பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, December 3, 2016

மூஸா நபியின் சமுதாயத்தார் கொல்லப்பட்டார்களா?

மூஸா நபியின் சமுதாயத்தார் கொல்லப்பட்டார்களா?
காளைச் சிற்பத்தை மூஸா நபி சமுதாயம் வணங்கியபோது உங்களை நீங்களே கொன்று விடுங்கள் என்று மூஸா நபி கூறினார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதன் விளக்கம் என்ன என்பதை பீஜே அவர்கள் தனது தமிழாக்கத்தில் விளக்கி இருந்தார். பீஜேயின் விளக்கம் தவறானது என்று சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி சில வாதங்களை எடுத்து வைக்கின்றனர். பீஜே எழுதியது சரியா? எதிராளிகளின் மறுப்பு சரியா என்பதை ஆய்வு செய்து அப்துல் கரீம் MISC அவர்கள் ஆய்வு செய்து கட்டுரை அனுப்பி உள்ளார்கள். ஆய்வாளர்களுக்குப் பயன்படும் என்பதால் அதை இங்கே வெளியிடுகிறோம். – வெப் மாஸ்டர்)
தவ்ராத் வேதத்தை வழங்குவதற்காக தூர் எனும் மலைக்கு வருமாறு மூஸா நபிக்கு இறைவன் கட்டளையிட்டான். பலகைகளில் எழுதப்பட்ட அவ்வேதத்தை நாற்பதாம் நாள் இறைவன் அவர்களுக்கு வழங்கினான். இதைப் பெறுவதற்காக மூஸா நபி சென்றிருந்த காலகட்டத்தில் சாமிரியின் குழப்பத்திற்கு அச்சமுதாயம் பலியாகி காளைச்சிற்பத்தைக் கடவுளாகக் கருதி வழிபட ஆரம்பித்து விட்டனர்.
மூஸா நபியவர்கள் திரும்பியதும் தம் சமுதாயத்தார் காளைச்சிற்பத்தைக் கடவுளாக்க் கருதி வழிபட்டதை பார்த்த போது கோபத்துடன் உங்களையே கொன்று விடுங்கள்! என்று கூறியதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنْفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنْفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِنْدَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ [البقرة : 54]
"என் சமுதாயமே! காளைக் கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்ததன் மூலம் உங்களுக்கே தீங்கிழைத்து விட்டீர்கள். எனவே உங்களைப் படைத்தவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்! உங்களையே கொன்று விடுங்கள்! இதுவே உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு நல்லது'' என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக! அவன் உங்களை மன்னித்தான். அவனே மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 2 54
உங்களையே நீங்கள் கொன்று விடுங்கள் என்பதற்கு  தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்ற அர்த்தமுண்டு. ஒரு இறைத்தூதர் தம் சமுதாயத்தை தற்கொலை செய்யுமாறு கூறமாட்டார் என்பதால் இதற்கு அந்த அர்த்தம் வழங்கக் கூடாது. மாறாக கோபத்தில் சொல்லப்பட்ட வார்த்தை என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று நாம் கூறி வருகிறோம்.
அதாவது தூர் மலையிலிருந்து திரும்பி வந்த மூஸா (அலை) அவர்கள் தம் சமுதயாத்தின் கொள்கை பிறழ்ச்சியைக் கண்டதும் கோபங்கொண்டு வெளிப்படுத்திய வார்த்தை தான் உங்களை நீங்களே கொன்று விடுங்கள் எனும் வார்த்தையாகும். கடுமையாகக் கோபம் கொண்ட நிலையில் "செத்துத் தொலையுங்கள்'' என்று கூறுவது மனிதரின் இயல்பு தான். கோபத்தில் பயன்படுத்தும் இது போன்ற வார்த்தைகளை அதன் நேரடிப் பொருளில் சொல்லமாட்டோம். இந்த அடிப்படையிலேயே மூஸா (அலை) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்பது இந்த வசனம் குறித்து நமது விளக்கமாகும்.
இதை பி.ஜே அவர்களின் குர்ஆன் மொழிபெயர்ப்பில் விளக்க குறிப்பு எண் 20 ல் பார்க்கலாம்.
அதற்கான லிங்க்
குழப்பமான விளக்கம்?
இந்நிலையில் ஒரு சிலர் நாம் கூறும் இந்த விளக்கத்தில் குழப்பம் உள்ளது, இது தவறானது என்றும் இதே வசனத்திற்கு இஸ்லாமிய அறிஞர்களால் ஒருமித்து சொல்லப்பட்ட வேறொரு அழகான? அற்புத? விளக்கம் உண்டு என்றும் கூறிவருகின்றனர்.
நமது மொழிபெயர்ப்பிலோ, விளக்கத்திலோ தவறிருந்து தக்க முறையில் சுட்டிக்காட்டினால் அதை ஏற்று நம் கருத்தைத் திருத்திக் கொள்ள நாம் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.
ஆனால் நாம் கூறும் கருத்தை விட எது அழகான? அற்புத? விளக்கம் என்று சொல்லப்படுகிறதோ அது உண்மையில் பிற வசனங்களுடன் பொருந்தி, குழப்பமற்ற வகையில் புரியும் படியானதாக இருக்க வேண்டும்.
2:54 வசனத்திற்கு நாம் அளித்த விளக்கத்தை குழப்பம், குர்ஆன் வசனத்தை நிராகரிக்கும் விளக்கம் என்றெல்லாம் வாதிருபவர்களின் விளக்கம் தான் உண்மையில் பெருங்குழப்பமாகவும், வசனத்தை மறுத்து அளித்த விளக்கமாகவும் அமைந்துள்ளது.
மாற்றுக் கருத்துடையோரின் விளக்கம் என்ன?
"என் சமுதாயமே! காளைக் கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்ததன் மூலம் உங்களுக்கே தீங்கிழைத்து விட்டீர்கள். எனவே உங்களைப் படைத்தவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்! உங்களையே கொன்று விடுங்கள்! இதுவே உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு நல்லது'' என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக! அவன் உங்களை மன்னித்தான். அவனே மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 2 54
உங்களை நீங்களே கொன்று விடுங்கள் என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டு இருப்பது அந்த சமுதாயத்திற்கு இறைவனால் வழங்கப்பட்ட தண்டனை குறித்து சொல்லப்படுகிறது என்பது தான் மாற்றுக் கருத்துடையோரின் விளக்கமாகும்.
அவர்களின் வாசகம்
இஸ்ரேவல் இனத்தில் காளைக் கன்றை வணங்கி தடம்புரண்டவர்களும் இருந்தனர். இந்த இணைவப்பில் ஈடுபடாமல் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம் என்ற கொள்கை உறுதியுடையோரும் இருந்தனர். இந்நிலையில் இஸ்ரேவல் இனத்தாரைப் பார்த்து உங்களை நீங்களே கொலை செய்யுங்கள் என்றால் உங்களில் இப்பாவத்தைச் செய்தவர்களை இப்பாவத்தைச் செய்யாதவர்கள் கொல்லுங்கள் என்பதே இதன் நேரடிப் பொருளாகும்.
