Monday, August 25, 2025

பள்ளிவாசலுக்குள் இணைவைப்பு

பள்ளிவாசலுக்குள் இணைவைப்பு

அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காகக் கட்டப்படுகின்ற ஆலயத்திலும் இன்று இணைவைக்கப்படுகிறது. பள்ளிவாசலுக்கு அருகில் மண்ணறைகளைக் கட்டி வைத்துள்ளார்கள். பெரும்பாலான பள்ளிகள் இப்படித்தான் உள்ளது. சில ஊர்களில் பள்ளிக்குள்ளேயே மண்ணறைகள் கட்டப்பட்டு அதை நோக்கி மக்கள் தொழுது கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் அல்லாஹ்வின் படைப்புகளிலேயே தரங்கெட்டவர்கள். மோசமானவர்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மறுமை நாள் வரும் போது உயிருடன் இருப்பவர்களும் மண்ணறைகளை பள்ளிவாசல்களாக ஆக்கிக் கொள்பவர்களும் மக்களிலேயே படுமோசமானவர்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : அஹ்மத் (3929)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அடக்கத் தலங்களை (கப்று) நோக்கித் தொழாதீர்கள்; அவற்றின் மீது உட்காராதீர்கள்.

அறிவிப்பவர் : அபூமர்ஸத் அல்ஃகனவீ (ரலி)

நூல் : முஸ்லிம் (1769)

உங்கள் வீடுகளை தொழுகை நடத்தப்படாத மண்ணறைகளை போன்று ஆக்கி விடாதீர்கள். வீடுகளில் தொழுங்கள் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். இதன் மூலம் மூலம் மண்ணறை உள்ள இடத்தில் தொழக்கூடாது என்பதை உணர்த்துகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களது தொழுகைகளில் சிலவற்றை உங்களுடைய இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள் உங்களுடைய இல்லங்களை கப்று (சவக்குழி)களாக ஆக்கி விடாதீர்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி (432)

No comments:

Post a Comment