பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, July 12, 2011

ஜும்மாவை தாமதமாக தொழலாமா ?

ஜும்மாவை தாமதமாக தொழலாமா ?


வெளிநாட்டில் வாழும் என் போன்ற சகோதரர்களுக்கு குறிப்பாக பிரான்ஸ் இங்கிலாந்து நாட்டில் பணிபுரிவோருக்கு ஜும்மா கிடைப்பது அரிது. அதனால் வேலை நேரத்தில் நேரம் கிடைக்கும் போது 15 அல்லது 30 நிமிடங்கள் முன்னாலோ பின்னாலோ தொழுதால் ஜும்மா கூடுமா? குறிப்பிட்ட மூன்று நேரம் தவிர மற்ற நேரங்களில் தொழத் தடை இல்லை என்பதால் இப்படி தாமதமாகத் தொழலாம் அல்லவா?


ஜுமுஆத் தொழுகையை சூரியன் உச்சியிலிந்து சாய்ந்த உடனே சீக்கிரமாகவும் தொழலாம். சற்று நேரம் கழித்தும் தொழலாம். இரண்டிற்கும் ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

சூரியன் (உச்சியிலிருந்து) சாயும் நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல்கள் : புகாரீ (904), திர்மிதீ (462), அபூதாவூத் 916), அஹ்மத் (12057)

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஜுமுஆத் தொழுது விட்டு (வீட்டிற்கு)த் திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவிற்குச் சுவர்களுக்கு நிழல் இருக்காது.

அறிவிப்பவர் : ஸலமா (ரலி),
நூல்கள் : புகாரீ (4168), முஸ்லிம் (1424?)

ஜுமுஆ தொழுகைக்குச் சீக்கிரமாகச் சென்று விட்டு அதன் பின்பே நாங்கள் முற்பகல் தூக்கம் மேற்கொள்வோம்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல்கள் : புகாரீ (940)

ஜுமுஆவிற்குப் பிறகு தான் நாங்கள் முற்பகல் தூக்கத்தையும், காலை உணவையும் கொள்வோம்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி),
நூல்கள் : புகாரீ (939), முஸ்லிம் (1422?)

நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்கள் குளிர் கடுமையாக இருக்கும் போது தொழுகையை -அதாவது ஜுமுஆத் தொழுகையை- அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவார்கள். வெப்பம் கடுமையாக இருக்கும் போது தொழுகையை -அதாவது ஜுமுஆத் தொழுகையை- வெப்பம் தணிந்த பின் தொழுவார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி (906)

பொதுவாக ளுஹர் நேரம் சூரியன் உச்சிக்கு வந்த பிறகு தான் ஆரம்பமாகும் என்றாலும் அதற்கு பகரமாக தொழும் ஜும்மா தொழுகை நேரம் லுஹர் நேரத்தை விட விசாலமானதாகும். அதாவது சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்பே ஜும்மா தொழலாம். காலை உணவையே ஜும்மாவுக்குப் பின்னர் தான் உட்கொண்டுள்ளதாக மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்படுவதில் இருந்து காலையிலேயே ஜும்மா தொழுதுள்ளனர் என்பது தெரிகின்றது.

சூரியன் உச்சிக்கு வரும் நேரத்தில் மட்டும் தொழுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மூன்று நேரங்களில் தொழ வேண்டாம். அல்லது இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்து வந்தார்கள்.

1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை.

2. சூரியன் உச்சிக்கு வந்து சாயும் வரை.

3. சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிலிருந்து நன்கு மறையும் வரை.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் அல்ஜுஹ்னீ (ரலி)
நூல்: முஸ்லிம் 1373

அபூபக்ர் ரலியுடன் பாத்திமா ரலிக்கு சண்டை என்பது உண்மையா ?

அபூபக்ர் ரலியுடன் பாத்திமா ரலிக்கு சண்டை என்பது உண்மையா ?


அபூபக்ர் ரலி அவர்களுடன் பாத்திமா ரலி சண்டை போட்டதாகவும் தன்னுடைய ஜனாஸாவில் அபூபக்ர் ரலி கலந்து கொள்ளக் கூடாது என்று பாத்திமா ரலி கூறியதாகவும் சொல்லப்படுவது உண்மையா

ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தான் மரணிக்கும் வரை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் பேசவேயில்லை என்பதே ஆதாரப்பூர்வமான செய்தி.

ஆனால் அபூபக்ர் (ரலி) தன்னுடைய ஜனாஸாவில் கலந்து கொள்ளக் கூடாது என ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறியதாக எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தனி நிதியாக) விட்டுச் சென்ற கைபர், ஃபதக் ஆகிய பகுதிகüன் சொத்துக்களிலிருந்தும் மதீனாவில் இருந்த, அவர்கள் தருமமாக விட்டுச் சென்ற சொத்திலிருந்தும் தமக்குப் பங்கு தரும்படி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கேட்டுக் கொண்டிருந்தார். ஃபாத்திமாவுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தருமம் செய்யப்பட வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார்கள்'' என்று பதிலளித்தார்கள். இதனால் ஃபாத்திமா கோபமுற்று அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பேசுவதை விட்டு விட்டார்கள். அவர்கள் மரணிக்கும் வரை அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பேசாமலேயே இருந்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஆறு மாதங்களே ஃபாத்திமா வாழ்ந்தார்கள்.

புகாரி (3093)

மண்ணின் தந்தை என்ற பெயர் வரக்காரணம் என்ன?

மண்ணின் தந்தை என்ற பெயர் வரக்காரணம் என்ன?


அலீ (ரலி) அவர்களுக்கும் பாத்திமா (ரலி) அவர்களுக்கும் அடிக்கடி பிணக்கு ஏற்பட்டதாகவும் அதனால் அவர்கள் தலையில் மண்ணைப் போட்டுக் கொள்வார்கள் என்றும் அதன் காரணமாகவே மண்ணின் தந்தை – அபூதுராப்- என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுவது உண்மையா ??

அலீ (ரலி) அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபுத் துராப் - மண்ணின் தந்தை - எனப் பெயர் வைத்தார்கள். இவ்வாறு அவர்கள் பெயர் வைத்ததற்கான காரணத்தைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

441 حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْتَ فَاطِمَةَ فَلَمْ يَجِدْ عَلِيًّا فِي الْبَيْتِ فَقَالَ أَيْنَ ابْنُ عَمِّكِ قَالَتْ كَانَ بَيْنِي وَبَيْنَهُ شَيْءٌ فَغَاضَبَنِي فَخَرَجَ فَلَمْ يَقِلْ عِنْدِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِإِنْسَانٍ انْظُرْ أَيْنَ هُوَ فَجَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هُوَ فِي الْمَسْجِدِ رَاقِدٌ فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُضْطَجِعٌ قَدْ سَقَطَ رِدَاؤُهُ عَنْ شِقِّهِ وَأَصَابَهُ تُرَابٌ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُهُ عَنْهُ وَيَقُولُ قُمْ أَبَا تُرَابٍ قُمْ أَبَا تُرَابٍ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வி ஃபாத்திமா (ரலி அவர்கüன் இல்லத்திற்கு வந்த போது (மருமகனான) அலீ (ரலி) அவர்களை வீட்டில் காணவில்லை. ஆகவே, உன் (தந்தையின்) பெரிய தந்தையின் புதல்வர் எங்கே?'' என்று கேட்க, அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், "எனக்கும் அவருக்கும் இடையே சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டது. ஆகவே அவர் என்னைக் கோபித்துக் கொண்டு என்னிடம் ஏதும் சொல்லாமல் (வீட்டிலிருந்து) சென்று விட்டார் என்று கூறினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், "அவர் எங்கே என்று பாருங்கள்'' என்றார்கள். உடனே அந்த மனிதர் (சென்றுவிட்டு) வந்து, "அவர் பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருக்கிறார், அல்லாஹ்வின் தூதரே!'' என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிக்குள்) வந்த போது அவருடைய மேலங்கி அவரது முதுகிலிருந்து (தரையில்) விழுந்து விட்டிருக்க அவரது மேனியில் மண் படிந்திருக்கும் நிலையில் அவர் ஒருக்களித்துப் படுத்திருக்கக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் மேனியிலிருந்த மண்ணைத் துடைத்தவாறே "எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே! எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே!!'' என்று கூறலானார்கள்.

அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ரலி)
நூல் : புகாரி (441)

அலீ (ரலி) அவர்களுக்கும் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்படும். அப்போது அலீ (ரலி) தன் தலையில் மண்ணை இட்டுக் கொள்வார்கள் என்ற கருத்து தவறானது. மேற்கண்ட சம்பவம் இவ்வாறு கூறவில்லை.

உம்மி என்பதன் பொருள் என்ன ??

உம்மி என்பதன் பொருள் என்ன ???


உம்மு என்றால் தாய் என்பது பொருள். உம்மீ என்றால் தாயைச் சார்ந்திருப்பவன் என்பது பொருள். கைக் குழந்தைகள் தாயையே சார்ந்திருப்பதால் கைக்குழந்தைகள் உம்மீ எனக் குறிப்பிடப்பட்டனர். பின்னர் எழுதவும், வாசிக்கவும் தெரியாதவர்கள் இந்த விஷயத்தில் கைக்குழந்தைகளின் நிலையில் இருப்பதால் உம்மீ எனப்பட்டனர்.

நபிகள் நாயகத்துக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியாது என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாகவும் பல இடங்களில் குறிப்பிடுகிறது.

அல்குர்ஆன் 7 : 157 வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை "உம்மீ' என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِنْدَهُمْ فِي التَّوْرَاةِ وَالْإِنجِيلِ يَأْمُرُهُمْ بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنْ الْمُنكَرِ وَيُحِلُّ لَهُمْ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمْ الْخَبَائِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالْأَغْلَالَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنزِلَ مَعَهُ أُوْلَئِكَ هُمْ الْمُفْلِحُونَ(157)7

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர்.

அல்குர்ஆன் (7 : 157)

அரபுகளில் அதிகமானவர்கள் எழுதவும் வாசிக்கவும் தெரியாதவர்கள் என்பதால் அவர்களை உம்மீ என்று குர்ஆன் குறிப்பிடுகின்றது.

وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ(78)2

அவர்களில் எழுத்தறிவற்றோரும் உள்ளனர். அவர்கள் பொய்களைத் தவிர வேதத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் கற்பனையே செய்கின்றனர்.

அல்குர்ஆன் (2 : 78)

هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمْ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ(2)62

அவனே எழுதப் படிக்காத சமுதாயத்தில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான்.

அல்குர்ஆன் (62 : 2)

1913حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا الْأَسْوَدُ بْنُ قَيْسٍ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ إِنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ لَا نَكْتُبُ وَلَا نَحْسُبُ الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا يَعْنِي مَرَّةً تِسْعَةً وَعِشْرِينَ وَمَرَّةً ثَلَاثِينَ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நாம் "உம்மீ' சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; எண்ணுவதையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும். அதாவது சில வேளை இருபத்தொன்பது நாட்களாகவும், சிலை வேளை முப்பது நாட்களாகவும் இருக்கும்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (1913)

எனவே உம்மீ என்றால் எழுதவும் வாசிக்கவும் தெரியாதவர் என்பது பொருள்.

(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் (29 : 48)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப் படிக்க அறிந்திருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியும்'' என்று படித்தவர்கள் தங்கள் பங்குக்கு இட்டுக் கட்டிக் கூறி வருகின்றனர்.

படிப்பறிவைக் கொண்டே மனிதர்களின் தகுதிகள் வரையறை செய்யப்படும் காலத்தில் இவர்கள் வாழ்வதால், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படிக்காதவர்கள்'' என்று சொல்ல இவர்கள் கூச்சப்படுகிறார்கள்.

இவ்வாறு கூறினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்புக்குப் பங்கம் ஏற்பட்டு விடுமோ என்று கருதிக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், படிக்கவும் தெரியும் என்று வாதிட்டு வருகின்றனர்.

படிப்பறிவு இல்லாதிருப்பது பொதுவாக தகுதிக் குறைவாகவே கருதப்பட்டாலும் நபிகள் நாயகத்துக்கு இது தகுதிக் குறைவை ஏற்படுத்தாது. ஏனெனில், தகுதிக் குறைவாகக் கருதப்படும் சில விஷயங்கள் சில இடங்களில் தகுதியை அதிகப்படுத்தக் கூடியதாக அமைந்து விடும்.

படிப்பறிவு மனிதர்களுக்கு கூடுதல் தகுதியை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தாலும் அல்லாஹ்வின் தூதராக நியமிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் படிப்பறிவு இல்லாமல் இருப்பது தான் சிறப்பாகும்.

