பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, March 13, 2014

இரண்டிரண்டா? நான்கு நான்கா

இரண்டிரண்டா? நான்கு நான்கா

இரண்டிரண்டாக தொழுவதா? நான்கையும் ஒரு ஸலாமில் தொழுவதா 
லுஹரின் முன் சுன்னத் நான்கு ரக் அத்களை ஒரே சலாமில் தொழுக ஹதீஸ் உள்ளதா?கடமை அல்லாத எல்லா தொழுகைகளை நபிகள் (ஸல்) அவர்கள் இரண்டிரண்டாக தொழுதார்கள் என்று வந்துள்ளதே? அது இரவு தொழுகையை தான் குறிக்குமா?ஜூம்மா முன் சுன்னத் நான்கு ரக் அத்தும் எப்படி தொழுக வேண்டும்? 
லுஹருக்கு முன் உள்ள சுன்னத் தொழுகை இரண்டு ரக்அத்கள் எனவும், நான்கு ரக் அத்கள் எனவும் ஹதீஸ்கள் உள்ளன. 
லுஹருக்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான்கு ரக் அத்களை விட்டதே இல்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 
நூல் புகாரி 1182 
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக் அத்கள் தொழுவார்கள். 
நூல் : புகாரி 937, 1169 
ஆனால் நான்கு ரக்அத்கள் தொழுதார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. ஒரு ஸலாமில் தொழுதார்களா? இரண்டு ஸலாமில் தொழுதார்களா என்று கூறப்படவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) நான்கு ரக்அத்கள் என்று கூறப்பட்டால் நான்கையும் ஒரு ஸலாமில் தொழுவது தான் முறையாகும். 
ஆனால் இரவிலும் பகலிலும் தொழும் தொழுகை இரண்டிரண்டு ரக் அத்களாகத் தொழ வேண்டும் என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இதை ஆதாரமாகக் கொண்டு பகல் தொழுகையையும் இரண்டிரண்டாகத் தொழ வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். 
ஆனால் இரவுத் தொழுகை இரண்டிரண்டாகத் தொழ வேண்டும் என்பது தான் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாகும். அத்துடன் பகல் தொழுகை என்பதையும் சேர்த்துக் கூறும் அறிவிப்பு ஆதாரப்பூர்வமானது அல்ல.   
حدثنا محمد بن بشار حدثنا عبد الرحمن بن مهدي حدثنا شعبة عن يعلى بن عطاء عن علي الأزدي عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال صلاة الليل والنهار مثنى مثنى قال أبو عيسى اختلف أصحاب شعبة في حديث ابن عمر فرفعه بعضهم وأوقفه بعضهم وروي عن عبد الله العمري عن نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم نحو هذا والصحيح ما روي عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال صلاة الليل مثنى مثنى وروى الثقات عن عبد الله بن عمر عن النبي صلى الله عليه وسلم ولم يذكروا فيه صلاة النهار وقد روي عن عبيد الله عن نافع عن ابن عمر أنه كان يصلي بالليل مثنى مثنى وبالنهار أربعا وقد اختلف أهل العلم في ذلك فرأى بعضهم أن صلاة الليل والنهار مثنى مثنى وهو قول الشافعي وأحمد و قال بعضهم صلاة الليل مثنى مثنى ورأوا صلاة التطوع بالنهار أربعا مثل الأربع قبل الظهر وغيرها من صلاة التطوع وهو قول سفيان الثوري وابن المبارك وإسحق 
திர்மிதீ, இப்னு மாஜா, இப்னு குஸைமா உள்ளிட்ட பல் நூல்களில் இந்த அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸை இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக 
நாஃபிவு, (பார்க்க புகாரி 472, 473) 
அப்துல்லாஹ் பின் தீனார் (பார்க்க புகாரி 991) 
அல்காஸிம் பின் முஹம்மத் (பார்க்க புகாரி 993) 
அனஸ் பின் ஸீரீன் (பார்க்க புகாரி 995, 
ஸாலிம் பின் அப்துல்லாஹ் (பார்க்க புகாரி 1137) 
மற்றும் பலர் அறிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் இரவுத் தொழுகை என்று மட்டுமே குறிப்பிடுகின்றனர். பகலிலும் என்ற சொல்லை அலீ அல் அஸ்தீ என்பவர் மட்டுமே கூறுகிறார். இவர் தவறாகக் கூறி விட்டார் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறுகின்றனர். 
