பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Sunday, December 26, 2010

இடது கையில் கடிகாரம் அணியலாமா

இடது கையில் கடிகாரம் அணியலாமா



இடது கையில் கைக்கடிகாரம் கட்டலாமா? உங்கள் பயானை ஒரு தரீக்காவாதியிடம் கொடுத்த போது தாங்கள் கடிகாரத்தை இடது கையில் கட்டியிருப்பதாகவும் ,வலதை முற்படுத்துவது நபிவழியென்றிருந்தும் பீஜே போன்றவர்கள் அதை மீறுவது ஏன்? என்றும் கேட்கின்றார். எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.கட்டாயம் பதிலை அனுப்பவும்?


அனைத்து நல்ல காரியங்களையும் வலது கரத்தால் ஆரம்பிக்க வேண்டும் என்பது நபி வழி தான். ஆனால் இதைச் சரியான முறையில் அவர் புரிந்து கொள்ளாததால் இப்படிக் கேட்டுள்ளார்.

எந்தக் காரியங்கள் வலது கையாலும் இடது கையாலும் செய்வது சமமான தரத்தில் உள்ளதோ அது போன்ற காரியங்களில் வலதைப் புறக்கணித்து விட்டு இடது கைக்கு முக்கியத்துவம் அளித்தால் தான் வலது பக்கக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று ஆகும்.

எந்தக் காரியம் வலது கையால் செய்வதை விட இடது கையால் செய்வது தான் அதிக வசதியானது என்று உள்ளதோ அந்தக் காரியத்தை இடது கையால் செய்வது நபிவழியைப் புறக்கணித்ததாக ஆகாது. வலது பகுதியைப் புறக்கணித்ததாகவும் ஆகாது.

பொதுவாக வலது கை தான் அனைத்துக் காரியங்களையும் செய்வதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் நிலையில் உள்ளது. அந்தக் கையில் கடிகாரம் கட்டினால் கடிகாரத்துக்குச் சேதம் ஏற்படும். அல்லது சேதம் ஏற்படுமோ என்ற எண்ணம் காரணமாக இயல்பாக வேலைகளைச் செய்ய முடியாது

இடது கை அதிகம் பயன்படாத காரணத்தால் அதில் கடிகாரம் கட்டுவது தான் இயல்பாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அணிந்த வெள்ளி மோதிரத்தை இடது கையில் அணிந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன.

و حدثني أبو بكر بن نافع العبدي حدثنا بهز بن أسد العمي حدثنا حماد بن سلمة عن ثابت أنهم سألوا أنسا عن خاتم رسول الله صلى الله عليه وسلم فقال أخر رسول الله صلى الله عليه وسلم العشاء ذات ليلة إلى شطر الليل أو كاد يذهب شطر الليل ثم جاء فقال إن الناس قد صلوا وناموا وإنكم لم تزالوا في صلاة ما انتظرتم الصلاة قال أنس كأني أنظر إلى وبيص خاتمه من فضة ورفع إصبعه اليسرى بالخنصر

1124 ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்களிடம் மக்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மோதிரம் தொடர்பாக வினா எழுப்பினார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையைப் "பாதி இரவுவரை' அல்லது "பாதி இரவு கழியும்வரை' தாமதப்படுத்தினார்கள். பிறகு அவர்கள் வந்து "மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டார்கள். (ஆனால், நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருக் கிறீர்கள்.) நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும்வரை அந்தத் தொழுகையிலேயே உள்ளீர்கள் (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்)'' என்று சொன்னார்கள். (அப்போது அவர்களது விரலில் மோதிரத்தைப் பார்த்தேன்.) இப்போதும் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வெள்ளி மோதிரம் மின்னுவதைப் பார்ப்பதைப் போன்றுள்ளது.

இவ்வாறு கூறிய அனஸ் (ரலி) அவர்கள் தமது இடக் கை சுண்டு விரலை உயர்த்திக் காட்டினார்கள்.

நூல் முஸ்லிம் 1124


4254 ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது

அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் இந்த விரலில் மோதிரம் அணிந்திருந்தார்கள்'' என்று கூறி, தமது இடக் கையின் சுண்டுவிரலை நோக்கி சைகை செய்தார்கள்.