எனக்கு இறைவனிடமிருந்து தூதுச் செய்தி வருகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அந்தச் செய்தி மிகவும் உயர்ந்த இலக்கியத் தரத்தில் அமைந்திருந்தது. இது போல் யாராலும் இயற்ற முடியாது என்று அறை கூவல் விடும் அளவுக்கு அதன் தரம் இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படித்தவராக இருந்திருந்தால் தமது படிப்புத் திறமையினால் இதை இயற்றியுள்ளார் என்று தான் மக்கள் நினைத்திருப்பார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) திறமைசாலி என்பது நிரூபணமாகுமே தவிர அல்லாஹ்வின் தூதர் என்பது நிரூபணமாகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழிப் பண்டிதர் என்பதை விட அல்லாஹ்வின் தூதர் என்பது தான் பல்லாயிரம் மடங்கு சிறந்த தகுதியாகும்.

அவர்கள் எழுதவோ, படிக்கவோ தெரிந்திருந்தால் அவர்களை நேரடியாகக் கண்ட மக்கள் அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்க மாட்டார்கள். அவர்கள் கூறிய தூதுச் செய்தியை அல்லாஹ்வின் வேதம் என்றும் ஏற்றிருக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் என்பதை நிரூபிக்க அல்லாஹ் ஏற்படுத்திய நிலை தான் இந்தத் தகுதிக் குறைவு.

"எழுதப் படிக்கத் தெரியாதவர் இவ்வளவு உயர்ந்த தரத்தில் செய்திகளைக் கூறுகிறாரே! நிச்சயமாக இவரது திறமையால் இது உருவாக்கப்பட்டிருக்கவே முடியாது. இவர் கூறுவது போல் இது இறைவனது செய்தியாகத் தான் இருக்க முடியும்'' என்று அன்றைய மக்கள் நம்புவதற்கு நபிகள் நாயகத்தின் படிப்பறிவின்மை தான் முக்கியக் காரணமாக இருந்தது.

இதை நாம் கற்பனை செய்து கூறவில்லை. மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனத்தில் அல்லாஹ்வே இவ்வாறு தான் கூறுகிறான். "வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்'' என்ற வாசகத்தைச் சிந்திப்பவர்கள் இதைச் சந்தேகமற அறியலாம்.

சிறுவன் உடலில் குர்ஆன் வசனம் உண்மையா?

சிறுவன் உடலில் குர்ஆன் வசனம் உண்மையா ?


யகுபோவ் என்ற சிறுவனின் உடலில் குர்ஆன் வசனம் எழுதப்பட்டிருப்பது உண்மையா ?

சமீபகாலமாக இது போன்ற வதந்திகள் அதிகரித்து வருகின்றன. மீன் உடம்பில் லாயிலாஹ் இல்லல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்தது என்றும் வானத்தில் அல்லாஹ் என்ற வார்த்தையின் வடிவில் மேகக் கூட்டம் திரண்டது எனவும் இன்னும் இது போன்று பல செய்திகள் மக்களுக்கு மத்தியில் பரப்பப்படுகின்றது.

இணையதளத்தில் வெளியிடப்படும் இது போன்ற செய்திகள் நம்புவதற்கு ஏற்ற வகையில் இல்லை. ஒரு பேச்சுக்கு இவையெல்லாம் உண்மை என்று ஏற்றுக் கொண்டாலும் இவை இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கு எந்த வகையிலும் உதவாது.

ஏனென்றால் மாற்று மதத்தில் உள்ளவர்களும் தங்கள் நம்பிக்கைக்குத் தோதுவாக இது போன்ற நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றனர். பிள்ளையார் வடிவில் பப்பாளி வந்தது. ஏசுவினுடைய தோற்றத்தில் மேகக் கூட்டங்கள் திரண்டது என்றெல்லாம் பலவாறு கூறப்படுகின்றது.

எதார்த்தமாக அமைந்த நிகழ்வுகளைத் தங்கள் நம்பிக்கைக்கு சாதகமாக ஆக்கிக் கொள்கின்றனர். இவர்களைப் போன்று முஸ்லிம்களாகிய நாமும் நடந்து கொள்ளக்கூடாது.

குர்ஆன் அல்லாஹ்வுடைய வேதம் என்பதற்கு நாம் இது போன்ற பலவீனமான வாதங்களை வைப்பது கூடாது. மாறாக அறிவுப்பூர்வமான உண்மையான சான்றுகள் பலவற்றை குர்ஆனே நமக்கு கற்றுத் தருகின்றது. இந்தச் சான்றுகளே அறிவாளிகளிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

இது குறித்து முன்னரும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதையும் பார்க்கவும்

http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/kuznthai_udalil_quran_ezuththu/
http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/athatchikalai_marukalama/

தனியாக தொழுதால் பாங்கு அவசியமா ?

தனியாக தொழுதால் பாங்கு அவசியமா ?

தனியாகவோ ஜமாஅத்தாகவோ வீட்டில் கடமையான தொழுகையை தொழுதால் அதற்கு பாங்கும் இகாமத்தும் சொல்ல வேண்டுமா ??
வீட்டில் கடமையான தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதாலும் தனியாகத் தொழுதாலும் பாங்கும் இகாமத்தும் சொல்ல வேண்டும்.
நான் நபிகள நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது "நீங்கள் இருவரும் பயணத்தில் தொழுகை நேரம் வந்தால் பாங்கும், இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு இமாமாக நின்று தொழுவிக்கட்டும்'' என்று எனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி),(நூல் : புகாரி 2848)
கூட்டுத் தொழுகை நடத்த வாய்ப்பு கிடைக்காமல் தனியாகத் தொழுதாலும் பாங்கும் இகாமத்தும் கூறியே தொழ வேண்டும். பின்வரும் நபிமொழிகள் இவ்வாறு செய்வதைச் சிறப்பித்துக் கூறுகின்றன. 
1017حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ أَنَّ أَبَا عُشَّانَةَ الْمَعَافِرِيَّ حَدَّثَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَعْجَبُ رَبُّكُمْ مِنْ رَاعِي غَنَمٍ فِي رَأْسِ شَظِيَّةٍ بِجَبَلٍ يُؤَذِّنُ بِالصَّلَاةِ وَيُصَلِّي فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ انْظُرُوا إِلَى عَبْدِي هَذَا يُؤَذِّنُ وَيُقِيمُ الصَّلَاةَ يَخَافُ مِنِّي قَدْ غَفَرْتُ لِعَبْدِي وَأَدْخَلْتُهُ الْجَنَّةَ رواه أبو داود
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(மக்களே) மலைப் பாறைகளின் உச்சியில் தொழுகை அழைப்பு (பாங்கு) சொல்லி தொழும் ஆட்டு இடையன் ஒருவனைப் பார்த்து உங்கள் இரட்சகன் மகிழ்ச்சியடைகின்றான்.  பாருங்கள் என் அடியானை! பாங்கும் இகாமத்தும் கூறித் தொழுகின்றான். (காரணம்) என்னை அவன் அஞ்சுகிறான். (ஆகவே) என் அடியானை நான் மன்னித்து விட்டேன் என்று மாண்பும் வல்லமையும் மிக்க அந்த இறைவன் கூறுகின்றான்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)(நூல் : அபூதாவூத் (1017)
3667حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا سَعِيدٌ حَدَّثَنَا قَتَادَةُ وَعَبْدُ الْوَهَّابِ عَنِ ابْنِ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ بَيْنَمَا نَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْفِطْرَةِ فَقَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مِنْ النَّارِ قَالَ فَابْتَدَرْنَاهُ فَإِذَا هُوَ صَاحِبُ مَاشِيَةٍ أَدْرَكَتْهُ الصَّلَاةُ فَنَادَى بِهَا رواه أحمد
நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த போது அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று ஒருவர் சொன்னதைச் செவியுற்றோம். (இதைச் செவியுற்ற) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் இயற்கை மார்க்கத்தில் உள்ளார் என்றார்கள். அவர் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு என்று கூறிய போது இவர் நரகிலிருந்து தப்பித்து விட்டார் என்றார்கள். உடனே நாங்கள் அவரிடம் விரைந்து சென்றோம். அவர் கால்நடைகளை மேய்ப்பவராக இருந்தார். தொழுகை நேரம் வந்தவுடன் அதற்காக பாங்கு கூறியுள்ளார்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)(நூல் : அஹ்மது (3667

ஆண்கள் பெண்களிடம் கை குலுக்கலாமா?

ஆண்கள் பெண்களிடம் கை குலுக்கலாமா?
நான் பணி செய்யும் இடத்தில் அன்னியப் பெண்கள் என்னுடன் ஆண்களுடன் கை குலுக்குகின்றனர். அந்த நிலை ஏற்பட்டால் நான் கை குலுக்கலாமா??



எந்த நிலையிலும் ஆண்கள் பெண்களுடன் கை குலுக்குதல் கூடாது. அதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.


நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் சில பெண்கள் முஸாபஹா செய்ய – கை குலுக்க முயன்ற போது அதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மறுத்து விட்டனர். இது நஸயியில் பதிவாகி உள்ளது.


أخبرنا محمد بن بشار قال حدثنا عبد الرحمن قال حدثنا سفيان عن محمد بن المنكدر عن أميمة بنت رقيقة أنها قالت أتيت النبي صلى الله عليه وسلم في نسوة من الأنصار نبايعه فقلنا يا رسول الله نبايعك على أن لا نشرك بالله شيئا ولا نسرق ولا نزني ولا نأتي ببهتان نفتريه بين أيدينا وأرجلنا ولا نعصيك في معروف قال فيما استطعتن وأطقتن قالت قلنا الله ورسوله أرحم بنا هلم نبايعك يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم إني لا أصافح النساء إنما قولي لمائة امرأة كقولي لامرأة واحدة أو مثل قولي لامرأة واحدة

முஸ்லிமல்லாத பெற்றோரின் சொத்தில் முஸ்லிம்களுக்கு உரிமை உண்டா?

முஸ்லிமல்லாத பெற்றோரின் சொத்தில் முஸ்லிம்களுக்கு உரிமை உண்டா?
என்னுடைய நண்பர் ஒரு மாற்றுமத பெண்ணை திருமணம் செய்துள்ளார். அப்பெண் இஸ்லாத்தில் இணைத்து விட்டார். இப்போது அந்த பெண்ணுடய பெற்றோரின் சொத்துக்கள் வாரிசு அடிப்படையிலோ அல்லது மற்ற அடிப்படையிலோ அந்த பெண்ணுக்கு ஆகுமானதா? விளக்கவும்.



முஸ்லிமுடைய சொத்துக்கு முஸ்லிமல்லாதவரும் முஸ்லிமல்லாதவரின் சொத்துக்கு முஸ்லிமும் வாரிசாக ஆக முடியாது. தானாக விரும்பிக் கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாமே தவிர சட்டப்படி உரிமை கோர முடியாது என்றூ நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.


حدثنا سليمان بن عبد الرحمن حدثنا سعدان بن يحيى حدثنا محمد بن أبي حفصة عن الزهري عن علي بن حسين عن عمرو بن عثمان عن أسامة بن زيد أنه قال زمن الفتح يا رسول الله أين تنزل غدا قال النبي صلى الله عليه وسلم وهل ترك لنا عقيل من منزل ثم قال لا يرث المؤمن الكافر ولا يرث الكافر المؤمن قيل للزهري ومن ورث أبا طالب قال ورثه عقيل وطالب قال معمر عن الزهري أين تنزل غدا في حجته ولم يقل يونس حجته ولا زمن الفتح


உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:


மக்கா வெற்றியின் போது, அல்லாஹ்வின் தூதரே! நாம் நாளை (மக்காவில்) எங்கு தங்குவோம்? என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (அபூதாலிபின் மகன்) அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டுச் சென்றுள்ளாரா? என்று கேட் டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், இறை நம்பிக்கையாளர், இறை மறுப்பாளருக்கு வாரிசாக மாட்டார்; அவ்வாறே இறை மறுப்பாளரும் இறை நம்பிக்கையாளருக்கு வாரிசாக மாட்டார் என்று சொன்னார்கள். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், அபூ தாலிபுக்கு யார் வாரிசானார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அவருக்கு அகீலும் தாலிபும் வாரிசானார்கள் என்று பதிலளித்தார்கள்.


ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து மஅமர் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளதில் நபி (ஸல்) அவர்களின் ஹஜ்ஜின் போது நாளை நாம் எங்கு தங்குவோம்? என்று கேட்டதாக இடம் பெற்றுள்ளது. அறிவிப்பாளர் யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்கள், ஹஜ்ஜின் போது என்றோ, மக்கா வெற்றியின் போது என்றோ (எதையும்) குறிப்பிடவில்லை.


