பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)
Showing posts with label Ehathuvam. Show all posts
Showing posts with label Ehathuvam. Show all posts

Friday, July 30, 2010

பெண்களுக்கு ஜும்ஆ தொழுகை ??

? பெண்களுக்கு ஜும்ஆ தொழுகை கடமையில்லை என்று அபூதாவூதில் ஹதீஸ் உள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால் திருக்குர்ஆனில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான கடமையாகத் தானே தொழுகையை அல்லாஹ் கூறுகிறான். 62:9வசனத்தில் கூட, நம்பிக்கை கொண்டோரே என்று அனைவரையும் அழைத்து, ஜும்ஆ தொழுகைக்கு அழைக்கப்பட்டால் விரையுங்கள் என்று தான் உள்ளது. இதற்கு விளக்கம் தரவும்.




திருக்குர்ஆனில் ஜும்ஆ தொழுகை பொதுவான கடமை என்று கூறப்பட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பெண்களுக்கு அதிலிருந்து விதிவிலக்கு வழங்கி உள்ளார்கள்.

"அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி), நூல்: அபூதாவூத் 901

திருக்குர்ஆனில் ஒரு விஷயம் கடமை என்று கூறப்பட்டு, அதற்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் விதிவிலக்கு அளிக்கப்பட்டால் அதை ஏற்றுச் செயல்படுவது தான் ஒரு முஃமின் மீது கடமையாகும். இதற்குப் பல்வேறு உதாரணங்களைக் காட்ட முடியும்.

உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் போர் செய்வது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:216)

இந்த வசனத்தில் "போர் செய்வது கடமை' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். தொழுகைக்கும், நோன்புக்கும் எந்த வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகின்றானோ அதே வார்த்தையைப் பயன்படுத்தி போரை அல்லாஹ் கடமையாக்கி உள்ளான். இதன் அடிப்படையில் பெண்களுக்கும் போர் கடமை என்று கூற முடியாது. ஏனெனில் போரிலிருந்து பெண்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளித்துள்ளார்கள்.

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளிப்பது, இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீயின் அடிப்படையிலானது தான். எனவே இதில் ஒன்றை ஏற்று, மற்றொன்றை மறுப்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாற்றமானதாகும். இவ்வாறு பாரபட்சம் காட்டுவோரை இறை மறுப்பாளர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் மறுத்து, 'சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப்போம்' எனக் கூறி, அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையே வேற்றுமை பாராட்டி இதற்கு இடைப்பட்ட வழியை உருவாக்க யார் எண்ணுகிறார்களோ அவர்கள் தாம் உண்மையாகவே (நம்மை) மறுப்பவர்கள். மறுப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

அல்குர்ஆன் 4:150, 151

--> Q/A Ehathuvam Magazine Jun 2010

ஜமாஅத் தொழுகையில் பின் வருபவர் தனித்துத் தொழ வேண்டுமா?

? ஜமாஅத் தொழுகையில் கடைசி வரிசை பூர்த்தியாகிய பின் வருபவர் தனித்துத் தொழ வேண்டுமா? அல்லது வரிசையில் உள்ளவரை இழுத்து அருகில் நிறுத்திக் கொள்ள வேண்டுமா?



வரிசையில் சேராமல் தனியாகத் தொழுவது செல்லாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

ஒரு மனிதர் வரிசைக்குப் பின்னால் தொழுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்ட போது தொழுகையை மீண்டும் தொழுமாறு அவருக்குக் கட்டளையிட்டனர்.

நூல்: திர்மிதி 213

இன்னும் பல நூல்களிலும் இது பதிவாகியுள்ளது.

இந்த ஹதீஸின் நம்பகத் தன்மையில் அறிஞர்கள் சந்தேகம் கொள்ளவில்லை. ஆயினும் இதை எப்படிப் புரிந்து கொள்வது என்பதில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.

வரிசையில் சேராமல் தனியாகத் தொழுதால் தொழுகை செல்லாது என்பது தெளிவாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

முன் வரிசையில் இடம் இருக்கும் போது அதில் சேராமல் தனித்து நிற்பவரை இது குறிக்குமா? அல்லது இடமிருந்தாலும் இடமில்லாவிட்டாலும் தனித்து நிற்பதைக் குறிக்குமா?

இதை நாம் முதலில் முடிவு செய்ய வேண்டும். இதைப் புரிந்து கொள்ள பின்வரும் ஹதீஸ் நமக்கு உதவுகிறது.

என் (தாய்வழிப்) பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்து (விருந்துண்ண) அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதைச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர், "எழுங்கள்! உங்களுக்காக நான் தொழுவிக்கிறேன்'' என்று கூறினார்கள். நான் (தொழுவதற்காக) எங்களுக்குரிய பாயொன்றை (எடுப்பதற்காக அதை) நோக்கி எழுந்தேன்; அதுவோ நீண்ட நாட்கள் விரித்ததனால் கருப்படித்துப் போய்விட்டிருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயின் மீது தொழுகைக்காக) நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்று கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இமாமாக நின்று உபரியான) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு (தமது இல்லம் நோக்கித்) திரும்பிச் சென்றார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புஹாரி 380

அனஸ் (ரலி) அவர்களின் தாயார் பெண் என்பதால் அவர்கள் ஆண்களுடன் சேரவில்லை. தனியாகத் தான் நின்றார்கள். அதாவது வரிசையில் சேர்வதற்கு வாய்ப்பு இல்லாத போது அவர்கள் தனியாக நின்றார்கள். தனியாக நிற்பவரின் தொழுகை செல்லாது என்றால் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்து இருக்க மாட்டார்கள்.

எனவே இதற்கு முரணில்லாத வகையில் புரிந்து கொள்வது அவசியம். வரிசையில் காலி இடம் உள்ள போது வரிசையில் சேர்வதை வெறுத்தோ அல்லது அந்த விஷயத்தில் அலட்சியம் காட்டியோ வரிசையில் சேராமல் ஒருவர் தனியாகத் தொழுதால் அவர் ஒழுங்கைக் கெடுத்தவராகிறார். இது போல் செய்தவரின் தொழுகை செல்லாது என்பதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி இருக்க வேண்டும். இப்படிப் புரிந்து கொண்டால் தான் மேற்கண்ட ஹதீஸுடன் ஒத்துப் போகும்.

நின்று தொழ வேண்டும் என்று கட்டளை இருக்கிறது. நிற்க முடியாதவருக்கு இந்தக் கட்டளை பொருந்தாது என்று நாம் புரிந்து கொள்கிறோம். இஸ்லாத்தின் எல்லாக் கட்டளைகளுமே இப்படித் தான் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அதாவது எந்தக் கட்டளையானாலும் இயலும் போது அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இப்படிப் புரிந்து கொள்ளாமல் வரிசை முடிந்து விட்டாலும் தனியாகத் தொழக் கூடாது என்று கூறினால் மேற்கண்ட ஹதீஸுக்கு அது முரண்படுவதுடன் மேலும் பல குழப்பங்களையும் ஏற்படுத்தும்.

கடைசியில் ஒருவர் வருகிறார். அவருக்கு வரிசையில் இடம் இல்லை. இவருடன் துணைக்குச் சேர யாருமே வரவில்லை என்றால் இவர் ஜமாஅத்தில் சேர முடியாது. ஜமாஅத் முடியும் வரை காத்திருந்து தனியாகத் தான் தொழ வேண்டிய நிலை ஏற்படும். இதனால் ஜமாஅத் தொழுகையின் நன்மையை அவர் இழக்கும் நிலை ஏற்படும்.

அல்லது முன் வரிசையில் உள்ளவரை இழுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

முதல் வரிசையின் நன்மையை நாடி முன் கூட்டியே வந்தவரை இழுத்து அவருக்கு முதல் வரிசையின் நன்மையை இல்லாமல் ஆக்குவது அநீதியாகும். மேலும் வரிசையைச் சீர்குலைக்கும் வேலையுமாகும். எனவே இடம் இல்லாவிட்டால் தனியாக நிற்கலாம்.

--> Q/A Ehathuvam Magazine Jun 2010

? முஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் ??

? முஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் இவ்வீட்டுக்குச் செல்லலாமா?



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவருக்கும் வெவ்வேறு நிலைபாடுகளை எடுத்துள்ளனர்.

நான் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயாரித்து, நபியவர்களை அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது திரைச் சீலையில் உருவம் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் வெளியேறி விட்டார்கள். பிறகு, "எந்த வீட்டில் உருவங்கள் உள்ளதோ அந்த வீட்டில் மலக்குகள் நுழைய மாட்டார்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: நஸயீ 5256

தமது மருமகன் அலீ (ரலி) அவர்கள் விருந்து ஏற்பாடு செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்த போது வீட்டில் உருவங்கள் உள்ள அலங்காரத் திரையைப் பார்த்தவுடன் வெளியேறி விட்டனர். உருவங்கள் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டனர்.

ஆனால் முஸ்லிமல்லாதவர்கள் விஷயத்தில் இப்படி நடந்து கொள்ளவில்லை.

நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அவர்களின் மனைவியரில் ஒருவர் அபிசீனியாவில் தாம் பார்த்த மாரியா எனப்படும் ஒரு கிறித்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார். அப்போது (ஏற்கெனவே) அபிசீனியா சென்றிருந்த உம்முசலமா (ரலி), உம்மு ஹபீபா (ரலி) ஆகிய இருவரும் அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களையும் பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை உயர்த்திய நபி (ஸல்) அவர்கள், "அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்துவிட்டால் அவரது அடக்கத்தலத்தின் மீது பள்ளிவாயில் எழுப்பி அதில் அவரது உருவப்படங்களை வரைந்து வைப்பார்கள்; அல்லாஹ்விடத்தில் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள் இவர்களே!'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி 1341

உருவம் வரைந்த கிறித்தவர்களைத் தான் கண்டித்தனர். நீங்கள் ஏன் அங்கு சென்றீர்கள் என்று தமது மனைவியரைக் கண்டிக்கவில்லை. அதன் அழகை வர்ணித்ததையும் கண்டிக்கவில்லை.

முஸ்லிம் அல்லாதவர்களின் வீடுகளில் சிலைகளோ இன்ன பிற உருவங்களோ இருந்தால் அங்கே நுழைவது தவறில்லை. அவர்களின் வழிபாட்டுத்தலங்களைப் பார்வையிடுவதும் தவறல்ல.

--> Q/A Ehathuvam Magazine Jun 2010

கருக்கலைப்பு செய்வது குற்றமா?

? கருக்கலைப்பு செய்வது குற்றமா?




திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் "உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்' என்று தெளிவான கட்டளை உள்ளது.

அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை. (அல்குர்ஆன் 6:140)

வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, "நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது'' என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான். (அல்குர்ஆன் 6:151)

வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும். (அல்குர்ஆன் 17:31)

நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்'' என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 60:12)

என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது, (அல்குர்ஆன்81:8,9)

குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லை.

குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்ற வசனம் அருளப்பட்ட காலத்தில் கருவில் வைத்து அழிக்கும் தொழில் நுட்பம் இருக்கவில்லை. குழந்தையைப் பெற்ற பின்னர் கொல்வது தான் வழக்கமாக இருந்தது. இந்த வசனங்கள் இதைத் தான் நேரடியாகக் குறிக்கின்றன.

ஆனால் குழந்தையாக உருவாவதற்கு முன் அதை அழிப்பது குழந்தையைக் கொல்வதில் அடங்குமா? என்பதை நாம் விரிவாக ஆராய வேண்டும்.

இஸ்லாத்தின் பார்வையில் உயிர்கள் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

உயிரினத்தின் இயக்கத்துக்கான உயிர் ஒரு வகை. மனிதன் என்பதற்கான உயிர் இன்னொரு வகை.

மனிதன் தவிர மற்ற உயிரினங்களுக்கு ஒரு வகையான உயிர் மட்டுமே உள்ளது. ஆனால் மனிதனிடம் மேற்கண்ட இரண்டு வகை உயிர்களும் உள்ளன.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 39:42)

அவனே இரவில் உங்களைக் கைப்பற்றுகிறான். பகலில் நீங்கள் செய்வதை அறிகிறான். நிர்ணயிக்கப்பட்ட தவணை நிறைவு செய்யப்படுவதற்காக பகலில் உங்களை எழுப்புகிறான். உங்கள் மீளுதல் அவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் 6:60)

மரணிக்கும் போது இறைவன் உயிர்களைக் கைப்பற்றுகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் தூக்கத்தின் போது உயிர்களைக் கைப்பற்றுவது நமக்கு புரியவில்லை.

தூக்கத்தின் போது உயிர்கள் கைப்பற்றினால்

எப்படி மூச்சுவிட முடிகின்றது?

எப்படி புரண்டு படுக்க முடிகிறது?

எறும்பு கடித்தால் நம்மை அறியாமல் எப்படித் தட்டி விட முடிகிறது?

உண்ட உணவு எப்படி ஜீரணமாகிறது?

இது போல் உடலில் பல இயக்கங்கள் நடைபெறுவதை நாம் பார்க்கிறோம்.

இந்த வகையில் பார்க்கும் போது, தூங்குபவரின் உயிர் கைப்பற்றப்படவில்லை என்று தெரிகிறது.

