பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Sunday, August 16, 2015

தொழுகையில் உலக சிந்தனை....?

தொழுகையில் உலக சிந்தனை கெட்ட எண்ணங்கள் ஏற்பட்டால் தொழுகை கூடுமா?

? தொழுகையில் (நம்மையறியாமல்) ஏற்படும் உலக சிந்தனைகளால் தொழுகைக்குப் பாதிப்பு உண்டா? தொழுகையில் கெட்ட எண்ணங்கள் ஏற்பட்டால் தொழுகை கூடுமா?
எஸ். அப்துல் ரஷீது, கொளச்சல்
தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்பு கொடுக்கப்படும் போது பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்று பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவருடைய மனதிற்குமிடையில் இருந்து கொண்டு தொழுகையாளி அதற்கு முன்பு வரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, "இதை நீ நினைத்துப் பார், அதை நீ நினைத்துப் பார்' என்று சொல்லிக் கொண்டு இருப்பான். தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 608
தொழுகையில் உலக எண்ணங்களை ஏற்படுத்துவது ஷைத்தானின் செயல் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இதே செய்தி புகாரியில் 1231வது ஹதீஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மேற்கண்ட இதே செய்தியுடன், "உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்துக்கள் மூன்றா அல்லது நான்கா என்று தெரியாவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு ஸஜ்தா செய்து கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
உலக எண்ணங்கள் ஏற்பட்டு விட்டால் தொழுகை முறிந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறாமல், ரக்அத்தில் மறதி ஏற்பட்டால் ஸஜ்தா செய்து கொள்ளுமாறு கூறுகின்றார்கள். இதிலிருந்து தொழுகையில் உலக எண்ணங்கள் ஏற்படுவதால் தொழுகை முறியாது என்பதை அறியலாம். அதே சமயம் இயன்ற வரை தொழுகையில் கவனம் சிதறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்.
(அல்குர்ஆன் 23:1,2)
தொழுகையில் ஓதப்படும் வசனங்கள் மற்றும் திக்ருகளின் பொருளை உணர்ந்து தொழும் போது, இது போன்ற எண்ணங்கள் ஏற்படுவதை ஓரளவு தடுக்க முடியும்.
(குறிப்பு: 2004 பிப்ரவரி ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை)

தொழுகையில் பேசி விட்டால் என்ன செய்வது?

தொழுகையில் பேசி விட்டால் என்ன செய்வது?

? நான் அறையில் தனியாகத் தொழுது கொண்டிருக்கும் போது என் தாயார் என்னை அழைத்தார். நான் என்ன செய்வதென்று தெரியாமல் என்ன என்று கேட்டு விட்டேன். இதற்காக தொழுகை முடிந்தவுடன் ஸஜ்தா செய்து விட்டேன். இது சரியா? ஆதாரத்துடன் விளக்கவும்.
எஸ். ஜெஹபர் சாதிக், கருக்கங்குடி
தொழுகையில் பேசுவதற்குத் தடை உள்ளது. எனினும் மறதியாகப் பேசி விட்டால் தொழுகை முறியும் என்றோ, ஸஜ்தா செய்ய வேண்டும் என்றோ கூறப்படவில்லை.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான், "யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக)'' என்று கூறினேன். உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான், "என்னை என் தாய் இழக்கட்டும். நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டேன். மக்கள் தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்பதை நான் அறிந்து கொண்டு நான் அமைதியாகி விட்டேன்.
என் தாயும், தந்தையும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் (எனக்கு அறிவுரை) கூறினார்கள். அவர்களுக்கு முன்னரோ, பின்னரோ அவர்களை விட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை. அடிக்கவுமில்லை. திட்டவுமில்லை. அவர்கள், "இந்தத் தொழுகையானது மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும், பெருமைப்படுத்துவதும், குர்ஆன் ஓதுவதுமாகும்'' என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி)
நூல்: முஸ்லிம் 836
தொழுகையில் தெரியாமல் பேசிவிட்ட ஒரு நபித்தோழருக்கு நபி (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள். ஆனால் ஸஜ்தா செய்யுமாறோ, திருப்பித் தொழுமாறோ கூறவில்லை. எனவே மறதியாகப் பேசியதற்குப் பரிகாரம் எதுவும் தேவையில்லை.
குறிப்பு : 2004 ஜூலை மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

தொழுகையில் பார்வை எந்த திசையில்?

