பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)
Showing posts with label Marriage. Show all posts
Showing posts with label Marriage. Show all posts

Thursday, October 29, 2020

திருமண (வலிமா)விருந்தின் அளவு என்ன?

திருமண  (வலிமா)
விருந்தின் அளவு என்ன?

திருமண விருந்திற்குரிய அளவு என்ன? இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்று நபியவர்கள் நிர்ணயித்துள்ளார்களா? நமக்கு வசதி இருந்தால் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் நாம் திருமண விருந்து அளிக்கலாமா?

நபியவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது யாரையும் விட்டு வைக்காத அளவிற்கு நூற்றுக்கணக்கானவர்களுக்குத் திருமண விருந்து அளித்ததாக ஹதீஸ்களில் வந்துள்ளதே! இதற்கான விளக்கம் என்ன?

திருமண விருந்து தொடர்பாக இப்படிப் பல்வேறு கேள்விகளை சகோதரர்கள் எழுப்பி வருவதைப் பார்க்கிறோம். அதற்கான விளக்கங்களை அளிப்பதற்காக இந்தக் கட்டுரை!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமண விருந்தின் உச்சக்கட்டம் என்பதற்கு எவ்வித அளவு கோலையும் நிர்ணயம் செய்யவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) எதற்கு உச்ச வரம்பை நிர்ணயிக்கவில்லையோ அதற்கு நாம் எந்த எல்லையையும் நிர்ணயிக்க முடியாது.

அதே நேரத்தில் திருமண விருந்தை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கு நபியவர்கள் தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள்.

திருமணத்திற்குப் பின் மணமகன் வழங்கும் விருந்து வலீமா எனப்படுகின்றது. இந்த விருந்து நபிவழியாகும்.

பெண் வீட்டார் விருந்தளிப்பதும் அவர்களிடம் விருந்து கேட்டுப் பெறுவதும் மறைமுகமான வரதட்சணையாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண் வீட்டார் விருந்து கொடுக்கும் பழக்கம் இருந்ததில்லை.

மணமகன் கட்டாயம் விருந்தளிக்க வேண்டுமென்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ இல்லை. தன் வசதிக்கேற்ப சாதாரண உணவை மிகச் சிலருக்கு வழங்கினாலும் இந்த சுன்னத் நிறைவேறிவிடும்.

நபியவர்கள் வழங்கிய அனைத்து திருமண விருந்துகளையும் மிக மிக எளிமையாகத் தான் வழங்கி நமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழங்கினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 371, 2893

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்த போது இரண்டு முத்து (சுமார் 1 லிட்டர்) கோதுமையையே வலீமா விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: சபிய்யா (ரலி)

நூல்: புகாரி 5172

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டைத் திருமண விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 5168, 5171, 7421

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த வலீமா விருந்துகளில் இதுதான் பெரிய விருந்தாகும்.

ஒருவன் செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் திருமணம் என்ற காரியத்தில் விருந்தளிக்கும் போது நபியவர்களை முன்மாதிரியாகக் கொண்டு குறைந்த செலவில் விருந்தளிப்பது தான் மிகச் சிறந்ததாகும்.

நபியவர்கள் எதனை முன்மாதிரியாக வழிகாட்டிச் சென்றுள்ளார்களோ அதில்தான் இச்சமுதாயத்திற்கு நன்மை இருக்கிறது. எனவே அதைத் தான் நாம் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும், வலியுறுத்த வேண்டும் என்பதே நம்முடைய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.

அதிகம் செல்வ வசதியுடையவர் திருமணம் அல்லாத காரியங்களில், மார்க்கத்தின் வரம்புகளை மீறாமல், வீண்விரையம் இல்லாமல் அதிகமானவர்களுக்கு விருந்தளித்தால் அதனை நாம் தவறு என்று கூறமாட்டோம்.

ஆனால் திருமண விருந்தில் நபியவர்கள் எளிமையைக் கடைப்பிடித்துள்ளதால் அதையே செல்வந்தரும், ஏழைகளும் கடைப்பிடித்து நபிவழியை நிலைநாட்ட வேண்டும் என்றே நாம் கூறுகிறோம்.

எவ்வளவு வசதியிருந்தாலும் செல்வந்தர்கள் எந்த விருந்தும் கொடுப்பதே கூடாது என்பது நமது நிலைப்பாடல்ல. மாறாக செல்வந்தராக இருந்தாலும் திருமண விருந்தில் எளிமையைக் கடைப்பிடித்து நபிவழியில் மிகச் சிறந்த முறையை சமுதாயத்தில் நிலைநாட்ட வேண்டும் என்பதே நம்முடைய ஆவல்.

ஸைனப் (ரலி) அவர்களின் திருமண விருந்து

நபியவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது மிகப் பெரிய அளவில் திருமண விருந்து அளிக்கப்பட்டதாகச் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஸைனப் (ரலி) அவர்களின் திருமணத்தின் போது நடந்த சம்பவங்களை நாம் தெளிவாக அறிந்து கொண்டால் அவர்களின் கருத்திற்கு அதில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஸைனப் (ரலி) அவர்களின் திருமணத்தின் போது இரண்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன.

நபியவர்கள் வலீமா விருந்தாக ஒரு ஆட்டை அறுத்து, அத்துடன் ரொட்டியையும் அளித்தார்கள்.உம்மு சுலைம் அவர்கள் நபியவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய “ஹைஸ்” என்ற பலகாரத்தின் மூலம் நபியவர்கள் செய்த அற்புதம்.

உம்மு சுலைம் நபியவர்களுக்காக மட்டும் சிறிதளவு அன்பளிப்பாக வழங்கிய “ஹைஸ்” என்ற பலகாரத்தில் இறைவனுடைய ஆற்றலினால் நபியவர்கள் நிகழ்த்திய அற்புதத்தில் தான் நூற்றுக்கணக்கான நபித்தோழர்கள் உணவருந்திருனார்கள். இது வலீமா விருந்து அல்ல. நபியவர்கள் கொடுத்த வலீமா விருந்து மிகவும் எளிமையாகத் தான் நடைபெற்றது.

நபியவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது மிக எளிமையாகத் தான் வலீமா விருந்த வைத்தார்கள் என்பதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 5168, 5171, 7421

அதே நேரத்தில் நபியவர்கள், ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த நாளன்று மற்றொரு அற்புதம் நடக்கிறது. அதில் தான் முன்னூறுக்கும் அதிகமான ஸஹாபாக்கள் விருந்து சாப்பிட்டார்கள். அதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை) மணமுடித்து, தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள்.

அப்போது என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் “ஹைஸ்’ எனும் பலகாரத்தைச் செய்து, அதை ஒரு (கல்) பாத்திரத்தில் வைத்து, “அனஸே! இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, இதை என் தாயார் உங்களுக்காகக் கொடுத்தனுப்பியுள்ளார். அவர் உங்களுக்கு சலாம் சொல்லச் சொன்னார்; அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்கு எங்களால் (முடிந்த) சிறிதளவு (அன்பளிப்பு) ஆகும் என்றும் கூறினார் எனச் சொல்” என்றார்கள்.