அதே நேரத்தில் தூக்கத்தில் நாம் சிந்திப்பதில்லை, கவலைப்படுவதில்லை, திட்டமிடுவதில்லை, மனனம் செய்வதில்லை. இது போல் பல காரியங்கள் தூக்கத்தில் நடப்பதில்லை என்பதைக் கவனிக்கும் போது உயிர் இல்லை என்பது போல் இருக்கிறது.

மனித உயிர்களில் இரு வகைகள் உள்ளன என்பதை இந்த வசனத்தில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

நாம் தூங்கும் போது கால்நடைகளைப் போன்ற உயிர் நமக்கு இருப்பதையும் மனிதனைப் போன்ற உயிர் நமக்கு இல்லாமல் போவதையும் நாமே உணர்கிறோம்.

நபி மொழிகளிலும் இரு வகையான உயிர்கள் மனிதனுக்கு உள்ளன என்பது கூறப்பட்டுள்ளது.

உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்:

உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்களில் ஒருங் கிணைக்கப்படுகின்றது. பிறகு அதே போன்ற காலத்தில் (அட்டை - கஊஊஈஐ போன்று) ஒரு கருக் கட்டியாக மாறுகின்றது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகின்றது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகின்றான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்கு என் னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசா-யா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுதுஎன்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத் திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரது விதி அவரை முந்திக் கொண்டு விடும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்.) ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொண்டு விடும். அதனால் அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி 3208, 3332, 6594

நாற்பது நாட்களாக மூன்று கட்டங்கள் அதாவது 120 நாட்கள் கடந்த பின்னர் தான் உயிர் ஊதப்படுகிறது என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. ஆனால் அதற்கு முன்னரே உயிர் இருந்ததால் தான் அது மூன்று நிலைகளை அடைய முடிந்தது; வளர முடிந்தது. மனிதன் என்பதைப் பிரித்துக் காட்டும் உயிர் 120வது நாளில் தான் ஊதப்படுகிறது என்பதும், அதற்கு முன் இருந்தது வேறு வகையான உயிர் என்பதும் இதில் இருந்து தெரிகிறது. பின்வரும் திருக்குர்ஆன் வசனமும் இதைத் தெளிவாகக் கூறுகிறது.

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். (அல்குர்ஆன் 23:14)

மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது. (அல்குர்ஆன் 22:5)

குழந்தையைக் கொல்லக் கூடாது என்று அல்லாஹ் கூறினால் அது எப்போது முதல் குழந்தையாக ஆகிறது என்பதை நாம் சிந்திக்கும் கடமை உள்ளது.

120 நாட்களுக்கு முன் கருவைக் கலைத்தால் அது குழந்தையைக் கொன்றதாக ஆகாது என்பதை இதில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

காண்டம் போன்றவற்றைப் பயன்படுத்தும் போது, விந்தில் உள்ள இலட்சக்கணக்கான உயிரணுக்கள் குழந்தையாக உருவாகாமல் நாம் தடுக்கிறோம். இதனால் குழந்தையைக் கொன்றதாக ஆகாது. அது போல் அடுத்த மூன்று நிலைகளில் வளர்ச்சியடையும் போதும் ஆகாது.

ஆனால் மனிதர்கள தனக்குக் கேடு விளைவிப்பவற்றைச் செய்யக் கூடாது என்று தடுக்கப்பட்டுள்ளனர். உருவான குழந்தையைக் கலைப்பது பெண்ணுக்குப் பெரும் கேடு விளைவிக்கும் என்று கண்டறிந்துள்ளார்கள். அந்த வகையில் 120 நாட்களுக்கு முன்னுள்ள கருவை அழிப்பதும் தடுக்கப்பட்டதாகும். குழந்தையைக் கொல்வது என்ற அடிப்படையில் அல்ல.

உயிருக்கு ஆபத்து அல்லது தாயின் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் பெரிய தீங்கில் இருந்து தப்பிக்க சிறிய தீங்கைச் செய்யலாம் என்ற அடிப்படையில் அது குற்றமாகாது.

அவ்வாறு ஏற்கத்தக்க காரணம் இல்லாமல் இதைச் செய்திருந்தால் அதற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேட வேண்டும். அல்லாஹ் எத்தகைய பாவத்தையும் மன்னிப்பவனாக இருக்கிறான்.

அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் "நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்'' எனக் கூறுவோருக்கும், (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். (அல்குர்ஆன் 4:17,18)

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)

--> Q/A Ehathuvam Magazine May 2010

ரப்பனா லகல்ஹம்து ஹம்தன் கசீரன் தையிபன் முபாரக்கன் பீஹி'' ??

? தொழுகையில் ருகூவில் இருந்து எழுந்த பிறகு "ரப்பனா லகல்ஹம்து ஹம்தன் கசீரன் தையிபன் முபாரக்கன் பீஹி'' என்று கூறுவது தேவையற்றது என்றும் மேலும் "ரப்பனா லகல் ஹம்து'' அல்லது "ரப்பனா வ லகல் ஹம்து'' அல்லது "அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து'' அல்லது "அல்லாஹும்ம ரப்பன வ லகல் ஹம்து'' என்று கூறுவதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டி தந்த வழி என்று தாங்கள் கூறுகிறீர்கள் . அதகு சாட்சியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல், செயல் என்பது தனி அந்தஸ்து உடையது என்றும் நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் தனி அந்தஸ்து உடையது என்றும் எனவே ரசூல் (ஸல்) அவர்களின் அங்கீகாரத்தை விட சொல், செயலே பிரதானமானது என்றும் வாதம் வைக்கின்றீர்கள்.



அப்படியென்றால் ஒட்டகம் குர்பானி கொடுப்பதில் நபி (ஸல்) அவர்கள் சொல்லியது, செய்தது எல்லாம் ஏழு நபர்களுக்கான அனுமதி தானே. பத்து நபர்கள் என்பது அங்கீகாரம் தானே, ஆனால் த.த.ஜ. சார்பில் சமீப காலமாக தாங்கள் ஒட்டகக் குர்பானியில் பத்து நபர்களை வலியுறுத்தி வருவது எவ்வாறு?


தொழுகையில் ஒரு கருத்தையும் குர்பானியில் ஒரு கருத்தையும் கொண்டிருப்பது தாங்கள் கூறிய நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் சம்பந்தமான வியாகியானதிற்குத் தாங்களே முரண்பட்டதாக ஆகாதா? தயவு செய்து விரிவான விளக்கம் தரவும்.

குறிப்பு : தொழுகையில் "ரப்பனா ...... ஹம்தன் கசீரன் .....பீஹி'' என்று கூறுவதை எங்களுக்கு கூறியவரே நீங்கள் தானே. இப்போது அதனை தாங்களே குறை கூறுவது சரிதானா?



மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல் என்பது பெரிய அந்தஸ்து உடையது செயல் என்பது சிறிய அந்தஸ்து உடையது என்று இருக்குமானால் அதை அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் தானே கூற வேண்டும். நகம் வெட்டுவதைக் கூட தம் சமூகத்தாருக்கு உரைத்துச் சென்ற அருமை நபிகள் (ஸல்) இதனை சொல்லாமல் விட்டுச் சென்றார்கள் என்பது உங்கள் கூற்றா?


உங்கள் கேள்விக்கு விடை அளிப்பதற்கு முன் அடிப்படையான ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறோம். ரப்பனா லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி என்பதை ஓத வேண்டும் என்று சொல்லித் தந்ததே நீங்கள் தான் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இத்தகைய கருத்து இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானதாகும். இப்படி கேட்பதற்கு நாம் அஞ்ச வேண்டும்.

நாங்கள் முதலில் சொன்ன ஒரு கருத்து தவறு என்று தெரிய வரும் போது நாங்கள் எப்படி நடக்க வேண்டும்? நாம் முன்னர் சொன்னதற்கு மாற்றமாகச் சொன்னால் நமது மதிப்பு குறையும் அல்லது இதை நடைமுறைப்படுத்தியவர்களின் அதிருப்தி ஏற்படும் என்று அஞ்சி உண்மையை மறைக்க வேண்டுமா? அல்லது அல்லாஹ்வுக்கு அஞ்சி உண்மையைச் சொல்ல வேண்டுமா? உங்களிடம் உள்ள இதே மனப்பான்மை அதிகமான முஸ்லிம்களிடம் உள்ளதால் தான் எத்தனையோ உலமாக்கள் காலம் கடந்து அறிந்து கொண்ட உண்மைகளைச் சொல்லத் தயக்கம் காட்டுகின்றனர்.

முன்பு சொன்னதற்கு மாற்றமாகச் சொல்லலாமா என்று சிந்திப்பதை விட்டு விட்டு முன்பு சொன்னது ஏற்கத்தக்கதாக உள்ளதா? இப்போது சொல்வது ஏற்கத் தக்கதாக உள்ளதா என்று சிந்திப்பது தான் சரியான பார்வை. மனிதன் தவறு செய்பவன் என்பதன் கருத்தும் இது தான். முன்பு சொன்னதை நாங்கள் மாற்றிக் கொள்ளக் கூடாது என்றால் தவறுக்கு அப்பாற்பட்டவர்களாக எங்களை நீங்கள் கருதுகிறீர்கள் என்பது தான் பொருள். இப்படி யாரைப் பற்றியும் கருத வேண்டாம்.

தக்க காரணத்துடன் மாற்றப்படுகிறதா அல்லது காரணம் இல்லாமல் மாற்றப்படுகிறதா? இரண்டு கருத்தில் எது சரியான பார்வையில் அமைந்துள்ளது என்பதை மட்டும் பாருங்கள்.

தொழுகையில் ருகூவிலிருந்து எழுந்த பிறகு "ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி' என்று கூறுவது நபிவழி என்ற கருத்துக்குப் பின்வரும் ஹதீஸ் அடிப்படையாக உள்ளது.

நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்)தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்திய போது "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் "ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ - எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. தூய்மையும் சுபிட்சமும் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன்'' என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், "(இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார்?'' என்று கேட்டார்கள். அந்த மனிதர், "நான்தான்'' என்றார். "முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் "இதை நம்மில் முதலில் பதிவு செய்வது யார்' என (தமக்கிடையே) போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி), நூல்: புகாரி 799

மேற்கண்ட இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது தொழுகையில் ருகூவிற்குப் பிறகு இவ்வாறு கூறுவதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்து விட்டார்கள் என்றும், நாமும் ருகூவிற்குப் பிறகு அவ்வாறு கூறலாம் என்றும் நமக்குத் தோன்றுகிறது.

ஆனால் இதே சம்பவம் அனஸ் (ரலி) அவர்கள் வழியாக முஸ்லிமில் இடம் பெறுகிறது. இந்த அறிவிப்பில் அந்த மனிதர் இந்த வாசகத்தை எதற்காகச் சொன்னார்? எந்தச் சூழ்நிலையில் சொன்னார்? என்ற கூடுதல் விபரம் இடம் பெற்றுள்ளது.

ஒரு மனிதர் மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகை வரிசையில் சேர்ந்து, "அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி' (தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் "உங்களில் இவ்வார்த்தைகளை மொழிந்தவர் யார்?'' என்று கேட்டார்கள். மக்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்), "உங்களில் இதை மொழிந்தவர் யார்? ஏனெனில், அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை'' என்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் "நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில் சேர்ந்தேன். ஆகவே, இவ்வாறு சொன்னேன்'' என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே "இதை எடுத்துச் செல்பவர் யார்' எனும் விஷயத்தில் போட்டியிட்டுக்கொண்டிருந்ததை நான் கண்டேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), முஸ்லிம் (1051)

அந்த மனிதர் ருகூவுக்குப் பின் இதைக் கூற வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்லவில்லை. மாறாக ருகூவு கிடைக்குமோ அல்லது தவறி விடுமோ என்று அவர் மூச்சிறைக்க வேகமாக வருகிறார். அவர் வேகமாக வந்ததால் ருகூவு கிடைத்து விடுகிறது. இந்த மகிழ்ச்சியில் அல்லாஹ்வைப் புகழ்வதற்காகத் தான் மேற்கண்ட வாசகத்தைக் கூறினார் என்பது இதிலிருந்து தெரிகிறது.

நமக்கு ஒரு நன்மை கிடைக்கும் போது அதற்கு நன்றி செலுத்துவதற்காக இந்த வாசகத்தைக் கூறுவது மிகச் சிறந்தது என்று தான் இந்த ஹதீஸிலிருந்து சட்டம் எடுக்க வேண்டும்.

ருகூவிற்குப் பிறகு இவ்வாறு கூறுவது மிகச் சிறந்தது என்று சட்டம் எடுப்பது கூடாது. ஏனென்றால் ருகூவிற்குப் பிறகு இதைக் கூற வேண்டும் என்று அந்த நபித்தோழர் நாடவில்லை.

