பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, April 27, 2018

நபிகள்_நாயகம்_அல்லாஹ்வைப்_பார்த்தார்களா

#நம்பிக்கை

#நபிகள்_நாயகம்_அல்லாஹ்வைப்_பார்த்தார்களா?

#இல்லை

அல்லாஹ்வை இந்த உலகத்தில் யாரும் பார்க்க முடியாது. எந்த மனிதனோ, அல்லாஹ்வின் தூதர்களோ அல்லாஹ்வைப் பார்த்ததில்லை; பார்க்கவும் முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. மறுமையில் தான் இறைவனைக் காணும் பாக்கியம் நல்லோருக்கு மட்டும் கிட்டும்.

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 6:103

முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்கள் என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்து விட்டான். எனினும் அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை அவர்களுடைய அசல் உருவிலும், அமைப்பிலும் வான விளிம்பு முழுவதையும் அடைத்தபடி கண்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி 3234

மஸ்ரூக் பின் அஜ்தஉ அறிக்கின்றார் :

முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைக் கண்டார்கள் என்று உங்களிடம் யார் அறிவிக்கின்றாரோ அவர் பொய் சொல்லி விட்டார். இறைவனோ “கண்கள் அவனைப் பார்க்காது’ என்று கூறுகின்றான் (அல்குர்ஆன் 6:103). மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்று யார் உங்களிடம் அறிவிக்கின்றாரோ அவரும் பொய் சொல்லி விட்டார். இறைவனோ, “அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறிய மாட்டார்’ என்று கூறுகின்றான் (அல்குர்ஆன் 27:65) என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

நூல்: புகாரி 7380

புகாரியில் 4855வது ஹதீஸில் ஆயிஷா (ரலி) அவர்கள்,

வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன் என்ற திருக்குர்ஆனின் 42:51 வசனத்தையும் தமது கூற்றுக்குச் சான்றாகக் காட்டுகின்றார்கள்.

“நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “அவனோ ஒளிமயமானவன்; நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?” எனக் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 261

திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டிருந்தும் ஆலிம்கள் பலர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை மிஃராஜின் போது பார்த்ததாக கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஆதாரமாகக் கீழ்க்கண்ட வசனத்தை முன் வைக்கின்றனர்.

ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்.

திருக்குர்ஆன் 53:13

இந்த வசனத்தில் அவரைக் கண்டார் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கண்டதைப் பற்றித் தான் குறிக்கின்றது என்பது இவர்களது வாதம். இந்த வசனத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தாம் கண்டது ஜிப்ரீல் (அலை) அவர்களைத் தான் என்று விளக்கமளித்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கண்டதில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய போது, 53:13 வசனத்தை ஆதாரமாகக் காட்டி, அவரை மற்றொரு முறையும் கண்டார் என்று திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதே என்று இந்த ஹதீஸை அறிவிக்கும் மஸ்ரூக் கேட்கும் போது ஆயிஷா (ரலி) அவர்கள் “அது ஜிப்ரீலைக் குறிக்கின்றது” என்று பதிலளித்தார்கள்.

நூல் புகாரி 3235

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது இறைவனைக் கண்டார்கள் என்பது பொய் என்பதில் சந்தேகமில்லை.

மறுமை_நாளில்_இறைவன்_எந்த_மொழியில்_கேள்வி_கேட்பான்

#நம்பிக்கை

#மறுமை_நாளில்_இறைவன்_எந்த_மொழியில்_கேள்வி_கேட்பான்?

#பதில்_தெரியாது.

மறுமை நாளில் இறைவன் எல்லோரிடமும் நேரடியாகப் பேசுவான். அவனுடைய பேச்சை எல்லோரும் அறிந்து கொள்வர்.

7443 حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنِي الْأَعْمَشُ عَنْ خَيْثَمَةَ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ وَلَا حِجَابٌ يَحْجُبُهُ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் (மறுமை நாளில்) பேசாமலிருக்க மாட்டான். அப்போது அல்லாஹ்வுக்கும், அடியானுக்கும் இடையே எந்த மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார்; தடுக்கின்ற திரையும் இருக்காது.

அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி)

நூல் : புகாரி 7443

இறைவன் குறிப்பிட்ட இந்த மொழியில் தான் மறுமையில் பேசுவான் என எந்த விவரமும் குர்ஆன், ஹதீஸில் சொல்லப்படவில்லை.

எனவே மறுமையில் அவரவருக்குத் தெரிந்த மொழியில் இறைவன் பேசலாம். அல்லது மறுமையில் ஏதாவது ஒரு மொழி பற்றிய ஞானத்தை இறைவன் எல்லோருக்கும் வழங்கி அந்த மொழியில் அவர்களிடம் பேசலாம்.

மனிதர்கலாள்_அற்புதம்_செய்ய_முடியுமா

#மனிதர்கலாள்_அற்புதம்_செய்ய_முடியுமா?

#பதில்

#ஒருவர்_அற்புதம்_செய்வது_வேறு! #அவரிடம்_அற்புதம்_நிகழ்வது_வேறு!

நபிமார்கள் செய்ததாகச் சொல்லப்படும் அற்புதங்கள் எதுவும் அவர்களால் செய்யப்பட்டவை அல்ல. அற்புதங்கள் செய்யும் ஆற்றல் அவர்களுக்கு இயல்பாக வழங்கப்படவும் இல்லை. மக்கள் முன்னிலையில் அற்புதம் செய்துகாட்ட அல்லாஹ் நாடும் போது நபிமார்கள் வழியாக நிகழ்த்திக் காட்டினான் என்பது தான் அற்புதங்களைப் புரிந்து கொள்ளும் சரியான முறையாகும்.

ஒருவர் ஒரு காரியத்தை தாமாகச் செய்வதற்கும், அச்செயல் அவரிடம் வெளிப்படுவதற்கும் உள்ள வேறுபாட்டைப் பின்வரும் உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்.

கோமாவில் கிடக்கும் ஒருவன் எழவே மாட்டான் என்று எல்லா மருத்துவர்களும் உறுதிப்படுத்தி விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் திடீரென்று அவன் எழுந்து உட்கார்ந்து நம்மிடம் நலம் விசாரித்தால் அது அற்புதச் செயல் தான். அதில் சந்தேகம் இல்லை. அதை அவன் செய்த அற்புதம் என்று அவனும் சொல்ல மாட்டான். நாமும் சொல்ல மாட்டோம். அவனுக்கு அருள் புரிவதற்காக அவனுக்கு அல்லாஹ் செய்த அற்புதம் என்று இதைச் சொல்வோம்.

ஒருவன் தானே நினைத்து தானே திட்டமிட்டு செய்தால் தான் அதை அவன் செய்தான் என்போம்.

ஒருவன் 50 மாடிக் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து சாகாமல் பிழைத்துக் கொண்டால் அதை எப்படிப் புரிந்து கொள்வோம்? இது அற்புதச் செயல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இது அவன் செய்த அற்புதமா? அவன் மூலம் அல்லாஹ் வெளிப்படுத்திய அற்புதமா?

அவன் எப்போது வேண்டுமானாலும் ஐம்பது மாடிக் கட்டடத்தில் இருந்து விழுவான். அவனுக்கு ஒன்றும் ஆகாது என்று இருந்தால் தான் அவன் செய்த அற்புதம் என்று கூறுவோம். இப்படி அவனும் சொல்ல மாட்டான். எவனும் சொல்ல மாட்டான். அவனே எதிர்பாராமல் அல்லாஹ் அவனுக்கு அதிசயமாக முறையில் உதவியுள்ளான் என்று இதைப் புரிந்து கொள்வோம்.

ஒருவர் ஒரு காரியத்தைச் செய்ய வல்லவர் என்று எப்போது நாம் கூறுவோம்?

அவர் செய்ய நினைக்கும் போதெல்லாம் அதைச் செய்து காட்ட வேண்டும். ஒரு தீக்குச்சியை இரண்டாக உடைக்கும் சக்தி எல்லா மனிதர்களுக்கும் உள்ளது என்று நாம் நம்புகிறோம். நாம் எப்போது நினைக்கிறோமோ அப்போதெல்லாம் தீக்குச்சியை இரண்டாக உடைத்துக் காட்ட முடியும். இலட்சத்தில் ஒன்று அல்லாஹ்வின் நாட்டப்படி தவறிடலாம்.