அவ்வாறே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டுசென்று, “என் தாயார் உங்களுக்கு சலாம் கூறுகிறார். அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்கு எங்களால் முடிந்த சிறிதளவு (அன்பளிப்பு) ஆகும் என்று கூறினார்” என்றேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதை (ஓரிடத்தில்) வை” என்று கூறிவிட்டு, “நீ சென்று எனக்காக இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் மற்றும் நீ சந்திப்பவர்களையும் அழைப்பாயாக!” என்று கூறி, சிலரது பெயரைக் குறிப்பிட்டார்கள். அவ்வாறே அவர்கள் பெயர் குறிப்பிட்டவர்களையும், நான் சந்தித்தவர்களையும் அழைத்தேன்.

-இதை அறிவிப்பவரான அபூஉஸ்மான் அல்ஜஅத் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “அவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு, “ஏறக்குறைய முன்னூறு பேர் இருந்தார்கள்” என அனஸ் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.-

(தொடர்ந்து அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:) என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அனஸ்! அந்தப் பாத்திரத்தை எடு” என்றார்கள். அப்போது மக்கள் வந்து நுழைந்தனர். (வீட்டின்) திண்ணையும் அறையும் நிரம்பியது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பத்துப் பத்துப் பேராக வட்டமாக அமர்ந்து, ஒவ்வொருவரும் தமது கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து (எடுத்து) உண்ணட்டும்” என்றார்கள். அவ்வாறே அவர்கள் (பத்துப் பேர் வந்து) வயிறு நிரம்ப உண்டனர்.

ஒரு குழுவினர் சாப்பிட்டுவிட்டுச் சென்றதும் மற்றொரு குழுவினர் வந்தனர். இவ்வாறு அவர்கள் அனைவரும் உண்டனர்.

அப்போது, “அனஸ்! அந்தப் பாத்திரத்தைத் தூக்கு” என்றார்கள். நான் அந்தப் பாத்திரத்தைத் தூக்கியபோது, நான் அதைக் கீழே வைத்த நேரத்தில் அதிகமாக இருந்ததா, அல்லது தூக்கிய நேரத்தில் அதிகமாக இருந்ததா என எனக்குத் தெரியவில்லை.

நூல் முஸ்லிம் (2803)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்துகொண்டபோது. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஒரு கல் பாத்திரத்தில் “ஹைஸ்’ எனும் பலகாரத்தை வைத்து அதை (என்னிடம் கொடுத்து) நபி (ஸல்) அவர்களிடம் அன்பளிப்பாக அனுப்பிவைத்தார்கள்.

(அவ்வாறே நான் கொண்டுசென்று கொடுத்தேன்.)

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ சென்று, நீ சந்திக்கின்ற முஸ்லிம்களை எனக்காக அழை(த்து வா)” என்றார்கள். அவ்வாறே நான் சந்தித்தவர்களை அழைத்(து வந்)தேன்.

அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர். நபி (ஸல்) அவர்கள் தமது கையை அந்தப் பலகாரத்தின் மீது வைத்துப் பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ் நாடிய சில பிரார்த்தனையை அவர்கள் கூறினார்கள்.

நான் சந்தித்த அனைவரையும் ஒருவர் விடாமல் அழைத்தேன். அவர்கள் அனைவரும் (வந்து) வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டுச் சென்றனர்.

நூல்: முஸ்லிம் (2804)

நூற்றுக்கணக்கான ஸஹாபாக்கள் சாப்பிட்டது வலீமா விருந்தில் அல்ல. மாறாக நபியவர்கள் “ஹைஸ்” என்ற பலகாரத்தின் மூலம் நிகழ்த்திய அற்புதத்தில் தான்.

“ஹைஸ்” என்பது கெட்டியான பால், பேரீத்தம் பழம் மற்றும் நெய் மூலம் தயாரிக்கப்படும் உணவாகும்.

பல அறிவிப்புகளில் வலீமா விருந்து சம்பவமும், ஹைஸ் என்ற அற்புத உணவு விருந்து சம்பவமும் கலந்து வந்துள்ளதால் அதிகமானவர்கள் கலந்து கொண்டது வலீமா விருந்து தான் என்ற குழப்பம் ஏற்பட்டதற்கு காரணமாகும்.

நாம் இரண்டு நிகழ்வுகளையும் பிரித்து விளங்கிக் கொண்டால் எவ்வித குழப்பமும் இல்லை.

நபியவர்கள் அற்புதம் அல்லாத முறைகளில் இருந்து நமக்கு மார்க்கமாக வழிகாட்டியவை தான் நமக்கு முன்மாதிரியாகும்.

அது போன்று நபியவர்களுக்கு மட்டும் இறைவன் பிரத்யேகமாக வழங்கிய சட்டங்களையும் நாம் முன்மாதிரியாகக் கொள்ள முடியாது.

நபியவர்கள் அற்புதங்களாகச் செய்தவை மக்கள் தம்முடைய இறைநம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்காகத் தானே தவிர அதிலிருந்து நடைமுறை வாழ்க்க்கைக்குச் சட்டம் எடுப்பது கூடாது.

ஒரு வாதத்திற்கு அப்படி எடுக்கலாம் என்றால் நபியவர்கள் எப்படி ஒரு சிறிய அளவு உணவிலிருந்து நூற்றுக்கணக்கானவர்களுக்கு உணவளித்தார்களோ அது போன்று நாமும் சிறிய அளவிலிருந்து உணவளிக்க வேண்டும்.

அவ்வாறு நாம் செய்வது சாத்தியமா?

நான் அற்புதத்தின் போது இருந்த மக்களின் எண்ணிக்கையை மட்டும் எடுத்துக் கொள்வேன். உணவின் அளவை கவனத்தில் கொள்ளமாட்டேன் என்பது மடமைத்தனம் ஆகும்.

அற்புதம் என்பது இறைவனின் உதவியால் செய்வதாகும். அதில் இறைத்தூதர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. (அல்குர்ஆன் 13:38)

எனவே 300 பேருக்கு நபியவர்கள் உணவளித்தது இறைக்கட்டளைப்படி நபியவர்கள் செய்ததாகும். அல்லாஹ் இலட்சம் பேருக்கு உணவளிக்க வேண்டும் என்று அந்த அற்புதத்தின் போது கட்டளையிட்டிருந்தால் நபியவர்கள் இலட்சம் பேருக்கு அளித்திருப்பார்கள்.

நபியவர்கள் செய்த அற்புதங்களில் நாம் பின்பற்றுவதற்குரிய முன்மாதிரியை எடுப்பது கூடாது. அற்புதம் என்பது அதைக் காணும் மக்கள் நம்பிக்கை கொள்வதற்காகத் தான்.

அற்புதங்களிலிருந்து பின்பற்றுவதற்குரிய சட்டங்களை எடுத்தால்…

ஒரு கோப்பை பாலில் 70 பேருக்குப் புகட்ட வேண்டும். இது நம்மால் சாத்தியமா?

விரலிலிருந்து தண்ணீரை ஓடச் செய்து நூற்றுக்கணக்கானவர்கள் உளூச் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது நம்மால் முடியுமா?

இப்படி நூற்றுக்கணக்கான கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

எனவே நபியவர்கள் ஒரு ஆடு அறுத்து விருந்து வைத்தது தான் வலீமா விருந்தாகும். அதில் தான் நமக்கு முன்மாதிரி உள்ளது.

எனவே நபியவர்கள் காட்டித் தந்த முறைப்படி நமது திருமணங்களையும், திருமண விருந்தையும் அமைத்துக் கொள்வோமாக! அல்லாஹ் அதற்கு அருள்புரிவானாக!

மனோ இச்சைகளை மார்க்கமாக்குவதிலிருந்தும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக

ஏகத்துவம்

Thursday, September 24, 2020

பிற மத பெண்ணை விரும்பலாமா?

பெண்களுக்கான நபி வழி சட்டங்கள்

பிற மத பெண்ணை விரும்பலாமா?

முஸ்லிமல்லாத ஆணோ, பெண்ணோ அவர் இஸ்லாத்தை எற்றுக் கொள்ள முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க தக்க காரணம் இல்லாமல் மறுக்கலாகாது.

கணவனை இழந்திருந்த அனஸ் ரலி அவர்களின் தாயார் உம்மு ஸுலைம் அவர்களை அபூதல்ஹா விரும்பினார். ஆனால் அவர் அப்போது முஸ்லிமாக இருக்கவில்லை. ஆனால் உம்மு ஸுலைம் அவர்கள் இஸ்லாத்தை நீர் ஏற்றுக் கொண்டால் அதையே மஹராகக் கருதி உம்மைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று உம்மு ஸுலைம் ரலி கூறினார்கள். அபூதல்ஹா (ரலி) அதை ஏற்று திரும்ணம் செய்து கொண்டார்கள். 

 அபூதல்ஹா அவர்கள் தன்னை மணந்து கொள்ளுமாறு உம்மு ஸுலைம் அவர்களைக் கேட்டார். அதற்கு உம்மு ஸுலம் ரலி அவர்கள் உம்மைப் போன்ற ஒருவரை மணந்து கொள்ள மறுக்க முடியாது. ஆனால் நீர் காஃபிராக இருக்கிறீர். நானோ முஸ்லிமான பெண்ணாக இருக்கிறேன். எனவே உம்மை மணந்து கொள்வது எனக்கு ஹலால் இல்லை. நீர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அதுவே எனது மஹராகும். வேறு ஒன்றும் உம்மிடம் நான் கேட்க மாட்டேன் என்று கூறினார். உடன் அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அதுவே அவரது மஹராக ஆனது

நஸயீ 4389

இது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் உம்மு ஸுலைம் அவர்கள் வீட்டில் ஒருவர் என்று சொல்லும் அளவுக்கு அதிகமாக் உம்மு ஸுலைம் மீது இரக்கம் காட்டினார்கள். அடிக்கடி அவர்கள் வீட்டுக்குச் சென்று வருவார்கள். அவர்கள் காலத்தில் இது நடந்துள்ளதால் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு இது தெரியாமல் நடந்திருக்க முடியாது.

எனவே இதற்கு நபிகள் நாயகம் ஸல் அவ்ர்களின் அங்கீகாரம் உள்ளது என அறியலாம்.

ஏகத்துவம்.

Sunday, August 9, 2020

எப்போது வலீமா விருந்து வைக்கலாம்?


எப்போது வலீமா விருந்து வைக்கலாம்?

திருமணம் நடந்த அன்றே வலீமா விருந்து வைக்கலாமா? ஓரிரு நாட்கள் கழித்து வைக்கலாமா? உடலுறவு கொண்ட பின்பு தான் வலீமா விருந்து அளிக்க வேண்டுமா?

பதில் :

திருமணத்துக்குப் பின்னர் அளிக்க வேண்டிய விருந்துதான் வலீமாவாகும். திருமணம் நடந்த அன்றே கொடுக்கலாம். ஓரிரு நாட்கள் கழித்தும் கொடுக்கலாம். உடலுறவு நடப்பதற்கு முன்னரும் கொடுக்கலாம். இதற்கான ஆதாரங்கள் வருமாறு:

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ أَبِي كَثِيرٍ قَالَ أَخْبَرَنِي حُمَيْدٌ أَنَّهُ سَمِعَ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ أَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ خَيْبَرَ وَالْمَدِينَةِ ثَلَاثَ لَيَالٍ يُبْنَى عَلَيْهِ بِصَفِيَّةَ فَدَعَوْتُ الْمُسْلِمِينَ إِلَى وَلِيمَتِهِ وَمَا كَانَ فِيهَا مِنْ خُبْزٍ وَلَا لَحْمٍ وَمَا كَانَ فِيهَا إِلَّا أَنْ أَمَرَ بِلَالًا بِالْأَنْطَاعِ فَبُسِطَتْ فَأَلْقَى عَلَيْهَا التَّمْرَ وَالْأَقِطَ وَالسَّمْنَ فَقَالَ الْمُسْلِمُونَ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ أَوْ مَا مَلَكَتْ يَمِينُهُ قَالُوا إِنْ حَجَبَهَا فَهِيَ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَإِنْ لَمْ يَحْجُبْهَا فَهِيَ مِمَّا مَلَكَتْ يَمِينُهُ فَلَمَّا ارْتَحَلَ وَطَّأَ لَهَا خَلْفَهُ وَمَدَّ الْحِجَابَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைபருக்கும், மதீனாவுக்கும் இடையில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மணமுடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் வீடு கூடினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வலீமா – மணவிருந்துக்கு முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட அவ்வாறே அது விரிக்கப்பட்டது. பிறகு பேரீச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (மக்களுக்கு விருந்தளித்தார்கள்.)

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்: புகாரி 4213

இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பிறகு விருந்தளித்துள்ளதால், திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் விருந்தளிப்பது தான் நபிவழி என்று சிலர் வாதிடுகின்றனர். இது தவறான புரிதலாகும்.

حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ لَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ آخَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنِي وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ فَقَالَ سَعْدُ بْنُ الرَّبِيعِ إِنِّي أَكْثَرُ الْأَنْصَارِ مَالًا فَأَقْسِمُ لَكَ نِصْفَ مَالِي وَانْظُرْ أَيَّ زَوْجَتَيَّ هَوِيتَ نَزَلْتُ لَكَ عَنْهَا فَإِذَا حَلَّتْ تَزَوَّجْتَهَا قَالَ فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ لَا حَاجَةَ لِي فِي ذَلِكَ هَلْ مِنْ سُوقٍ فِيهِ تِجَارَةٌ قَالَ سُوقُ قَيْنُقَاعٍ قَالَ فَغَدَا إِلَيْهِ عَبْدُ الرَّحْمَنِ فَأَتَى بِأَقِطٍ وَسَمْنٍ قَالَ ثُمَّ تَابَعَ الْغُدُوَّ فَمَا لَبِثَ أَنْ جَاءَ عَبْدُ الرَّحْمَنِ عَلَيْهِ أَثَرُ صُفْرَةٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجْتَ قَالَ نَعَمْ قَالَ وَمَنْ قَالَ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ قَالَ كَمْ سُقْتَ قَالَ زِنَةَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ أَوْ نَوَاةً مِنْ ذَهَبٍ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, அவர்களையும், ஸஅது பின் ரபீவு (ரலி) அவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅது (ரலி) வசதி படைத்தவர்களாக இருந்தார். அவர், அப்துர்ரஹ்மான் (ரலி)யிடம், எனது செல்வத்தைச் சரிபாதியாகப் பிரித்துத் தருகிறேன். என் மனைவியரில் ஒருத்தியை (விவாகரத்துச் செய்து) உமக்கு மணம் முடித்துத் தருகின்றேன் என்று கூறினார். அதற்கு அப்துர்ரஹ்மான் (ரலி), உமது குடும்பத்திலும், செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக! எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள் என்று கூறினார். அவர் பாலாடைக் கட்டியையும், நெய்யையும் இலாபமாகப் பெற்று தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் கறையுடன் வந்தார். அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என்ன விசேஷம்? என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன் என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்கள்? என்று கேட்டார்கள். ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம் என்று பதில் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பீராக என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்: புகாரி 2048, 2049

ஒரு பெண்ணை மணம் முடித்துக் கொண்டேன் என்று கூறிய நபித்தோழரிடம், நீ இல்லறத்தில் ஈடுபட்டு விட்டாயா? என்று கேட்டு விட்டு விருந்தளிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் தான் மணவிருந்து கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை ஏதும் இல்லை என்பதை இதிலிருந்து அறிய முடியும்.

திருமணமான பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வருவதால் தாம்பத்தியத்தில் நிச்சயம் ஈடுபட்டிருப்பார். அதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட்டாயா என்று கெட்கவில்லை என்று சிலர் கூறும் பதில் ஏற்கத்தக்கதல்ல.

மாதவிடாய் நேரத்தில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்பதை நாம் அறிவோம். ஒருவர் திருமணம் செய்த நேரத்தில் அவரது மனைவிக்கு மாதவிடாயாக இருந்தால் அப்போது இல்லறத்தில் அவர் ஈடுபட்டிருக்க மாட்டார். அல்லது இருவரிடமோ இருவரில் ஒருவரிடமோ இல்லறம் பற்றிய பய உணர்வு காரணமாகவும் சிலர் உடனடியாக இல்லறத்தில் ஈடுபட முடியாத நிலை இருக்கும். இப்படி இருந்தும் திருமணம் முடித்த செய்தியைக் கேள்விப்பட்ட உடன் தம்பத்தியம் நடந்ததா என விசாரிக்காமல் வலீமா விருந்தளிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிடுகிறார்கள்.

எனவே ஒருவர் மணம் முடித்துக் கொண்ட அன்றோ, அல்லது அடுத்தடுத்த நாட்களிலோ எப்போது வேண்டுமானாலும் விருந்தளிக்கலாம்.

ஆனால் அதே சமயம், திருமணம் நடப்பதற்கு முன்னரே சிலர் விருந்து வைக்கின்றனர். விருந்து முடிந்த பின்னர் திருமண ஒப்பந்தம் செய்கின்றனர். இவ்வாறு திருமணமே நடக்காத நிலையில் வைக்கப்படும் விருந்து, மணவிருந்தாக ஆகாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

15.08.2009. 10:12 AM


Sunday, June 15, 2014

பாத்திமா (ரலி) அவர்களுக்கு நபிகளார் சீதனம்

பாத்திமா (ரலி) அவர்களுக்கு நபிகளார் சீதனம் கொடுத்தார்களா

பாத்திமா (ரலி) அவர்களுக்கு நபிகளார் சீதனம் கொடுத்தார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளதாக கூறுகிறார்களே உண்மையா?
 
நபி (ஸல்) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களுக்காக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட போர்வை ஒன்றையும் தண்ணீர் தோல்பை ஒன்றையும் இத்கிர் புல்லால் அடைக்கப்பட்ட தலையணை ஒன்றையும் தயார் செய்தார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி), நூல் : நஸாயீ (3331),இப்னுமாஜா (4142), அஹ்மத் (677)
இந்த செய்தியை அடிப்படையாக வைத்துதான் சிலர் பெண்வீட்டார் சீதனமாக பொருட்களை வழங்கலாம் என்று கூறுகிறார்கள். 

பொதுவாக ஒருவர் தான் விரும்பிய நபருக்கு மனம் விரும்பி அன்பளிப்பு வழங்குவது மார்க்கத்தில் அனுமதிக்கப்ட்டதுதான். இதன் அடிப்படையில் தன் மகளுக்கு தந்தை அன்பளிப்பு வழங்கினால் அதை தடைசெய்யமுடியாது. அதே நேரத்தில் வெளிப்படையில் அன்பளிப்பைப்போன்றும் உண்மையில் நிர்பந்தமாகவும் இருந்தால் அந்த அன்பளிப்பை வழங்குவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

தற்போது உள்ள நடைமுறையில் திருமணம் நடந்தால் கண்டிப்பாக பெண்ணுக்காக குறிப்பிட்ட பொருளை கொடுக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் திருமணத்திற்கு பிறகு மாமியாரால் குத்திக்காட்டுவதும். ஏன் திருமணத்தையே தடைசெய்வதும்தான் நாட்டின் நடப்பு.

திருமணம் என்றால் பெண்வீட்டில் சீதனம் தரவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக நடைமுறையில் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. அன்பளிப்பு என்ற பெயரில் கொடுக்கப்பட்டவைதான் இன்று நிர்பந்தமாக வலுக்கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொண்டு கட்டாயமக்கப்பட்ட இந்த சீதன நடைமுறையை நீக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தன் மகளுக்கு கொடுத்தை வைத்துக் கொண்டு சீதனத்திற்கு ஆதாரமாக காட்டமுடியாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் பொறுப்பில்தான் அலீ (ரலி) அவர்களும் இருந்தார்கள்.
அபூதாலிப் அவர்கள் ஏழ்மை நிலையில் இருந்ததால் அவர்களின் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பை அவர்களின் உறவினர்கள் பகிர்ந்து எடுத்துக் கொண்டார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் ஜஅஃபர் (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களையும் எடுத்துக் கொண்டார்கள். (நூல் : அல்இஸ்தீஆப்,பாகம் 1,: பக்கம் : 13) 

நபிமொழிகளை நாம் கவனித்துப் பார்த்தால் அலீ (ரலி) அவர்கள் நபிகளாரோடே இருந்துள்ளார்கள் என்ற உண்மையை விளங்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் பாத்திமா (ரலி)அவர்களுக்கு எப்படி பொறுப்பாளராக இருந்தார்களோ அதைப் போன்றே அலீ (ரலி) அவர்களுக்கும் பொறுப்பாளராக இருந்துள்ளார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் பெண்வீட்டு சார்பாக கொடுத்தார்கள் என்று கூறமுடியாது. இருவருக்கும் சேர்த்தே அவர்கள் பொறுப்பாளார் ஆவார்கள். எனவே இதை பெண்வீட்டு சீதனத்திற்கு ஆதாரமாக காட்ட முடியாது. மேலும் நபிகளார் கொடுத்த மூன்று பொருள்களும் அவர்களின் தேவைக்காக கொடுத்தார்கள். இன்று வழங்கும் சீதனப்பொருட்களுடன் நபிகளாரின் பொருட்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நபிகளார் வழங்கியது ஒரு பொருளாகவே எடுத்துக் கொள்ள முடியாது

வீட்டு வேலைகளில் மனைவிக்கு கணவன் உதவலாமா?

வீட்டு வேலைகளில் மனைவிக்கு கணவன் உதவலாமா?


வீட்டு வேலைகள் அனைத்தும் பெண்கள் செய்ய வேண்டியவை என்று இஸ்லாம் கூறவில்லை. சமையல் செய்தல், சமையலுக்குத் துணை செய்தல், துணிதுவைத்தல், தண்ணீர் பிடித்துக் கொடுத்தல் போன்ற காரியங்களை ஆண்கள் செய்வது இழிவானது போலவும் ஆண் தன்மைக்கு எதிரானது எனவும் சிலர் கருதுகின்றனர். இது தவறாகும்.
மனைவிக்கும் சேர்த்து பொருளீட்டுவதற்காக ஆண்கள் வெளியே சென்று உழைப்பதால் அவனது உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக பெண்கள் வீட்டு வேலை செய்து பணிகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
இது போல் வெளியே சென்று பொருளீட்டும் நிலையில் இல்லாதவர்களும், பொருளீட்டுவதற்காக குறைந்த நேரம் செலவிட்டு வீட்டில் அதிக நேரம் வேலை இல்லாமல் இருப்பவர்களும் மனைவியின் வேலைகளில் துணை செய்வதுதான் நியாயமாகும்.
"நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?'' என்று நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டு விடுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் ; அஸ்வத் பின் யஸீத் (ரஹ்)
நூல்: புகாரி 5363
வீட்டில் தமது செருப்பைத் தாமே தைப்பார்கள். தமது ஆடையின் கிழி சலையும் தாமே தைப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்வார்கள்.

நூல் : அஹ்மத் 23756, 24176, 25039
முஸ்லிம்கள் இதையே முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.
கீழ்க்காணும் உரையையும் கேட்கவும்

Wednesday, March 16, 2011

ஒழுக்கம் கெட்டவருக்கு ஒழுக்கம் கெட்ட துணைதான் அமையுமா

ஒழுக்கம் கெட்டவருக்கு ஒழுக்கம் கெட்ட துணைதான் அமையுமா


ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்று ஹதீஸ் உள்ளதா?


ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை.

ஆனால் குர்ஆன் வசனங்கள் இக்கருத்தைக் கூறுவதாக சிலர் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றனர். குர்ஆன் வசனங்களுக்கு தவறான பொருள் கொண்டு இந்தத் தவறை செய்து வருகின்றனர்.

الزَّانِي لَا يَنكِحُ إلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ وَحُرِّمَ ذَلِكَ عَلَى الْمُؤْمِنِينَ(3)24

விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப்பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் (24 : 3)

ஒருவன் விபச்சாரம் செய்தால் அவனுடைய மனைவியும் விபச்சாரம் செய்வாள் என்று கூறுவோர் இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

ஆனால் சற்று சிந்தித்தால் இந்த வசனம் இவர்கள் கூறுகின்ற கருத்தைத் தரவில்லை என்பதை அறியலாம்.

ஒரு விபச்சாரனுக்கு ஒழுக்கமுள்ள பெண் மனைவியாகக் கூடாது. அதே போன்று ஒரு விபச்சாரிக்கு ஒழுக்கமுள்ள ஆண் கணவனாகக் கூடாது. மாறாக ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒழுக்கமுள்ளவரையே தன்னுடைய வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்ய வேண்டும்.

விபச்சாரனுக்கு அவனைப் போன்று விபச்சாரம் செய்யும் பெண்ணே மனைவியாகத் தகுதியானவள். ஒரு விபச்சாரிக்கு அவளைப் போன்று விபச்சாரம் செய்யும் ஆணே கணவனாகத் தகுதியானவன் என்ற கருத்தையே இவ்வசனம் கூறுகின்றது.

அதாவது திருமணம் செய்ய நினைப்பவர் எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டலே இவ்வசனத்தில் கூறப்படுகின்றது.

இவ்வசனத்தின் இறுதியில் இடம் பெற்றுள்ள இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது என்ற வாசகம் இக்கருத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றது.

பின்வரும் வசனமும் இதே கருத்தை எடுத்துரைக்கின்றது.

الْخَبِيثَاتُ لِلْخَبِيثِينَ وَالْخَبِيثُونَ لِلْخَبِيثَاتِ وَالطَّيِّبَاتُ لِلطَّيِّبِينَ وَالطَّيِّبُونَ لِلطَّيِّبَاتِ أُوْلَئِكَ مُبَرَّءُونَ مِمَّا يَقُولُونَ لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ(26)24

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (தகுதியானோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). அவர்கள் (நயவஞ்சகர்கள்) கூறுவதை விட்டும் இவர்கள் (நல்லோர்) நீங்கியவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.

அல்குர்ஆன் (24 : 26)

மேலும் இந்த வசனம் இறங்கியதற்கான காரணம் ஹதீஸில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நபித்தோழர் ஒருவர் விபச்சாரம் செய்து கொண்டிருந்த பெண்ணை மணமுடிக்க நாடிய போது அதைத் தடை செய்து இவ்வசனம் இறங்கியது.

1755حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ التَّيْمِيُّ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَخْنَسِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ مَرْثَدَ بْنَ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيَّ كَانَ يَحْمِلُ الْأَسَارَى بِمَكَّةَ وَكَانَ بِمَكَّةَ بَغِيٌّ يُقَالُ لَهَا عَنَاقُ وَكَانَتْ صَدِيقَتَهُ قَالَ جِئْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنْكِحُ عَنَاقَ قَالَ فَسَكَتَ عَنِّي فَنَزَلَتْ وَالزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ فَدَعَانِي فَقَرَأَهَا عَلَيَّ وَقَالَ لَا تَنْكِحْهَا رواه أبو داود

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

மர்ஸத் பின் அபீ மர்ஸத் அல்ஃகனவீ என்பவர் மக்காவிலிருந்து (மதீனாவிற்கு) கைதிகளை அழைத்து வந்தார். மக்காவில் அனாக் என்று கூறப்படும் ஒரு விபச்சாரி இவருக்குத் தோழியாக இருந்தாள். அவர் கூறுகிறார் :

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே அனாக்கை நான் திருமணம் செய்யப் போகிறேன் என்று கூறினேன். அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள் எனும் (24:3 வது) வசனம் இறங்கியது. உடனே அவர்கள் என்னை அழைத்து இதை என்னிடம் ஓதிக்காட்டி அவளை மண முடிக்காதே என்று கூறினார்கள்.

நூல் : அபூதாவூத் (1755)

ஆணோ பெண்ணோ வாழ்க்கைத் துணை தேடும் போது விபச்சாரம் செய்யாத நல்லொழுக்கமானவரையே தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தான் இது கூறுகிறது.

அதே நேரத்தில் விபச்சாரம் செய்த ஆணோ பெண்ணோ தனது தவறை உணர்ந்து திருந்தி ஒழுக்கமாக வாழ்ந்தால் அப்போது விபச்சாரம் செய்தவர் என்ற பட்டியலில் சேர மாட்டார். பாவத்தில் இருந்து திருந்தியவர் பாவம் செய்யாதவரைப் போல் கருதப்படுவார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விபச்சாரம் செய்யும் ஒருவனுக்கு விபச்சாரியே மனைவியாகக் கிடைப்பாள் என்ற கருத்து நடைமுறைக்குப் பொருந்தாத பொய்யான கருத்தாகும். ஏனென்றால் கணவன் ஒழுக்கம் கெட்டவனாக இருந்தும் கற்பைப் பேணி ஒழுக்கத்துடன் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர். இதே போன்று மனைவி ஒழுக்கம் கெட்டவளாக இருந்தும் ஒழுக்கத்துடன் வாழும் நல்ல கணவன்மார்களும் இருக்கின்றனர்.

இப்போது கணவன் ஒழுக்கம் கெட்டவன் என்பதால் அவனுடைய மனைவியும் ஒழுக்கம் கெட்டவள் என்றும் மனைவி ஒழுக்கம் கெட்டவள் என்பதால் அவளுடைய கணவனும் ஒழுக்கம் கெட்டவன் என்றும் முடிவு செய்வது விபரீத விளைவுகளை ஏற்படுத்துவதும் நல்லொழுக்கமுள்ளவர்களின் மீது வீண் பழி சுமத்துவதாகும்.

