பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, September 8, 2010

நோன்புப் பெருநாள் தர்மம் (ஃபித்ரா)

நோன்புப் பெருநாள் தர்மம் (ஃபித்ரா)



ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.


முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.

ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.

நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.

ஃபித்ராவின் நோக்கம்

இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது.

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817

நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.

கொடுக்கும் நேரம்

மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503, 1509

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.

பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.

பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.

பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, “பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்” என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.

ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்” என்று நான் கூறினேன். அதற்கு அவன் “எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது” எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, “நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?” என்று கேட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்” என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்” என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து “உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகி றேன்” என்று கூறினேன். “எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்” என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, “உன் கைதி என்ன ஆனான்?” என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். “அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.

“இந்த ஹதீஸில் ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான் ஜகாத் என்று தான் கூறப்பட்டுள்ளது. இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத் திரட்டுவதையே குறிக்கிறது. ஃபித்ராவை குறிக்கவில்லை” என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும்.

ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல. அன்றாடம் திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் ‘ரமளான் ஜகாத்’ என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும்.

இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற ஹதீஸ் நஸாயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத் தினார்கள்” என்பது ஃபித்ராவைத் தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது.

எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப் பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது.

எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்திருக்கிறது. திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது.

ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (அல்லது கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ரா வைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.

நபித் தோழர்கள் நோன்புப் பெரு நாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551-வது ஹதீஸ் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.

எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன் கடைசி நேரம் உள்ளது.

www.tntj.net

Saturday, September 4, 2010

தஸ்பீஹ் தொழுகை கூடுமா ஹதீஸில் ஆதாரம் உள்ளதா?

தஸ்பீஹ் தொழுகை கூடுமா ஹதீஸில் ஆதாரம் உள்ளதா?


பதில்:

இஸ்லாமிய கடமைகளில் கூடுதலாக நிறைவேற்ற வேண்டும் என எண்ணி இஸ்லாமியர்கள் சிலர், மார்க்கம் சொல்லித்தராத பல வணக்கங்களைச் செய்து வருகின்றனர். உதாரணமாக பராஅத் நோன்பு, மிஃராஜ் நோன்பு. இவற்றுக்கு எவ்வித ஆதாரமும் மார்க்கத்தில் கிடையாது. இதைப் போன்று பலவீனமான இட்டுகட்டப்பட்ட சில செய்திகளை அடிப்படையாகக் கொண்டும் சில வணக்கங்களைச் செய்கின்றனர். அவற்றில் ஒன்று தான் தஸ்பீஹ் தொழுகை. இந்தத் தஸ்பீஹ் தொழுகையைப் பற்றி என்னென்ன செய்திகள் கூறப்படுகின்றன என்ற முழுவிவரத்தையும் நாம் பார்ப்போம்.

நேரம்

இத்தொழுகையை லுஹர் நேரம் வரும் போது தொழ வேண்டும். முடியாதவர்கள் சாத்தியமான நேரத்தில் தொழலாம்.

இத்தொழுகையை தினமும் தொழ வேண்டும். முடியாதவர்கள் வாரத்தில் ஒருநாள் தொழவேண்டும். அதற்கும் முடியாதவர்கள் மாதத்தில் ஒருநாள் தொழ வேண்டும். அதற்கும் முடியாதவர்கள் வருடத்தில் ஒருநாள் தொழ வேண்டும். அதற்கும் முடியாதவர்கள் வாழ்நாளில் ஒரு நாள் தொழ வேண்டும்.

சிறப்பு

இத்தொழுகையைத் தொழுபவரின் பாவங்கள் உலக நாட்கள் அளவிற்கு இருந்தாலும் வானத்தின் நட்சத்தி ரங்கள் அளவிற்கு இருந்தாலும் மழைத் துளியளவிற்கு இருந்தாலும் மன்னிக்கப்படும்.

தொழும் முறை

முந்நூறு தஸ்பீஹ்களை நான்கு ரக்அத்தில் குறிப்பிட்ட முறையில் செய்வதுதான் தஸ்பீஹ் தொழுகையாகும்.

முதல் ரக்அத்தில் ஸனா ஓதியவுடன் 15 தடவை ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று கூறவேண்டும். பின்னர் கிராஅத் ஓதிய பிறகு ருகூவுக்கு முன்னர், நிலையில் 10 தடை மேற்சொன்ன தஸ்பீஹை ஓதவேண்டும். பின்னர் ருகூவில் எப்போதும் ஓதும் தஸ்பீஹுக்குப் பின் மேற்சொன்ன தஸ்பீஹை 10 தடவை ஓதவேண்டும். பின்னர் ருகூவிலிருந்து எழுந்து 10 தடவையும், ஸஜ்தாவில் 10 தடவையும் இரண்டு இருப்பிற்கு இடையில் 10 தடவையும், இரண்டாவது ஸஜ்தாவில் 10 தடவையும் மொத்தம் ஒரு ரக்அத்தில் 75 தடவை ஓத வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதும் போது மொத்தம் நான்கு ரக்அத்தில் 300 தடவை ஏற்படும்.

மேற்கண்டவாறு தஸ்பீஹ் தொழுகையைப் பற்றி சிலர் குறிப்பிடுகின்றனர். இதற்குரிய ஆதாரங்கள் உள்ளனவா? என்பதை நாம் ஆய்வு செய்வோம்.

இத்தொழுகை தொடர்பாக அபூராஃபிவு (ரலி), இப்னுஅப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அலீ (ரலி), இப்னு உமர்(ரலி), ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி), ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரலி), உம்முஸலமா(ரலி), அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர். அவற்றின் தொகுப்பைக் கீழே தருகிறோம்.

1. அபூ ராஃபிவு (ரலி) அறிவிக்கும் செய்தி

நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) யை நோக்கி, ''என் பெரிய தந்தையே! உங்களுடன் உள்ள உறவுக் கடனை நிறைவேற்றட்டுமா? உங்களுக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் வழங்கட்டுமா? உங்களுக்கு நான் பயனுள்ளதைக் கூறட்டுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி), ''ஆம்! அல்லாஹ்வின் தூதரே!'' என்றார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''என் பெரிய தந்தையே! நீங்கள் நான்கு ரக்அத்கள் தொழுங்கள்! ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து அத்தியாயத்தையும் இன்னொரு அத்தியாயத்தையும் ஓதுங்கள்!
ஓதி முடித்ததும் அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ் வலாயிலாஹ இல்லல்லாஹ் என்று ருகூவிற்கு முன் 15 தடவை கூறுவீராக! பின்னர் ருகூவு செய்து அதில் 10 தடவை அதனைக் கூறுவீராக! பின்னர் தலையை உயர்த்தி அதிலும் பத்து தடவை கூறுவீராக! பின்னர் ஸஜ்தாச் செய்து அதிலும் பத்து தடவை கூறுவீராக! பின்னர் தலையை உயர்த்தி, அதிலும் 10 தடவை கூறுவீராக. பின்னர் ஸஜ்தா செய்து அதிலும் 10 தடவை அதனை கூறுவீராக! பின்னர் தலையை உயர்த்தி எழுவதற்கு முன்னால் பத்து தடவை கூறுவீராக!

ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வாறு எழுபத்து ஐந்து தடவைகள், நான்கு ரக்அத்துகளிலும் மொத்தம் முன்னூறு தடவைகள் செய்தால் அடர்ந்த மணல் எண்ணிக்கையளவு உமது பாவங்கள் இருந்தாலும் அல்லாஹ் உம்மை மன்னித்து விடுவான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி) ''அல்லாஹ்வின் தூதரே! தினமும் இதைச் செய்ய யாருக்கும் இயலுமா?'' என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''தினமும் உமக்குச் செய்ய இயலாவிட்டால் வாரம் ஒரு முறை செய்வீராக! ஒரு வாரத்தில் ஒரு முறை செய்ய இயலாவிட்டால் ஒரு மாதத்தில் ஒரு தடவை செய்வீராக!'' இவ்வாறு சொல்லிக் கொண்டே வந்து ஒரு வருடத்தில் ஒரு தடவை செய்யுமாறு கூறினார்கள்.

அறிவிப்பவர்:அபூராஃபிவு (ரலி), நூல் திர்மிதீ (444)
இதே செய்தி இப்னுமாஜா (1376) ஹதீஸாகவும் இடம்பெற்றுள்ளது.

2. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி

நபி (ஸல்) அவர்கள், அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களைப் பார்த்து, ''அப்பாúஸ! என் பெரிய தந்தையே! நான் உங்களுக்கு வழங்கட்டுமா? அன்பளிப்பு கொடுக்கட்டுமா? உங்களுக்கு கைமாறு இல்லாமல் கொடுக்கட்டுமா? உங்களுக்குப் பத்து விஷயங்களை கற்றுக்கொடுக்கட்டுமா? அதைச் செய்தால், நீங்கள் முன்னால், பின்னால், புதிதாக செய்த, பழமையில் செய்த, வேண்டுமென்றே செய்த, தவறுதலாக செய்த, சிறிய, பெரிய, இரகசியமாக செய்த, பகிரங்கமாகச் செய்த இந்தப் பத்து வகையான பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான்.

நீங்கள் நான்கு ரக்அத்கள் தொழ வேண்டும். அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் ஃபாத்திஹா அத்தியாயமும் இன்னொரு அத்தியாயமும் ஓத வேண்டும். முதல் ரக்அத்தில் ஓதுதல் முடிந்ததும் நீர் நிலையில் இருக்கும் போது ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹ வல்லாஹு அக்பர் என்று 15 தடவை கூறுங்கள். பிறகு ருகூவு செய்யுங்கள். ருகூவு செய்த நிலையில் மேற்சொன்ன தஸ்பீஹை 10 தடவை சொல்லுங்கள். பின்னர் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி 10 தடவை அந்த தஸ்பீஹை கூறுங்கள்.