இவ்வாறு அவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
அதாவது மூஸா நபியவர்கள் தம் சமுதாயத்தை தற்கொலை செய்யச் சொல்லவில்லை மாறாக குற்றமற்றவர்கள் குற்றமிழைத்தவர்களைக் கொலை செய்யத்தான் சொன்னார்கள் - இதுதான் உங்களை நீங்களே கொன்று விடுங்கள் என்பதன் அர்த்தமாகும் என்றும், இது இறைவனால் காளைச் சிற்பத்தை வணங்கியவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்றும் விளக்கம் அளிக்கின்றனர்.
இவ்வாறே அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும் இவ்வசனத்திற்கு பொருள் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மாற்று விளக்கம் பல காரணங்களால் தவறாகும். புகழ்மாலை சூடும் அளவிற்கு இவ்விளக்கம் அழகானதாக இல்லை என்பதோடு பெருங்குழப்பம் நிறைந்ததாக இருக்கிறது.
அன்ஃபுஸகும் என்பதன் விளக்கம்
ஃபக்துலூ அன்ஃபுஸகும் - உங்களை நீங்களே கொன்று விடுங்கள் என்றால் குற்றமற்றவர்கள் குற்றமிழைத்தவர்களை கொல்ல வேண்டும். இது காளைச் சிற்பத்தை வணங்கியவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய தண்டனை என்ற இந்த அறிஞர்களின் விளக்கம் எந்த அடிப்படையில் தவறு என்பதை விளக்கும் முன்  அன்ஃபுஸகும் குறித்து ஒரு சிறிய விளக்கத்தை அளித்து விடுகிறோம்.
ஒரு இறைத்தூதர் தற்கொலை செய்யும் படி தம் சமுதாயத்திற்குக் கூற மாட்டார் என்ற காரணத்தினால் உங்களை நீங்களே கொன்று விடுங்கள் என்பதற்கு அவ்வாறு பொருள் செய்யக் கூடாது என்று நாம் எழுதியிருந்தோம்.
இதில் தனது அதிமேதாவித்தனத்தை வெளிப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு அன்ஃபுஸகும் என்பதை விளக்குகிறேன் என்ற பெயரில் அன்ஃபுஸகும் இடம்பெற்ற சில வசனங்களை எடுத்துக் காட்டி இங்கெல்லாம் எப்படி புரிகிறோம் என்று வினா எழுப்பி தங்களின் விளக்கத்தை நியாயப்படுத்துகின்றனர்.
இதன் நேரடிப் பொருள் என்னவென்று முதலில் பார்ப்போம்.
உங்களை நீங்களே கொலை செய்யுங்கள் என்றால் உங்களில் இப்பாவத்தைச் செய்தவர்களை இப்பாவத்தைச் செய்யாதவர்கள் கொல்லுங்கள் என்பதே இதன் நேரடிப் பொருளாகும்.
இவ்வாறு மேற்படி ஆய்வாளர் எழுதியுள்ளார்.
இந்த ஒரு பாராவே இவர்களின் மடமையைத் தோலுரிக்க போதுமானதாக உள்ளது.
உங்களையே நீங்கள் கொலை செய்யுங்கள் என்றால்
என்று மேற்படி ஆய்வாளர் கூறுகிறார். இதிலிருந்து உங்களையே நீங்கள் கொல்லுங்கள் என்பது தான் சொல்லப்பட்ட வார்த்தையின் நேரடிப் பொருள் என்று இவர் ஒப்புக் கொள்கிறார்.
அடுத்ததாக
உங்களில் இப்பாவத்தைச் செய்தவர்களை இப்பாவத்தைச் செய்யாதவர்கள் கொல்லுங்கள் என்பதே இதன் நேரடிப் பொருளாகும்.
என்று கூறுகிறார்.
இப்பாவத்தைச் செய்தவர்கள்  இப்பாவத்தைச் செய்யாதவர்களைக் கொல்லுங்கள் என்பதுதான் நேரடிப் பொருள் என்று இவர் கூறுகிறார்.
நேரடிப் பொருள் என்று சொன்னால் மேற்கண்ட வாசகத்துக்கான மூலச் சொல் அவ்வசனத்தில் இருக்க வேண்டும்.  இப்பாவத்தைச் செய்தவர்கள் இப்பாவத்தைச் செய்யாதவர்களை என்பதற்கான அரபு மூலத்தை இவ்வசனத்தில் இருந்து எடுத்துக் காட்ட வேண்டும். குர்ஆனில் இந்தச் சொல் உள்ளதா? இல்லவே இல்லை. இல்லாத வாசகங்களை இவராகச் சேர்த்துக் கொண்டு நேரடிப் பொருள் என்று கூறி தனது அறிவீனத்தை அவரே அடையாளம் காட்டிக் கொள்கிறார்.
பஃக்துலூ என்றும் அன்ஃபுஸகும் என்றும் இரு வார்த்தைகள் தான் இவ்வசனத்தில் உள்ளன.
ஃபக்துலூ என்றால் கொல்லுங்கள் என்பது நேரடிப் பொருள்.
அன்ஃபுஸகும் என்றால் உங்களை என்பது நேரடிப் பொருள்.
உங்களை நீங்களே கொல்லுங்கள் என்பது இரண்டுக்கும் சேர்த்து நேரடிப் பொருள்.
அல்லாஹ் குறிப்பிடாத வார்த்தைகளை இவராகச் சேர்த்துக் கொண்டு அதை நேரடிப் பொருள் எனக் கூறி அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டி பெருபாவத்தைச் சுமந்து கொண்டார்.
எந்த வாக்கியத்துக்கும் அதன் நேரடிப் பொருளைத்தான் கொடுக்க வேண்டும். உங்களையே நீங்கள் கொல்லுங்கள் என்பதற்கும் அதன் நேரடிப் பொருளைத் தான் கொடுக்க வேண்டும். நேரடிப் பொருள் கொள்ள முடியாதவாறு தக்க சான்று (அரபியில் கரீனா என்பார்கள்) இருந்தால் மட்டுமே உங்களில் சிலர் சிலரை என்று மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும்.
சிங்கம் என்பதன் நேரடிப் பொருள் குறிப்பிட்ட வனவிலங்குதான். இச்சொல் பயன்படுத்தப்படும் எல்லா இடங்களிலும் வனவிலங்கு என்ற நேரடிப் பொருளைத்தான் கொடுக்க வேண்டும். நேரடிப் பொருள் கொடுக்க முடியாது என்பதற்கு தக்க காரணம் இருந்தால் மட்டும் அதற்கு மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும்.
உதாரணமாக மேடையில் சிங்கம் முழங்கியதைப் பார்த்தேன் என்று ஒருவன் நம்மிடம் கூறினால் மேடையில் முழங்குதல் என்ற சொல்லை வைத்து வீரமான மனிதனைக் குறிப்பிடுகிறான் என்று இந்தச் சொல்லை விளங்கிக் கொள்வோம். ஆனால் இது நேரடிப் பொருள் அல்ல. மாற்றுப் பொருள் தான்.
இப்படி இல்லாத இடங்களில் நேரடிப் பொருளையே கொடுக்க வேண்டும்.
சாதாரணமான இந்த அடிப்படை அறிவு இவருக்கு இல்லாததே இந்த உளறலின் அடிப்படையாக உள்ளது.
இவர் தனது வாதத்தை நிலைநாட்ட அன்ஃபுஸகும் என்ற சொல் இடம் பெற்ற சில வசனங்களை எடுத்துக் காட்டுகிறார்.
2:85 வசனத்தில் உங்களை உங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றாதீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் பொருள் உங்களில் சிலர் மற்ற சிலரை வெளியேற்றாதீர்கள் என்பதுதான். இதுபோல் தான் உங்களையே கொன்று விடுங்கள் என்பதன் பொருள் உங்களில் சிலர் மற்ற சிலரைக் கொல்லுங்கள் என்பதாகும் என்று மேற்படியார் வாதம் செய்கிறார்.
2:85 வசனத்தில் உங்களை உங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றாதீர்கள் என்று சொல்லப்பட்ட்தன் நேரடிப் பொருள் உங்களை நீங்களே வெளியேற்றாதீர்கள் என்பதுதான்.
ஆனால் இவ்வாறு நேரடிப் பொருள் கொள்ளத் தடையாக இவ்வசனத்தின் ஒட்டு மொத்த கருத்து அமைந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக உங்களில் ஒரு சாரார் மற்றொரு சாராரை வெளியேற்றினீர்கள் என்று சொல்லப்படுவதால் இதன் கருத்து சிலர் சிலரை வெளியேற்றாதீர்கள் என்பதுதான் என்று விளங்கி மாற்றுப் பொருள் கொள்கிறோம்.
உதாரணமாக,
பத்து குடும்பத்தினர் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர் என்று வைத்துக் கொள்வோம். அவர்களை நோக்கி உங்களை நீங்களே வெளியேற்றிக் கொள்ள வேண்டாம் என்று கூறினால் இச்சொல்லுக்கு சிலர் சிலரை வெளியேற்றாதீர்கள் என்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் அந்த பத்து குடும்பத்தில் சிலர் சிலரை வெளியேற்றவில்லை. தங்களைத்தான் வெளியேற்றிக் கொள்கிறார்கள்.
எந்த ஊரில் இருந்து அம்மக்கள்: வெளியேறினார்களோ அந்த ஊர் மக்களை அழைத்து இதே வார்த்தையை நாம் கூறினால் அப்போது உங்களில் சிலரை - அதாவது பத்து குடும்பங்களை, - சிலர் - அதாவது ஊர் மக்கள் - வெளியேற்றாதீர்கள் என்று பொருள் வரும்.
நேரடிப் பொருள் கொள்ள முடியாதவாறு கரீனதுல் ஹால் அதாவது சந்தர்ப்ப சூழ்நிலை அமைந்துள்ளது. வெளியேற்றிவர்களும், வெளியேறியவர்களும் கலந்திருக்கும் சபை என்பதே நேரடிப் பொருள் கொள்ளாமல் இருப்பதற்குக் காரணமாகும்.
49:11 வசனத்தில் உங்களை நீங்களே குறை கூறாதீர்கள் என்று சொல்லப்பட்ட்டுள்ளது. உங்களைக் குறை கூறாதீர்கள் என்றால் உங்களில் சிலர், வேறு சிலரைக் குறை கூறாதீர்கள் என்பதுதான் பொருள். அதுபோல் தான் இவ்வசனத்துக்கும் பொருள் கொள்ள வேண்டும் என்று இந்த ஆய்வாளர் கூறுகிறார்.
உங்களை நீங்களே குறை கூறாதீர்கள் என்பதன் நேரடிப் பொருள் உங்களை நீங்கள் குறை கூறாதீர்கள் என்பதுதான்.
ஆனால் இந்த அத்தியாயத்தின் ஒட்டு மொத்த போதனைகளும் ஒருவர் மற்றவரிடம் நடந்து கொள்வதைக் குறித்து பேசுவதால் அதை ஆதாரமாகக் கொண்டு உங்களில் ஒருவர் மற்றவரை குறை கூற வேண்டாம் என்று மாற்றுப் பொருள் கொள்கிறோம்.
சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிடுவீர்களா என்பன போன்ற சான்றுகள் காரணமாகவே மாற்றுப் பொருள் கொள்கிறோம்.
பத்துப் பேர் தம்மைப் பற்றி தாழ்வாகப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது அவர்களை நோக்கி இந்த வாசகம் சொல்லப்பட்டால் சிலர் சிலரைக் குறை கூறாதீர்கள் என்ற மாற்றுப் பொருள் கொள்ள மாட்டோம். உங்களையே நீங்கள் குறை கூறாதீர்கள் என்ற நேரடிப் பொருளையே கொடுப்போம்.
இந்த விஷயத்தில் இந்த அரைகுறை ஆய்வாளரின் அறியாமையை இன்னும் தெளிவாக விளங்கிட பின்வரும் வசனங்கள் ஆதாரமாகும்.
அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன், தனக்கு (இறைவனிடமிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும் 'எனக்கு அறிவிக்கப்படுகிறது' எனக் கூறுபவன், 'அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன்' என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும்போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள்165 அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். "உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்று166 இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்!'' (எனக் கூறுவார்கள்).
அல்குர்ஆன் 6 93
மரண வேதனையில் இருக்கும் அநீதியாளர்களிடம் வானவர்கள் அக்ரிஜூ அன்ஃபுஸகும் - "உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! என்று கூறுவார்கள் என இவ்வசனம் கூறுகிறது.
இங்கே சிலர் மற்ற சிலரின் உயிர்களை வெளியேற்றுங்கள் என்று பொருள் என இந்த அதிமேதாவி அர்த்தம் கொடுப்பாரா? அல்லது உன் உயிரை நீயே வெளியேற்று என்று அர்த்தம் கொடுப்பாரா?
"அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறிவிட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் நீங்கள் (இறைவனுக்கு) என்னை இணையாக்கியதை மறுக்கிறேன்'' என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
அல்குர்ஆன் 14 22
அல்லாஹ் உண்மையான வாக்குறுதி அளித்தான் அதை நீங்கள் கேட்கவில்லை. நான் அழைத்தேன் உடனே வந்து விட்டீர்கள்; என்னைப் பழிக்காதீர்கள் உங்களையே பழித்துக் கொள்ளுங்கள் என்று நரகில் இருப்போரிடம் ஷைத்தான் கூறுவான் என இவ்வசனம் கூறுகிறது.