ஒருவன் பெரிய கடப்பாரையை வளைக்கிறான். அது இரண்டாக உடைந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். இவன் பெரிய கடப்பாரையை உடைக்கும் அளவுக்கு வலிமை பெற்றவன் என்று எப்போது கூறுவோம்? மேலும் சில கடப்பாரைகளைக் கொடுத்து உடைத்துக் காட்டு என்று சொல்வோம். கொடுக்கும் கடப்பாரைகளை எல்லாம் அவன் உடைத்துக் காட்டினால் அப்போது அவனுக்கு அந்தச் சக்தி உள்ளதாக நாம் கருதுவோம்.

வேறு கடப்பாரைகளை அவ்வாறு உடைத்துக் காட்ட அவனுக்கு இயலாவிட்டால், அல்லது அதைச் செய்ய அவன் மறுத்தால் அவன் ஒருமுறை கடப்பாரையை உடைத்தது அவனது சக்தியால் அல்ல. அந்தக் கடப்பாரை உள்ளுக்குள் முறிந்து உடையும் நிலையில் இருந்திருக்கும். அல்லது அல்லாஹ் அந்தக் கடப்பாரை உடைய வேண்டும் என அந்த நேரத்தில் மட்டும் கட்டளை போட்டதால் உடைந்து இருக்கும். இப்படித் தான் புரிந்து கொள்வோம். இவனுக்கு கடப்பாரையை உடைக்கும் ஆற்றல் இல்லை என்ற முடிவுக்கு வருவோம்.

நபிமார்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்களில் அவர்களின் அதிகாரம் எப்படி இருந்தது என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

நமக்கு நம்பிக்கையான ஒருவரிடம் நமது ஒரு வங்கிக் கணக்கின் செக் புத்தகத்தைக் கொடுக்கிறோம். செக் புத்தகத்தின் எல்லா சீட்டுக்களிலும் தொகையை நிரப்பாமல் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறோம். அவர் எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். இந்த வகையில் அல்லாஹ் நபிமார்களுக்கு அற்புதங்களைக் கொடுக்கவில்லை.

நம்பகமானவரிடம் செக் புத்தகத்தில் ஒரு சீட்டில் கூட கையெழுத்துப் போடாமல் கொடுக்கிறோம். இப்போது அவர் பணம் எடுப்பதாக இருந்தால் ஒவ்வொரு தடவையும் நம்மிடம் எவ்வளவு தொகை? எதற்காக என்று குறிப்பிட வேண்டும். நாம் விரும்பினால் கையெழுத்துப் போடுவோம். அல்லது மறுப்போம். அவர் குறிப்பிட்ட தொகையையோ, அதைவிட அதிகமாகவோ, குறைவாகவோ எழுதுவோம்.

இது போன்ற நிலையில் தான் அற்புதங்களில் நபிமார்களின் அதிகாரம் இருந்தது.

நபிமார்கள் மூலம் மட்டுமின்றி மாற்றார்கள் வழியாகவும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. வாயில்லா ஜீவன்கள் வழியாகவும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.

ஹுத் ஹுத் எனும் பறவை சுலைமான் நபியுடன் பேசியுள்ளது. இன்னொரு நாட்டை ஆட்சி புரியும் பெண்ணைப் பற்றி அறிந்து கொள்கிறது. அவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து சுலைமான் நபியிடம் கூறுகிறது.

பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார். ‘அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்’ (என்றும் கூறினார்). (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. ‘உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்துள்ளேன். ஸபா எனும் ஊலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்’ என்று கூறியது. ‘நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது. அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். அவர்கள் நேர் வழி பெற மாட்டார்கள் (என்றும் கூறிற்று.) வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்ய மாட்டார்களா? நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷுக்கு அதிபதி. ‘நீ உண்மை சொல்கிறாயா? பொய்யர்களில் ஆகி விட்டாயா? என ஆராய்வோம்’ என்று அவர் கூறினார். ‘எனது இந்தக் கடிதத்தை நீ கொண்டு சென்று அவர்களிடம் அதைப் போடு! பின்னர் அவர்களை விட்டும் விலகி என்ன பதில் தருகிறார்கள் என்று கவனி!’ (என்றார்).