எனவே யாருக்கு யார் மனைவியாக அமைவார் என்பதைப் பற்றி இவ்வசனம் பேசவில்லை. மாறாக ஒருவர் தனக்கு வாழ்க்கைத் துணையாக எத்தகையவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற சட்டத்தைப் பற்றியே பேசுகின்றது.

நபிகள் நாயகம் சிறுவயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன் ?


நபிகள் நாயகம் சிறுவயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன் ?



ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆறு வயது இருக்கும் போது அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

5133 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَهَا وَهِيَ بِنْتُ سِتِّ سِنِينَ وَأُدْخِلَتْ عَلَيْهِ وَهِيَ بِنْتُ تِسْعٍ وَمَكَثَتْ عِنْدَهُ تِسْعًا رواه البخاري

நான் ஆறு வயதுடையவளாய் இருந்த போது என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதான போது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது வருடங்கள் (மனைவியாக) வாழ்ந்தேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (5133)

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட உடன் இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களும் ஒரே நேரத்தில் அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமாகவே அவர்களுக்கு அருளப்பட்டது. எனவே இறைவனிடம் இருந்து எது குறித்து சட்டம் அருளப்படவில்லையோ அந்த விஷயங்களில் அந்த சமுதாயத்தில் நிலவிய பழக்க வழக்கங்களின் படியே நடந்து கொண்டனர். அன்றைய மக்கள் மதுபானம் அருந்தக் கூடியவர்களாக இருந்தனர். அது குறித்து இறைவனின் தடை உத்தரவு வருவது வரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் தங்களின் பழைய வழக்கத்தையே தொடர்ந்தனர். இறைவன் தடை செய்யாததால் நபிகள் நாய்கம் ஸல் அவர்களும் அதைத் தடை செய்யவில்லை.

அது போல் தான் சிறுவயதுப் பெண்ணை திருமணம் செய்வது அன்றைய அரபுகள் மத்தியில் சாதாரணமாக நடந்து வந்தது. சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை விதிக்கப்படுவதற்கு முன் அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் ஸல் அவர்களும் சிறு வயதுடைய ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.

பின்னர் திருமணத்திற்கான ஒழுங்குகள் இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்டன. விபரமில்லாத சிறுமிகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் முற்றாகத் தடை செய்தது. இதைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறியலாம்.

திருமண வயது என்று ஒரு குறிப்பிட்ட வயதை இஸ்லாம் குறிப்பிடாவிட்டாலும் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தருணம் எது என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.

திருமண வாழ்வில் பெண்கள் ஆற்ற வேண்டிய கடைமைகள் பல உள்ளன. கணவனுக்குக் கட்டுப்படுவதும், வீட்டைக் கவனிப்பதும், குழந்தைகளைப் பேணுவதும் மனைவியின் கடமையாகும். விவரமற்ற சிறுமிகளால் இந்தக் கடமைகளைப் பேண இயலாது.

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (அல்குர்ஆன் 2:228)

தன் கணவனைத் தேர்வு செய்யும் உரிமையைப் பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது. விபரமுள்ள பெண்களே இந்த உரிமையைச் சரியாக பயன்படுத்த முடியும். சிறு வயது பெண்கள் சுயமாக தனது கணவனைத் தேர்வு செய்யும் நிலையில் இல்லை.

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை.

(அல்குர்ஆன் 4:19)

கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது, "கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?''என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அவளது மௌனமே அவளது சம்மதமாகும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 6971, 6964, 5137

என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.

அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி),
நூல்: புகாரி 5139, 6945, 6969

அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள்.

(அல்குர்ஆன்4:21)

இந்த வசனத்தில் திருணமத்தை ஒரு கடுமையான ஒப்பந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. அந்த ஒப்பந்தம் செய்வதற்கான தகுதியும், முதிர்ச்சியும் பருவ வயதை அடைந்தால் தான் ஏற்படும்.

மண வாழ்க்கையில் தன்னுடைய உரிமைகள் என்ன? கடமைகள் என்ன? தனக்கு கணவனாக வருபவர் எவ்வாறு இருக்க வேண்டும்? என்று நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு ஏற்ற வயதில் தான் பெண்களின் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்பதை இந்த வசனங்களும் ஹதீஸ்களும் உறுதி செய்கின்றன.

திருமணம் என்பது கடுமையான உடன்படிக்கை என்றால் கணவன் மனைவி ஆகிய இருவரும் திருமணம் என்றால் என்ன? எதற்காகத் திருமணம் செய்யப்படுகிறது? ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதையெல்லாம் அறிந்தால் தான் அதை ஒப்பந்தம் என்று கூற முடியும். எனவே இதை எல்லாம் அறிய முடியாத பருவத்தில் உள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் செய்விப்பதற்கு இப்போது அனுமதி இல்லை. இந்தச் சட்டம் நடைமுறையில் இலலாத காலத்தில் நடந்த திருமணம் குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை.

Friday, December 24, 2010

திருமணத்திற்கும் வலிமாவிற்கும் அவசியமானது என்ன?

