Tuesday, July 27, 2010

சுபுஹுக்கு பாங்கு சொன்ன பிறகு இஷா தொழுகையையும்??

?சுபுஹுக்கு பாங்கு சொன்ன பிறகு இஷா தொழுகையையும், வித்ரு தொழுகையையும் தொழுலாமா? இரவு 4 மணிக்கு தஹஜ்ஜத் தொழலாமா?


நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.

அல்குர்ஆன் 4:103

இந்த வசனத்தில் தொழுகையை அதற்கான குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகின்றான். நபி (ஸல்) அவர்களும் ஐவேளைத் தொழுகையின் ஆரம்ப நேரம் மற்றும் இறுதி நேரம் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே அந்த நேரங்களில் தொழுகைகளை முடித்துவிட வேண்டும்.

''இஷாத் தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1074

சூரியன் 6 மணிக்கு மறைகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது இரவு ஆரம்பமாகி விடுகிறது. சுப்ஹ் 5 மணிக்கு வருகிறது என்றால் காலை நேரம் வந்து விட்டது என்று பொருள். இதில் இரவின் பாதி என்பது இரவு 11.30 மணியாகும்.

எனவே இஷா தொழுகையை சுப்ஹ் வரை தாமதிப்பதற்கு அனுமதியில்லை. இந்தப் பொது விதியிலிருந்து தூக்கம், மறதி ஆகிய இரண்டுக்கு மட்டும் சலுகை உள்ளது.

ஒருவர் மறந்து தொழாமல் இருந்து விட்டால் அவர் நினைவு வந்ததும் தொழுது விடவேண்டும். உறங்கி விட்டால் விழித்ததும் தொழ வேண்டும். இது தான் அதற்குரிய பரிகாரம்.

''யாரேனும் ஒரு தொழுகையை மறந்து விட்டால் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர வேறு பரிகாரம் எதுவுமில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 597, முஸ்லிம் 1218

''யார் தொழுகையை மறந்து விடுவாரோ அல்லது தொழாமல் தூங்கி விடுவாரோ அவர் நினைவு வந்ததும் அதைத் தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1217

மறதி, தூக்கம் இந்த இரண்டைத் தவிர வேறு காரணங்களுக்காகத் தொழுகையை விடுவதற்கு அனுமதியில்லை.

நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1340

இந்த ஹதீஸின் அடிப்படையில் தஹஜ்ஜத் தொழுகையை இஷாவிலிருந்து சுப்ஹ் வரை எப்போது வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். எனினும் இரவின் பிந்திய பகுதிகளில் தொழுவது சிறந்ததாகும்.

சுப்ஹுக்கு முன்னர் வித்ரு தொழுகையை முடித்து விட வேண்டும். தவறி விட்டால் சுப்ஹுக்குப் பின்னர் நிறைவேற்றலாம்.

முஹம்மது பின் முன்தஷிர் என்பவர் அம்ர் பின் ஷர்ஹபீல் என்ற பள்ளியில் இருந்தார். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது முஹம்மது பின் முன்தஷிர் வந்து, ''நான் வித்ரு தொழுதேன்'' என்று சொன்னார். (இது குறித்து) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், ''பாங்குக்குப் பின் வித்ரு தொழுவது கூடுமா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ''ஆம்! இகாமத்துக்குப் பின்னரும் தொழலாம். நபியவர்கள் (வித்ரு தொழாமல்) உறங்கி விட்டால் சூரியன் உதயமான பின்னரும் தொழுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்ராஹீம்
நூல்: நஸயீ 1667

--> Q/A Ehathuvam Sep 2007

No comments:

Post a Comment