பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, May 30, 2018

காலையிலும்_மாலையிலும்_ஸலவாத்_கூற_வேண்டுமா

#மார்க்க_சட்டங்கள்

#காலையிலும்_மாலையிலும்_ஸலவாத்_கூற_வேண்டுமா?

#இல்லை.

காலையிலும் மாலையிலும் நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொன்னால் நபியவர்களின்பரிந்துரை கிடைக்கும் என்ற கருத்தில் எந்தச் செய்தியும் இல்லை.

ஒவ்வொரு பாங்கிற்குப் பிறகும் நபியவர்களின் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும். இதற்குப்பிறகு நபியவர்கள் கற்றுக் கொடுத்த பிரார்த்தனையைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால்நபியவர்களின் பரிந்துரை கிடைக்கும் என்று பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்தெரிவிக்கின்றது.

577حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ حَيْوَةَ وَسَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ وَغَيْرِهِمَا عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا سَمِعْتُمْ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِي الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ رواه مسلم

நபி( (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றேநீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது “ஸலவாத்’ சொல்லுங்கள். ஏனெனில், என் மீது யார்ஒருமுறை “ஸலவாத்’ சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ்அருள் புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் “வஸீலா’வைக் கேளுங்கள். “வஸீலா’என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காகஅந்தப் பதவியை (அல்லாஹ்விடம்)  கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம்கிடைக்கும்.

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் முஸ்லிம் (628)

Saturday, May 26, 2018

தூய்மை_இல்லாமல்_குர்ஆன்_ஓதலாமா?

#மார்க்க_சட்டங்கள்

#தூய்மை_இல்லாமல்_குர்ஆன்_ஓதலாமா?

#ஓதலாம்

198 حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ قَالَ دَخَلْتُ عَلَى عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا وَرَجُلَانِ رَجُلٌ مِنَّا وَرَجُلٌ مِنْ بَنِي أَسَدٍ أَحْسَبُ فَبَعَثَهُمَا عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَجْهًا وَقَالَ إِنَّكُمَا عِلْجَانِ فَعَالِجَا عَنْ دِينِكُمَا ثُمَّ قَامَ فَدَخَلَ الْمَخْرَجَ ثُمَّ خَرَجَ فَدَعَا بِمَاءٍ فَأَخَذَ مِنْهُ حَفْنَةً فَتَمَسَّحَ بِهَا ثُمَّ جَعَلَ يَقْرَأُ الْقُرْآنَ فَأَنْكَرُوا ذَلِكَ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَخْرُجُ مِنْ الْخَلَاءِ فَيُقْرِئُنَا الْقُرْآنَ وَيَأْكُلُ مَعَنَا اللَّحْمَ وَلَمْ يَكُنْ يَحْجُبُهُ أَوْ قَالَ يَحْجِزُهُ عَنْ الْقُرْآنِ شَيْءٌ لَيْسَ الْجَنَابَةَ رواه أبو داود

நானும் இன்னும் இருவரும் அலீ (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். (அவ்விருவரில்) ஒருவர் எங்களைச் சார்ந்தவர். இன்னொருவர் பனூ அசத் கிளையைச் சார்ந்தவர் என்று கருதுகிறேன். அவ்விருவரையும் அலீ (ரலி) அவர்கள் ஒரு (முக்கிய) பணி நிமித்தமாக அனுப்பினார்கள். அப்போது (அவ்விருவரையும் நோக்கி) நீங்கள் இருவரும் செயலாற்றுவதில் திறம் படைத்தவர்கள். உங்கள் மார்க்கப் பணியை திறம்படச் செய்யுங்கள் என்று அறிவுரை பகர்ந்தார்கள். பிறகு கழிப்பிடம் சென்று வெளியே வந்து தண்ணீர் கொண்டு வரச் செய்து அதில் ஒரு கையளவு நீரள்ளி அதை (கைகளில் அல்லது வேறு உறுப்பில்) தடவிக் கொண்டார்கள். பிறகு குர்ஆன் ஓதத் துவங்கினார்கள். இதை அவர்கள் (தோழர்கள்) ஆட்சேப்பித்தார்கள். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திலிருந்து வெளிவந்து எங்களுக்கு குர்ஆனைக் கற்றுத் தருவார்கள். எங்களுடன் இறைச்சியைச் சாப்பிடுபவர்கள். கடமையான குளிப்பைத் தவிர வேறு எதுவும் குர்ஆன் ஓதுவதை விட்டும் அவர்களைத் தடுக்காது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் சலமா

