Wednesday, September 23, 2020

பெண் குழந்தைகளை வெறுக்கக்கூடாது.

பெண்களுக்கான

நபிவழி சட்டங்கள்

பெண் குழந்தைகளை வெறுக்கக்கூடாது.

பொதுவாக பெண் குழந்தை பிறப்பதை அதிகமானவர்கள் வெறுக்கிறார்கள். சில ஊர்களில் பெண் குழந்தைகளை பிறந்த உடனே கொலை செய்துவிடுகிறார்கள். இறைவன் கொடுத்தது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வது தான் இறைநம்பிக்கையாளரின் பண்பு. இறைநிராகரிப்பாளர்கள் தான் பெண் குழந்தைகளை இழிவாகக் கருதிவந்தார்கள்.

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகிவிடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.

அல்குர்ஆன் (16 : 58)

பெண் குழந்தைகளை கொலை செய்தவர்களுக்கு எதிரான சாட்சியாக மறுமை நாளில் அக்குழந்தைகள் இறைவனிடம் முறையிடும்.

என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது,

அல்குர்ஆன் (81 : 8)

பெண் குழந்தைகளை பெற்றவர்கள் பின்வரும் ஹதீஸ்களை மனதில் நிறுத்திக்கொண்டால் பெண் குழந்தையை பெற்றதற்காக ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும்வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்”என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : முஸ்லிம் (5127)

ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், “”இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்’‘ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (1418)

“யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்’‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (5995)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கு பருவமடையாத மூன்று குழந்தைகள் மரணித்துவிட்டால் அவர் அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.’
அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி 1381

ஏகத்துவம்.

No comments:

Post a Comment