வலூமு அன்ஃபுஸகும் - உங்களை நீ்ங்களே பழித்துக் கொள்ளுங்கள் என்றால் என்ன பொருள்? நான் அழைத்ததும் என் அழைப்பை ஏற்றதற்காக உங்களையே நீங்கள் பழித்துக் கொள்ளுங்க்கள் என்பதுதான் அர்த்தமாகும்.
என் பேச்சைக் கேட்டதற்காக சிலர் மற்ற சிலரைத் திட்டுங்கள் என்று இந்த ஆய்வாளர் அர்த்தம் வைப்பார் போலும்.
இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நாங்கள் உங்கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை அங்கே உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் அங்கே உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர்.
அல்குர்ஆன் 41 31,32
சொர்க்கத்தில் நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்கு உண்டு - வலகும் மா தஷ்தஹீ அன்ஃபுஸூகும் - என்று அல்லாஹ் சொல்கிறான்.
இதிலும் அன்ஃபுஸகும் என்ற சொல் தான் இடம் பெற்றுள்ளது. இங்கே என்ன அர்த்தம்? நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்கு உண்டு என்று தானே அர்த்தம். சொர்க்கத்தில் அவனவன் ஆசைப்படுவது அவனுக்குக் கிடைக்காது. மற்றவர்கள் ஆசைப்படுவது தான் கிடைக்கும் என்று இந்த ஆய்வாளர் சொல்லப் போகிறாரா?
உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்கள்! (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.
அல்குர்ஆன் 53 32
உங்களை நீங்கள் பரிசுத்தப்படுத்தாதீர்கள் என்றால் என்ன அர்த்தம்.
உன்னை நீயே பரிசுத்தப்படுத்தப்படுத்தாதே என்பது தானே இதன் பொருள்.
உங்களில் சிலர் மற்ற சிலரைப் பரிசுத்தப்படுத்தாதீர்கள் என்று அவர்கள் பட்டியலிட்ட வசனத்திற்கு வைத்த மாதிரி இதற்கும் பொருள் செய்வார்களா?
இப்படி ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
குறிப்பிட்ட 2 54 வது வசனத்தில் பயன்படுத்தப்பட்ட ஃபக்துலூ அன்ஃபுஸகும் – என்ற சொல்லுக்கு உங்களை நீங்களே கொன்று விடுங்கள் என்பதுதான் அதன் நேரடிப் பொருள்.
அதாவது தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்பது தான் நேரடிப் பொருள். உங்களில் சிலர் மற்ற சிலரைக் கொல்லுங்கள் என்பது நேரடிப் பொருள் அல்ல.
ஒரு நபி தம் சமுதாயத்தை தற்கொலை செய்யும்படி உத்தரவிட மாட்டார் என்ற காரணத்தினாலேயே தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்ற முதல் அர்த்தத்தை அறிஞர்கள் செய்யாமல் இரண்டாம் அர்த்தத்தை வைத்து விட்டார்கள் என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள்.
அதாவது தற்கொலை செய்தல் என்பது நேரடி அர்த்தமாக இருக்கும் போது அது கூடாது என்பதால் சிலர் சிலரை என்று இவர்களும் மாற்றுப் பொருள் கொடுக்கின்றனர்.
கொல்லுங்கள் என்பதற்கு நாம் மாற்றுப் பொருள் கொடுக்கிறோம். உங்களை என்பதற்கு உங்களில் ஒருவர் மற்றவரை என்று இந்த ஆய்வாளரும் மாற்றுப் பொருள் கொடுக்கின்றார்.
லிஸானுல் அரப் அகராதி நூலில் கூறுவதைப் பாருங்கள்!
قُتِلَ الْإِنْسانُ مَا أَكْفَرَهُ - قَاتَلَ اللهُ اليهودَ - وَفِي حَدِيثِ الْمَارِّ بَيْنَ يَدَيِ المُصَلِّي:قَاتِلْه فإِنه شَيْطَانٌ أَي دافِعْه عَنْ قِبْلَتِك، وَلَيْسَ كُلُّ قِتال بِمَعْنَى القَتْل وَفِي حَدِيثِ السَّقِيفة: قَتَلَ اللَّهُ سَعْدًا فإِنه صَاحِبُ فِتْنَةٍ وشرٍّ أَي دَفَعَ اللَّهُ شرَّه كأَنه إِشارة إِلى مَا كَانَ مِنْهُ فِي حَدِيثِ الإِفْك
மனிதன் கொல்லப்பட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான். இதன் நேரடிப் பொருள் கொல்லப்பட்டான் என்றாலும் இவ்வசனத்தில் மாற்றுப் பொருளே கொடுக்க வேண்டும். யூதர்களை அல்லாஹ் கொல்வானாக என்ற ஹதீஸுக்கும் மாற்றுப் பொருளே கொடுக்க வேண்டும். தொழும் போது குறுக்கே செல்பவனைக் கொல் அல்லது போர் செய் என்ற ஹதீஸுக்கும் அவனைத் தடு என்ற மாற்றுப் பொருளே கொடுக்க வேண்டும். அனைத்து இடத்திலும் கொலை என்ற அர்த்தம் கொடுக்கக் கூடாது. குழப்பவாதியான சஅதை அல்லாஹ் கொல்லட்டும் என்ற ஹதீஸையும் இப்படித்தான் மாற்றுப் பொருளில் புரிந்து கொள்ள வேண்டும்.
என்ற கருத்தை ஆதாரத்துடன் லிசானுல் அரப் ஆசிரியர் நிறுவுகிறார்.
இப்போது பிரச்சனை என்ன என்றால் நாமும் இவ்வசனத்துக்கு நேரடிப் பொருள் கொள்ளவில்லை. அறிவீனமான ஆய்வாளரும் நேரடிப் பொருள் கொள்ளவில்லை.
உங்களை என்பதற்கு உங்களில் சிலர் சிலரை என்று மேற்படியார் மாற்றுப் பொருள் கொடுக்கிறார்.
கொல்லுங்கள் என்பதற்கு நாம் மாற்றுப் பொருள் கொடுக்கிறோம்.
நாம் சொல்வது சுயகருத்து என்றும் அவர் சொல்வது சுத்தக் கருத்து என்றும் கூறும் அளவுக்கு கணம் இவருக்கு அதிகமாக உள்ளது.
இப்போது எது சரியானது என்பதைப் பார்ப்போம்.
கொலை செய்து விடுங்கள் என்ற அர்த்தம் தவறா?
உங்களில் சிலர் மற்ற சிலரைக் கொன்று விடுங்கள் என்ற இரண்டாம் அர்த்தத்தை அறிஞர்கள் வைத்தார்கள் அல்லவா? இந்தப் பொருள் ஏன் தவறு? இதை ஏன் நாம் செய்யவில்லை? நாம் இந்த விளக்கத்தை அளிக்காததற்கு தக்க காரணம் உண்டு.