நூல் : அபூதாவுத் (198)

இந்தச் செய்தியை அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் சலமா நல்லவர் என்றாலும் அவருடைய மனன சக்தியில் கோளறு உள்ளது. இவருடைய மோசமான மனனத் தன்மையின் காரணத்தால் பல அறிஞர்கள் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

இவரிடத்தில் பலவீனம் இருப்பதாக இமாம் புகாரி கூறியுள்ளார். இவர் சரியான செய்திகளையும் பிழையான செய்திகளையும் அறிவிப்பவர் என இமாம் அபூஹாதிம் கூறியுள்ளார். இவர் தவறிழைப்பவர் என இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். இவர் அறிவிக்கும் செய்திகள் சரியானவை அல்ல என இமாம் ஹாகிம் கூறியுள்ளார். இவரது மனன சக்தியில் பாதிப்பு ஏற்பட்டு மாறிவிட்டது என இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்.

ஹதீஸ் கலை அறிஞர்கள் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என இமாம் ஷாஃபி கூறியுள்ளார். இவருக்கு வயது முதிர்ந்தவுடன் மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் மேற்கண்ட செய்தியை இவர் பாதிப்பு ஏற்பட்ட காலத்திலே அறிவித்ததாகவும் ஷுஃபா கூறியதாக இமாம் பைஹகீ தெரிவிக்கின்றார். அப்துல்லாஹ் பின் சலமா பலவீனமானவர் என்பதால் இவர் இடம்பெறும் மேற்கண்ட ஹதீஸை இமாம் அஹ்மது பின் ஹம்பள் பலவீனமானது என்று கூறியுள்ளார்.

எனவே இந்த பலவீனமான செய்தியை வைத்துக் கொண்டு குளிப்புக் கடமையானவர்கள் குர்ஆனை ஓதக் கூடாது எனக் கூற முடியாது.

தூங்கும்_முன்_67வது_சூரா_ஓதலாமா

#மார்க்க_சட்டங்கள்

#தூங்கும்_முன்_67வது_சூரா_ஓதலாமா?

#நபியவர்கள்_ஓதியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இரவில் தபாரகல்லதீ என்று துவங்கும் அல்முல்க் 67 ஆவது அத்தியாயத்தை ஓதாமல் உறங்கமாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி ஹாகிம் அஸ்ஸுனனுல் குப்ரா மற்றும் ஷுஃபுல் ஈமான் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது

السنن الكبرى للنسائي – كتاب عمل اليوم والليلة

ذكر ما يستحب للإنسان أن يقرأ كل ليلة قبل أن ينام – حديث : ‏10140‏

أخبرنا أبو داود ، قال : حدثنا الحسن ، قال : حدثنا زهير ، قال : سألت أبا الزبير : أسمعت جابرا يذكر أن نبي الله صلى الله عليه وسلم كان لا ينام حتى يقرأ الم تنزيل وتبارك ؟ ” . قال : ليس جابر حدثنيه ، ولكن حدثني صفوان أو أبو صفوان

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபி (ஸல்) அவர்கள் அலிஃப் லாம் மீம் தன்ஸீல் (என்று துவங்கும் 32 ஆவது) அத்தியாயத்தையும் தபாரகல்லதீ (என்று துவங்கும் 67 ஆவது) அத்தியாயத்தையும் ஓதாமல் உறங்கமாட்டார்கள்.

நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா

இந்த செய்தியில் நபித்தோழர் ஜாபிர் (ரலி) அவர்கள் உட்பட ஸஃப்வான் அபுஸ்ஸுபைர் ஸுஹைர் ஹசன் மற்றும் அபூதாவுத் ஆக மொத்தம் ஆறு நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதாகும்.

எனவே இரவில் உறங்கச் செல்லும் முன் இவ்விரு அத்தியாயங்களை ஓதிக்கொள்வதற்கு நபிமொழியில் ஆதாரம் உள்ளது.

சலவாத்_கூறிவிட்டுத்_தான்_துஆ_கேட்கவேண்டுமா

#மார்க்க_சட்டங்கள்

#சலவாத்_கூறிவிட்டுத்_தான்_துஆ_கேட்கவேண்டுமா?

#இல்லை. #இது_அத்தஹியாத்திற்கு_உரியது.

பொதுவாக எப்போது பிரார்த்தனை செய்தாலும் முதலில் இறைவனைப் போற்றிப் புகழ வேண்டும். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலாவாத்துக் கூற வேண்டும். இதன் பிறகே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சிலர் கூறிவருகிறார்கள்.

இதற்கு திர்மிதி அபூதாவூத் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கூறுகின்றனர். ஆனால் இவர்கள் கூறுவது போல் அனைத்து பிராத்தனைகளிலும் இந்த ஒழுங்கு முறை பேணப்பட வேண்டும் என அந்த ஹதீஸ் கூறவில்லை.

மாறாக அந்த ஹதீஸின் வாசகங்களைக் கவனித்தால் தொழுகையில் அத்தஹிய்யாத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைக்கு மட்டுமே இந்த ஒழுங்கு முறையைக் கடைபிடிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதை அறியலாம்.

1266حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ حَدَّثَنَا حَيْوَةُ أَخْبَرَنِي أَبُو هَانِئٍ حُمَيْدُ بْنُ هَانِئٍ أَنَّ أَبَا عَلِيٍّ عَمْرَو بْنَ مَالِكٍ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو فِي صَلَاتِهِ لَمْ يُمَجِّدْ اللَّهَ تَعَالَى وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَجِلَ هَذَا ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ أَوْ لِغَيْرِهِ إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَمْجِيدِ رَبِّهِ جَلَّ وَعَزَّ وَالثَّنَاءِ عَلَيْهِ ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يَدْعُو بَعْدُ بِمَا شَاءَ رواه أبو داود (3399 ترمذي)

ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவரிடம் அல்லது மற்றவரிடம் உங்களில் ஒருவர் தொழு(கையில் பிரார்த்தித்)தால் முதலில் மாண்பும் வலிமையும் மிக்க தனது இறைவனை அவர் புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும். பிறகு (உங்கள்) நபியின் மீது ஸலவாத்துச் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டலாம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஃபளாலா பின் உபைத் (ரலி)

நூல் : அபூதாவுத் (1266) திர்மிதீ (3399)

தொழுகையின் இறுதி அமர்வில் நாம் ஓத வேண்டியவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள். முதலில் அத்தஹிய்யாத் ஓதி இறைவனைப் புகழ வேண்டும். இதன் பிறகு ஸலவாத்துச் சொல்ல வேண்டும். ஆனால் மேற்கண்ட சம்பவத்தில் அந்த நபித்தோழர் இவற்றைச் செய்யாமல் எடுத்த எடுப்பில் பிரார்த்தனையைத் துவங்கி விடுகிறார். அத்தஹிய்யாத் அமர்வில் ஓத வேண்டியதை ஓதாமல் விட்டு விடுகின்றார். இச்செயலையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு வெளியில் எத்தனையோ பிரார்த்தனைகளைச் செய்துள்ளார்கள். நமக்கும் பல பிரார்த்தனைகளைக் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

உதாரணமாக கழிவறைக்குள் நுழையும் முன்பு இறைவா ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்குகளிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்றும் கழிவறையிலிருந்து வெளியேறும் போது இறைவா உன் மன்னிப்பை வேண்டுகிறேன் என்றும் கூறியுள்ளார்கள்.

மேற்கண்ட பிரார்த்தனையை அல்லாஹ்வை போற்றி நபியவர்கள் மீது ஸலவாத்துக் கூறிய பிறகு தான் சொல்ல வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை. இது போன்று வெறுமனே பிரார்த்தனை வாசகங்கள் மட்டும் அடங்கிய எண்ணற்ற துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் நேரடியாகவே இறைவனிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். இதற்கும் ஹதீஸ்களில் எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன.

எனவே அல்லாஹ்வைப் புகழ்ந்து நபியவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லிய பிறகு தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று மார்க்கம் நிபந்தனையிடவில்லை.

ஒவ்வொரு துஆவின் போதும் ஒருவர் அல்லாஹவைப் புகழ்ந்து பின்னர் ஸலவாத்து ஓதி அதன் பின்னர் கோரிக்கையைக் கேட்டால் அது தடுக்கப்பட்டதல்ல. ஆனால் அது துஆவுக்கான நிபந்தனைகளில் ஒன்றாக மார்க்கம் கூறவில்லை

கண்களை_மூடிக்_கொண்டு_துஆச்_செய்யலாமா

#மார்க்க_சட்டங்கள்

#கண்களை_மூடிக்_கொண்டு_துஆச்_செய்யலாமா?

#செய்யலாம்.

கண்களை மூடிக்கொண்டு துஆச் செய்யும் போது உள்ளச்சம் ஏற்படுகிறது. ஆனால் மாற்று மதத்தினரின் வழக்கமாக இது உள்ளதால் கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.

கண்களை மூடிக் கொண்டு பிரார்த்தனை செய்வதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை.

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55)

இந்த வசனத்தில் பிரார்த்தனை செய்யும் ஒழுங்கைப் பற்றி இறைவன் கூறும் போது, பணிவாகவும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறுகின்றான். கண்களை மூடிக் கொண்டால் தான் உங்களால் இந்த நிபந்தனையை நிறைவேற்ற முடியும் என்றால் அதைச் செய்வதில் தவறில்லை.

நமக்கு அனுமதிக்கப்பட்ட விஷயங்களை மாற்று மதத்தவர்கள் செய்வது பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

கூட்டு_துஆ_கூடாதா

#மார்க்க_சட்டங்கள்

#கூட்டு_துஆ_கூடாதா?

#ஆம்.

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான் (திருக்குர்ஆன் 7:55

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர் (திருக்குர்ஆன் 7:205

இவ்வசனம் (திருக்குர்ஆன் 7:55) இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்ற வழி முறையைக் கற்றுத் தருகிறது.

ஒரு அதிகாரியிடம், அமைச்சரிடம் நமது கோரிக்கைகளை எழுப்புவது என்றால் அதற்கென சில ஒழுங்கு முறைகளைக் கடைப் பிடிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

நமது கோரிக்கையைக் கேட்கும் போது அடுக்கு மொழியில் வசனம் பேசினால் அல்லது ராகம் போட்டு கோரிக்கையை எழுப்பினால் கோரிக்கை எவ்வளவு நியாயம் என்றாலும் அந்த அதிகாரி ஏற்க மாட்டார். அல்லது கடுமையான சப்தத்தில் கோரிக்கையை எழுப்பினாலும் கோரிக்கை நிராகரிக்கப்படும்.

மனிதனிடம் கோரிக்கை வைக்கும் போது காட்டப்படும் பணிவை விட ஆயிரமாயிரம் மடங்கு அதிகமாக அல்லாஹ்விடம் பணிவைக் காட்ட வேண்டும். அதைத் தான் அல்லாஹ் இங்கே கூறுகிறான்.

பணிவுடன் உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது முதலாவது ஒழுங்கு. அல்லாஹ்விடம் கேட்கும் போது ராகம் போட்டோ, அடுக்கு மொழியிலோ கேட்டால் அங்கே பணிவு எடுபட்டுப் போய் விடும்.

பெரும்பாலான பள்ளிவாசல்களில் இப்படித் தான் பணிவு இல்லாமல் யாரிடம் கேட்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் சடங்காகப் பிரார்த்தனை செய்கின்றனர்.

மேலும் இரகசியமாகப் பிரார்த்திப்பது பிரார்த்தனையின் ஒழுங்காக இங்கே குறிப்பிடப்படுகிறது.

இதிலிருந்து கூட்டாக சப்தமிட்டுக் கேட்பது முறையான பிரார்த்தனை இல்லை என்பது தெரிய வரும்.

ஒவ்வொருவருக்கும் தனித் தனித் தேவைகள் உள்ளன. அவரவர் தத்தமது தேவையை தமது மொழியில் பணிவுடனும், ரகசியமாகவும் கேட்பதே பிரார்த்தனையின் முக்கிய ஒழுங்காகும்.

இறைவன் எவ்வாறு பிரார்த்திக்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறானோ, அவ்வாறு செய்யப்படும் பிரார்த்தனையைத் தான் ஏற்றுக் கொள்வான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

. உரத்த சப்தமின்றி

இறைவனை எவ்வாறு நினைவு கூர வேண்டும் என்ற ஒழுங்கு இங்கே கூறப்படுகிறது. முதலில், பணிவுடனும், அச்சத்துடனும் இறைவனை நினைவு கூர வேண்டும். இரண்டாவது, நாவால் மட்டும் இறைவனின் பெயரைக் கூறாமல் உள்ளத்திலும் நினைவு கூர வேண்டும். மூன்றாவதாக, உரத்த சப்தமின்றி நினைவு கூர வேண்டும்.

இன்றைக்கு தமிழக முஸ்லிம்களில் பலர் “ராத்திபு’ என்ற பெயரிலும், “ஹல்கா’ என்ற பெயரிலும் பெரும் கூச்சலுடனும், ஆட்டம் பாட்டத்துடனும் அல்லாஹ்வை நினைவு கூர்வதாக நினைத்துக் கொண்டு பாவத்தைச் சுமந்து வருகின்றனர்.

இவ்வசனத்தைக் (7:205) கவனத்தில் கொண்டால் தாங்கள் செய்வது தவறு என்பதை உணர்வார்கள்.

Friday, May 18, 2018

குர்ஆனை தமிழில் ஓதினால் நன்மை கிடைக்குமா?

குர்ஆனை தமிழில் ஓதினால் நன்மை கிடைக்குமா?
பதில்: திருக்குர்ஆன் மூலம் ஒரு முஸ்லிம் பல வித நன்மைகளை அடைந்து கொள்ள முடியும்.

அல்லாஹ்வின் வேதத்தை அவன் கூறியவாறு அப்படியே ஓதுவதன் மூலம் நன்மை அடையலாம்.

இப்படி ஓதுவதால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான். இந்த நன்மை மொழிபெயர்ப்புகளை வாசிக்கும் போது கிடைக்காது.

அல்லாஹ் திருக்குர்ஆனை வழங்கியது பொருள் தெரியாமல் வாசிப்பதற்காக மட்டும் அல்ல. மாறாக அதை விளங்குவதற்கும், சிந்திப்பதற்கும் தான் அல்லாஹ் அருளினான். விளங்குவதற்கும், சிந்திப்பதற்கும் அரபுமொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்குப் பிரச்சனை இல்லை. அரபுமொழி தெரியாதவர்களுக்கு மொழி பெயர்ப்புகளை வாசிப்பதன் மூலம் தான் இது சாத்தியமாகும்.

மொழி பெயர்ப்பை வாசித்து அதைப் புரிந்து கொண்டு சிந்தித்தால் குர்ஆனை விளங்கிய நன்மையும் சிந்தித்ததற்கான நன்மையும் கிடைக்கும்.

குர்ஆனைச் சிந்திப்பது மட்டுமின்றி அதன்படி அமல் செய்தால் அதற்கான நன்மையைப் பெற முடியும்.

ஒருவர் மூலத்தை வாசித்து மொழி பெயர்ப்பைப் பார்த்து புரிந்து கொண்டு அதன்படி செயல்பட்டால் அவர் எல்லா விதமான நன்மைகளையும் பெற்றுக் கொள்வார்.

ஒருவர் அர்த்தத்தை விளங்காமல் வெறுமனே ஓதிக் கொண்டு வந்தால் அந்த நன்மை மட்டும் தான் அவருக்குக் கிடைக்கும். மற்றொருவர் மூலத்தை ஓதத் தெரியாமல் புரிந்து கொள்ள மட்டும் முயற்சி செய்தால் அதற்கான நன்மை அவருக்குக் கிடைக்கும்.

எனக்காக_துஆ_செய்யுங்கள்_என_கேட்கலாமா

#மார்க்க_சட்டங்கள்

#எனக்காக_துஆ_செய்யுங்கள்_என_கேட்கலாமா?

#கேட்டகலாம்

இறைவனுடைய இடத்தில் பிறரை வைப்பதே இணைவைப்பாகும். நமக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு பிறரிடம் கூறும் போது இறைவனுடைய எந்தத் தகுதியையும் அவருக்கு நாம் வழங்கவில்லை. மாறாக நாம் யாரிடம் பிரார்த்தனை செய்யுமாறு கூறுகிறோமோ அவரும் அல்லாஹ்வின் அடிமை தான் என்ற கருத்து இந்தக் கோரிக்கையில் அடங்கியுள்ளது.

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியத்தைச் செய்யுமாறு பிறரிடம் கூறுவது தவறல்ல. பிறருக்காக பிரார்த்தனை செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது மட்டுமின்றி மிகவும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ (10) 59

அவர்களுக்குப் பின் வந்தோர் “எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்திவிட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுகின்றனர்.

அல்குர்ஆன் (59 : 10)

رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا (28) 71

“என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே!” (எனவும் பிரார்த்தித்தார்)

அல்குர்ஆன் (71 : 28)

4914حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ صَفْوَانَ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ صَفْوَانَ وَكَانَتْ تَحْتَهُ الدَّرْدَاءُ قَالَ قَدِمْتُ الشَّامَ فَأَتَيْتُ أَبَا الدَّرْدَاءِ فِي مَنْزِلِهِ فَلَمْ أَجِدْهُ وَوَجَدْتُ أُمَّ الدَّرْدَاءِ فَقَالَتْ أَتُرِيدُ الْحَجَّ الْعَامَ فَقُلْتُ نَعَمْ قَالَتْ فَادْعُ اللَّهَ لَنَا بِخَيْرٍ فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لِأَخِيهِ بِخَيْرٍ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ آمِينَ وَلَكَ بِمِثْلٍ قَالَ فَخَرَجْتُ إِلَى السُّوقِ فَلَقِيتُ أَبَا الدَّرْدَاءِ فَقَالَ لِي مِثْلَ ذَلِكَ يَرْوِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه مسلم

ஸஃப்வான் கூறுகிறார் : நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்ற போது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரலிலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காண முடியவில்லை. (என் மனைவியின் தாய்) உம்முத் தர்தா (ரலி) அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம், “இந்த ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?” என்று கேட்டார். நான் “ஆம்” என்றேன். அதற்கு அவர் சொன்னார்: அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள். ஏனெனில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார். அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும் போதெல்லாம், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர், “இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக் கொள்வாயாக! என இறைவனிடம் பிரார்த்திக்கிறார். அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்” என்று கூறினார்கள்.

பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டுக் கடைத்தெருவுக்குச் சென்ற போது, அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். நபிகள் நாயகம் (ஸல் அவர்கள் அவ்வாறு கூறியதாக அவர்களும் என்னிடம் அறிவித்தார்கள்.

முஸ்லிம் (5281)

4912 حَدَّثَنِي أَحْمَدُ بْنُ عُمَرَ بْنِ حَفْصٍ الْوَكِيعِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ حَدَّثَنَا أَبِي عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ عَنْ أُمِّ الدَّرْدَاءِ عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَدْعُو لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ إِلَّا قَالَ الْمَلَكُ وَلَكَ بِمِثْلٍ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்திக்கும் போது, வானவர் “உனக்கும் அதைப் போன்றே கிடைக்கட்டும்!” என்று கூறாமல் இருப்பதில்லை.

அறிவிப்பார் : அபுத்தர்தா (ரலி)

முஸ்லிம் (5279)

நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம் பல சந்தர்ப்பங்களில் தங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு கூறியுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அந்தத் தோழர்களுக்காக பிரார்த்தனை செய்துள்ளார்கள். இவ்வாறு கூறுவது இணைவைப்பு என்றால் இதைகள் நாயகம் நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருப்பார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று பிரார்த்தனை செய்திருக்க மாட்டார்கள்.

5652حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ عِمْرَانَ أَبِي بَكْرٍ قَالَ حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ أَلَا أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ قُلْتُ بَلَى قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنِّي أُصْرَعُ وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي قَالَ إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ فَقَالَتْ أَصْبِرُ فَقَالَتْ إِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي أَنْ لَا أَتَكَشَّفَ فَدَعَا لَهَا حَدَّثَنَا مُحَمَّدٌ أَخْبَرَنَا مَخْلَدٌ عَنْ ابْنِ جُرَيْجٍ أَخْبَرَنِي عَطَاءٌ أَنَّهُ رَأَى أُمَّ زُفَرَ تِلْكَ امْرَأَةً طَوِيلَةً سَوْدَاءَ عَلَى سِتْرِ الْكَعْبَةِ رواه البخاري

கறுப்பு நிறப் பெண்மணி ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும் போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (5652)

3805 حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ قَالَ نَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي قَالَ فَقَرَّبْنَا إِلَيْهِ طَعَامًا وَوَطْبَةً فَأَكَلَ مِنْهَا ثُمَّ أُتِيَ بِتَمْرٍ فَكَانَ يَأْكُلُهُ وَيُلْقِي النَّوَى بَيْنَ إِصْبَعَيْهِ وَيَجْمَعُ السَّبَّابَةَ وَالْوُسْطَى قَالَ شُعْبَةُ هُوَ ظَنِّي وَهُوَ فِيهِ إِنْ شَاءَ اللَّهُ إِلْقَاءُ النَّوَى بَيْنَ الْإِصْبَعَيْنِ ثُمَّ أُتِيَ بِشَرَابٍ فَشَرِبَهُ ثُمَّ نَاوَلَهُ الَّذِي عَنْ يَمِينِهِ قَالَ فَقَالَ أَبِي وَأَخَذَ بِلِجَامِ دَابَّتِهِ ادْعُ اللَّهَ لَنَا فَقَالَ اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ رواه مسلم

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தை (புஸ்ர் பின் அபீபுஸ்ர்-ரலி) அவர்களிடம் (விருந்தாளியாகத்) தங்கினார்கள். அப்போது அவர்களுக்கு அருகே உணவும் (பேரீச்சம் பழம், பாலாடை, நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட “வத்பா’ எனும்) ஒரு வகைப் பலகாரமும் வைத்தோம். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள். பிறகு பேரீச்சம் பழங்கள் கொண்டு வரப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, அவற்றின் கொட்டைகளை (பாத்திரத்தினுள்ளே போடாமல்) தம்மிரு விரல்களுக்கிடையே வைத்திருந்(துவிட்டு பிறகு வீசியெறிந்)தார்கள். பிறகு ஒரு பானம் கொண்டு வரப்பட்ட போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை அருந்தினார்கள். பிறகு மீதியிருந்ததைத் தமக்கு வலப் பக்கத்திலிருந்தவருக்குக் கொடுத்தார்கள். பிறகு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்படத் தயாரான போது) என் தந்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு, “எங்களுக்காகப் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இறைவா! நீ இவர்களுக்கு வழங்கிய உணவில் அருள்வளம் (பரக்கத்) புரிவாயாக! இவர்களை மன்னித்து, இவர்களுக்குக் கருணை புரிவாயாக!” (அல்லாஹும்ம, பாரிக் லஹும் ஃபீமா ரஸக்த்தஹும்,, வஃக்ஃபிர் லஹும், வர்ஹம்ஹும்) எனப் பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)

நூல் : முஸ்லிம் (4149)

மேலும் நாம் அன்றாடம் நமது தொழுகையில் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்காக ஸலவாத் எனும் துஆ செய்கிறோம். இவ்வாறு தனக்காக துஆ செய்யுமாறு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நம்மை வலியுறுத்தி உள்ளனர். மேலும் பாங்கு முடிந்தவுடன் எனக்காக துஆச் செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளனர். அதை ஏற்று நாம் அல்லாஹும்ம் ரப்ப ஹாதிஹித் … என்ற துஆவை பாங்குக்குப் பின்னர் ஓதுகிறோம். இதையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.

உயிருள்ளவர் தன்னைப் போன்று உயிருடன் இருப்பவரிடம் தனக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு கூறுவது தவறல்ல. ஆனால் உயிருள்ளவர் இறந்து போனவரிடம் இவ்வாறு கோரிக்கை வைப்பது இணை வைப்பாகும்.

நாம் உயிருள்ளவரிடம் பேசும் போது அவரை சாதாரண மனிதன் என்றே கருதுகின்றோம். ஆனால் இறந்து போனவரிடம் பேசும் போது அவருக்கு இறைவனுடைய தன்மைகள் இருப்பதாக கருதப்படுகின்றது.

சப்தமின்றி மனதுக்குள் கேட்கப்படும் கோரிக்கையை அல்லாஹ்வால் மட்டுமே அறிய முடியும். எந்த மொழியில் கேட்டாலும் அதை இறைவனால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். ஒரே நேரத்தில் எத்தனை பேர் அழைத்தால் அனைவரின் பிரார்த்தனையையும் அவனால் மட்டுமே பிரித்து அறிய முடியும். இந்தத் தன்மைகள் மனிதர்களுக்கு இல்லை.

இறந்து போனவரிடம் கோரிக்கை வைப்பவர்கள் மேற்கண்ட தன்மைகள் இறந்து போனவர்களுக்கு இருப்பதாக நினைக்கின்றனர். எனவே தான் அல்லாஹ்விடம் கேட்பது போன்று இவர்களிடம் கேட்கின்றனர். இது இணைவைப்பாகும்.