பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, December 19, 2020

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுவது பற்றி?

*நபியின் பெயருடன் ஸலவாத் கூறுவது பற்றி* ❓

*நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரை உச்சரிக்கும் போது கட்டாயம் ஸலவாத் கூற வேண்டுமா❓*

நபியவர்களின் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் உச்சரிப்பவரும், அதைக் கேட்பவரும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும் என்ற கருத்து பரவலாக மக்களிடம் இருக்கின்றது. இந்தக் கருத்துக்கு பின்வரும் ஹதீஸ் தான் ஆதாரமாகக் கூறப்படுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

*ஒருவனிடம் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவன் என் மீது ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும். ஒருவன் ரமளான் மாதத்தை அடைந்து அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும். ஒருவன் வயது முதிர்ந்த பெற்றோர்களைப் பெற்றும் அவனை அவர்கள் சொர்க்கத்திற்குள் கொண்டு செல்லவில்லையென்றால் அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும்.*

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : *திர்மிதீ 3468*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

*ஒருவனிடம் என்னைப் பற்றி கூறப்பட்டு என் மீது அவன் ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால் அவனே கஞ்சனாவான்.*

அறிவிப்பவர் : அலீ பின் அபீ தாலிப் (ரலி)
நூல் : *திர்மிதீ 3469*

மேலுள்ள இரண்டு செய்திகளும் ஆதாரப்பூர்வமானவை. ஆனால் இந்த ஹதீஸ்களை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு முடிவெடுக்காமல் விரிவாக இதை ஆராய வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம் ஸலவாத் கூற வேண்டும் என்ற கருத்துக்கு மாற்றமாக பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றுக்கு முரண்படாத வகையில் தான் இதற்கு நாம் பொருள் கொள்ள வேண்டும்.

தமது பெயரை உச்சரிக்கும் வகையில் எத்தனையோ வாசகங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். இவற்றை நாம் கூறும் போது ஸலவாத்தையும் சேர்த்துக் கூற வேண்டும் என அவர்கள் நமக்கு கற்றுக் கொடுக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:

*இஸ்லாம்  ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது.*

1. *அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (நபி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.*

2. *தொழுகையை நிலைநிறுத்துவது.*

3. *ஸகாத் வழங்குவது.*

4. *ஹஜ் செய்வது.*

5. *ரமளானில் நோன்பு நோற்பது.*

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : *புகாரி 8*

ஒருவர் முஸ்லிமாக வேண்டுமென்றால் அவர் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று மொழிவது கட்டாயம் என்று மேற்கண்ட செய்தி கூறுகிறது. இந்தக் கலிமாவை கற்றுக் கொடுத்த நபியவர்கள் முஹம்மது என்ற பெயரை உச்சரிக்கும் போது ஸலவாத்தைச் சேர்க்காமல் கூறுவதையே கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

நபியவர்களின் பெயரை உச்சரிக்கும் எல்லா தருணங்களிலும் தம் மீது ஸலவாத்துக் கூறுவது அவசியம் என்றால் அதை இங்கே நபியவர்கள் விட்டிருக்க மாட்டார்கள்.

நாம் கலிமா மொழியும் போதும், மற்றவருக்கு கலிமாவைச் சொல்லிக் கொடுக்கும் போதும் அன்ன முஹம்மதன் என்று தான் கூறுகிறோம். அன்ன முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறுவதில்லை.

பாங்கு முடிந்த பிறகு நபியவர்களுக்காக நாம் கேட்க வேண்டிய பிரார்த்தனையில் முஹம்மது என்ற பெயரை மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இங்கே ஸலவாத்தைச் சேர்க்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யார் பாங்கைக் கேட்கும் போது *அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஅவதித் தாம்மத்தி, வஸ்ஸலாத்தில் காயிமத்தி, ஆத்தி முஹம்மதனில் வசீலத்த, வல்ஃபளீலா. வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தா* என்று  பிரார்த்திக்கிறாரோ, அவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும்.

துஆவின் பொருள்:

*(இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலை நிற்கும் தொழுகைக்கும் அதிபதியே! முஹம்மத் (நபி) அவர்களுக்கு உரித்தான உயரிடத்தையும் தனிச் சிறப்பையும் அவர்களுக்குத் தந்தருள்வாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உயர் அந்தஸ்திற்கு அவர்களை நீ அனுப்புவாயாக)*

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : *புகாரி 614*

இந்த துஆவில் ஆ(த்)தி முஹம்மதன் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். ஆ(த்)தி முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கற்றுத்தரவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

கப்ரில் ஒரு  இறைநம்பிக்கையாளர் எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம் வானவர்கள் வருவார்கள்.  *அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் அவர்கள் அவனுடைய தூதராவார்கள்* என அவர் வானவர்களிடம் சாட்சியம் கூறுவார். *எவர் நம்பிக்கை கொள்கிறாரோ அவர்களை இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகின்றான்* (14:27) என இதைத் தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)
நூல் : *புகாரி 1369*

கப்ரில் விசாரிக்கப்படும் போது நல்லடியார் அன்ன முஹம்மதன் என்று கூறுவார் எனக் கூறப்பட்டுள்ளது. அன்ன முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறுவதாகக் குறிப்பிடப்படவில்லை.