புகாரி 4282


حدثنا أبو عاصم عن ابن جريج عن ابن شهاب عن علي بن حسين عن عمرو بن عثمان عن أسامة بن زيد رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال لا يرث المسلم الكافر ولا الكافر المسلم


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் இறை மறுப்பாளருக்கு வாரிசாக மாட்டார். ஓர் இறை மறுப்பாளர் முஸ்லிமுக்கு வாரிசாக மாட்டார். இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்


புகாரி 6764

ஏழைகளுக்கு தனியாக விருந்து வைக்கலாமா?

ஏழைகளுக்கு தனியாக விருந்து வைக்கலாமா?

ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்படும் விருந்துகள் தான் மிக கெட்ட விருந்து என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் ஏழைகளுக்குத் தனியாக விருந்து வைக்கலாமா?



நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பயன்படுத்திய வாசகம் என்ன கருத்தைக் கூறுகிறது என்பதைப் புரிந்து கொண்டால் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும்.


ஏழைகள் விடப்பட்டு பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்படுவதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடுத்தது ஏழைகளுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதை மட்டும் குறிக்காது. ஏற்ற தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பதும் இதனுள் அடங்கியுள்ள கருத்தாகும்.


பணக்காரர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் உணவு அளித்து ஏழைகளுக்கு தனியாக விருந்து வைத்தால் ஏழகளை ஏழைகள் என்ற காரணத்துக்காக இழிவு படுத்துகிறோம்; அவர்களும் செல்வந்தர்களும் சமமானவர்கள் அல்ல என்று கருதுகிறோம் என்பது தான் பொருள்.


எந்த விருந்துக்கு பணக்காரர்களை அழைக்கிறீர்களோ அந்த விருந்துக்குத் தான் ஏழைகளை அழைக்க வேண்டும். அந்த விருந்துக்கு அவர்கள் தகுதி இல்லாதவர்கள் என்று நிலை நாட்டும் வகையில் தனி விருந்து அளித்தால் ஏழைகளைக் கேவலப்படுத்தி சோறு போட்டதாகத் தான் ஆகும். செருப்பால் அடித்து விட்டு சோறு போடுவது போல் தான் இது அமைந்துள்ளது.

மறுமை நாளில் நபியிடம் பரிந்துரை வேண்டுவது இணைவைப்பதாகாதா?

மறுமை நாளில் நபியிடம் பரிந்துரை வேண்டுவது இணைவைப்பதாகாதா?

கியாமத் நாளில் மக்கள் தங்களுக்கு நேர்ந்துள்ள சிரமத்தை நபிமார்களிடம் முறையிடும் போது அல்லாஹ்விடம் தானே அவர்கள் முறையிடுமாறு கூறி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் முஹம்மத நபியிடம் பரிந்துரையைக் கேட்குமாறு கூறுவது இணைவைப்பதாக ஆகாதா என்று நண்பர் ஒருவர் கேட்கிறார். இது சரியா...?


மறுமையில் மக்கள் நபிமார்களிடம் வந்து அல்லாஹ் விரைவாகத் தீர்ப்பளிப்பதற்கு அவனிடம் பரிந்துரை செய்யுமாறு கேட்பார்கள். அனைத்து நபிமார்களும் தங்களுக்கு இது இயலாது என்று கூற இறுதியாக முஹம்மது (ஸல்) அவர்களிடம் வருகை தருவார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அனுமதி கொடுத்த பின் அவர்கள் பரிந்துரை செய்வார்கள் என ஹதீஸ் கூறுகின்றது.

பரிந்துரை வேண்டி மக்கள் தங்களிடம் வந்த போது நபிமார்கள் அவர்களை அல்லாஹ்விடம் கேட்கச் சொல்லாமல் மற்ற நபியிடம் ஏன் அனுப்பினார்கள்? நபிமார்களுக்கு தவ்ஹீத் தெரியாதா? என்று உங்கள் நண்பர் கேள்வி கேட்டுள்ளார்.

தவ்ஹீதைப் பற்றிய சரியான தெளிவு இல்லாத காரணத்தாலே இந்தக் கேள்வி கேட்டுள்ளார்.

பரிந்துரை வேண்டுவது அனைத்தும் இணை கற்பிப்பாக ஆகாது. மாறாக சில பரிந்துரைகள் இணை வைப்பில் சேரும். சில பரிந்துரை வேண்டுதல் இணை வைப்பில் அடங்காது.

ஒருவரை இம்மையிலோ மறுமையிலோ நேருக்கு நேராக நாம் சந்திக்கும் போது அவர்களுக்கு எது இயலுமோ அது பற்றி பரிந்துரைக்குமாறு வேண்டுவது இணை கற்பித்தல் ஆகாது. ஏனெனில் இது போல் பரிந்துரை வேண்டும் போது அவருக்கு இறைத் தன்மை இருபதாக யாரும் கருதுவதில்லை. ஆனால் நாம் கண்ணால் பார்க்காத நம் முன்னே இல்லாத அல்லது செத்துப் போய்விட்ட ஒருவரிடம் நாம் பரிந்துரை வேண்டினால் அது தான் இணை வைப்பாகும். ஏனெனில் இறைவனை எப்படி நாம் பார்க்கா விட்டாலும் அவன் நம்மைப் பார்க்கிறானோ அப்படி அவர்களும் நம்மைப் பார்க்கிறார்கள் என்ற நம்பிக்கை இத்ற்குள் அடங்கி உள்ளது. இந்த வகையில் இது இணை வைப்பாக ஆகி விடுகின்றது.

நாம் கேட்பது போல் அதே நேரத்தில் இன்னும் பலர் அவர்களிடம் கேட்பார்கள். அதை எல்லாம் அவர்கள் செவியுறுகிறார்கள் என்ற நம்பிக்கை இதனுள் அடங்கி உள்ளது. எங்கிருந்து அழைத்தாலும் எத்தனை பேர் அழைத்தாலும் அத்தனையையும் ஒரே நேரத்தில் இறைவன் எப்படி கேட்பானோ அது போல் இவர்களும் கேட்பார்கள் என்ற நம்பிக்கை இதனுள் அடங்கியுள்ளதால் இது இணை வைப்பாக ஆகி விடுகிறது.

ஆனால் இம்மையிலோ மறுமையிலோ நாம் நேருக்கு நேர் பார்த்து கேட்கும் போது அதில் இணைவைக்கும் எந்த அம்சமும் இல்லை.

நபிகள் நாயகம் ஸல் அவர்களை இந்த உலகில் நாம் பார்ப்பதில்லை. எனவே நபியே நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டால் அவர்கள் எங்கிருந்து அழைத்தாலும் செவியுறூவார்கள் என்ற கருத்து அதற்குள் உள்ளதால் அது கூடாது. ஆனால் நபித்தோழர்கள் நேரடியாக நபியை சந்திக்கும் போது பரிந்துரை செய்யுங்கள் என வேண்டி இருந்தால் இதில் எந்த இணை வைத்தலும் ஏற்படவில்லை.

அது போல் மறூமையில் நாம் நபியை சந்திக்கும் போது அவர்களை நேரடியாகக் கண்ணால் கண்டு அவர்களின் பரிந்துரை வேண்டினால் அவர்களுக்கு எந்த இறைத் தன்மையும் இருப்பதாகக் கருத இடமில்லை.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூட மிஃராஜில் மூஸா நபியை நேருக்கு நேர் பார்த்த போது அவரிடம் உதவி பெற்றது இந்த அடிப்படையில் தான்.

இணை கற்பிக்கும் தன்மை எதில் அடங்கியுள்ளதோ அது தான் இணை கற்பிப்பாகும்

Wednesday, March 16, 2011

நபியின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?

நபியின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?




நபிகள் நாயகம் ஸல் அவர்களின் தந்தைக்கும் அவர்களின் பாட்டனாருகும் எந்த நபியும் அனுப்பப்படவில்லை. எந்த நபியின் போதனையும் அவர்களைச் சென்றடையவில்லை.

இதை திருக்குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது

ஞானமிக்க குர்ஆன் மீது ஆணையாக! . (முஹம்மதே!) நீர் தூதர்களில் ஒருவர். . (நீர்) நேரான பாதையில் இருக்கிறீர். . கவனமற்றும், முன்னோர் எச்சரிக்கப்படாமலும் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது.

திருக்குர்ஆன் 36: 2-6

ஆனாலும் அவர்கள் ஸாபியீன்களாக இருந்திருக்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 2:62

நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், ஸாபியீன்கள், மற்றும் கிறித்தவர்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி நல்லறங்களைச் செய்தோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 5:69

நம்பிக்கை கொண்டோரும், யூதர்களும், ஸாபியீன்களும், கிறித்தவர்களும், நெருப்பை வணங்குவோரும், இணை கற்பித்தோரும் ஆகிய அவர்களிடையே அல்லாஹ் கியாமத் நாளில்1 தீர்ப்பு வழங்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருப்பவன்.

திருக்குர்ஆன் 22:17

இவ்வசனங்களில் ஸாபியீன்கள் என்ற பிரிவினர் பற்றி கூறப்பட்டுள்ளது.

இவர்கள் ஸபூர் வேதப்படி நடப்பவர்கள் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மற்றும் சிலர் நெருப்பை வணங்கும் சமுதாயம் என்று கூறுகின்றனர். நெருப்பை வணங்கும் சமுதாயத்தின் நல்லறங்கள் ஏற்கப்படாது என்ற சாதாரண உண்மை கூட இவர்களுக்குத் தெரியவில்லை. மேற்கண்ட வசனங்களில் ஸாபியீன்களின் நன்மைகளுக்கு கூலி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளதற்கு மாற்றமாக இவர்களின் விளக்கம் அமைந்துள்ளது.

ஹதீஸ்களை ஆராயும் போது ஸாபியீன்கள் என்போர் இறைத் தூதர்கள் அனுப்பப்படாத காலத்தில் வாழ்ந்த போதும் தங்களின் சிந்தனையைப் பயன்படுத்தி ஒரே கடவுள் கொள்கையை விளங்கிக் கொண்டவர்கள் என்பது தெரிய வருகிறது. ஏக இறைவனை விளங்கி அவனுக்கு இணை கற்பிக்காத சமுதாயமே ஸாபியீன்கள் என்று கருத்துவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைச் சொன்ன போது அவர்களை இறைத் தூதர் என்று நம்பாத நபிகள் நாயகத்தின் எதிரிகள் நபிகள நாயகத்துக்கு வைத்த பெயர் ஸாபியீன்களில் ஒருவர் என்பதாகும்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஒரு பயணத்தில் தண்ணீர் கிடைக்காத போது தமது தோழர்களை அனுப்பி வைத்தனர். அவர்கள் தண்ணீர்க் குடத்துடன் ஒரு பெண் செல்வதைக் கண்டு நபிகள் நாயகத்திடம் அவளை அழைத்தனர். அதற்கு அந்தப் பெண் ஸாபியீ என்று சொல்லப்படும் அந்த மனிதரிடமா என்று கேட்டாள். அதற்கு நபித்தோழர்கள் ஆம் அவரிடம் தான் என்று கூறினார்கள். இது நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாகும். (பார்க்க : புஹாரி 344)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய மக்களால் ஸாபியீ என்று தான் அறியப்பட்டிருந்தார்கள் என்பதையும் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் மறுக்கவில்லை என்ப்தையும் இதில் இருந்து நாம் அறியலாம். இது தீய கொள்கை உடையவர்களைக் குறிப்பதாக இருந்தால் நபித் தோழர்கள் அந்தப் பெண்ணிடம் ஆட்சேபணை செய்திருப்பார்கள். அவ்வாறு செய்யாமல் அதை ஏற்றுக் கொல்கிறார்கள் என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.

அபூதர் ரலி அவர்கள் இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்தும் கேள்விப்பட்டு மக்கா வருகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இரகசியமாகச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் மக்காவில் இருந்த சிலை வணங்கிகளிடம் சென்று வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் நம்புகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தார். உடனே மக்காவின் சிலை வணங்கிகள் இந்த ஸாபியீ யை அடியுங்கள் எனக் கூறி தாக்கினார்கள் என்று புஹாரி 3522 வது ஹதீஸில் காணலாம். இஸ்லாத்தை ஒருவர் ஏற்றால் அவருக்கு அந்த மக்கள் வைத்த பெயர் ஸாபியீ என்பது தான் என இதில் இருந்து அறியலாம்.