தொழுகையில் பார்வை எந்த திசையில் இருக்க வேண்டும்?

? தொழுகையில் நெற்றி படும் இடத்தில் பார்வை இருந்தால் தான் தொழுகை கூடுமா? அத்தஹியாத்தின் தொடக்கத்தில் பார்வை விரலின் மீது இருக்க வேண்டுமா? அல்லது நெற்றி படும் இடத்தில் இருக்க வேண்டுமா?
எஸ். அப்துர்ரஷீது, கொளச்சல்
தொழுகையில் நெற்றி படும் இடத்தில் தான் பார்வை இருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் அதே சமயம், தொழுகையின் போது, நெற்றி படும் இடத்தை விட்டு வேறு இடங்களில் பார்வை செலுத்தியதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.
"நபி (ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் (எதையேனும்) ஓதுவார்களா?'' என்று கப்பாப் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர், ஆம் என்றார். "நீங்கள் எப்படி அதை அறிந்து கொண்டீர்கள்?'' என்று கேட்டோம். "நபி (ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்'' என்று கப்பாப் (ரலி) பதிலளித்தார்.
அறிவிப்பவர்: அபூமஃமர், 
நூல்: புகாரி 746, 760, 761
தொழுகையில் நெற்றி படும் இடத்தைத் தான் பார்க்க வேண்டும் என்று நபிகள் நாயகம் கட்டளையிட்டிருந்தால் நபிகள் நாயகத்தின் தாடை அசைவதை நபித்தோழர்கள் பார்த்திருக்க முடியாது
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது, (அதற்காக) தொழுதார்கள். "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நின்ற இடத்தில் எதையோ பிடிக்க முயன்று விட்டுப் பின்வாங்கினீர்களே?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். "எனக்குச் சுவர்க்கம் எடுத்துக் காட்டப் பட்டது. அதிலிருந்து ஒரு குலையைப் பிடித்தேன். அதை நான் எடுத்திருந்தால் உலகம் உள்ளளவும் அதை நீங்கள் புசித்திருப்பீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), 
நூல்: புகாரி 748
நபி (ஸல்) அவர்கள் தமக்கு முன்பகுதியில் தென்பட்ட குலையைப் பிடிக்க முயன்றுள்ளார்கள். இந்த சமயத்தில் நபி (ஸல்) அவர்களின் பார்வை நெற்றி படும் இடத்தில் நிச்சயம் இருந்திருக்காது. நபி (ஸல்) அவர்களின் இந்தச் செயலை நபித்தோழர்கள் பார்த்துள்ளனர். எனவே அவர்களும் நெற்றி படும் இடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகின்றது.
இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் தொழுகையில் நெற்றி படும் இடம் அல்லாத மற்ற இடங்களிலும் பார்வை செலுத்துவற்குத் தடையில்லை என்பதை அறியலாம். ஆனால் பார்வையை வானத்தை நோக்கி உயர்த்துவதற்குத் தடை உள்ளது.
தொழும் போது தங்கள் பார்வைகளை வானத்தில் உயர்த்துகின்றவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அவர்களின் பார்வை பறிக்கப் பட்டு விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: புகாரி 750
நபி (ஸல்) அவர்கள், அத்தஹிய்யாத்தில் ஆட்காட்டி விரலை அசைக்கும் போது, அதை நோக்கி பார்வையைச் செலுத்துவார்கள் என்று ஹதீஸ் உள்ளது.
தொழுகையில் இருக்கும் போது ஒருவர் கல்லை அசைத்துக் கொண்டிருப்பதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கண்டார்கள். தொழுகை முடிந்ததும் அவரிடம், "தொழுகையில் இருக்கும் போது நீ கல்லை அசைக்காதே! இது ஷைத்தானின் வேலை! மாறாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வது போன்று நீ செய்'' என்று கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படிச் செய்வார்கள்?'' என்று அவர் கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி), தமது வலது கையை வலது தொடையில் வைத்து கிப்லா திசையில் பெருவிரலுக்கு அடுத்த விரலை வைத்து இஷாரா செய்து அதை நோக்கி தமது பார்வையை செலுத்தினார்கள். பிறகு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யக் கண்டேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ பின் அப்துர் ரஹ்மான், 
நூல்: நஸயீ 1148
குறிப்பு : 2004 ஏப்ரல் மாத ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி

ஃபஜ்ரு ஜமாஅத் நடக்கும் பொழுது சுன்னத் ?