திருமணத்திற்கும் வலிமாவிற்கும் அவசியமானது என்ன?
திருமணம் செய்வதற்கு பெண்ணின் மீது எந்த பொருளாதாரச் சுமையையும் இஸ்லாம் சுமத்தவில்லை. பெண்ணுக்கு மஹர் வழங்குவது, வலீமா என்ற விருந்தை வழங்குவது போன்ற கடமைகள் ஆண் மீதே சுமத்தப்பட்டுள்ளது.
திருமணம் செய்வதற்காக மணமகன் மணமகளுக்கு வழங்கும் பொருள் மஹர் (மணக் கொடை) எனப்படும்.
ஒரு பெண் திருமண வாழ்வின் மூலம் தனக்கு ஏற்படும் இழப்புகளைக் கருத்தில் கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கேட்பதற்கு உரிமை உள்ளது. அதை அவள் மட்டுமே உடமையாக வைத்துக் கொள்வதற்கும் உரிமை உள்ளது.
இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும். அந்த நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையைப் பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.
மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள் கேட்கலாம். இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை.
ஆண் பெண்ணுக்கு மஹர் கொடுக்க வேண்டும்
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!
அல்குர்ஆன் (4 : 4)
மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள் கேட்கலாம். இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை.
ஒரு குவியலையே மஹராக நீங்கள் அவர்களுக்குக் கொடுத்தாலும் அதனைத் திரும்பப் பெறலாகாது எனவும் குர்ஆன் கட்டளையிடுகின்றது.
ஒரு மனைவியை விவாக ரத்துச் செய்து, இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்! அக்கிரமமாகவும், பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா?
(அல் குர்ஆன் 4:20)
மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமை பெண்களிடம் விடப்பட்டுள்ளதால் அவர்கள் விரும்பினால் அதை விட்டுத் தரலாம்;
அப்பெண்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக்கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக் கொருவர் திருப்தியடைந்தால் உங்களுக்குக் குற்றம் இல்லை.
அல்குர்ஆன் (4 : 24)
தன்னிடத்தில் பொருளாதாரம் இருக்கும் பட்சத்தில் அதை மஹராக கொடுப்பது ஆண் மீது கடமை. பொருளாதாரம் இல்லை என்றாலோ அல்லது சிறிதளவு செல்வம் இருந்தாலோ மணமகள் பொருந்திக் கொண்டால் தன்னால் இயன்றதை அவர் கொடுத்து மணமுடிக்கலாம். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.
ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தம்மை (அர்ப்பணித்து) அன்பüப்புச் செய்துவிட்டதாகக் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இனி) எனக்கு எந்தப் பெண்ணும் தேவையில்லை'' என்று சொன்னார்கள். அப்போது அங்கிருந்த ஒரு மனிதர் "இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்!'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "ஏதேனும் ஆடையொன்றை அவளுக்கு ("மஹ்ர்' எனும் விவாகக் கொடையாக)க் கொடு!'' என்று (அந்த மனிதரிடம்) சொன்னார்கள். அவர், "என்னிடம் இல்லை'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "அவளுக்கு (எதையேனும் மஹ்ராகக்) கொடு! அது இரும்பாலான மோதிரமாக இருந்தாலும் சரியே'' என்று சொன்னார்கள். இதைக் கேட்டு அந்த மனிதர் கலங்கினார். எனவே, நபி (ஸல்) அவர்கள், "குர்ஆனிலிருந்து உன்னிடம் என்ன (அத்தியாயம் மனனமாக) இருக்கிறது?'' என்று கேட்டார்கள். அவர் இன்ன இன்ன அத்தியாயங்கள் (எனக்கு மனப்பாடமாக) உள்ளன'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள்,  "உம்முடன் இருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்து வைத்தேன்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ரலி) நூல் : புகாரி (5029)
வலீமா விருந்து
திருமணத்திற்குப் பின் மணமகன் வழங்கும் விருந்து வலீமா எனப்படுகின்றது. இந்த விருந்து நபிவழியாகும்.
பெண் வீட்டார் விருந்தளிப்பதும் அவர்களிடம் விருந்து கேட்டுப் பெறுவதும் மறைமுகமான வரதட்சணையாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண் வீட்டார் விருந்து கொடுக்கும் பழக்கம் இருந்ததில்லை.
மணமகன் கட்டாயம் விருந்தளிக்க வேண்டுமென்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ இல்லை. தன் வசதிக்கேற்ப சாதாரண உணவை மிகச் சிலருக்கு வழங்கினாலும் இந்த "சுன்னத்' நிறைவேறிவிடும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே "வலீமா' விருந்தாக வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 371, 2893
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்த போது இரண்டு "முத்து' கோதுமையையே "வலீமா' விருந்தாக அளித்தார்கள்.
அறிவிப்பவர்: சபிய்யா (ரலி) நூல்: புகாரி 5172
ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 5168, 5171, 7421
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த பெரிய "வலீமா' விருந்தில் ஒரு ஆட்டை "வலீமா'வாகக் கொடுத்தார்கள். இதுதான் அவர்கள் வழங்கிய பெரிய விருந்தாகும்.
எனவே திருமண விஷயத்தில் ஆண்கள் மீதே சில பொருளாதாரக் கடமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது. அக்கடமைகள் கூட அவரவர் சக்திக்கு ஏற்ப நிறைவேற்றப்பட வேண்டும்.
ஆனால் இன்றைக்குச் சிலர் பெரிய அளவில் பொருளாதாரம் இருந்தால் தான் திருமணம் செய்ய முடியும் என்று எண்ணுகிறார்கள். திருமணத்தை ஆடம்பரமாக்கி தங்கம் மீதே தேவையற்ற சுமைகளை சுமத்திக்கொள்கிறார்கள்.
இஸ்லாமிய அடிப்படையில் ஒருவர் திருமணம் செய்வதற்கு பொருளாதாரம் எந்த வகையிலும் தடை இல்லை.


தாயின் சகோதரி மகளை திருமணம் செய்யலா

தாயின் சகோதரி மகளை திருமணம் செய்யலாமா??
தாயின் சகோதரி மகளை திருமணம் செய்யலாமா? ஆணை விட பெண்ணுக்கு வயது அதிகமாக இருக்கலாமா?

பதில் :
தாயின் சகோதரியுடைய மகளைத் திருமணம் செய்துகொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது.
திருமணம் செய்துகொள்ள தடை செய்யப்பட்டவர்களை திருக்குர்ஆனில் இறைவன் பட்டியலிடுகின்றான். இறைவன் குறிப்பிட்டுக் காட்டிய நபர்களைத் தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்பட்டவர்கள் என்று இறைவன் தெளிவுபடுத்துகிறான்
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمْ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُمْ مِنْ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمْ اللَّاتِي فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمْ اللَّاتِي دَخَلْتُمْ بِهِنَّ فَإِنْ لَمْ تَكُونُوا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ أَبْنَائِكُمْ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ وَأَنْ تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا(23) وَالْمُحْصَنَاتُ مِنْ النِّسَاءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ كِتَابَ اللَّهِ عَلَيْكُمْ وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَلِكُمْ أَنْ تَبْتَغُوا بِأَمْوَالِكُمْ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُمْ بِهِ مِنْ بَعْدِ الْفَرِيضَةِ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا(24)4
உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் (4 : 23 24)
திருமணம் செய்யத் தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் தாயின் சகோதரியுடைய மகளை இறைவன் குறிப்பிடவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இதைத் தடை செய்யவில்லை. எனவே தாயின் சகோதரியுடைய மகளை மணந்து கொள்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்கிறோம்.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவர்களுடைய தாயின் சகோதரியின் மகள் ஆகுமானவர் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
يَاأَيُّهَا النَّبِيُّ إِنَّا أَحْلَلْنَا لَكَ أَزْوَاجَكَ اللَّاتِي آتَيْتَ أُجُورَهُنَّ وَمَا مَلَكَتْ يَمِينُكَ مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَيْكَ وَبَنَاتِ عَمِّكَ وَبَنَاتِ عَمَّاتِكَ وَبَنَاتِ خَالِكَ وَبَنَاتِ خَالَاتِكَ اللَّاتِي هَاجَرْنَ مَعَكَ وَامْرَأَةً مُؤْمِنَةً إِنْ وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ إِنْ أَرَادَ النَّبِيُّ أَنْ يَسْتَنكِحَهَا خَالِصَةً لَكَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِي أَزْوَاجِهِمْ وَمَا مَلَكَتْ أَيْمَانُهُمْ لِكَيْلَا يَكُونَ عَلَيْكَ حَرَجٌ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا(50)33
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியரில் யாருக்கு அவர்களின் மணக்கொடையைக் கொடுத்து விட்டீரோ அவர்களையும், அல்லாஹ் உமக்கு போர்க் கைதிகளாகக் கொடுத்த அடிமைப் பெண்களையும், உமது தந்தையின் சகோதரரின் புதல்விகள், உமது தந்தையின் சகோதரிகளுடைய புதல்விகள், உமது தாயின் சகோதரருடைய புதல்விகள், உமது தாயின் சகோதரிகளுடைய புதல்விகள் ஆகியோரில் உம்முடன் ஹிஜ்ரத் செய்தோரையும் உமக்கு (மணமுடிக்க) நாம் அனுமதித்துள்ளோம்.
அல்குர்ஆன் (33 : 50)
திருமணத்தில் வயது வித்தியாசம் இஸ்லாத்தில் ஒரு பிரச்சனையே இல்லை. மனம் விரும்பினால் ஒருவர் தன்னை விட வயது குறைந்தவரையோ வயது அதிகமானவரையோ மணந்து கொள்ளலாம்.

பால்ய விவாகம் கூடுமா


பால்ய விவாகம் கூடுமா
அல்ஜன்னத்தில் பீஜே ஆசிரியராக இருந்த போது எழுதிய பதில்
கேள்வி
சிறு வயது ஆயிஷா ரலி அவர்களை நபிகள் நாயகம் ஸல அவர்கள் திருமணம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு சிறுமிகளைத் திருமணம் செய்யலாமா

ஆயிஷா (ரலி) அவர்களை நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்த போது ஆயிஷா (ரலி) அவர்களின் வயது ஆறு என்பதற்கு ஹதீஸ் நூல்களில் ஆதாரங்கள் உள்ளன. அந்த ஹதீஸ்கள் குறித்து சில விமர்சனங்களும் உள்ளன.  
அந்த விமர்சனங்களுக்குக் காரணம் இதனால் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் மதிப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதும், பால்ய விவாகத்தை அனுமதிக்கும் நிலை ஏற்படுமே என்ற தயக்கமும் தான் காரணம்.
இது குறித்த செய்தியை விமர்சனம் செய்யும் அறிஞர்கள் இதை விட மோசமான விமர்சனத்துக்கு உரிய ஹதீஸ்களை எல்லாம் ஆதாரமாக ஏற்றுச் செயல்படுபவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இந்தச் சம்பவம் உண்மை என்பதால் இவர்கள் அஞ்சக்கூடிய நிலை ஏற்படாது. இதை ஆதாரமாகக் கொண்டு ஆறு வயது சிறுமியை நாம் திருமணம் செய்யலாம் என்று முடிவெடுக்க முடியாது.  
இதைப் புரிந்து கொள்ள இஸ்லாமிய மார்க்கத்தின் சில அடிப்படை உண்மைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.   இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் அனைத்தும் இறைவனால் நபிகள் நாயகத்திற்கு வழங்கப்பட்டது என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். முஸ்லிமல்லாத மக்களும் இவ்வுண்மையை அறிந்து வைத்துள்ளனர்.  
இறைவனால் கடமையாக்கப்பட்ட இந்தச் சட்டங்கள் யாவும் ஒரே நேரத்தில் முழுமையாக நபிகள் நாயகத்திற்கு வழங்கப்பட்டதா? என்றால் அவ்வாறு வழங்கப்படவில்லை.   நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நாற்பதாவது வயதில் இறைவனிடத்தில் செய்திகள் வரத் துவங்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை 23 வருடங்கள் சிறிது, சிறிதாக இச்சட்டங்கள் அருளப்பட்டன.  
இச்சட்டங்கள் அருளப்படுவதற்கு முன்னால் அந்தச் சமுதாயத்தில் நிலவிய வழக்கப்படியே நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நடந்து கொண்டார்கள்.
அக்காவையும், தங்கையையும் ஒரே நேரத்தில் மணந்து கொள்ளும் வழக்கம் அன்றைய சமுதாயத்தில் இருந்தது. இஸ்லாத்தை ஏற்ற பின்பும் முஸ்லிம்களில் சிலர் இவ்வழக்கத்தின் படியே மணந்து கொண்டனர். இவ்வாறு செய்யக் கூடாது என்று தடை வரும் வரை இந்த நிலை நிலவியது.  
ஆரம்ப காலத்தில் போதைப் பொருட்கள் தடுக்கப்படாமல் இருந்தது. இஸ்லாத்தை ஏற்ற பின்பும் ஏற்கனவே போதை பழக்கம் உள்ளவர்கள் அப்பழக்கத்தைத் தொடர்ந்தார்கள். போதைப் பொருள் தடை செய்யப்படும் வரை இதே நிலை நிலவியது.  
இது போல திருமணத்தின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் இறைவனால் வழங்கப்படுவதற்கு முன் அன்றைய அரபுச் சமுதாயம் சிறுமிகளைத் திருமணம் செய்தது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் திருமணம் செய்தார்கள். இவ்வாறு செய்யக் கூடாது என்று சட்டம் வருவதற்கு முன்னர் பலரும் இவ்வாறு செய்து வந்தனர்.   இதன் பின்னர் சிறுமிகளை திருமணம் செய்யக் கூடாது என்ற சட்டம் வந்தது. இவ்வாறு சட்டம் வந்த பின் பருவ வயதை அடையாத சிறுமிகளைத் திருமணம் செய்வது அறவே தடுக்கப்பட்டு விட்டது. 
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.  
(அல்குர்ஆன் 2:228)  
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. 
(அல்குர்ஆன் 4:19)  
அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள். 
(அல்குர்ஆன் 4:21)
கண்ணிப்பெண்ணாக இருந்தாலும் விதவையாக இருந்தாலும் அவளின் சம்மதம் பெறப்பட வேண்டும் என்பது நபிமொழி
நூல் : முஸ்லிம் (2545)  
திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்தம் என்றும், பெண்களின் சம்மதம் அவசியம் என்றும் மேற்கண்ட வசனங்களும் நபிமொழியும் அறிவிக்கின்றன.  
ஒரு ஒப்பந்தம் செய்வதாக இருந்தால் அதில் பங்கெடுப்பவர்கள் அது பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும். சாதக பாதகங்களை உணர்ந்து ஒப்புக் கொள்ள வேண்டும். அப்போது தான் அது ஒப்பந்தமாகக் கருதப்படும்.   ஐந்து வயதுச் சிறுவன் தன் பெயரில் உள்ள சொத்தை விற்பனை செய்தால் எவ்விடத்திலும் அது செல்லாது. உலகில் எந்தச் சட்டத்தின் படியும் அது செல்லாது.  
திருமண வாழ்வு என்பது சொத்தை விட முக்கியமானது. திருமணம் என்றால் என்ன?, அதன் கடமைகள் என்ன?, அதன் விளைவுகள் என்ன? என்பதை அறியாத சிறுமி அது குறித்து எவ்வாறு ஒப்பந்தம் செய்ய முடியும்?.  
எனவே மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் பருவ வயதை அடையாத சிறுமிகளைத் திருமணம் செய்வதும், சிறுவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.   இந்தக் கட்டளைகள் பிறப்பிக்கப்படுவதற்கு முன்னால் நபிகள் நாயகம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு சிறுமிகளைத் திருமணம் செய்யலாம் எனக் கூறுவது தவறாகும்.     
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இந்த மார்க்கத்தைச் சுயமாக கற்பனை செய்து கூறவில்லை; இறைவன் புறத்தில் இருந்து சட்டங்கள் வரும் வரையில் ஊரில் உள்ள வழக்கப்படி தான் நடந்து கொண்டார்கள். இறைவன் புறத்தில் இருந்து மேற்கண்ட கட்டளை வந்த பின்னர் அவர்கள் சிறுமியைத் திரும்ணம் செய்திருந்தால் தான் அது விமர்சனத்துக்கு உரியதாக ஆகும். தனக்கு மட்டும் அனுமதித்துக் கொண்டு மற்றவர்களுக்குத் தடை செய்திருந்தாலும் அது விமர்சனத்துக்கு உரியதாக ஆகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  சிறு வயதுப் பெண்ணை திருமணம் செய்த போது அந்தச் சமுதாயமே இதை அங்கீகரித்து வந்தது என்பதைப் புரிந்து கொண்டால் இதில் குழப்பம் ஏற்படாது.