அது போல் ஒரு கூட்டத்தினருடன் நடந்த போரில் அவர்கள் சரணடைந்து இஸ்லாத்தை ஏற்கவும் முன் வந்தனர். அப்போது நாங்கள் இஸ்லாத்தில் சேர்கிறோம் எனக் கூறாமல் நாங்கள் ஸாபியீ ஆகி விட்டோம் எனக் கூறினார்கள். ஆனால் இதை ஏற்காமல் தளபதி காலித் பின் வலீத் அவர்களுடன் போரைத் தொடர்ந்தார், இது பற்றி அறிந்த நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காலித் பின் வலீதைக் கண்டித்தனர். புஹாரி 4339, 7189

ஸாபியீ என்று சொல்லப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெறுக்கவில்லை என்பதில் இருந்து ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருந்த மக்கள் தான் ஸாபியீ என்று அழைக்கப்பட்டனர் என்பதை அறியாலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்படும் முன் கற்சிலைகளை வணங்க மறுத்து ஏக இறைவனை மட்டும் நம்பிய சமுதாயத்தினர் இருந்தனர். வணக்க வழிபாட்டு முறைகளைத் தான் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதை இறைத் தூதர்கள் வழியாகத் தான் அறிய இயலும். இதைத் தவிர மற்ற விஷயங்களில் ஒழுங்காக நடந்த சமுதாயமே ஸாபியீன்கள்.

இன்றைக்கும் இறைத்தூதர்களின் போதனைகள் சென்றடையாத சமுதாயம் இருக்கலாம். அவர்கள் ஸாபியீன்களாக வாழ்வதற்கு இறைவன் வழங்கிய அறிவே போதுமானதாகும்.

இப்படி வாழாமல் அறிவைப் பயன்படுத்தாமல் சிலைகளை வணங்கிய காரணத்தால் அவர்கள் குற்றவாளிகளாக ஆகிறார்கள்.

நன்மை தீமைகளை பதிவு செய்யும் எழுத்தர்கள் உள்ளனரா??

நன்மை தீமைகளை பதிவு செய்யும் எழுத்தர்கள் உள்ளனரா


இரண்டு வானவர்கள் இருப்பதாகவும் ஒருவர் தோள் புஜத்தில் அவர்கள் அமர்ந்திருப்பதாகவும் அவர்களில் ஒருவர் நன்மையைப் பதிவு செய்வதாகவும் மற்றவர் தீமையைப் பதிவு செய்வதாகவும் கூறுகின்றனர். இது உண்மையா

இரண்டு வானவர்கள் உள்ளதாகவும் அவர்கள் அனைத்தையும் பதிவு செய்வதாகவும் குர்ஆன் கூறுகிறது. ஒருவர் நன்மையை எழுதுவார் மற்றவர் தீமையை எழுதுவார் என்பதற்கு நாம் எந்த ஆதாரத்தையும் நாம் காண முடியவில்லை. குர்ஆனில் வந்துள்ள கீழ்க்கண்ட செய்திகளைத் தவிர ஹதீஸ்களில் மேலதிகமாக எதுவும் கூறப்பட்டதாக நமக்குத் தெரியவில்லை

மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.. வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத் தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.

திருக்குர்ஆன் 50:16-18

உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர். . நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள்.

திருக்குர்ஆன் 82:10-12

பெண்களுக்கு பாதி சொத்துரிமை சரியா

பெண்களுக்கு பாதி சொத்துரிமை சரியா



ஆண்களை விட பெண்களுக்கு சொத்துரிமையில் பாதி என்பது சரியா? இதை விமர்சிப்பவர்களுக்கு நாம் எப்படி பதில் அளிப்பது

இது குறித்து இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா என்ற நூலில் விளக்கியுள்ளோம். அதையே பதிலாக தருகிறோம்

பாகப்பிரிவினை

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது என்பதும் முஸ்லிமல்லாதாரின் குற்றச் சாட்டுகளில் ஒன்றாகும்.

பலமுடையவர்களாகவும், பொருளைத் திரட்டுவதற்கான வாய்ப்புகளை அதிகம் பெற்றவர்களாகவும் உள்ள ஆண்களுக்குக் குறைந்த அளவும் பலவீனர்களாகவும், பொருளீட்டும் வாய்ப்புகளைக் குறைவாகப் பெற்றவர்களாகவும் உள்ள பெண்களுக்கு அதிக அளவும் வழங்குவதே நியாயமானதாகும். அதிகச் சொத்துரிமைக்குப் பெண்களுக்கே அதிகத் தகுதி இருக்கும் நிலையில் - இருவருக்கும் சம அளவில் வழங்குவதே நியாயமாக இராது என்ற நிலையில் - ஆணுக்குக் கிடைப்பதில் பாதியளவு தான் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டுமென்பது மாபெரும் அநீதியாகும். இப்படி அவர்களின் குற்றச்சாட்டு விரிவடைகின்றது.

இஸ்லாம் மார்க்கத்துக்கு முன் உலகில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததில்லை. பெற்றோர்களின் சொத்துக்களிலிருந்தோ ஏனைய உறவினர்களின் சொத்துக்களிலிருந்தோ பெண்கள் வாரிசுரிமை பெறுவதுமில்லை.

இஸ்லாம் மார்க்கம் தான் முதலில் பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கியது. இஸ்லாம் மார்க்கம் வந்த பின்பு கூட பல நூற்றாண்டுகளாக முஸ்லிமல்லாத சமுதாயத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இருந்ததில்லை.

பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளது என்று சமீப காலத்தில் தான் நமது நாட்டில் சில பகுதிகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழக அரசு பெற்றோர்களின் சொத்துக்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம அளவிலான உரிமை உண்டு என்று கருணாநிதி ஆட்சியின் போது சட்டமியற்றியது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்குச் சொத்துரிமையை வழங்கியது.

அறிவுப்பூர்வமான, நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் ஆண்களுக்கு இரு மடங்குகளும், பெண்களுக்கு ஒரு மடங்கும் எனப் பாகப்பிரிவினைச் சட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்களுக்கே கூடுதல் சுமை.

இஸ்லாமியச் சமூக அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது கூடுதலான சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு ஆண் தனது மனைவிக்கு உணவும், உடையும், உறைவிடமும் வழங்கக் கடமைப்பட்டிருக்கிறான். ஒரு பெண் தன் கணவனுக்காக இதைச் செய்ய வேண்டியதில்லை.

ஒரு ஆண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவையும் சுமக்கக் கடமைப்பட்டுள்ளான். குழந்தையின் உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் கூடுதலாகப் பங்கெடுத்துக் கொண்ட பெண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்குக் கூடப் பொறுப்பாளியாக மாட்டாள்.

தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் தூரத்து, நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் சிரம தசையிலிருக்கும் போது அவர்களையும் பராமரிக்கும் கடமை ஆண்களுக்கு இருக்கின்றது.

பெண்களைப் பொறுத்த வரை இது போன்ற கடமைகள் எதுவும் அவர்களுக்குக் கிடையாது.

இஸ்லாமிய சமூக அமைப்பில் மட்டுமின்றி ஏனைய சமூகங்களிலும் கூட இந்த நிலையை நாம் காணலாம். இந்த அடிப்படையான விஷயத்தை மறந்து விடுபவர்கள் தாம் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தை குறை கூறக் கூடியவர்கள்.

யாருக்குத் தேவைகள் அதிக அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் கூடுதலாகவும் யாருக்குத் தேவைகள் குறைந்த அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் குறைவாகவும் வழங்குவது எந்த விதத்தில் அநீதியாகும்?

ஒரு ஆண், வாரிசுரிமை மூலம் பெண்ணை விட இரு மடங்குகள் பெற்றாலும் அவை போதாது என்ற அளவுக்கு அவன் மீது கடமைகள் உள்ளன. ஒரு பெண் ஒரு மடங்கைப் பெற்றாலும் அவளுக்கு அது தேவையில்லை என்ற அளவுக்குப் பொறுப்புகளிலிருந்து அவளுக்கு விலக்களிக்கப்படுகின்றது.

தனக்காகக் கூட இன்னொரு ஆண் செலவு செய்ய வேண்டும் என்ற அளவுக்கு அவளது சொத்துக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது.

எனவே ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்ற இஸ்லாமிய பாகப் பிரிவினைச் சட்டம் அறிவுக்குப் பொருத்தமான நியாயமான சட்டமாகும் என்பது தெளிவு!

பெண்ணின் சொத்து அன்னியருக்குச் சேரும்.

ஒவ்வொரு மனிதனும் தனது சொத்துக்கள் தன் மரணத்திற்குப் பிறகு தன் இரத்த சம்மந்தமுடையவர்களுக்குச் சேர வேண்டுமென விரும்புகிறான். தன் குடும்பத்திற்குள்ளேயே அந்தச் சொத்துக்கள் செலவிடப்பட வேண்டும் என்றும் விரும்புகிறான். இந்த விருப்பத்தில் நியாயமும் இருக்கின்றது. எல்லா மனிதரும் விரும்பக் கூடிய இந்த விருப்பம் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது நிறைவேற்றப் படுவதற்கு வாரிசுரிமைச் சட்டத்தில் இந்தப் பாரபட்சம் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.

உதாரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும், மனைவியும் சில சகோதர சகோதரிகளும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தச் சகோதர சகோதரிகள் மிகவும் ஏழ்மையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

அவனது மரணத்திற்குப் பின்னர் அவனது மகளுக்குச் சேரும் ஒரு பங்கு அவனது இரத்த பந்தங்களுக்குச் செலவிடப்படாது. அது இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேரும். அந்த மகள் தனக்கே அதை வைத்துக் கொள்ள முடியும் என்றாலும் கணவனுக்காக அனைத்தையும் வழங்கி விடுதல்' என்ற பலவீனம் இல்லாத பெண்கள் அரிது.

கணவனின் நலனுக்காகக் காதுகளில் கழுத்துகளில் கிடப்பதைக் கூட கழற்றிக் கொடுப்பவர்களைக் காண்கின்றோம். இந்த பலவீனத்தினால் அவளுக்குக் கிடைக்கின்ற வாரிசுச் சொத்துக்கள் தாமாக இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேர்ந்து விடுகின்றன.

அந்த மகனுக்குக் கிடைத்த இரு மடங்குச் சொத்துக்கள் தந்தையின் இரத்த சம்மந்தமான உறவுகளுக்காகவும், அவனையும் அவளையும் பெற்ற தாய்க்காகவும் செலவிட ஏற்ற வகையில் இறந்தவனின் குடும்பத்தையே சுற்றி வருகின்றன. இறந்தவனின் இயல்பான விருப்பம் ஓரளவு நிறைவு செய்யப்பட்டு விடுகின்றது. இந்தக் காரணத்தைச் சிந்திக்கும் போது ஆண்களுக்குச் சிறிது அதிகமாக வழங்குவதில் எந்த அநியாயமும் இல்லை என்பதை உணரலாம்.

பெண் கைவிடப்பட்டால் பிறந்த வீடு தான் அவளைப் பாமரிக்க வேண்டும்.

பெண்கள் பலவீனர்களாக இருப்பதனால் அவர்களுக்குக் கூடுதலாக வழங்க வேண்டும் என்று முஸ்லிமல்லாதார் கூறுகின்றனர். பெண்கள் பலவீனர்களாக இருப்பதும் அவர்களின் பங்கைக் குறைத்ததற்கான காரணங்களில் ஒன்றாகும் என்று நாம் கூறுகிறோம்.

அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கணவனாலும், கணவனது குடும்பத்தினராலும் அவர்களுக்குக் கிடைக்கின்ற சொத்துக்கள் எடுத்துக் கொள்ளப்படலாம். எடுத்துக் கொள்ளப்படுவது கூட பிரச்சனையில்லை. எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு அவள் தள்ளப் பட்டும் விடலாம். இந்த நிலையில் அவளது வருங்காலப் பாதுகாப்புக்கு யார் உத்திரவாதம் தருவது? அவள் பிறந்தகம் தான் வந்தாக வேண்டும். அவளது உடன் பிறந்தவன் தான் அவளையும் பராமரிக்க வேண்டும்.

அவளை விடச் சிறிது கூடுதலாக அவன் பெற்றிருந்தால் தான் உடன் பிறந்தவள் மீது பச்சாதாபம் ஏற்பட முடியும். அவளைத் தொடர்ந்து பராமரிக்க முடியும்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பங்குகள் என்று பிரிக்கப் பட்டால் 'பாதிச் சொத்தைப் பெற்றுச் சென்றாளே? எனக்குக் கிடைத்தது போன்று தானே இவளுக்கும் கிடைத்தது? இவளை ஏன் நான் கவணிக்க வேண்டும்' என்ற எண்ணம் சகோதரர்களுக்கு ஏற்பட்டு அவள் புறக்கணிக்கப்படுவாள்.

ஆண் இரண்டு பங்கைப் பெற்றிருந்தால் நம் சகோதரிக்குக் கிடைத்தது போல் இரு மடங்கை நாம் பெற்றுள்ளோம். எனவே சகோதரியையும் இந்த இக்கட்டான நேரத்தில் நாம் தான் கவணிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இது பெண்களின் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பாக அமையும்.

சொத்தைப் பெருக்குவதில் ஆண்களின் பங்கு அதிகம்.

பெரும்பாலும் சொத்துக்களைப் பெருக்குவதில் ஆண்களே உறுதுணையாக உள்ளனர். ஒரு தந்தைக்கு ஒரு மகனும் மகளும் இருந்தால் அந்தத் தந்தைக்குச் சொந்தமான நிறுவனங்களில் தந்தைக்கு உறுதுணையாக ஆண்களே இருக்கின்றனர். சொத்து பெருகுவதில் ஆண்களுக்கே அதிக உழைப்பு உண்டு என்பதும் பாரபட்சம் காட்டப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாகும்.

பெரும்பாலும் பெண்கள் தந்தையின் சொத்து வளர்ச்சியில் ஈடுபாடு காட்டுவதில்லை. யார் சொத்து வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறார்களோ அவர்களுக்குக் கூடுதலாக பாகங்கள் வழங்குவதை அநியாயம் என்று எப்படிக் கூற முடியும்?

தந்தையிடமிருந்து அதிகம் பெறுவது பெண்களே.

உணவு, உடை போன்ற செலவினங்கள் ஆண்கள் பெண்கள் இரு பாலருக்கும் சம அளவில் செய்யப்பட்டாலும் இதர வகையில் பெண்களுக்கென்று ஆண்களை விடக் கூடுதலாக செலவு செய்யப்படுகின்றது.

ஒரு தந்தைக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தால் அந்த மகளுக்காக அந்தத் தந்தை ஆபரணங்கள், நகைகள் என்று செய்து போட்டு அழகு பார்க்கிறார். இவை வெறும் அழகு சாதனங்கள் மட்டுமல்ல. பெரும் சொத்துக்களாகவும் உள்ளன. வசதி படைத்தவர்கள் தங்கள் பெண்களுக்காக இலட்சக் கணக்கிலும் வசதியே இல்லாதவர்கள் பல ஆயிரங்களுக்கும் நகைகள் செய்து போடுகின்றனர். இது அந்தப் பெண்களின் சொத்தாகவே ஆகி விடுகின்றது. இது தவிர திருமணத்தின் போது மகளுக்காகச் சீர் என்று பல சாதனங்களையும் தந்தை வழங்குகின்றார்.

தந்தையின் சொத்தில் ஆண்கள் அனுபவிப்பதை விடக் கூடுதலாக பெண்கள் அனுபவிக்கிறார்கள். தந்தையின் மரணத்திற்குப் பிறகு எஞ்சியுள்ள சொத்துக்களில் தான் இரண்டுக்கு ஒன்று' என்ற விகிதாச்சாரம் பேணப்படுகின்றதேயன்றி தந்தை உயிருடனிருக்கும் போது பெண்களே அதிக அளவில் பெற்றுக் கொள்கிறார்கள்.

இது போன்ற நியாயமான காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளதை நாம் உணரலாம்.

2.8.2001 தினமணி நாளேட்டில் (சென்னை பதிப்பு) 'சொத்தில் சமபங்கு! கடமையில்?' என்ற கட்டுரை வெளியானது. சுதந்திர தயாகான் அவர்கள் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள முக்கியமான அம்சத்தை சிந்தித்தால் இஸ்லாமியச் சொத்துரிமைச் சட்டம் எவ்வளவு அறிவுப்பூர்வமானது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

கட்டுரையின் முக்கியப் பகுதி இதோ...

...'எனவே, சொத்தில் சம உரிமை என்பது அதிசயிக்கத்தக்க ஒரு விஷயம் அல்ல. எனினும் சொத்தில் சம உரிமை கொடுக்கப்படும் போது, கடமையிலும் பெண் குழந்தைகள் பங்கு கொள்கிறார்களா என்பது ஆராய வேண்டிய ஒன்று. ஆண் பிள்ளைகளைப் போல், பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்து, நல்ல வரண் பார்த்து, ஒரு லட்சத்திற்கு நகை, ஒரு லட்சம் திருமணச் செலவு எனப் பெற்றோர் மணம் முடித்து வைக்கிறார்கள். பேறு காலம் பார்த்து, விருந்துக்கு அழைத்து, விடுமுறைக்கு அழைத்து மகிழ்விக்கின்றனர். பின், ஆண் பிள்ளைகளுக்கு கொடுப்பது போல், பணம், வீடுவாசல் என சொத்திலும் சம பங்கு அளிக்கின்றனர்.அவ்வாறு செய்யும் பெற்றோர், வயதான காலங்களில், முடியாத காலங்களில், பெண் பிள்ளைகளுடன் சென்று தங்கி, அவர்கள் கண்காணிப்பில் இருக்க முடியுமா? என்பது கேள்விக்குறியே.

கிடைத்த வரை பெற்றுக் கொண்டு, கொடுத்தவர்களுக்கு முடியாத காலங்களில் அவர்களைக் கவனிக்க வேண்டிய கடமை மகனுக்கு மட்டுமே என்ற நடைமுறை மாற வேண்டும்.

தன் மனைவி வீட்டில் சகலமும் அனுபவிக்கும் மருமகன், தன் மாமனார், மாமியாரை, அவர்களின் வயதான காலங்களில் தம்முடன் வைத்துப் பராமரிக்க முன் வரவேண்டும். 'உரிமை மகளுக்கு கடமை மகனுக்கு' என்ற நிலை வரும் போது மகனும் மருமகளும் சற்று சோர்வடைவதில் வியப்பில்லை.

ஆண் பிள்ளைகளைப் போல், பெண் பிள்ளைகளும் தங்கள் பெற்றோரைப் பராமரிக்க வேண்டும். சொத்தில் சம உரிமை பெறுவதால், தம் சகோதரியும் பெற்றோரைக் கவனித்தால் என்ன? என்று சகோதரர்கள் நினைப்பது இயற்கை. சகோதரிகளுக்கும், பெற்றோருக்கும் கடமை செய்ய மாத்திரமே ஆண் மகன் என்ற நிலை மாற வேண்டும். உரிமையில் சமம் எனில், கடமையிலும் சமபங்கு வகிக்கப் பெண் குழந்தைகள் நிர்பந்திக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

முதியோர் இல்லங்கள் பெருகுவது ஒருவேளை, பெண் குழந்தைகளுக்கு உரிமை (மட்டும்) சமபங்கு கொடுக்கப் படுவதால் ஏற்பட்ட கால மாற்றத்தின் விளைவோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.'

இவ்வாறு அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாம் கூறுகின்ற வாரிசுரிமைச் சட்டம் அமுல் படுத்தப்பட்டால் இந்த தீய விளைவுகளை நாம் கண்டிப்பாகத் தவிர்க்க இயலும்.

'பெண்களுக்கு ஒன்று ஆண்களுக்கு இரண்டு' என்ற வகையில் பங்கீடு செய்வது தான் அறிவுப்பூர்வமானது. பெண்களுக்கும், பெற்றோருக்கும் சிறந்தது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் பார்க்கும் போது இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் காட்டப்படும் இந்த வித்தியாசம் முற்றிலும் நியாயமானதே! அறிவுக்குப் பொருத்தமானதே!

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது சரியா?


துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது சரியா?


துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு வைக்கும் வழக்கம் அரபு நாடுகளில் பரவலாக உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்புகளை நோற்காமல் இருக்க மாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி உள்ளது.

2373أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي النَّضْرِ قَالَ حَدَّثَنِي أَبُو النَّضْرِ قَالَ حَدَّثَنَا أَبُو إِسْحَقَ الْأَشْجَعِيُّ كُوفِيٌّ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ الْمُلَائِيِّ عَنْ الْحُرِّ بْنِ الصَّيَّاحِ عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ الْخُزَاعِيِّ عَنْ حَفْصَةَ قَالَتْ أَرْبَعٌ لَمْ يَكُنْ يَدَعُهُنَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِيَامَ عَاشُورَاءَ وَالْعَشْرَ وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ رواه النسائي

ஆஷூராவுடைய நோன்பு (துல்ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் நோன்பு நோற்பது ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது ஃபஜர் தொழுகைக்கு முன்னால் உள்ள இரண்டு ரக்அத்கள் இந்த நான்கு நல்லறங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டதே இல்லை.

அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி)
நூல் : நஸாயீ (2373)

மேலும் இந்தச் செய்தி இப்னு ஹிப்பான், முஸ்னது அஹ்மது, தப்ரானீ ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து இவ்வாறு நோன்பு வைக்கின்றனர். இது பலவீனமான செய்தியாகும்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் அபூ இஸ்ஹாக் அல்அஷ்ஜயீ என்பவர் இடம் பெறுகின்றார். இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இவருடைய நம்பகத் தன்மை நிரூபிக்கப்படாத காரணத்தால் இது பலவீனமான செய்தியாகும்.

இந்தக் குறிப்பிட்ட செய்தி பலவீனம் என்றாலும் இவ்வாறு நோன்பு நோற்பதற்கு வேறு ஆதாரப்பூர்வமான செய்தி ஆதாரமாக உள்ளது.

மற்ற நாட்களில் செய்யப்படும் நல்லறங்களை விட குறிப்பாக துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்களில் செய்யப்படும் நல்லறங்கள் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(துல் ஹஜ்) பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும். என்று நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும் தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத பேராளியைத் தவிர (அதாவது அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவரைத் தவிர) என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி (969)

இந்தச் செய்தி நோன்பை மட்டும் கூறாமல் பொதுவாக நோன்பு உட்பட அனைத்து நல்லறங்களையும் குறிக்கின்றது. இந்த நாட்களில் தொழுகை திக்ரு தர்மம் செய்தல் போன்ற எந்த நல்லறங்களைச் செய்தாலும் அதற்கு தனிச்சிறப்பு உண்டு.

எனவே இந்த பொதுவான ஆதாரத்தின் அடிப்டையில் இந்த நாட்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அதைத் தவறு என்று கூற முடியாது.

இந்த நாட்களில் நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்று நான் பார்த்ததே இல்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி இதற்கு எதிரானது அல்ல.

2012حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَقُ قَالَ إِسْحَقُ أَخْبَرَنَا وَقَالَ الْآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ الْأَسْوَدِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَائِمًا فِي الْعَشْرِ قَطُّ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் மாதம்) பத்து நாட்கள் நோன்பு நோற்று ஒரு போதும் நான் கண்டதில்லை.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (2186)

இதில் கூறப்படும் பத்து நாட்கள் என்பது துல்ஹஜ் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களையே குறிக்கும். பத்தாவது நாள் பெருநாள் என்பதால் அன்று நோன்பு நோற்பது கூடாது.

இந்த ஒன்பது நாட்கள் நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்கவில்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இந்தச் செய்தியை வைத்துக்கொண்டு இவ்வாறு நோன்பு நோற்பது கூடாது என்று சொல்ல முடியாது.

ஒரு அமலுக்கு நபிகளாரின் சொல் ஆதாரமாக இருக்கின்றது. ஆனால் அந்த வணக்கத்தை நபிகளார் செய்ததாக எந்தச் செய்தியும் இல்லை. இந்நிலையில் நபிகளாரின் செயல் இல்லாவிட்டாலும் சொல் இருப்பதால் அந்த அமல் நபிவழியாக கருதப்படும்.

உதாரணமாக அரஃபா நாளில் நோன்பு நோற்பதற்கு நபிகளாரின் சொல்லில் ஆதாரம் உள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்பு நோற்றதாக எந்தச் செய்தியும் இல்லை. இப்போது இந்த நோன்புக்கு நபியின் செயல் ஆதாரமாகக் கிடைக்காவிட்டாலும் சொல் கிடைத்திருப்பதால் இது மார்க்க அங்கீகாரம் பெறுகின்றது.

துல்ஹஜ் மாதம் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பதையும் இதே அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த அமலைச் செய்யவில்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் அவர்கள் செய்யாவிட்டாலும் நாம் செய்வதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள் என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி இந்த நாட்களில் நோன்பு நோற்பது கூடாது என்ற கருத்தைத் தராது. ஏனென்றால் இந்த நாட்களில் நோன்பு உட்பட நல்லறங்களை அதிகமாகச் செய்வது கட்டாயம் அல்ல. இவற்றைச் செய்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும். செய்யாமல் விட்டுவிட்டால் குற்றமில்லை. இந்த அனுமதியின் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாமல் விட்டிருக்கலாம்.