எனவே பகல் தொழுகை இரண்டிரண்டாகத் தொழ வேண்டும் என்பதற்கு ஏற்கத்தக்க ஆதாரம் இல்லை. ஆனால் இரவுத் தொழுகை குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இருப்பதால் நான்கு ரக் அத் என்று கூறப்பட்டாலும் அதை இரண்டு ஸலாமில் தொழ வேண்டும்.   
இரவுத் தொழுகை இரண்டிரண்டாகத் தான் தொழ வேண்டுமா? 
இரவுத் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தான் தொழ வேண்டும் என்று பின் வரும் ஹதீஸ் கூறுகிறது. 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர், "இரவுத் தொழுகை பற்றி என்ன கூறுகிறீர்கள்?'' என்று கேட்டார். மிம்பரில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இரவுத் தொழுகை இரண்டிரண்டாகத் தொழ வேண்டும்'' என்று விடையளித்தார்கள். 
நூல்: புகாரி 472, 473, 991, 993, 1137 
ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா ரலி அறிவிக்கும் ஹதீஸில் இதற்கு மாற்றமான கருத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளது. 
ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ரமாளானிலும், மற்ற மாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு ரக்அத்களுக்கு மேல் அதிகமாக்கியதில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும், நீளத்தைப் பற்றியும் கேட்காதே. பின்னர் நான்கு ரக்அத்ககள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் கேட்காதே. பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள் என்று விளக்கம் அளிததார்கள். 
அறிவிப்பவர் : அபூ ஸலமா (ரலி) 
நூல் : புகாரீ 1147, 2013, 3569 
முதலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள்; பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும் போது இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக் அத்களாகத் தொழ வேண்டும் என்ற கருத்தில் அமைந்த ஹதீஸுக்கு இது முரண்படுவது போல் அமைந்துள்ளது. 
இதை அடிப்படையாகக் கொண்டு நான்கு நான்கு ரக்அத்களாகத் தொழலாமா? என்று சந்தேகம் ஏற்படலாம். 
அந்த அறிவிப்பு மட்டும் வந்திருந்தால் நான்கு ரக்அத்களாகத் தொழ வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம். 
அந்த ஹதீஸை அறிவிக்கும் ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவித்துள்ளார்கள். 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் ஸலாம் கூறுவார்கள். ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள். 
நூல்: இப்னுமாஜா 1167 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்களில் ஸலாம் கொடுப்பார்கள். ஆயினும் நான்கு ரக்அத் முடிந்ததும் சற்று இடைவெளி கொடுப்பார்கள் என்று புரிந்து கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான இரண்டு ஹதீஸ்களும் முரண்பாடு இல்லாமல் பொருந்திவிடும். 
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நான்கு நான்கு ரக் அத்களாகத் தொழுதார்கள் என்பது சந்தேகமில்லாத வகையில் உறுதி செய்யப்பட்டாலும் அவர்களின் கட்டளையும் அவர்களின் செயலும் முரண்பட்டால் அவர்களின் கட்டளையைத் தான் நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இரவுத் தொழுகையை இரண்டிரண்டாகத் தான் தொழ வேண்டும் என்று அவர்கள் நமக்கு தெளிவாக கட்டளை இட்டுள்ளதால் இரவுத் தொழுகைகளை இரண்டிரண்டு ரக் அத்களாகத் தொழுவதே சரியானதாகும். ஆனால் பகல் தொழுகைக்கு இது போல் கட்டளை இல்லாததால் நான்கு ரக் அத்கள் தொழுதால் நான்கையும் ஒரு ஸலாமில் தான் தொழ வேண்டும்.

No comments:

Post a Comment