Wednesday, September 23, 2020

பெண்கள் வெளியூர் பயணம் செய்தல்!

பெண்களுக்கான

நபிவழி சட்டம்கள்

பெண்கள் வெளியூர் பயணம் செய்தல்!

கணவனுடனோ, அல்லது மஹ்ரமான உறவினர் துணையுடனோ இல்லாமல் பெண்கள் பயணம் செய்யலாமா?

செய்யலாம் என்றால் அதற்கான எல்லை எது?

இதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.

காரணம் இது குறித்த அறிவிப்புக்கள் முரண்பட்டவைகளாக உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாக) மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 1086, 1087

யாருடைய துணையும் இல்லாமல் பெண்கள் மூன்று நாட்கள் தனியாகப் பயணம் செய்யலாம் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.

அபூசயீத் (ரலி) கூறியதாவது:

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான்கு விஷயங்களைச் செவியுற்றேன். அவை எனக்கு மிகவும் விருப்பமானவை. (அவை:) கணவனோ, மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினரோ இல்லாமல் இரண்டு நாட்கள் தொலைவுக்கு ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது! நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது! அஸ்ருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரையிலும், சுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரையிலும் எந்தத் தொழுகையும் தொழக் கூடாது! மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளிவாசல் (மஸ்ஜிதந் நபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு பள்ளிவாசல்களுக்கு (அதிக நன்மையை நாடி)ப் பயணம் செய்யக் கூடாது!

நூல் : புகாரி 1864

இரண்டு நாட்களுக்குக் குறைவாக பயணம் செய்வதாக இருந்தால் ஒரு பெண் தனியாக யாருடைய துணையும் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஒரு நாள் மட்டும் தான் ஒரு பெண் தனியாகப் பயணம் செய்யலாம்; அதற்கு மேல் பயணம் செய்யக் கூடாது என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

மேற்கண்ட மூன்று ஹதீஸ்களும் ஒன்றுக்கொன்று நேர் முரணான கருத்தைக் கூறுகின்றன.

இம்மூன்றில் ஒவ்வொன்றும் மற்ற இரண்டு ஹதீஸ்களை மறுக்கும் வகையில் உள்ளன.

இது போல் முரண்பாடாக செய்திகள் கிடைக்கும் போது அவற்றை எவ்வாறு அணுகுவது?

இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹதீஸ்களுக்கு மத்தியில் முரண்பாடு காணப்பட்டால் எல்லா ஹதீஸ்களும் சமமான தரத்தில் உள்ளவையா என்று பார்க்க வேண்டும்.

அவற்றில் ஒரு ஹதீஸ் மிக உயர்ந்த தரத்திலும் மற்றவை குறைந்த தரத்திலும் இருந்தால் தரம் குறைந்ததை விட்டுவிட்டு தரம் உயர்ந்ததை எடுத்துக் கொள்ள வேண்டும். இது முதலாவது அணுகுமுறை.

இந்த ஹதீஸைப் பொருத்தவரை மூன்று ஹதீஸ்களும் நம்பகத் தன்மையில் சமமாக உள்ளதால் எந்த ஒன்றுக்கும் முன்னுரிமை அளிக்க முடியாது.

இப்படிச் செய்ய வழி இல்லாவிட்டால் ஒரு ஹதீஸ் ஆரம்ப காலத்திலும், இன்னொரு ஹதீஸ் பிற்காலத்திலும் சொல்லப்பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்,. இதற்கு ஆதாரம் கிடைத்தால் முன்னர் சொன்னதை விட்டு விட்டு பின்னர் சொன்னதை எடுத்துக் கொள்ள வேண்டும். முன்னர் சொன்னதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்னர் மாற்றி விட்டனர் என்று முடிவு செய்தால் முரண்பாடு இல்லாமல் முடிவு காண முடியும்.

ஆனால் மேற்கண்ட மூன்று ஹதீஸ்களில் எது முதலில் சொல்லப்பட்டது? எது பின்னர் சொல்லப்பட்டது என்பதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்பதால் அந்த முடிவுக்கும் வர முடியாது.

இந்த இரண்டு வழிகளும் இல்லாவிட்டால் மூன்று ஹதீஸ்களையும் இணைத்து மூன்றுக்கும் இணக்கமான ஒரு கருத்துக்கு வர வேண்டும். இந்த ஹதீஸ்களீல் அப்படி இணைத்து பொதுக் கருத்துக்கு வருவதற்கு இடமில்லாமல் உள்ளது.

இதில் உள்ள முரண்பாடு நீங்குவதற்கு வழி இல்லாவிட்டால் வஹியில் முரண்பாடு இருக்காது என்ற அடிப்படையில் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று கருதி மூன்றையும் விட்டு விட வேண்டும்.

இப்போது பெண்கள் ஒரு நாள் பயணம் செய்யலாம் என்பதற்கும், இரண்டு நாட்கள் பயணம் செய்யலாம் என்பதற்கும், மூன்று நாட்கள் பயணம் செய்யலாம் என்பத்ற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்ற முடிவுக்கு வந்து வேறு ஆதாரங்களைத் தேடவேண்டும்.

ஆதாரப்பூரவமான மற்றொரு ஹதீஸ் இந்தப் பிரச்சனையில் தெளிவான முடிவு எடுக்க உதவும் வகையில் அமைந்துள்ளது.

அந்த ஹதீஸ் இது தான்:

எந்த ஒரு பெண்ணும் மஹ்ரம் துணை இல்லாமல் ஒரு பரீத் அதாவது 12 மைல் தூரத்துக்குப் பயணம் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா

நூல்: ஹாகிம் 2526

இதன் அடிப்படையில் பெண்கள் 12 மைல் தொலைவு உள்ள தூரத்துக்கு தனியாகப் பயணம் செய்ய அனுமதி உள்ளது. அதற்கு மேல் தனியாகப் பயணம் செய்ய அனுமதி இல்லை என்பதே சரியான கருத்தாகும்.

மேலும் ஒரு நாள், அல்லது இரண்டு நாட்கள், அல்லது மூன்று நாட்கள் பயணம் செய்யலாம் என்ற கருத்தும் ஏற்புடையதாக இல்லை. இந்தக் காலகட்டத்தில் எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு உள்ளது. இஸ்லாம் எதற்காக தனித்து பயணம் செய்வதைத் தடுக்கிறதோ அதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுகிறது. 12 மைல் என்பது குறைந்த தூரமாக உள்ளதால் இது ஏற்புடையதாகவும் உள்ளது.

ஏகத்துவம்.

No comments:

Post a Comment