வங்கியில் வாடிக்கையாளர் பற்றிய ப்ராஜெக்ட் செய்து கொடுக்கலாமா ??

வங்கியில் வாடிக்கையாளர் பற்றிய ப்ராஜெக்ட் செய்து கொடுக்கலாமா ??


நான் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறேன். புதிய புராஜக்ட் ஒன்றில் என்னை வேலை செய்யுமாறு அழைக்கிறார்கள். அதன் விபரம் வருமாறு

இந்த ப்ராஜெக்ட் ஒரு பிரபல வங்கி ப்ராஜெக்ட். இந்த ப்ரொஜெக்டை நான் வேலை பார்க்கும் கம்பெனி அவுட் சோர்ஸ் செய்து எடுத்து செய்து கொடுப்பார்கள். இந்த ப்ராஜெக்ட் அந்த வங்கியில் உள்ள வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் மற்றும் அவர்கள் தெரிவிக்கும் வங்கி சம்பந்தமான பிரச்சனைகளை சேகரித்து தக்க அதிகாரிகளிடம் கொண்டு சேர்க்கும். இது தான் அந்த ப்ரோஜெக்ட்ன் தகவல். இப்படிப்பட்ட ப்ரோஜெக்ட்ல் நான் வேலை செய்வது மார்கத்தில் அனுமதிவுண்டா?




வங்கித் தொடர்பான தகவல்களைச் சேகரித்துக் கொடுக்கும் பணியைச் செய்வது கூடுமா? என்பது உங்கள் கேள்வியின் சாராம்சம். வங்கி வட்டியுடன் தொடர்புடைய நிறுவனம் என்பதால் இந்தச் சந்தேகம் உங்களுக்கு எழுந்துள்ளது.

வட்டித் தொடர்புடைய வேலைகைளை நீங்கள் செய்து கொடுப்பதே தவறு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வட்டி தொடர்புடைய வேலைகளைச் செய்பவர்களை சபித்துள்ளார்கள்.

வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (3258)

வட்டிப் பணத்தை வசூலித்தல் வட்டிக் கணக்குப் பார்த்தல் போன்ற வேலைகள் வட்டி தொடர்புடைய வேலைகள் என்பதால் இவற்றைச் செய்வது கூடாது.

வங்கியின் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது வெள்ளையடிப்பது போன்றவை வட்டியுடன் தொடர்புடைய பணிகள் அல்ல. எனவே இவற்றைச் செய்வது கூடும்.

வங்கி தொடர்பான தகவல்களை சேகரிப்பது வட்டிக்குத் தொடர்பில்லாத இது போன்ற அனுமதிக்கப்பட்ட பணியாகும்.

இறை மறுப்பாளருடன் விவாதம் செய்வதில் பயன் என்ன


இறை மறுப்பாளருடன் விவாதம் செய்வதில் பயன் என்ன ??


சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு இறைவன் பல வழிமுறைகளை நமக்குக் காட்டித் தந்துள்ளான். அதில் ஒன்று தான் அழகிய முறையில் விவாதம் செய்வதாகும். இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்.

(அல்குர்ஆன் 16:125)

மேற்கண்ட வசனம் சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு விவாதக் களம் காண்பதும் ஒரு வழிமுறை என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

இங்கு அழகிய முறையில் விவாதம் செய்வீராக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழிகாட்டுகின்றான்.

அல்லாஹ் கூறும் அழகிய விவாதம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுக்கும் போது அசத்தியவாதிகளிடமிருந்து இரண்டு விதமான வெற்றி கிடைக்கும். "ஒன்று அவர்கள் வந்து தோற்று ஓடி அசடு வழிவது! இன்னொன்று வாதத்திற்கு வராமலேயே வழுவி நழுவி ஓடுவது! இந்த இரு கட்டங்களிலுமே சத்தியமே வெற்றி பெறுகின்றது.

பல நபிமார்கள் விவாத முறையில் தங்களுடைய கருத்துகளை எடுத்துரைத்து அசத்தியவாதிகளை வாயடைக்கச் செய்துள்ளனர். இதற்குச் சிறந்த உதாரணமாக நம்முடைய தந்தை நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நாம் கூறலாம். சிலைகளை வழிபடக்கூடிய மக்களிடம் அவர்களுடைய பிரச்சாரம் முழுவதுமே விவாதப் போங்கில் தான் அமைந்திருந்தது.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? "என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறிய போது, "நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்

திருக்குர்ஆன்2:258)

இவ்வேதத்தில் இப்ராஹீமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார். "என் தந்தையே! செவியுறாத, பார்க்காத, உமக்கு எந்தப் பயனும் அளிக்காததை ஏன் வணங்குகிறீர்?'' என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக

திருக்குர்ஆன்(19:41,42)

"இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?'' என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், "இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!'' என்று அவர் கூறினார். உடனே விழிப்படைந்து "நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்'' என்று தமக்குள் பேசிக் கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, "இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!'' என்றனர். "அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்காதவற்றையும் உங்களுக்குத் தீங்கும் தராதவற்றையும் வணங்குகின்றீர்களா?'' என்று கேட்டார். "அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங் குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?'' என்று கூறினார்.

திருக்குர்ஆன் (21:62-67)

மேற்கண்ட வசனங்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் நாட்டை ஆளும் அரசனிடமும், தன் தந்தையிடமும், சமுதாய மக்களிடமும் விவாதத்தின் மூலமும், விவாதப் போங்கிலும் சத்தியத்தை எடுத்துரைத்ததைப் பறைசாற்றுகின்றன.

நபி நூஹ் (அலை) அவர்கள் தம்முடைய சமுதாய மக்களிடம் அதிகமான அளவில் விவாதம் செய்துள்ளார்கள். நபி நூஹ் (அலை) அவர்களின் ஆணித்தரமான வாதங்களுக்கு அவர்களால் பதிலளிக்க இயலாத போது,

"நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்!'' என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன்(11:32)

திருக்குர்ஆனில் பல வசனங்கள் இறைமறுப்பாளர்களுடன் விவாதம் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த இறைமறுப்பாளர்கள் எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் அல்லாஹ் அறிவிப்பூர்வமாகவும் மறுப்புத் தெரிவிக்க முடியாத வகையில் ஆணித்தரமாகவும் பதிலளிக்கின்றான்.

இந்த மார்க்கத்தில் விவாதத்திற்கு வேலையில்லை என்றால் எதிரிகள் எழுப்பிய விமர்சனங்களுக்கு இவ்வாறு இறைவன் மறுப்புத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இறைவன் அவர்கள் எழுப்பிய ஒவ்வொரு கேள்விகளுக்கும் சரியான விளக்கத்தை அளிக்கின்றான். எனவே இஸ்லாம் குருட்டு நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கூறவில்லை.

இறை மறுப்பாளர்களுடன் விவாதம் செய்வது உறுதியான நம்பிக்கைக்கு எதிரான காரியமல்ல. மாறாக உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடாகும். இஸ்லாத்தை உறுதியாக நம்பக்கூடியவர்களே அதற்காக விவாதம் செய்ய முன்வருவார்கள்.

இந்த விவாதங்களால் நம்முடன் விவாதம் செய்யக்கூடிய இறை மறுப்பாளர்கள் நேர்வழி பெறாவிட்டாலும் விவாதத்தைப் பார்க்கின்ற பலர் நேர்வழி அடையும் நிலை ஏற்படுகின்றது. இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு இந்த விவாதங்களின் மூலம் கொள்கை உறுதியும் கொள்கைத் தெளிவும் முன்பை விட அதிகமாகின்றது.

எனவே தான் நாம் இறை மறுப்பாளர்களுடன் விவாதம் நடத்தினோம். இறைவன் அருளால் அந்த விவாதத்தில் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதும் குர்ஆன் இறைவேதம் என்பதும் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகும் விதத்தில் அல்லாஹ் நமக்கு வெற்றியளித்தான். புகழனைத்தும் அல்லாஹ்விற்கே.



வீட்டு மனையை எப்படி பிரித்துக் கொள்வது

வீட்டு மனையை எப்படி பிரித்துக் கொள்வது


9600 சதுர அடி கொண்ட எங்கள் குடும்ப வீட்டு மனையை 3 ஆண்கள் இரண்டு பெண்கள் எப்படி பிரித்துக் கொள்வது?


பாகப்பிரிவினை சம்மந்தமாக கேள்வி கேட்கும் போது சொத்துக்கு உரியவர் யார்? அவர் இறக்கும் போது யார் யார் உயிருடன் இருந்தனர் என்ற முழு விபரமும் சொல்ல வேண்டும். அதற்கேற்ப சட்டம் மாறுபடும்.

9600 சதுர அடிக்கு சொந்தக்காரர் இறக்கும் போது அவருக்கு தாயோ தந்தையோ கணவனோ மனைவியோ இல்லாமல் மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் மட்டும் இருந்தால் எப்படி பிரித்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கப்படுகிறது. இவர்களைத் தவிர வேறு வாரிசுகள் இருந்தால் இந்தத் தீர்ப்பு பொருந்தாது.

இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில் ஆண் குழந்தைக்கு இரண்டு பங்கும் பெண் குழந்தைக்கு ஒரு பங்கும் உண்டு என குர்ஆன் கூறுகின்றது.

"இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு'' என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

அல்குர்ஆன் (4 : 11)

நீங்கள் குறிப்பிட்டுள்ள பாகப்பிரிவினையில் மூன்று ஆண்கள் இருப்பதால் ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு பங்கு என்ற அடிப்படையில் ஆண்களுக்கு ஆறு பங்குகள் உண்டு. இரண்டு பெண்கள் இருப்பதால் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பங்கு என்ற அடிப்படையில் பெண்களுக்கு இரண்டு பங்குகள் உண்டு. ஆக மொத்தம் எட்டு பங்குகளாக சொத்து பிரிக்கப்பட வேண்டும்.

9600 சதுர அடியை எட்டு பங்குகளாக வைத்தால் ஒரு பங்கு என்பது 1200 சதுர அடியாகும். எனவே பெண்கள் ஒவ்வொருவருக்கும் 1200 சதுர அடி இடம் உண்டு. ஆண்களில் ஒவ்வொருவருக்கும் 2400 சதுர அடி இடம் உண்டு.

பழைய குர்ஆன் பிரதிகளை என்ன செய்வது?

பழைய குர்ஆன் பிரதிகளை என்ன செய்வது?


பயன்படுத்த இயலாத பழைய குர்ஆன் பிரதிகளை சிலர் எரித்துவிட வேண்டும் என்றும் சிலர் மண்ணில் புதைக்க வேண்டும் என்றும் சிலர் கிணற்றில் போட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.  ?????



ஆனால் இவ்விஷயத்தில் மார்க்கம் எந்த நிபந்தனைகளையும் இடவில்லை. குர்ஆனுடைய புனிதம் பற்றி சரியான தெளிவு இல்லாத காரணத்தால் இவ்விஷயத்தில் பலர் குழம்புகின்றனர். அல்லாஹ்வின் வார்த்தை என்பதால் தான் குர்ஆன் மகத்துவமடைகின்றது. இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து நபியவர்களுக்கு எழுத்து வடிவில் காகிதத்தில் வரவில்லை. மாறாக ஓசை வடிவில் அருளப்பட்டது.

குர்ஆனை ஓசை வடிவில் கொண்டு வருவதற்கு எழுத்து உதவியாக இருக்கின்ற காரணத்தால் நமது வசதிக்காக அதை எழுத்து வடிவில் ஆக்கிக் கொண்டோம்.

எனவே தேவைப்படாத பிரதிகளை அழிப்பதற்கு நாம் விரும்பிய எந்த வழியை வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்.

காட்டரபிகளின் கொடுமையை எப்படி எதிர்கொள்வது

காட்டரபிகளின் கொடுமையை எப்படி எதிர்கொள்வது


நான் ஒரு அரபியிடம் போன் கடையில் வேலை செய்து வந்தேன். அவன் ஹராமி என்று அடிக்கடி திட்டுவான். ஒரு நாள் என் முகத்தில் செருப்பால் அடித்தான். ஒரு போனில் சின்ன கிராச் ஏற்பட்டதற்காக ஒரு மாத சம்பளத்தை பிடித்துக் கொண்டான். திடீர் என்று கேன்ஸல் அடித்து விரட்டி விட்டான். நான் எனது நாடாகிய இலங்கை போகாமல் வேறு இடத்தில் பதுங்கி வேலை பார்த்து வருகிறேன். இப்படி சம்பாதிக்கும் வருமானம் ஹராமா? ஹலாலா?


