பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, July 18, 2014

கடலில் இறந்தவர்கள் ***கப்ரு வேதனை உண்டா?

கேள்வி:கடலில் பயணம் செய்யும்போது இறந்தவர்களை அடக்கம் செய்யாமலேயே கடலில் போட்டு விடுகின்றனர்.இவர்களுக்கு கப்ரு வேதனை உண்டா?

பதில்:கடலில் பயணம் செய்து இறந்தவர்கள் மட்டுமல்ல இன்னும் சிலரது விஷயத்திலும் கூட இந்த சந்தேகம் எழுவது இயற்கையே.உடலை எரித்து சாம்பலாக்கி பல பகுதிகளிலும் தூவி விடப்பட்டவர்கள்,மிருகங்களால் அடித்து கொல்லப்பட்டு அவற்றுக்கு உணவாகிப்போனவர்கள் ஆகியோருக்கு கப்ரு வேதனை எவ்வாறு? இவர்களுக்கு கப்ரே கிடையாது எனும்போது கப்ரு வேதனை எவ்வாறு இருக்கும் என கேட்கலாம்.
கப்ருடைய வேதனையைக் குறிப்பிடும்போது அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக்கூறுவது பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டே சொல்லப்படுகிறது.மண்ணுக்கு உள்ளேதான் அந்த வேதனை நடக்கிறது என்று கருதிக்கொள்ளக்கூடாது.இவ்வாறு நாம் கூறுவதற்கு நியாயமான காரரணங்கள் உள்ளன.
முஸ்லிம்களானாலும் காபிர்களானாலும் அவர்கள் அனைவரும் கப்ருடைய வாழ்வை சந்தித்தே தீருவார்கள்.காபிர்களும் கப்ரில் வேதனை செய்யப்படுவார்கள் என்பதை பல ஹதீஸ் கள் கூறுகின்றன.மண்ணுக்குள் அடக்கம் செய்யப்படுபவர்கள் மட்டுமே கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்கள் என்ற நாம் கூறினால் பெரும்பாலான காபிர்கள் அந்த வேதனையிலிருந்து விடுதலை பெறுகிறார்கள்.ஏனெனில் அவர்கள் மண்ணில் புதைக்காமல் எரித்துச் சாம்பலாக்கிவிடுகின்றனர்.காபிர்களுக்கும் கப்ருடைய வேதனை உண்டு என்ற நபிமொழிக்கு முரணாக இது அமைகின்றது.
பாவம் செய்த முஸ்லிம்களை கப்ரில் வேதனை செய்யும் இறைவன் சில காபிர்களுக்கு அத்தகைய வேதனை வழங்கமாட்டான் என்பது இறைவனின் நியதிக்கும் நியாயத்திற்கும் ஏற்புடையதாக இல்லை.
அவர்கள் திரும்ப எழுப்ப்படும்வரை திரைமறைவு(வாழ்க்கை)உண்டு.(அல்குர்ஆன்)என்ற வசனத்தின்படி கப்ருடைய வேதனை என்பது ஒரு திரைமறைவு வாழ்க்கை என்பது புரிகிறது.மண்ணுக்குள்தான் அது நடக்கவேண்டும் என்று அர்த்தமில்லை.
மேலும் ஒரு கப்ரில் ஸாலிஹான நல்லடியார்களும் மிக மோசமான வர்களும் அடுத்தடுத்து அடக்கம் செய்யப்படுகின்றனர்.அடக்கம் செய்த இடத்திற்குள்ளேயே வேதனை நடக்கிறது என்றால் அந்த இடத்தில்தான் நல்லவர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆத்மாக்கள் மரணிக்கம்போதும் மரணிக்காத ஆத்மாக்களை உறக்கத்தின்போதும் அல்லாஹ் கைப்பற்றுகிறான்.யாருக்கு மரணத்தை விதித்துவிட்டானோ அதைத்தன் கைவசம் வைத்துக்கொள்கிறான்(அல்குர்ஆன்)
இந்த வசனத்திலிருந்து இறைவன் தன் கைவசம் அனைத்து உயிர்களையம் வைத்துள்ளான் என்பது தெளிவு.நமது புலனுணர்வுக்கு தென்படாத மற்றொரு உலகத்தில் அந்த ஆத்மாக்களுக்கு அவன் வேதனையோ சுகமோ வழங்குவான் என்று எடுத்துக்கொண்டால் எவருமே கப்ருடைய வாழ்விலிலருந்து தப்பிக்க இயலாது.
கப்ருகளுக்கு நாம் ஸலாம் சொல்வதும்,ஸியாரத்துக்கு செல்வதும்,கப்ரில் வேதனை செய்யப்பட்ட இருவரின் அடக்கத்தலத்திற்கு நபி(ஸல்)அவர்கள் பேரீத்த மட்டையைப் பிளந்து ஊன்றியதும் அந்த இடத்திலேயே வேதனை செய்யப்படுகிறது என்ற கருத்தைத்தருவது உண்மையே.இதை அடிப்படையாக வைத்து மண்ணுக்குள்தான் வேதனை செய்யப்படுகிறது என்று நாம் முடிவுசெய்தால் காபிர்கள் அந்த வேதனையிலிருந்து தப்பிக்கும் நிலை ஏற்படுகின்றது.
யார் மண்ணுக்குள் அடக்கம் செய்யப்படுகிறார்களோ அவர்களின் கப்ருவாழ்க்ககை அடக்கத்தலத்தில் அமையும்.யார் அடக்கம் செய்யப்படாமல் வேறுவகையில் இறுதிப்பயணத்தை அடைகின்றார்களோ அவர்களுக்கு இறைவன் தன் வல்லமையினால் ஒரு உலகை உருவாக்கி அதில் அவர்களின் கப்ருடைய வாழ்க்கையை அமைப்பது அவனுக்கு சிரமமானதல்ல.
அல்லது அனைவருக்குமே மண்ணுலகம் அல்லாத மற்றொரு உலகில் கப்ருடைய வாழ்வை இறைவன் அமைக்கலாம்.அடக்கதலம்தான் அடையாளமாக இருப்பதாலும் மக்கள் புரிந்து கொள்ளவேண்டுமென்பதாலும் அடக்கத்தலத்தில் நபி(ஸல்)அவர்கள் பேரீத்த மட்டைகளை நட்டு வைத்திருக்கலாம்.எப்படி வைத்துக்கொண்டாலும் கப்ருடைய வாழ்விலிருந்து எவரும் விலக்குப்பெற முடியாது என்பதில் சந்தேகமில்லை.
அல்-ஜன்னத் (July 2014) 

நபியின் பொருட்டால் துஆ செய்யலாமா?

கேள்வி:ஸஹீஹூல் புஹாரி ஹதீஸ் தொகுப்பில் ஒருஹதீஸ் உள்ளது.அதாவது “யாஅல்லாஹ் உத்தம நபியின் பொருட்டால் வேண்டினோம் எங்களுக்கு மழையை பெய்யச்செய்தாய்.இப்போது நபியின் பெரியதந்தை அப்பாஸ்(ரலி)அவர்களின் பொருட்டால் மழை பெய்யச்செய்வாயாக! என்று கூறுவார்கள் அவ்வாறே அவர்களுக்கு மழை பெய்யும் என்று வருகிறது.ஒருவரின் பொருட்டால் இவ்வாறு துஆ செய்யலாமா?

பதில்:
நீங்கள் குறிப்பிட்ட பொருளில் ஒரு ஹதீஸ் வந்துள்ளது.நபி (ஸல்)அவர்களுடைய காலத்தில் மழைஇல்லாமல் பஞ்சம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்களிடம் மக்கள் முறையிட்டார்கள்.அப்போது நபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடி பிரார்த்தனை செய்தார்கள் மழையும் பெய்தது.நபி(ஸல்)அவர்கள் இறந்தபின்பு உமர்(ரலி)அவர்களுடைய ஆட்ச்சிகாலத்தில் மழை இல்லாத நிலை ஏற்பட்டபோது அன்று மக்களில் சிறந்நவர்களாகக்கருதப்பட்ட அப்பாஸ்(ரலி) அவர்களை அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டினார்கள்அவர்களும் பிரார்த்தனை செய்தார்கள் மழைபெய்தது.
இந்த செய்திகளில் பொருட்டால் என்று வந்திருப்பதன் பொருள் அவர்களின் பிரார்த்தனையால் என்பதாகும்.நபியின் பொருட்டால் என்பது நபியின் பிரார்த்தனையால் மழை பெய்தது என்பதாகும்.அப்பாஸ்(ரலி)அவர்களின் பொருட்டால் என்றால் அப்பாஸ்(ரலி) அவர்களின் பிரார்த்தனையால் என்பதாகும்.அவர்களுடைய அந்தஸ்த்தால்,அவர்களுடைய சிறப்பால் என்ற பொருள் கொடுப்பது கூடாது.நல்லவர்களின் சிறப்பையும் அந்தஸ்த்தையும் கொண்டு அல்லாஹ்விடத்தில் கேட்க்கலாம் என்பவர்களுக்கு இதில் மறுப்பு இருக்கிறது.அவர்களின் சிறப்பின் பொருட்டால் கேட்பதாக இருந்தால் எல்லோரையும் விட சிறப்புக்குரிய முஹம்மது நபி அவர்களுடைய சிறப்பைக்கொண்டுதான் உமர்(ரலி)அவர்கள் கேட்டிருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு செய்யாமல் அப்பாஸ்(ரலி)அவர்களை அல்லாஹ்விடம் துஆ கேட்குமாறு உமர்(ரலி)கேட்டுக்கொண்டார்கள்.அதே நிலையைத்தான் இப்போது நாமும் கடை பிடிக்கவேண்டும்.தண்ணீரில்லாமல் வறட்ச்சி ஏற்படும்போது அந்த நேரத்தில் யார் அந்தநேரத்தில் நல்லமனிதராக அல்லாஹ்வுக்கு விருப்பமானவராக இருக்கிறாரோ அவரை மழை வேண்டித் தொழுகை நடத்தச்சொல்லி அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு கூற வேண்டும்இதுதான் நபி(ஸல்)அவர்கள் காண்பித்த வழி முறையாகும்.