இந்த வாசகத்தைக் கூறினால் வானவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு இதை அல்லாஹ்விடம் கொண்டு செல்வதாக நபி (ஸல்) அவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

இந்த வாசகத்தை ருகூவிற்குப் பிறகு சொன்னால் தான் இந்த சிறப்பு கிடைக்குமென்றால் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இப்படிப்பட்ட சிறப்பைப் பெற்றுத் தரும் இந்த வாசகத்தை கூறாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

மேலும், இனிமேல் எல்லோரும் இன்று முதல் ருகூவிற்குப் பிறகு அவர் சொன்ன அதே வாசகத்தைத் தான் கூற வேண்டும் என்ற கட்டளையும் நபிகளார் பிறப்பிக்கவில்லை.

குறிப்பிட்ட அந்த நபித்தோழராவது ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இந்த வாசகத்தை சொல்லி வந்தார் என்பதற்கும் எந்தச் சன்றையும் நம்மால் காண முடியவில்லை.

வானவர்கள் எடுத்துச் செல்ல போட்டி போடுகின்றார்கள் என்று சொல்லக் கூடிய அளவுக்கு சிலாகித்துச் சொன்ன பிறகும் அந்த வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையிலுமோ, அல்லது எப்போதாவது, ஏதாவது ஒரு தொழுகையின் போதோ கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை.

மாறாக, அவர்கள் தனது தொழுகைகளில் ருகூவிற்குப் பிறகு ரப்பனா வலகல் ஹம்து என்று மட்டுமே கூறியதாகப் பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்ட பிறகு இறைவனைப் புகழ்வதற்காக இதே வாசகத்தைக் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தமது உணவு விரிப்பை எடுக்கும்போது "அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா'' என்று பிரார்த்திப்பார்கள். பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி), நூல்: புகாரி 5458

எனவே நமக்கு ஒரு நன்மை ஏற்பட்டு அதற்காக இறைவனைப் புகழ வேண்டிய நேரங்களில் இந்த வாசகத்தைக் கூறினால் அப்போது இதை வானவர்கள் போட்டி போட்டுக்கொண்டு இறைவனிடம் கொண்டு செல்கிறார்கள் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்து. மாறாக தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் இவ்வாறு கூறினால் இந்த சிறப்பு கிடைக்கும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.

நபிகள் நாயகத்தின் அங்கீகாரமும் மார்க்க ஆதாரம் தான். அவர்கள் எதை அங்கீகரித்தார்கள் என்பதை நாம் சரியாக விளங்க வேண்டும். ருக்கூவுக்குப் பிறகு ஒவ்வொருவரும் இதைக் கூற வேண்டும் என்பதற்காக அங்கீகரிக்கவில்லை.

அப்படியானால் ருகூவு கிடைக்காது என்ற சந்தேகத்துடன் ஓடி வருபவர் ருகூவு கிடைத்து விட்டால் மகிழ்ச்சியடைந்து இந்த துஆவைக் கூறலாமா? இதை மட்டும் பார்க்கும் போது கூறலாம் என்று தோன்றினாலும் வேகமாக ஓடி வருவதைப் பின்னர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்து விட்டார்கள்.

(ஒரு முறை) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது சிலர் (தொழுகையில் வந்து சேர அவசரமாக வந்ததால் உண்டான) சந்தடிச் சப்தத்தைத் செவியுற்றார்கள். தொழுது முடிந்ததும், "உங்களுக்கு என்ன ஆயிற்று (ஏன் சந்தடி எழுந்தது)?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம் (அதனால் சலசலப்பு ஏற்பட்டது)'' என்று பதிலüத்தனர். அதற்கு

நபி (ஸல்) அவர்கள், "இவ்வாறு செய்யாதீர்கள் தொழுகைக்கு வரும்போது நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். (இமாமுடன்) கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போன (ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) பூர்த்தி செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ரலி), நூல்: புகாரி 635

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கூட்டுத் தொழுகைக்காக) இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்கு நடந்து செல்லுங்கள். அப்போது நிதானத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள். அவசரப்பட்டு ஓடிச் செல்லாதீர்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதை (பின்னர்) பூர்த்தி செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 636

வேகமாக வந்து தொழுகையில் இணைவது தடை செய்யப்பட்டு விட்டதால், ஹம்தன் கஸீரன்... என்று கூறிய அந்த நபித்தோழரைப் போல் வேகமாக ஓடி வந்து ருகூவை அடைவதற்கு இனி மேல் அனுமதி இல்லை.

--> Q/A Ehathuvam Magazine Mar 2010

பள்ளிவாசலில் விற்பதும் வாங்குவதும் தடை ??

? பள்ளிவாசலில் விற்பதும் வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. மார்க்கப் புத்தகங்கள், பயான் சிடிக்கள் ஆகியவற்றை விற்பதன் நிலை என்ன?

பள்ளிவாசலில் கவிதைகள் இயற்றுவதையும், விற்பதையும் வாங்குவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (நூல் திர்மிதி 296)


ஆனாலும் பொது நலன் சார்ந்த, பள்ளிவாசல் நிர்வாகம் சார்ந்த பொருட்களை விற்பதையும் வாங்குவதையும் இது கட்டுப்படுத்தாது.

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்குகொண்டுவிட்டுத் திரும்பி வந்துகொண்டு) இருந்தேன்; அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, "ஜாபிரா?'' என்று கேட்டார்கள். நான், "ஆம்!'' என்றேன். "என்ன விஷயம் (ஏன் பின்தங்கிவிட்டீர்)?'' என்று கேட்டார்கள். "என் ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன்!'' என்றேன். நபி (ஸல்) அவர்கள் கீழே இறங்கிதலைப் பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் எனது ஒட்டகத்தைத் தட்டி(எழுப்பி)னார்கள். பிறகு "(உமது வாகனத்தில்) ஏறுவீராக!'' என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபி (ஸல்) அவர்களைவிட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீர் மணமுடித்துவிட்டீரா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்!'' என்றேன். "கன்னியையா? கன்னிகழிந்த பெண்ணையா?'' என்று கேட்டார்கள். "கன்னிகழிந்த பெண்ணைத் தான்!'' என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக் குலாவி மகிழலாமே!'' என்று கூறினார்கள்.

நான், "எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்!'' என்றேன். நபி (ஸல்) அவர்கள், "இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்துகொள்வீராக! நிதானத்துடன் நடந்துகொள்வீராக!'' என்று கூறிவிட்டு பின்னர், "உமது ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடுகிறீரா?'' என்று கேட்டார்கள். நான், "சரி (விற்று விடுகிறேன்!)'' என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஒரு ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கிக் கொண்டார்கள். பிறகு, எனக்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்றுவிட்டார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். "இப்போது தான் வருகிறீரா?'' என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் "ஆம்!'' என்றேன். "உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!'' என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடை போட்டுச்சற்று தாரளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று விட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்!'' என்றார்கள். நான் (மனத்திற்குள்) "இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை'' என்று கூறிக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், "உமது ஒட்டகத்தை எடுத்துக்கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக!'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 2097

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு, பைத்துல் மால் பொது நிதியில் இருந்து ஒட்டகத்தை வாங்கியுள்ளதால் ஜமாஅத் நன்மை, சமுதாய நன்மை சார்ந்த வியாபாரம் பள்ளிவாசலில் செய்யத் தடை இல்லை.

--> Q/A Ehathuvam Magazine May 2010

பெண்கள் எவ்வளவு தூரம் தனியாகப் பயணம் செய்யலாம்?

பெண்கள் எவ்வளவு தூரம் தனியாகப் பயணம் செய்யலாம்?

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கி விட்டோம் என்று பெண்ணுரிமை இயக்கங்கள் பீற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த இட ஒதுக்கீடெல்லாம் பெண்களுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்து விடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். என்ன தான் ஒரு பெண், எம்.பி.யாக இருந்தாலும் தலைநகர் டெல்லியில் தனியாக இரவு நேரத்தில் சுதந்திரமாக நடந்து வர முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. இது தான் உண்மை. இந்த உண்மை மனிதச் சட்ட நாயகர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் புரியவும் மாட்டார்கள். ஆனால் இஸ்லாமிய மார்க்கம் ஓர் இயற்கை மார்க்கம்.


உண்மை வழியில் நின்று உமது முகத்தை இம்மார்க்கத்தை நோக்கி நிலைப்படுத்துவீராக! இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றுதலும் இல்லை. இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 30:30)

இந்த இயற்கை மார்க்கம், பெண்களின் இயல்பை, பலவீனத்தைப் புரிந்து பெண்களுக்கென்று வாழ்க்கைப் பயணத்திலும் வழிப் பயணத்திலும் ஒரு சரியான வழிகாட்டலை வழங்குகின்றது.

அந்த வழிகாட்டல் தொடர்பாக நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் புகாரியில் பதிவாகியுள்ளன. ஆனால் அந்த ஹதீஸ்களில் முரண்பாடுகள் தென்படுகின்றன. இதைப் பற்றிய விளக்கத்தைப் பார்க்கும் முன் அந்த ஹதீஸ்களை முதலில் பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1088, முஸ்லிம் 2386

இந்த ஹதீஸ் ஒரு நாள் தூரம் பயணம் செய்யக் கூடாது என்று கூறுகின்றது.

நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு விஷயங்களைச் செவியுற்றேன்:

1. ஒரு பெண் கணவனோ (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினரோ உடன் இல்லாமல் இரண்டு நாட்கள் தொலைவுக்குப் பயணம் செய்யக் கூடாது.

2. நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது.

3. சுப்ஹுத் தொழுததிலிருந்து சூரியன் உதிக்கும் வரையும் அஸ்ர் தொழுததிலிருந்து அஸ்தமனம் வரையும் தொழக் கூடாது.

4. மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல்மக்திஸ்), எனது (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசல் ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிவாசல்களுக்கு (நன்மையை நாடிப்) பயணம் மேற்கொள்ளக் கூடாது.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 1197

இந்த ஹதீஸில் இரண்டு நாட்கள் என்று உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாக) மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1086, முஸ்லிம் 2381

இந்த ஹதீஸ் மூன்று நாட்கள் என்று குறிப்பிடுகின்றது.

இந்த 3 ஹதீஸ்களும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் குழப்பமோ, கோளாறோ, முரண்பாடோ கிடையாது.

பொதுவாக ஒரு ஹதீஸ் இன்னொரு ஹதீசுடன் முரண்படுவது போல் தோன்றினால்,

1. அந்த இரு ஹதீஸ்களையும் இணைத்து கருத்துக் காண வேண்டும்.

ஆனால் இங்கு அவ்வாறு இணைத்துக் கருத்துக் காண்பதற்கு வழியில்லை.

ஒரு நாள் பயணம் என்ற ஹதீஸ் சரியானது என்று வைத்துக் கொண்டால் இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் என்று அறிவிக்கப்படும் இரு ஹதீஸ்களையும் அது மறுக்கின்றது.

இப்படி ஒவ்வொரு ஹதீஸும் மற்ற இரண்டு ஹதீஸ்களை மறுக்கின்றன.

2. இது போன்ற நேரத்தில் இம்மூன்றும் வெவ்வேறு கால கட்டத்தில் கூறப்பட்டதற்கு ஆதாரம் இருந்தால் கடைசியாகக் கூறப்பட்டதை நாம் எடுத்துக் கொள்ளலாம். மற்ற இரண்டும் முன்னர் கூறப்பட்டுப் பின்னர் மாற்றப்பட்டு விட்டது என்று முடிவு செய்தால் முரண்பாடு நீங்கி விடும். ஆனால் இம்முன்றில் இது தான் இறுதியானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட செய்திகள் வரும் போது அவை அனைத்தையும் நாம் நிறுத்தி வைக்க வேண்டும். இம்மூன்று ஹதீஸ்களுமே சரியான ஹதீஸ்கள் அல்ல என்ற முடிவை எடுத்து வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தான் இந்தப் பிரச்சனைக்கு முடிவு காண வேண்டும். இது தான் இஸ்லாத்தின் அடிப்படையாகும். இது தான் தர்க்க ரீதியாகவும் சரியானதாகும். முரண்பட்ட மூன்றையும் யாராலும் நடைமுறைப்படுத்த முடியாது.

வேறு ஆதாரங்களைத் தேடும் போது இந்த விஷயத்தில் சரியான முடிவு எடுக்கத்தக்க ஆதாரம் கிடைக்கிறது.

பெண்களின் பயணம் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு ஒரு வரையறையை நிர்ணயிப்பதற்குக் காரணம், இந்த வரையறை இல்லையென்றால் பெண்களின் கற்புக்குக் குந்தகம் ஏற்பட்டு விடும். அல்லது ஒரு பெண் தானே வலியத் தவறி விடுவாள். இதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் இப்படியொரு வரையறையை நிர்ணயிக்கின்றார்கள்.

இந்த வரையறையில் 3 நாட்கள் ஒருபுறமிருக்கட்டும்! ஒரு நாள் அதாவது 24 மணி நேரங்கள் கூட இது போன்ற தவறுகள் நிகழ்வதற்கு மாபெரும் அவகாசம்.