பின்னர் ஸஜ்தாவிற்குச் செல்லுங்கள். அங்கு ஸஜ்தா செய்த நிலையில் 10 தடவை அந்த தஸ்பீஹை செய்யுங்கள். பின்னர் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தி அந்த தஸ்பீஹை 10 தடவை கூறுங்கள். பின்னர் ஸஜ்தா செய்து அந்த தஸ்பீஹை 10 தடவை கூறுங்கள். பின்னர் தலையை உயர்த்தி அந்த தஸ்பீஹை 10 தடவை கூறுங்கள். இது ஒவ்வொரு ரக்அத்திலும் (மொத்தம்) 75 ஆகும். இதை நான்கு ரக்அத்திலும் செய்யுங்கள்.

ஒவ்வொரு நாளும் ஒரு தடவை செய்ய முடிந்தால் அவ்வாறே செய்யுங்கள். அவ்வாறு முடியவில்லையானால் வாரத்திற்கு ஒரு முறை செய்யுங்கள். அதுவும் முடியவில்லையானால் மாதத்தில் ஒரு தடவை செய்யுங்கள். அதுவும் முடியவில்லையானால் வருடத்தில் ஒரு முறை செய்யுங்கள். அதுவும் முடியவில்லையானால் வாழ்நாளில் ஒரு முறை செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் அபூதாவூத் (1105)

3.அனஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி

உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். ''தொழுகையில் நான் ஓதுவதற்குச் சில வாசகங்களை எனக்குக் கற்றுத் தாருங்கள்'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''பத்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூறு! பத்து தடவை ஸுப்ஹானல்லாஹ் என்று கூறு! பத்து தடவை அல்ஹம்து லில்லாஹ் என்று கூறு! பின்னர் நீ விரும்பியதைக் கேள்!'' என்றார்கள். நான் ''சரி! சரி!'' என்றேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதீ (443)

4.அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அறிவிக்கும் செய்தி

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நீ என்னிடம் நாளை வா! நான் உனக்குப் பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பளிப்பை வழங்குகிறேன். உனக்கு நன்மையைத் தருகிறேன். உனக்கு ஒரு கொடையை அளிக்கின்றேன் என்றார்கள். எனக்கு ஏதோ அன்பளிப்பைத் தருவார்கள் என்று எண்ணினேன்.

(அப்போது) பகல் சாயும் போது நீ எழு! நான்கு ரக்அத்கள் தொழு! (என்று கூறி முன்னர் அபூ ராஃபிவு (ரலி) அறிவித்ததைப் போன்று கூறினார்கள்.) பின்னர் உனது தலையை இரண்டாவது ஸஜ்தாவிலிருந்து உயர்த்தி சரியாக அமர்ந்து கொள்! ஸுப்ஹானல்லாஹ் 10 தடவை, அல்ஹம்து லில்லாஹ் 10 தடவை, அல்லாஹு அக்பர் 10 தடவை, லாயிலாஹ இல்லல்லாஹ் 10 தடவை கூறாமல் எழாதே! பின்னர் இதைப் போன்று நான்கு ரக்அத்திலும் செய்!

இவ்வாறு செய்தால் இவ்வுலகத்தில் உள்ளவர்களிலேயே மிகப்பெரிய அளவு பாவத்தை நீ செய்திருந்தாலும் உனது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றார்கள். அப்போது நான் ''அந்நேரத்தில் தொழ முடியவில்லையானால்?'' என்று கேட்டதற்கு, ''பகலிலோ, இரவிலோ ஏதாவது ஒரு நேரத்தில் தொழுது கொள்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: அபூதாவூத் (1105)

5. அலீ (ரலி) அறிவிக்கும் செய்தி

நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அலீயே! உனக்கு அன்பளிப்பு வழங்கட்டுமா? என்றார்கள்.....(என்று முழு ஹதீஸையும் குறிப்பிட்டார்கள்) அப்போது நான் திஹாமா மலையளவு தங்கத்தை எனக்குத் தருவார்கள் என்று எண்ணினேன். அப்போது நீ தொழுகையில் நிற்கும் போது ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹு என்று 15 தடவை கூறு! என்று கூறினார்கள்........ (பின்னர் தஸ்பீஹ் தொடர்பான முழுமையான செய்தியைக் குறிப்பிட்டார்கள்)

அறிவிப்பவர்: குஃப்ராவின் அடிமை உமர்,
நூல்: தாரகுத்னீ (மவ்ஸுஆ அல்ஹாபிழ் இப்னு ஹஜர்,பாகம்:1 பக்கம்:643)

6.இப்னு உமர் (ரலி)அறிவிக்கும் செய்தி

நபி (ஸல்) அவர்கள், ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களை எத்தியோப்பியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது நபி (ஸல்) அவர்கள், அவர்களைக் கட்டியணைத்தார்கள், இரு கண்களுக்கு இடையில் முத்தமிட்டார்கள். பின்னர் உமக்கு அன்பளிப்பு வழங்கவா? நற்செய்தி கூறவா? உபகாரம் செய்யவா? காணிக்கைத் தரவா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஆம் என்றேன். நான்கு ரக்அத்கள் தொழு! அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து அத்தியாத்தையும் ஒரு (துணை) அத்தியாயத்தையும் ஓது! பின்னர் ஓதி முடித்ததும் நீ நின்ற நிலையில் ருகூவுக்கு முன்னர் ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று 15 தடவை கூறு! பின்னர் ருகூவு செய்! பின்னர் அதை 10 தடவை கூறு! பின்னர் ருகூவில் அதை 10 தடவை கூறு! இரண்டாம் ரக்அத்தை துவங்குவதற்கு முன்னர் இந்த ரக்அத் முழுவதற்கும் இவ்வாறே செய்து கொள்! நான்கு ரக்அத்துகளை நீ முடிக்கின்ற வரை நான் வர்ணித்ததைப் போன்று (மீதமுள்ள) மூன்று ரக்அத்திலும் (இவ்வாறே செய்!)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: ஹாகிம் (1196)

7. ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி)அறிவிக்கும் செய்தி

உமக்கு அன்பளிப்பு வழங்கவா? உபகாரம் செய்யவா? தானம் செய்யவா? (இந்த நற்செயலுக்கு) உன்னைத் தேர்வு செய்யவா? வழங்கட்டுமா? வழங்கட்டுமா? என்றார்கள். அப்போது நான் பஹ்ரைன் நாட்டிலிருந்து வந்த செல்வத்தை வழங்குவார்கள் என்று எண்ணினேன்.

நீ நான்கு ரக்அத்கள் தொழு! ஒவ்வொரு ரக்அத்திலும் பாத்திஹா அத்தியாயத்தையும் மற்றொரு அத்தியாயத்தையும் ஓது! பின்னர் அல்ஹம்து லில்லாஹி வஸுப்ஹானல்லாஹி வல்லாஹு அக்பர் வலாயிலாஹ இல்லல்லாஹு இதை ஒருமுறை என கணக்கிட்டு 15 தடவை கணக்கிட்டு(ஓதிக்) கொள். பின்னர் நீர் ருகூவு செய்த நிலையில் அதை 10 தடவை கூறு! பிறகு தலையை உயர்த்தி நின்ற நிலையில் அதை 10 தடவை கூறு! பின்னர் ஸஜ்தா செய்த நிலையில் அதை 10 தடவை கூறு! பின்னர் தலையை உயர்த்தி அமர்ந்த நிலையில் அதை 10 தடவை கூறு! பின்னர் ஸஜ்தா செய்து ஸஜ்தா செய்த நிலையில் அதை 10 தவை கூறு! பின்னர் தலையை உயர்த்தி அமர்ந்த நிலையில் அதை 10 தடவை கூறு! இவை மொத்தம் 75 தடவையாகும். இதைப் போன்று மீதமுள்ள மூன்று ரக்அத்திலும் செய். இவற்றின் மொத்தம் 300 ஆகும். இந்த தஸ்பீஹை (1.அல்ஹம்து லில்லாஹ் 2. ஸுப்ஹானல்லாஹ் 3.அல்லாஹு அக்பர் 4. லாயிலாஹ இல்லல்லாஹு என்று நான்காக) பிரித்து எண்ணினால் அதனின் மொத்தம் 1200 ஆகும்.

பாத்திஹா அத்தியாயத்திற்கு பிறகு இருபது ஆயத்துகள் அல்லது அதை விட அதிகமாக ஓது! இத்தொழுகையை பகல் அல்லது இரவில் அல்லது வாரத்தில் ஒரு நாள், அல்லது மாதத்தில் ஒரு நாள், வருடத்தில் ஒருநாள் அல்லது வாழ்நாளில் ஒரு நாள் தொழு! (அவ்வாறு தொழுதால்) உனது பாவங்கள், வானத்தின் நட்சத்திரம் அளவிற்கு அல்லது மழைத் துளிகள் அளவிற்கு அல்லது அதிகமான மணல் அளவிற்கு அல்லது காலத்தின் நாட்கள் அளவிற்கு இருந்தாலும் அல்லாஹ் உனது பாவங்களை மன்னிப்பான்.

