Wednesday, September 23, 2020

எனக்குத் தெரிந்த ஒருவர் அறியாமைக் காலத்தில் அக்கா மகளைத் திருமணம் .......??

மார்க்க கேள்வி-பதில்

எனக்குத் தெரிந்த ஒருவர் அறியாமைக் காலத்தில் அக்கா மகளைத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இப்போது இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்று உணர்கிறார். இந்த நிலையில் அவர் என்ன செய்வது?

 

உடன் பிறந்த சகோதரியின் மகளை மணமுடிப்பதை அல்லாஹ் தடை செய்துள்ளான்.

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர்.

திருக்குர்ஆன் 4:23

சகோதாரியின் மகளைத் திருமணம் செய்யக் கூடாது என்பதை ஒருவர் அறியாமல் இருக்க முடியாது. முஸ்லிம்களில் எந்தக் கொள்கை உடையவராக இருந்தாலும் அவர்கள் இது போன்ற திருமணத்தை செய்து வைக்க மாட்டார்கள். அவர் அறிந்து கொண்டே தான் இதைச் செய்திருக்க வேண்டும். இப்போது இறையச்சம் ஏற்பட்டு அவர் திருந்த எண்ணியிருக்கலாம். எனவே அவர் அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட இந்தக் காரியத்தைச் செய்ததற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த வாழ்க்கையை மறுபடியும் அவர் தொடரக்கூடாது. இதற்கு முன்பு அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தாலும் சட்டம் தெளிவான பிறகு அந்த வாழ்வைத் தொடராமல் இருவரும் பிரிந்துவிட வேண்டும்.

இது போன்ற பிரச்சனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு நபித்தோழருக்கு ஏற்பட்டது. கணவன் மனைவியாக வாழ்ந்த அவ்விருவரும் பிரிந்துவிட வேண்டும் என்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) கூறுகிறார்கள் :

நான் அபூஇஹாப் பின் அஸீஸ் என்பவரின் மகளை மணந்து கொண்டேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து நான், உக்பாவாகிய உனக்கும் நீ மணந்துகொண்டுள்ள பெண்ணுக்கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) பாலூட்டியிருக்கிறேன் (இந்த வகையில் நீங்கள் இருவரும் பால்குடிச் சகோதரரர்கள் ஆவீர்கள்) என்று கூறினார். நீங்கள் எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணமுடித்துக் கொண்டபோது) நீங்கள் எனக்கு (இதைத்) தெரிவிக்கவில்லையே! என்று கேட்டேன். ஆகவே, (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து) நான் மதீனாவிலிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கிப் பயணம் செய்து, அவர்களிடம் (இது குறித்து) வினவினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நீயும் உம் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால்குடித்ததாகச்) சொல்லப்பட்ட பிறகு எப்படி? என்று கேட்டார்கள். ஆகவே நான் அவளை விட்டுப் பிரிந்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்துகொண்டாள்.

அறிவிப்பவர் : உக்பா (ரலி)

நூல் : புகாரி 88

இவர்கள் பிரிந்துவிட்டாலும் குழந்தைக்கு இவர்களே தாயும் தந்தையுமாவார்கள். இவ்விருவரில் குழந்தை யாரிடத்தில் இருக்க விரும்புகின்றதோ அவரிடத்தில் சேர்க்கப்படும்.

ஏகத்துவம்.

No comments:

Post a Comment