Monday, August 25, 2025

அல்லாஹ்வை அஞ்சுவது போல் மற்றவற்றை அஞ்சுதல்

அல்லாஹ்வை அஞ்சுவது போல் மற்றவற்றை அஞ்சுதல்

நாம் என்ன செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். எனவே தறுகள் செய்யும் போது அவனுக்கு அஞ்சுகிறோம். அல்லாஹ்விற்கு மாறு செய்தால் அவன் தண்டித்து விடுவானோ என்று பயப்படுகிறோம். இவ்வாறு அல்லாஹ்விற்கு மட்டுமே பயப்பட வேண்டும். தர்ஹாக்களில் நடக்கும் காரியங்கள் அனைத்தும் வழிகேடு என்று தெளிவாகத் தெரிந்தாலும் அதை வெளியில் சொல்வதற்குச் சிலர் பயப்படுகிறார்கள்.

இணைவைப்பைக் கண்டித்துப் பேசுபவர்களுக்கு உறுதுணையாக இவர்கள் இருப்பதில்லை. கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர் நம்மை தண்டித்து விடுவாரோ என்ற பயம்தான் பலரை சிந்திக்க விடாமல் முழுமையான ஈமானுக்கு வரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு இறந்து போனவர்களுக்கு அஞ்சுவது இணைவைப்பாகும். இறந்து போனவர்களால் நன்மை மட்டுமின்றி எந்த தீமையும் நமக்கு செய்ய முடியாது என்றே நாம் நம்ப வேண்டும்.

ஷைத்தானே, தனது நேசர்களை (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் எனக்கே அஞ்சுங்கள்!

அல்குர்ஆன் (3 : 175)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்!

அல்குர்ஆன் (3 : 102)

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.

அல்குர்ஆன் (9 : 18)

அவரது சமுதாயத்தினர் அவரிடம் விவாதித்தனர். அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா? நீங்கள் இணைகற்பித்தவற்றுக்கு அஞ்ச மாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.) அவன் அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர்களா?

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சான்றையும் வழங்காதவற்றை அவனுக்கு இணையாக்குவதற்கு நீங்கள் அஞ்சாத போது நீங்கள் இணைகற்பித்தவைகளுக்கு எவ்வாறு நான் அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தால் இரு கூட்டத்தினரில் அச்சமற்றிருக்க அதிகத் தகுதி படைத்தவர் யார்? (என்றும் இப்ராஹீமு; கூறினார்.)

அல்குர்ஆன் (6 : 80,81)

No comments:

Post a Comment