிப்பு வழங்கட்டுமா? என்று கேட்டுவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது (அவர்களிடம்) நாங்கள், (அல்லாஹ்வின் தூதரே!) உங்களுக்கு நாங்கள் எப்படி சலாம் கூற வேண்டுமென அறிந்திருக்கின்றோம். ஆனால், உங்கள்மீது நாங்கள் எப்படி ஸலவாத் கூற வேண்டும்? என்று கேட்டோம்.

அப்போது அவர்கள், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம, பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று கூறுங்கள் என்றார்கள்.

(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சம் வழங்குவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்).

அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா

நூல் :முஸ்லிம்

இன்றைக்கு நடைமுறையில் முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராததை எல்லாம் ஸலவாத் என்ற பெயரில் ஓதிக் கொண்டிருக்கின்றனர். ஸலாதுன் நாரிய்யா எனும் பெயரில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் வகையிலான வாசகங்களை உள்ளடக்கி ஒரு ஸலவாத் (?) ஒன்றை மக்கள் ஓதிக் கொண்டிருக்கின்றனர். அதற்கும் இஸ்லாத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை.

பொய்யான செய்திகள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவதன் சிறப்பு குறித்து ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் பல நாம் மேலே கண்டோம். உலமாக்கள் அதை மக்களிடையே போதிப்பதை விட்டு விட்டு ஆதாரமற்ற, பொய்யான செய்திகளை மக்களிடையே போதிக்கின்றனர். அத்தகைய தவறான செய்திகள் குறித்து நாம் அறிந்து கொள்வோம்.

செய்தி 1

من صلى علي في يوم [الجمعة] ألف مرة ؛ لم يمت حتى يرى مقعده من الجنة.

என் மீது யார் ஒரு (ஜூம்ஆ) நாளில் ஆயிரம் முறை ஸலவாத் கூறுவாரோ அவர் சொர்க்கத்தில் உள்ள தமது இருப்பிடத்தைக் காணாமல் மரணிக்க மாட்டார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அனஸ் பின் மாலிக் (ரலி).

இந்தச் செய்தி அல்அமாலி பாகம் 1 பக் 172, அத்தர்கீப் பாகம் 1 பக் 22 மற்றும் இன்னும் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது முழுக்க பலவீனமான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹகம் பின் அதிய்யா பலவீனமானவர் ஆவார்.

நஸாயீ, அபுல் வலீத் உள்ளிட்ட அறிஞர்கள் இவர் பலவீனமானவர். இவரை ஆதாரம் கொள்ளக் கூடாது என்று விமர்சித்துள்ளார்கள்.

பார்க்க அல்ஜரஹ் வத்தஃதீல் பாக 3 பக் 125

அபூ ஹாதம் அவர்கள் இவர் உறுதியானவர் அல்ல; எனவே இவரை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது என்று விமர்சித்துள்ளார்.

அல்லுஆஃபாஉ வல்மத்ரூகீன் 1 228

இமாம் புகாரி மற்றும் உகைலீ ஆகியோர் பலவீனமானவர்கள் எனும் (நூலில்) பட்டியலில் இவரைக் கொண்டு வந்துள்ளார்கள்.

மேலும் இதன் மற்றொரு அறிவிப்பாளரான முஹம்மத் பின் அப்துல் அஸீஸ் அத்தீனவரிய்யு என்பவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர், பலவீனமானவர் என்றும், இவர் உறுதியானவர் அல்ல; பல தவறான செய்திகளைக் கொண்டு வந்துள்ளார் என்றும் இமாம் தஹபீ குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தையே இப்னு ஹஜர் அவர்களும் கூறியுள்ளார்கள்.

மீஸானுல் இஃதிதால் பாக 3  பக் 629, லிஸானுல் மீஸான் பாகம் 7 பக் 306

இமாம் உஸ்பஹானீ அவர்களின் அத்தர்கீப் வத்தர்ஹீப் பாகம் 1 பக் 504 லும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மேற்கண்ட பலவீனமான அறிவிப்பாளர் ஹகம் பின் அதிய்யா இடம் பெறுவதுடன் முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் ஸினான் என்பவரும் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென்று அறியப்படாதவர் ஆவார்.

எனவே ஒரு நாளில் ஆயிரம் முறை ஸலவாத் கூறுபவர் சொர்க்கத்தில் உள்ள தன் இருப்பிடத்தைப் பார்க்காமல் மரணிக்க மாட்டார் எனும் செய்தி முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.

செய்தி 2

شعب الإيمان – (4 / 435(

2773 – أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ السِّقَاءِ الْمُقْرِئُ، حَدَّثَنَا وَالِدِي أَبُو عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو رَافِعٍ أُسَامَةُ بْنُ عَلِيِّ بْنِ سَعِيدٍ الدَّارِمِيُّ بِمِصْرَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ سَالِمٍ الصَّائِغُ، حَدَّثَتْنَا حَكَامَةُ بِنْتُ عُثْمَانَ بْنِ دِينَارٍ، أَخِي مَالِكِ بْنِ دِينَارٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، خَادِمِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَقْرَبَكُمْ مِنِّي يَوْمَ الْقِيَامَةِ فِي كُلِّ مَوْطِنٍ أَكْثَرُكُمْ عَلَيَّ صَلَاةً فِي الدُّنْيَا مَنْ صَلَّى عَلَيَّ فِي يَوْمِ الْجُمُعَةِ وَلَيْلَةِ الْجُمُعَةِ، قَضَى اللهُ لَهُ مِائَةَ حَاجَةٍ، سَبْعِينَ مِنْ حَوَائِجِ الْآخِرَةِ، وَثَلَاثِينَ مِنْ حَوَائِجِ الدُّنْيَا، ثُمَّ يُوَكِّلُ اللهُ بِذَلِكَ مَلَكًا يُدْخِلُهُ فِي قَبْرِهِ كَمَا يُدْخِلُ عَلَيْكُمُ الْهَدَايَا، يُخْبِرُنِي مَنْ صَلَّى عَلَيَّ بِاسْمِهِ وَنَسَبِهِ إِلَى عَشِيرَتِهِ فَأُثْبِتُهُ عِنْدِي فِي صَحِيفَةٍ بَيْضَاءَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உலகில் அதிகமாக என் மீது ஸலவாத் கூறியவரே மறுமை நாளில் உங்களிலே எல்லா வகையிலும் எனக்கு நெருக்கமானவர் ஆவார். ஜூம்ஆ பகலிலும் இரவிலும் என் மீது ஸலவாத் கூறியவரின் நூறு தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்து விடுவான்.

எழுபது தேவைகள் மறுமை தொடர்புடையதாகவும், முப்பது தேவைகள் உலகத் தொடர்புடையதாகவும் இருக்கும். பிறகு இதற்கென ஒரு வானவரை அல்லாஹ் நியமிப்பான். அவர் பலிப்பிராணிகள் உங்களிடம் நுழைந்து வருவதைப் போன்று எனது கப்ரில் நுழைந்து வருவார். என் மீது ஸலவாத் கூறியவரின் பெயர், அவரது பாரம்பரியம் என அவரது குடும்பத்தார் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தையும் எனக்கு அவ்வானவர் தெரிவிப்பார். என்னிடத்தில் உள்ள வெள்ளைப் பதிவேட்டில் அவற்றை நான் குறித்துக் கொள்வேன்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

இந்தச் செய்தி ஷூஅபுல் ஈமான் 2773, அல்ஃபவாயித் பக் 71, அத்தர்கீப் வத்தர்ஹீப் பாக1 பக் 525 ஹயாதுல் அம்பியா பாக 1 பக் 94 இன்னும் பிற நூல்களில் சில வார்த்தைகள் மாறுபட்ட நிலையில் பதிவாகியுள்ளது.

இதன் எல்லா அறிவிப்புகளிலும் ஹக்காமா என்பவர் தம் தகப்பனார் உஸ்மான் பின் தீனார் வழியாக அறிவிப்பதாகவே உள்ளது.