இரவுத் தொழுகை ஜமாஅத்

கேள்வி : ரமலான் மாத இரவுத் தொழுகையை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மூன்று நாளுக்குப் பின் தொடரவில்லை. அடுத்த (4வது) நாள் இந்த இரவுத் தொழுகை உங்களின் மீது கடமையாக்கப் பட்டு அதனை நிறைவேற்றுவதற்கு நீங்கள் இயலாதவர்களாகி விடுவீர்களோ என நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்கள். இப்படி இருக்க இன்று எல்லா மஸ்ஜிதுகளிலும் இந்த இரவுத் தொழுகை ஜமாஅத்தாக, கடமையாக்கப்பட்டத் தொழுகையாக தொழவைக்கப்படுகிறது. நபி(ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபி மூலம் இது கட்டாய மாக ஆக்கப்பட்டது? இது எப்படி ஒப்புக் கொள்ளப்பட்டது?

பதில் : 
தங்களின் கேள்விக்கான பதிலுக்கு முன்தங்கள் கேள்வியிலுள்ள மிக மோசமான மார்க்கத் துக்கு எதிரான வாசகத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
நபி(ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபி மூலம் இது கட்டாயாமாக ஆக்கப்பட்டது? என்று கேட்டுள்ளீர் கள். நபி முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதர் என்பது தான் முஸ்லிம்கள் அனைவரது நம்பிக்கையுமாகும். ஆகவே தங்கள் கேள்வியின் இப்பகுதி மிகத் தவறானதாகும். இதுபோன்ற வாசகத்தை ஒரு பேச்சுக்காக என்ற விதத்திலும் கூட பயன்படுத்தக் கூடாது!
ரமலான் இரவுத் தொழுகை கடமையானது என்று நம்பப்படுவது போல் உங்களுக்குத் தோன்றினால் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கடமையாக்கப்படாத ஒரு தொழுகை அவர்களுக்குப் பின் எவ்வாறு கடமையான தொழுகையின் நிலையை அடைந்தது? என்று தான் கேட்க வேண்டும்
நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்தது போலவே இன்று வரை முஸ்லிம்கள் ரமலான் இரவுத் தொழுகையை கடமையல்லாத ஆர்வமூட்டப்பட்ட உபரித் தொழுகை என்ற நிலையில் வைத்தே நிறைவேற்றி வருகிறார்கள்.
தாங்கள் குறிப்பிட்டுள்ள புகாரி 924வது ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் இத்தொழுகையை ஜமாஅத்தாக தொழ வைத்ததாக வருகிறது. ஆகவே பள்ளிவாசலில் இத்தொழுகையை ஜமாஅத்தாக தொழுவது நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியே!
அதன் பின், இத்தொழுகை கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தினாலேயே நபி(ஸல்) அவர்கள் மூன்று நாட்களுக்கு பிறகு ஜமாஅத்தாக தொழ வைக்கவில்லை என்று அந்த ஹதீஸிலேயே கூறப் பட்டுள்ளது. நபி(ஸல்) அவர்களுக்குப் பின் அது கடமையாக் கப்படாது எனும் போது தாராளமாக இத்தொழுகையை ஜமாஅத்தாக தொழலாம் என்பது தெளிவாகிறது