Tuesday, February 12, 2019

துஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்

துஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்

எம்.ஐ.சுலைமான்

வணக்கங்களில் மிக முக்கியமானதும், வணக்கங்களில் மிக அடிப்படையானதும் துஆ எனும் பிரார்த்தனையாகும்.

அல்லாஹ் ஒருவன்தான் நம்முடைய எஜமானன். அல்லாஹ்வைத் தவிர உள்ள அனைத்தும் இறைவனின் படைப்புகளே, அவனுடைய அடிமைகளே என்ற ஓரிறைக் கொள்கைக்கு அடிப்படையாய்த் திகழ்வது பிரார்த்தனைதான்.

ஒருவன் அல்லாஹ்விடம் மட்டும் தன்னுடைய தேவைகளைக் கேட்கும் போதும், தன்னுடைய பாவங்களுக்கு மன்னிப்புக் கோரும் போதும் அல்லாஹ் எஜமானன் என்பதையும், தான் அல்லாஹ்வின் அடிமை என்பதையும் அவன் இறைவனிடம் ஒப்புக் கொள்கிறான்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்.

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ (سورة الغافر 40:59)

என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.

திருக்குர்ஆன் 40 : 59

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُواْ لِي وَلْيُؤْمِنُواْ بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ (سورة البقرة 2:186)

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள் (என்பதைக் கூறுவீராக!)

திருக்குர்ஆன் 2 : 186

عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ ثُمَّ قَرَأَ وَقَالَ رَبُّكُمْ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ (رواه الترمدي )

பிரார்த்தனை தான் வணக்கமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (40 : 59) என்ற வசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல் : திர்மிதீ 3170,2895, 3294

பிரார்த்தனைகளின் சிறப்புகள் தொடர்பாக நபியவர்கள் கூறியதாக செய்திகள் வந்துள்ளன. அவற்றில் ஸஹீஹான செய்திகளும் உள்ளன. பலவீனமான செய்திகளும் உள்ளன. அது பற்றிய விவரங்களைக் காண்போம்.

பிரார்த்தனை இறைவனிடம் மதிப்பு மிக்கது

حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ العَظِيمِ العَنْبَرِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ القَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ تَعَالَى مِنَ الدُّعَاءِ (رواه الترمدي 3292)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பிரார்த்தனையை விட இறைவனிடம் மதிப்பு மிக்கது வேறொன்றுமில்லை.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : திர்மிதி (3292)

இந்தச் செய்தி பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இரண்டு பலவீனங்கள் உள்ளன.

முதலாவது இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கதாதா என்பவர் முதல்லிஸ் ஆவார். அதாவது தமது ஆசிரியரிடமிருந்து கேட்காத செய்தியையும் நேரடியாகக் கேட்டதைப் போன்று அறிவிப்பவர் ஆவார்.

இதுபோன்ற முதல்லிஸ் என்ற நிலையில் உள்ளவர்கள் ஸமிஃத்து (நான் செவியேற்றேன்), ஹத்தஸனா அஹ்பரனா  (எங்களுக்கு அறிவித்தார்) போன்ற நேரடியாகச் செவியுற்றதற்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால் தான் அதனை ஆதாரமாகக் கொள்ள முடியும். மாறாக கால (சொன்னார்), அல்லது அன்  (இன்னார் வழியாக) என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது.

تهذيب التهذيب ـ محقق (8 / 317) :وقال أبو داود الطيالسي عن شعبة كان قتادة إذا جاء ما سمع قال حدثنا وإذا جاء ما لم يسمع قال قال فلان

கதாதா அவர்கள் தான் நேரடியாகக் கேட்டதை அறிவித்தால் ஹத்தஸனா (இன்னார் எங்களுக்கு அறிவித்தார்) என்று கூறுவார். தான் நேரடியாகக் கேட்காததை அறிவித்தால் கால ஃபுலான் (இன்னார் சொன்னார்) என்று கூறுவார் என ஷுஃபா அவர்கள் கூறியதாக அபூதாவூத் தயாலிஸி அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 8, பக்கம் : 317

تهذيب التهذيب ـ محقق (8 / 318) :

وقال أبو حاتم اثبت اصحاب انس الزهري ثم قتادة قال وهو أحب إلي من أيوب ويزيد الرشك إذا ذكر الخبر يعني إذا صرح بالسماع

அனஸ் அவர்களின் மாணவர்களில் மிகவும் நம்பகமானவர்கள் ஷுஹ்ரி என்பாரும் பிறகு கதாதா அவர்களும் ஆவார்கள் கதாதா அவர்கள் தான் நேரடியாகக் கேட்டதை தெளிவுபடுத்தி செய்தியை அறிவித்தால் அய்யூப் மற்றும் யஸீத் ஆகியோரை விட எனக்கு நேசத்திற்குரியவர் ஆவார் என இமாம் அபூ ஹாத்திம் கூறியுள்ளார்கள்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 8 பக்கம் 318

سير أعلام النبلاء [ مشكول + موافق للمطبوع ] (9 / 325) :وَهُوَ حُجّةٌ بِالإِجْمَاعِ إِذَا بَيَّنَ السَّمَاعَ، فَإِنَّهُ مُدَلِّسٌ مَعْرُوْفٌ بِذَلِكَ، وَكَانَ يَرَى القَدَرَ – نَسْأَلُ اللهَ العَفْوَ

கதாதா அவர்கள் தான் நேரடியாகக் கேட்டதை தெளிவுபடுத்தி அறிவித்தால் ஏகோபித்த அடிப்படையில் அவர் ஆதாரத்திற்குரியவர் ஆவார். அவர் அறியப்பட்ட முதல்லிஸ் ஆவார். இன்னும் விதியை மறுக்கும் கொள்கையைச் கொண்டிருந்தார். அல்லாஹ்விடம் அவருக்கு மன்னிப்பைக் கோருவோம் என இமாம் தஹபி கூறுகிறார்.

நூல்:ஷியரு அஃலாமு அன் நுபலாவு பாகம்:9 பக்கம் : 325

இது வரை நாம் பார்த்த விமர்சனங்களிலிருந்து கதாதா அவர்கள் முதல்லிஸ் என்பது தெளிவாகி விட்டது. அவர் நேரடியாகக் கேட்டதற்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால்தான் அதை ஆதாரமாகக் கொள்ள முடியும் என்பது தெளிவாகிறது.

ஆனால் மேற்கண்ட செய்தியின் எந்த அறிவிப்பிலும் கதாதா அவர்கள் தன்னுடைய ஆசிரியரான ஸயீது இப்னு அபில் ஹஸன் என்பாரிடமிருந்து நேரடியாகக் கேட்டதற்குரிய வார்த்தையைப் பயன்படுத்தி அறிவிக்கவில்லை.

எனவே இந்தச் செய்தி பலவீனம் என்பது உறுதியாகிவிட்டது.

இரண்டாவது இந்தச் செய்தியின் மற்றொரு அறிவிப்பாளரான இம்ரான் அல்கத்தான் என்பவர் பலவீனமானவர் ஆவார். இவருடைய முழுப் பெயர் இம்ரான் இப்னு தவார் அல்கத்தான் அபுல் அவ்வாம் என்பதாகும்.

تهذيب التهذيب (8/ 131) وقال الدوري عن بن معين ليس بالقوي وقال مرة ليس بشيء لم يرو عنه يحيى بن سعيد..وقال الآجري عن أبي داود هو من أصحاب الحسن وما سمعت إلا خيرا وقال مرة ضعيف …وقال النسائي ضعيف ….وقال الترمذي قال البخاري صدوق بهم…. وقال الدارقطني كان كثير المخالفة والوهم

இவர் உறுதியானவர் இல்லை என்றும், இவர் ஒரு பொருட்டாகக் கொள்ளத் தக்கவரில்லை என்றும், யஹ்யா இப்னு ஸயீத் இவரிடமிருந்து அறிவிக்கவில்லை என்றும் இமாம் யஹ்யா இப்னு முயீன் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

இவர் பலவீனமானவர் என்று இமாம் அபூதாவூத், மற்றும் இமாம் நஸாயீ விமர்சித்துள்ளார்கள்.

இவர் உண்மையாளர் தவறிழைக்கக்கூடியவர் என்று இமாம் புகாரி விமர்சித்துள்ளதாக இமாம் திர்மிதி கூறுகிறார்.

இவர் அதிகம் முரண்படக்கூடியவர் மற்றும் தவறிழைப்பவர் என்று இமாம் தாரகுத்னீ விமர்சித்துள்ளார்கள்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 8 பக்கம் 131

மேற்கண்ட விமர்சனங்களின் அடிப்படையில் இந்தச் செய்தி பலவீனமானது என்பது உறுதியாகிறது.

அல்லாஹ் கோபப்படுகின்றான்?

حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَعِيلَ عَنْ أَبِي الْمَلِيحِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَسْأَلْ اللَّهَ يَغْضَبْ عَلَيْهِ (رواه الترمدي 3295)

யார் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவன் மீது அல்லாஹ் கோபப்படுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 3295

மேற்கண்ட செய்தி இப்னு மாஜா, அஹ்மத், ஹாகிம் போன்ற கிரந்தங்களிலும் இதே அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் அபூ ஸாலிஹ் அல்ஹவ்சிய்யு என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.

تهذيب التهذيب (12/ 131) 613–  بخ ت ق – أبو صالح الخوزي عن أبي هريرة حديث من لا يسأل الله تعالى يغضب عليه وعنه أبو المليح الفارسي الخراط قال ابن الدورقي عن ابن معين ضعيف قلت وقال أبو زرعة لا بأس به.

இவர் பலவீனமானவர் என்று இமாம் இப்னு மயீன் அவர்களும், இவரிடம் பிரச்சினையில்லை என்று இமாம் அபூ சுர்ஆ அவர்களும் கூறியுள்ளார்கள்.

(தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 12 பக்கம் 131)

تقريب التهذيب (ص: 649)

8172- أبو صالح الخوزي لين الحديث من الثالثة بخ ت ق

இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர் என இமாம் இப்னு ஹஜர் விமர்சித்துள்ளார்கள்.

(தக்ரீபுத் தஹ்தீப் பக்கம் 649)

இந்த அபூஸாலிஹ் என்பாருக்கு இந்த ஒரு அறிவிப்பைத் தவிர வேறு எந்த அறிவிப்புகளும் கிடையாது. மேலும் இவரை இமாம் இப்னு மயீன் பலவீனப்படுத்தியுள்ளார்கள். எனவே இவர் யாரென்றே அறியப்படாதவர் என்ற நிலையில் உள்ளவராவார். இதன் அடிப்படையிலும் இது மேலும் பலவீனமாகிறது.

துன்பம் நீங்கும் வரை பிரார்த்தித்தல் வணக்கங்களில் சிறந்தது என்ற செய்தி

حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ الْبَصْرِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ وَاقِدٍ عَنْ إِسْرَائِيلَ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُحِبُّ أَنْ يُسْأَلَ وَأَفْضَلُ الْعِبَادَةِ انْتِظَارُ الْفَرَجِ قَالَ أَبُو عِيسَى هَكَذَا رَوَى حَمَّادُ بْنُ وَاقِدٍ هَذَا الْحَدِيثَ وَقَدْ خُولِفَ فِي رِوَايَتِهِ وَحَمَّادُ بْنُ وَاقِدٍ هَذَا هُوَ الصَّفَّارُ لَيْسَ بِالْحَافِظِ وَهُوَ عِنْدَنَا شَيْخٌ بَصْرِيٌّ وَرَوَى أَبُو نُعَيْمٍ هَذَا الْحَدِيثَ عَنْ إِسْرَائِيلَ عَنْ حَكِيمِ بْنِ جُبَيْرٍ عَنْ رَجُلٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا وَحَدِيثُ أَبِي نُعَيْمٍ أَشْبَهُ أَنْ يَكُونَ أَصَحَّ

அல்லாஹ்வின் அருட்கொடையை அவனிடம் நீங்கள் கேளுங்கள்! ஏனெனில் தன்னிடம் கேட்கப்படுவதை அல்லாஹ் பெரிதும் விரும்புகிறான். துன்பம் நீங்கும் வரை எதிர்பார்ப்பது தான் வணக்கங்களில் மிகச் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: திர்மிதீ 3494

இந்தச் செய்தியும் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக ஹம்மாத் இப்னு வாகித் என்பார் இடம் பெற்றுள்ளார். இந்தச் செய்தியை பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்களே இவர் (ஹதீஸ்களை) மனனம் செய்தவராக இல்லை என்று விமர்சித்துள்ளார்கள்.

تهذيب التهذيب (3/ 21) 23– ت – حمادبن واقد2 العيشي أبو عمرو والصفار البصري ….قال عمرو بن علي كثير الخطاء كثير الوهم ليس ممن يروي عنه وقال ابن معين ضعيف وقال البخاري منكر الحديث وقال الترمذي ليس بالحافظ عندهم وقال أبو زرعة لين الحديث وقال أبو حاتم ليس بقوي لين الحديث يكتب حديثه على الاعتبار وبابه عثمان بن مطر ويوسف بن عطية وقال ابن عدي عامة ما يرويه مما لا يتابعه عليه الثقات له عند الترمذي حديث واحد وهو في انتظار الفرج وأعله قلت وقال الحاكم أبو أحمد ليس بالقوي عندهم وقال ابن حبان لا يجوز الاحتجاج بخبره إذا انفرد وقال العقيلي يخالف في حديثه.

