Friday, November 17, 2017

காயிப்_ஜனாஸா_எப்போது_கூடும்

#தொழுகை

#காயிப்_ஜனாஸா_எப்போது_கூடும்?

#பதில்

ஜனாஸா தொழுகை என்பது இறந்தவரின் உடலை முன்னால் வைத்துக் கொண்டு செய்யப்படும் பிரார்த்தனையாகும்.

ஆயினும் முக்கியப் பிரமுகர்கள் இறந்து விட்டால் பல ஊர்களில் ஜனாஸா முன் வைக்கப்படாமல் தொழுகை நடத்தப்படுகிறது. இது காயிப் ஜனாஸா என்று குறிப்பிடப்படுகிறது.

இதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.

‘இன்றை தினம் அபீஸீனியாவில் நல்ல மனிதர் ஒருவர் இறந்து விட்டார். வாருங்கள்! அவருக்குத் தொழுகை நடத்துவோம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்தோம். அவர்களுடன் நாங்கள் அணிவகுத்து நிற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 1320, 3877

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஆகும். ஆனால் இது பிரமுகர்களுக்கு பல ஊர்களில் ஜனாஸா தொழுகை நடத்தலாம் என்பதற்கு ஆதாரமாக ஆகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நஜ்ஜாஷி மன்னரைத் தவிர இன்னும் எண்ணற்ற நல்லவர்கள் பல்வேறு ஊர்களில் மரணமடைந்திருந்தார்கள். அவர்களில் எந்த ஒருவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் தொழுகை நடத்தவில்லை.

அபீஸீனிய மன்னரான நஜ்ஜாஷி அவர்கள் இரகசியமாக இஸ்லாத்தை ஏற்றிருந்தார். எனவே அவர் இறந்த பின் அவரது நாட்டில் அவருக்குத் தொழுகை நடத்தப்படவில்லை. ஒருவரும் தொழுகை நடத்தாமல் அடக்கம் செய்து விட்ட காரணத்தால் அவருக்கு மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.

இது பற்றி மற்றொரு அறிவிப்பில் ‘நஜ்ஜாஷி மன்னர் முஸ்லிம்கள் வசிக்காத பகுதியில் இறந்து விட்டார். எனவே உங்கள் சகோதரருக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல்கள் : அஹ்மத் 14434, 14754, 15559, 15560, 15561, இப்னு மாஜா 1526

நஜ்ஜாஷி மன்னருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் தொழுகை நடத்தினார்கள் என்பது இந்த அறிவிப்பிலிருந்து தெளிவாகிறது.

ஒருவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தாமல் அடக்கம் செய்தது நமக்குத் தெரிய வந்தால் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்தலாம் என்று தான் இதைப் புரிந்து கொள்ள முடியும். ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு அவர்களின் முக்கியத்துவத்தைக் கருதி உலகின் பல பகுதிகளிலும் ஜனாஸா தொழுகை நடத்துவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

No comments:

Post a Comment