#நகம்_வெட்டுவதின்_ஒழுக்கங்கள் மற்றும் அதனை பற்றி உள்ள மூடநம்பிக்கைகள் 💕
💟 நகங்களை வெட்டுவது இயற்கை மரபுகளில் உள்ள ஒரு அம்சமாகும் :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்தசேதனம் செய்துகொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்கக சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவைகளாகும்!
(நூல் : புகாரி : 5891)
💟 40 நாட்கள் மேல் விட்டு வைக்க கூடாது :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றில் நாற்பது நாட்களுக்கு மேல் விட்டு வைக்கக் கூடாதென எங்களுக்குக் கால வரம்பு விதிக்கப்பட்டிருந்தது.
(நூல் : முஸ்லிம் : 431)
💟 நகங்களை எவ்வாறு வெட்டுவது :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்!
(நூல் : புகாரி : 5855)
• சிலர் முதலில் வலது பக்கத்தில் உள்ள விரலில் இருந்து ஆரம்பம் செய்ய வேண்டும் என்றும் இன்னும் நகம் வெட்டும் முறைகள் சில செய்திகள் உள்ளன அவைகள் அனைத்துமே பலகீனமான செய்திகளே! அவற்றில் ஸஹீஹான செய்திகள் எதுவும் கிடையாது!
• நபி (ஸல்) அவர்களின் சுன்னாஹ்! வலது பக்கத்தில் இருந்து அனைத்து காரியங்களையும் ஆரம்பம் செய்வது தான்! நாம் நகம் வெட்டும் பொழுதும் வலது பக்கத்தில் இருந்து ஆரம்பம் செய்வது தான் சுன்னாஹ் ஆகும்!
💟 நகம் வெட்டுவதற்கு குறிப்பிட்ட நாள் அல்லது குறிப்பிட்ட நேரம் ஏதேனும் உள்ளதா :
இமாம் அஸ்ஸஹாவீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நகம் வெட்டும் போது பேணப்படும் ஒழுங்கு முறைகள், மற்றும் நகம் வெட்டுவதற்கென்று குறிப்பிட்ட நாள் சம்மந்தமாக நபி (ஸல்) அவர்களை தொட்டு வரும் ஒன்றுமே உறுதியானவைகள் அல்ல.
(நூல்: அல்-மகாஸித் அல்-ஹஸனா: 422)
• குறிப்பிட்ட ஒரு நாளில் அல்லது குறிப்பிட்ட ஒரு நேரத்தில் நகம் வெட்டு வேண்டும் என்று வரும் செய்திகள் அனைத்தும் ஸஹீஹான செய்திகள் கிடையாது! நாம் எப்போது வேண்டும் என்றாலும் எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் நகம் வெட்டி கொள்ளலாம் இதற்க்கு இஸ்லாத்தில் எந்த தடையும் கிடையாது!
💟 இரவு நேரத்தில் அல்லது மஹ்ரிப் நேரத்தில் நகம் வெட்ட கூடாதா :
இரவு நேரங்களில் மற்றும் பகல் பொழுதுகளில் நகங்களை வெட்டுவது ஆகுமான ஒரு செயலாகும்; இரவு மற்றும் பகல் அனைத்து நேரங்களிலும் நகங்களை வெட்டிக் கொள்ளலாம்.
(மஜ்மூஉ அல் பதாவா இப்னு பாஸ்)
• எனவே இரவு பகல் வித்தியாசம் இன்றி எல்லா நேரங்களிலும் நகம் வெட்டுவது கூடும். இரவு நேரங்களில் நகம் வெட்டுவது கூடாது அல்லது வெறுக்கத்தக்கது என்று கூறுவது அனைத்து கருத்துமே அறியாமையே! அடிப்படை ஆதாரம் இல்லாத செய்திகளே!
💟 ஹைலு அல்லது நிபாஸ் ஏற்பட்டு உள்ள பெண்கள் நகம் வெட்ட கூடாதா :
• மாதவிடாய் காலத்தில் இருக்கும் போது தலை முடி சீவுதல், நகம் வெட்டுதல், குளித்து கொள்ளுதல் போன்ற செயல்களைச் செய்வது கூடாது என்று அதிகமான மக்களிடையே பரவி உள்ளது ஆனால் இவையெல்லாமே அறியாமையே!
• இஸ்லாத்தில் ஹைலு அல்லது நிபாஸ் உடைய பெண்கள் இவ்வாறு செய்ய கூடாது என்று எந்த தடையும் கிடையாது!
மாதவிடாய் காலத்தில் இருக்கும் ஒரு பெண் நகங்களை வெட்டுவது, மற்றும் தலைமுடி சீவுவது ஆகுமானவையாகும். மக்கள் மன்றத்தில் பிரபல்யமாக காணப்படும் இந்த செய்திகளுக்கும் இஸ்லாம் மார்கத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை!
(பதாவா நூறுன் அலத் தர்ப்: 63)
💟 நகம் வெட்டினால் ஒளு முறிந்து விடுமா :
• நகம் வெட்டுவதால் ஒளு முறிந்து விடும் என்று அல்-குர்ஆனிலோ அல்லது ஸஹீஹான ஹதீஸ்களிலோ எந்த செய்தியும் கிடையாது!
இமாம் ஸகரிய்யா அல்-அன்சாரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
ஒருவர் வுழூ செய்த பிறகு தன்னுடைய கையில் அல்லது காலில் ஏதேனும் ஒரு பகுதி வெட்டப்பட்டாலோ அல்லது அவர் தலை முடியை வெட்டினாலோ அல்லது நகம் வெட்டினாலோ அவர் அவருடைய ஒளு முறியாது!
(நூல் : ஷரஹ் அல்-பஃஜா: 1/93)
💟 வெட்டிய நகங்களை என்ன செய்ய வேண்டும் :
• வெட்டிய நகங்களை புதைப்பது அல்லது ஒரு குப்பைத் தொட்டியில் போடுவது நல்லது. கட்டாயமாக வெட்டிய நகங்களை புதைக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது! வெட்டிய நகங்களை புதைக்காமல் வீசினால் அதில் எவ்வித குற்றமும் இல்லை.
அஷ்ஷெய்க் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
ஒருவர் நகங்களை வெட்டியதன் பிறகு அவைகளை எறியலாம் அதில் குற்றம் இல்லை. அவைகளை புதைப்பது அல்லது புதைக்கும் போது குர்ஆன் ஓதுவது அவசியமில்லை மாறாக இவை மூட நம்பிக்கையாகும். அடிப்படை அற்ற விடயமாகும். மேலும் ஒரு ஆணோ பெண்ணோ நகங்களை வெட்டிய பிறகு அவற்றை எங்கு வீசினாலும் தவறில்லை.
(மஜ்மூஉ பதாவா இப்னு பாஸ்)
💟 நகம் வெட்டுவது சம்பந்தமாக மக்கள் மத்தியில் உள்ள மூடநம்பிக்கைகள் சில :
• இரவு நேரங்களில் நகம் வெட்டுவது கூடாது மூடநம்பிக்கை!
• வீட்டில் வைத்து நகம் வெட்டுவது தறித்திரியம். மூடநம்பிக்கை !
• வெள்ளிக்கிழமை அல்லது வியாழக்கிழமை நாளன்று நகம் வெட்டுவது விரும்பத்தக்கது! மூடநம்பிக்கை!
• வெட்டிய நகங்களை புதைப்பது கட்டாயம்; புதைக்காமல் வீசுவது பாவமான காரியம்.மூடநம்பிக்கை!
• நகங்களை புதைக்கும் போது கலிமா சொல்லி அல்லது குர்ஆன் ஓதி புதைக்க வேண்டும். மூடநம்பிக்கை!
• நகங்களை வெட்டும் போது அதன் ஒழுங்கு முறைப்படி வெட்ட வேண்டும். அது செல்வத்தை அதிகரிக்கும். மூடநம்பிக்கை!
• நாங்கள் மேலே கொடுத்து உள்ளது மிகவும் குறைவு தான் இன்னும் அதிகமாக நகம் வெட்டுவது சம்பந்தமாக மூடநம்பிக்கைகள் உள்ளன!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
(நூல் : புகாரி : 2697)
💟 இஸ்லாத்தை சரியான ஆதாரம் உடன் கற்று கொள்ளுங்கள் :
இமாம் அல் முஹத்திஸ் அல்-அல்பானீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நீ (ஸுன்னா) நபிவழியை அறிந்து கொள்; (பித்அத்) நூதனமானவைகளை அறிந்து கொள்வாய்; ஆனால் நீ பித்ஆக்களை அறிந்து கொண்டால் நபிவழியை உன்னால் அறிந்திட முடியாது.
(நூல்: ஸில்ஸிலத்துல் ஹுதா வன் நூர்: 715)
@அல்லாஹ் போதுமானவன் 💕 தோழர் பதிவு
No comments:
Post a Comment