அதுவும் இந்த நவீன காலத்தில், போக்குவரத்துப் புரட்சி உள்ள காலத்தில் இந்த அவகாசம் சாதாரண ஒன்றல்ல! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்படி ஓட்டை, உடைசல் உள்ள சட்டத்தைத் தருவார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

அப்படியானால் எங்கோ ஓரிடத்தில் குழப்பம் இருக்கின்றது என்று நாம் பார்த்தாக வேண்டும். அந்தக் குழப்பம் வேறெங்குமில்லை. அது அறிவிப்பாளர்களின் புரிதலில் தான் ஏற்பட்டுள்ளது. இதை நாம் யூகத்தின் அடிப்படையில் முடிவு செய்யவில்லை. தப்ரானியில் இடம் பெற்றுள்ள, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இதை நமக்கு விளக்குகின்றது. அந்த ஹதீஸ் இது தான்.

கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர ஒரு பெண் மூன்று மைல்கள் தூரத்திற்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தவுடன், "மக்கள் மூன்று நாட்கள் என்று கூறுகிறார்களே!'' என்று அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), "இது அவர்களது யூகம் தான்'' என்று பதிலளித்தார்கள்.

நூல்: தப்ரானி

புகாரியில் இடம்பெற்றுள்ள முரண்பட்ட மூன்று ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள், தாங்கள் விளங்கிய தவறான விளக்கத்தின் அடிப்படையிலேயே அறிவிக்கின்றார்கள்.

ஆனால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதற்குத் தெளிவான விளக்கத்தை அளித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சரியான வழிகாட்டலைத் தெரிவிக்கின்றார்கள். அந்த வழிகாட்டல் அடிப்படையில் நாம் அனைவரும் செயல்படுவோமாக!

--> Q/A Ehathuvam Magazine Apr 2010

ஜும்ஆ உரை நிகழ்த்துவது குறித்து போஸ்டர்கள் ??

? எஸ்.பி. பட்டிணம் பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பி.ஜே. கலந்து கொண்டு ஜும்ஆ உரை நிகழ்த்துவது குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. லட்சக்கணக்கில் செலவு செய்து ஹஜ்ஜுக்குச் செல்லும் போது அதை விளம்பரப்படுத்தினால் நன்மை கிடைக்காது; பெருமையடிப்பதற்காக நரகம் தான் கிடைக்கும் என்பது நமது நிலைபாடு. அதை விடச் சாதாரண வணக்கமான ஜும்ஆ தொழுகை குறித்து விளம்பரம் செய்வது சரியான செயலா? விளக்கவும்.


குறிப்பிட்ட பள்ளிவாசலில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஜும்ஆ நடைபெறப் போகின்றது; அந்த ஜும்ஆவில் பி.ஜே. உரையாற்றுகின்றார் என்பதை மக்களுக்கு அறிவிப்பதற்காகப் போஸ்டர் ஒட்டப்படுகின்றது. இதில் விளம்பர நோக்கமோ, பெருமையடிப்பதோ என்ன இருக்கின்றது? பிரச்சார நோக்கத்திற்காகச் செய்யப்படும் எந்த விளம்பரமும் பெருமையடிப்பதாகாது. அப்படிப் பார்த்தால் மார்க்கப் பிரச்சாரம் எதற்காகவும் விளம்பரம் செய்யக்கூடாது; போஸ்டர் ஒட்டக் கூடாது என்று கூற வேண்டி வரும்.

ஒரு குறிப்பிட்ட பிரச்சாரகர் ஜும்ஆ உரையாற்றுகின்றார் என்றோ, அல்லது ஒரு குறிப்பிட்ட தலைப்பில் உரை நிகழ்த்தப்படுகின்றது என்றோ மக்களுக்கு அறிவிப்பதன் மூலம் அந்த ஜும்ஆவில் நிகழ்த்தப்படும் பிரச்சாரம் அதிகமான மக்களைச் சென்றடையும் என்றால் அந்த அறிவிப்பும் ஒரு வகையில் அழைப்புப் பணி தான். அழைப்புப் பணியைப் பொறுத்த வரை மார்க்கத்தில் பொதுவான அனுமதி உள்ளது.

ஹஜ்ஜுக்குச் செல்பவர் தனது ஹஜ்ஜை விளம்பரம் செய்வதை இதனுடன் ஒப்பிடவே முடியாது. நான் இன்று ஜும்ஆ தொழப் போகிறேன் யாரேனும் விளம்பரம் செய்தால் இவ்வாறு ஒப்பிடுவதில் ஓர் அர்த்தமிருக்கும். ஏனெனில் அது முகஸ்துதி. பிறர் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் வணக்கம் தான் முகஸ்துதியாகும்.

ஜும்ஆ பிரச்சாரத்தைப் பொறுத்த வரை அப்படி யாரும் விளம்பரம் செய்வதில்லை. இந்த அழைப்பாளர் பிரச்சாரம் செய்கிறார்; அதைக் கேட்டுப் பயன் பெறுங்கள் என்று கூறுகிறோம். இது முகஸ்துதி அல்ல; அறிவிப்பு தான். இவ்வாறு அறிவிப்பதில் வணக்கத்தை விளம்பரப்படுத்துவதோ, பெருமையடிப்பதோ இல்லை. இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

--> Q/A Ehathuvam Magazine Mar 2010

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் ??

? தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகை இல்லை என்று ஹதீஸ் உள்ளது. இந்த ஹதீஸின் அடிப்படையில் இகாமத் சொல்லும் போது ஏற்கனவே சுன்னத் தொழுது கொண்டிருக்கும் ஒருவர் அந்தத் தொழுகையை முறித்து விட்டு, கடமையான தொழுகையில் போய் இணைந்து கொள்ள வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது சரியா?




நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான (அந்தத்) தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 1281)

இந்த ஹதீஸின் அடிப்படையில், இகாமத் சொல்லப்படும் போது, ஏற்கனவே சுன்னத் தொழுது கொண்டிருப்பவர் தனது தொழுகையை முறித்துக் கொண்டு கடமையான தொழுகையில் போய் இணைய வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. ஏனென்றால் தொழுகை என்றால் அதன் துவக்கம் தக்பீர்; அதன் முடிவு ஸலாம் கொடுத்தல் என்று நபி (ஸல்) அவர்கள் வரையறுத்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறித் தொழுகையைத் துவக்குவார்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்... என்று (குர்ஆன்) ஓத ஆரம்பிப்பார்கள். ருகூஉச் செய்யும்போது தலையை உயர்த்தவுமாட்டார்கள்; ஒரேடியாகத் தாழ்த்தவுமாட்டார்கள். மாறாக, நடுநிலையாக வைத்திருப்பார்கள். ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தினால் நிமிர்ந்து நிற்காமல் சஜ்தாவுக்குச் செல்லமாட்டார்கள். சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தினால் நேராக நிமிர்ந்து உட்காராமல் (இரண்டாவது) சஜ்தாச் செய்யமாட்டார்கள். ஒவ்வோர் இரண்டு ரக்அத்திலும் அத்தஹிய்யாத் ஓதுவார்கள். (அந்த அமர்வில்) இடது காலை விரித்து வைத்து, வலது காலை நட்டு வைப்பார்கள். மேலும், ஷைத்தான் உட்காருவதைப் போன்று உட்கார வேண்டாம் என்றும், மிருகங்கள் உட்காருவதைப் போன்று முழங் கைகளைத் தரையில் பரப்பி வைத்து உட்கார வேண்டாம் என்றும் தடை விதித்துவந்தார்கள். அவர்கள் சலாம் கூறியே தொழுகையை முடிப்பார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 857)

தொழுகையின் திறவு கோல் தூய்மை (உளூ) ஆகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர் கூறுவது) அதனை முடிப்பது தஸ்லீம் (ஸலாம் கொடுப்பது) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 56, 523 திர்மிதி 3, 221, இப்னு மாஜா 271, அஹ்மத் 957, 1019

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இந்நடைமுறைக்கு மாற்றமாக தொழுகையை இடையிலேயே முறிக்க வேண்டும் என்றால் அதற்குத் தெளிவான ஆதாரம் இருக்க வேண்டும். இகாமத் சொல்லப்பட்டால் வேறு தொழுகை இல்லை என்ற ஹதீஸ் அடிப்படையில், சுன்னத் தொழுது கொண்டிருப்பவர் அதைப் பாதியிலேயே விட்டு விட வேண்டும் என்று கூறினால் அது இந்த ஹதீசுக்கு முரணாக அமைந்து விடும். எனவே இதற்கு முரணில்லாத வகையில் தான் இகாமத் சம்பந்தப்பட்ட ஹதீஸை விளங்க வேண்டும்.

இகாமத் சொல்லப்பட்டு விட்டால் வேறு தொழுகை இல்லை என்றால், அதற்குப் பிறகு வேறு தொழுகையைத் துவங்கக் கூடாது என்று பொருள் கொண்டால் இரண்டு ஹதீஸ்களுக்கும் எவ்வித முரண்பாடும் ஏற்படாது.

அதாவது, இகாமத் சொல்லப்பட்ட பிறகு கடமையான தொழுகையைத் தொழாமல் சுன்னத் தொழ ஆரம்பிப்பதை இந்த ஹதீஸ் தடை செய்கின்றது. அதே சமயம் ஏற்கனவே தொழுது கொண்டிருப்பவர் தமது தொழுகையை நிறைவு செய்து ஸலாம் கூறி முடித்த பின்னர் கடமையான தொழுகையில் போய் இணைந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பொருள் கொண்டால் மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களையும் செயல்படுத்த முடியும்.

--> Q/A Ehathuvam Magazine Mar 2010

இறை நேசர்கள் யார் ??

? இறை நேசர்கள் யார் என்பதை மனிதர்கள் யாராலும் கண்டு பிடிக்க முடியாது; அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் என்று கூறி வருகிறீர்கள். ஆனால் புகாரி 1367வது ஹதீஸில், இறந்துவிட்ட ஒருவரை மக்கள் நல்லவர் என்று புகழும் போது அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். எனவே மக்கள் யாரை இறைநேசர் என்று தீர்மானிக்கின்றாரோ அவர் இறைநேசராகத் தான் இருப்பார் என்று கப்ரு வணங்கிகள் பிரச்சாரம் செய்கிறார்களே! இதற்கு விளக்கம் என்ன?



இறைநேசர்கள் யார் என்று மக்களால் தீர்மானிக்க முடியாது என்பதை நாம் சுயமாகக் கூறவில்லை. திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையிலேயே கூறுகின்றோம்.

அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள். அல்குர்ஆன் 10:62, 63

இந்த வசனத்தில் இறை நேசர்கள் யார் என்ற இலக்கணம் கூறப்படுகிறது. நம்பிக்கை கொள்வதும், இறைவனை அஞ்சுவதுமே அந்த இலக்கணம்.

ஒருவர் இறைவனை உண்மையாகவே நம்புகிறாரா? இறைவனை அஞ்சுகிறாரா? என்பதை யாராலும் அறிய முடியாது. ஏனெனில் இவ்விரு தன்மைகளும் வெளியில் தெரிபவை அல்ல. உள்ளங்களில் இருப்பவையாகும்.

யார் இறை நேசர்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்பதையே இவ்வசனங்கள் கூறுகின்றன.

மேலும் நம்முடைய வெளிப்படையான பார்வைக்கு ஒருவர் எவ்வளவு நல்லவராகத் தெரிந்தாலும் அவர் நம்முடைய பார்வைக்குத் தான் நல்லவரே தவிர இறைவனுடைய பார்வையிலும் அவர் நல்லவர் தான் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது. இதற்கு ஹதீஸ்களிலேயே ஏராளமான சான்றுகளை நாம் பார்க்க முடியும்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்ற போது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், உறுதியாகி விட்டது என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்ற போது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், உறுதியாகி விட்டது எனக் கூறினார்கள். உமர் (ரலி) எது உறுதியாகி விட்டது? எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள், இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள்; எனவே இவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள் எனக் கூறினார்கள். நூல்: புகாரி 1367

மேற்கண்ட ஹதீஸில் மக்கள் ஒருவரை நல்லவர் என்று புகழ்ந்தால் அவர் சொர்க்கவாசி என்றும் மக்கள் ஒருவரைக் கெட்டவர் என்று புகழ்ந்தால் அவர் நரகவாசியென்றும் தீர்மானிக்கலாம் என்பது போல் தெரிகிறது.

மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் கூறிய முழுமையான சில வாசகங்கள் விடுபட்டுள்ளன. இதன் காரணமாகத் தான் மக்கள் தீர்மானிக்கலாம் என்பது போன்ற கருத்து வருகிறது. நபியவர்கள் கூறிய முழுமையான வாசகங்கள் மற்ற ஹதீஸ்களில் வந்துள்ளன.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் ஒரு தடவை நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு ஜனாஸா கடந்து சென்றது. அப்போது நபியவர்கள், இது யார்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், இது இன்னாருடைய ஜனாஸா என்றும் அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிப்பவராக இருந்தார் என்றும் அல்லாஹ்விற்கு வழிப்பட்டு நல்லமல்கள் செய்பவராகவும் அதற்கு முயற்சிப்பவராகவும் இருந்தார் என்றும் கூறினார்கள். உடனே நபியவர்கள் உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது மக்கள், இது இன்னாருடைய ஜனாஸா என்றும் அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் வெறுப்பவராக இருந்தார் என்றும் இறைவனுக்கு மாறு செய்யும் காரியங்களைச் செய்பவராகவும் அதற்கு முயற்சிப்பவராகவும் இருந்தார் என்றும் கூறினார்கள். உடனே நபியவர்கள், உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது என்று கூறினார்கள். அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! முதலாவது ஜனாஸாவை மக்கள் புகழ்ந்த போதும் உறுதியாகி விட்டது என்றீர்கள். மற்றொன்றை மக்கள் இகழ்ந்த போதும் உறுதியாகி விட்டது என்றீர்கள் (அதன் விளக்கம் என்ன?) என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், பூமியில் அல்லாஹ்விற்கென்று மலக்குமார்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என்பதில் மக்களின் நாவுகளில் பேசுகிறார்கள் என்று கூறினார்கள்.
நூல்: ஹாகிம், பாகம்: 1, பக்கம்: 533)

மக்கள் தாமாகப் பேசுவதில்லை. மாறாக மலக்குமார்கள் தான் மக்களின் நாவுகளில் ஒருவன் நல்லவனா கெட்டவனா என்று பேசுகிறார்கள். நபியவர்கள் இறைத் தூதர் என்பதால் தான் மக்கள் நாவில் பேசியது மலக்குகள் என்பதை அல்லாஹ் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தான். இதன் காரணமாக மக்கள் புகழ்ந்தவரை சொர்க்கவாசி என்றும் மக்கள் இகழ்ந்தவரை நரகவாசி என்றும் நபியவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

ஆனால் மக்கள் ஒருவரைப் பற்றிக் கூறும் வார்த்தைகள் மலக்குமார்கள் பேசியதா என்பதை நம்மில் யாரும் தீர்மானிக்க இயலாது.

அதனால் தான் இன்று மக்களால் இறைநேசர் என்று போற்றப்படும் எத்தனையோ பேர் இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாற்றமான காரியங்களைச் செய்தவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம்.

சதாவும் போதையில் இருந்தவர்களையும், பீடி புகைத்துக் கொண்டிருந்தவர்களையும் கூட, பீடி மஸ்தான் அவ்லியா என்று கூறி சிலர் வணங்கி வருகின்றனர்.

தமிழ் இலக்கியம் என்ற பெயரில், கல்லையும் மண்ணையும் கடவுள் என்று சித்தரித்துப் பாடி, ஓரிறைக் கொள்கைக்கு வேட்டு வைத்தவர்கள் கூட இன்று அவ்லியாக்கள் என்று கப்ரு வணங்கிகளால் கொண்டாடப்படுகின்றனர்.

தொழுகையே இல்லாதவர்களையும், இஸ்லாம் கூறியுள்ள எந்த அம்சத்தையும் பின்பற்றாமல் பண்டார, பரதேசிகளாகப் பிச்சை எடுத்துத் திரிபவர்களையும் அவர்களது மரணத்திற்குப் பின், மக்களில் சிலர் அவ்லியாக்கள் என்று தீர்மானித்து விடுவதால் அவர்கள் இறைநேசர்களாகி விடுவார்கள் என்று வாதிடுவது எவ்வளவு பெரிய அறிவீனம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

எனவே மக்கள் ஒருவரைப் புகழ்ந்து பேசினால் அவர் நல்லவர் தான், இறைநேசர் தான் என்று தீர்மானித்தால் அவர் இணை கற்பிக்கும் காரியத்தைச் செய்தவராவார்.

--> Q/A Ehathuvam Magazine Dec 2009

உருவப் படங்கள் உள்ள வீட்டில் மலக்குமார்கள் ??

? உருவப் படங்கள் உள்ள வீட்டில் மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள் என்பது சரியான ஹதீஸாகும். இந்நிலையில் மார்க்க அறிஞர்கள் தொலைக் காட்சிகளில் உரை நிகழ்த்தும் போது மலக்குமார்களின் நிலை என்ன? நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? விளக்கவும்.


எந்த வீட்டில் உருவச் சிலைகளும், நாய்களும் உள்ளனவோ அங்கே மலக்குகள் (வானவர்கள்) நுழைய மாட்டார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ தல்ஹா (ரலி) நூல்: புகாரி 3224, 5957

உருவப் படங்கள் என்பதில் தொலைக்காட்சி, வீடியோவில் தோன்றும் உருவங்கள் சேராது. உருவப் படங்களுக்கும், தொலைக்காட்சி, வீடியோவுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

காணப்படுவது, பிரதிபலிப்பது எல்லாம் படங்கள் அல்ல. பதிவதும், நிலைத்திருப்பதுமே படங்கள்.

நமது முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறோம். நமது உருவம் கண்ணாடியில் தெரிவதால் காண்ணாடியை யாரும் உருவப் படம் என்று சொல்வதில்லை. கண்ணாடி பார்த்தால் மலக்குகள் வருவதில்லை என்றும் கூறுவதில்லை.

கண்ணாடியில் தெரிவதைப் படம் என்று சொல்லாமலிருக்க என்ன காரணம் கூறுவோம்?

நம் உருவம் கண்ணாடியில் பதியவும் இல்லை. நிலைத்திருக்கவும் இல்லை. நாம் முன்னால் நின்றால் அது நம்மைக் காட்டும். வேறு யாராவது நின்றால் அவர்களைக் காட்டும். யாருமே நிற்காவிட்டால் எதையும் காட்டாது.

தொலைக்காட்சியும் இது போன்றது தான். நாம் எதை ஒளி பரப்புகிறோமோ அது தெரியும். என்னை ஒளி பரப்பினால் நான் தெரிவேன். உங்களை ஒளி பரப்பினால் நீங்கள் தெரிவீர்கள். எதையும் ஒளி பரப்பாவிட்டால் எதுவுமே தெரியாது. தொலைக்காட்சியில் எதுவுமே பதியவுமில்லை. நிலைக்கவுமில்லை. உருவப் படம் என்று காரணம் காட்டி இதைத் தடுக்க முடியாது.

மேலும் உருவப் படம் என்பதில் இயக்கமோ, அசைவோ, ஓசையோ இருக்காது. தொலைக்காட்சி, வீடியோக்களில் இவையெல்லாம் இருக்கின்றன. உருவப் படங்களிலிருந்து இந்த வகையிலும் தொலைக்காட்சி என்பது வித்தியாசப்படுகின்றது. சுருங்கச் சொல்வதென்றால் நேரடியாகக் காண்பது போன்ற தன்மையே தொலைக்காட்சி, வீடியோக்களில் காணப்படுகிறது. எனவே இவற்றை உருவப்படம் என்ற பட்டியலில் சேர்க்க முடியாது.

மேலும் உருவப் படங்களைப் பொறுத்த வரை அவற்றை ஒட்டுமொத்தமாக இஸ்லாம் தடை செய்து விடவில்லை. அவற்றில் சில விதிவிலக்குகளையும் இஸ்லாம் வழங்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்த போது உருவப்படம் வரையப்பட்ட திரைச் சீலைகளைக் கண்டதும். அதை அகற்றினார்கள். நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து கொள்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2479

நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். உருவப் படங்கள் இருக்கும் நிலையிலேயே அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன்

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 24908

தலையணைகளாக ஆக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கட்டளையிட்டதாக மற்றொரு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நூல்: அஹ்மத் 23668

ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து சென்ற இரவு உங்கள் வீட்டுக்கு நான் வருவதற்குத் தடையாக இருந்தவை என்னவென்றால், உங்கள் வீட்டில் ஒரு மனிதனது உருவச் சிலையும், உருவம் பொறித்த திரைச் சீலை ஒன்றும், நாய் ஒன்றும் இருந்தது தான் என்று என்னிடம் கூறினார்கள். உருவச் சிலையின் தலையை அகற்றுமாறும், உருவப் படங்கள் உள்ள திரைச் சீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக்கிக் கொள்ளுமாறும், நாயை வெளியேற்றுமாறும் உங்கள் (குடும்பத்துக்கு) கட்டளையிடுங்கள் என்றும் என்னிடம் கூறினார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்கள்: அஹ்மத் 7701, திர்மிதீ 2730, அபூதாவூத் 3627

தன்னிடம் இறக்கைகள் உடைய குதிரைகளின் படம் பொறிக்கப்பட்ட திரைச் சீலை இருந்ததாகவும், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிழித்ததும், அதில் இரண்டு தலையணைகள் செய்ததாகவும் அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 3935

இந்த ஹதீஸ்களைக் கவனமாகப் பார்க்கும் போது மதிப்பு மிக்கவையாகக் கருதப்படும் உருவப் படங்களே தடுக்கப்படுகின்றன; மதிப்பில்லாமல் மிதிபடும் உருவப் படங்கள் தடுக்கப்படவில்லை என்பதை எவரும் அறிய முடியும்.

உருவப் படங்கள் உள்ள திரைச் சீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக்கிக் கொள்ளுமாறு ஜிப்ரீல் (அலை) கூறிய வார்த்தை இதைத் தெளிவாக விளக்கும்.

எந்த உருவம் திரைச் சீலையாக தொங்கிக் கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்டதோ அதே உருவம் தலையணையாகத் தரையில் போடக் கூடியதாக ஆகும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடுக்கப்படவில்லை. மாறாக அதை அவர்களே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அந்தத் திரைச் சீலையை இரண்டாகக் கிழித்த போது உருவமும், பாதி, பாதியாகச் சிதறுண்டு போயிருக்கலாம். அதனால் அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று சிலருக்குத் தோன்றக் கூடும்.

அது சரியான அனுமானம் அல்ல. ஏனெனில் ஆயிஷா (ரலி) அவர்கள் உருவம் இருக்கும் நிலையிலேயே அதில் நபிகள் நாயகம் (ஸல்) சாய்ந்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன் என்கிறார்கள்.

சின்னஞ்சிறு வித்தியாசத்தையும் நுணுக்கமாகக் கவனிக்கும் அன்னை ஆயிஷா அவர்கள், உருவம் சிதைந்து போயிருந்தால் அதை உருவம் என்று குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.

மேலும் ஜிப்ரீல் (அலை) சம்மந்தப்பட்ட ஹதீஸில் உருவச் சிலையின் தலையை அகற்றுமாறு கூறிய ஜிப்ரீல் (அலை) அவர்கள், உருவப் படங்கள் உள்ள சீலையை உருவம் தெரியாதவாறு நீள வடிவில் பாதியாகக் கிழிக்குமாறு கூறவில்லை. உருவம் தெரியாத அளவுக்கு மாற்றினால் தான் தலையணையாகப் பயன்படுத்தலாம் என்றிருந்தால் மதிப்பில்லாமல் மிதிபடும் வகையில் என்று கூறியிருக்கத் தேவையில்லை.

இன்னும் சொல்வதென்றால் தலையணையாக ஆக்குமாறு கூட அவர்கள் கூறத் தேவையில்லை. உருவம் தெரியாத வகையில் கிழிக்கப்பட்டு விட்டால் அதைத் திரைச் சீலையாகவே மீண்டும் பயன்படுத்தலாம்.

ஆக மதிப்பற்ற விதத்தில் பொறிக்கப்பட்டுள்ள படங்களைப் பயன்படுத்தத் தடை ஏதும் இல்லை என்பதே சரியாகும். தொங்க விடப்படும் உருவப் படங்கள் பொறித்த திரைச் சீலைகள், பிரேம் செய்து மாட்டப்படும் உருவப் படங்கள், ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கும் போட்டோக்கள், பெட்டியில் பூட்டி வைத்துப் பாதுகாக்கும் உருவப் படங்கள் இவையெல்லாம் தடுக்கப்படுகின்றன. அதைப் பற்றி மதிப்பிருக்கின்ற காரணத்தினால் தான் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்கிறார்கள். ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கிறார்கள். உயர்ந்த இடத்தில் வைத்துப் பேணுகிறார்கள். இது போன்ற வழிகளில் பயன்படுத்த இஸ்லாம் தடுக்கின்றது.

செய்தித் தாள்களில் காணப்படும் உருவப் படங்களுக்கும், பொட்டலம் கட்டிக் கொடுக்கப் பயன்படும் காகிதங்களில் பொறிக்கப்பட்ட உருவப் படங்களுக்கும், பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பெட்டிகளில் பொறிக்கப்பட்ட உருவப் படங்களுக்கும் (உதாரணம்: தீப்பெட்டி) எவ்வித மதிப்பும் அளிக்கப்படுவதில்லை. இவைகளை வைத்திருக்கத் தடையும் இல்லை. ஒரு செய்திப் பத்திரிகை நம் வீட்டில் இருந்தால் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பதில்லை.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடனிருக்கும் போது பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பேன். என்னுடன் விளையாடுவதற்கு சில தோழிகளும் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழையும் போது அவர்கள் ஓடி ஒளிந்து கொள்வர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (என்னுடன் விளையாட) அவர்களைத் திருப்பி அனுப்புவார்கள். அதன் பின் அவர்கள் என்னோடு விளையாடுவார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6130

இந்த ஹதீஸிலிருந்து பொம்மைகள் வைத்து விளையாட அனுமதி உள்ளது என்று அறியலாம்.