மேலும் நபியவர்களின் பெயரை உச்சரிக்கும் போதும், அதைச் செவியுறும் போதும் அவர்களின் மீது ஸலவாத்து கூற வேண்டும் என்ற நடைமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருக்கவில்லை. இவ்வாறு செய்வது மார்க்கத்தில் இருக்குமேயானால் இதை நபியவர்களின் காலத்தில் நபித்தோழர்கள் புறக்கணித்து இருக்க மாட்டார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

முஹாஜிர்களும், அன்சாரிகளும் மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோண்டி மண்ணைத் தம் முதுகுகள் மீது சுமந்து, (வேறிடத்திற்குக்) கொண்டு செல்லத் தொடங்கினார்கள். அப்போது அவர்கள், *நாங்கள் உயிர் வாழும் காலமெல்லாம் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம் என்று முஹம்மத் அவர்களிடம் உறுதிமொழி கொடுத்திருக்கின்றோம்* என்று பாடலானார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், *இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை எதுவும் இல்லை. அன்சாரிகளுக்கும், முஹாஜிர்களுக்கும் உன் பரக்கத் எனும் அருளைக் கொடு* என்று (பாடலிலேயே) பதிலளித்தார்கள்.

நூல் : *புகாரி 2835*

பாயவூ முஹம்மதன் என்று மட்டுமே நபித்தோழர்கள் நபியவர்கள் முன்னிலையில் பாடியுள்ளனர்.

பாயவூ முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று பாடவில்லை.

நபியவர்களும் அதைத் திருத்திக் கொடுக்கவில்லை. நபியவர்களின் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட நபித்தோழர் அபூபக்ர் அவர்கள் நபியவர்களின் பெயரைக் குறிப்பிடுகையில் ஸலவாத்துக் கூறவில்லை.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

(நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூபக்ர் (ரலி) அவர்கள் வெளியில் வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் (கோபமாகப்) பேசிக்கொண்டிருந்ததைக் கண்டதும் உமரை உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) மீண்டும் மறுக்கவே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார்கள். உடனே மக்கள் உமர் (ரலி) பக்கமிருந்து அபூபக்ர் (ரலி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் *உங்களில் யார் முஹம்மது அவர்களை வணங்கிக்கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்து விட்டார்கள். யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்; மரணிக்கவே மாட்டான். மேலும் அல்லாஹ் கூறுகிறான்: முஹம்மது தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் சென்று விட்டார்கள்;  அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்து விட முடியாது;  அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதி சீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்* (3:144) என்றார்கள்.

நூல் : புகாரி 1242

யாரேனும் முஹம்மதை வணங்கினால்….  என்று தான் அபூபக்ர் (ரலி) கூறினார்கள். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்தை வணங்கினால் என்று கூறவில்லை.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் நபியவர்களின் பெயரைக் குறிப்பிடும் போது ஸலவாத்துக் கூறவில்லை. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவறு என்று கூறவில்லை.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

*எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்? எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்* என்று என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  *எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?* என்று நான் கேட்டேன். அதற்கவர்கள், *என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும் போது  *முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக' என்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால், *இப்ராஹீம் அவர்களுடைய அதிபதி மீது சத்தியமாக* என்று கூறுவாய்* என்று சொன்னார்கள். நான், *அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம் (உண்மைதான்), அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களது பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்கள் மீதன்று)* என்று கூறினேன்.

நூல் : *புகாரி 5228*

முஹம்மதின் இறைவன் என்று தான் ஆயிஷா (ரலி) கூறியுள்ளனர்.

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறைவன் என்று கூறவில்லை.

நபியவர்கள் காலத்தில் அவர்களின் பெயர் கூறப்பட்டால் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லும் வழக்கம் நபித்தோழர்களிடம் இருக்கவில்லை. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கண்டிக்கவில்லை என்பதற்கு மேலுள்ள செய்திகள் அனைத்தும் ஆதாரங்களாக உள்ளன. இன்னும் ஏராளமான ஆதாரங்கள் இதற்கு உள்ளன.

நபிமொழிகளை மொழிபெயர்க்கையில் நபியவர்களின் பெயர் வரும் போது (ஸல்) என்று மொழிபெயர்ப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த வாசகம் அசலில் உள்ளதல்ல. நபி என்றும், அல்லாஹ்வின் தூதர் என்றும், முஹம்மது என்றும் மட்டுமே ஹதீஸ்களின் மூலத்தில் கூறப்பட்டுள்ள இடங்களில்  மொழிபெயர்ப்பாளர்கள் தாமாக (ஸல்) என்று சேர்த்து இது கட்டாயக் கடமை போல் ஆக்கிவிட்டார்கள்.

நபியவர்களின் பெயரைக் குறிப்பிடும் போது (ஸல்) என்று கூறும் வழக்கம் அண்மைக் காலத்தில் தான் அறிஞர்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு எழுத வேண்டும் என்றோ, கூற வேண்டும் என்றோ மார்க்கம் நமக்குக் கட்டளையிடவில்லை.

அப்படியானால் நபிகள் (ஸல்) அவர்களைப் பற்றி நினைவூட்டப்பட்டால் அவர்கள் மீது ஸலாவத்துச் சொல்ல வேண்டும் என்ற கருத்தில் முன்பு நாம் எடுத்துக்காட்டிய இரு ஹதீஸ்களின் சரியான விளக்கம் எது என்ற கேள்வி எழுகிறது.

நபிகளின் பெயரைக் கூறும் போதெல்லாம் ஸலவாத் கூற வேண்டும் என்பது மேற்கண்ட இரு ஹதீஸ்களின் அர்த்தமில்லை. மாறாக எந்த இடத்தில் ஸலவாத் கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டி உள்ளார்களோ அந்த இடத்தில் அவர்களைப் பற்றிக் கூறப்படும் போது ஸலவாத் கூற வேண்டும் என்பதே இதன் சரியான பொருளாக இருக்க முடியும்.

தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் ஸலவாத் கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். அதை நாம் செயல்படுத்தியும் வருகிறோம்.

இது ஸலவாத் கூறும் இடங்களில் ஒன்றாகும்.

அது போல் பாங்கு சொல்லி முடித்த பின் ஸலவாத் கூறுமாறு நபியவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என் மீது *ஸலவாத்* சொல்லுங்கள். ஏனெனில், என் மீது யார் ஒரு முறை *ஸலவாத்* சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள் புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் *வஸீலா* வைக் கேளுங்கள். *வஸீலா* என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்)  கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல் : *முஸ்லிம் 628*

பாங்கு கூறுபவர் அஷ்ஹது அன்ன முஹம்மதன் என்ற வாசகத்தை பாங்கில் கூறுவார். இவ்வாறு அவர் கூறும் போது நபியவர்களின் பெயரைக் கூறுவதால் அங்கே ஸலவாத்துச் சொல்ல வேண்டும் என்று நபியவர்கள் கூறவில்லை. பாங்கைச் செவியுறுபவர்கள் நபியவர்களின் பெயரைக் கேட்கும் போது நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை.  மாறாக முஅத்தின் கூறுவதைப் போன்றே பாங்கைச் செவுயுறுபவரும் கூற வேண்டும் என்று கட்டளையிடுகிறார்கள். பாங்கு சொல்லி முடித்த பின்னர் ஸலவாத் கூற வேண்டும்.

நபிமார்களின் பெயரைக் கூறும் போது அலைஹிஸ்ஸலாம் என்று கூறுவதும்,

நபித்தோழர்களின் பெயரைக் கூறும் போது ரளியல்லாஹு அன்ஹு என்று கூறுவதும்,

மற்றவர்களுக்கு ரஹ்மதுல்லாஹி அலைஹி என்று கூறுவதும்

இது போன்றதாகும்.

அதாவது பிரார்த்தனை என்ற அடிப்படையில் இவ்வாறு கூறினால் தவறல்ல. இவ்வாறு கூறுவது மார்க்கத்தில் கட்டாயம் என்று கூறக் கூடாது.

ஒரு சபையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து பேசப்பட்டால் ஆயிரம் முறை பேசப்பட்டாலும் சபை முடிவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக ஸலவாத் எனும் துஆவை ஓதினால் அது போதுமானது.

ஒரு சபையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைக் கேட்டால் ஒரு தடவை ஸலவாத் கூறினால் போதுமானது என்பதைப் பின் வரும் ஹதீஸ்கள் தெளிவாகவும் குறிப்பிடுகின்றன.

*ஒரு கூட்டத்தினர் ஒரு சபையில் அமர்ந்து அதை விட்டுப் பிரிவதற்கு முன் அல்லாஹ்வை நினைவு கூராமலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாமாலும் இருந்தால் அவர்கள் சொர்க்கம் சென்றாலும் இதனால் ஏற்பட்ட இழப்பை எண்ணி வருந்தாமல் இருக்க மாட்டார்கள்* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்கள் : ஹாகிம் 10282

https://eagathuvam.com/நபியின்-பெயருடன்-ஸலவாத்/