இவரது கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன் இவரது கேள்வியில் உள்ள பல விஷயங்களை சமுதாயத்துக்கு அறிவுறுத்தும் கடமை நமக்கு இருக்கிறது கேள்வியில் அடங்கியுள்ள பல விஷயங்களை சமுதாயத்துக்கு நாம் சுட்டிக்காட்டும் அவசியம் உள்ளது.

வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் தங்கள் சுகங்களை மட்டும் தியாகம் செய்யவில்லை. மானம் மரியாதையும் இழந்து வேலை செய்யும் அவல நிலையிலும் பலர் உள்ளனர் என்பது இவரது கேள்வியில் இருந்து தெரிகிறது. இப்படியெல்லாம் கெட்ட வார்த்தைகளால் ஏச்சு வாங்கி செருப்படி வாங்கி நாய் பிழைப்பு பிழைத்து சம்பாதிக்கும் பொருளாதாரத்தை தாயகத்தில் உள்ள உறவினரும் பெண்களும் பாழாக்கி வீண் விரயம் செய்வதை நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

குடும்பத்தினர் சொகுசாக வாழ்வதற்காக ஆண்கள் எத்தகைய இழிவுகளையெல்லாம் சுமக்கிறார்கள் என்பதை உணராமல் சில பெண்கள் துரோகச் செயலில் ஈடுபடுவதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஆண்கள் படும் கஷ்டங்களை பெண்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் தான் இதை மாற்றி அமைக்க முடியும்.

அரபுகளில் அதிகமானவர்கள் இன்னமும் அதே அறியாமைக் கால காட்டுமிராண்டிகளாகவே உள்ளனர் என்பது இவரது கேள்வியில் இருந்து தெரிகிறது. பணத் திமிர் காரணமாக ஆட்டம் போடும் காட்டு அரபிகளால் இஸ்லாத்தின் மரியாதை குறைந்து வருகிறது. மனித உருவில் வாழும் மிருகங்களிடம் போய் அடிமை வேலை பார்க்க வேண்டுமா என்று நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

அடுத்ததாக இந்திய அரசாங்கம் தான் இது போல் தனது குடி மக்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு வெளிநாடுகளில் இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு கொள்ளாமல் அநியாயம் செய்கிறது என்றால் இலங்கை அரசும் இந்தியாவைப் போலவே தனது குடிமக்களைக் காக்கத் தவறி வருகிறது என்பது இவரது மடலில் இருந்து தெரிய வருகிறது.

இது போல் எந்த அரபியாவது ஒரு அமெரிக்கனிடம் நடக்க முடியுமா? அமெரிக்கனையோ அல்லது வேறு நாட்டவரையோ அரபி ஒருவன் செருப்பால் அடித்தால் அந்த அரபியை செருப்பால் திருப்பி அடித்து விட்டு அவன் அமெரிக்க தூதரகத்துக்குள் அல்லது தனது நாட்டு தூதரகத்துக்கு போய் விட்டால் அவனை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இந்தியா மற்றும் இலங்கை தூதரகங்களில் உள்ளவர்கள் சொரணையற்றவர்களாகவும் கடமை தவறியவர்களாகவும் உள்ளனர் என்பதற்கு இவரது நிலைமை ஒரு ஆதாரமாக அமைந்துள்ளது.

இனி இவரது கேள்விக்கு நாம் வருவோம்.

ஒரு மனிதன் உலகில் எங்கு வேண்டுமானாலும் பணி செய்யலாம். அப்படி பணி செய்து சம்பாதிப்பது ஹராமாக ஆகாது. ஆனால் உலக நாடுகள் வகுத்துக் கொண்ட சட்டப்படி அது குற்றமாகும்.

இந்தச் சட்டங்கள் மனிதர்களின் நன்மை கருதி உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களாக இருப்பதால் அதைப் பேணி நடப்பது தான் நமக்கு பாதுகாப்பானது. மங்களூர் விமான விபத்தில் பலர் பலியான சம்பவத்தை நாம் மறந்திருக்க மாட்டோம். அதில் பலியானவர்களில் சிலர் ஆள் மாறாட்டம் செய்து பயணித்ததால் அவர்களின் முடும்பத்தினருக்குக் கிடைக்க இருந்த பல இலட்சக்கணக்கான ரூபாய்கள் கிடைக்கவில்லை.

அது போல் பணி செய்த இடத்தில் மரணித்து விட்டால் அந்த செய்தி கூட குடும்பத்துக்கு தெரிவிக்க வழியில்லாமல் போய் விடும். இன்னும் பல நன்மைகளை நாம் இழக்க நேரிடும். எனவே முறைப்படி அனுமதி இல்லாமல் வெளிநாடுகளில் பணி செய்வது நமக்குப் பல கேடுகளை ஏற்படுத்தி விடும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

முஸ்லிமாக மாற என்ன செய்ய வேண்டும் ???



இஸ்லாத்தை ஏற்பதற்கு எந்தச் சடங்கும் இல்லை. அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு அதாவது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை எனவும் முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனவும் நான் உறுதியாக நம்புகிறேன் என்று மனதால் நம்பி வாயால் மொழிந்தால் ஒருவர் முஸ்லிமாகி விடுவார். அதன் பின்னர் தனது வாழ்க்கையை திருக்குர் ஆன் போதனைபடியும் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வழிகாட்டுதல் படியும் அமைஒத்துக் கொண்டால் அவர் முழுமையான முஸ்லிமாக ஆவார்

3861 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதர் (கிஃபாரீ) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத் தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டிய போது தம் சகோதரரிடம், இந்த (மக்கா) பள்ளத்தாக்கை நோக்கிப் பயணம் செய்து, வானத்திலிருந்து (இறைச்) செய்தி தம்மிடம் வருகின்ற ஓர் இறைத்தூதர்' என்று தம்மை வாதிடுகின்ற இந்த மனிதரைக் குறித்த விபரத்தை (திரட்டி) எனக்கு அறிவி. அவரது சொல்லைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு என்னிடம் வா! என்று சொன்னார்கள். உடனே அச்சகோதரர் புறப்பட்டுச் சென்று நபி (ஸல்) அவர்களை அடைந்து அவர்களின் சொல்லைக் கேட்டார். பிறகு அபூ தர்ரிடம் திரும்பிச் சென்று, அவர் நற்குணங்களைக் கைக்கொள்ளும்படி (மக்களுக்குக்) கட்டளையிடுவதை நான் பார்த்தேன். ஒரு வாக்கையும் (செவியுற்றேன்). அது கவிதையாக இல்லை என்று சொன்னார். அபூ தர், நான் விரும்பியதை நீ திருப்திகரமாகச் செய்யவில்லை என்று கூறிவிட்டு, பயணச் சாதம் எடுத்துக் கொண்டு, நீர் நிரம்பிய தனது தோல்பை ஒன்றைச் சுமந்து கொண்டு (அபூ தர்) புறப்பட்டார். மக்காவை வந்தடைந்து (கஅபா) பள்ளிவாசலுக்குச் சென்றார். நபி (ஸல்) அவர்களை அவர் அறியாதவராயிருந்த காரணத்தால் அவர்களைத் தேடினார். (அங்கிருந்த குறைஷிகள் தமக்கு தொல்லை தரக்கூடும் என்பதால் அவர்களிடம்) நபியவர்களைப் பற்றிக் கேட்க அவர் விரும்பவில்லை. இரவில் சிறிது நேரம் கழிந்து விட்டது. அப்போது அலீ (ரலி) அவர்கள் அவரைக் கண்டு, அவர் அந்நியர் என்று புரிந்து கொண்டார்கள். அலீயைக் கண்டவுடன் (அலீ -ரலி- அவர்கள் அபூதர்ரிடம், வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்ல) அபூதர், அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். விடியும் வரை அவர்களில் ஒருவரும் (தம்முடனிருந்த) மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை. பிறகு அபூதர் தம் தோல் பையையும் தம் பயண உணவையும் சுமந்து கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார். அன்று மாலையாகும் வரை நபி (ஸல்) அவர்கள் தம்மைப் பார்க்காத நிலையிலேயே அன்றைய பகலைக் கழித்தார். பிறகு (மாலையானதும்) தம் படுக்கைக்குத் திரும்பினார். அப்போது அலீ (ரலி) அவர்கள் அவரைக் கடந்து சென்றார்கள். தம் தங்குமிடத்தை அறிந்து கொள்ள மனிதருக்கு வேளை இன்னும் வரவில்லையா? என்று கேட்டு விட்டு அவரை(ப் படுக்கையிலிருந்து) எழுப்பித் தம்முடன் அழைத்துச் சென்றார்கள். ஒருவர் மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை. இறுதியில் மூன்றாம் நாள் வந்த போது அலீ (ரலி) அவர்கள் அதே போன்று திரும்பச் செய்தார்கள். தம்முடன் அவரைத் தங்க வைத்துக் கொண்டு பிறகு, (அபூதர்ரிடம்), நீங்கள் எதற்காக (இங்கே) வந்தீர்கள் என்று எனக்குச் சொல்லக் கூடாதா? என்று கேட்டார்கள். அவர், (நான் விரும்பி வந்ததை அடைய) எனக்குச் சரியான வழிகாட்டுவதற்கு நீங்கள் உறுதி மொழியளித்தால் நான் (எதற்காக வந்தேன் என்று சொல்லச்) செய்கிறேன் என்று பதிலளித்தார். அலீ (ரலி) அவர்களும் அவ்வாறே உறுதிமொழியளிக்க, அபூதர் (தாம் வந்த காரணத்தை) அவர்களுக்குத் தெரிவித்தார். அலீ (ரலி) அவர்கள், அவர்கள் உண்மையானவர்களே! அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தாம். காலையானதும் நீங்கள் என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள். நான் உங்களுக்குத் தீங்கு நேரும் என்று அஞ்சுகின்ற எதையாவது கண்டால் நான் தண்ணீர் ஊற்றுவதைப் போல நின்று கொள்வேன். நான் போய்க் கொண்டேயிருந்தால் நான் நுழைய வேண்டிய இடத்தில் நுழையும் வரை என்னைப் பின்தொடருங்கள் என்று சொன்னார்கள். அபூதர்ரும் அவ்வாறே செய்தார். அலீ அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தார். இறுதியில், அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நுழைந்த போது அவர்களுடன்அவரும் நுழைந்தார். நபி (ஸல்) அவர்களுடைய சொல்லைக் கேட்டு அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், நீங்கள் உங்கள் (ஃகிஃபார்) சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று என் கட்டளை உங்களிடம் வந்து சேரும் வரை (இஸ்லாத்தின் செய்தியை) அவர்களுக்குத் தெரிவியுங்கள் என்று சொன்னார்கள். அபூதர், என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் இந்தச் செய்தியை (இறை மறுப்பாளர்களான) அவர்களிடையே உரக்கக் கூவிச் சொல்வேன் என்று சொல்லிவிட்டு வெளியேறி, பள்ளிவாசலுக்கு வந்து, உரத்த குரலில், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி சொல்கிறேன் என்று சொன்னார். உடனே, அங்கிருந்த (இறைமறுப்பாளர்களின்) கூட்டத்தார் எழுந்து அவருக்கு வலி ஏற்படும் அளவிற்கு அவரை அடித்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, அவர் மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல் தடுத்து)க் கொண்டார்கள். உங்களுக்குக் கேடுண்டாகட்டும். இவர் கிஃபார் குலத்தைச் சேர்ந்தவர் என்பதும், உங்கள் வணிகர்கள் செல்லும் வழி (ஃகிஃபார் குலத்தாரின் ஆதிக்கத்திற்குட்பட்ட) ஷாம் நாட்டுப் பாதையில் தான் உள்ளது என்பதும், உங்களுக்குத் தெரியாதா? என்று சொல்லி அவர்களிடமிருந்து அபூதர்ரைக் காப்பாற்றினார்கள். அடுத்த நாள் மீண்டும் (பள்ளிவாசலுக்குச் சென்று) அபூதர் அதே போன்று செய்ய குறைஷிகளும் அடித்தபடி அவர் மீது பாய்ந்தார்கள். உடனே (முன் போலவே) அப்பாஸ் (ரலி) அவர்கள் அபூதர்ரின் மீது கவிழ்ந்து படுத்துக் கொண்டார்கள்.

நூல் புஹாரி 3861

விபத்து மூலம் ஒருவரைக் கொலை செய்தால்

விபத்து மூலம் ஒருவரைக் கொலை செய்தால் ???