இந்த அர்த்தத்தின்படி காளைச் சிற்பத்தை வணங்கியவர்களுக்கு தண்டனையாகத்தான் கொல்லுங்கள்  என்று கட்டளையிடப்பட்டது என்று மேற்படியார் கூறுகிறார்.
அதாவது காளைச் சிற்பத்தை கடவுளாக வணங்கிய மூஸா நபியின் சமுதாயம் அல்லாஹ்வின் இந்த உத்தரவிற்கேற்ப கொல்லப்பட்டார்கள் என்று பொருள் கொள்கிறார்.
ஆனால் திருக்குர்ஆனில் இதற்கு அருகாமையில் உள்ள வசனங்களிலேயே காளைச்சிற்பத்தை வணங்கிய மக்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு மன்னிக்கப்பட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இதோ அந்த வசனம்
وَإِذْ وَاعَدْنَا مُوسَى أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ (51) ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ  [البقرة : 51 ، 52]
மூஸாவுக்கு நாற்பது இரவுகளை நாம் வாக்களித்ததையும் எண்ணிப் பாருங்கள்! அவருக்குப் பின் நீங்கள் அநீதி இழைத்துக் காளைக் கன்றை (கடவுளாக) கற்பனை செய்தீர்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இதன் பின்னரும் உங்களை மன்னித்தோம்.
அல்குர்ஆன் 2 51,52
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இதன் பின்னரும் உங்களை மன்னித்தோம் என்ற அல்லாஹ்வின் கூற்று நன்றாகக் கவனிக்க வேண்டியதாகும்.
காளைக் கன்றைக் கடவுளாகக் கற்பனை செய்தீர்கள் என்று கூறி விட்டு இதன் பின்னரும் உங்களை மன்னித்தோம், ஏன் என்றால் நீங்கள் நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காக என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இதன் பொருள் என்ன?
காளைக் கன்றை வணங்கியதற்காக அல்லாஹ் அவர்களுக்குத் தண்டனை ஏதும் அளிக்கவில்லை. மாறாக அம்மக்களை மன்னித்து விட்டான் என்ற கருத்து சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தெளிவாக தெரிய வருகிறதல்லவா?
வெறுமனே மன்னித்தோம் என்று சொல்லியிருந்தால் கூட கொல்லப்படுதல் என்ற தண்டனை தான் அம்மக்களுக்கு இறைவன் வழங்கிய மன்னிப்பு என இவர்கள் பிதற்றியிருப்பதில் நியாயம் இருக்கும்.
ஆனால் அவ்வாறு பிதற்ற வாய்ப்பு தரக்கூடாது என்பதற்காகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக என்பதையும் அத்துடன் அல்லாஹ் இணைத்துக் கூறுகிறான்.
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இதன் பின்னரும் உங்களை மன்னித்தோம்.
இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டுமானால் உயிருடன் வாழ்ந்தாக வேண்டும். கொல்லப்பட்டதற்குப் பிறகு எப்படி இறைவனுக்கு நன்றி செலுத்த இயலும்?
எனவே இறைவனின் இவ்வசனத்தின் படி காளைச்சிற்பத்தைக் கடவுளாக வணங்கியவர்கள் கொல்லப்படவில்லை என்பது உறுதியாகிறது.
தற்கொலை செய்யுமாறும் உத்தரவிடப்படவில்லை;
சிலர் சிலரை கொல்லும்படியும் உத்தரவிடப்படவில்லை.
மாறாக மன்னிப்பு வழங்கப்பட்டது. காரணம் அவர்கள் பூமியில் வாழ்ந்து திருந்தி இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காகவே.
இவ்விளக்கத்தை நாம் நமது சுயவிளக்கமாகக் கூறவில்லை. மேற்கண்ட இறைவசனத்திலிருந்து தெளிவாகத் தெரிய வரும் கருத்தினையே எடுத்துக் கூறுகிறோம்.
அல்லாஹ் இவர்களை மன்னித்து விட்டதாகக் கூறி இருக்கும் போது சில அறிஞர்களோ இல்லையில்லை அல்லாஹ் கொலை செய்து தண்டித்து விட்டான் என்கிறார்கள்.
அம்மக்கள் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக அவர்களைப் பூமியில் உயிருடன் விட்டு விட்டதாக இறைவன் கூறுகிறான். இவர்களோ இல்லையில்லை அவர்கள் ஒருவரையொருவர் குத்திக் கொலை செய்து அழிந்து விட்டார்கள். இறைவனுக்கு நன்றி செலுத்த வாய்ப்பில்லாமல் போய் விட்டது என்கிறார்கள்.
இதுதான்  அழகிய, அற்புத விளக்கமா?
யார் செய்த பொருளை திருக்குர்ஆன் வசனம் நிராகரிக்கின்றது?
எது சுயவிளக்கம்? அறிவுள்ளோர் தீர்ப்பளிக்கட்டும்.
ஸாமிரி கொல்லப்படாதது ஏன்?
ஒருவரையொருவர் கொல்லுங்கள் என்று அறிஞர்கள் வழங்கிய விளக்கத்தை நாம் அளிக்காததின் பிரதான காரணம் மக்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான் என்று அல்லாஹ் கூறியது தான். இதனை முன்னர் விளக்கினோம்.
காளைச் சிற்பத்தை வணங்கிய மூஸாவின் சமுதாய மக்களை அல்லாஹ் கொல்லுமாறு உத்தரவிட்டான் என்றால் இதற்கு மூலகாரணமாகவும், உறுதுணையாகவும் இருந்த ஸாமிரி ஏன் கொல்லப்படவில்லை?
காளைச்சிற்பத்தை வணங்கிய, வணங்குமாறு கூறிய ஸாமிரி கொல்லப்படவில்லை என்று தான் குர்ஆன் கூறுகிறது.
இதோ மூஸா (அலை) அவர்களின் வாயிலாக அல்லாஹ்வின் வார்த்தைகள்.
قَالَ فَمَا خَطْبُكَ يَا سَامِرِيُّ (95) قَالَ بَصُرْتُ بِمَا لَمْ يَبْصُرُوا بِهِ فَقَبَضْتُ قَبْضَةً مِنْ أَثَرِ الرَّسُولِ فَنَبَذْتُهَا وَكَذَلِكَ سَوَّلَتْ لِي نَفْسِي (96) قَالَ فَاذْهَبْ فَإِنَّ لَكَ فِي الْحَيَاةِ أَنْ تَقُولَ لَا مِسَاسَ وَإِنَّ لَكَ مَوْعِدًا لَنْ تُخْلَفَهُ وَانْظُرْ إِلَى إِلَهِكَ الَّذِي ظَلْتَ عَلَيْهِ عَاكِفًا لَنُحَرِّقَنَّهُ ثُمَّ لَنَنْسِفَنَّهُ فِي الْيَمِّ نَسْفًا [طه : 95 - 97]
"ஸாமிரியே! உனது விஷயமென்ன?'' என்று (மூஸா) கேட்டார். "அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது'' என்றான்.  "நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் 'தீண்டாதே' என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம்'' என்று (மூஸா) கூறினார்.
அல்குர்ஆன் 20 95,96,97
மூஸாவின் சமுதாய மக்கள் வணங்கிய காளைச்சிற்பத்தை உருவாக்கியவன்; அதை வணங்கியவன்; பிற மக்களை வணங்குமாறு தூண்டியவன்.
இவன் கொல்லப்பட பல காரணங்கள் இருந்தும் ஸாமிரியை நோக்கி மூஸா (அலை) அவர்கள் கூறிய வார்த்தைகள்  "நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் 'தீண்டாதே' என நீ கூறும் நிலையே இருக்கும்.
இது தான் ஸாமிரியை நோக்கி மூஸா (அலை) அவர்கள் கூறிய வார்த்தையாகும்.
நீ சென்று விடு
உனது வாழ்க்கையில் இத்தகைய நிலை தான் இருக்கும் எனும் இரு சொல்லமைப்புகளும் ஸாமிரி பூமியில் வாழ்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டான் என்பதைத் தான் விளக்குகின்றனவே தவிர அவன் கொல்லப்பட்டான் என்கிற கருத்தைத் தரவேயில்லை.
காளைக் கன்றை வணங்கிய அனைவரும் கொல்லப்பட்டார்கள் என்றால் அதற்கு அதிகத் தகுதி படைத்த ஸாமிரி ஏன் கொல்லப்படவில்லை?
அவன் மட்டும் எப்படி விட்டு வைக்கப்பட்டான்?
காளைச் சிற்பத்தை மக்கள் வணங்கக் காரணமாக இருந்த ஸாமிரி கொல்லப்படவில்லை என்பதே இக்காரணத்திற்காக அம்மக்களும் கொல்லப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றது.
அருட்கொடைகளின் அட்டவணை
இன்னொரு துணைச் சான்றையும் தருகிறோம்.
உங்களை நீங்களே கொன்று விடுங்கள் எனும் சொல் இடம்பெற்றுள்ளது பகரா அத்தியாயத்தின் 54 வது வசனமாகும்.
இதற்கு முந்தைய, பிந்தைய சில வசனங்களைக் கவனிக்கும் போது இறைவன் இஸ்ரவேல் சமுதாயத்திற்கு அளித்த அருட்கொடைகளை எண்ணிப் பார்த்து தனக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறான்.
தன்னுடைய ஒவ்வொரு அருட்கொடையாக எடுத்துக் கூறி இதை நினைவுகூர்ந்து எனக்கு நன்றி செலுத்து என இறைவன் வலியுறுத்துகிறான்.
وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَظِيمٌ (49) وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ (50) وَإِذْ وَاعَدْنَا مُوسَى أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ (51) ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (52) وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ (53) وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنْفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنْفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِنْدَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ (54) وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَنْ نُؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنْظُرُونَ (55) ثُمَّ بَعَثْنَاكُمْ مِنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (56) وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ  [البقرة : 49 - 57]
உதாரணமாக 49 வது வசனத்தில் பிர்அவ்னிடமிருந்து இஸ்ரவேல் சமுதாயம் காப்பாற்றப்பட்டதை எடுத்துக் கூறி நினைவு கூறச் சொல்கிறான்.
50 வது வசனத்தில் கடலைப் பிளந்து பிர்அவ்னையும், அவனது கூட்டத்தாரையும் மூழ்கடிக்கச் செய்து மூஸா நபியையும், நம்பிக்கை கொண்டவர்களையும் மட்டும் காப்பாற்றியதை நினைவு கூர்கிறான்.
இந்த வரிசையில் தான் 51, 52 வது வசனமாக நீங்கள் காளைச்சிற்பத்தை வணங்கி அநியாயம் செய்தீர்கள்; நீங்கள் நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காக அதன் பிறகும் உங்களை மன்னித்தோம் என்கிறான்.
53 வது வசனத்தில் நீங்கள் நேர்வழி பெறுவதற்காக வேதம் வழங்கப்பட்டது என்கிறான். வேதம் வழங்கப்படுவதும் இறைவனின் அருட்கொடையே.
அடுத்து 54வது வசனத்தில் தான் நாம் சர்ச்சை செய்யும் வாசகம் இடம்பெற்றுள்ள வசனம் வருகிறது.
"என் சமுதாயமே! காளைக் கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்ததன் மூலம் உங்களுக்கே தீங்கிழைத்து விட்டீர்கள். எனவே உங்களைப் படைத்தவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்! உங்களையே கொன்று விடுங்கள்! இதுவே உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு நல்லது'' என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக! அவன் உங்களை மன்னித்தான். அவனே மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 2 54
இதிலிருந்து விளங்குவது என்ன?
இறைவன் தனது அருட்கொடைகளை எண்ணிப்பார்க்கச் சொன்ன இடங்களின் தொடர்ச்சியில் இவ்வசனம் இடம்பெற்றுள்ளது.
இதை இறைவன் தன்னுடைய அருட்கொடைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டு அதை நினைவு கூர்ந்து தனக்கு நன்றி செலுத்துமாறு வலியுறுத்துகிறான் என்பது தான் இதன் பொருளாக இருக்க முடியும்.
ஒரு குற்றத்தைச் செய்து அதன் காரணமாகக் கொல்லப்படுதல்
ஒரு குற்றத்தைச் செய்து அதை அல்லாஹ் மன்னித்து நன்றி செலுத்த வாய்ப்பளித்தல்
இரண்டில் எது மக்களால் எண்ணிப் பார்க்கத்தக்க, இறைவனால் நினைவு கூரத்தக்க அருட்கொடையாக இருக்க முடியும்?
நீங்கள் பாவம் செய்து அதனால் உங்கள் ஒவ்வொருவரையும் குத்தி கொலை செய்து சாகச் சொன்னேனே அதை எண்ணிப் பார்த்து எனக்கு நன்றி செலுத்து என்று சொல்வது பொருத்தமா? அல்லது
நீங்கள் எனக்கு இணை கற்பித்த பிறகும் உங்களை மன்னித்து திருந்தி வாழ்ந்து எனக்கு நன்றி செலுத்த வாய்ப்பளித்தேனே அதை எண்ணிப் பாருங்கள் எனச் சொல்வது பொருத்தமா?
எனவே அருட்கொடைகளின் பட்டியலில் அல்லாஹ் இதைக் கூறியமையால் இரண்டாவது அர்த்தமே பொருத்தமாக உள்ளது.
இது நமது கருத்தை வலுப்படுத்தும் துணைச் சான்று தான்.
நாம் அளித்த விளக்கத்திற்கு பிரதான காரணம் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இதன் பின்னரும் உங்களை மன்னித்தோம் என்ற அல்குர்ஆன் 2 52 வது வசனம் தான் என்பதை மேலே விளக்கி விட்டோம்.
வழக்கம் போல தலையைவிட்டு விட்டு தும்பைப் பிடிக்கும் கதையாக பிரதான காரணத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு அன்ஃபுஸகும் என்பதை விலா எழும்பு நொறுங்கும் அளவு (தட்டச்சு செய்து)  விலாவரியாக விளக்கித்தள்ளியதை போன்று செய்து விடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இருபிரிவினர் இருந்தார்களா?
இது போக ஒருவரையொருவர் கொலை செய்து கொள்ளுங்கள் என்ற இமாம்கள் அளித்த விளக்கத்தில் இன்னும் சில குழப்பங்கள் உள்ளது.
குற்றமற்றவர்கள் குற்றமிழைத்தவர்களைக் கொல்லுங்கள் என்று இதற்கு வியாக்கியானம் கூறப்படுகிறது.
அப்படி எனில் மூஸாவின் சமுதாயம் காளைச் சிற்பத்தை வணங்கிய சாரார் - அவ்வாறு வணங்காதோர் என இருபிரிவினர்களாகப் பிரிந்து கிடந்தனர் என்று பொருளாகிறது.
ஆனால் ஹாரூன் (அலை) அவர்களின் வார்த்தையை நன்கு கவனிக்கும் போது அவர்கள் அனைவருமே காளைக்கன்றை வணங்கிய ஒரு பிரிவினராக இருந்ததாகத்தான் தெரிகின்றது.
قَالَ يَا هَارُونُ مَا مَنَعَكَ إِذْ رَأَيْتَهُمْ ضَلُّوا (92) أَلَّا تَتَّبِعَنِ أَفَعَصَيْتَ أَمْرِي (93) قَالَ يَبْنَؤُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِي وَلَا بِرَأْسِي إِنِّي خَشِيتُ أَنْ تَقُولَ فَرَّقْتَ بَيْنَ بَنِي إِسْرَائِيلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِي [طه : 92 - 94
 "ஹாரூனே! அவர்கள் வழிகெட்டதை நீர் பார்த்தபோது என்னை நீர் பின்பற்றாதிருக்க உமக்கு என்ன தடை? எனது கட்டளையை மீறி விட்டீரே!'' என்று (மூஸா) கேட்டார். "என் தாயின் மகனே! எனது தாடியையும், எனது தலையையும் பிடிக்காதீர்! எனது வார்த்தைக்காக காத்திராமல் இஸ்ராயீலின் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி விட்டீர் என்று கூறுவீரோ என அஞ்சினேன்'' என்று (ஹாரூன்) கூறினார்.
அல்குர்ஆன் 20 92,93,94
தம் சமுதாயம் காளைக் கன்றை வணங்கி சீர்கெட்டு விட்டதைக் காணும் மூஸா (அலை) அவர்கள் ஹாரூன் (அலை) அவர்களிடம் என் கட்டளையை மீறி விட்டீரே நீர் எதுவும் செய்திருக்கக் கூடாதா? என்று கேட்கிறார்கள். அதற்கு ஹாரூன் (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களை நான் பிரித்து விட்டேன் என்று நீர் சொல்லிவிடக் கூடாதே? அதற்காகத் தான் நான் எதுவும் செய்திடவில்லை என்கிறார்கள்.
இஸ்ரவேலர்களை நான் பிரித்து விட்டேன் என்று நீர் சொல்லிவிடக்கூடாது எனும் வார்த்தை அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டுத் தான் காளைச்சிற்பத்தை வணங்கினார்கள் என்பது உறுதியாகிறது.
இஸ்ரவேலர்கள் அனைவருமே காளைச்சிற்பத்தை வணங்குவதில் ஒன்றுபட்டு விட்டார்கள். அவர்களில் இரு பிரிவினர் இருக்கவில்லை. காளைச் சிற்பத்தை வணங்கியவர்கள் எனும் ஒரே பிரிவினராகத் தான் இருந்தார்கள் என்பதை இது தெளிவுபடுத்துகிறது. நான் இதைத் தீவிரமாகத்  தடுத்தால் சமுதாயம் இரு பிரிவாக ஆகிவிடும் என்ற அச்சத்தால் தீவிரமாகத் தடுக்கவில்லை என்று ஹாரூன் (அலை) கூறுகிறார்.
இதுவும் இவர்களின் ஆய்வுடைய இலட்சணத்தைப் பறை சாற்றுகிறது.
மூஸா நபியின் பிரார்த்தனை
இதே சம்பவம் அஃராஃப் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள விதமும் இதை உறுதிப்படுத்துகிறது.
கவலையும், கோபமும் கொண்டு மூஸா தமது சமுதாயத்திடம் திரும்பியபோது "எனக்குப் பின்னர் நீங்கள் செய்தது மிகவும் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளைக்கு (தண்டனைக்கு) அவசரப்படுகிறீர்களா?'' என்றார். பலகைகளைப் போட்டார். தமது சகோதரரின் தலையைப் பிடித்து தம்மை நோக்கி இழுத்தார். (அதற்கு அவரது சகோதரர்) "என் தாயின் மகனே! இந்தச் சமுதாயத்தினர் என்னைப் பலவீனனாகக் கருதி விட்டனர். என்னைக் கொல்லவும் முயன்றனர். எனவே எதிரிகள் என்னைப் பார்த்துச் சிரிக்கும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்! அநீதி இழைத்த சமுதாயத்தில் என்னையும் ஆக்கி விடாதீர்!'' என்றார்.  "என் இறைவா! என்னையும், என் சகோதரரையும் மன்னிப்பாயாக! எங்களை உனது அருளில் நுழைப்பாயாக! நீ கருணையாளர்களில் மிகவும் கருணையாளன்'' என்று (மூஸா) கூறினார்.
அல்குர்ஆன் 7 150,151
மூஸா (அலை) அவர்கள் திரும்பி வந்து ஹாரூன் (அலை) அவர்களை தம் சமுதாய நிலை குறித்து கடிந்து கொண்ட பிறகு ஒரு பிரார்த்தனை செய்கிறார்.
என்னையும் என் சகோதரர் (ஹாரூனையும்) மன்னிப்பாயாக என்பதுதான் அந்தப் பிரார்த்தனை.
தம் சமுதாயத்தில் காளைச் சிற்பத்தை வணங்கி இறைவனுக்கு இணைகற்பிக்காத நன்மக்கள் இருந்திருப்பார்களேயானால் அவர்களுக்கும் சேர்த்தல்லவா பிரார்த்தனை செய்திருப்பார்கள்.
தம் சமுதாயத்தில் யாருக்காகவும் பாவமன்னிப்பு கேட்காமல் தனக்காகவும், தன் சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களுக்காகவும் மட்டும் இறைவனிடம் மூஸா நபி பாவமன்னிப்பு கேட்டதிலிருந்து சமுதாயம் முழுமையும் வழிதவறி காளைச்சிற்பத்தை வணங்குவதில் விழுந்து விட்டது என்ற கருத்தை உறுதிப்படுத்துகிறது.
யார் சொன்னது?
மூஸா நபியின் சமுதாயம் முழுமையும் காளைச்சிற்பத்தை வணங்குவதில் விழுந்து விட்டார்கள். ஏனெனில் இது குறித்து பேசும் குர்ஆன் வசனம் பொதுப்படையாக மூஸாவின் சமுதாயம் என்றே விளிக்கின்றது.
எங்கேயும் விதிவிலக்கான சிலர் உண்டு என்ற கருத்து கூறப்படவில்லை.
இதுவரை நாம் எடுத்து வைத்த வாதம் அனைத்தும் இக்கருத்தை உறுதிபட தெரிவிக்கின்றது.
இத்தனை இருந்தும் மேற்படியார் இந்த விளக்கம் இஸ்லாமிய அறிஞர்களில் யாராலும் சொல்லப்படவில்லை; இதற்கு முன்பு இதே விளக்கத்தை யாரும் சொன்னார்களா? என்கிற மயிர்க்கூச்செறியச் செய்யும் ஒரு வினாவை எழுப்புகிறார்.
அனைவரும் காளைச் சிற்பத்தை வணங்கியதாக இப்னு இஸ்ஹாக் கூறியதாக இமாம் பகவீ அவர்கள் தமது விரிவுரையில் குறிப்பிடுகிறார்.
قال ابن إسحاق: اختارهم ليتوبوا إليه مما صنعوا ويسألوا التوبة على من تركوا وراءهم من قومهم، فهذا يدل على أن كلهم عبدوا العجل.
தஃப்ஸீருல் பகவீ பாகம் 3 பக்கம் 286
ஹாரூனைத் தவிர மற்ற அனைவரும் காளைச்சிற்பத்தை வணங்கினார்கள்  என்று ஹஸன் பசரி கூறுகிறார்.
ராஸி தனது விரிவுரை நூலான மஃபாதீஹூல் கைப் பாகம் 15 பக்கம் 368 ல் குறிப்பிடுகிறார்.
قال الحسن : كلهم عبدوا العجل غير هارون.
அனைவருமே காளச்சிற்பத்தை வணங்கினார்கள் என்றால் வணங்காதவர்கள் வணங்கியவர்களைக் கொன்றார்கள் என்ற விளக்கம் அடிபட்டு போகின்றது.
சிலர் சிலரைக் கொல்லவில்லை என்றால் தற்கொலை செய்தார்கள் என்ற கருத்தைத் தான் இப்னு இஸ்ஹாக் ஹஸன் பசரி ஆகியோர் கொள்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
معجم وتفسير لغوى لكلمات القرآن (5/ 95)
(فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ) " 54/البقرة " أي ليقتل بعضكم بعضا. وقيل أمر كل منهم أن يقتل نفسه.
சிலர் சிலரைக் கொல்லுங்கள் என்பது இதன் பொருளாகும். ஒவ்வொருவரும் தன்னைக் கொல்ல வேண்டும் என்பதுதான் பொருள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
التحرير والتنوير (1/ 503)
فَهُوَ يَدُلُّ عَلَى أَنَّهُ كَلَّفَهُمْ بِقَتْلِ أَنْفُسِهِمْ قَتْلًا حَقِيقَةً إِمَّا بِأَنْ يَقْتُلَ كُلٌّ مَنْ عَبَدَ الْعِجْلَ نَفْسَهُ فَيَكُونُ الْمُرَادُ بِالْأَنْفُسِ الْأَرْوَاحَ الَّتِي فِي الْأَجْسَامِ فَالْفَاعِلُ وَالْمَفْعُولُ وَاحِدٌ عَلَى هَذَا وَإِنَّمَا اخْتَلَفَا بِالِاعْتِبَارِ كَقَوْلِهِ ظَلَمْتُمْ أَنْفُسَكُمْ
உண்மையாகவே அவர்கள் தம்மைத் தாமே கொன்று விட வேண்டும் என்பதுதான் அல்லாஹ் இட்ட கட்டளை. காளைச்சிற்பத்தை வணங்கியவர்கள் தமது உடலில் உள்ள உயிர்களை எடுத்து விட வேண்டும் என்பதுதான் பொருள். எனவே கொல்பவரும் கொல்லப்பட்டவரும் ஒருவரே.
تفسير أبي السعود = إرشاد العقل السليم إلى مزايا الكتاب الكريم (1/ 102)
{فاقتلوا أَنفُسَكُمْ} تماماً لتوبتكم بالبَخْع أو بقطع الشهوات وقيل أُمروا أن يقتُلَ بعضُهم بعضا
தம்மையே அழித்துக் கொள்வதின் மூலம் அல்லது மனோ இச்சையைக் கொல்வதன் மூலம் உங்களையே கொல்லுங்கள் என்பது தான் இதன் கருத்து. சிலர் சிலரைக் கொல்லுங்கள் என்றும் இதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.
தற்கொலை என்று யாரும் பொருள் கொள்ளவில்லை என்று சவூதியின் மூத்த ஆலிம் உஸைமீன் அவர்கள் எழுதியதை அப்படியே சுட்டு பதிவிட்டதால் இந்த விபரங்கள் கண்களில் படவில்லை போலும்.
அறிஞர்கள் கூறியதை அப்படியே நம்பி எடுத்தெழுவதற்கு பேர் தான் ஆய்வா? ஆய்வு செய்திருந்தால் இப்படி எழுதி இருக்க முடியாது.
யார்? எவரைக் கொல்வது?
அவர்களில் அனைவரும் காளைச்சிற்பத்தை வணங்கியவர்கள் தான் எனும் போது காளைச் சிற்பத்தை வணங்கியோரைக் கொல்வது தான் அவர்களுக்கான அல்லாஹ்வின் தண்டனை என்றால் யார் யாரைக் கொல்வது?
மூஸா (அலை) ஹாரூன் (அலை) ஆகிய இருவரைத் தவிர ஒட்டு மொத்த சமுதாயமும் துடைத்து எடுக்கப்பட்டிருக்குமே?
இஸ்ரவேல் சமுதாயமே இவ்விருவர் தவிர ஒருவர் விடாமல் அழிக்கப்பட்டிருக்குமே?
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இஸ்ரவேலர்கள் இருந்துள்ளதாக குர்ஆன், ஹதீஸ் கூறுகிறதே? அவர்கள் அனைவருமே மூஸா, ஹாரூன் ஆகிய இருவர் மூலம் வந்த சந்ததிகள் மட்டும் தாமா?
இப்படி பல குழப்ப அடுக்குகள் கொண்ட ஓர் விளக்கமாகத் தான் இந்த விளக்கம் அமைந்துள்ளது.
நாம் கூறும் விளக்கத்தை விட எந்த வகையிலும் அந்த அறிஞர்கள் அளித்த விளக்கம் மேம்பட்டதாக இல்லை. எனவே தான் நாம் இந்த விளக்கத்தை அளிக்கவில்லை.