பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, September 23, 2020

வரதட்சணையை ஒழிப்போம்

குர்ஆன் விளக்கங்கள்

வரதட்சணையை ஒழிப்போம்

நாம் அடிக்கடி குழப்பிக் கொள்ளும் இரு விஷயங்கள் மஹர் மற்றும் வரதட்சணை. ஆனால் இவற்றில் குழப்பம் கொள்ள எவ்வித அவசியமோ தேவையோ கிடையாது. ஏனெனில் இரண்டும் ஒன்றுக்கொன்று நேரெதிரானவை. இரண்டும் தெளிவானவை. ஒன்று இறைவனின் கட்டளை, மற்றொன்று மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக ஏற்படுத்தியது. ஒன்று நேர்வழி, மற்றொன்று வழிகேடு. எனவே நாம் முதலில் மஹர் மற்றும் வரதட்சணையைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மஹர் கொடுத்து மணம் முடிக்க வேண்டும் என்பது நம் இறைவனின் கட்டளை. அதை பின்வரும் திருமறை வசனம் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது.

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் – அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.

(அல் குர்-ஆன் 4:4)

இந்த திருக்குர் ஆன் வசனம் அறியாத எந்த ஆணும் பெண்ணும் இருக்கமாட்டார்கள். ஒவ்வொரு இஸ்லாமியத் திருமணத்திலும் மிக மிக முக்கியமான அவசியமான விஷயமாக இருப்பது மஹர். மஹர் தொகையைத் தீர்மானித்துப் பெறும் உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது ஏனெனில் திருமண வாழ்வில் அதிகமாக இழப்பது பெண்கள் தாம். இதைக் கருத்தில் கொண்டு தான் இஸ்லாம் மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையைப் பெண்களுக்குக் கொடுத்துள்ளது. இது அப்பெண்ணிற்குப் பாதுகாப்பானதாக உள்ளது.

ஆண்கள், பெண்களுக்குக் கொடுத்து மணமுடிக்க வேண்டும் என்பதே நம் இஸ்லாமிய சட்டம். ஆனால் பெண்களிடமிருந்து வரதட்சணை வாங்கிவிட்டுப் பின்னர் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள் என்பது போன்ற எந்த விஷயமும் குர் ஆனிலோ ஹதீஸிலோ இடம் பெற்றிருக்கவில்லை. இவ்வாறிருக்கையில் வரதட்சணை வாங்கும் பழக்கம் இஸ்லாமியர்களிடையே எப்படி வந்தது எனும் கேள்வி எழலாம். வரதட்சணை வாங்குதல் என்பது மாற்று மதத்தவர்களின் செயல். தங்களது பெண் தன் கணவர் வீட்டிற்குச் செல்லும் போது சீதனத்துடனும், வரதட்சணையுடனும் தான் செல்ல வேண்டும் என்பதெல்லாம் அவர்களின் செயல்.

இதுவே முஸ்லிம்களிடையே வரதட்சணை வாங்கும் பழக்கம் இடம் பெற காரணமாகிவிட்டது.. அக்காலத்தில் மக்கள் செய்த இத்தகைய அறியாமைச் செயலை, இன்று தவறு என்று அறிந்திருந்தும் நாம் தொடர்வது மிகவும் இழிவிற்குறியதாகும். திருமணத்தின் அவசியமான விஷயமாக இருந்த மஹர் மறைந்து இப்போது வரதட்சனையே மிக முக்கியமாக பேசப்படுகிறது. இன்று பெரும்பாலான நாடுகளிலும் திருமணத்தின் போது பெண் வீட்டார்கள், மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் வரதட்சணையை நிறைவேற்ற வேண்டியது மிகவும் அவசியமாகிவிட்டது..

மஹர் கொடுத்து மணமுடிக்கும் வழக்கம் போய் இப்போதோ பெண் வீட்டாரிடமிருந்து என்னென்ன வாங்கலாம், எதையெல்லாம் சுரண்டலாம் என்பதே திருமணம் முடிவானவுடன் பையன் வீட்டாரின் மனதில் எழும் முதல் சிந்தனையாக உள்ளது. பெண் எவ்வளவு படித்திருந்தாலும், மார்க்கப் பற்று உடையவளாக இருந்தாலும், அழகானவளாகவே இருந்தாலும் அவர்களுக்கும் பெண்ணைப் பிடித்திருந்தாலும், தாங்கள் கேட்ட வரதட்சணையைத் தர சம்மதித்தால் மட்டுமே திருமணம் நடைபெறும் சூழல் உள்ளது. மார்க்கத்தில் இல்லாத ஒன்றைச் செய்வதில் சிறிதளவும் அச்சமின்றி மக்கள் உள்ளனர்.

புகாரி ஹதீஸ் 2697. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.

என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

இப்போதெல்லாம் பெண் பார்க்கச் செல்லும் போதே “முதலில் எத்தனை பவுன்” போடுவாங்க என்பதே முதல் கேள்வியாக உள்ளது. இன்னும் சிலர் இவ்வளவு பவுன் போடணும், சம்மதமா? என்றே நேரடியாகக் கட்டளையிடுகின்றனர். மேலும் அவர்கள் வீட்டில் இத்தனை வருடங்களாக ஒன்றுமே இல்லாதது போல், வீட்டு சாமான்கள் அனைத்தையும் அதாவது, கட்டில், மெத்தை, மிக்சி, வாசிங்மெஷின், டி.வி, பாத்திரங்கள், மாப்பிள்ளைக்கு பைக், இன்னும் கொஞ்சம் வசதியாக இருந்தால் கார் முதல் கல்யாண செலவு வரை அனைத்தையும் கேட்பார்கள்.

ஆனால் இங்கிதமின்றி அவர்கள் அளிக்கும் வரதட்சணை லிஸ்டிற்கு அவர்கள் அளிக்கும் சமாதானம், “எல்லாம் உங்க பொண்ணு வசதியா இருக்கனும்னு தான்…” சிந்தனை அறவேயற்ற சமாளிப்பு. நம் வீட்டிற்கு வரும் விருந்தாளிக்குக் கூட அவர்களை நன்முறையில் உபசரிக்க நாம் வசதிகள் செய்து கொடுக்கிறோம். இதற்கு அவர்களிடம் எந்த பணமும் லாபமும் பெறாத போது, நம் வீட்டில் நம் குடும்பத்தில் ஒருவராக வாழ வரும் பெண்ணிடமே வரதட்சணை பெற்று, அவள் பெயரைக் கூறி நம் வீட்டிற்கு வசதி வாய்ப்புகளை அதிகரிப்பது சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் முட்டாள்தனமாகும்.

இப்போ உள்ள காலங்களில் எல்லாம் மாப்பிள்ளைக்கு தனி விலை….Doctor-ஆக இருந்தால் 100 பவுன், Engineer-ஆக இருந்தால் 75 பவுன்… இப்படி மணமகள் Doctor-ஆகவோ Engineer-ஆகவோ நல்ல பதவியில் இருந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். அவர்களும் இவ்வளவு கொடுத்தே தான் ஆகவேண்டும்.

மணமகனிடம் யாரேனும், ”வரதட்சணை வாங்காதப்பா.. தவறு” என்று சொன்னால், “நான் வாங்கல, எங்க அம்மா தான் கேட்கிறாங்க” என்று தப்பித்து விடுகின்றனர்.. தவறு என்று தெரிந்தால் தடுக்க வேண்டியது தானே? அம்மா பேச்சை இதுவரை தட்டியதே இல்லை என்பது போல் பேசுவது.. பெண் வீட்டினரிடம் பெறும் அனைத்தையும் இவர்களும் சேர்ந்து தான் அனுபவிக்கின்றனர். வரதட்சணையாகப் பெறும் பைக்கை மாமியாரோ மாமனாரோ ஓட்டப்போவதில்லை. ஆனால் அம்மா ஒரு சாக்கு. அம்மாவைப் பேசவிட்டு இவர் வாங்கிக்கொள்வாராம், ஆனால் இவருக்கு அதில் எந்த சம்மந்தமும் இல்லையாம்..!! நம்பிவிட்டீர்களா???

தவறு என்று தெரிந்தும் அதைத் தொடர்வதோ, துணை நிற்பதோ நிச்சயமாகப் பாவம் தான். யார் சொன்னாலும் வரதட்சணை வாங்க மாட்டேன் என்பதில் ஆணும், யார் வற்புறுத்தினாலும் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று பெண் வீட்டாரும் உறுதியாக இருந்தால் மட்டுமே இந்நோயை வேருடன் அழிக்க முடியும்.

இன்னும் இதில் வருத்தப்பட வேண்டிய விசயம் என்னவெனில் இதைத் தடுக்க வேண்டிய ஜமாஅத்தார்களோ தடுக்காமல் ஊக்குவிக்கின்றனர். ஏழைப் பெண்ணாக இருந்தாலும் குறைந்தது 10 பவுனாவது போட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. ஜமாஅத்தார்களோ, இவ்வாறு கேட்பது தவறு என்று கூட எடுத்துச் சொல்லாமல் தள்ளி நின்று வேடிக்கையே பார்க்கின்றனர். இன்னும் சில ஜமாஅத்களில் “இவர்கள் எங்கள் ஜமாத்தைச் சேர்ந்தவர்களே! இவரது பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்யுங்கள்!” என்று கடிதம் எழுதித் தருகின்றனர்.

பெண் வீட்டார் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு யார் யார் உதவி செய்கிறார்கள் எனக் கேள்விபட்டுள்ளனரோ அவர்களுக்கு எல்லாம் அக்கடிதத்தை அனுப்பி உதவி செய்யும்படி கெஞ்சுகின்றனர். இந்த ஜமாத்தார்கள் நினைத்தால் அவர்களே இதைத் தடுக்க முடியும் (அ) மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசி “தவறு” எனப் புரிய வைக்க முடியும். புரியவைப்பது அவர்களது கடமையும் கூட. இவர்களே அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முடியும். வரதட்சணை வாங்குவது தவறு என நன்றாகத் தெரிந்தும் தடுக்காமல் ஊக்குவிக்கின்றனர். எனவே மக்களும் அதைத் தவிர்க்காமல் தாங்கள் செய்யும் தவறுகளில் நிலைத்து நிற்கின்றனர். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்ட பின் தீர்த்து வைக்க முயற்சிப்பது மட்டுமே ஜமாஅத்தின் கடமையல்ல.. அவர்களுக்குத் தக்க அறிவுரை கூறி பிரச்சினையில் சிக்கிக்கொள்வதிலிருந்து பாதுகாப்பதும் அவர்களது தலையாயக் கடமையாகும்.

இந்த இடத்தில் ஜமாஅத்தார்களுக்கு நாம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ஜமாஅத்தார்களே! நீங்கள் இல்லாமல் எந்தத் திருமணமும் நடப்பதில்லை. உங்கள் அனுமதி இல்லையென்றால் நீங்கள் கண்டிப்பாக வரதட்சணை வாங்கக் கூடாது என்று தடுத்தால் அதையும் மீறி யாரும் வாங்கப் போவதில்லை. வரதட்சணையை ஒழிப்பதில் உங்களின் பங்கு மிக முக்கியமானது. எனவே அதை உணர்ந்து செயல்படுங்கள். “வரதட்சணை வாங்கினால் உங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய மாட்டோம், உங்கள் திருமணத்தில் ஜாமத்தார் முன்னிலை வகுக்கமாட்டார்கள் என்று சொல்லிப் பாருங்கள். கண்டிப்பாக பல மக்கள் சிந்திக்கத் தொடங்கி திருந்த முயற்சிப்பார்கள். இன்ஷா அல்லாஹ்.

வரதட்சணையைத் தடுக்கும் இஸ்லாம் அப்பெண்ணிற்காக அவளது தந்தை மனமுவந்து கொடுக்கும் அன்பளிப்புகளை அனுமதித்துள்ளது.. அதற்கு நபி ஸல் அவர்கள் ஃபாத்திமா ரலி அவர்களுக்கு கொடுத்த அன்பளிப்பு சாட்சியாக உள்ளது என்பதை பின்வரும் ஹதீஸ் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மகள் ஃபாத்திமாவை திருமணம் முடித்துக் கொடுத்த போது ஒரு கனமான போர்வை, (தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ளும்) ஒரு தோல் துருத்தி, இத்கிர் என்ற புல் சருகு அடைக்கப்பட்ட ஒரு தலையனை ஆகியவற்றைக் கொடுத்து அனுப்பினார்கள் என்று அலி ரலி அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ 3331 மற்றும் இப்னுமாஜா அஹ்மத்)

முஸ்லிமல்லாதவர்களே இன்றைய காலங்களில் நிதர்சனத்தைப் புரிந்து, வரதட்சணையின் கொடூரப்பக்கத்தை உணர்ந்து பலர் வரதட்சணையின்றி புரட்சித் திருமணங்கள் நிகழ்த்துகின்றனர். ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே நம் இறைவன் நமக்காக மிகத் திறம்பட வகுத்துக் கொடுத்துள்ள சட்டங்களை நாம் பேணி நடப்பது நமக்கே நன்மை பயக்கும். வரதட்சணை ஒழிப்பில் உலகிற்கு என்றும் நாம் தான் முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

பெண்குழந்தைகளைப் பெற்றுப் பராமரிப்பவர்களைக் கண்ணியப்படுத்தும் மார்க்கம் இஸ்லாம். ஆனால் இன்று பெண்குழந்தை பிறந்தாலே, அதன் பெற்றொருக்குக் கவலை அதிகரித்துவிடுகிறது. இத்தகைய இன்னல்களை நம் சமூகத்திலிருந்து களையவும் மார்க்கத்தை நிலைநாட்டவும் நாம் எடுக்கும் முயற்சி சிறந்த பயனுள்ளதாக அமையும். திருமணம் என்பது இருமனங்கள் சேரும் உன்னதமான நிகழ்வு. திருமணத்தையும் வியாபாரமாக்குவதைத் தடுக்கும், எதிர்க்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. எனவே இஸ்லாமியர்களே, திருமணம் எனும் பந்தத்தை வரதட்சணை வாங்கி வாட விடாமல், மஹர் எனும் மணக்கொடையை மணப்பெண்ணிற்கு அளித்து மண வாழ்க்கையை தீன் வழியில் மகிழ்வுடன் மலரச்செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக… ஆமின்..

எழுதியவர்
உங்கள் சகோதரி நூர் அல் ஹயா

ஏகத்துவம்.

No comments:

Post a Comment