திருக்குர்ஆன் 27:20-28

ஹுத் ஹுத் எனும் பறவை மனிதனைப் போல் பகுத்தறிவு பெற்றிருந்தது என்று இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். ஹுத் ஹுத் பறவை அற்புதம் செய்தது என்று இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். அல்லாஹ், அவன் நிகழ்த்த விரும்பும் அற்புதத்தை இப்பறவையின் மூலம் வெளிப்படுத்தினான் என்றுதான் புரிந்து கொள்வோம்.

சுலைமான் நபி அவர்கள் தமது படையினருடன் சென்ற போது எறும்புப் புற்றைக் கடந்து சென்றனர். அதை எறும்பு புரிந்து கொண்ட விபரம் திருக்குர்ஆனில் உள்ளது.

அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது ‘எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது’ என்று ஓர் எறும்பு கூறியது.

திருக்குர்ஆன் 27:18

அந்த எறும்புக்கே இந்த ஆற்றல் இருந்தது என்றும், எறும்புக் கூட்டங்களுக்கு இதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அளிக்கப்பட்டது என்றும் இதை விளங்கக் கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் அல்லாஹ் தனது அற்புதத்தை அந்த எறும்பின் மூலம் வெளிப்படுத்தினான் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

எறும்பு, மற்றும் ஹுத் ஹுத் பறவை மூலம் தனது அற்புதத்தை அல்லாஹ் சில சமயங்களில் வெளிப்படுத்தியதைப் போலவே நபிமார்கள் வழியாகவும் சில சந்தர்ப்பங்களில் அற்புதங்களை வெளிப்படுத்தியுள்ளான்.

பறவைகள், எறும்புகள் ஒரு புறம் இருக்கட்டும். அல்லாஹ்வின் எதிரிகள் வழியாகவும் அல்லாஹ் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறான்.

ஸாமிரி என்பவன் மூஸா நபி காலத்தில் வாழ்ந்தவன். அவன் தங்கத்தால் ஒரு காளை மாட்டைச் செய்து அதை இரத்தமும், சதையும் கொண்ட காளையாக ஆக்கி அதைச் சப்தமிடவும் செய்தான். இந்த விபரங்களைப் பின் வரும் வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (ஸாமிரி) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவன் ‘இதுவே உங்கள் இறைவன். மூஸாவின் இறைவன். அவர் வழி மாறிச் சென்று விட்டார்’ என்றான். ‘அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை’ என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? ‘என் சமுதாயமே! இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்! அளவற்ற அருளாளன் தான் உங்கள் இறைவன். எனவே என்னைப் பின்பற்றுங்கள்! எனது கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்!’ என்று இதற்கு முன் அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்.

திருக்குர்ஆன் 20:88-90

மூஸா நபியின் சமுதாய மக்கள் எந்த அளவு உறுதியுடன் இருக்கிறார்கள் என்பதைச் சோதிக்கும் விதமாக அல்லாஹ் இந்த அற்புதத்தை ஸாமிரி மூலம் நிகழ்த்திக் காட்டினான். என் சமுதாயமே! ‘இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்’ என்று ஹாரூன் நபி கூறியதிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

நினைத்த மாத்திரத்தில் நினைத்த அற்புதத்தை ஸாமிரி செய்வான் என்று இதைப் புரிந்து கொள்ள முடியாது.

இது பற்றி அல்லாஹ் தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்.

“ஸாமிரியே! உனது விஷயமென்ன?” என்று (மூஸா) கேட்டார். “அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது” என்றான். “நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் ‘தீண்டாதே’ என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம்” என்று (மூஸா) கூறினார்.

திருக்குர்ஆன் 20:95, 96, 97

என்ன நடந்தது என்று மூஸா நபி விசாரித்தபோது இது போன்ற ஆற்றல் எனக்கு உள்ளது என்று அவன் கூறவில்லை. மாறாக சிற்பத்தைச் செய்து தூதரின் காலடி மண்ணை அதில் போட வேண்டும் என என் மனதுக்குத் தோன்றியது. அவ்வளவு தான் என்று அவன் விடையளித்தான். இதுபோல் செய்யும் ஆற்றல் இவனுக்கு இருக்கவில்லை. இப்படிச் செய் என்று இவன் உள்ளத்தில் அல்லாஹ் ஒரு எண்ணத்தைப் போட்டுள்ளான். அதை அவன் செய்துள்ளான் என்பது இதில் இருந்து தெரிகிறது.