அறிவிப்பவர்: ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி)
நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக் (5004)

8. ஃபழ்ல் பின் அப்பாஸ் (ர)அறிவிக்கும் செய்தி

நான்கு ரக்அத்கள் அதை நீ செய்தால் ....... (என்று தொடங்கும் தஸ்பீஹ் தொழுகையைப் பற்றிய ஹதீஸை) பழ்ல் பின் அப்பாஸ் (ர) அவர்கள் வழியாக அபூ ராஃபிவு அறிவிக்கும் செய்தியை அபூ நுஅய்ம் அவர்கள் அல்குர்பான் என்ற நூல் குறிப்பிடுகிறார்கள். (மவ்ஸுஆ அல்ஹாபிழ் இப்னு ஹஜர், பாகம் 1. பக்கம் 642)

9. உம்மு ஸலமா (ர)அறிவிக்கும் செய்தி

நபி (ஸல்) அவர்கள் எனக்குரிய நாளில் இருந்த போது நண்பகல் அப்பாஸ் (ர) அவர்கள் வந்தார்கள். அப்போது யார் இவர் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்பாஸ் பின் அப்துல் முத்தப் என்று தோழர்கள் கூறினார்கள். ''அல்லாஹ் மிகப் பெரியவன். இந்த நேரத்தில் அவர் வந்ததற்கான காரணம் என்ன?'' என்று கேட்டார்கள். அப்போது அப்பாஸ் (ர) அவர்கள் நுழைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ''எனது தந்தையின் உடன்பிறந்தவரே! இந்த நேரத்தில் என்ன காரியமாக வந்திருக்கிறீர்கள்?'' (என்று கூறி தஸ்பீஹ் தொழுகையில் வந்துள்ளதைப் போன்று) கூறினார்கள் என உம்மு ஸலமா (ர) அறிவித்த செய்தியை அபூ நுஅய்ம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

(மவ்ஸுஆ அல்ஹாபிழ் இப்னு ஹஜர், பாகம்1, பக்கம் 643 )

9. அப்பாஸ் பின் அப்துல் முத்தப் (ர) அறிவிக்கும் செய்தி

உமக்கு அன்பளிப்பு வழங்கவா? உபகாரம் செய்யவா? தானம் செய்யவா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இதற்கு முன்னர் யாருக்கும் வழங்காத உலகப் பொருளிருந்து ஏதாவது ஒன்றை தருவார்கள் என்று நான் எண்ணினேன்.

அப்போது நான்கு ரக்அத்தில் உனக்கு நான் கற்றுத்தருவதை அதில் கூறினால் அல்லாஹ் உன்னை மன்னிப்பான். (தொழுகையை) அல்லாஹ் அக்பர் என்று கூறி ஆரம்பம் செய். பிறகு பாத்திஹா அத்தியாயத்தையும் மற்றொரு அத்தியாயத்தையும் ஓது.

பின்னர் ஸுப்ஹானல்லாஹ் வல்ஹம்து ல்லாஹ் வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று 15 தடவை கூறு. நீ ருகூவு செய்யும் போது இதைப்போன்று 10 தடவை கூறு. ஸமிஅல்லாஹ மன் ஹமிதா என்று கூறும் போது அதைப் போன்று 10 தடவை கூறு. ஸஜ்தா செய்யும் போது அதைப்போன்று 10 தடவைக் கூறு. ஸஜ்தாவிருந்து தலையை உயர்த்தி நிலைக்கு வருவதற்கு முன்னால் அதைப்போன்று 10 தடவைக் கூறு.

பின்னர் இரண்டாவது ரக்அத்தில் முதல் ரக்அத்தில் செய்ததைப் போன்று செய். மேலும் இருப்பில் அமரும் போது அத்தஹிய்யாத் ஓதுவதற்கு முன்னால் அதனை 10 தடவை சொல். இதைப் போன்று மீதமுள்ள இரண்டு ரக்அத்திலும் செய்து கொள்.

(இத்தொழுகையை) ஒவ்வொரு நாளும் செய்ய முடியுமானால் (அவ்வாறே செய்) முடியவில்லையானால் வாரத்தில் ஒரு முறை. அதுவும் முடியவில்லையானால் மாதத்தில் ஒரு முறை. அதுவும் முடியவில்லையானால் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை. அதுவும் முடியவில்லையானால் வருடத்தில் ஒருமுறை (தொழுது கொள்)

அறிவிப்பவர்: அப்பாஸ் பின் அப்துல் முத்தப் (ர)

நூல்: அல்மவ்லூஆத் இப்னுல் ஜவ்ஸீ

தஸ்பீஹ் தொழுகையை தொடர்பாக இத்தனை செய்திகள் இடம் பெற்றுள்ளன. இச்செய்திகளை ஆய்வு செய்த அறிஞர்கள், தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக நான்கு விதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

1. தஸ்பீஹ் தொழுகை மார்க்கத்தில் உள்ளதுதான் அதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.

2. தஸ்பீஹ் தொழுகை தொடர்பான செய்திகள் இட்டுக்கட்டப்பட்டவை. எனவே மார்க்கத்தில் தஸ்பீஹ் தொழுகை என்பது இல்லை.

3. தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக வரும் செய்திகள் பலவீனமானவையாக இருந்தாலும் பல வழிகளில் இடம்பெறுவதால் அது ஹஸன் எனும் தரத்தில் அமைகிறது.

4. தஸ்பீஹ் தொழுகை தொடர்பான அனைத்து செய்திகளும் பலவீனமானதாகும். எனவே பலவீனமான செய்தியை ஆதாரமாகக் கொண்டு செயல்படக் கூடாது.

இந்த நான்கு கருத்துக்களில் எது சரியானது என்பதை விரிவான விளக்கத்துடன் பார்ப்போம்.

தஸ்பீஹ் தொழுகை மார்க்கத்தில் உண்டு என் வாதிடுவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்களில் ஒன்றாக நாம் முதலாவதாக எடுத்து வைத்த அபூராஃபிவு (ர) அவர்களின் ஹதீஸின் தரத்தைப் பற்றி ஆய்வு செய்வோம்.

அபூராஃபிவு (ர) அவர்கள் அறிவிக்கும் செய்தி திர்மிதீ, இப்னுமாஜா, இமாம் பைஹகீ அவர்களின் அஸ்ஸுனுஸ் ஸுக்ரா, இமாம் தப்ரானீ அவர்களின் அல்முஃஜமுல் கபீர் ஆகிய நான்கு நூற்களில் இடம்பெற்றுள்ளது. அனைத்து நூற்களிலும் மூஸா பின் உபைதா பின் நஷீத் அர்ரபதீ என்பவரே இடம் பெறகிறார்.

இதில் இடம்பெறும் மூஸா பின் உபைதா பின் நஷீத் அர்ரபதீ என்பவர் நம்பகமானவரா? ஆதாரத்திற்கு ஏற்றுக்கெள்ளும் அளவிற்கு நம்பிக்கைக்குரியவரா? என்பதை பற்றி ஹதீஸ்கலை வல்லுநர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

முதலில் இச்செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைக் காண்போம்.

மூஸா பின் உபைதா என்பவர் நல்லவர் எனினும் அவரின் நினைவாற்றல் (குறைவு) காரணத்தினால் ஹதீஸ் துறையில் பலவீனமாக்கியுள்ளனர். (நூல்: திர்மிதீ 1078)

மூஸா பின் உபைதா அர்ரபதீ என்பர் அபூ அப்துல் அஜீஸ் என்ற புனைப்பெயர் சூட்டப்பட்டவர். இவரின் நினைவாற்றல் காரணமாக யாஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் மற்றும் இவரல்லாதவர்களும் விமர்சித்துள்ளனர். மூஸா பின் உபைதா என்பவர் ஹதீஸ் துறையில் பலவீனமாக்கப்பட்டவர். யஹ்யா பின் ஸயீத் மற்றும் இவரல்லாதவர்களும் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். (நூல்: திர்மிதீ3262)

இவரைப்பற்றி இமாம் புகாரியிடம் இமாம் திர்மிதீ அவர்கள் கேட்டபோது...
முஜாலித், மூஸா பின் உபைதா ஆகியோரின் ஹதீஸ்களை நான் எழுதிக் கொள்ளமாட்டேன் என இமாம் புகாரீ குறிப்பிட்டார்கள். (நூல்: இலலுத் திர்மிதீ அல்கபீர், பாகம் 1, பக்கம் 309)

அபூராஃபிவு (ரலி) அவர்கள் வழியாகப் பதிவு செய்த மற்றொரு இமாம் பைஹகீ அவர்கள் தனது அஸ்ஸுனுல் குப்ரா என்று நூலில் இவர் இடம்பெறும் வேறொரு செய்தியைப் பற்றி கூறும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

இச்செய்தியை மூஸா பின் உபைதா தனித்து அறிவிக்கிறார். அவர் பலவீனமானவராவார். (நூல்: பைஹகீ பாகம் 5, பக்கம் 117)

இமாம் புகாரி அவர்கள் தனது தாரிகுல் கபீர் என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

மூஸா பின் உபைதா பின் நஷீத் என்பவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர். இவ்வாறு அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் கூறினார்கள். அந்நாட்களில் (அவர் வாழும் நாட்களில்) அவரை விட்டும் நாங்கள் தவிர்ந்து வந்தோம் என்று கத்தான் அவர்கள் குறிப்பிட்டார்கள். (தாரிகுல் கபீர் பாகம் 7, பக்கம் 291) இதே கருத்தை இமாம் புகாரீ, அவர்களின் இயற்றிய இன்னொரு நூலான அத்தாரிகுஸ் ஸகீரிலும் குறிப்பிட்டுள்ளார்கள் (பாகம் 2, பக்கம்93)

மூஸா பின் உபைதா என்பவரை கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் முக்கியமானவர் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ஆவார்கள். அவர்களின் விமர்சனத்தைக் காண்போம்.

எனது கருத்துப்படி மூஸா பின் உபைதா என்பவரின் அறிவிப்புகளை பதிவு செய்வது அனுமதி இல்லை என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: அல்காமில் லி இப்னு அதீ பாகம் 6, பக்கம் 334)

மூஸா பின் உபைதா என்பவரின் அறிவிப்புகள் எழுதப்படாது. அவரிடமிருந்து எந்த ஒன்றையும் நான் வெளியிடமாட்டேன். அவரின் ஹதீஸ்கள் மறுக்கப்படவேண்டியவை என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: அல்காமில் லி இப்னு அதீ பாகம் 6, பக்கம் 334)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மூலம் மூஸா பின் உபைதா என்பவர் அறிவித்த ஹதீஸை கடந்து சென்ற போது இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் இது மூஸா பின் உபைதா என்பவரின் சரக்கு என்று கூறிவிட்டு தனது வாயை மூடி கோணலாக்கியவாறு தனது கையை உதறினார்கள். மேலும் இவர் ஹதீஸை (முறைப்படி) மனனம் செய்தவரில்லை என்றும் குறிப்பிட்டார்கள். (நூல்: அல்காமில் லி இப்னு அதீ பாகம் 6, பக்கம் 334)

மூஸா பின் உபைதா, இஸ்ஹாக் பின் அபீஃபர்வா, ஜுவைபிர், அப்துர்ரஹ்மான் பின் ஸியாத் ஆகிய நான்கு நபர்களின் செய்திகள் எழுதப்படாது என்று அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: லுஅஃபாவுல் உகைலீ பாகம் 3, பக்கம் 161)

மூஸா பின் உபைதா அர்ரபதீ, அப்துர்ரஹ்மான் பின் ஸியாத் அல்இஃப்ரிகீ ஆகியோரின் ஹதீஸ்களை நான் எழுதமாட்டேன் என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: ஹாகிம், பாகம் 2, பக்கம்251)

அவருடைய ஹதீஸ் என்னிடத்தில் எந்த மதிப்பும் அற்றது என்று அஹ்மத் பின் ஹன்பல் கூறினார்கள். (நூல்: தஹ்தீபுத்தஹ்தீப் பாகம்10, பக்கம் 320)

இமாம் இப்னுஹிப்பான் அவர்கள் மூஸா பின் உபைதாவைப் பற்றி...
உறுதியான நினைவாற்றல் கோட்டைவிடுபவர் எதற்கு அடிப்படை இருக்காதோ அப்படிப்பட்ட செய்திகளை யூகமாகக் கொண்டு வருவார். நம்பகத்திற்குப் பாத்திரமானவர்களின் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு அடிப்படையற்ற செய்தியை அறிவிப்பார். எனவே தகவல் என்ற கோணத்தில் இவரை ஆதாரமாகக் கொள்ளுதல் நீங்கிவிடுகிறது. அவர் தன் அளவில் சிறந்தவராக இருந்தாலும் சரியே (நூல்: மஜ்ரூஹீன் பாகம் 2, பக்கம் 235)

இமாம் இப்னு மயீன் அவர்கள் மூஸா பின் உபைதாவைப் பற்றி...
மூஸா பின் உபைதா பலவீனமானவர். (நூல்: தாரீக் இப்னு மயீன் பாகம் 1, பக்கம் 199)

இவருடைய ஹதீஸ்களை ஆதாரமாக கொள்ளக்கூடாது என்று இப்னுமயீன் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: தஹ்தீபுத்தஹ்தீப் பாகம் 10, பக்கம்320)

மூஸா பின் உபைதா என்பவர் எந்த மதிப்பும் இல்லாதவர் என்று இப்னு மயீன் குறிப்பிட்டார்கள். (நூல்: தஹ்தீபுத்தஹ்தீப் பாகம் 10, பக்கம்320)

மூஸா பின் உபைதா என்பவரைப் பற்றி இன்னும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

மூஸா பின் உபைதா என்பவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவராவார். இவர் மறுக்கப்படவேண்டிய ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என்று அலீ பின் அல்மதீனீ அவர்களும் ஹதீஸ்துறையில் வலிமை வாய்ந்தவர் இல்லை என்று அபூஸுர்ஆ அவர்களும் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று அபூஹாத்தம் அவர்களும் பலவீனமானவர் என்று ஒரு சந்தர்பத்திலும் இன்னொரு சந்தர்பத்தில் நம்பகமானவர் இல்லை என்றும் இமாம் நஸயீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: தஹ்தீபுத்தஹ்தீப் பாகம்10, பக்கம் 320)

இமாம் அஹ்மத் அவர்களிடம் மூஸா பின் உபைதா என்பவர் எந்த மதிப்பும் அற்றவர் என்று ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை கூற நான் செவியுற்றுள்ளேன் என அபூதாவூத் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: தஹ்தீபுல் கமால் பாகம் 29, பக்கம் 112)

இப்போது அனஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் அறிவிக்கும் செய்திகளின் தரத்தைக் காண்போம்.

உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். தொழுகையில் நான் ஓதுவதற்கு சில வாசகங்களை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பத்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூறு! பத்து தடவை ஸுப்ஹானல்லாஹ் என்று கூறு! பத்து தடவை அல்ஹம்து லில்லாஹ் என்று பத்து தடவை கூறு! பின்னர் நீ விரும்பியதைக் கேள்! என்றார்கள் நான் சரி சரி என்றேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதீ 443

இதே செய்தி ஹாகிமிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. (ஹதீஸ் எண்1191)

இதே செய்தி நஸயீயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. (ஹதீஸ் எண்1282)

இதே செய்தி அஹ்மதிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. (ஹதீஸ் எண்11762)

அனஸ் (ரலி) அவர்கள், உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கும் செய்தி திர்மிதீ, நஸயீ, அஹ்மத், ஹாகிம் ஆகிய நான்கு நுôற்களில் இடம் பெற்றுள்ளது. அந்த நான்கு நூற்களிலும் நபி (ஸல்) அவர்கள் பத்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூறு! பத்து தடவை ஸுப்ஹானல்லாஹ் என்று கூறு! பத்து தடவை அல்ஹம்து லில்லாஹ் என்று கூறு! பின்னர் நீ விரும்பியதைக் கேள்! என்று இடம்பெற்றுள்ளது.

ஆனால் எந்த நூலிலும் இது தஸ்பீஹ் தொழகைக்குரியது என்ற வாசகம் இடம்பெறவில்லை. எனவே இச்செய்தி தஸ்பீஹ் தொழுகை தொடர்புடையது என்று வாதிடமுடியாது.

மேலும் அனஸ் (ரலி) அவர்கள், உம்முஸுலைம் (ரலி) மூலம் அறிவிக்கும் செய்தி முஸ்னத் அபீயஃலா என்ற நூலில் (ஹதீஸ் எண் 4292) இடம் பெற்றுள்ளது. அதில் கடமையான தொழுகையை தொழுதபின் ஸுப்ஹானல்லாஹ் பத்து தடவைச் சொல் .... என்று இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸை தஸ்பீஹ் தொழுகை என்ற தலைப்பில் இமாம் திர்மிதீ கொண்டு வந்துள்ளதை இமாம் இராகீ அவர்கள் ஆட்சேபணை செய்துள்ளார்கள்.

இமாம் இராக்கீ அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை தஸ்பீஹ் தொழுகை என்ற பாடத்தில் கொண்டு வந்திருப்பது ஆட்சேபணைக்குரியதாகும். ஏனெனில் இது ஐவேளைத் தொழுகைக்கு பிறகு தஸ்பீஹ் சொல்லுவது தொடர்பாக வந்த செய்தியாகும்.

இந்த ஹதீஸ் தொடர்பாக முஸ்னத் அபீயஃலா, தப்ரானியின் துஆ என்ற நூலிலும் வேறு பல வழிகளில் வந்துள்ள செய்திகள் இக்கருத்தை தெளிவுபடுத்துகிறன. அதில், உம்மு ஸுலைமே! நீ கடமையான தொழுகையைத் தொழுது விட்டால் ஸுப்ஹானல்லாஹ் 10 தடவை கூறு!... என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(என்று இடம் பெற்றுள்ளது) (நூல்: துஹ்பத்துல் அஹ்வதீ)

எனினும் இந்த ஹதீஸின் அடிப்படையில் தஸ்பீஹ் தொழுகையின் இந்த முறையின் பக்கம் (இந்த ஹதீஸில் கூறப்பட்டவாறு) எந்த அறிஞர்களும் செல்லவில்லை. (நூல்: துஹ்பத்துல் அஹ்வதீ)

மேலே கூறப்பட்ட கருத்தும் கவனத்திற்கு எடுக்கவேண்டிய ஒன்றாகும். இந்த ஹதீஸை தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாகக் காட்டுபவர்கள் அந்த ஹதீஸின்படி தஸ்பீஹ்களை கூறுவதில்லை. எனவே இந்த செய்தியை ஆதாரமாகக் காட்டமுடியாது.

அடுத்து அவர்கள் எடுத்து வைக்கும் ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியாகும்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி அபூதாவூத், பைஹகீ ஆகிய இரண்டு நூற்களில் இடம் பெற்றுள்ளது.

அபூதாவூதின் அறிவிப்பு
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நீ என்னிடம் நாளை வா! நான் உனக்கு பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பளிப்பை வழங்குகிறேன், உனக்கு நன்மையைத் தருகிறேன். உனக்கு ஒருகொடையை அளிக்கின்றேன் என்றார்கள். எனக்கு ஏதோ அன்பளிப்பைத் தருவார்கள் என்று எண்ணினேன்.
(அப்போது) பகல் சாயும்போது நீ எழு! நான்கு ரக்அத்கள் தொழு! (என்று கூறி முன்னர் அபூ ராஃபிவு (ரலி) அறிவித்ததைப் போன்று கூறினார்கள்.) பின்னர் உனது தலையை இரண்டாவது ஸஜ்தாவிலிருந்து உயர்த்தி சரியாக அமர்ந்து கொள்! ஸுப்ஹானல்லாஹ் 10 தடவை, அல்லஹம்து லில்லாஹ் 10 தடவை, அல்லாஹு அக்பர் 10 தடவை லாயிலாஹ இல்லல்லாஹ் 10 தடவை கூறாமல் எழாதே! பின்னர் இதைப் போன்று நான்கு ரக்அத்திலும் செய்! இவ்வுலகத்தில் உள்ளவர்களிலேயே மிகப்பெரிய அளவு பாவத்தை நீ செய்திருந்தாலும் இவ்வாறு செய்ததால் உனது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றார்கள். அப்போது நான் அந்நேரத்தில் தொழ முடியவில்லையானால்? என்று கேட்டதற்கு பகலில் இரவில் ஏதாவது ஒருநேரத்தில் தொழுது கொள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: அபூதாவூத் (1105)

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி பைஹகீ என்ற நூலிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. (ஹதீஸ் எண் 4698) இந்த ஹதீஸிலும் இமாம் அபூதாவூதின் தொடரே இடம் பெற்றுள்ளது.

