Tuesday, July 27, 2010

ஒருவனது சுமையை இன்னொருவன் சுமக்க மாட்டான் ???

?ஒருவனது சுமையை இன்னொருவன் சுமக்க மாட்டான் என்று 17:15 வசனம் கூறுகின்றது. இன்னொரு வசனத்தில், ''உன் பாவத்துடன் என் பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாக நீ ஆவதையே நான் விரும்புகிறேன். இதுவே அநீதி இழைத்தோரின் கூலியாகும்'' (5:29) என்று இடம் பெறுகின்றது. இரண்டும் முரணாகத் தோன்றுகிறதே! ஒருவர் சுமையை மற்றொருவர் சுமப்பாரா? மாட்டாரா? விளக்கவும்.



நேர் வழி பெற்றவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.

அல்குர்ஆன் 17:15

ஒருவர் மற்றவரின் பாவத்தைச் சுமக்க முடியாது என்று திருக்குர்ஆன் மேற்கண்ட வசனத்திலும், 6:164, 35:18, 39:7 உள்ளிட்ட பல வசனங்களிலும் கூறுகிறது.

இது இஸ்லாத்தின் மிகப் பெரிய அடிப்படைக் கொள்கை. குறிப்பாக இந்த அடிப்படையில் தான் கிறித்தவ மார்க்கத்தில் இருந்து முற்றாக இஸ்லாம் மாறுபடுகிறது. எல்லோரும் பாவிகளாகப் பிறந்து அந்தப் பாவத்தை ஏசு சுமந்து கொண்டார் எனக் கூறப்படும் சித்தாந்தத்தை இஸ்லாம் மறுக்கிறது.

எனவே இதற்கு முரணில்லாத வகையில் தான் நீங்கள் குறிப்பிடும் 5:29 வசனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. ''நான் உன்னைக் கொல்வேன்'' என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். ''(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.

''என்னைக் கொல்வதற்காக உன் கையை என்னை நோக்கி நீ நீட்டினால் உன்னைக் கொல்வதற்காக என் கையை உன்னை நோக்கி நான் நீட்டுபவனல்லன். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் அஞ்சுகிறேன்''

''உன் பாவத்துடன், என் பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாக நீ ஆவதையே நான் விரும்புகிறேன். இதுவே அநீதி இழைத்தோரின் கூலியாகும்'' (எனவும் அவர் கூறினார்)
அல்குர்ஆன் 5:27, 28, 29

இந்த வசனங்கள் ஆதம் (அலை) அவர்களின் இரண்டு புதல்வர்களுக்கு இடையில் நடந்த உரையாடல் பற்றிப் பேசுகின்றன. அதில் ஒருவர், மற்றொருவரைக் கொல்வேன் என்று கூறும் போது, அந்த நல்லவர், ''நான் உன்னைக் கொல்ல முயற்சி செய்ய மாட்டேன்; நீ ஏற்கனவே செய்த பாவங்களுடன் என்னைக் கொலை செய்த பாவத்தையும் சுமந்து நரகவாசியாக ஆக வேண்டும்'' என்று கூறுகிறார்.

இந்த வசனங்களில் ஒருவரது பாவத்தை மற்றொருவர் சுமப்பார் என்று கூறப்படவில்லை.

எனது பாவம் என்பது, என்னைக் கொலை செய்த பாவம் என்ற கருத்தில் இங்கு கையாளப்படுகிறது. இது எல்லா மொழிகளிலும் வழக்கில் உள்ளது தான். என்னுடைய பாவம் உன்னைச் சும்மா விடாது என்று நாம் பேச்சு வழக்கில் கூறுவதுண்டு. அது தான் இந்த வசனத்திலும் கூறப்படுகின்றதே தவிர, ஒருவரது பாவத்தை மற்றவர் சுமப்பார் என்ற கருத்தில் கூறப்படவில்லை.

--> Q/A Ehathuvam Sep 2007

No comments:

Post a Comment