ஸாமிரிக்கு மந்திர சக்தி இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக மூஸா நபியவர்கள் அவன் செய்த காளைச் சிற்பத்தைத் தீயிலிட்டு பொசுக்கி கடலில் வீசிக் காட்டினார்கள். ஸாமிரி வெறுமனே அதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்க முடிந்தது.

உறுதியான நம்பிக்கை உடைய மூஸா நபியை ஸாமிரியால் எதிர்த்து நிற்க முடியவில்லை. தான் உண்டாக்கிய சிற்பத்தை அவனால் காப்பாற்ற முடியவில்லை. அந்தச் சிற்பமும் அவனைக் காப்பாற்றவில்லை.

இது போல் தற்செயலாக பலரது வாழ்விலும் அற்புதங்கள் நிகழும். ஆனால் அதற்கு அவர்கள் சொந்தக்காரர்களாக மாட்டார்கள்.

சுருங்கச் சொன்னால் அற்புதங்கள் இரு வகைகளில் உள்ளன.

அல்லாஹ் அனுமதி அளித்து அதன்படி செய்யப்படும் அற்புதங்கள் முதல் வகை.

யாரிடம் அற்புதம் நிகழ்த்தப்படுகிறதோ அவருக்கே தெரியாமல் நிகழும் அற்புதங்கள் இரண்டாவது வகை.

இந்த இரண்டாம் வகை அற்புதங்கள் மனிதர்களில் பலருக்கு நிகழ்ந்துள்ளன. தர்போதும் நிகழ்கின்றன. மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள். விமானம் நொறுங்கி விழுந்து அனைவரும் மரணித்த பின் ஒரு குழந்தை மட்டும் உயிர் பிழைத்துக் கொள்கிறது. இடிபாடுகளில் சிக்கி அனைவரும் இறந்திருக்கும் நிலையில் பத்து நாட்கள் கழித்து உயிருடன் ஒருவர் மீட்கப்படுகிறார். இது போல் அற்புதங்கள் பலரது வாழ்வில் நடக்கின்றன.

ஐம்பது மாடி கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து சாகாமல் ஒருவன் பிழைத்துக் கொள்கிறான். இது அற்புதம் தான். ஆனால் அவன் கீழே விழுவதற்கு முன்போ, கீழே விழும் போதோ இப்போது நீ சாகமாட்டாய் என்று அவனுக்கு அறிவிக்கப்படுவதில்லை. இது நடந்து முடியும் வரை நாம் சாக மாட்டோம் என்பது அவனுக்குத் தெரியாது.

இந்த அற்புதங்கள் இரண்டாவது வகையைச் சேர்ந்ததாகும்

ஒருவனிடம் நிகழும் அற்புதம் அவனுக்கே தெரியாமல் இருப்பது போல் நபிமார்களின் அற்புதம் இருக்கவில்லை.

நபிமார்கள் அல்லாஹ்வின் அனுமதியோடு அற்புதம் செய்வதால் இப்போது நாம் போடும் கைத்தடி பாம்பாக மாறும் என்ற விபரம் பாம்பாக மாறுவதற்குச் சற்று முன்பு அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டு விடுகிறது. நடக்கப் போவதை முன்னரே அவர்கள் அறிந்திருந்தால் தான் அதை ஆதாரமாகக் காட்டி தனது தூதுத்துவத்தை அவர்களால் நிரூபிக்க முடியும்.

இல்லாவிட்டால் தற்செயலாக இது நடந்தது என்று மக்கள் கூறி நிராகரித்து விடுவார்கள்.

இந்த வகையில் இரண்டு அற்புதங்களும் வேறுபடுகின்றன.

இப்போது இந்த அற்புதத்தைச் செய்து காட்டப்போகிறேன் என்று அறிவித்து விட்டு நபிமார்கள் அற்புதம் செய்வார்கள். இது முதல் வகை அற்புதம்.