و حدثني أبو بكر بن خلاد الباهلي حدثنا عبد الرحمن بن مهدي حدثنا حماد بن سلمة عن ثابت عن أنس قال كان خاتم النبي صلى الله عليه وسلم في هذه وأشار إلى الخنصر من يده اليسرى

நூல் முஸ்லிம் 4254



மேலும் இன்று செல்போனில் அடிக்கடி பேசுகிறோம். வலது கைக்கு பல வேலைகள் உள்ளதால் வலது கையில் செல்போனை வைத்து பேசிக் கொண்டிருந்தால் வலது காயால் பல வேலைகளைச் செய்ய முடியாத நிலை ஏற்படும். இந்தக் காரணத்துக்காக இடது கையில் செல்போனை வைத்துக் கொண்டு பேசினால் வலது கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று ஆகாது. மாறாக வலது கையால் மற்ற வேலைகளைச் செய்வதற்கு முக்க்கியத்துவம் கொடுத்ததாகவே ஆகும்.

பயணத்தில் வலது கையால் பொருட்களைத் தூக்கிச் செல்வதை விட இடது கையால் தூக்கிச் செல்வது அதிக பயனுள்ளது என்பதற்காக இடது கையில் தூக்கிச் சென்றால் வலதைப் புறக்கணிப்பதாக ஆகாது.

Saturday, December 25, 2010

பெல்ஜியம் நாட்டவர் நேரத்தைக் கணித்து தொழுவது சரியா???


பெல்ஜியம் நாட்டவர் நேரத்தைக் கணித்து தொழுவது சரியா

நான் பணி நிமித்தமாக பெல்ஜியம் நாட்டில் வசித்து வருகிறேன்.இங்கே உள்ள பள்ளியில் தொழுகை மற்றும் நோன்பு நேரங்களை அவர்கள் வசதிப்படி அமைத்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, ரமலான் மாதம் கோடையில் வந்தால் எங்களுக்கு மக்ரிப் தொழுகை இரவு பத்து மணிக்கு வரும், இதைக் கணக்கில் கொண்டால் எங்களின் ஒரு நாள் நோன்பின் கால அளவு சுமார் பதினான்கு மணி நேரம், இந்தச் சூழலில் இங்கே உள்ள பள்ளியில் சவூதி நேரத்தைப் பின்பற்றி நோன்பு திறத்தல் மற்றும் மக்ரிப் தொழுகையை அமைத்துக் கொள்கிறார்கள். இதுவே ரமலான் அல்லாத நேரத்தில் கோடையில் மக்ரிப் தொழுகையை இரவு பத்து மணிக்கும, மக்ரிப் முடிந்த உடனே இஷா தொழுகையையும் நடத்துகிறார்கள். இதுவே குளிர் காலம் என்றால் மக்ரிப் மாலை நான்கு மணிக்கும், இஷா இரவு ஏழு மணிக்கும் என்று நிர்ணயித்துள்ளார்கள். இவர்கள் செய்வது சரியா? இது போன்ற நாடுகளில் தொழுகை மற்றும் நோன்பை எந்த நேரப்படி பின்பற்றுவது? தெளிவான விளக்கம் தேவை.
தொழுகை நோன்பு ஆகிய இரு வணக்கங்களையும் எந்த நேரங்களில் நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்கம் தெளிவாகக் கூறியுள்ளது. தொழுகையை நிறைவேற்றுவதற்கு மார்க்கம் கூறியுள்ள நேரங்களைத் தவிர்த்து நமது வசதிக்கேற்ப வேறு நேரங்களைத் தேர்வு செய்யக் கூடாது.
தொழுகையை அதற்குரிய நேரங்களில் நிறைவேற்ற வேண்டும்
தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا(103)4
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
அல்குர்ஆன் (4 : 103)
தொழுகையைப் பிற்படுத்துவது தீயவர்களின் செயல் என்றும் கடமையான தொழுகைகளை குறிக்கப்பட்ட நேரத்திலேயே நிறைவேற்ற வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1027 حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ قَالَ ح و حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ قَالَا حَدَّثَنَا حَمَّادٌ عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ كَيْفَ أَنْتَ إِذَا كَانَتْ عَلَيْكَ أُمَرَاءُ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا أَوْ يُمِيتُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا قَالَ قُلْتُ فَمَا تَأْمُرُنِي قَالَ صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكْتَهَا مَعَهُمْ فَصَلِّ فَإِنَّهَا لَكَ نَافِلَةٌ وَلَمْ يَذْكُرْ خَلَفٌ عَنْ وَقْتِهَا رواه مسلم
அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்துபவர்கள், அல்லது தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றாமல் சாகடிப்பவர்கள் உங்களுக்குத் தலைவர்களாய் அமைந்தால் உங்களது நிலை எப்படி இருக்கும்?'' என்று கேட்டார்கள். நான் "(அப்போது) நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகிறீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுது கொள்ளுங்கள். பிறகு அவர்களுடன் நீங்கள் தொழுகையை அடைந்து கொண்டால் அப்போதும் (அவர்களுடன் இணைந்து) தொழுது கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும்'' என்று கூறினார்கள்.
            முஸ்லிம் (1340)
தொழுகைகளை அவற்றுக்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதையே அல்லாஹ் விரும்புகிறான்.
528حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ الْوَلِيدُ بْنُ الْعَيْزَارِ أَخْبَرَنِي قَالَ سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ يَقُولُ حَدَّثَنَا صَاحِبُ هَذِهِ الدَّارِ وَأَشَارَ إِلَى دَارِ عَبْدِ اللَّهِ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ قَالَ الصَّلَاةُ عَلَى وَقْتِهَا قَالَ ثُمَّ أَيٌّ قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قَالَ حَدَّثَنِي بِهِنَّ وَلَوْ اسْتَزَدْتُهُ لَزَادَنِي رواه البخاري
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?'' என்று கேட்டேன். அவர்கள், "உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது'' என்றார்கள்.
புகாரி( 527)
தொழுகை நேரங்கள்
சுப்ஹுத் தொழுகையின் நேரம்
சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரத்திலிருந்து சூரியன் உதிக்கத் துவங்கும் வரை உண்டு.
சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் ஆரம்பமானதிலிருந்து சூரியன் உதயமாவதற்கு முன்பு வரை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல் : முஸ்லிம் (1075)
லுஹர் தொழுகையின் நேரம்
லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சியை விட்டு மேற்கு நோக்கிச் சாய்ந்ததிலிருந்து ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போன்ற அளவு வரும் வரை உண்டு. அதாவது சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து கிட்டத்தட்ட 80 நிமிடங்கள் வரை லுஹர் நேரம் நீடிக்கும்.
லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு ஆகி அஸ்ர் நேரத்திற்கு முன்பு வரை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல் : முஸ்லிம் (1075)
அஸ்ர் தொழுகையின் நேரம்
அஸ்ர் தொழுகையின் நேரம் ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போல ஒரு அளவு வந்ததிலிருந்து அதாவது சூரியன் உச்சி சாய்ந்து 80 நிமிடங்கள்க கடந்துவிட்டால் அப்போதிருந்து சூரியன் மறையத் துவங்கும் வரை அஸர் நேரமாகும்.
 (ஒவ்வொரு தொழுகையின் ஆரம்ப நேரம் அதன் கடைசி நேரம் ஆகிய இரு நேரங்களில்) இரண்டு தடவை எனக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் கஅபாவில் இமாமத் செய்தார்கள். (முதல் தடவை) இமாமத் செய்யும் போது... ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு வந்த போது அஸ்ரை தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : திர்மிதீ (138)
அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாகி அதன் நுனி மறைவதற்கு முன்பு வரை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல் : முஸ்லிம் (1076)
மக்ரிப் தொழுகையின் நேரம்
மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் முழுமையாக மறைந்ததிலிருந்து மேற்கே செம்மை மறையும் வரை உண்டு.
மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் மறைந்தது முதல் செம்மேகம் மறைவதற்கு முன்பு வரை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : முஸ்லிம் (1076)
இஷா தொழுகையின் நேரம்
சூரியன் மறைந்து செம்மேகமும் மறைந்துவிட்டால் இஷாத் தொழுகையின் நேரம் ஆரம்பமாகி விடுகின்றது.
இஷாத் தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல் : முஸ்லிம் (1074)
பெல்ஜியம் நாட்டில் சூரியன் உதிப்பதால் அங்கு இரவு பகலை முடிவு செய்ய முடியும். மேற்கண்ட நேரங்களை அடிப்படையாகக் கொண்டு உங்கள் தொழுகை முறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
பெல்ஜியம் நாட்டில் உள்ளவர்கள் இதற்கு மாற்றமாக சவூதி நேரங்களை அடிப்படையாகக் கொண்டு தொழுகை முறைகளை அமைத்துக் கொள்வது குர்ஆனுக்கும் ஹதீஸிற்கும் எதிரான போக்காகும்.
நோன்பின் நேரம்
சுப்ஹ் நேரம் தொடங்கியதிலிருந்து சூரியன் முழுமையாக மறைகின்ற வரை நோன்புடைய நேரமாகும். பெல்ஜியம் நாட்டில் சுப்ஹ் நேரம் எப்போது வருகின்றது? சூரியன் எப்போது மறைகின்றது? என்பதைக் கவனித்து நோன்பு நோற்க வேண்டும்.
குளிர் காலங்களிலும் கோடை காலங்களிலும் இரவு பகலுடைய நேரங்கள் வித்தியாசப்படும். கோடை காலங்களில் பகற்பொழுது 14 மணி நேரமாக இருந்தாலும் 14 மணி நேரம் நோன்பு நோற்க வேண்டும்.
நேரம் கூடுகிறது என்பதற்காக சூரியன் மறைவதற்கு முன்பே நோன்பு திறந்துவிட்டால் அந்த நோன்பு ஏற்கப்படாது. அதே போன்று குளிர் காலங்களில் பகற்பொழுதின் நேரம் குறையும். இதற்காக சூரியன் மறைந்த பிறகும் நோன்பைத் தாமதப்படுத்துவது கூடாது. பகல் நீண்டாலும் சுருங்கினாலும் சூரியன் மறைவதைத் தான் கணக்கில் கொண்டு நோன்பு திறக்க வேண்டும். இதற்கு மாற்றமாக சவூதியில் சூரியன் மறையும் நேரத்தை கணக்கில் கொண்டு நோன்பு திறந்தால் அது நோன்பாக அமையாது.
அதே நேரத்தில் துருவப்பிரதேசத்தில் ஆறு மாதம் பகலாகவும் ஆறு மாதம் இரவாகவும் இருக்கும். இவர்கள் தினமும் சூரியன் உதிப்பதையோ மறைவதையோ உச்சி சாய்வதையோ காண முடியாது.
இவர்கள் ஒவ்வொரு 24 மணி நேரத்தை ஒரு நாள் எனக்கணக்கிட்டு அந்த நேரத்துக்குள் ஐந்து நேரத் தொழுகைகளைக் கணித்துக் கொள்ளலாம். அது தான் அவர்களுக்கு சாத்தியமாகும்.
ஆறு மாதம் இரவாக இருக்கும் போது இரவிலேயே அவர்கள் லுஹர் அஸர் தொழுவார்கள். ஆறு மாதம் பகலாக இருக்கும் போது பகலில் அவர்கள் சுப்ஹு மக்ரிப் இஷா ஆகிய தொழுகைகளைத் தொழுவார்கள்.
இதற்கான ஆதாரம் வருமாறு
....அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், மற்றொரு நாள் ஒரு மாதம் போன்றும், அடுத்த நாள் ஒரு வாரம் போன்றும், ஏனைய நாட்கள் இன்றைய நாட்களைப் போன்றும் இருக்கும்'' என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடத்தைப் போன்ற அந்த நாளில் ஒரு நாள் தொழுகை எங்களுக்குப் போதுமா?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், போதாது; அதற்குரிய அளவை அதற்காக (தொழுகைக்காக) கணித்துக் கொள்ளுங்கள்'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)
நூல்: முஸ்லிம்
நாட்களைக் கணித்துக் கொள்ளலாம் என்று இந்த ஹதீஸிலிருந்து தெரிகிறது.
இந்த ஹதீஸில் கணித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
எப்போது கணிக்கச் சொன்னார்கள்? ஒரு நாள் ஒரு வருடம் போன்று நீண்டதாக (அதாவது ஆறு மாத அளவு பகலாகவும் ஆறு மாத அளவு இரவாகவும்) இருக்கும் போது தான் கணிக்கச் சொன்னார்கள். இந்த இடத்தில் கணிப்பதைத் தவிர வேறு வழி இருக்காது. இதே அடிப்படையில் துருவப் பிரதேசத்தில் ஆறு மாதம் பகலாகவும் ஆறு மாதம் இரவாகவும் இருக்கும். அங்கே மக்கள் வாழ்ந்தால் அவர்களும் கூட ஒரு வருடம் முழுவதற்கும் ஐந்து வேளை மட்டுமே தொழ வேண்டும் என்று கூற முடியாது.
அவர்கள் கணித்துக் தான் தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற முடியும்.
சந்திரனில் வாழ்கின்ற சூழ்நிலை இல்லை. ஒருவேளை அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கணிப்பது தான்.
இது போன்ற நிலை பெல்ஜியத்தில் இல்லாத போது சவூதி நேரத்தை அடிப்படையாக கொண்டு வணக்கங்கள் செய்தால் அவை இறைவனால் ஏற்கப்படாது.

உண்டியல் மூலம் பணம் அனுப்புவதும் அதையே தொழிலாகச் செய்வதும் கூடுமா


உண்டியல் மூலம் பணம் அனுப்புவதும் அதையே தொழிலாகச் செய்வதும் கூடுமா ?
 பதில் :
ஒருவர் வெளிநாட்டிலிருந்து நமது நாட்டிற்குப் பணம் அனுப்பினால் அந்தப் பணத்துக்கு அரசாங்கம் வரி வாங்குகிறது. இந்த வரியைச் செலுத்தாமல் இருப்பதற்காக அரசுக்குத் தெரியாத வகையில் மறைமுகமாக பணத்தை அனுப்புவதற்கு உண்டியல் முறை என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு செய்வதும் இதையே தொழிலாக செய்வதும் மார்க்கத்தில் கூடுமா? என்று கேள்வி கேட்டுள்ளீர்கள்.
நாம் சம்பாதிக்கும் பணத்தை நாம் விரும்பும் வகையில் பயன்படுத்த இஸ்லாம் அனுமதிக்கிறது. இஸ்லாமியச் சட்டப்படி அமைந்த அரசாங்கத்தில் உண்டியல் போன்ற செயல்கள் சட்ட விரோதமாகக் கருதப்படாது.
உண்டியல் மூலம் ஒருவர் தனது சொந்தப் பணத்தை அனுப்பினால் அதற்காக மறுமையில் இறைவன் கேள்வி கேட்க மாட்டான். இறைவனிடம் குற்றவாளியாக ஆக மாட்டோம்.
ஆனால் நாம் வாழும் நாட்டில் அது குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதனால் ஏற்படும் விளைவுகளை நீங்கள் சுமக்க வேண்டியது வரும். இது போன்ற தொழில்களைச் செய்யும் போது ஏதோ கொலைகாரனைப் போல் அரசாங்கம் நம்மை அடையாளப்படுத்தும் . நமது கொளரவதுக்கு பங்கம் ஏற்படும். சுய மரியாதை இழந்து குற்றவாளிகள் போல் நிற்கும் நிலை ஏற்படும். மேலும் இது போன்ற தொழில் செய்பவர்களின் குடும்பத்து பெண்களும் சொல்லொணாத துன்பங்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள். சமூகத்தில் ஏதோ கேடிகளைப் போல் நம்மை ஆக்கி விடுவார்கள் என்பதைக் கவனிப்பது நல்லது.
மக்கள் சட்டப்படி பணம் அணுப்பாமல் உண்டியல் மூலம் அனுப்புவதற்கு அரசாங்கத்தின் வரிவிதிப்பு முறையும் காரணமாக உள்ளது. கொள்ளைக் காரர்களூக்கு நிகராக அநியாய வரி விதிக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாற்பது சதவிகிதம்  அறுபது சதவிகிதம் வரி விதித்தால் எல்லோரும் அதில் இருந்து தப்பிக்கவே நினைப்பார்கள்.

அதுவும் பல வகையான வரிகள் விதிக்கப்படும் நாடுகளில் இந்தியா தான் முன்னனியில் உள்ளது.

இரண்டு முதல் ஐந்து சதம் அளவுக்கு ஒரே ஒரு வரி மட்டும் விதிக்கப்பட்டால் நாட்டு மக்கள் அனைவரும் அந்தச் சட்டத்தைப் பேணுவார்கள். சட்டத்தைப் பேணும் மக்கள் உருவாதை விட வேறு சிறப்பு என்ன வேண்டும்.

நமது நாட்டில் எல்லா சட்டமும் மீறப்படுவதற்குக் காரணமே இது போன்ற அரசாங்கத்தின் அநியாயக் கொள்ளை தான். உண்டியல் மூலம் மகக்ள் பணம் அனுப்புவதற்கும்
, கள்ளக் கணக்கு எழுதுவதர்கும் அரசாங்கமே முழுப் பொறுப்பு என்பதையும் மறுக்க முடியாது.

குரங்கு விபச்சாரம் செய்யுமா

குரங்கு விபச்சாரம் செய்யுமா


3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார்.
அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் என்று புகாரியில் உள்ளதே இதற்கு விளக்கம் என்ன
பதில் :
புகாரியாக இருந்தாலும் வேறு எந்த நூலாக இருந்தாலும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சம்மந்தப்பட்டவைகளை மட்டும் தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் ஸல் அவர்களூடன் தொடர்பு இல்லாத இது போன்ற கட்டுக்கதைகளை புகாரி அவர்கள் தமது நூலில் பதிவு செய்யாமல் இருந்திருக்க வேண்டும் என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தி புகாரியில் 3849 ஆவது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
3849 حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ حُصَيْنٍ عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ قَالَ رَأَيْتُ فِي الْجَاهِلِيَّةِ قِرْدَةً اجْتَمَعَ عَلَيْهَا قِرَدَةٌ قَدْ زَنَتْ فَرَجَمُوهَا فَرَجَمْتُهَا مَعَهُمْ رواه البخاري
அம்ர் பின் மைமூன் என்பவர் கூறுகிறார் :
அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண்குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன்.
புகாரி (3849)
இச்செய்தியில் ஏராளமான பொய்களும் முரண்பாடுகளும் உள்ளன.
இதை அறிவிப்பவர் அம்ருபின் மைமூன் என்பவராவார். இவர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காலத்தவராக அல்லது அதற்கு முந்திய காலததவராக இருந்தால் தான் ஜாஹிலிய்யா காலத்தில் நடந்த ஒன்றைப் பார்த்திருக்க முடியும். இவரோ நபித்தோழருக்கு அடுத்த காலத்தவர். அறியாமைக் காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தாலும் அதை இவர் பார்த்திருக்க முடியாது.
பொதுவாக மார்க்க சட்ட திட்டங்கள் யாவும் மனிதர்களுக்கே வகுக்கப்பட்டுள்ளன. மிருகங்களுக்கு எந்தச் சட்டதிட்டமும் கிடையாது. இது எல்லோரும் அறிந்து வைத்துள்ள பொதுவான அடிப்படையாகும்.  இந்த அடிப்படைக்கு முரணானக் கருத்தை இச்சம்பவம் உள்ளடக்கியிருக்கின்றது.
குரங்களுக்கிடையே திருமண உறவு என்ற கட்டுப்பாடு இருந்ததாகவும் அதை ஒரு குரங்கு மீறியதாகவும் ஒழுக்கமுள்ள மற்ற குரங்குகள் விபச்சாரம் செய்த குரங்கை கல்லெறிந்து கொன்றதாகவும் கதை கூறப்படுகின்றது.
திருமணம் செய்து குடும்பம் நடத்த வேண்டும் என்ற எந்தச் சட்டமும் குரங்குகள் உட்பட எந்த மிருகத்துக்கும் கிடையாது. அவை விரும்பியவாறு இச்சையைத் தீர்த்துக் கொள்கிறது.  இது தான் உலகத்தில் எதார்த்தமாக நடந்து கொண்டிருக்கின்றது. இதற்கு மாற்றமான இந்தச் செய்தியை அறிவுள்ளவர்கள் வடிகட்டிய பொய் என்று உடனே அறிந்து கொள்வார்கள்.
மேலும் குரங்குகள் திருமணம் செய்து வாழ்ந்தன என்று வைத்துக் கொண்டாலும் ஒரு குரங்கு தனது மனைவியான குரங்கிடம் சேர்கிறதா? மனைவியல்லாத குரங்கிடம் சேர்கிறதா என்பதை எப்படி மனிதர்கள் அறிய முடியும்?
புகாரியில் இடம் பெற்றாலும் இது பொய்யாகும். இதை நாம் அலட்சியப்படுத்தி விட வேண்டும்.