பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, August 23, 2010

பெருநாள் தொழுகை எப்படி தொழ வேண்டும்?

பெருநாள் தொழுகை எப்படி தொழ வேண்டும்?




பெருநாள் தொழுகை என்பது மற்ற வழக்கமான தொழுகைகளைப் போன்று தான். ஆயினும் இதற்கென சில கூடுதல் அம்சங்கள் உள்ளன. எனவே இந்தக் கூடுதல் அம்சங்கள் எவை என்பதை மட்டும் நாம் பார்ப்போம். மற்றபடி உளூச் செய்தல், கிப்லாவை முன்னோக்குதல் போன்ற தொழுகைக்கு உள்ள அனைத்து காரியங்களும் பெருநாள் தொழுகைக்கும் செய்யப்பட வேண்டும்.

பெருநாள் தொழுகைக்காக நின்றவுடன் இமாம், பெருநாள் தொழுகைக்கான நிய்யத் சொல்லிக் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.

'நிய்யத்' என்பதன் பொருள் மனதால் எண்ணுவதாகும். வாயால் மொழிவதல்ல. எந்த வணக்கத்தில் ஈடுபட்டாலும் வணக்கத்தில் ஈடுபடும் எண்ணம் இருப்பது அவசியமாகும் வாயால் சொல்வது நபிவழி அல்ல.

சாதாரண தொழுகைகளில் சொல்லப்படும் வழக்கமான தக்பீர்களைவிட பெருநாள் தொழுகையில் கூடுதலான தக்பீர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ سَمِعَهُ مِنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ فِي عِيدٍ ثِنْتَيْ عَشْرَةَ تَكْبِيرَةً سَبْعًا فِي الْأُولَى وَخَمْسًا فِي الْآخِرَةِ وَلَمْ يُصَلِّ قَبْلَهَا وَلَا بَعْدَهَا قَالَ أَبِي وَأَنَا أَذْهَبُ إِلَى هَذَا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் 5 தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் பெருநாள் தொழுகையில் சொல்வார்கள். அதற்கு முன்னும் பின்னும் அவர்கள் வேறு எதையும் தொழுததில்லை.

நூல்:அஹ்மத்-6401, இப்னுமாஜா-1268

இந்த ஹதீஸின் படி, பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறவேண்டும் என்பது தெளிவாகின்றது.

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا الْمُعْتَمِرُ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ الطَّائِفِيَّ يُحَدِّثُ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ قَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّكْبِيرُ فِي الْفِطْرِ سَبْعٌ فِي الْأُولَى وَخَمْسٌ فِي الْآخِرَةِ وَالْقِرَاءَةُ بَعْدَهُمَا كِلْتَيْهِمَا

'முதல் ரக்அத்தில் 7 தக்பீர்கள். இரண்டாம் ரக்அத்தில் 5 தக்பீர்கள். இவ்விரண்டு தக்பீர்களுக்கு பின்பு கிராஅத் ஓத வேண்டும்' என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.

நூல்: அபுதாவுத்-971

இந்த ஹதீஸில் 7+5 தக்பீர்களை கிராஅத்திற்கு முன்பு சொல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது.

சாதாரண தொழுகைகளில் உள்ள எல்லா அம்சங்களும் பெருநாள் தொழுகையிலும் உண்டு என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அந்த அடிப்படையில் தக்பீர் தஹ்ரீமாவிற்கு பிறகு ஓத வேண்டிய 'அல்லாஹும்ம பாஇத் பைனீ...' அல்லது 'வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ...' போன்ற துஆக்களில் ஏதேனும் ஒன்றை ஓதிக் கொள்ள வேண்டும். பிறகு 7 தக்பீர்கள் கூற வேண்டும். பிறகு கிராஅத் ஓத வேண்டும்.

சில இடங்களில் தக்பீர் தஹ்ரீமாவிற்கு பிறகு 7 தக்பீர்கள் கூறிவிட்டு 'அல்லாஹும்ம பாஇத் பைனீ' போன்ற துஆக்களை ஓதுகின்றனர். இந்த நடைமுறையால், கிராஅத்துக்கு முன்பு துஆ ஓதும் நிலை ஏற்படுகிறது. இது மேற்கண்ட ஹதீஸுக்கு மாற்றமானதாகும். எவ்வாறெனில் அதிகப்படியாக கூறப்படும் தக்பீர்கள் கிராஅத்துக்கு முன்பு கூறப்பட வேண்டும் என்று மேலே எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் கூறுகின்றன.

'அல்லாஹும் பாயித்...' போன்ற துஆக்களுக்குப் பிறகு தான் கிராஅத் ஓதப்படவேண்டும். எனவே கிராஅத்துக்கு முன் அதிகப்படியான தக்பீர்களைக் கூறவேண்டும் என்றால் அதற்கு முன்பே 'அல்லாஹும்ம பாயித் பைனீ' போன்ற துஆக்களை ஓதிவிட வேண்டும் என்பதை சிந்திக்கும் போது விளங்கிக் கொள்ளலாம்.

இந்த தக்பீர்களின் போது ஒவ்வொரு தக்பீருக்குமிடையில், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கைகளை உயர்த்தியதாக எந்த ஹதீஸும் இல்லை. ஆனால் இன்று நடைமுறையில் தக்பீர் சொல்லும் போது கைகளை அவிழ்த்துக் கட்டும் வழக்கம் இருந்து விருகிறது. இதற்கு காரணம் 'தக்பீர்' என்ற சொல்லை 'தக்பீர் கட்டுதல்' என்ற அர்த்தத்தில் விளங்கியிருப்பது தான்.

அரபியில் 'தஹ்லீல்' என்றால் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்லுதல், 'தஸ்பீஹ்' என்றால் 'சுப்ஹானல்லாஹ்' என்று சொல்லுதல், 'தஹ்மீத்' என்றால் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று சொல்லுதல் என பொருள். இதே போல் 'தக்பீர்' என்றால் 'அல்லாஹு அக்பர்' என்று சொல்வதுதான் இதன் பொருளாகும். தொழுகைக்கு பிறகு 33 தடவை தக்பீர் சொல்லவேண்டும் என்றால் 33 தடவை கைகளை நெஞ்சின் மீது அவிழ்த்துக் கட்டுதல் என்று விளங்கமாட்டோம். இது போன்று தான் 7105 தக்பீர்கள் சொல்வார்கள் என்பதற்கு கைகளை அவிழ்த்துக் கட்டுதல் என்று பொருள் கொள்ளக் கூடாது. 7105 தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும் என்பது தான் இதன் பொருள்.

இந்தக் கூடுதல் தக்பீர்களுக்கு இடையில் 'சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ்' என்ற திக்ரை கூறும் வழக்கம் சில பகுதிகளில் இருந்து வருகின்றது. இதற்கும் நபி வழியில் ஆதாரம் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த தக்பீர்களுக்கு இடையில் ஓத வேண்டும் என எந்த ஒரு திக்ரையும் கற்றுத் தரவில்லை.

எனவே முதல் தக்பீரின் போது மட்டும் கைகளை உயர்த்தி நெஞ்சில் கட்டிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு கைகளை கட்டிய நிலையிலேயே அல்லாஹுஅக்பர் என ஏழு தடவை கூறிக் கொள்ள வேண்டும். இரண்டாம் ரக்அத்திலும் கைகளைக் கட்டிய நிலையிலேயே ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூறிக் கொள்ள வேண்டும். கைகளை உயர்த்தவோ அவிழ்த்து கட்டவோ ஆதாரம் ஏதுமில்லை.

No comments:

Post a Comment