நான் பத்து வருடங்களுக்கு முன் வாகனம் ஓட்டிச் செல்லும் என் வாகனத்தின் மூலம் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். அவரது நிலை என்னவானது என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை. இதை நினைத்து நான் வருத்தம் அடைகிறேன். இதற்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்குமா?

வேண்டும் என்றே செய்யும் காரியங்களுக்குத் தான் இறைவனிடம் தண்டனை உண்டு. அறியாமல் செய்யும் எந்தக் காரியத்துக்கும் அல்லாஹ்விடம் தண்டனை இல்லை என்பது இஸ்லாத்தின் முக்கியமான கோட்பாடாகும்.

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே. ''எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).

திருக்குர்ஆன் 2:286

மறதியாகவோ தவறுதலாகவோ செய்த காரியங்களுக்கு எங்களைத் தண்டித்து விடாதே என்று பிரார்த்திக்குமாறு அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருவதால் நம்மை மீறி நடந்த காரியங்களுக்கு அல்லாஹ் நம்மைத் தண்டிக்க மாட்டான்.

ஆனால் நாம் செய்யும் தவறுதலான காரியங்களால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அதற்குப் பரிகாரம் செய்யும் கடமை நமக்கு உள்ளது. அதைச் செய்யத் தவறினால் அந்தக் குற்றம் நம்மைச் சேரும்.

உதாரணமாக நம் வாகனத்தின் மூலம் விபத்து ஏற்பட்டு அதனால் ஒருவர் இறந்து விட்டால் அவரைக் கொலை செய்த குற்றம் நமக்கு வராது. ஆனால் இறந்தவரின் குடும்பத்துக்கு நட்ட ஈடு கொடுக்கும் கடமை நமக்கு உள்ளது. அந்தக் கடமையில் இருந்து தவறினால் அந்தக் குற்றம் மட்டும் நம்மைச் சேரும். கொலைக் குற்றம் சேராது.

நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரைத் தவறுதலாகவே தவிர கொலை செய்தல் தகாது. நம்பிக்கை கொண்டவரை யாரேனும் தவறுதலாகக் கொன்று விட்டால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவனது (கொல்லப்பட்டவனது) குடும்பத்தார் தர்மமாக விட்டுக் கொடுத்தால் தவிர அவர்களுக்கு இழப்பீடு ஒப்படைக்கப்பட வேண்டும். அவர் உங்களுக்கு எதிராகவுள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவராகவும், நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவர், உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கி, நம்பிக்கை கொண்ட அடிமையையும் விடுதலை செய்ய வேண்டும். (இதில் எதுவும்) கிடைக்காதோர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். (இது) அல்லாஹ்வின் மன்னிப் பாகும். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:92

தவறுதலாகக் கொலை செய்தால் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அத்துடன் கொல்லப்பட்டவரின் குடும்பத்தாருக்கு நட்ட ஈடு அளிக்க வேண்டும். இன்றைய காலத்தில் அடிமைகள் இல்லாததால் அடிமைகளை விடுதலை செய்ய முடியாது. ஆனால் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு நட்ட ஈடு வழங்கும் கடமை இருக்கிறது.

ஆனால் இதுவும் கூட இன்றைய காலத்தில் சமுதாயப் பொறுப்பாக உலகம் முழுவதும் ஆக்கப்பட்டு விட்டது. வாகனங்களை நாம் வாங்கும் போதே இது போன்ற விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புக்காகவும் இன்ஷ்யூரன்ஸ் கட்டணம் நம்மிடமிருந்து பெறப்படுகிறது. இப்படி வாகனம் வாங்கும் அனைவரிடம் இருந்தும் பெறப்படும் தொகையில் இருந்து விபத்து நடக்கும் போது பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்கப்படுகின்றது.

இதை இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகளிடம் இருந்து வாங்கிக் கொடுக்கும் பொறுப்பை அரசாங்கமும் நீதிமன்றங்களும் ஏற்றுக் கொள்கின்றன. நாம் விபத்து ஏற்படுத்தி விட்டு ஓடி விட்டாலும் அதற்கான நட்ட ஈடு பாதிக்கப்பட்டவருக்கோ பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கோ கிடைத்து விடக்கூடிய ஏற்பாடு உலக நாடுகள் அனைத்திலும் செய்யப்பட்டு விட்டது. நாம் செலுத்த வேண்டிய நட்ட ஈட்டை நம் சார்பில் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கி விடுவதால் நம் மீது எந்தக் குற்றமும் சேராது.

மேலும் விபத்து ஏற்படுத்தியவர் தப்பிச் செல்லாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தால் வெறிகொண்ட பொது மக்களால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை இருந்தால் அந்த நேரத்தில் மட்டும் அந்த இடத்தை விட்டு ஓடுவது கூட குற்றமாகாது. அப்படி இல்லாத பட்சத்தில் அந்த இடத்தில் செய்ய வேண்டிய மனிதாபிமான கடமைகளை நாம் தவிர்க்கக் கூடாது.

கிரகணம் தெரியாத ஊர்களில் கிரகணத் தொழுகை

கிரகணம் தெரியாத ஊர்களில் கிரகணத் தொழுகை


சூரிய கிரகணத்தை காணும்போது தொழுங்கள் என்று ஹதீஸ் உள்ளது. கண்டால் மட்டும் தொழ வேண்டுமா? பல இடங்களில் தமிழ்நாட்டிலேயே இருந்தாலும் கிரகணம் தெரியவில்லை. அங்கு தொழ வேண்டுமா அல்லது காண முடியாததால் தொழக் கூடாதா ?


இது குறித்து பிறை ஓர் விளக்கம் எனும் நூலில் நாம் விளக்கியதையே பதிலாகத் தருகிறோம்

கிரகணத் தொழுகை

தலைப்பிறை பற்றி முடிவு செய்வதற்கான ஆதாரங்களில் சூரிய சந்திர கிரகணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எவரது மரணத்திற்காகவோ, பிறப்புக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் சூரிய, சந்திர கிரகணங்களைக் கண்டால் அது விலகும் வரை தொழுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
நூல்: புகாரி 1042

பிறையை எப்படித் தீர்மானிப்பது என்பதைப் பற்றிய ஆய்வில் கிரகணம் குறித்த மார்க்கத்தின் நிலைப்பாட்டை விளக்குவது அவசியமாகும். முதல் பிறை, பௌர்ணமி, அமாவாசை போன்றவை பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படும் மாற்றங்களாகும்.

இதே போல் சூரிய, சந்திர கிரகணங்களும் பூமி, சந்திர சுழற்சியை அடிப்படையாகக் கொண்டே நிகழ்வதால் கிரகணத்தைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் பிறை விஷயத்திலும் பிரதிபலிக்கும்.

இதைக் கவனத்தில் கொண்டு கிரகணம் குறித்து ஆராய்வோம்.

கிரகணம் ஏற்பட்டால் அந்த நேரத்தில் தொழுவது நபிவழி என்பதை மேற்கண்ட ஹதீஸ் கூறுகின்றது. இன்று அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்படுவதை நாம் தொலைக் காட்சியில் நேரடியாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இப்போது நமது கேள்வி என்னவென்றால் அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் இந்தியாவில் கிரகணத் தொழுகை தொழ வேண்டுமா? சந்திர கிரகணம் இரவு நேரத்தில் ஏற்படக் கூடியது. அமெரிக்காவில் கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் நாம் பகலில் சூரியனைப் பார்த்துக் கொண்டு இருப்போம். பகலில் சந்திர கிரகணத் தொழுகை தொழுதால் பைத்தியக்காரத் தனம் என்று தான் அதைக் கூற வேண்டும்.

விஞ்ஞான அடிப்படையிலும் சரி தகவல் அடிப்படையிலும் சரி உலகம் முழுவதும் ஒரே பிறை என்று வாதிடக்கூடியவர்கள் அமெரிக்காவில் தோன்றும் சந்திர கிரகணத்திற்கு இந்தியாவில் தொழ வேண்டும் என்று கூற மாட்டார்கள்.

1999ல் ஏற்பட்ட சூரிய கிரகணத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தக் கிரகணம் முதன் முதலில் லண்டனில் தோன்றியது. சென்ற நூற்றாண்டின் இறுதிக் கிரகணம் என்பதால் உலகமெங்கும் இருந்து மக்கள் அந்தக் கிரகணத்தைக் காண லண்டனுக்குச் சென்றனர்.

லண்டனில் சூரிய கிரகணம் ஏற்படும் போது இந்திய நேரம் பிற்பகல் சுமார் 3 மணி. கிரகணத்தின் காரணமாக அங்கு இருட்டாகி இரவைப் போல் காட்சியளித்ததை பி.பி.சி தொலைக் காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்தோம். அதே நேரத்தில் சென்னையில் சூரியன் ஒளிவீசிக் கொண்டிருந்தது. லண்டனிலிருந்து கிரகணம் படிப்படியாக துருக்கி ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து இறுதியில் சென்னையில் 6 மணியளவில் கிரகணம் ஏற்பட்டு விலகியது.

இப்படி ஊருக்கு ஊர் கிரகணம் வெவ்வேறு நேரங்களில் தோன்றியதை நாம் கண்கூடாகக் கண்டோம்.

கிரகணம் ஏற்படுவதாக முன் கூட்டியே கணித்துச் சொல்லப்பட்டு விட்டதால் உலகம் முழுவதும் கிரகணத் தொழுகையைத் தொழ வேண்டுமா? அல்லது கிரகணம் ஏற்பட்ட அந்த இடத்தில் மட்டும் தொழ வேண்டுமா?

இந்தக் கேள்வியைச் சிந்தித்தாலே உலகம் முழுவதும் ஒரே பிறை என்ற வாதம் அடிபட்டுப் போகும். சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கிரகணங்கள் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் போது அதே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தக் கோள்விகளை நாம் எழுப்பும் போது சிலர் வீம்புக்காக கிரகணம் ஏற்பட்ட தகவலைக் கேட்டும் கிரகணத் தொழுகை தொழலாம் என்று வாதிடுகின்றார்கள். ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்ல வேண்டும் என்பது போல் மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் சூரியன் ஒளி வீசிக் கொண்டிருக்கும் போது சூரிய கிரகணத் தொழுகையைத் தொழ வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

ஒரு வாதத்திற்கு அவ்வாறு கிரகணத் தொழுகை தொழ வேண்டும் என்று ஒப்புக் கொண்டாலும் எந்த நேரத்தில் தொழ வேண்டும்?

லண்டனில் சூரிய கிரகணம் தோன்ற ஆரம்பித்து முழுமையாக விலகும் வரை அங்குள்ள மக்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.

தங்களுடைய நாட்டில் எப்போது கிரகணம் ஏற்பட்டதோ அந்த நேரத்தில் துருக்கி, ஈரான் மக்கள் தொழுது கொள்வார்கள்.

கிரகணமே ஏற்படாத பகுதியில் உள்ள மக்கள் எப்போது தொழ வேண்டும்? லண்டனுடைய கிரகண நேரத்திலா? துருக்கியுடைய கிரகண நேரத்திலா? அல்லது லண்டனிலிருந்து சென்னை வரை கிரகணம் ஏற்பட்ட சுமார் மூன்று மணி நேரமும் சேர்த்துத் தொழ வேண்டும் என்று கூறப் போகிறார்களா?

இந்தக் கேள்விகளுக்கு அவர்களது மனோ இச்சைப் படி என்ன தான் பதில் கூறினாலும் கிரகணம் ஊருக்கு ஊர் வித்தியாசப்படுவதை அவர்களால் மறுக்க முடியாது.

இதற்கு இவர்கள் அளிக்கும் மறுப்பு வேடிக்கையாக உள்ளது.

கிரகணத்தைப் பிறையோடு பொருத்திப் பார்க்கக் கூடாது. ஏனெனில் கிரகணம் ஏற்பட்டாலும் அந்த நேரத்தில் பிறை உள்ளே இருக்கிறது என்று தான் விஞ்ஞானம் கூறுகின்றது. எனவே கிரகணத்தை ஆதாரமாகக் காட்டி பிறையையும் அவ்வாறு எடுத்துக் கொள்ளக் கூடாது. என்று இவர்கள் கூறுகின்றார்கள்.

இவ்வாறு கூறுவது இவர்களின் அறியாமையையே காட்டுகிறது. கிரகணம் ஏற்படும் போது தான் தலைப்பிறை என்று நாம் கூறவில்லை. மாறாக ஒரு பகுதியில் தெரிந்த சந்திர கிரகணம் மற்ற பகுதியில் ஏன் தாமதமாக ஏற்படுகிறது என்ற காரணத்தையே சிந்திக்கச் சொல்கிறோம். இந்தக் காரணம் தலைப் பிறைக்கும் பொருந்தும் என்பது தான் நமது வாதம்.