இவர் அதிகம் தவறிழைப்பவர், பிழை விடுபவர், இவரிடம் இருந்து அறிவிப்பதற்கு தகுதியானவர் கிடையாது என்று அம்ருப்னு அலி என்பார் கூறியுள்ளார்.

இவர் பலவீனமானவர் என்று இமாம் இப்னு மயீன் அவர்களும், ஹதீஸ்களில் நிராகரிக்கத் தகுந்தவர் என்று இமாம் புகாரி அவர்களும் கூறியுள்ளனர்.

இவர் ஹாஃபிளாக (ஹதீஸ்களில் தேர்ந்தவராக) இல்லை என்று இமாம் திர்மிதி கூறியுள்ளார்.

இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர் என்று இமாம் அபூ சுர்ஆ அவர்களும், இவர் உறுதியானவர் கிடையாது ஹதீஸ்களில் பலவீனமானவர் என்று இமாம் அபூ ஹாதிம் அவர்களும் கூறியுள்ளனர்.

இவர் அறிவிக்கும் பெரும்பான்மையான அறிவிப்புகள் நம்பகமானவர் வழியாக வருவதில்லை என்று இப்னு அதீ விமர்சித்துள்ளார்.

இவர் உறுதியானவர் இல்லை என்று இமாம் ஹாகிம் அவர்களும்,  இவர் தனித்து வரும் போது இவரைக் ஆதாரமாக எடுப்பது கூடாது என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும் கூறியுள்ளனர். இவர் தான் அறிவிக்கும் செய்தியில் முரண்படுபவர் என்று இமாம் இஜ்லீ விமர்சித்துள்ளார்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 3 பக்கம் : 21)

மேற்கண்ட இமாம்களின் விமர்சனங்களின் அடிப்படையில் இந்தச் செய்தி மிகப் பலவீனமானது என்பது தெளிவாகிறது.

ஹம்மாத் இப்னு வாகித் என்பார் இடம் பெறாத மற்றொரு அறிவிப்பாளர் தொடரில் இதே செய்தி வந்துள்ளது. ஆனால் அது முர்ஸல் எனும் தரத்தில் அமைந்தது என இமாம் திர்மிதி அவர்கள் இந்தச் செய்தியின் அடிக்குறிப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்கள் . முர்ஸல் என்பது நபித்தோழர் விடுபட்ட செய்தியாகும்.

பிரார்த்தனை வணக்கங்களின் மூளை?

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ ابْنِ لَهِيعَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الدُّعَاءُ مُخُّ الْعِبَادَةِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ ابْنِ لَهِيعَةَ (رواه الترمدي 3293)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரார்த்தனையாகிறது வணக்கங்களின் மூளையாகும்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : திர்மிதி (3293)

இந்தச் செய்தியும் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு லஹீஆ என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார்.

346 – عبد الله بن لهيعة بن عقبة أبو عبد الرحمن البصري ضعيف:الضعفاء والمتروكين – النسائي (ص 64)

நூல்: அல்லுஃபாவு வல் மத்ரூகீன்-நஸயீ, பாகம்: 1, பக்கம்: 64

இதே ஹதீஸ் மற்றொரு அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.

نهاية المراد من كلام خير العباد (1/ 52)

51 – أَخْبَرَنَا أَبُو مُوسَى، أنبا الْحَسَنُ بْنُ أَحْمَدَ بْنِ الْحَسَنِ، أَنَا الْفَضْلُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ، ثنا أَبُو مُحَمَّدِ بْنُ حِبَّانَ، ثنا عَبْدَانُ، ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، ثنا أَبُو مُعَاوِيَةَ. ح قَالَ أَبُو مُحَمَّدِ بْنُ حِبَّانَ، وَنَا الْفَضْلُ بْنُ الْعَبَّاسِ، ثنا الْقَوَارِيرِيُّ، نا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، جَمِيعًا، عَنِ الأَعْمَشِ، عَنْ ذَرٍّ، عَنْ يُسَيْعٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:الدُّعَاءُ مُخُّ الْعِبَادَةِ , ثُمَّ قَرَأَ: {ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ} [غافر: 60)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரார்த்தனையாகிறது வணக்கங்களின் மூளையாகும். பிறகு என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; (40 : 59) என்ற வசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல் : நிஹாயத்துல் முராத் மின் கலாமி ஹைரில் இபாத் பாகம் : 1 பக்கம் : 52)

இதன் அறிவிப்பாளர் தொடரில் அல்பள்லு இப்னு முஹம்மத் இப்னு ஸயீத் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென்றே அறியப்படாதவர் ஆவார். எனவே இதுவும் பலவீனமான செய்தியாகும்.

No comments:

Post a Comment