பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, September 23, 2020

தன்னை விட வயதில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்யலாமா?

மார்க்க கேள்வி-பதில்

தன்னை விட வயதில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்யலாமா?

வயதில் அதிகமான பெண்ணையோ அல்லது தன்னை விட வயதில் குறைவான பெண்ணையோ. விதவைப் பெண்ணையோ, கன்னிப் பெண்ணையோ திருமணம் செய்து கொள்வதற்கு மார்க்கத்தில் தடையில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் நபியாவதற்கு முன்பாக தம்முடைய இருபத்தைந்தாம் வயதில் தம்மைவிட வயதில் மூத்தவரான அன்னை ஹதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். தாம் நபியான பிறகும் ஹதீஜா (ரலி) அவர்களுடன் பல்லாண்டுகள் வாழ்க்கை நடத்தியுள்ளார்கள். நபியவர்கள் தம்முடைய மனைவிமார்களில் ஹதீஜா (ரலி) அவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கையைத்தான் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வும், ஜிப்ரீலும், ஹதீஜா (ரலி) அவர்களுக்கு ஸலாம் சொல்லியனுப்பி சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி கூறும் அளவிற்கு சிறந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதோ கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு …அல்லது உணவு… அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டி ருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும், என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை பற்றி நற்செய்தி சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 3820

பின்வரும் ஹதீஸும் நபியவர்கள் ஹதீஜா (ரலி) அவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கையின் மகிமையை பறைசாற்றுகிறது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹாலா பின்த்து குவைலித் (ரலி) கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (கதீஜா ரலி அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அவர்கள் அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும் என்று சொன்னார்கள். உடனே நான் ரோஷமடைந்து எப்போதோ மரணமடைந்து விட்ட தாடைகள் சிவந்த ஒரு குறைஷிக் கிழவியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பதிலாக அவரை விடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்து விட்டானே (அப்படியிருக்க இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்) என்று கேட்டேன்.

நூல் : புகாரி 3821

மேலும் நபித்தோழர்களில் பலர் தம்மை விட வயது அதிகமான பெண்களைத் திருமணம் செய்துள்ளனர். எனவே இதற்கு மார்க்க அடிப்படையில் எந்தத் தடையும் இல்லை.

ஏகத்துவம்.

No comments:

Post a Comment