பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, November 10, 2014

தொலைக்காட்சி, புகைப்படம் ???

தொலைக்காட்சி, புகைப்படம்:

உருவப்படங்கள், உருவச் சிலைகள் ஆகியவற்றை இஸ்லாம் தடை செய்துள்ளதைப் பெரும்பாலோர் அறிந்து வைத்துள்ளனர். ஆனால் நவீனமான கருவிகளைப் பயன்படுத்தி தயார் செய்யப்படும் உருவப் படங்கள் பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பைப் பலரும் அறியாமல் உள்ளனர்.
உருவச் சிலைகள், உருவப் படங்கள், புகைப் படங்கள், நிழற்படங்கள், எலக்ட்ரான் கதிர் அலைகளால் தெரியும் படங்கள் என பல்வேறு வகைகள் உள்ளன. இவைகளை விரிவாக நாம் ஆராய்ந்தாலே உண்மை விளங்கும்.

எந்த வீட்டில் உருவச் சிலைகளும், நாய்களும் உள்ளனவோ அங்கே மலக்குகள் (வானவர்கள்) நுழைய மாட்டார்கள்' என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ தல்ஹா (ரலி) நூல் : புகாரி 3224, 5957

உருவச் சிலைகள் என்று நாம் மொழிபெயர்த்த இடத்தில் திம்ஸால்'தமாஸீல்' ஸுரத்' ஆகிய சொற்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தச் சொற்கள் உருவச் சிலைகளையும், உருவப் படங்களையும் குறிக்கும் பொதுவான சொற்களாகும்.
இந்தச் சொற்கள் மூன்று பரிமாணம் உள்ள உருவச் சிலைகளையே குறிக்கும். இரண்டு பரிமாணமுள்ள படங்களைக் குறிக்காது; எனவே இரண்டு பரிமாணமுள்ள எந்தப் படங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்று சிலர் விளக்கம் தருகின்றனர்.
ஹதீஸ்களை ஆராயும் போது இந்த விளக்கம் முற்றிலும் தவறானது என்பதை அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்த போது உருவங்கள் (திம்ஸால்) உள்ள திரைச் சீலையைத் தொங்க விட்டிருந்தேன். அதைக் கண்டதும் அவர்களின் முகம் மாற்றமடைந்தது. அதைக் கிழித்து எறிந்து விட்டு ஆயிஷாவே! அல்லாஹ்வின் படைப்பைப் போல் படைக்க முற்படுபவர்களே கியாமத் நாளில் கடுமையான தண்டனைக்குரியவர்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி 3224, 5954

திரைச் சீலையில் இருந்த உருவங்கள் நிச்சயம் முப்பரிமாணம் உள்ளதன்று. அவ்வாறு இருக்கவும் முடியாது. மாறாக படங்கள் தான் வரையப்பட்டிருக்கும். அல்லது பின்னப்பட்டிருக்கும். படங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள் என்பதற்கு இது தெளிவான சான்றாகும்.
உருவச் சிலைகளும், உருவப் படங்களும் இஸ்லாத்தின் பார்வையில் ஒன்று தான் என்பதை இந்நிகழ்ச்சி உறுதி செய்கின்றது.
நல்லடியார்கள் என்று கருதப்படுபவர்களின் உருவங்களென்றால் அவற்றையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கஃபாவுக்குள் இருந்த இப்றாஹீம் (அலை), இஸ்மாயில் (அலை) ஆகியோரின் உருவச் சிலைகள் உட்பட எல்லா உருவச் சிலைகளையும் அகற்றுமாறு கட்டளையிட்டு, அவற்றை அகற்றிய பின்பே உள்ளே நுழைந்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி 1601,
மற்றொரு அறிவிப்பில் (புகாரி 3351)
இப்றாஹீம் (அலை), மர்யம் (அலை) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லடியார்களுக்கு இதில் விதி விலக்கு எதுவும் இல்லை. நல்லடியார்களுக்கு சிலை வடிப்பதிலும், வரைவதிலும் தான் ஈமானுக்கு ஆபத்து அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உருவப் படங்கள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டதா? அதில் ஏதேனும் விதி விலக்கு உண்டா? என்பதை இனி காண்போம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்த போது உருவப்படம் வரையப்பட்ட திரைச் சீலைகளைக் கண்டதும். அதை அகற்றினார்கள். நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து கொள்வார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி 2479

நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். உருவப் படங்கள் இருக்கும் நிலையிலேயே அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன்
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : அஹ்மத் 24908

தலையணைகளாக ஆக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கட்டளையிட்டதாக மற்றொரு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. (அஹ்மத் 23668)

ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து சென்ற இரவு உங்கள் வீட்டுக்கு நான் வருவதற்குத் தடையாக இருந்தவை என்னவென்றால், உங்கள் வீட்டில் ஒரு மனிதனது உருவச் சிலையும், உருவம் பொறித்த திரைச் சீலை ஒன்றும், நாய் ஒன்றும் இருந்தது தான்'' என்று என்னிடம் கூறினார்கள். உருவச் சிலையின் தலையை அகற்றுமாறும், உருவப் படங்கள் உள்ள திரைச் சீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக்கிக் கொள்ளுமாறும், நாயை வெளியேற்றுமாறும் உங்கள் (குடும்பத்துக்கு) கட்டளையிடுங்கள் என்றும் என்னிடம் கூறினார்கள்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல்கள் : அஹ்மத் 7701, திர்மிதீ 2730, அபூதாவூத் 3627

தன்னிடம் இறக்கைகள் உடைய குதிரைகளின் படம் பொறிக்கப்பட்ட திரைச் சீலை இருந்ததாகவும், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிழித்ததும், அதில் இரண்டு தலையணைகள் செய்ததாகவும் அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 3935

இந்த ஹதீஸ்களைக் கவனமாகப் பார்க்கும் போது மதிப்பு மிக்கவையாகக் கருதப்படும் உருவப் படங்களே தடுக்கப்படுகின்றன; மதிப்பில்லாமல் மிதிபடும் உருவப் படங்கள் தடுக்கப்படவில்லை'' என்பதை எவரும் அறிய முடியும்.
உருவப் படங்கள் உள்ள திரைச் சீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக்கிக் கொள்ளுமாறு ஜிப்ரீல் (அலை) கூறிய வார்த்தை இதைத் தெளிவாக விளக்கும்.

எந்த உருவம் திரைச் சீலையாக தொங்கிக் கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்டதோ அதே உருவம் தலையணையாகத் தரையில் போடக் கூடியதாக ஆகும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடுக்கப்படவில்லை. மாறாக அதை அவர்களே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அந்தத் திரைச் சீலையை இரண்டாகக் கிழித்த போது உருவமும், பாதி, பாதியாகச் சிதறுண்டு போயிருக்கலாம். அதனால் அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம்'' என்று சிலருக்குத் தோன்றக் கூடும்.
அது சரியான அனுமானம் அல்ல. ஏனெனில் ஆயிஷா (ரலி) அவர்கள் உருவம் இருக்கும் நிலையிலேயே அதில் நபிகள் நாயகம் (ஸல்) சாய்ந்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன்'' என்கிறார்கள்.
சின்னஞ்சிறு வித்தியாசத்தையும் நுணுக்கமாகக் கவனிக்கும் அன்னை ஆயிஷா அவர்கள், உருவம் சிதைந்து போயிருந்தால் அதை உருவம் என்று குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.
மேலும் ஜிப்ரீல் (அலை) சம்மந்தப்பட்ட ஹதீஸில் உருவச் சிலையின் தலையை அகற்றுமாறு கூறிய ஜிப்ரீல் (அலை) அவர்கள், உருவப் படங்கள் உள்ள சீலையை உருவம் தெரியாதவாறு நீள வடிவில் பாதியாகக் கிழிக்குமாறு கூறவில்லை. உருவம் தெரியாத அளவுக்கு மாற்றினால் தான் தலையணையாகப் பயன்படுத்தலாம் என்றிருந்தால் மதிப்பில்லாமல் மிதிபடும் வகையில்' என்று கூறியிருக்கத் தேவையில்லை.
இன்னும் சொல்வதென்றால் தலையணையாக ஆக்குமாறு கூட அவர்கள் கூறத் தேவையில்லை. உருவம் தெரியாத வகையில் கிழிக்கப்பட்டு விட்டால் அதைத் திரைச் சீலையாகவே மீண்டும் பயன்படுத்தலாம்.
ஆக மதிப்பற்ற விதத்தில் பொறிக்கப்பட்டுள்ள படங்களைப் பயன்படுத்தத் தடை ஏதும் இல்லை என்பதே சரியாகும்.
தொங்க விடப்படும் உருவப் படங்கள் பொறித்த திரைச் சீலைகள், பிரேம் செய்து மாட்டப்படும் உருவப் படங்கள், ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கும் போட்டோக்கள், பெட்டியில் பூட்டி வைத்துப் பாதுகாக்கும் உருவப் படங்கள் இவையெல்லாம் தடுக்கப்படுகின்றன. அதைப் பற்றி மதிப்பிருக்கின்ற காரணத்தினால் தான் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்கிறார்கள். ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கிறார்கள். உயர்ந்த இடத்தில் வைத்துப் பேணுகிறார்கள். இது போன்ற வழிகளில் பயன்படுத்த இஸ்லாம் தடுக்கின்றது.
செய்தித் தாள்களில் காணப்படும் உருவப் படங்களுக்கும், பொட்டலாம் கட்டிக் கொடுக்கப் பயன்படும் காகிதங்களில் பொறிக்கப்பட்ட ,உருவப் படங்களுக்கும், பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பெட்டிகளில் பொறிக்கப்பட்ட உருவப் படங்களுக்கும் (உதாரணம்: தீப்பெட்டி) எவ்வித மதிப்பும் அளிக்கப்படுவதில்லை. இவைகளை வைத்திருக்கத் தடையும் இல்லை. ஒரு செய்திப் பத்திரிகை நம் வீட்டில் இருந்தால் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பதில்லை.

மதிப்பற்ற வகையிலும் கூட உருவப் படங்களைப் பயன்படுத்தக் கூடாது'' என்று கூறி கீழ்க்கண்ட ஹதீஸை ஒரு சாரார் சான்றாகக் காட்டக்கூடும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் உருவப் படங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்றை வாங்கியிருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து உள்ளே நுழையவில்லை. இதைக் கண்டதும், ஆயிஷா (ரலி) அவர்கள், நான் செய்த தவறு (எதுவாயினும்) அதற்காக அல்லாஹ்விடத்தில் மன்னிப்புத் தேடுகிறேன்'' என்றார்கள். இது என்ன திரைச் சீலை'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீங்கள் அதன் மேல் அமர்வதற்கும், சாய்ந்து கொள்வதற்காகவும் வாங்கினேன்'' என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். இந்த உருவத்தை வரைந்தவர்கள் கியாமத் நாளில் வேதனை செய்யப்படுவார்கள். நீங்கள் படைத்ததை உயிர்ப்பியுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 3224
சாய்ந்து கொண்டார்கள்'' என்று வருகின்ற ஹதீஸை இந்த ஹதீஸ் மாற்றி விட்டது என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.
இந்த வாதம் இரண்டு காரணங்களால் சரியானதல்ல. வரைந்தவர்களைத் தான் இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டனம் செய்கிறார்கள். அதை வைத்திருந்த ஆயிஷா (ரலி) அவர்களைக் கண்டிக்கவில்லை.
உருவப் படம் உள்ள தலையணையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொண்டிருந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்பே ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
மற்றொரு விதிவிலக்கு
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடனிருக்கும் போது பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பேன். என்னுடன் விளையாடுவதற்கு சில தோழிகளும் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழையும் போது அவர்கள் ஓடி ஒளிந்து கொள்வர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (என்னுடன் விளையாட) அவர்களைத் திருப்பி அனுப்புவார்கள். அதன் பின் அவர்கள் என்னோடு விளையாடுவார்கள்'' என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 6130
இந்த ஹதீஸிலிருந்து பொம்மைகள் வைத்து விளையாட அனுமதி உள்ளது என்று அறியலாம்.
உருவச் சிலைகளுக்கு பொதுவான தடை வந்துள்ளதால், இங்கே குறிப்பிடப்படும் பொம்மைகள் உயிரற்ற மரம், செடி, கப்பல் போன்ற பொம்மைகளாகத் தான் இருக்க முடியும்'' என்று கூற இடமுண்டு. இதை மற்றொரு ஹதீஸ், மறுத்து உயிருள்ளவைகளின் பொம்மைகளையே வைத்து விளையாடி இருக்கிறார்கள்'' என்பதைத் தெளிவாக அறிவிக்கின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தபூக்கோ, அல்லது ஹுனைனோ இரண்டில் ஏதோ ஒரு போர்க் களத்திலிருந்து திரும்பி வந்தனர். அப்போது காற்று வீசி ஆயிஷா (ரலி) அவர்களின் விளையாட்டுப் பொம்மைக்குப் போடப்பட்டிருந்த திரையை விலக்கியது. அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவே என்ன இது?'' என்றார்கள். என் பொம்மைகள்'' என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றையும் கண்டு, அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். குதிரை'' என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள். குதிரையின் மேல் என்ன?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இறக்கைகள்'' என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள். குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்க,ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?'' என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். இதைக் கேட்டதும், கடவாய்ப் பற்களை நான் காணும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : அபூதாவூத் 4284

உயிருள்ள குதிரையின் உருவச் சிலையைக் கண்ட பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்காதது மட்டுமல்ல; தமது சிரிப்பின் மூலம் இதற்கு அங்கீகாரமும் அளிக்கிறார்கள்.
உயிரற்றவைகள் மட்டுமல்ல; உயிருள்ளவைகளின் பொம்மைகளைக் கூட சிறுவர்கள் விளையாடலாம்; அதை வீட்டில் வைத்திருக்கலாம் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
உருவச் சிலைகள் உள்ள இடங்களில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பது, சிறுவர்களின் விளையாட்டுக்காக இல்லாமல் ஏனைய நோக்கங்களுக்காக உள்ள உருவச் சிலைகளுக்கே என்று உணரலாம்.
இன்னொரு விதிவிலக்கு
மதிக்கப்படாத வகையிலும், சிறுவர் சிறுமியர்களின் விளையாட்டுப் பொருளாகவும் உருவப் படங்களுக்கும் பொம்மைகளுக்கும் அனுமதி இருப்பது போல் சிறிய அளவிலான உருவப் படங்களுக்கும் அனுமதி உண்டு.
உருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் கூறிய செய்தியை அபூ தல்ஹா (ரலி) தன்னிடம் கூறியதாக ஸைத் பின் காலித் என்பவர் எங்களிடம் அறிவித்தார். ஒரு நாள் ஸைத் பின் காலித் நோயுற்றார். அவரை நோய் விசாரிக்க நாங்கள் சென்ற போது அவரது வீட்டில் உருவப் படங்களுடன் திரைச் சீலை தொங்க விடப்பட்டிருந்தது. அதைக் கண்ட நான் இவர் உருவப் படங்கள் பற்றிய ஹதீஸை நமக்கு அறிவிக்கவில்லையா?'' என்று உபைதுல்லாஹ் அல் கவ்லானி என்பவரிடம் கேட்டேன். அதற்கு அவர் ஆடையில் (சிறிய) அளவிலான உருவத்தைத் தவிர'' என்று அவர் கூறியதை நீ கேட்கவில்லையா? என்றார். நான் இல்லை என்றேன். அதற்கு அவர் இல்லை. நிச்சயமாக அவ்வாறு அவர் கூறினார்'' என்றார்.
அறிவிப்பவர்: புஸ்ரு பின் ஸயித் நுல்: முஸ்லிம் 3226

சிறிய அளவிலான உருவப்படங்களைத் திரைச் சீலைகளில் தொங்க விட்டது தவறல்ல என்பதை இதிலிருந்து விளங்கலாம்.
சிறிய அளவிலான உருவப்படம் தவிர மற்ற உருவப்படம் உள்ள வீடுகளுக்குத் தான் வானவர்கள் வர மாட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது.
சிறிய அளவு, பெரிய அளவு என்பதை எவ்வாறு தீர்மானிப்பது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கூறவில்லை.
இது போன்ற விஷயங்களில் நடை முறையைக் கவனத்தில் கொண்டு நேர்மையான சிந்தனையுடன் நாம் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
சிறிய அளவிலான உருவப்படம் என்று நமக்குப் படுகின்ற உருவப் படங்களை வைத்துக் கொள்வதில் குற்றம் இல்லை.
சுவரில் பிரேம் போட்டு மாட்டி வைக்கும் படம் தான் சாதாரணமான அளவாகும். அதனுடன் ஒப்பிடும் போது ரூபாய் நோட்டுக்கள், உறுப்பினர் அட்டைகள், பாடப் புத்தகங்களில் அச்சிடப்படும் படங்கள் போன்றவை பன்மடங்கு சிறியவையாகும். அளவில் சிறியதாக இருக்கும் காரணத்திற்காகவே இவை அனுமதிக்கப்பட்டதாக ஆகி விடும்.
மேலே குறிப்பிட்டவை அவசியத் தேவை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படும் என்பது மட்டுமன்றி இவை அளவில் சிறியதாகத் தான் இருக்கும். அளவில் சிறியதாக இருந்தால் அவசியத் தேவை இல்லாத போதும் உருவப் படங்களைப் பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுத்தல் போன்ற காரணத்துக்காக உருவங்கள் வரைந்து கற்றுக் கொடுப்பதையும் தடை செய்ய முடியாது. சிங்கம், புலி போன்ற விலங்குகளைப் படம் வரைந்து தான் கற்றுக் கொடுக்க முடியும்.
அது போல் சாட்சியங்களாகப் பயன்படக் கூடிய வகையிலும் படங்களைப் பயன்படுத்தலாம்.
ஒரு ஊரில் ஒரு சமுதாயத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை அம்பலப்படுத்திட புகைப்படங்கள் சிறந்த சாட்சியமாகப் பயன்படும். சிலரது சந்திப்புகளை நிரூபிக்கும் அவசியம் ஏற்படும் என்றால் அப்போதும் புகைப்படங்களைத் தடுக்க முடியாது.
இது உருவப் படங்களின் நிலை! புகைப் படங்களுக்கும் இதுவே தான் சட்டம். கையால் வரைந்தால் தான் உருவப்படம். கருவியால் வரைந்தால் அது உருவப் படம் அல்ல'' என்ற வாதம் தவறான வாதமாகும்.
ஒரு காலத்தில் எழுத்தாணியால் எழுதினார்கள். அது வளர்ந்து பேனாக்களால் எழுதப்பட்டு, இன்று அச்சிடப்படுகிறது. எழுத்துக் கலையின் விஞ்ஞான முன்னேற்றமே அச்சுக் கலை. அச்சிடப்பட்டதையும், கையால் எழுதியதையும் எழுத்துக்கள் என்றே கூறுவோம்.
அது போல் ஓவியக் கலையின் விஞ்ஞான முன்னேற்றமே போட்டோ' (புகைப்படக் கலை) இது உருவப்படம் அல்ல என்று எவரும் கூற முடியாது. அதை விட தத்ரூபமாக படங்கள் போட்டோவில் அமைகின்றன. உருவப்படங்களுக்குச் சொன்ன எல்லா விதிகளும், விலக்குகளும் போட்டோவுக்கும் பொருந்தும்.
எல்லாவற்றையும் நமக்காக இறைவன் படைத்துள்ளான் என்பதால் உருவப்படங்கள் கூடும் என்று சிலர் கூறுகின்றனர். பன்றி, நாய்களையும் இதே அடிப்படையில் உண்ண முடியுமா? நமக்காக எல்லாவற்றையும் படைத்த இறைவன் தான் ஒரு சிலவற்றை நமக்குத் தடுத்திருக்கிறான் என்று புரிந்து கொண்டால் இந்தக் கேள்வி எழ வழியில்லை.
மற்றொரு விதிவிலக்கு
உயிரற்ற பொருட்களாகிய மரம், செடி, கப்பல், வீடு, கார் போன்ற உருவங்களுக்குத் தடை ஏதுமில்லை.
நான் ஓவியங்கள் வரைகிறேன். அது பற்றி எனக்குத் தீர்ப்பளியுங்கள்'' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒருவர் கேட்டார். எல்லா ஓவியர்களும் நரகில் தான். ஓவியங்களுக்கு உயிரளிக்கப்பட்டு அவை அவனை நரகில் வேதனைப்படுத்தும். நீ அவசியம் செய்தாக வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவைகளைச் செய்து கொள்!'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி 2225

உயிரற்ற பொருட்களைச் செய்து கொள்ள ஒரு தடையுமில்லை என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது.
ஆனால் இந்த அனுமதியிலும் விதி விலக்கு இருக்கின்றது. உயிரற்ற சில பொருட்களை வைத்துக் கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி மறுக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில் சிலுவைகளைப் பொறித்த எந்தப் பொருளையும் அழிக்காமல் விட மாட்டார்கள்' என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி 5952

ஏனைய மக்களால் புனிதமாகக் கருதப்படும் பொருட்களின் சிலைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்ததில்லை என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.
டி.வி., வீடியோ
டி.வி, வீடியோக்கள் உருவப் படங்களில் சேராது என்பதே சரியாகும். உருவப் படங்களுக்கும், டி.வி., வீடியோவுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
காணப்படுவது, பிரதிபலிப்பது எல்லாம் படங்கள் அல்ல. பதிவதும், நிலைத்திருப்பதுமே படங்கள்.
நமது முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறோம். நமது உருவம் கண்ணாடியில் தெரிவதால் காண்ணாடியை யாரும் உருவப் படம் என்று சொல்வதில்லை. கண்ணாடி பார்த்தால் மலக்குகள் வருவதில்லை என்றும் கூறுவதில்லை.
கண்ணாடியில் தெரிவதைப் படம் என்று சொல்லாமலிருக்க என்ன காரணம் கூறுவோம்?
நம் உருவம் கண்ணாடியில் பதியவும் இல்லை. நிலைத்திருக்கவும் இல்லை. நாம் முன்னால் நின்றால் அது நம்மைக் காட்டும். வேறு யாராவது நின்றால் அவர்களைக் காட்டும். யாருமே நிற்காவிட்டால் எதையும் காட்டாது.
டி.வி.யும் இது போன்றது தான். நாம் எதை ஒளி பரப்புகிறோமோ அது தெரியும். என்னை ஒளி பரப்பினால் நான் தெரிவேன். உங்களை ஒளி பரப்பினால் நீங்கள் தெரிவீர்கள். எதையும் ஒளி பரப்பாவிட்டால் எதுவுமே தெரியாது. டி.வி.யில் எதுவுமே பதியவுமில்லை. நிலைக்கவுமில்லை. உருவப் படம் என்று காரணம் காட்டி இதைத் தடுக்க முடியாது.
மேலும் உருவப் படம் என்பதில் இயக்கமோ, அசைவோ, ஓசையோ இருக்காது. டி.வி., வீடியோக்களில் இவையெல்லாம் இருக்கின்றன. உருவப் படங்களிலிருந்து இந்த வகையிலும் தொலைக் காட்சி என்பது வித்தியாசப்படுகின்றது. சுருங்கச் சொல்வதென்றால் நேரடியாகக் காண்பது போன்ற தன்மையே டி.வி., வீடியோக்களில் காணப்படுகிறது.
அன்னியப் பெண் ஒருத்தி போய்க் கொண்டிருக்கிறாள். முகம் பார்க்கும் கண்ணாடி வழியாக அவளது பிம்பத்தை ரசிப்பது கூடுமா? கூடாது என்போம். உருவம் என்பதற்காக அல்ல. அன்னியப் பெண்ணை ரசிக்கக் கூடாது என்பதற்காக. நேரில் எதையெல்லாம் பார்க்கக் கூடாதோ அதையெல்லாம் கண்ணாடி வழியாகவும் பார்க்கக் கூடாது.
ஒரு விளையாட்டு நடக்கிறது. அதை நேரிலும் பார்க்கலாம். கண்ணாடி வழியாகவும் பார்க்கலாம். டி.வி.,யின் நிலையும் இது தான். கல்வி, விவசாயம், மருத்துவம், தொழிற்பயிற்சி, சமையல் கலை, நாட்டு நடப்பு, அனுமதிக்கப்பட்ட விளையாட்டுக்கள், செய்முறைப் பயிற்சி, மார்க்க விளக்க நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளை நேரிலும் பார்க்கலாம். டி.வி.யிலும் பார்க்கலாம். திரைப் படமாகவும் பார்க்கலாம்.
ஆபாசம், பச்சை வசனங்கள், ஆண் பெண் கட்டிப் புரளுதல், படுக்கையறைக் காட்சிகள் போன்றவைகளை நேரிலும் பார்க்கக் கூடாது. டி.வியிலும் பார்க்கக் கூடாது. இசையை நேரிலும் கேட்கக் கூடாது. டி.வி., வழியாகவும் கேட்கக் கூடாது. இது தான் அதன் அடிப்படை.
வீடியோவுக்கு அனுமதி உண்டு என்று கருதிக் கொண்டு திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று கருதக் கூடாது. மற்றவர்களுக்கோ, தனக்கோ ஒரு பயனும் இல்லாத இது போன்ற நிகழ்ச்சிகளுக்காகப் பெரும் பணம் செலவு செய்வதால், வீண் விரயம் என்ற அடிப்படையில் தடுக்கப்பட்டதாகும்.
கல்வி மற்றும் பிறருக்குப் பயன் தருகின்ற நிகழ்ச்சிகளை வீடியோ கேஸட்டுகளாக எடுத்து வைப்பதால் அதைப் பிறர் பார்த்து கற்றுக் கொள்ள உதவுகிறது என்பதால் அதற்குத் தடை இல்லை. கடைசியாக ஒரு போதனை.
பயனுள்ள பல காரியங்களுக்காக பயன்படத்தக்க இத்தகைய நவீன கருவிகள், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தவல்ல இத்தகைய சாதனங்கள் தகுதியற்றவர்களின் கையில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் மனிதனை வழிகெடுக்கும் நிகழ்ச்சிகளும், உருப்படாத சங்கதிகளுமே அதிகமதிகம் காட்டப்படுகின்றன. ஒரு சில பயனுள்ள நிகழ்ச்சிகளைக் காட்டினாலும் அதை மட்டும் மக்கள் பார்ப்பதில்லை. உருப்படாத நிகழ்ச்சிகளுக்காகக் காத்திருந்து அதைப் பார்க்கிறார்கள்.
இத்தகைய ஆளும் வர்க்கமும், இப்படிப்பட்ட மக்களும் உள்ள நாடுகளில் இது போன்ற சாதனங்களை வீடுகளில் வாங்கி வைப்பவர்கள் ரொம்பவும் யோசிக்க வேண்டும்.
மார்க்கம் அனுமதிக்கின்ற வழிகளில் மட்டும் அதைத் தன்னால் பயன்படுத்த முடியுமா? மனதைக் கெடுக்கும் சமாச்சாரங்கள் காட்டப்படும் போது சபலப்படாமல் தன்னை வெல்ல முடியுமா? என்று பலமுறை யோசிக்க வேண்டும்.
நாம் வேலையின் நிமித்தம் வெளியிலோ, வெளி ஊருக்கோ, வெளி நாட்டுக்கோ சென்ற பின் நம் குடும்பத்தினர் அதை மார்க்கம் அனுமதிக்கின்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பயன்படுத்துவார்களா? இதையும் யோசிக்க வேண்டும்.
நம்முடைய பிள்ளைகள் இதில் மூழ்கி உள்ளம் கெட்டுப் போவதுடன், கல்வி கற்பதில் அக்கறையின்மை கொள்ளாமலிருப்பார்களா? இதையும் யோசிக்க வேண்டும். இவ்வளவு உறுதியும், கட்டுப்பாடும் உள்ளவர்கள் டி.வி.யைத் தங்கள் வீடுகளில் வைத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை.

ஒரு காலத்தில் வானொலிப் பெட்டி அறிமுகமான போது உலக நடப்புக்களையும், செய்திகளையும் அறிய உதவுவதால் வானொலிப் பெட்டியை அனுமதித்தார்கள். ஆனால் நடந்தது என்ன? செய்தி வாசிக்கும் போது மட்டும் வானொலிப் பெட்டியை நிறுத்தி விடுகிறார்கள். தகுதியில்லாதவர்களிடம் இது போன்ற சாதனங்கள் இருப்பது வம்பை விலை கொடுத்து வாங்கியதாகவே அமையும்.

Sunday, November 9, 2014

மனம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சணை யாகுமா?

மனம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சணை யாகுமா?
பதில்
தந்தை தன் மகளுக்கு அன்பளிப்புச் செய்வது தவறல்ல. பின்வரும் செய்திகள் இதை உறுதிப்படுத்துகின்றன.
25158حَدَّثَنَا يَعْقُوبُ قَالَ حَدَّثَنَا أَبِي عَنِ ابْنِ إِسْحَاقَ قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ عَبَّادٍ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ لَمَّا بَعَثَ أَهْلُ مَكَّةَ فِي فِدَاءِ أَسْرَاهُمْ بَعَثَتْ زَيْنَبُ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي فِدَاءِ أَبِي الْعَاصِ بْنِ الرَّبِيعِ بِمَالٍ وَبَعَثَتْ فِيهِ بِقِلَادَةٍ لَهَا كَانَتْ لِخَدِيجَةَ أَدْخَلَتْهَا بِهَا عَلَى أَبِي الْعَاصِ حِينَ بَنَى عَلَيْهَا قَالَتْ فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَقَّ لَهَا رِقَّةً شَدِيدَةً وَقَالَ إِنْ رَأَيْتُمْ أَنْ تُطْلِقُوا لَهَا أَسِيرَهَا وَتَرُدُّوا عَلَيْهَا الَّذِي لَهَا فَافْعَلُوا فَقَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ فَأَطْلَقُوهُ وَرَدُّوا عَلَيْهَا الَّذِي لَهَا رواه أحمد
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
மக்காவாசிகள் கைதி(களாக இருந்த தங்களது உறவினர்)களுக் காக பிணைத் தொகையை அனுப்பிய போது ஸைனப் (ரலி) அவர்கள் (தனது கனவர்) அபுல் ஆஸ் அவர்களுக்காக செல்வத்தை பிணைத் தொகையாக அனுப்பி வைத்தார்கள்.
அச்செல்வத்துடன் அவர்களுடைய கழுத்து மாலை ஒன்றையும் சேர்த்து அனுப்பியிருந்தார்கள். அம்மாலை (இதற்கு முன்பு) கதீஜா (ரலி) அவர்களிடம் இருந்தது. கதீஜா (ரலி) அவர்கள் அந்த மாலையுடன் ஸைனப் (ரலி) அவர்களை அபுல் ஆஸிடம் அனுப்பி வைத்தார்கள்.
அந்த மாலையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தவுடன் கதீஜா (ரலி) அவர்களை நினைத்து கடுமையாக மனம் இளகினார்கள். மேலும் (நபித்தோழர்களிடம்) ஸைனபுக்குரிய கைதியை அவருக்காக நீங்கள் விடுதலை செய்து அவருக்குரிய (செல்வத்)தை அவரிடமே திருப்பி அனுப்பலாம் என நீங்கள் கருதினால் (அவ்வாறு செய்யுங்கள்) என்று கூறினார்கள்.
நபித்தோழர்கள் ஆம் (அவ்வாறே செய்கிறோம்) என்றனர். ஸைனப் (ரலி) அவர்களைத் தன்னிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபுல் ஆஸிடம் உடன்படிக்கை எடுத்திருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஹாரிஸாவையும் ஒரு அன்சாரித் தோழரையும் அனுப்பி நீங்கள் இருவரும் யஃஜஜ் என்ற பள்ளத்தாக்கில் இருங்கள். உங்களை ஸைனப் கடந்து சென்றால் அவரை உங்களுடன் சேர்த்துக் கொண்டு வந்துவிடுங்கள் என்று கூறினார்கள்.
நூல் அஹ்மத் 25158
மகள் தன் தந்தையிடம் விரும்பியதைக் கேட்டுப் பெறுவதும் தறவல்ல.
2753حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ قَالَ يَا مَعْشَرَ قُرَيْشٍ أَوْ كَلِمَةً نَحْوَهَا اشْتَرُوا أَنْفُسَكُمْ لَا أُغْنِي عَنْكُمْ مِنْ اللَّهِ شَيْئًا يَا بَنِي عَبْدِ مَنَافٍ لَا أُغْنِي عَنْكُمْ مِنْ اللَّهِ شَيْئًا يَا عَبَّاسُ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ لَا أُغْنِي عَنْكَ مِنْ اللَّهِ شَيْئًا وَيَا صَفِيَّةُ عَمَّةَ رَسُولِ اللَّهِ لَا أُغْنِي عَنْكِ مِنْ اللَّهِ شَيْئًا وَيَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ سَلِينِي مَا شِئْتِ مِنْ مَالِي لَا أُغْنِي عَنْكِ مِنْ اللَّهِ شَيْئًا تَابَعَهُ أَصْبَغُ عَنْ ابْنِ وَهْبٍ عَنْ يُونُسَ عَنْ ابْنِ شِهَابٍ رواه البخاري
"உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்'' என்னும் (26:214) இறை வசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, "குறைஷிக் குலத்தாரே!' என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), "ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள்.
அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது.
அல்லாஹ்வின் தூதருடைய அத்தை (மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்). (ஆனால்,) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னை காப்பாற்ற முடியாது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ரலி-)
நூல் : புகாரி (2753)
திருமணம் முடிவாகும் போது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து குறிப்பிட்ட தொகையைக் கேட்டுப் பெறுகின்றனர். திருமணத்தை முன்னிட்டு மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து தொகையாகவோ நகையாகவோ பொருளாகவோ எதைப் பெற்றாலும் அது வரதட்சனையாகும்.
மாப்பிள்ளை வீட்டார் மணமகளுக்கு இவ்வளவு நகை போட வேண்டும் என பெண் வீட்டாரைக் கட்டாயப்படுத்துகின்றனர். இந்த அடிப்படையில் தந்தை தன் மகளுக்கு நகைகளை வாங்கிக் கொடுத்தால் இது அன்பளிப்பாகாது. மாறாக அன்பளிப்பு என்ற பெயரில் வாங்கப்படும் வரதட்சனையாகும்.
அன்பளிப்பு என்பது தந்தை தானாக விரும்பிக் கொடுப்பதாகும். அவர் விரும்பினால் கொடுப்பதற்கும் கொடுக்காமல் இருப்பதற்கும் உரிமை உள்ளது. எவ்வளவு அன்பளிப்புச் செய்ய வேண்டும் என்பதையும் தந்தையே தீர்மானிப்பார்.
உங்கள் மகளுக்கு நீங்கள் நகை போட வேண்டும். அந்த நகை இவ்வளவு இருக்க வேண்டும் என்று கேட்பதற்கு மாப்பிள்ளை வீட்டாருக்கு எந்த உரிமையும் இல்லை.
ஆனால் இவர்கள் இவ்வாறு கேட்கிறார்கள் என்றால் இவள் நம்முடைய வீட்டுக்கு வர இருக்கின்றாள். இவள் அதிகமான நகையுடன் வந்தால் பிறகு அந்த நகைகளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நப்பாசையே இதற்குக் காரணம். எனவே இது தந்தை மகளுக்கு கொடுப்பது என்ற போர்வையில் வாங்கப்படுகின்ற வரதட்சனையாகும்.
மேலும் சீர் என்ற பெயரில் பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு பொருட்களை வாங்கித் தருகின்றனர். இதுவும் வரதட்சனையாகும்.
நீங்கள் உங்கள் மகளைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு முன்பே அவருக்காக நகைகள் வாங்கிக் கொடுத்திருந்தால் அது உங்கள் மகளின் உடமையாக இருக்கும் வரை வரதட்சனையாக ஆகாது. உங்கள் மகளுக்கு நீங்கள் கொடுத்ததை திருமணத்தைக் காரணம் காட்டி மாப்பிள்ளை வீட்டார் உரிமை கொண்டாடினால் அது வரதட்சனையாகாது.
திருமணம் முடிந்து மருமகன் உங்கள் குடும்பத்தில் ஒருவராக ஆன பின் உறவினர் என்ற முறையில் அவருடைய முன்னேற்ற த்துக்கு உதவினால் அதுவும் வரதட்சனையாகாது. திருமணம் செய்வதற்கு நேரடியான அல்லது மறைமுகமான நிர்பந்தனை யாக பணமோ பொருளோ கேட்கப்பட்டால் அல்லது நாம் கொடுக்காவிட்டால் நம் மகளை நல்ல படி நடத்த மாட்டார்கள் என்ற அச்சத்தின் காரணமாக கொடுத்தால் அது வரதட்சணை யாக ஆகும்.
இது மிகவும் நுணுக்கமான விஷயம். கவனமாக இதைப் புரிந்து கொள்ளாவிட்டால் நிஜமான அன்பளிப்பும் பாவமாகத்தென்பட்டு விடும். அல்லது வரதட்சணையும் அன்பளிப்பாக கருதப்பட்டு விடும்.இதையும் வாசிக்கவும்
3gp/virumbi_tharuvathu_varathatsanaiyaa/

பெண்கள் பேண்ட் அணியலாமா ?

பெண்கள் பேண்ட் அணியலாமா ?
ஆண்கள் பெண்களைப் போலவும் பெண்கள் ஆண்களைப் போலவும் நடக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
5885 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புஹாரி 5885
இது ஆடையை மட்டும் குறிப்பதல்ல. எல்லா வகையிலும் ஒரு பாலரைப் போல் இன்னொரு பாலர் இருக்கக் கூடாது என்று பொதுவாகக் கூறும் ஹதீஸ் ஆகும். இதில் ஆடையும் அடங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் இதைச் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆண்கள் அணியும் எந்த ஆடையையும் பெண்கள் அணியக் கூடாது என்று பொருள் கொள்வதா?
அல்லது மார்க்கத்தின் அடிப்படையில் ஆண்களுக்கு ஏற்ற ஆடையை பெண்களும் பெண்களுக்கு ஏற்ற ஆடையை ஆண்களும் அணியக் கூடாது என்று பொருள் கொள்வதா?
அணியும் ஆடை என்று பொருள் கொள்வதை விட அணியத்தக்க ஆடை என்று பொருள் கொள்வது தான் பொருத்தமானது.
இறுக்கமான பேண்ட்களாக இருந்தால் அது பெண்களுக்கு ஏற்றது அல்ல. தொய்வானதாக இருந்தால் அது பெண்களுக்கு ஏற்ற உடை தான்.
அதே நேரத்தில் சேலை ஜாக்கெட் போன்றவை பெண்களின் ஆடை என்று அறியப்பட்டாலும் அது பெண்களின் உடலை மறைக்காததால் (உள்ளாடையாக அல்லது வீட்டில் மஹ்ரம் மத்தியில் இருந்தால் தவிர) அது பெண்களின் ஆடை அல்ல.
ஆண்கள் அணிவதெல்லாம் ஆண்களின் ஆடை அல்ல. பெண்கள் அணிவதெல்லாம் பெண்கள் ஆடை அல்ல என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து நடைமுறையும் நமக்கு விளக்குகிறது.
பெரும்பாலும் ஆண்களும் பெண்களும் ஒரு போர்வையைத் தான் ஆடையாக அணிந்திருந்தனர்.
இன்னும் பல ஆடைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியாக நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இருந்துள்ளது.
கமீஸத் என்ற ஆடையை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தாமும் அணிந்தனர் (புஹாரி 373, 436, 572, 3454, 4444, 5816, 5817) உம்மு காலித் என்ற சிறுமிக்கும் அணிவித்துள்ளனர். புஹாரி 3874, 5823,
இஸார் எனப்படும் வேட்டி எப்படி ஆண்கள் அணிந்தார்களோ அது போல் பெண்களும் அணிந்துள்ளனர்.
ஆண்கள் வேட்டி அணிவது போல் பெண்களும் வேட்டி அணிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர் என்பதைப் பின்வரும் புஹாரி ஹதீஸில் இருந்து அறியலாம்
5121 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் தன்னை மணந்துகொள்ளுமாறு கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (இவருக்கு மஹ்ர் கொடுக்க) உம்மிடம் என்ன உள்ளது? என்று கேட்டார்கள். அவர், என்னிடம் ஒன்றுமில்லை என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், நீர் சென்று, இரும்பினாலான ஒரு மோதிரத்தையாவது தேடு! என்று சொன்னார்கள். அவர் போய் (தேடிப்பார்த்து)விட்டுத் திரும்பி வந்து, அல்லாஹ்வின்• மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை; இரும்பாலான மோதிரம் கூட கிடைக்கவில்லை. ஆனால், இதோ எனது இந்த வேட்டி உண்டு. இதில் பாதி அவளுக்கு (மஹ்ர்) என்றார். - அவரிடம் ஒரு மேல்துண்டுகூட இல்லை. (அதனால் தான், வேட்டியில் பாதியைத் தருவதாகச் சொன்னார்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், உமது வேட்டியை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்? அதை நீர் உடுத்திக் கொண்டால் அவள் மீது (அதில்) ஏதும் இருக்காது; அதை அவள் உடுத்திக் கொண்டால் அதில் உம் மீது ஏதும் இருக்காது. (உமது வேட்டியை கொடுத்துவிட்டு என்ன செய்யப்போகிறாய்?) என்று சொன்னார்கள். பிறகு அவர் நெடு நேரம் (அங்கேயே) அமர்ந்திருந்துவிட்டு எழுந்தார். அவர் செல்வதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், அவரை அழைத்தார்கள்'. அல்லது அவர் அழைக்கப்பட்டார்'. (அவர் வந்தவுடன்) அவரிடம், உம்முடன் குர்ஆனில் என்ன உள்ளது? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் நபியவர்களிடம், (குர்ஆனில்) இன்ன அத்தியாயம் ,இன்ன அத்தியாயம் என்னுடன் (மனப்பாடமாக) உள்ளது என்று சில அத்தியாயங்களை எண்ணி எண்ணிச் சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக அவளை உமக்கு மணமுடித்து கொடுத்துவிட்டேன் என்று சொன்னார்கள்.61
தமது மகள் மரணித்த போது குளிப்பாட்டிய உடன் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தமது வேட்டியைக் கொடுத்து அணிவிக்கச் சொன்னார்கள் என்பதை புஹாரி 1253, 1257, பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.
நபி (ஸல்) அவர்கள் தமது புதல்வி இறந்துவிட்ட போது எங்களிடம் வந்து, அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் நீராட்டுங்கள்; இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக்கொள்ளுங்கள்; நீராட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினார்கள். நாங்கள் நீராட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தமது கீழாடையைத் தந்து, இதை அவரது உடலில் சுற்றுங்கள் எனக் கூறினார்கள்.
மிர்த் எனும் ஆடையை பெண்கள் அணிந்ததாக புகாரியில் பல ஹதீஸ்கள் உள்ளன. இந்த மிர்த் எனும் ஆடையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அணிந்ததாக முஸ்லிமில் ஹதீஸ் உள்ளது.
و حدثني سريج بن يونس حدثنا يحيى بن زكرياء بن أبي زائدة عن أبيه ح و حدثني إبراهيم بن موسى حدثنا ابن أبي زائدة ح و حدثنا أحمد بن حنبل حدثنا يحيى بن زكرياء أخبرني أبي عن مصعب بن شيبة عن صفية بنت شيبة عن عائشة قالت خرج النبي صلى الله عليه وسلم ذات غداة وعليه مرط مرحل من شعر أسود
எனவே மார்க்க அடிப்படையில் ஆண்களுக்கு தகுதியான ஆடையைப் பெண்கள் அணியக் கூடாது. பெண்களுக்கே தகுதியான ஆடைகளை ஆண்கள் அணியக் கூடாது என்று தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்
மேலும்
பேண்டை உள்ளாடையாகத் தான் பயன்படுத்துகிறார்கள் என்றால் அதில் தவறு இல்லை.