மேலே நாம் கூறிய அறிவிப்பாளர் வரிசையைக் கவனித்தால் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி இரண்டு அறிவிப்பாளர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளதை காணலாம்.

முதலாவது நபி (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அபுல் ஜவ்ஸாயி, அம்ர் பின் மாலிக்...... என்ற தொடரில் அமைந்துள்ளது.
இந்த அறிவிப்பாளர் தொடரில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

 மற்றொரு அறிவிப்பாளர் தொடர்
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அபுல் ஜவ்ஸாயி, அல்முஸ்தமிர் பின் ரய்யான்.... என்று இடம் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பாளர் தொடரில் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அல்லாமல் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாக இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் அம்ர் பின் மாலிக் என்பவர் பலவீனமானவராவார்.

இவரைப்பற்றி வந்துள்ள விமர்சனங்களைப் பார்ப்போம்.

அம்ர் பின் மாலிக் அந்நுக்ரீ, பஸரீ என்பவர் நம்பமானவர்களிடமிருந்து மறுக்கப்படவேண்டிய செய்திகளை அறிவிப்பவர். மேலும் ஹதீஸ்களைத் திருடுபவர், அமர் பின் மாலிக் அந்நுக்ரீ என்பவரை அபூயஃலா அவர்கள் பலவீனமானவர் என்று கூற நான் கேட்டுள்ளேன் என்று இப்னு அதீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: அல் காமில் ஃபீ லுஅஃபாயிர் ரிஜால் பாகம் 5 பக்கம் 150)

இதே கருத்தை இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன் என்ற நூலில் (பாகம் 2, பக்கம் 231) எடுத்தெழுதியுள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வருவது ஆதாரப்பூர்வமான செய்தி கிடையாது. எனவே இச்செய்தியை ஆதாரமாக எடுக்கக்கூடாது.

இரண்டாவதாக வரும் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் செய்தி நபித் தோழரின் சொந்தக் கூற்றாக இடம் பெற்றுள்ளதால் அதையும் ஆதாரமாக எடுக்கக் கூடாது.

தஸ்பீஹ் தொழுகை தொழலாம் என்று கூறுபவர்கள் ஆதாரமாக காட்டும் ஜஅஃபர் பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஆதாரத்திற்கு ஏற்றதா? என்பதைக் காண்போம்.

உமக்கு அன்பளிப்பு வழங்கவா? உபகாரம் செய்யவா? தானம் செய்யவா? (இந்த நற்செயலுக்கு) உன்னைத் தேர்வு செய்யவா? வழங்கட்டுமா? வழங்கட்டுமா? என்றார்கள். அப்போது நான் பஹ்ரைன் நாட்டின் செல்வத்தை வழங்குவார்கள் என்று எண்ணினேன்.
நீ நான்கு ரக்அத்கள் தொழு! ஒவ்வொரு ரக்அத்திலும் பாத்திஹா அத்தியாயத்தையும் மற்றொரு அத்தியாயத்தையும் ஓது! பின்னர் அல்ஹம்து லில்லாஹ் வஸுப்ஹானல்லாஹ் வல்லாஹு அக்பர் வலாயிலாஹ இல்லல்லாஹு இதை 15 தடவை கணக்கிட்டு(ஓதிக்) கொள். பின்னர் நீர் ருகூவு செய்த நிலையில் அதை 10 தடவை கூறு! பிறகு தலையை உயர்த்தி நின்ற நிலையில் அதை 10 தடவை கூறு! பின்னர் ஸஜ்தா செய்த நிலையில் அதை 10 தடவை கூறு! பின்னர் தலை உயர்த்தி அமர்ந்த நிலையில் அதை 10 தடவை கூறு! பின்னர் ஸஜ்தா செய்து ஸஜ்தா செய்த நிலையில் அதை 10 தடவை கூறு! பின்னர் தலையை உயர்த்தி அமர்ந்த நிலையில் அதை 10 தடவை கூறு!. இவை மொத்தம் 75 தடவையாகும். இதைப்போன்று மீதமுள்ள மூன்று ரக்அத்திலும் செய். இவற்றின் மொத்தம் 300 ஆகும். இந்த தஸ்பீஹை (1.அல்ஹம்து லில்லாஹ் 2. ஸுப்ஹானல்லாஹ் 3.அல்லாஹு அக்பர் 4. லாயிலாஹ இல்லல்லாஹு என்று நான்காக) பிரித்து எண்ணினால் அதனின் மொத்தம் 1200 ஆகும்.

பாத்திஹா அத்தியாத்திற்கு பிறகு இருபது ஆயத்துகள் அல்லது அதை விட அதிகமாக ஓது! இத்தொழுகையை பகல் அல்லது இரவில் அல்லது வாரத்தில் ஒரு நாள், அல்லது மாத்தில் ஒரு நாள், வருடத்தில் ஒரு நாள் அல்லாத வாழ்நாளில் ஒரு நாள் தொழு! (அவ்வாறு தொழுதால்) உனது பாவங்கள், வானத்தின் நட்சத்திரம் அளவிற்கு அல்லது மழைத் துளிகள் அளவிற்கு அல்லது அதிகமான மணல் அளவிற்கு அல்லது காலத்தின் நாட்கள் அளவிற்கு இருந்தாலும் அல்லாஹ் உனது பாவங்களை மன்னிப்பான்.
அறிவிப்பவர்: ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி)
நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக் (5004)

இச்செய்தியில் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களை அடுத்து தாபியீன்களின் இடத்தில் இடம் பெறும் இஸ்மாயில் பின் ராஃபிவு என்பவர் நாம் அறிந்தவரை தாபியீன்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இவர் தாபியீன்களுக்கு அடுத்த தலைமுறையில் இடம் பெற்றுள்ளார். மேலும் அவர் பலவீனமானவரும் கூட.

இஸ்மாயில் பின் ராஃபிவு என்பவரை தாபியீன் என்று வைத்துக் கொண்டாலும் அல்லது அதற்கு அடுத்த தலைமுறையில் உள்ளவர் என்று வைத்துக் கொண்டாலும் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களுக்கும் இஸ்மாயில் பின் ராஃபிவு என்பவருக்கும் இடையில் தொடர்பு அறுந்துள்ளது.

இஸ்மாயீல் பின் ராஃபிவு என்பவர் தாபியீன் என்று முடிவு செய்தாலும் கூட, அவர் ஜஅஃபர் பின் அபீதாலிப் அவர்களிடம் எதையும் கேட்டிருக்க முடியாது. காரணம், ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 8 ஆண்டு நடந்த மூத்தா போரில் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். (பார்க்க புகாரீ ஹதீஸ் எண் 4260,4261 மற்றும் பத்ஹுல் பாரீ) இந்தச் செய்தியை ஜஅஃபர் பின் அபீதாலிப் அவர்களிடம் செவியுற்றவராக இருந்தால் அவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழராகத் தான் இருக்க முடியும். எனவே அவர் ஜஅஃபர் (ரலி) அவர்களிடம் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

இன்னும் தெளிவாகச் சொல்வதானால் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வாழ்ந்திருந்தால் மட்டுமே தாபியீன்களால் அவர்களிடம் கேட்டிருக்க முடியும். நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதால் அவர்கள் கூறிய செய்தியை ஒரு நபித்தோழர் கேட்டு அவர் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு பிறகு வாழ்ந்திருந்தால் தான் தாபியீன்கள் கேட்க முடியும். எனவே இச்செய்தி தொடர்பு அறுந்த செய்தி என்பது தெளிவாகிறது.

இஸ்மாயில் பின் ராஃபிவு என்பவர் தாபியீன் என்று வைத்துக் கொண்டால் ஜஅஃபர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 8 ல் கொல்லப்பட்டு விட்டதால் அவரிடம் கேட்டவர் ஒரு நபித்தோழர் தான். அவரைத் தான் அவர் விட்டிருப்பார். விடுப்பட்டவர் நபித்தோழர் எனும் போது, நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்ற கருத்தின் அடிப்படையில் அவரை விட்டுவிடுவதால் எந்த பிரச்சனையும் இல்லையே என்ற ஒரு சந்தேகம் நமக்கு ஏற்படலாம்.

ஹதீஸ்களை சற்று ஆய்வு செய்தவர்களுக்கு இந்த ஐயம் ஏற்படாது. விடுப்பட்டவர் நபித்தோழர் தான் என்றிருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை தான், எனினும் அங்கு நபித்தோழர் மட்டுமின்றி தாபியீன்களும் விடுபட வாய்ப்பு உள்ளது.

ஒரு ஹதீஸை நபித்தோழரிடமிருந்து ஒரு தாபியீ கேட்டு அவரிடமிருந்து இன்னொரு தாபியீ கேட்டு அவர் தப்அதாபியீன்களிடம் கூறுவது ஹதீஸ்களில் நாம் சாதராணமாகக் காணலாம்.

ஸஹீஹுல் புகாரியின் முதலாவது ஹதீஸின் தொடரைப் பாருங்கள். அதில் உமர்(ரலி) அவர்களிடம் கேட்டவர் அல்கமா பின் வக்காஸ், இவர் தாபியீ. இவரிடம் கேட்டவர் முஹம்மத் பின் இப்ராஹீம் என்பவர் இவரும் தாபியீ ஆவார்.

புகாரியில் இடம் பெற்ற இந்த ஹதீஸில் நபித்தோழருக்கும் தாபியீக்கும் இடையில் இன்னொரு தாபியீ இடம் பெற்றள்ளார் என்பதைக் கவனிக்கவும்.

சில நேரங்களில் நபித்தோழருக்கு அடுத்து நான்கு தாபியீன்கள் கூட இடம் பெறுவது உண்டு. திர்மிதீயில் இடம் பெறும் 523 வது ஹதீஸைப் பார்த்தால் இந்த உண்மை புலப்படும்.

திர்மிதீயில் இடம்பெறும் 523 வது ஹதீஸில் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்டவர் அபூபக்ர் பின் அப்திர்ரஹ்மான். அவரிடம் கேட்டவர் உமர் பின் அப்துல் அஸீஸ் இவரிடம் கேட்டவர் அபூபக்ர் பின் முஹம்மத், இவரிடம் கேட்டவர் யஹ்யா பின் ஸயீத் ஆவார். இவர்கள் நால்வரும் தாபியீன்கள் ஆவார்கள்.

தாபியீன்கள் நேரடியாக நபித்தோழர்களிடம் தான் கேட்டிருப்பார்கள் என்று உறுதியாகக் கூற முடியாது இடையில் வேறு தாபியீன்களும் இருக்க வாய்ப்பு உள்ளதால் இஸ்மாயில் பின் ராஃபிவு என்பவர் தாபியீன் என்று வைத்துக் கொண்டாலும் இடையில் வேறு தாபியீன்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளதாலும் அவர் நம்பகமானவரா? இல்லையா என்பது தெளிவாகததால் இச்செய்தி ஆதாரத்திற்கு நிற்காத தொடர்பு அறுந்த செய்தியாகும்.

தஸ்பீஹ் தொழுகை தொழலாம் என்று கூறுபவர்கள் அடுத்த ஆதாரமாக காட்டும் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஆதாரத்திற்கு ஏற்றதா? என்பதைக் காண்போம்.

நபி (ஸல்) அவர்கள், ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களை எத்தியோப்பியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் திரும்பி வந்த போது நபி (ஸல்) அவர்கள், அவர்களைக் கட்டியணைத்தார்கள், இரு கண்களுக்கு இடையில் முத்தமிட்டார்கள். பின்னர் உமக்கு அன்பளிப்பு வழங்கவா? நற்செய்தி கூறவா? உபகாரம் செய்யவா? காணிக்கை தரவா? என்று கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே! ஆம் என்றேன். நான்கு ரக்அத்கள் தொழு! அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து அத்தியாத்தையும் ஒரு (துணை) அத்தியாயத்தையும் ஓது! பின்னர் ஓதி முடித்ததும் நீ நின்ற நிலையில் ருகூவுக்கு முன்னர் ஸுப்ஹானல்லாஹ் வல்ஹம்து லில்லாஹ். வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று 15 தடவை கூறு! பின்னர் ருகூவு செய்! பின்னர் அதை 10 தடவை கூறு! பின்னர் ருகூவில் இருந்து எழுந்து அதை 10 தடவை கூறு! இரண்டாம் ரக்அத்தைத் துவங்குவதற்கு முன்னர் இந்த ரக்அத் முழுவதற்கும் இவ்வாறே செய்துகொள்! நான்கு ரக்அத்துகளை நீ முடிக்கின்ற வரை நான் வர்ணித்தைப் போன்று (மீதமுள்ள) மூன்று ரக்அத்திலும் (இவ்வாறே செய்!)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: ஹாகிம் (1196)

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இச்செய்தியைப் பற்றி ஹாகிம் அவர்கள் ஆதாரப்பூர்வமானது என்ற கூற்றும் இமாம் தஹபீ அவர்கள் தனது தல்கீஸ் என்ற நூலில் ஆதரப்பூர்வமானது என்ற கூற்றும் தவறானதாகும்.

இச்செய்தியில் இடம் பெறும் ஏழாவது அறிவிப்பாளர் அஹ்மத் பின் தாவூத் பின் அப்துல் கஃப்ஃபார் என்பர் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். இமாம் தஹபீ அவர்களே மீஸானுல் இஃதிதால் என்ற நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

அஹ்மத் பின் தாவூத் பின் அப்துல் கஃப்ஃபார் என்பவரை இமாம் தாரகுத்னீ, மற்றும் அவரல்லாதவர்களும் பொய்யர் என்று கூறியுள்ளார்கள். சுவர்க்கத்தின் திறவுகோல் ஏழைகளாவர். யாசிப்போர் அல்லாஹ்வின் நெருங்கிய நண்பர்களாவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ள அறிவிப்பு அவர் அறிவித்த பொய்யான செய்திகளில் ஒன்றாகும். (நூல்: மீஸானுல் இஃதிதால் பாகம் 1, பக்கம் 232)

ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள், அஹ்மத் பின் தாவூத் பின் அப்துல் கஃப்ஃபார் என்பவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்கள்.

அஹ்மத் பின் தாவூத் என்பவர் முற்றிலும் பலவீனமானவராவார். இவரைப் பொய்யர் என்று (ஹதீஸ் கலை வல்லுனர்கள்) குற்றம் சுமத்தியுள்ளனர். (நூல்: தல்கீஸுல் ஹபீர் பாகம் 4, பக்கம் 96)

ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள் அஹ்மத் பின் தாவூத் என்பவரைப் பற்றி தனது லிஸானுல் மீஸான் என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்கள்.

ஜஅஃபர் பின் அபீ தாலிப் (ரலி) அவர்களுக்கு தஸ்பீஹ் தொழுகையை கற்றுக் கொடுத்ததாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை (இமாம் ஹாகிம் அவர்கள்) ஆதாரப்பூர்வமானது, அதன் மீது எந்த (பலவீனம் என்ற) புழுதியும் படியவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் இது இருள் நிறைந்ததாகும். ஒளியுடையது அல்ல. (இதில் இடம் பெறும்) அஹ்மத் பின் தாவூத் என்பவரை இமாம் தாரகுத்னீ விமர்சனம் செய்துள்ளார் என்று அந்நூலின் ஓர உரையில் எங்கள் ஆசிரியர்கள் அதை விமர்சனம் செய்துள்ளனர். (நூல்: லிஸானுல் மீஸான் பாகம் 1, பக்கம் 368)

எனவே தஸ்பீஹ் தொடர்பாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியும் பலவீனமானதாகும்.

தஸ்பீஹ் தொழுகை தொழலாம் என்று கூறுபவர்கள் அடுத்த ஆதாரமாகக் காட்டும் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஆதாரத்திற்கு ஏற்றதா? என்பதைக் காண்போம்.

நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அலீயே! உனக்கு அன்பளிப்பு வழங்கட்டுமா? என்றார்கள்.....(என்று முழு ஹதீஸையும் குறிப்பிட்டார்கள்) அப்போது நான் திஹாமா மலையளவு தங்கத்தை எனக்குத் தருவார்கள் என்று எண்ணினேன். அப்போது நீ தொழுகையில் நிற்கும் போது ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹு என்று 15 தடவை கூறு! என்று கூறினார்கள்........ (பின்னர் தஸ்பீஹ் தொடர்பான முழுமையான செய்தியைக் குறிப்பிட்டார்கள்)

அறிவிப்பவர்: குஃப்ராவின் அடிமை உமர்
நூல்: தாரகுத்னீ (மவ்ஸுஆ அல்ஹாபிழ் இப்னு ஹஜர், பாகம்: 1, பக்கம்: 643)

இமாம் தாரகுத்னீ கிதாபு ஸலாத்துத் தஸ்பீஹ் என்ற நூலில் பதிவு செய்த அலீ (ரலி) அவர்களின் இச்செய்தியைப் பற்றி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.

மேற்கூறப்பட்ட ஹதீஸில் பலவீனமும் தொடர்பு அறுந்தும் உள்ளது.
(நூல்: மவ்ஸுஆ அல்ஹாபிழ் இப்னு ஹஜர், பாகம்: 1 பக்கம்: 643)

இச்செய்தில் யார் பலவீனமானவர்? எந்த அடிப்படையில் தொடர்பு அறுந்து உள்ளது என்பதைக் காண்போம்.

இச்செய்தியில் இடம் பெறும் குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் என்பவர் பலவீனமானவராவார்.

குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் பலவீனமானவராவார் என்று இமாம் நஸயீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
(நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம்: 1, பக்கம்: 81)

குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் பலவீனமானவராவார் என்று இப்னு மயீன் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 7, பக்கம்: 414)

குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் என்பவரின் ஹதீஸ்களை எழுதிக் கொள்ளலாம். ஆனால் அவர் பலம் வாய்ந்தவர் அல்ல என்று அஜ்லீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 7, பக்கம்: 414)

குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் பலவீனமானவராவார் என்று பின் ஹம்மாத் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
(நூல்: அல்காமில் ஃபீ லுஅஃபாயிர் ரிஜால், பாகம்: 5, பக்கம்: 36)

குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் என்பவர் செய்திகளை மாற்றி அறிவிப்பவர்களில் ஒருவர். நம்பகமானவரிடமிருந்து உறுதியானவர்களின் ஹதீஸுக்கு ஒப்பில்லாததை அறிவிப்பார். இவரை ஆதாரமாகக் கொள்வது கூடாது. படிப்பினைக்காகவே தவிர அவரைப் பற்றி நூற்களில் எழுதக் கூடாது என்று இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
(நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம்: 2, பக்கம்: 81)

குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் என்பவர் பலவீனமானவர் என்பது மேற்கூறப்பட்ட செய்திகளை படிக்கும் போது நமக்கு தெளிவாகியிருக்கும். இப்போது அச்செய்தியில் எவ்வாறு தொடர்பு அறுந்துள்ளது என்பதைக் காண்போம்.

குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் என்பவர் தாபியீன்களில் மிகவும் சிறிய வயதுடையவர். இவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர் இல்லை. மேலும் இவர் சிறிய வயதுடையவராக இருந்ததால் அவர் எந்த நபித்தோழரிடமும் எதையும் கேட்டதில்லை.

குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் என்பவர் நபித்தோழர்களில் எவரிடமாவது கேட்டுள்ளாரா? என்று இப்னு மயீன் அவர்களிடம் கேட்டனர். அதற்கவர்கள், நபித்தோழர்களில் எவரிடமும் அவர் கேட்டதில்லை என்று பதிலளித்தார்கள்.
(நூல்: தாரீக் இப்னு மயீன், பாகம்: 3, பக்கம்: 220)

நபித்தோழர்களிடத்தில் கூட எந்தச் செய்தியையும் கேட்டிராத குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் என்பவர் தஸ்பீஹ் தொழுகையை அலீ (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்ததாக அறிவிக்கிறார். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பிறக்காத இவர், நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த செய்தியை அறிவிப்பதால் தான் இச்செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தி என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

எனவே அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் தஸ்பீஹ் தொழுகை தொடர்பான செய்தி பலவீனமானதாகும்.

தஸ்பீஹ் தொழுகை தொழலாம் என்று கூறுபவர்கள் அடுத்த ஆதாரமாகக் காட்டும் ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஆதாரத்திற்கு ஏற்றதா? என்பதைக் காண்போம்.

நான்கு ரக்அத்கள் தொழு. அதை நீ செய்தால்....... (என்று தொடங்கும் தஸ்பீஹ் தொழுகையைப் பற்றிய ஹதீஸை) ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக அபூ ராஃபிவு அறிவிக்கும் செய்தியை அபூ நுஅய்ம் அவர்கள் அல்குர்பான் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.
(நூல்: மவ்ஸுஆ அல்ஹாபிழ் இப்னு ஹஜர், பாகம்: 1, பக்கம்: 642)

இச்செய்தியை அறிவிக்கும் அபூராஃபிவு என்பவரைப் பற்றி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள்...
இவர் யார்? இவரின் தந்தை யார்? என்பதைப் பற்றி நான் அறியவில்லை. இதில் இடம் பெறும் அபூராஃபிவு என்பவர் நபித்தோழர் அபூராஃபிவு (ரலி) அல்ல. என் கருத்தின்படி பலவீனமான அறிவிப்பாளரில் ஒருவரான இஸ்மாயில் பின் ராஃபிவு என்பவரே இவர்.
(நூல்: மவ்ஸþஆ அல்ஹாபிழ் இப்னு ஹஜர், பாகம்: 1, பக்கம்: 642)

நாமும் தேடிய வரை இச்செய்தில் இடம் பெறும் அபூராஃபிவு என்பவர் யார் எனத் தெரியவில்லை. ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் சொன்ன அடிப்படையில் தான் இருக்க வாய்ப்புள்ளது. என்வே இச்செய்தியையும் ஆதாரமாகக் கொள்ளமுடியாது.

தஸ்பீஹ் தொழுகை தொழலாம் என்று கூறுபவர்கள் அடுத்த ஆதாரமாகக் காட்டும் உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஆதாரத்திற்கு ஏற்றதா? என்பதைக் காண்போம்.

நபி (ஸல்) அவர்கள் எனக்குரிய நாளில் இருந்த போது நண்பகலில் அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது, ''யார் இவர்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ''அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப்'' என்று தோழர்கள் கூறினார்கள். ''அல்லாஹ் மிகப் பெரியவன். இந்த நேரத்தில் அவர் வந்ததற்கான காரணம் என்ன?'' என்று கேட்டார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் நுழைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ''எனது தந்தையின் உடன் பிறந்தவரே! இந்த நேரத்தில் என்ன காரியமாக வந்திருக்கிறீர்கள்? (என்று கூறி தஸ்பீஹ் தொழுகையில் வந்துள்ளதைப் போன்று) கூறினார்கள்'' என உம்மு ஸலமா (ரலி) அறிவித்த செய்தியை அபூ நுஅய்ம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: மவ்ஸþஆ அல்ஹாபிழ் இப்னு ஹஜர், பாகம்: 1, பக்கம்: 643 )

இச்செய்திப் பற்றி விமர்சனம் செய்யும் போது ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.

இந்தச் செய்தி கரீப் என்ற வகையைச் சார்ந்ததாகும். இதில் இடம்பெறும் அம்ர் பின் ஜமீஃ என்பவர் பலவீனமானவராவார். மேலும் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸயீத் என்பவர் உம்மு ஸலமா (ரலி) அவர்களை சந்தித்துள்ளாரா? என்பதில் ஆட்சேபணை உள்ளது.
(நூல்: மவ்ஸþஆ அல்ஹாபிழ் இப்னு ஹஜர், பாகம்: 1, பக்கம்: 643 )

ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுவது போல அம்ர் பின் ஜமீஃ என்பவர் பலவீனமானவரார். இவரைப் பற்றி பலர் குறை கூறியுள்ளனர்.

அம்ர் பின் ஜமீஃ என்பவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று இமாம் நஸயீ அவர்கள் குறிப்பிட்டார்கள்.
(நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன், பாகம்: 1, பக்கம்: 79)

அம்ர் பின் ஜமீஃ என்பவர் உறுதியானவர் இல்லை, நம்பகமானவரும் இல்லை என்று யஹ்யா அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
(நூல்: அல்காமில் ஃபீ லுஅஃபாயிர் ரிஜால், பாகம்: 5, பக்கம்: 111)

அம்ர் பின் ஜமீஃ என்பவர் பெரும் பொய்யர், மோசமானவர் என்று யஹ்யா அவர்கள் குறிப்பிட்டார்கள்.
(நூல்: லுஅஃபாவுல் உகைலீ, பாகம்: 3, பக்கம்: 264)

அம்ர் பின் ஜமீஃ என்பவர் ஹிஷாம் பின் உர்வா மற்றும் அவரல்லாதவர்களிடமிருந்தும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பவர் என்று இமாம் ஹாகிம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
(நூல்: அல்மத்கல் இலஸ் ஸஹீஹ், பாகம்: 1, பக்கம்: 159)

அம்ர் பின் ஜமீஃ என்பவர் நம்பகமானவர்களிடமிருந்து இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும் பிரபலமானவர்களிடமிருந்து மறுக்கப்பட வேண்டிய செய்திகளையும் அறிவிப்பவர்களில் உள்ளவர். படிப்பினைக்காகவே தவிர இவருடைய செய்திகளை எழுதுவதும் குறிப்பிடுவதும் அனுமதியில்லை என்று இமாம் இப்னு ஹிப்பான் குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம்: 2, பக்கம்: 78)

உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில் அம்ர் பின் ஜமீஃ என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெறுவதால் இச்செய்தியும் தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக நிற்காது.

தஸ்பீஹ் தொழுகை உண்டு என வாதிடுபவர்கள் எடுத்து வைக்கும் அடுத்த ஆதாரம் அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அறிவிக்கும் செய்தியாகும்

உமக்கு அன்பளிப்பு வழங்கவா? உபகாரம் செய்யவா? தானம் செய்யவா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இதற்கு முன்னர் யாருக்கும் வழங்காத உலகப் பொருளிலிருந்து ஏதாவது ஒன்றைத் தருவார்கள் என்று நான் எண்ணினேன்.
அப்போது உனக்கு நான் கற்றுத் தருவதை நான்கு ரக்அத்தில் கூறினால் அல்லாஹ் உன்னை மன்னிப்பான். (தொழுகையை) அல்லாஹு அக்பர் என்று கூறி ஆரம்பம் செய். பிறகு பாத்திஹா அத்தியாயத்தையும் மற்றொரு அத்தியாயத்தையும் ஓது. பின்னர் ஸுப்ஹானல்லாஹ் வல்ஹம்து லில்லாஹ் வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று 15 தடவை கூறு. நீ ருகூவு செய்யும் போது இதைப் போன்று 10 தடவை கூறு. ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறும் போது அதைப் போன்று 10 தடவை கூறு. ஸஜ்தா செய்யும் போது அதைப் போன்று 10 தடவைக் கூறு. ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தி நிலைக்கு வருவதற்கு முன்னால் அதைப் போன்று 10 தடவைக் கூறு. பின்னர் இரண்டாவது ரக்அத்தில் முதல் ரக்அத்தில் செய்ததைப் போன்று செய். மேலும் இருப்பில் அமரும் போது அத்தஹிய்யாத் ஓதுவதற்கு முன்னால் அதனை 10 தடவை சொல். இதைப் போன்று மீதமுள்ள இரண்டு ரக்அத்திலும் செய்து கொள்.
(இத்தொழுகையை) ஒவ்வொரு நாளும் செய்ய முடியுமானால் (அவ்வாறே செய்) முடியவில்லையானால் வாரத்தில் ஒரு முறை. அதுவும் முடியவில்லையானால் மாதத்தில் ஒரு முறை. அதுவும் முடியவில்லையானால் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை. அதுவும் முடியவில்லையானால் வருடத்தில் ஒரு முறை (தொழுது கொள்)
அறிவிப்பவர்: அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி)
நூல்: அல்மவ்லூஆத் இப்னுல் ஜவ்ஸீ, (பக்கம் : 143)

இச்செய்தியில் இடம் பெறும் ஸதகா பின் யஸீத் என்பவர் பலவீனமானவர். இவரைப் பற்றி ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்தைக் காண்போம்.

இவர் பைத்துல் முகத்தஸ் பள்ளியின் பக்கத்தில் வாழ்ந்தவர், இவருடைய ஹதீஸ்கள் பலவீனமானவையாகும் என்று அஹ்மத் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
(நூல்: தாரீகுல் கபீர், பாகம் : 4,பக்கம் : 295)

ஸதகா பின் யஸீத் என்பவர் பலவீனமானவர் என்று இமாம் நஸயீ குறிப்பிடுகிறார்கள்.
(நூல்: அல்லுஃபாவு வல்மத்ரூக்கீன், பாகம் : 1, பக்கம் : 58)

ஸதகா பின் யஸீத் அல்குரஸானீ என்பவர் ஹதீஸ் கலையில் மறுக்கப்பட்டவர் என்று இமாம் புகாரீ குறிப்பிட்டார்கள்.
(நூல்: அல்காமில் ஃபீ லுஅஃபாயிர் ரிஜால், பாகம் : 4, பக்கம் : 78)

ஸதகா பின் யஸீத் அல்குராஸானீ என்பவர் ஹதீஸ் கலையில் மறுக்கப்பட்டவர் என்று இமாம் புகாரீ அவர்கள் குறிப்பிட்டார்கள் என்று ஆதம் பின் மூஸா அவர்கள் கூறியுள்ளார்கள்.
(நூல்: லுஅஃபாவுல் உகைலீ, பாகம் 2, பக்கம் 206)

ஸதகா பின் யஸீத் என்பவர் தன்னிடம் குறைவான செய்திகள் இருப்பதால், நபர் விடுபட்ட (பலவீனமான) பல செய்திகளை நம்பகமானவர் பெயரைப் பயன்படுத்தி அறிவிப்பவர். அவருடைய செய்திகளில் ஈடுபடுவதும் அதை ஆதாரமாகக் கொள்வதும் கூடாது என இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம் 1, பக்கம் 374)

தஸ்பீஹ் தொழுகை உண்டு என வாதிடுபவர்கள் எடுத்து வைக்கும் அடுத்த ஆதாரம், இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் செய்தியாகும்.

நபி (ஸல்) அவர்கள், அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களைப் பார்த்து, அப்பாúஸ! என் பெரிய தந்தையே! நான் உங்களுக்கு வழங்கட்டுமா? அன்பளிப்பு கொடுக்கட்டுமா? உங்களுக்கு கைமாறு இல்லாமல் கொடுக்கட்டுமா? உங்களுக்கு பத்து விசயங்களை கற்றுக் கொடுக்கட்டுமா? அதைச் செய்தால், நீங்கள் முன்னால், பின்னால், புதிதாக செய்த, பழமையில் செய்த, வேண்டுமென்றே செய்த, தவறுதலாகச் செய்த, சிறிய, பெரிய, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த இந்த பத்து வகையான பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான்.

நீங்கள் நான்கு ரக்அத்கள் தொழ வேண்டும். அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் ஃபாத்திஹா அத்தியாயமும் இன்னொரு அத்தியாயமும் ஓத வேண்டும். முதல் ரக்அத்தில் ஓதுதல் முடிந்ததும் நீர் நிலையில் இருக்கும் நிலையில் ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று 15 தடவை கூறுங்கள். பிறகு ருகூவு செய்யுங்கள். ருகூவு செய்த நிலையில் மேற்சொன்ன தஸ்பீஹை 10 தடவை சொல்லுங்கள். பின்னர் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி 10 தடவை அந்த தஸ்பீஹைக் கூறுங்கள். பின்னர் ஸஜ்தாவிற்குச் செல்லுங்கள். அங்கு ஸஜ்தா செய்த நிலையில் 10 தடவை அந்த தஸ்பீஹைச் செய்யுங்கள். பின்னர் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தி அந்த தஸ்பீஹை 10 தடவை கூறுங்கள். பின்னர் ஸஜ்தா செய்து அந்த தஸ்பீஹை 10 தடவை கூறுங்கள். பின்னர் தலையை உயர்த்தி அந்த தஸ்பீஹை 10 தடவை கூறுங்கள். இது ஒவ்வொரு ரக்அத்திலும் (மொத்தம்) 75 ஆகும். இதை நான்கு ரக்அத்திலும் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு தடவை செய்ய முடிந்தால் அவ்வாறே செய்யுங்கள். அவ்வாறு முடியவில்லையானால் வாரத்திற்கு ஒரு முறை செய்யுங்கள். அதுவும் முடியவில்லையானால் மாதத்தில் ஒரு தடவை செய்யுங்கள். அதுவும் முடியவில்லையானால் வருடத்தில் ஒரு முறை செய்யுங்கள். அதுவும் முடியவில்லையானால் வாழ் நாளில் ஒரு முறை செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் (1105)

இந்த ஹதீஸ் தான் தஸ்பீஹ் தொழுகை தொழலாம் என்பவர்கள் வலிமையான ஆதாரமாகக் காட்டக்கூடிய செய்தியாகும். இந்தச் செய்தியின் தரம் என்ன? ஹதீஸ் கலை அறிஞர்கள் இச்செய்தி தொடர்பாக என்ன கருத்து கூறுகிறார்கள் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

தஸ்பீஹ் தொழுகை தொடர்பான செய்திகள் ஏராளமாக வந்துள்ளன. அதில் ஏற்றமானது இக்ரிமா வழியில் வந்துள்ள இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியாகும் என்று ஹாபிழ் முன்திர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (துஹ்பத்துல் அஹ்வதீ)

இக்ரிமா, இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அறிவிக்கப்படும் இந்த அறிவிப்பாளர் தொடரைப் போன்று அழகிய தொடர், தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக வேறு எதிலும் அறிவிக்கப்படவில்லை என்று இமாம் முஸ்லிம் குறிப்பிடுகிறார்கள். (துஹ்பத்துல் அஹ்வதீ)

இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் இச்செய்தியில் இடம் பெறும் மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் யார் என அறியப்படாதவர் என்று விமர்சித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தியை இட்டுக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார்கள். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் போது ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள்

''மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் யார் என அறியப்படாதவர் என்று சொல்லும் இப்னுல் ஜவ்ஸீன் கூற்று தவறானதாகும். ஏனெனில் இமாம் நஸயீ, இப்னுமயீன் ஆகியோர் இவரை நம்பகமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்'' என்று பதிலளிக்கிறார்கள். (துஹ்பத்துல் அஹ்வதீ)

இவ்வாறு பலர் இச்செய்தியைப் பற்றிக் குறிப்பிட்டாலும் இதில் குறைபாடு உள்ளது என்பதை மற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் தெளிபடுத்தியுள்ளனர்.

தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக உறுதிப்படுத்தும் ஹதீஸ்கள் கிடையாது என்று இமாம் உகைலீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக ஆதாரப்பூர்மான, ஹஸன் நிலையில் உள்ள ஹதீஸ்கள் கிடையாது. இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் தஸ்பீஹ் தொடர்பான ஹதீஸை இட்டுக்கட்டப்பட்டது என்று மிகைப்படுத்தி சொல்லியுள்ளார்கள் என அபூபக்ர் பின் அல்அரபீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் பலவீனமானவர் என்று பலர் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் சில வேளைகளில் தவறிழைப்பவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இவர் ஹதீஸ் கலையில் மறுக்கப்பட்டவர் என்று அபுல் ஃபழ்ல் அவர்கள் கூறுகிறார்கள். இப்னுல் மதீனீ அவர்கள் இவர் பலவீனமானவர் என்று குறிப்பிடுகிறார்கள். (இமாம் தஹபீ) நான் கூறுகிறேன், இவருடைய ஹதீஸ்கள் மறுக்கப்படுவைகளில் உள்ளதாகும். குறிப்பாக அல்ஹகம் பின் அபான் என்பவர் மூலம் அறிவிப்பவைகள். (இச்செய்தியை அவர் அல்ஹகம் பின் அபான் மூலமே அறிவித்துள்ளார்.) மேலும் அவரும் (அல்ஹகம் பின் அபான் என்பவரும்) உறுதியானவர் இல்லை.
(நூல் : மீஸானுல் இஃதிதால் பாகம் 6, பக்கம் 550)

மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் நல்லவர் எனினும் மனன சக்தியில் கேளாறு உள்ளவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார்கள். (நூல் தக்ரீபுத் தஹ்தீப் பாகம் 1, பக்கம் 552)

தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக இவ்வாறு பல விதமான விமர்சனங்களைக் குறிப்பிடும் ஹாபிழ் இப்னு ஹஜர் இறுதியாக இவ்வாறு கூறுகிறார்கள்.
தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக வரும் அனைத்து வழிகளும் பலவீனமானவையாகும் என்பதே உண்மையான கருத்தாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் ஹதீஸ், ஹஸன் என்ற தரத்தின் நிபந்தனைக்கு நெருக்கமாக இருந்தாலும் அது ஷாத் ஆகும் (அரிதானது, நம்பகமான அறிவிப்புக்கு மாற்றமானது) இந்தச் செய்தியில் கடுமையான தனிக் கருத்துக்கள் இருப்பதாலும் இதற்கு ஏற்றுக் கொள்ளும் விதத்தில் சான்றுகளும் மற்ற அறிவிப்புகளும் இல்லாததாலும் மற்ற தொழுகையின் முறைக்கு மாற்றமாகவும் இதன் முறை இருப்பதாலும் (இச்செய்தி பலவீனம் அடைகிறது) மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் உண்மையாளராகவும் நல்லவராகவும் இருந்தாலும் இவர் தனித்து அறிவிக்கும் இச்செய்தியை ஏற்க முடியாது. இவரை இப்னு தைமிய்யா, மிஸ்ஸி ஆகியோர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: தல்கீஸுல் ஹபீர், பாகம் 2, பக்கம் 8)

தஸ்பீஹ் தொழுகை என்பது ஏனைய தொழுகை போல் இல்லாமல் பல முறைகளில் மாற்றமாக அமைந்துள்ளது. அவ்வாறு இருக்கும் போது அதை நடைமுறைப் படுத்த சரியான, ஆதாரப்பூர்மான ஹதீஸ்கள் இருக்க வேண்டும். ஆனால் எந்தக் குறையும் இல்லாத செய்திகள் இல்லை.

பல அறிவிப்புகள் இருந்தாலும் அனைத்திலும் குறைகள் நிறைந்து கிடக்கின்றன. மேலும் பல அறிவிப்புகள் தஸ்பீஹின் எண்ணிக்கை பற்றியும் அதைச் சொல்ல வேண்டிய இடங்கள் பற்றியும் மாற்றமான கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.

எனவே தஸ்பீஹ் தொழுகை என்ற பெயரில் தொழுகை கிடையாது, அதற்கு ஆதாரப்பூர்மான ஹதீஸ்கள் இல்லை என்று பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுவே சரியான கருத்தாகும்