கயவர்களுக்கு உச்ச நீதிமன்றம் சாட்டை�
1994 நவம்பர் அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது எழுதிய தலையங்கம்
முஸ்லிம்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்து விட்ட நரசிம்மராவின் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களை ஏமாற்றுவதற்குக் கையாளும் எல்லா முயற்சிகளிலும் தோல்வியையே தழுவி வருகின்றது.
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களின் ஓட்டுக்களைக் கவர்வதற்காக உருதுச் செய்தியறிக்கை என்ற கிலுகிலுப்பையைக் கையில் எடுத்தது. கர்நாடகத்தில் உள்ள முஸ்லிம்கள் யாரும் உருதுவில் செய்தி வாசிக்க வேண்டும் என்று ஒரு போதும் கோரவில்லை.
இந்து வெறி பிடித்த கன்னடம் பேசுவோர் இதற்கெதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு முஸ்லிம்களைக் கொன்று முஸ்லிம்களின் சொத்துக்களையும் சூறையாடினர். உடனே உருதுச் செய்தியறிக்கையை அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது.
உருதுச் செய்தியறிக்கையால் கர்நாடக முஸ்லிம்கள் உச்சி குளிர்ந்து போகவில்லை. ஆனால் அமுல் படுத்தப்பட்ட பின் இந்து வெறியர்களுக்குப் பணிந்து அதை வாபஸ் வாங்கியது இந்திய முஸ்லிம்கள் அனைவரின் உள்ளங்களிலும் அச்ச உணர்வை ஏற்படுத்தியது தான் மிச்சம்.
இந்து வெறியர்களின் காலடியிலேயே ஆள்வோர் இருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை முஸ்லிம்கள் உணர்ந்து கொண்டது தான் இதனால் ஏற்பட்ட பலன். இதைப் பிரதமர் நரசிம்மராவ் வெட்கமின்றி ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஆந்திராவில் நடைபெற உள்ள தேர்தலில் முஸ்லிம்களின் ஓட்டுக்களைக் கவர்வதற்காக முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்று காங்கிரஸ் அரசு அறிவித்தது. இது போன்ற அறிவிப்புக்களின் போது நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கப்படும். இத்தகைய அறிவிப்புகளைச் செய்யும் அரசே சில சமயம் தங்கள் பினாமிகளின் பெயரால் இத்தகைய தடை உத்தரவுகளைப் பெறுவதுண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த வழக்கப்படி நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கப்பட்டது.
ஆந்திர காங்கிரஸ் அரசு முஸ்லிம்களை ஏமாற்ற முடியவில்லை. அவர்கள் விழித்துக் கொண்டே உள்ளனர் என்பதைக் கண்டவுடன் அவசரமாக முஸ்லிம் பெயர் தாங்கி ஒருவரை ஆந்திர மாநிலக் காங்கிரஸ் தலைவராக்கி முஸ்லிம்களை ஏமாற்றச் செய்யும் முயற்சியிலும் படுதோல்வி.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு என்.டி ராமாராவின் பின்னே முஸ்லிம்கள் திரண்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
காங்கிரஸின் மற்றொரு சூழ்ச்சியையும் முட்டாள் தனத்தையும் காங்கிரஸின் இந்து ஆதரவுப் போக்கையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அம்பலப்படுத்தி விட்டது.
மானமுள்ள எந்த அரசாக இருந்தாலும் இந்தச் சமயத்தில் பதவி விலகியிருக்கும். காங்கிரஸுக்கு அது இல்லாததால் இடித்த புளியாக பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
நான் போன பிறவியில் என்னவாக இருந்தேன் என்று நீதிமன்றத்தில் கருத்துக் கேட்க முடியுமா? இது போன்றதொரு கேள்வியை ஆர்.எஸ்.எஸ் இன் பினாமியாய் மத்தியில் ஆளும் நரசிம்மராவின் காங்கிரஸ் அரசு நாட்டின் மிக உயர்ந்த நீதி மன்றத்திடம் ஜனவரி 7 ஆம் தேதியன்று அற்புதமான கருத்தைக் கேட்டது.
பாபர் மசூதி இருந்த இடத்தில் முன் எப்போதாவது இந்துக் கோவில் இருந்ததா? என்பது தான் அந்தக் கேள்வி.
இந்தியாவுக்கென்று அரசியல் அமைப்புச் சட்டம் இருக்கிறது. சிவில் சட்டங்கள் இருக்கின்றன. கிரிமினல் சட்டங்களும் இருக்கின்றன. பாபர் மசூதி யாருக்குச் சொந்தம் என்பதை இந்தியாவில் உள்ள சிவில் சட்டங்களின் அடிப்படையில் தான் முடிவு செய்ய வேண்டும்.
நரசிம்மராவ் அரசு உச்ச நீதிமன்றத்தில் கேட்ட இந்தக் கேள்வி அரசியல் சட்டத்துக்கே எதிரானதாகும். எனக்குச் சொந்தமான வீடு பற்றி வழக்கு இருந்தால் இந்திய சிவில் சட்டப்படி அது யாருக்குச் சொந்தம் என்று ஆராய வேண்டுமேயன்றி என் வீடு இருக்கின்ற இடத்தில் எப்போதவாது வேறு கட்டிடம் இருந்ததா என்று ஆராய முடியாது.
இப்போது பாராளுமன்றம் இருக்கும் இடத்தில் முன் எப்போதாவது வேறு யாருக்காவது சொந்தமான கட்டிடம் இருந்ததா?
இப்போது இந்தியா என்று கூறப்படும் நாடு முன் எப்போதாவது தனித் தனியான பல நாடுகளாக இருந்ததா?
இப்போது காங்கிரஸ் தலைவராக இருக்கும் நரசிம்மராவ் முன்னெப்போதாவது ஆர்.எஸ்.எஸ் இல் தீவிர உறுப்பினராக இருந்ததுண்டா?
என்றெல்லாம் கூடக் காங்கிரஸ் நீதிமன்றத்தில் கருத்துக் கேட்டால் ஆச்சரியமில்லை. இது போன்ற கேள்விகள் எவ்வளவு அபத்தமானவையோ அதை விடவும் அபத்தமானது நரசிம்மராவ் அரசு உச்ச நீதிமன்றத்தில் கேட்ட கேள்வி.
இந்தக் கேள்வி மிகையானதும் தேவையற்றதுமாகும் இது தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.
இதை விட அவமானம் வேறு இல்லை. கேள்வி மிகையானதும் தேவையற்றதும் ஆகும் என்ற வரி அரசின் முட்டாள் தனத்தையும் கெட்ட எண்ணத்தையும் காட்டப் போதுமானதாகும்.
இந்தக் கேள்வி எதற்காகக் கேட்கப்பட்டது? நீதி மன்றம் கூறக் கூடிய முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்திலா? நிச்சயம் இல்லை.
கோவில் இருந்தது என்று முடிவு கூறப்பட்டால் உடனே கோவில் கட்ட ஏற்பாடு செய்து நீதிமன்றத்தின் மீது பழியைப் போட்டுவிடுவதும் கோவில் ஏதும் இல்லை என்று முடிவு கூறப்பட்டால் கொள்கையளவில் ஏற்றுக் கொள்வதாகக் கூறிவிட்டு ஒதுங்கிக் கொள்வது என்பதுமே நரசிம்மராவின் திட்டம்.
இந்தத் திட்டம் இருந்ததால் தான் நீதிமன்ற முடிவுக்குக் காத்திராமல் அவசர அவசரமாக சங்கராச்சாரியார்கள் தலைமையில் கோவில் கட்ட டிரஸ்டை ஏற்படுத்தினர்.
மஸ்ஜித் இருந்த இடத்தில் கோயில் ஏதும் இருந்ததில்லை என்று முடிவு கூறப்பட்டால் அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டித் தரப்படுமா? என்று தெளிவாகவே நீதிமன்றம் கேட்டது , அதற்கு நரசிம்மராவ் அரசு வழக்கறிஞர் அளித்த பதில் கட்டித் தரப்படாது என்பது தான். இதை இரண்டு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் அம்பலப்படுத்தியுள்ளனர்.
அது பள்ளிவாசல் தான் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அதைச் செயல்படுத்த மாட்டோம் என்று கூறக் கூடிய நரசிம்மராவ் பிறகு ஏன் நீதிமன்றத்தில் கருத்துக் கேட்க வேண்டும். சாமியார்களின் காலடியில் வீழ்ந்து கிடப்பதை பெருமையாகக் கூறும், இந்து வெறி பிடித்த நயவஞ்சக நரசிம்மராவின் நரித்தந்திரத்தின் வெளிப்பாடே இது.
நரசிம்மராவின் இந்து மதவெறிப்போக்குக்கு இதை விட வேறு என்ன சான்று தேவை?
இந்தத் தீர்ப்பை பீ.ஜே.பி என் பாசிசக் கட்சியும் வரவேற்றுள்ளது.
நம்பிக்கை அடிப்படையிலான பிரச்சனையில் நீதிமன்றம் தலையிட முடியாது. தீர்த்து வைக்க முடியாது என்று தாங்கள் கூறி வருவதை உச்ச நீதி மன்றம் உறுதி செய்து விட்டதாகப் பிரச்சாரம் செய்கிறது பி ஜே பி.
மக்களை முட்டாள்களாக்குவது பி.ஜே.பிக்கு வழக்கமான ஒன்று தான். ஆனால் இங்கே உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு தப்பான அர்த்தம் கற்பித்து உச்ச நீதிமன்றத்தை இன்னொரு முறை அவமானப்படுத்துகிறது பிஜேபி . உச்ச நீதிமன்ற உத்தரவையும் அரசியல் சட்டத்தையும் காலடியில் போட்டு மிதிக்கும் பிஜேபிக்கும் இந்தத் தீர்ப்பு மரண அடி கொடுத்துள்ளது என்பது தான் உண்மை.
நம்பிக்கை அடிப்படையிலான விஷயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை. அது பள்ளிவாசலுக்குச் சொந்தமானதா? கோவிலுக்குச் சொந்தமானதா என்பதை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டியதில்லை. மாறாக அலஹாபாத் லக்னோ நீதி மன்றங்களே இதை விசாரிக்கலாம் . சிறிய நீதிமன்றம் கூட இதை விசாரிக்க முடியும் என்பதே உச்ச நீதி மன்றத்தின் முடிவு.
இதனால் தான் அலஹாபாத் லக்னோ நீதிமன்றங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வழக்குகளை அந்த நீதிமன்றங்களே விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியுள்ளது. நரசிம்மராவின் கேள்வி முட்டாள் தனமானது. உள்நோக்கம் கொண்டது என்பதால் தான் அர்த்தமற்ற இந்தக் கேள்விக்கு நீதிமன்றம் பதிலளிக்கவில்லையே தவிர நீதிமன்றங்கள் இது போன்ற விஷயங்களில் தீர்ப்பளிக்க முடியாது என்பதால் அன்று.
அந்த உண்மைக்கு மாற்றமாக நீதி மன்றத்தின் கருத்தைத் திசை திருப்பும் தவறான அர்த்தம் கற்பிக்கும் அத்வானி மீது சட்டத்தை மதிப்போர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்வது நல்லது.
கல்யாண்சிங்குக்குத் தண்டனையும் அபராதமும் அளித்ததன் மூலமும் நீதிமன்றம் இந்த விஷயத்திலும் தலையிட முடியும் என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமின்றி உச்ச நீதிமன்றம தெளிவுபடுத்தியுள்ளது.
நிலத்தை அரசு கையகப்படுத்தியது செல்லும் என்றாலும் அரசாங்கம் எந்த டிரஸ்டிடமும் ஒப்படைக்க முடியாது என்றும் நிறுத்தப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளின் முடிவில் நிலம் யாருடையது என்று தீர்ப்பு வருகின்றதோ அவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சங்கராச்சாரிகளின் கையில் நிலத்தை ஒப்படைக்கும் ராவின் சதித் திட்டத்தையும் இந்தத் தீர்ப்பால் முறியடித்து அவரின் முகத்தில் கரியைப் பூசியுள்ளது உச்ச நீதிமன்றம்.
இந்தத் தீர்ப்பினால் முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இடிக்கப்பட்ட பள்ளிவாசல் கட்டப்படப் போவதில்லை. அலகாபாத், லக்னோ நீதி மன்றங்கள் நாளைக்கே தீர்ப்பளிக்கப் போவதில்லை . பல ஆண்டுகளை அவை இழுத்தடிக்கலாம்.
ஆயினும் நரசிம்மராவின் முஸ்லிம் விரோதப் போக்கையும் அவரது கபட நாடகத்தையும் ஆர்எஸ்எஸ்ஸை விட அவரது அவர் மோசமானவர் என்ப்தையும் தெளிவாக முஸ்லிம்களுக்கு அடையாளம் காட்டிவிட்டது . பாபர் மசூதி விஷயத்தில் பிஜேபி எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் சட்ட விரோதமானவை தாம் என்பதையும் அதற்கு நரசிம்மராவ் தெரிந்தே உடந்தையாய் இருக்கிறார் என்பதையும் இத்தீர்ப்பு அம்பலப்படுத்தி விட்டது.
இந்த வகையில் இந்தத் தீர்ப்பை முஸ்லிம்கள் வரவேற்கலாம்.
No comments:
Post a Comment