ஃபஜ்ரு ஜமாஅத் நடக்கும் பொழுது சுன்னத் தொழுதுவிட்டுதான் ஜமாஅத்தில் கலந்து கொள்ள வேண்டுமா?

? ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஃபஜ்ரு ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது பள்ளிக்கு வந்தால் முதலில் சுன்னத் தொழுதுவிட்டு பிறகு ஜமாஅத் தொழுகையில் சேர்கின்றார்கள். இது பற்றிக் கேட்டதற்கு இந்த ஹதீஸைக் கூறுகின்றார்கள்.  நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ரு தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் போது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் பள்ளிக்கு வருகின்றார்கள். ஒரு ஓரமாக நின்று சுன்னத்தைத் தொழுது விட்டு பிறகு ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்கின்றார்கள் என்ற செய்தி தஹாவீயின் ஷரஹ் மஆனில் ஆஸார் என்ற நூலில் இடம்பெற்றுள்ளதாகக் கூறினார்கள். இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதா?
ஈ. இஸ்மாயீல் ஷெரீப், பெரம்பூர், சென்னை.
சுப்ஹ் தொழுகைக்காக மக்கள் வரிசையில் நிற்கும் போது அபூதர்தா (ரலி) அவர்கள் பள்ளிக்குள் வந்தார்கள். பள்ளியின் ஓரத்தில் இரண்டு ரக்அத் தொழுதார்கள். அதன் பின்மக்களோடு சேர்ந்து அந்தத் தொழுகையில் கலந்து கொண்டார்கள் என்று ஷரஹ்மஆனில் ஆஸார் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, "இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் இவ்வாறு செய்தார்கள்' என்று கூறப்பட்டுள்ளது.
இது தான் நீங்கள் குறிப்பிடும் செய்தியாகும். இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தியதாகவோ அல்லது நபித்தோழரின் செயலை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்ததாகவோ கூறப்படவில்லை. மேலும் இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ள அபூபிஷ்ர் அர்ரிக்கா என்பவரைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. எனவே இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஒருவேளை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாக வைத்துக் கொண்டாலும் நபி (ஸல்) அவர்களது அங்கீகாரத்துடன் நடந்தது என்று கூற முடியாது. ஏனெனில் இகாமத் சொல்லப்பட்ட பின் சுன்னத் தொழுவதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். தடை செய்யப்படுவதற்கு முன்னர் இது நடைபெற்றிருந்தால் அதை நாம் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. தடை செய்யப்பட்ட பின்னர் இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை. நபி (ஸல்) அவர்கள் தடுத்ததை நபித்தோழர்கள் செய்திருக்க மாட்டார்கள்.
தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு எதனையும் தொழலாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), 
நூல் : முஸ்லிம் 1161, திர்மிதீ 386
நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இருக்கும் போது, அதைவிட்டு விட்டு நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் இல்லாத ஆதாரமற்ற செய்திகளைக் காட்டி மத்ஹபுகளை நியாயப்படுத்த முனையக் கூடாது.
(குறிப்பு : 2003 டிசம்பர் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

அத்தாஹிய்யாத்தில் தொழுகையில் இணையும் போது ?

அத்தாஹிய்யாத்தில் தொழுகையில் இணையும் போது எப்படி சேர வேண்டும்?

? தொழுகையில் இமாம் கடைசி ரக்அத்தில் அத்தஹிய்யாத்தில் இருக்கும் போது நாம் தொழுகைக்கு கைகளை உயர்த்தி தக்பீர் கட்டிக் கொண்டு, வஜ்ஜஹ்து ஓதி விட்டு செல்ல வேண்டுமா? அல்லது கைகளை உயர்த்தி அப்படியே செல்ல வேண்டுமா?
இஸ்மாயீல் ஷெரீப், சென்னை
தக்பீர் கூறி கைகளை உயர்த்திய பின் இமாம் எந்த நிலையில் இருக்கின்றாரோ அந்த நிலைக்குத் தான் நாம் செல்ல வேண்டும்.
இமாம் ஏதேனும் ஒரு நிலையில் இருக்கும் போது உங்களில் எவரேனும் தொழுவதற்கு வந்தால் அவர் இமாம் செய்வது போலவே செய்யட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆத் பின் ஜபல் (ரலி)
நூல்கள் : திர்மிதி 539, இப்னு அபீஷைபா
(குறிப்பு: 2003 செப்டம்பர் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

இரண்டாவது ஜமாஅத்திற்கு ஆதாரம் உள்ளதா?

இரண்டாவது ஜமாஅத்திற்கு ஆதாரம் உள்ளதா?

? ஒரு குறிப்பிட்ட நேரத் தொழுகையில் ஒரு ஜமாஅத் முடிந்த பின்னர் இரண்டாவது ஜமாஅத் தொழுவதற்கு ஆதாரம் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். இரண்டாவது ஜமாஅத்திற்கு ஆதாரம் உள்ளதா? விளக்கவும்.
ஏ.எல். ஹாஸிம், ராஸல் கைமா
! நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "(இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக் கூடியவர் யார்?'' என்று கேட்டார்கள். ஒரு மனிதர் முன் வந்தார். வந்த மனிதர் அவருடன் சேர்ந்து தொழுதார்.
அறிவிப்பவர் : அபூஸயீத் (ரலி), 
நூல் : திர்மிதி 204, அஹ்மத் 10596
நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவருக்கு தர்மம் செய்யக் கூடியவர் யார்? அவர் இவரோடு சேர்ந்து தொழட்டும்'' என்று கூறினார்கள். அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி), 
நூல் : அஹ்மத் 10980
ஜமாஅத் முடிந்த பின்னர் வந்த மனிதரை தனியாகத் தொழ விடாமல், ஏற்கனவே தொழுத ஒருவரை அவருக்கு ஜமாஅத் நடத்துமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். அவ்வாறு தொழுவது தனியாகத் தொழுவதை விட நன்மையானது எனவும் குறிப்பிடுகின்றார்கள். "இவருக்கு லாபம் அளிக்கக் கூடியவர் யார்?'' என்ற வாசகத்திலிருந்து இதை அறியலாம்.
எனவே முதல் ஜமாஅத் முடிந்த பின்னர் தாமதமாக வருபவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஜமாஅத்தாகத் தொழுவதே சிறந்தது. ஒருவர் மட்டும் வந்தால், ஏற்கனவே ஜமாஅத்தில் தொழுதவருடன் சேர்ந்தாவது ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது.
தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு நன்மை உடையது என்று பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன.
கீழ்க்காணும் ஆக்கங்க்களையும் பார்க்கவும்
http://www.onlinepj.com/aayvukal/2nd_jamath/#.VJpBUF4Dpg
http://www.onlinepj.com/aayvukal/2nd_jamath_marupuku_marupu/#.VJpBbV4Dpg
http://www.onlinepj.com/?action=admin_article&id=7956
(குறிப்பு: 2003 செப்டம்பர் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மஹ்ரிப் தொழலாமா?

இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மஹ்ரிப் தொழலாமா?

? வேலையின் காரணமாக ஒரு நாள் மக்ரிப் தொழுகையை விட்டு விட்டேன். இஷா தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டு விட்டது. இப்போது நான் மக்ரிப் தொழ வேண்டுமா? அல்லது இஷா தொழ வேண்டுமா? அல்லது இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மக்ரிப் தொழலாமா? விளக்கவும்.