யாரிடம் அற்புதம் நிகழ்கிறதோ அவருக்கே தெரியாமல் யாரும் எதிர்பாராமல் திடீரென நிகழும் அற்புதங்கள் இரண்டாம் வகையாகும்.

வானவர்களை_நாம்_காண_முடியுமா

#நம்பிக்கை

#வானவர்களை_நாம்_காண_முடியுமா?

சில அறிஞர்கள் பயான் செய்யும் நிகழ்ச்சிகளில் வானவர்கள் வந்து கலந்து கொள்வதாகக் கூறி ஒரு வீடியோவையும் பரப்பி வருகின்றனர். இது உண்மையா?

#பதில்

வானவர்கள் பல்வேறு சபைகளுக்கு ஆஜராவதாக ஹதீஸ்கள் உள்ளன. அவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதால் மறைவான விஷயம் என்ற அடிப்படையில் நாம் நம்புகிறோம். ஆனால் அந்த சபையில் நாம் இருந்தாலும் வானவர்களை நாம் காண முடிவதில்லை.

477 – حدثنا مسدد، قال: حدثنا أبو معاوية، عن الأعمش، عن أبي صالح، عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال: ” صلاة الجميع تزيد على صلاته في بيته، وصلاته في سوقه، خمسا وعشرين درجة، فإن أحدكم إذا توضأ فأحسن، وأتى المسجد، لا يريد إلا الصلاة، لم يخط خطوة إلا رفعه الله بها درجة، وحط عنه خطيئة، حتى يدخل المسجد، وإذا دخل المسجد، كان في صلاة ما كانت تحبسه، وتصلي – يعني عليه الملائكة – ما دام في مجلسه الذي يصلي فيه: اللهم اغفر له، اللهم ارحمه، ما لم يحدث فيه “

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து கூடுதலாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் உளூ செய்து, அதை செம்மையாகச் செய்து, தொழும் நோக்கத்துடன் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்குள் வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஓர் தகுதியை அவருக்கு அல்லாஹ் உயர்த்துகின்றான்; ஒரு பாவத்தை அவரை விட்டு நீக்குகின்றான்.  தொழுகையை எதிர்பார்த்து அவர் பள்ளிவாசலில் இருக்கும் போது அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். மேலும் அவர் எந்த இடத்தில தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால்,  சிறுதுடக்கு (காற்றுப்பிரிதல்) மூலம் அவர் பள்ளிக்குள் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும். அப்போது வானவர்கள், இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்று பிரார்த்திக்கின்றார்கள்.

நூல் : புகாரி 477

பள்ளிவாசலில் தொழுகைக்காக நாம் காத்திருக்கும் போது வானவர்கள் அந்தச் சபையில் இருந்தாலும் அவர்கள் நம் கண்களுக்குத் தென்படுவதில்லை.

555 – حدثنا عبد الله بن يوسف، قال: حدثنا مالك، عن أبي الزناد، عن الأعرج، عن أبي هريرة: أن رسول الله صلى الله عليه وسلم قال: ” يتعاقبون [ص:116] فيكم ملائكة بالليل وملائكة بالنهار، ويجتمعون في صلاة الفجر وصلاة العصر، ثم يعرج الذين باتوا فيكم، فيسألهم وهو أعلم بهم: كيف تركتم عبادي؟ فيقولون: تركناهم وهم يصلون، وأتيناهم وهم يصلون “

555 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக உங்களிடையே வருகின்றனர். ஃபஜ்ர் தொழுகையிலும், அஸ்ர் தொழுகையிலும் ஒன்று கூடுகின்றார்கள். பிறகு, உங்களிடையே இரவு தங்கியவர்கள் மேலேறி (இறைவனிடம்) செல்கின்றனர். அப்போது மக்களைப் பற்றி மிகவும் அறிந்தவனான அல்லாஹ் அவர்களிடம்,  என் அடியார்களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்? என்று கேட்பான். அதற்கு அவர்கள், உன்னைத் தொழுகின்ற நிலையில் விட்டுவந்தோம்; அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம் என்று பதிலளிப்பார்கள்.