ஹக்காமா என்பவர் ஹதீஸ் துறையில் எந்த மதிப்பும் அற்றவர் என்று இப்னு ஹிப்பான் விமர்சனம் செய்துள்ளார். ஸிகாத் பாகம் 7 பக் 194

أحاديث حكامة تشبه حديث القصاص ليس لها أصول

ஹக்காமாவின் செய்திகள் கதைகளுக்கு ஒப்பானது. அதற்கு எவ்வித அடிப்படைகளும் கிடையாது என்று இமாம் உகைலீ அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

அல்லுஅஃபா லில் உகைலீ பாக 3  பக் 200

الضعفاء للعقيلي – (3 / 200(

1199- عثمان بن دينار أخو مالك بن دينار تروى عنه حكامه ابنته أحاديث بواطيل ليس لها أصل.

ஹக்காமா தம் தந்தை வழியாக பொய்யான செய்திகளை அறிவித்துள்ளார். அவைகளுக்கு எந்த அடிப்படையும் கிடையாது என்றும் உகைலீ விமர்சித்துள்ளார்.

பார்க்க : அல்லுஅஃபாஉல் கபீர்  பாக 6 பக் 94

ஹக்காமாவின் தந்தை உஸ்மான் பின் தீனார் எந்த மதிப்பும் இல்லாதவர்; அவரது செய்தி தெளிவான பொய் என்று இமாம் தஹபீ விமர்சித்துள்ளார். அதையே இப்னு ஹஜர் அவர்கள் வழிமொழிந்துள்ளார்.

பார்க்க : மீஸானுல் இஃதிதால் பாக 3 பக் 33, லிஸானுல் மீஸான் பாகம் 5 பக் 387

எனவே இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல. மிகவும் பலவீனமான செய்தியாகும். சில அறிஞர்கள் இந்தச் செய்தியை இட்டுக்கப்பட்ட செய்தி என்று விமர்சித்து உள்ளதும் கவனிக்கத்தக்கது.

மற்றொரு அறிவிப்பு

மேலும் இதே செய்தி ஜாபிர் (ரலி) அவர்களின் அறிவிப்பாகவும் ஜலாஉல் அஃப்ஹாம் பாக 1 பக் 431 என்ற நூலில் பதிவாகியுள்ளது.

அதில் அபூபக்கர் அல்ஹூதலீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை பல அறிஞர்கள் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளார்கள்.

இவர் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று நஸாயீயும், இவரை பலவீனமானவர் என்று இமாம் அஹ்மத் மற்றும் அபூஹாதம் ஆகியோரும் நம்பகமானவர் அல்ல என்று இமாம் இப்னு மயீன் அவர்களும் விமர்சித்துள்ளார்கள்.

பார்க்க : மீஸானுல் இஃதிதால் பாகம் 4 பக் 497

அதே ஜலாஉல் அஃப்ஹாம் பாக 1 பக் 430 ல் சுப்ஹ் மற்றும் மக்ரிப் தொழுத பிறகு யாரிடத்திலும் பேசாமல் நூறு முறை ஸலவாத் கூறினால் அவரின் 100 தேவைகள் அல்லாஹ்வால் பூர்த்தி செய்யப்படும் என்று ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் இப்றாஹீம் பின் அஷ்அஸ் குராஸானீ எனும் பலவீனமானவர் இடம் பெற்றுள்ளார்.

எனவே மேற்கண்ட செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

செய்தி 3

 (من صلى علي حين يصبح عشراً وحين يمسي عشراً أدركته شفاعتي يوم القيامة)).

யார் காலையிலும், மாலையிலும் என் மீது பத்து முறை ஸலவாத் கூறுகிறாரோ மறுமையில் அவருக்கு எனது பரிந்துரை கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)

நூல் : அஸ்ஸலாத்து அலன் நபி பாக 1 பக் 48

இதுவும் பலவீனமான செய்தியாகும். ஏனெனில் இந்தச் செய்தியில் சில குறைபாடுகள் உள்ளன.

முதலாவது இதில் அறிவிப்பாளர் வரிசை தொடர்பு அறுந்து உள்ளது.

காலித் பின் மஃதான் என்பவர் அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் செவியுறவில்லை என்று இமாம் அஹ்மத் கூறுகிறார். (ஜாமிஉத் தஹ்ஸீல்)

167 – خالد بن معدان الحمصي يروي عن أبي عبيدة بن الجراح ولم يدركه قال أحمد بن حنبل لم يسمع من أبي الدرداء

காலிதிற்கும், அபுத்தர்தா அவர்களுக்கும் இடையில் யாரோ விடுபட்டுள்ளார்கள். அவர் யாரென்று அறியப்படவில்லை. இதனடிப்படையில் பல அறிஞர்கள் இச்செய்தியை பலவீனம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இது இந்தச் செய்தியில் உள்ள முக்கிய குறைபாடாகும்.

அடுத்து இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான பகிய்யா பின் வலீத் என்பவர் முதல்லிஸ் – இருட்டடிப்பு செய்பவர் ஆவார். இவர் தாம் நேரடியாகச் செவியேற்றதைக் குறிக்கும் வார்த்தைகளைக் கூறவில்லை. ஹதீஸ்கலை விதிப் பிரகாரம் இருட்டடிப்பு செய்பவர் குறிப்பிட்ட செய்தியை தன் ஆசிரியரிடமிருந்து நேரடியாகக் கேட்டதைக் குறிக்கும் வார்த்தைகளைக் கூறாவிடில் அந்தச் செய்தி ஏற்கப்படாது. எனவே இதுவும் இந்தச் செய்தியில் குறைவை ஏற்படுத்துவதால் செய்தி பலவீனமாகிறது.

செய்தி 4

الترغيب والترهيب لقوام السنة – (2 / 329(

1696- أخبرنا أبو الحسن: علي بن أحمد المؤذن المديني الزاهد بنيسابور، ثنا أحمد بن علي الحافظ، ثنا أبو بكر: محمد بن الحسين بن جعفر البخاري -قدم حاجاً- أن أبا حسان: عيسى بن عبد الله حدثهم قال: ثنا محمد بن رزام، ثنا محمد بن عمرو، ثنا مالك بن دينار وأبان، عن أنس -رضي الله عنه- قال: قال رسول الله صلى الله عليه وسلم :((من صلى علي في كل يوم جمعة أربعين مرة محا الله عنه ذنوب أربعين سنة، ومن صلى علي مرة واحدة فتقبلت منه، محا الله عنه ذنوب ثمانين سنة،)).

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒவ்வொரு ஜூம்ஆ நாளிலும் நாற்பது முறை யார் என் மீது ஸலவாத் ஓதுகிறாரோ அவரது நாற்பது வருட பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். ஒரு முறை என் மீது ஸலவாத் ஓதினால் அது அவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டு எண்பது வருட பாவங்களை அல்லாஹ் அழித்து விடுகிறான்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : அத்தர்கீப் வத்தர்ஹீப், பாகம் : 2, பக்கம்: 329

இதில் முஹம்மத் பின் ரஸாம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் ஹதீஸ் துறையில் மதிப்பில்லாதவர். ஆகையினால் ஹதீஸ் கலை நிபுணர்கள் இவரைப் புறக்கணித்து விட்டனர் என்று அஸதீ அவர்களும், இவர் தவறான செய்திகளை அறிவிப்பவர் என்று தாரகுத்னீ அவர்களும் விமர்சித்துள்ளனர்.

الضعفاء والمتروكين لابن الجوزي – (3 / 58(

محمد بن رزام أبو عبد الملك البصري يروي عن محمد بن عبد الله الأنصاري قال الأزدي ذاهب الحديث تركوه وقال الدراقطني يحدث بالباطيل

நூல் : அல்லுஅஃபா வல்மத்ரூகீன் பாகம்: 3 பக்கம்: 58

இமாம் தஹபீ அவர்கள், இவர் ஹதீஸில் இட்டுக்கட்டுபவர்; சந்தேகிக்கப்படுபவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: மீஸானுல் இஃதிதால் பாகம்: 3, பக்கம் :545)

இதிலிருந்து இது மிகவும் பலவீனமான செய்தி என்பது தெளிவாகிறது.

செய்தி 5

மேற்கண்ட வாசகத்தை உள்ளடக்கியதுடன் ஸலவாத் தொடர்பான மற்றுமொரு செய்தி அத்தர்கீப் ஃபீ பழாயிலி அஃமால் எனும் நூலில் பின்வருமாறு பதிவாகியுள்ளது.

الصلاة علي نور على الصراط

என் மீது ஸலவாத் சொல்வது (மறுமையின் இருள் நிறைந்த) ஸிராத் எனும் பாலத்தில் ஒளி தருவதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதில் அவ்ன் பின் உமாரா, ஹஜ்ஜாஜ் பின் ஸினான், மற்றும் அலி பின் ஜைத் ஆகிய மூன்று பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களை எண்ணற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கள்.

பார்க்க : தஹ்தீபுல் கமால், பாகம்: 20, பக்கம்: 439, லிஸானுல் மீஸான் பாகம்:2, பக்கம்: 263, தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்:8, பக்கம் :173

தாரகுத்னீ, இப்னு ஹஜர் உள்ளிட்ட பல அறிஞர்கள் இந்தச் செய்தி மிக பலவீனமான செய்தி என்று விளக்கியுள்ளார்கள்.

செய்தி 6

المعجم الكبير للطبراني – (19 / 181(

447 – حَدَّثَنَا أَحْمَدُ , قَالَ: نا إِسْحَاقُ بن وَهْبٍ الْعَلافُ , قَالَ: نا بِشْرُ بن عُبَيْدِ اللَّهِ الدَّارِسِيُّ , قَالَ: نا حَازِمُ بن بَكْرٍ، عَنْ يَزِيدَ بن عِيَاضٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى عَلَيَّ فِي كِتَابٍ لَمْ تَزَلِ الْمَلائِكَةُ تَسْتَغْفِرُ لَهُ مَا دَامَ اسْمِي فِي ذَلِكَ الْكِتَابِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

யார் என் மீது புத்தகத்தில் (எழுத்தில்) ஸலவாத் சொல்வாரோ அப்புத்தகத்தில் என் பெயர் இருக்கும் வரை மலக்குமார்கள் அவருக்காக பாவமன்னிப்பு கோரிக் கொண்டே இருப்பார்கள்.

அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)

இந்தச் செய்தி தப்ரானீ 447, முஃஜமுல் அவ்ஸத் 1835, ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது மிகவும் பலவீனமான செய்தியாகும். இதன் அறிவிப்பில் உள்ள யஸீத் பின் இயாழ் என்பவரை அனைத்து அறிஞர்களும் பலவீனமானவர் என்று சான்றளித்துள்ளனர்.

இவரை இமாம் புகாரி ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்றும் இமாம் மாலிக், இப்னு மயீன் ஆகியோர் இவர் ஹதீஸில் பொய் கூறுபவர் என்றும் விமர்சித்துள்ளனர். இன்னும் எண்ணற்ற அறிஞர்கள் இவரைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பார்க்க : மீஸானுல் இஃதிதால், பாகம்: 4,பக்கம்: 436

ஆகவே இந்தச் செய்தி முற்றிலும் பலவீனமான, இட்டுக்கட்டுப்பட்ட தரத்தில் அமைந்த செய்தியாகும்.

மேற்கண்ட அதே செய்தி அத்தர்கீப் வத்தர்ஹீப் எனும் நூலில் பாகம்: 2, பக்கம்: 330ல் பதிவாகியுள்ளது. எனினும் இதன் அறிவிப்பும் பலவீனமாகவே உள்ளது.

الترغيب والترهيب لقوام السنة – (2 / 330(

1697- أخبرنا عبد الواحد بن إسماعيل، أنبأ أبو محمد الخبازي ثنا أبو محمد: عبد الله بن أحمد الحفصي، ثنا إبراهيم بن إسماعيل الزاهد -المعروف بالخزاز- ثنا عبد السلام بن محمد المصري بمصر، ثنا سعيد بن عفير قال: حدثني محمد بن إبراهيم بن أمية القرشي المديني، عن عبد الرحمن بن عبد الله الأعرج، عن أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله صلى الله عليه وسلم :((من صلى علي في كتاب لم تزل الملائكة يستغفرون له ما دام اسمي في ذلك الكتاب)).

இதில் அப்துஸ் ஸலாம் பின் முஹம்மத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று இமாம் தாரகுத்னீ அவர்களும், மறுக்கப்பட வேண்டிய செய்திகள் கொண்டவர் என்று இமாம் கதீப் அவர்களும் விமர்சித்துள்ளார்கள்.

நூல் : லிஸானுல் மீஸான்,; பாகம்: 5, பக்கம்: 179

எனவே இந்த அறிவிப்பும் பலவீனமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

No comments:

Post a Comment