உருவச் சிலைகளுக்கு பொதுவான தடை வந்துள்ளதால், இங்கே குறிப்பிடப்படும் பொம்மைகள் உயிரற்ற மரம், செடி, கப்பல் போன்ற பொம்மைகளாகத் தான் இருக்க முடியும் என்று கூற இடமுண்டு. இதை மற்றொரு ஹதீஸ், மறுத்து உயிருள்ளவைகளின் பொம்மைகளையே வைத்து விளையாடி இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக அறிவிக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தபூக்கோ, அல்லது ஹுனைனோ இரண்டில் ஏதோ ஒரு போர்க் களத்திலிருந்து திரும்பி வந்தனர். அப்போது காற்று வீசி ஆயிஷா (ரலி) அவர்களின் விளையாட்டுப் பொம்மைக்குப் போடப்பட்டிருந்த திரையை விலக்கியது. அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவே என்ன இது? என்றார்கள். என் பொம்மைகள் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றையும் கண்டு, அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். குதிரை என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள். குதிரையின் மேல் என்ன? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இறக்கைகள் என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள். குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்க, ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ? என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். இதைக் கேட்டதும், கடவாய்ப் பற்களை நான் காணும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: அபூதாவூத் 4284

உயிருள்ள குதிரையின் உருவச் சிலையைக் கண்ட பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்காதது மட்டுமல்ல; தமது சிரிப்பின் மூலம் இதற்கு அங்கீகாரமும் அளிக்கிறார்கள்.

உயிரற்றவைகள் மட்டுமல்ல; உயிருள்ளவைகளின் பொம்மைகளைக் கூட சிறுவர்கள் விளையாடலாம்; அதை வீட்டில் வைத்திருக்கலாம் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

உருவச் சிலைகள் உள்ள இடங்களில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பது, சிறுவர்களின் விளையாட்டுக்காக இல்லாமல் ஏனைய நோக்கங்களுக்காக உள்ள உருவச் சிலைகளுக்கே என்று உணரலாம்.

மதிக்கப்படாத வகையிலும், சிறுவர் சிறுமியர்களின் விளையாட்டுப் பொருளாகவும் உருவப் படங்களுக்கும் பொம்மைகளுக்கும் அனுமதி இருப்பது போல் சிறிய அளவிலான உருவப் படங்களுக்கும் அனுமதி உண்டு.

உருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் கூறிய செய்தியை அபூ தல்ஹா (ர) தன்னிடம் கூறியதாக ஸைத் பின் காத் என்பவர் எங்களிடம் அறிவித்தார். ஒரு நாள் ஸைத் பின் காத் நோயுற்றார். அவரை நோய் விசாரிக்க நாங்கள் சென்ற போது அவரது வீட்டில் உருவப் படங்களுடன் திரைச் சீலை தொங்க விடப்பட்டிருந்தது. அதைக் கண்ட நான் இவர் உருவப் படங்கள் பற்றிய ஹதீஸை நமக்கு அறிவிக்கவில்லையா? என்று உபைதுல்லாஹ் அல் கவ்லானி என்பவரிடம் கேட்டேன். அதற்கு அவர் ஆடையில் சிறிய அளவிலான உருவத்தைத் தவிர என்று அவர் கூறியதை நீ கேட்கவில்லையா? என்றார். நான் இல்லை என்றேன். அதற்கு அவர் இல்லை. நிச்சயமாக அவ்வாறு அவர் கூறினார் என்றார். அறிவிப்பவர்: புஸ்ரு பின் ஸயித், நுல்: புகாரி 3226

சிறிய அளவிலான உருவப்படம் தவிர மற்ற உருவப்படம் உள்ள வீடுகளுக்குத் தான் வானவர்கள் வர மாட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது.

சிறிய அளவு, பெரிய அளவு என்பதை எவ்வாறு தீர்மானிப்பது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கூறவில்லை.

இது போன்ற விஷயங்களில் நடை முறையைக் கவனத்தில் கொண்டு நேர்மையான சிந்தனையுடன் நாம் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

சிறிய அளவிலான உருவப்படம் என்று நமக்குப் படுகின்ற உருவப் படங்களை வைத்துக் கொள்வதில் குற்றம் இல்லை.

சுவரில் பிரேம் போட்டு மாட்டி வைக்கும் படம் தான் சாதாரணமான அளவாகும். அதனுடன் ஒப்பிடும் போது ரூபாய் நோட்டுக்கள், உறுப்பினர் அட்டைகள், பாடப் புத்தகங்களில் அச்சிடப்படும் படங்கள் போன்றவை பன்மடங்கு சிறியவையாகும். அளவில் சிறியதாக இருக்கும் காரணத்திற்காகவே இவை அனுமதிக்கப்பட்டதாக ஆகி விடும்.

மேலே குறிப்பிட்டவை அவசியத் தேவை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படும் என்பது மட்டுமன்றி இவை அளவில் சிறியதாகத் தான் இருக்கும்.

அளவில் சிறியதாக இருந்தால் அவசியத் தேவை இல்லாத போதும் உருவப் படங்களைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுத்தல் போன்ற காரணத்துக்காக உருவங்கள் வரைந்து கற்றுக் கொடுப்பதையும் தடை செய்ய முடியாது. சிங்கம், புலி போன்ற விலங்குகளைப் படம் வரைந்து தான் கற்றுக் கொடுக்க முடியும்.

அது போல் சாட்சியங்களாகப் பயன்படக் கூடிய வகையிலும் படங்களைப் பயன்படுத்தலாம்.

ஒரு ஊரில் ஒரு சமுதாயத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை அம்பலப்படுத்திட புகைப்படங்கள் சிறந்த சாட்சியமாகப் பயன்படும். சிலரது சந்திப்புகளை நிரூபிக்கும் அவசியம் ஏற்படும் என்றால் அப்போதும் புகைப்படங்களைத் தடுக்க முடியாது.

--> Q/A Ehathuvam Magazine Nov 2009

நுஜ்ஹதுல் மஜாலிஸ், ரூஹுல் பயான், இஹ்யா, ரியாளுஸ்ஸாலிஹீன், தப்ஸீர் ஜலாலைன்???

? சில சுன்னத் ஜமாஅத் நூற்களில் ஏதேனும் ஒரு ஹதீசுக்கு ஆதாரமாக புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ போன்ற நூற்களை மேற்கோள் காட்டுவதுடன், நுஜ்ஹதுல் மஜாலிஸ், ரூஹுல் பயான், இஹ்யா, ரியாளுஸ்ஸாலிஹீன், தப்ஸீர் ஜலாலைன், மிஷ்காத், பைஹகீ போன்ற நூற்களையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர். இவற்றில் ஆதாரப்பூர்வமான செய்திகள் பதியப்பட்டுள்ளனவா? விளக்கவும்.


ரூஹுல் பயான், தப்ஸீர் ஜலாலைன், நுஜ்ஹதுல் மஜாலிஸ், இஹ்யா, ரியாளுஸ்ஸாலிஹீன், மிஷ்காத், பைஹகீ என நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நூற்களில் பைஹகீ தவிர மற்றவை நேரடி ஹதீஸ் நூற்கள் அல்ல!

நேரடி ஹதீஸ் நூல் என்றால், நபி (ஸல்) அவர்களிடமிருந்து நபித்தோழர் கேட்டதை சங்கிலித் தொடராக அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்பட்டு, நூலாசிரியர் தமது நூலில் பதிவு செய்வார். இது தான் ஹதீஸ் நூல் எனப்படுகின்றது.

ரூஹுல் பயான், தப்ஸீர் ஜலாலைன் போன்றவை தப்ஸீர் நூற்களாகும். இந்த நூற்களில் ஹதீஸ்கள் மட்டுமின்றி திருக்குர்ஆன் விரிவுரை என்ற பெயரில் பல்வேறு கதைகளும் எழுதப்பட்டுள்ளன. ரியாளுஸ்ஸாலிஹீன், மிஷ்காத் போன்ற நூற்கள், புகாரி, முஸ்லிம் திர்மிதி, நஸயீ போன்ற நேரடி ஹதீஸ் நூற்களிலிருந்து முழு அறிவிப்பாளர்கள் வரிசையை நீக்கி விட்டு, தலைப்பு வாரியாக ஹதீஸ்களைத் தொகுத்து எழுதப்பட்டவையாகும். நுஜ்ஹதுல் மஜாலிஸ் என்பது கட்டுக் கதைகளின் தொகுப்பு.

தப்ஸீர்களாக இருந்தாலும், ஹதீஸ் விரிவுரை நூற்களாக இருந்தாலும் அல்லது ஹதீஸ் தொகுப்பு நூற்களாக இருந்தாலும் அவை நேரடி ஹதீஸ் நூற்களைப் போன்று ஆதாரம் காட்டுவதற்கு ஏற்றதல்ல.

காரணம், ஹதீஸ் நூற்களை ஆதாரமாகக் காட்டும் போது அந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள அறிவிப்பாளர்களை ஆய்வு செய்து அது சரியான ஹதீஸா? அல்லது பலவீனமான ஹதீஸா என்பதை முடிவு செய்ய முடியும்.

ஆனால் மேற்கண்ட நூற்களில் எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ்களை அவ்வாறு தீர்மானிக்க இயலாது. ஏனெனில் அந்நூற்களில் இடம் பெறும் ஹதீஸ்கள், நூலாசிரியர் நேரடியாகக் கேட்டுப் பதிவு செய்தவை அல்ல. மாறாக நேரடி ஹதீஸ் நூற்களிலிருந்து எடுத்து எழுதப்பட்டவை தான்.

நாம் நம்முடைய நூற்களில் ஹதீஸ்களை எழுதி விட்டு புகாரி, முஸ்லிம் என்று மேற்கோள் காட்டுவது போன்று இந்த நூற்களிலும் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும். எனவே இந்த நூற்கள் ஒரு போதும் ஆதார நூற்கள் ஆகாது. நேரடி ஹதீஸ் நூற்கள் மட்டுமே ஆதார நூற்களாகும்.

--> Q/A Ehathuvam Magazine Nov 2009

சோதனைக் குழாய் மூலம் குழந்தை ??

? சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறும் முறைக்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா? முந்தைய காலத்தில் தாய் அல்லாத மற்ற பெண் மூலம் குழந்தைக்குப் பால் கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. பால் கொடுப்பதன் மூலம் அந்தப் பெண் தாய் அந்தஸ்தை அடைந்தாலும், தந்தைக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த உறவும் ஏற்படுவதில்லை. பால்குடி முறையும், சோதனைக் குழாய் முறையும் ஒன்று போல் தோன்றுகின்றதே! விளக்கவும்.


சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறுவதில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. கணவனின் உயிரணுவை எடுத்து, செயற்கை முறையில் மனைவியின் கரு முட்டையுடன் சேர்த்து சோதனைக் குழாயில் வளர்த்து அதை மனைவியின் கருவறையில் செலுத்துவது ஒரு முறையாகும்.

ஒரு பெண்ணுக்கு அவளது கணவன் அல்லாத வேறொரு ஆணிடமிருந்து உயிரணுவை எடுத்து அதனுடன் அவளது கரு முட்டையைச் சேர்த்து குழந்தை பெற வைப்பது மற்றொரு முறையாகும்.

கணவன், மனைவி ஆகிய இருவரும் அல்லாத வேறு ஆண், பெண்ணிடமிருந்து உயிரணு, கரு முட்டையை எடுத்து அதை குழந்தையில்லாத பெண்ணின் கருவில் வளர்ப்பது மூன்றாவது வழிமுறையாகும். இவற்றில் முதலாவது வழிமுறைக்கு மட்டுமே மார்க்கத்தில் அனுமதி உள்ளது.

உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!

அல்குர்ஆன் 2:223

உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள் என்ற சொற்றொடர் மூலம் கணவனின் உயிரணுவை எடுத்து செயற்கை முறையில் மனைவிக்குச் செலுத்தலாம் என்றும், கணவன் அல்லாத மற்றவர்களின் உயிரணுவை எடுத்து இவ்வாறு செய்வது கூடாது என்றும் விளங்கலாம்.

பால்குடித் தாய் முறை என்பது மார்க்கம் அனுமதித்த ஒன்றாகும். கருவறையில் அடுத்த ஆணின் கருவைச் சுமப்பதற்கு மார்க்கம் அனுமதிக்கவில்லை. எனவே இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து மார்க்கச் சட்டத்தைத் தீர்மானிக்கக்கூடாது.

--> Q/A Ehathuvam Magazine Aug 2009

மனித உடலில் 360 எலும்புகள் இணையப் பெற்றுள்ளன??

? மனித உடலில் 360 எலும்புகள் இணையப் பெற்றுள்ளன. ஒவ்வோர் இணைப்புக்கும் தினமும் தர்மம் செய்வது மனிதனுக்கு அவசியமாகும் என்று நபிகள் நாயகம் கூறியதாக ஒரு நாளிதழில் வெளியானது. இது ஆதாரப்பூர்வமான ஹதீஸா?


இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது தான். முஸ்னத் அஹ்மத் என்ற நூலில் இது இடம் பெற்றுள்ளது.

மனிதனுடைய உடலில் 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூட்டுக்காகவும் தர்மம் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! இது யாருக்குச் சாத்தியமாகும்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், பள்ளிவாசலில் எச்சிலைக் கண்டால் அதை மூடி விடுவதும், பாதையில் கிடக்கும் (கல், முள் போன்ற) பொருளை அகற்றுவதும் (தர்மம்) ஆகும். இது உனக்கு முடியவில்லை என்றால், லுஹா தொழுகையின் இரண்டு ரக்அத்துக்கள் உனக்குப் போதுமானது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: அஹ்மத் 21959

--> Q/A Ehathuvam Magazine Aug 2009

திருமறையின் 46:15 வசனத்தில் ??

? திருமறையின் 46:15 வசனத்தில், 40 வயதை அடைந்ததும் ஒருவர் செய்யும் துஆவைப் பற்றியும், முஸ்லிமாக இருப்பது பற்றியும் இறைவன் குறிப்பிடுகின்றான். இந்த வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் ஒருவர், நாற்பது வயதைக் கடந்து மரணிக்கும் ஒருவருக்குத் தான் மறுமையில் கேள்வி கணக்கு உண்டு. அதற்கு முன் மரணிப்பவர்கள் அனைவரும் சுவனம் செல்வர். இதைத் தான் இந்த வசனம் கூறுகின்றது என்று கூறுகின்றார். இதற்கு விளக்கம் என்ன?


தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும் போது என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறுகிறான்.

அல்குர்ஆன் 46:15

நாற்பது வயது வரை மனிதன் மீது எந்தக் கடமையும் கிடையாது; நாற்பது வயது வரை மனிதன் எப்படி வாழ்ந்தாலும் அல்லாஹ் மன்னித்து விடுவான் என்று இந்த வசனம் கூறுவதாகச் சில அறிவீனர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்த வசனம் அந்தக் கருத்தைத் தரவில்லை. நன்மை, தீமைகள் இந்த வயதிலிருந்து பதியப்படுகின்றன என்பது பற்றி இந்த வசனத்தில் எந்தக் குறிப்பும் இல்லை.

பருவ வயதை அடையும் வரை குழந்தைகளுக்குப் பாவங்கள் பதியப்படுவதில்லை; ஒருவன் பருவ வயதை அடைந்து விட்டால் அவன் செய்யும் நன்மை, தீமைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அதற்காக அவனுக்குக் கூலி வழங்கப்படும். இது தான் இஸ்லாமிய அடிப்படையாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப் பட்டு விட்டது.

1. தூங்குபவர் விழிக்கின்ற வரை. 2. சிறுவன் பெரியவராகும் வரை. 3. பைத்தியக்காரர் பைத்தியத்தில் இருந்து தெளிவாகும் வரை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ர)

நூல்கள்: நஸயீ 3378, அபூதாவூத் 3822, இப்னுமாஜா 2031

அப்படியானால், நாற்பது வயதை அடையும் போது என்று மேற்கண்ட வசனத்தில் கூறப்படுவது ஏன்? என்ற கேள்வி எழலாம்.

பொதுவாக மனிதன் பருவம் அடையும் போது பெற்றோரின் மகத்துவத்தை உணராதவனாக இருக்கிறான். தாய் அவனைக் கஷ்டப்பட்டு சுமந்ததையும், பெற்றதையும் கூட அவன் நினைப்பதில்லை.

அவனுக்குத் திருமணம் ஆகும் போது பெற்றோர் மேலும் தேவையற்றவர்களாக மனிதனுக்குத் தோன்றுகிறார்கள். உடல் சுகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பெற்றோரை அவன் உதாசீனம் செய்கிறான். அவனுக்கு ஒரு குழந்தை அல்லது பல குழந்தைகள் பிறக்கின்றன. அப்போதாவது பெற்றோரின் மதிப்பை உணர்கின்றானா என்றால் அதுவுமில்லை.

அவன் பெற்ற பிள்ளை பருவ வயதை அடைந்து அவனையே எதிர்த்துப் பேசும் போது தான் பெற்றோரை மதிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. நாம் நமது தந்தையை நடத்தியது போலவே நமது மகன் நம்மை நடத்த ஆரம்பித்து விட்டானே என்று அதிர்ச்சியடைந்து காலம் கடந்து பெற்றோரின் மதிப்பை உணர்கிறான்.

இந்த நிலையை சராசரியாக மனிதன் நாற்பது வயதில் அடைகிறான். இருபது வயதில் அவன் திருமணம் செய்திருந்தால் தனது நாற்பதாவது வயதில் 20 வயது மகனைப் பெறுகிறான். 25 வயதில் தாமதமாகத் திருமணம் செய்தால் கூட நாற்பதாவது வயதில் 15 வயது மகனைப் பெற்றிருப்பான்.

தனது பிள்ளை தன்னை உதாசீனம் செய்யும் போது தான் தந்தையின் மதிப்பை மனிதன் உணர்கிறான். இதற்கு இவ்வளவு காலம் மனிதனுக்குத் தேவைப்படுகிறது.

* பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு கட்டளை!

* கருவில் சுமந்த போது, தாய் பட்ட கஷ்டம்!

* பெற்றெடுக்கும் போது அவள் படுகின்ற சிரமம்!

இவற்றையெல்லாம் சுட்டிக் காட்டிய பின் நாற்பது வயதை அடையும் போது என்று கூறுவதிலிரிருந்து அறிவுடைய யாரும் இதை அறியலாம்.

என் பிள்ளைகளை எனக்கேற்றவாறு ஆக்கு என்று நாற்பது வயதில் மனிதன் வேண்டுவதாகவும் இவ்வசனம் கூறுகிறது. பிள்ளை பெற்று அவன் பருவ வயதை அடையும் போது தான் மனிதன் தனது பெற்றோரை நினைத்துப் பார்க்கிறான் என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.

நான் பெற்றோரை மதிக்காதது போல என் பிள்ளைகள் என்னை மதிக்காதவாறு செய்திடாதே! நான் நல்ல முஸ்லிமாக நடந்து கொள்கிறேன் எனக் கூறித் திருந்துகிறான். இவ்வசனத்தை ஆரம்பம் முதல் கடைசி வரை கவனமாக வாசித்தால் நாற்பது வயதை அடையும் போது பெற்றோரின் மகிமையை மனிதன் உணர்கிறான் என்பது தான் கூறப்படுகிறதே தவிர, நாற்பது வயது வரை ஆட்டம் போட எந்த அனுமதியும் இவ்வசனத்தில் இல்லை.

உடல் முறுக்குடன் மனிதன் இருக்கும் போது தான் அவனை நெறிப்படுத்திட ஒரு வாழ்க்கைத் திட்டம் தேவைப்படுகிறது. உடல் தளர்ந்த பின் பல தீமைகளைச் செய்வதற்குரிய வலுவை உடல் தானாக இழந்து விடும்.

நாற்பது வயது வரை எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை உலகில் உள்ள அனைவரும் கடைப்பிடித்தால் என்னவாகும் எனக் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் கூட இது எந்த அளவு ஆபத்தான கருத்து என்பதை உணர்வார்கள்.

இந்த வாதத்தை முன்வைப்பவர்கள் தங்கள் மனைவி, மக்கள் இதைச் செயல்படுத்த அனுமதிப்பார்களா என்பதையும் சிந்திக்க வேண்டும். நாற்பது வயதை அடையாத தனது மனைவி அடுத்த ஆணுடன் இருக்கலாம்; அல்லது தனது மகள், பிற ஆண்களுடன் ஊர் சுற்றலாம் என்று இவர்கள் அனுமதிப்பதில்லை. இதிலிருந்து இவர்கள் தங்கள் மனோ இச்சைக்காக, தாங்கள் செய்யும் குற்றச் செயல்களை நியாயப்படுத்துவதற்காக மார்க்கத்தை வளைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

--> Q/A Ehathuvam Magazine Aug 2009

இணை கற்பிக்கும் சொல் இல்லாத துஆக்களை ஓதி வரலாமா?

? நான் சில துஆக்களை ஓதி வருகின்றேன். அந்த துஆக்களில் இறைவனுக்கு இணை கற்பிக்கும் சொல் எதுவும் இல்லை. இது போன்ற துஆக்களை ஓதி வரலாமா? விளக்கம் தரவும்.


நம்முடைய தேவைகளைக் கேட்கும் பிரார்த்தனைகளைப் பொறுத்த வரை குறிப்பிட்ட வார்த்தைகளைக் கொண்டு தான் கேட்க வேண்டும் என்பதில்லை. நமக்குத் தெரிந்த மொழியில், தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு கேட்கலாம். இதற்கு மார்க்கத்தில் வரையறை எதுவும் இல்லை. ஆயினும் சில குறிப்பிட்ட வார்த்தைகளைக் கொண்டு பிரார்த்திப்பதை நன்மை என்று கருதியோ, அல்லது இன்ன தேவை நிறைவேற இந்தப் பிரார்த்தனையைச் செய்ய வேண்டும் என்று எண்ணியோ பிரார்த்திப்பதாக இருந்தால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ கற்றுத் தந்திருக்க வேண்டும்.

இந்தப் பெரியார் கற்றுத் தந்தார்; அந்த ஷைகு கற்றுத் தந்தார்; இதைச் செய்தால் கடன் தொல்லை நீங்கும், நோய் நிவாரணம் கிடைக்கும் என்றெல்லாம் பல்வேறு பிரார்த்தனைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.

இந்தப் பிரார்த்தனைகளில் இணை வைக்கும் வார்த்தைகள் எதுவும் இல்லாவிட்டாலும் இவற்றை ஓதக் கூடாது. ஏனெனில் மார்க்க விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் அதிகாரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரியது. அவர்கள் கற்றுத் தராத ஒன்றை மார்க்கம் என்று கருதிச் செய்வது தான் பித்அத் ஆகும்.

நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர், யா அல்லாஹ்! நான் எனது முகத்தை உன்னிடத்தில் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கின்றேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னை விட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உனது நபியையும் நான் நம்பினேன் என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகி விடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உனது (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது நீ அனுப்பிய உனது நபியையும் நம்பினேன் என்று சொல்வதற்குப் பதிலாக உனது ரசூலையும் நம்பினேன் என்று கூறி விட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள், இல்லை. நீ அனுப்பிய உனது நபியை நம்பினேன் என்று கூறுவீராக என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: பராஃ இப்னு ஆஸிப் (ரலி)
நூல்: புகாரி 247

இந்த ஹதீஸில், நபிய்யிக்க என்பதற்குப் பதிலாக ரசூலிக்க என்று நபித்தோழர் கூறி விட்டார். இரண்டும் ஒரே கருத்தைத் தரக் கூடிய சொல்லாக இருந்தாலும், நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்ததற்கு மாற்றமாகச் சொல்வதை அவர்கள் அங்கீகரிக்கவில்லை.

நமது தேவைகளைக் கேட்கும் பிரார்த்தனைகளைத் தவிர இதர பிரார்த்தனைகளை, குறிப்பிட்ட வார்த்தைகளைக் கொண்டு சுயமாக உருவாக்கவோ, அல்லது மற்றவர்கள் உருவாக்கியதை நன்மை நாடிச் செய்யவோ மார்க்கத்தில் அனுமதியில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

--> Q/A Ehathuvam Magazine Aug 2009

ரியாளுஸ் ஸாலிஹீன் என்பது என்ன??

? ரியாளுஸ் ஸாலிஹீன் என்பது என்ன? அது குர்ஆன், ஹதீசுக்கு உடன்பட்டதா? அல்லது மத்ஹபு சார்ந்ததா? இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமா? இந்நிகழ்ச்சி 30 வருடங்களாக இலங்கையில் நடைபெற்று வருகின்றது. சேவல் கூவினால் மலக்குமார்களை அது பார்க்கிறது என்றும், கழுதை கத்தினால் ஷைத்தானை அது பார்க்கிறது என்றும் ரியாளுஸ் ஸாலிஹீனில் படித்தேன்.
ரியாளுஸ் ஸாலிஹீன் என்பது இமாம் நவவீ அவர்கள் தலைப்பு வாரியாகத் தொகுத்த ஒரு நூலாகும். புகாரி, முஸ்லிம் போன்று இது நேரடியான ஹதீஸ் நூல் அல்ல!

நேரடி ஹதீஸ் நூல் என்றால், நபி (ஸல்) அவர்களிடமிருந்து நபித்தோழர் ஒருவர் அறிவிப்பார்; அவரிடமிருந்து ஒரு தாபியீ அறிவிப்பார்; அவரிடமிருந்து ஒரு தபவுத் தாபியீ அறிவிப்பார். இப்படியே சங்கிலித் தொடராக வந்து நூலாசிரியரிடம் ஒரு அறிவிப்பாளர் அறிவிப்பார். அதை அந்த நூலாசிரியர் தமது நூலில் பதிவு செய்வார். இது தான் ஹதீஸ் நூல் எனப்படுகின்றது.

ஆனால் ரியாளுஸ் ஸாலிஹீன் என்பது இவ்வாறு அறிவிப்பாளர்களிடமிருந்து நேரடியாக இமாம் நவவீ கேட்டு ஹதீஸ்களைப் பதிவு செய்த நூல் அல்ல! புகாரி, முஸ்லிம் போன்ற நேரடி ஹதீஸ் நூற்களிலிருந்து தலைப்பு வாரியாக ஹதீஸ்களைத் தொகுத்து எழுதப்பட்ட நூலாகும்.

உதாரணமாக, ரியாளுஸ் ஸாலிஹீன் நூலில், புறம் பேசுதல் என்ற தலைப்பை எடுத்துப் பார்த்தால் அதில் புகாரி, முஸ்லிம், திர்மிதீ போன்ற ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ள புறம் தொடர்பான ஹதீஸ்கள் இடம் பெற்றிருக்கும். இதில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் இருக்கலாம்; பலவீனமான செய்திகளும் இருக்கலாம். எது சரியான ஹதீஸ், எது பலவீனமான ஹதீஸ் என்பதை அந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ள மூல நூலைப் பார்த்து, அதன் அறிவிப்பாளர்களை ஆய்வு செய்த பின்னரே முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு தலைப்பு வாரியாக ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டிருப்பதால் மார்க்கப் பிரச்சாரம் செய்பவர்களுக்கு இந்நூல் மிக உதவியாக உள்ளது. எனவே ஆலிம்கள் இந்நூலை தமது சொற்பொழிவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்வர்.

ரியாளுஸ் ஸாலிஹீன் நிகழ்ச்சி என்று நீங்கள் குறிப்பிடுவது எவ்வாறு நடைபெறுகின்றது என்ற விபரம் நமக்குத் தெரியவில்லை. அனேகமாக அந்நூலில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களைக் கொண்டு நடத்தப்படும் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சியாக இருக்கலாம். அப்படி இருந்தால் அந்த நிகழ்ச்சி மார்க்கத்திற்கு உடன்பட்டதா? அல்லது முரண்பட்டதா? என்பது அது யாரால் நடத்தப்படுகின்றது என்பதைப் பொறுத்துத் தான் அமையும்.

ஏனெனில் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுபவர்களாக இருந்தால் ரியாளுஸ் ஸாலிஹீனில் இடம் பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டும் தமது பிரச்சாரத்தில் பயன்படுத்துவர். பலவீனமான ஹதீஸ்களைப் போதிக்க மாட்டார்கள். ஆனால் நிகழ்ச்சி நடத்துபவர்கள் பலவீனமான ஹதீஸ்களையும் பின்பற்றுபவர்களாக இருந்தால் அவ்வாறு ஆய்வு செய்து போதிக்க மாட்டார்கள். எனவே நிகழ்ச்சி நடத்துபவர்களைப் பொறுத்துத் தான் அது குர்ஆன், ஹதீசுக்கு உட்பட்டதா என்பதை முடிவு செய்ய முடியும்.

சேவல் கூவினால் அவை மலக்குகளைப் பார்க்கின்றன, கழுதை கத்தினால் அது ஷைத்தானைப் பார்க்கின்றது என்ற ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தான். இது புகாரியில் இடம்பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. (அதனால் தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கின்றது. (அதனால் தான் கத்துகின்றது.)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3303

--> Q/A Ehathuvam Magazine Jun 2009

பெண் உறுப்பினர்களை அழைப்பதில்லை. இது ஏன்?

? நான் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தில் உறுப்பினராக உள்ளேன். உறுப்பினர் அட்டையும் வைத்துள்ளேன். ஆனால் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் பொதுக்குழுக் கூட்டங்களில் என்னைப் போன்ற பெண் உறுப்பினர்களை அழைப்பதில்லை. இது ஏன்?


தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் அவர் கிளை நிர்வாகியாக இருக்க வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும் பொதுக்குழுவில் கலந்து கொள்ள முடியாது. நமது ஜமாஅத்தின் கிளை நிர்வாகத்தில் பெண்களுக்குப் பொறுப்பு வழங்கப்படுவதில்லை என்பதால் அவர்கள் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்களாக இல்லை.

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.

அல்குர்ஆன் 4:34

ஆண்களே பெண்களை நிர்வகிப்பவர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. எனவே தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் நிர்வாகத்தில் பெண்கள் இடம் பெறுவதில்லை.

--> Q/A Ehathuvam Magazine Jun 2009

பி.ஜே. அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் ஸஜ்தா வசனங்கள்??

? பி.ஜே. அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் ஸஜ்தா வசனங்கள் பட்டியலில் 33:24 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஆதாரமாகக் காட்டப்பட்டுள்ள புகாரி ஹதீஸில் 38:24 என்று உள்ளது. மேலும் புகாரி 1068 ஹதீஸில் 32வது அத்தியாயத்திலும் ஸஜ்தா செய்ய வேண்டும் என்று இடம்பெற்றுள்ளது. இதில் எது சரி? விளக்கவும்.


ஸஜ்தா செய்ய வேண்டிய வசனம் 38:24 என்பது தான் சரியானதாகும். திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் 33:24 என்று குறிப்பிடப்பட்டது அச்சுப் பிழையால் ஏற்பட்ட தவறு. இன்ஷா அல்லாஹ் இனி வெளியிடப்படும் பிரதிகளில் இந்தத் தவறு சரி செய்யப்படும்.

புகாரி 1068 ஹதீஸில், திருக்குர்ஆன் 32வது அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கூறப்படவில்லை.

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் அலிஃப் லாம் மீம் தன்ஸீல் அஸ்ஸஜ்தா (எனும் 32ஆவது) அத்தியாயத்தையும், ஹல் அத்தா அலல் இன்ஸான் (எனும் 76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1068

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள் என்று தான் மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. அதை ஓதும் போது நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்தார்கள் என்று கூறப்படவில்லை. தன்ஸீல் அஸ்ஸஜ்தா (எனும்) 32ஆவது அத்தியாயத்தை ஓதும் போது சஜ்தாச் செய்தல் என்று புகாரி இமாம் தலைப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் இவ்வாறு தலைப்பிட்டு அவர்கள் குறிப்பிட்டுள்ள மேற்கண்ட ஹதீஸில் இந்தக் கருத்து இடம்பெறவில்லை. இந்த அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்ற கருத்தில் வேறு நூற்களிலும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. எனவே 32வது அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்யத் தேவையில்லை.

--> Q/A Ehathuvam Magazine Jun 2009

பாங்கு சொல்லி முடிந்தவுடன் பாங்கு துஆ ஓதுவதற்கு முன் ரசூல் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் ??

? பாங்கு சொல்லி முடிந்தவுடன் பாங்கு துஆ ஓதுவதற்கு முன் ரசூல் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் என்று ஹதீஸ்கள் உள்ளன. இதன்படி நாம் ஸலவாத் சொல்லி வருகிறோம். ஆனால் இந்த ஹதீஸ்களில் இடம் பெறும் கஅப் பின் அல்கமா என்பவர் பலவீனமானவர் என்றும் அதனால் பாங்குக்குப் பிறகு ஸலவாத் சொல்லக் கூடாது என்றும் ஒருவர் கூறுகின்றார். இது சரியா? பாங்குக்குப் பின் ஸவலாத் சொல்வதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளதா? விளக்கவும்.



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கான அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என் மீது யார் ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள் புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 577

இந்த ஹதீஸ் திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத் ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள கஅப் பின் அல்கமா என்பவர் யாரென அறியப்படாதவர் என்று கூறி சிலர் இந்த ஹதீஸை விமர்சிக்கின்றனர். இவரைப் பற்றி விமர்சனம் செய்தவர்களின் விமர்சனம் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

ஒவ்வோர் ஆண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸை அறிவிக்கும் அம்ரு பின் ஹாரிஸ் என்பார் பலவீனமானவர் என்று தக்க காரணங்களுடன் ஜகாத் ஆய்வு கட்டுரையில் நாம் விளக்கியிருந்தோம். அந்த விளக்கம் இது தான்:

அம்ரு பின் ஹாரிஸ் பற்றி இப்னு ஹிப்பான் மட்டுமே நம்பகமானவர் என்று கூறியுள்ளார். நம்பகமானவர் என்பதற்கு யாரும் ஏற்காத ஓர் அளவுகோலை இப்னு ஹிப்பான் வைத்துள்ளார். அதாவது யாரைப் பற்றி குறைவுபடுத்தும் விமர்சனம் இல்லையோ அவர்கள் எல்லாம் நம்பகமானவர்கள் என்பது அவரது அளவுகோல்.

இந்த அளவுகோலின் படி உண்மையிலேயே நம்பகமானவர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள். யாரென்று அறியப்படாதவர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள். யாரென்று தெரியாதவர்களை யாரும் குறை கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் அத்தகையவர்களும் இப்னு ஹிப்பான் பார்வையில் நம்பகமானவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுவார்.

எனவே இப்னு ஹிப்பான் அவர்கள் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அவர் நம்பகமானவராகவும் இருக்கலாம். யாரென்று தெரியாதவராகவும் இருக்கலாம்.

இப்னு ஹிப்பான் யாரையெல்லாம் நம்பகமானவர் பட்டியலில் சேர்க்கிறாரோ அவரைப் பற்றி தஹபி அவர்கள் குறிப்பிடும் போது, நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார் என்று கூறுவார். இப்னு ஹிப்பானால் நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார் என்பதே இதன் பொருளாகும்.

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸை அறிவிக்கும் அம்ரு பின் ஹாரிஸ் என்பவர் பற்றி, இப்னு ஹிப்பானும், தஹபீயும் மட்டுமே நம்பகமானவர் என்று கூறுகின்றார்கள். எனவே அம்ரு பின் ஹாரிஸின் நம்பகத் தன்மை நிரூபணமாகவில்லை

இவ்வாறு நாம் விமர்சனம் செய்திருந்தோம்.

இதே அடிப்படையில் கஅப் பின் அல்கமா என்ற அறிவிப்பாளரைப் பற்றி இப்னு ஹிப்பான் மட்டுமே நம்பகமானவர் என்று கூறியுள்ளதாலும், இவர் நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார் என்று தஹபீ கூறியுள்ளதாலும், இதைத் தவிர வேறு யாரும் இவரது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாததாலும், பாங்குக்குப் பின் ஸலவாத் சொல்லும் ஹதீஸ் பலவீனமானது என்று சிலர் வாதிடுகின்றனர்.

கஅப் பின் அல்கமா என்பவரது நம்பகத்தன்மை குறித்து இப்னு ஹிப்பான், தஹபீ ஆகிய இருவர் மட்டுமே நம்பகமானவர் என்று சான்றளித்திருந்தால், வேறு யாரும் அவரது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை என்றால் அவர் யாரென்று அறியப்படாதவர் என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும்.

ஆனால் கஅப் பின் அல்கமா அறிவிக்கும் இந்த ஹதீஸ் முஸ்லிம் நூலில் இடம்பெற்றுள்ளது. புகாரி, முஸ்லிம் ஆகிய இமாம்களைப் பொறுத்த வரை, ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கும் ஹதீஸைத் தமது நூற்களில் இடம் பெறச் செய்வதாக இருந்தால் அந்த அறிவிப்பாளர் அறியப்பட்டவராக இருந்து, அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே பதிவு செய்வார்கள்.

ஹதீஸ்களைப் பதிவு செய்வதில் ஒவ்வொரு இமாமும் ஒவ்வொரு விதிமுறைகளை வகுத்துள்ளனர். இதில் புகாரி, முஸ்லிம் ஆகிய இரு இமாம்களும், ஒரு அறிவிப்பாளர் நம்பகமானவர் என்று தங்கள் அளவில் அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டால் மட்டுமே அவரது ஹதீஸைப் பதிவு செய்வது என்பதை விதிமுறையாகக் கொண்டுள்ளனர்.

கஅப் பின் அல்கமா அறிவிக்கும் ஹதீஸை முஸ்லிம் இமாம் பதிவு செய்துள்ளார் என்றால் அவர் நம்பகமானவர் என்பதை அவர் அறிந்திருக்கிறார் என்று தான் அர்த்தம்.

புகாரி, முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஒரு அறிவிப்பாளர் குறித்து, மற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் ஆதாரப்பூர்வமாகக் குறை கூறினால் மட்டுமே அந்த அறிவிப்பாளர் பலவீனமானவராகக் கருதப்படுவார். அவ்வாறின்றி, அந்த அறிவிப்பாளர் குறித்து மற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் யாரும் குறை கூறவில்லை என்றால் அந்த அறிவிப்பாளர் யாரென்று அறியப்பட்டவராகவும் நம்பகமானவராகவுமே கருதப்படுவார். இது ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவரும் ஒப்புக் கொண்ட விதியாகும்.

கஅப் பின் அல்கமா அறிவிக்கும் ஹதீஸை முஸ்லிம் இமாம் பதிவு செய்துள்ளதால் கஅப் பின் அல்கமா நம்பகமானவர் என்பதை முஸ்லிம் இமாம் உறுதிப்படுத்தியுள்ளார். எனவே இப்னு ஹிப்பான், தஹபீ ஆகிய இருவரைத் தவிர வேறு யாரும் கஅப் பின் அல்கமாவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை என்ற வாதம் தவறாகும்.

கஅப் பின் அல்கமா குறித்து மற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் யாரும் குறை கூறாததால் அவர் நம்பகமான அறிவிப்பாளர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனவே அவர் அறிவிக்கும் பாங்குக்குப் பின் ஸலவாத் கூறும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது தான் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது

--> Q/A Ehathuvam Magazine Jun 2009