ஏ. ஜெஹபர் சாதிக், அதிராம்பட்டிணம்


அகழ்ப் போரின் போது சூரியன் மறைந்த பின் உமர் (ரலி) அவர்கள் குறைஷிக் காஃபிர்களை ஏசிக் கொண்டே வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழவில்லையே!'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் அஸர் தொழவில்லை'' என்று கூறினார்கள். நாங்கள் பத்ஹான் என்ற பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்காக உளூச் செய்தார்கள். நாங்களும் அதற்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பின் அஸர் தொழுதார்கள். அதன் பின் மக்ரிப் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூற்கள்: புகாரி 596, முஸ்லிம் 1000, திர்மிதி 164

இந்த ஹதீஸில் மக்ரிப் தொழுகையின் நேரம் வந்து விட்டாலும் அஸரை முதலில் தொழுத பின்னரே நபி (ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுகின்றார்கள். இதை வைத்து தொழுகையைக் களாச் செய்யலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

இதே அறிவிப்பு நஸயீயில் 655வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் போர்க் காலங்களில் தொழுவது தொடர்பான 4:102 வசனம் அருளப்படுவதற்கு முன்னர் நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வசனம் அருளப்பட்ட பின் போர்க் காலங்களில் கூட தொழுகையை நேரம் தவறித் தொழுவதற்குத் தடை விதிக்கப் பட்டு விட்டது.

தூக்கம், மறதி ஆகிய காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் தொழுகையை நேரம் தவறித் தொழுவதற்கு அனுமதியில்லை. எனினும் தூக்கம், மறதி அல்லாத வேறு காரணத்திற்காக லுஹர் தொழுகையை அஸருடனும், மக்ரிப் தொழுகையை இஷாவுடனும் சேர்த்து, "ஜம்உ' ஆக தொழுவதற்கு அனுமதியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் மக்ரிப், இஷாவை ஏழு ரக்அத்துகளாகவும், லுஹர் அஸரை எட்டு ரக்அத்துகளாகவும் தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 543

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் பயமோ, மழையோ இன்றி லுஹரையும் அஸரையும் ஒரு நேரத்திலும், மக்ரிபையும் இஷாவையும் ஒரு நேரத்திலும் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: திர்மிதீ 172

தொழுகையை நேரம் தவறித் தொழுவதற்குத் தடை விதிக்கப் பட்டு விட்டாலும், இங்கு அகழ் போர் குறித்த புகாரி 596வது ஹதீஸை நாம் ஆதாரமாகக் காட்டியிருப்பது, தொழுகையை வரிசை மாற்றித் தொழாமல் வரிசைப் படியே தொழ வேண்டும் என்பதற்காகத் தான்.

இஷா தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டு விட்டாலும் மக்ரிப் தொழாமல் இஷா தொழுவதற்கு அல்லது இஷாவுக்குப் பின் மக்ரிப் தொழுவதற்கு அனுமதியில்லை. இமாம் ஒரு ரக்அத் முடித்த பின் இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மக்ரிப் தொழுது விட்டு பின்னர் இஷாவைத் தனியாகத் தொழுது கொள்ளலாம்.

இமாமுடைய நிய்யத்தும் பின்பற்றித் தொழுபவரின் நிய்யத்தும் வெவ்வேறாக இருக்கலாம் என்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது. கடமையான தொழுகையைப் பிற்படுத்தும் ஆட்சியாளர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, உரிய நேரம் வந்ததும் தொழுகையை நிறைவேற்றி விட்டு ஜமாஅத் நடக்கும் போது அதை நஃபிலாகத் தொழுது கொள்ளுமாறு ஒரு நபித்தோழருக்குக் கட்டளையிட்ட செய்தி முஸ்லிமில் 1027வது ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.
(குறிப்பு: 2004 மார்ச் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு முன்பு....?

வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு முன்பு தக்பீர் கூறி கைகளை உயர்த்த மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா?

? ஹனபி மத்ஹபினர் வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு முன்பு தக்பீர் கூறி கைகளை உயர்த்தி பின்பு கட்டிக் கொண்டு குனூத் ஓதுகின்றார்கள். இதற்கு நபிவழியில் ஆதாரம் உள்ளதா?
எஸ். அப்துல் ஹக்கீம், சக்கரப்பள்ளி
வித்ரு தொழுகையில் ருகூவுக்கு முன்பாகவோ அல்லது ருகூவுக்குப் பின்போ குனூத் ஓத வேண்டும் என்று வலியுறுத்தி ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவ்வாறு குனூத் ஓதும் போது தக்பீர் கூறி கைகளை உயர்த்திக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
குறிப்பு: 2004 ஏப்ரல் மாத ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி