பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, May 10, 2018

உயிர்_தியாகிகள்_இறந்த_பின்னர்_உயிருடன்_இருக்கிறார்களா

#நம்பிக்கை

#உயிர்_தியாகிகள்_இறந்த_பின்னர்_உயிருடன்_இருக்கிறார்களா?

#பதில்

நன்மக்கள் மரணித்தாலும் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்ற தவறான கொள்கையுடையோர் பின்வரும் வசனங்களைத் தமது தீய கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் 2:154

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர். தமக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். தம்முடன் (இதுவரை) சேராமல் பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர். அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நற்பேறு மற்றும் அருள் பற்றியும், நம்பிக்கை கொண்டோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்பது பற்றியும் அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

திருக்குர்ஆன் 3:169, 170, 171

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர் என்பது எந்தக் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சாதாரண அறிவு படைத்தவனும் அறிந்து கொள்ள முடியும்.

அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற சொல் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதைச் சொல்கிறது. கொல்லப்பட்ட பின் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டது, அவர்களின் சொத்துக்களை அவர்களின் வாரிசுகள் பிரித்துக் கொண்டது, அவர்களின் மனைவிமார்கள் மறுமணம் செய்து கொண்டது ஆகிய அனைத்தும் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்கும் போது இறந்தவர்கள் என்று சொல்லக் கூடாது என்று கூறப்பட்டால் அது வேறு அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வுலகைப் பொருத்தவரை அவர்கள் மரணித்து விட்டாலும் ஆன்மாக்களின் உலகில் அல்லாஹ்விடம் அவர்கள் வேறு விதமான உயிருடன் உள்ளனர் என்ற கருத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பது பளிச்சென்று தெரிகின்றது.???

நல்லடியார்கள் மட்டுமின்றி கெட்டவர்களும் ஆன்மாக்களின் உலகில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டு உள்ளனர் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். அப்படியானால் அவர்களும் உயிருடன் தான் உள்ளனர்.

மரணித்த யாராக இருந்தாலும் அவர்கள் இவ்வுலகைப் பொருத்த வரை மட்டுமே மரணித்தவர்கள். ஆன்மாக்களின் உலகில் வேறு விதமான உயிர் பெற்றவர்களாக உள்ளனர். இந்த அடிப்படையை விளங்காமல் இவ்வசனங்களைத் தமது தவறான கொள்கைக்கு ஆதாரமாக காட்டி வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர்.

இந்த வசனங்களுக்குள்ளேயே இதன் கருத்து என்ன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

2:154 வசனத்தில் “அவர்கள் உயிருடன் உள்ளனர்” என்பதுடன் “எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்” என்று சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் உயிருடன் இருப்பது நாம் உணர்ந்துள்ள கருத்தில் அல்ல. நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத வேறு வகையில் உயிருடன் உள்ளனர் என்பதுதான் இதன் கருத்தாகும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது..

3:169 வசனமும், அதைத் தொடர்ந்து வரும் நான்கு வசனங்களும் இதை இன்னும் தெளிவாகக் கூறுகின்றன.

3:169 வசனம் “தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்” எனக் கூறுகிறது. நம்மைப் பொறுத்த வரை அவர்கள் மரணித்து விட்டாலும் இறைவனைப் பொறுத்த வரை அவர்கள் உயிருடன் உள்ளனர் என்பது இதன் கருத்தாகும்.

அடுத்த வசனங்களில் (3:170, 171) அவர்களுக்கு இறைவன் வழங்கியுள்ள பாக்கியங்களை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

மறுமை வாழ்க்கையில் அல்லாஹ் வழங்கும் இன்பங்களை அனுபவித்துக் கொண்டுள்ளனர் என்பது தான் இதன் கருத்து என்பதும், இது போன்ற இன்பங்கள் கிடைக்க உள்ளதால் அல்லாஹ்வுக்காக உயிர் தியாகம் செய்ய முஸ்லிம்கள் தயங்கக் கூடாது என்பதைச் சொல்வதற்காகவே இவ்வசனம் அருளப்பட்டது என்பதும் இதிலிருந்து தெரிகிறது.

இவ்வசனத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமும் முக்கியமானது.

அல்லாஹ்வின் பாதையில் உயிர்த் தியாகம் செய்தவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் எப்படி? என்று நாங்கள் கேட்டபோது “அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைகளின் கூடுகளுக்குள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரியும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர்

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: முஸ்லிம் 3834

நியாயத் தீர்ப்புக்குப் பிறகுதான் நல்லோர் சொர்க்கம் செல்வார்கள். ஆனால் உயிர்த்தியாகிகள் மட்டும் இறந்த உடன் சொர்க்கம் சென்று விடுவார்கள். ஆனால் மனித வடிவில் இல்லாமல் பச்சை நிறப் பறவைகளாக சொர்க்கத்தில் சுற்றி வருவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வளவு தெளிவாக இதை விளக்கிய பிறகும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்கு சிலர் நேரடிப் பொருள் செய்து வழிகேட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் கொடுத்த அர்த்தம் தவிர வேறு அர்த்தம் இல்லை.

அல்லாஹ்வின் பாதையில் தான் ஒருவர் கொல்லப்பட்டார் என்பதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்பதால் இவர்கள் கொடுக்கும் அர்த்தம் முற்றிலும் தவறு என்பது உறுதியாகிறது.

அல்லாஹ்வின் பாதையில் ஒருவர் கொல்லப்பட்டாரா? அல்லது பெருமைக்காகப் போருக்குச் சென்று கொல்லப்பட்டாரா? என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் தான் கொல்லப்பட்டார் என்று நாம் முடிவு செய்ய முடியாது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment