பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, May 10, 2018

இறந்தவர்களிடம்_நபிகள்_பேசியது_இறந்தவர்களுக்கு_ஆற்றல்உண்டு_என்பதற்கு_ஆதாரமாகுமா

#நம்பிக்கை

#இறந்தவர்களிடம்_நபிகள்_பேசியது_இறந்தவர்களுக்கு_ஆற்றல்உண்டு_என்பதற்கு_ஆதாரமாகுமா?

#பதில்

பத்ருப் போரில் கொல்லப்பட்ட இணைவைப்பாளர்களில் 24 தலைவர்கள் கிணற்றில் போடப்பட்டார்கள். கிணற்றில் போடப்பட்ட அவர்களை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசினார்கள் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்பது தெரிகின்றதே என்றும் சமாதி வழிபாடு செய்வோர் வாதிடுகின்றனர். அவர்களின் வாதம் சரியா என்பதை விபரமாகப் பார்ப்போம்.

பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாட்கள் தங்கிச் செல்வது அவர்களது வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம்முடைய வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களுடைய தோழர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏதோ தமது தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர்களுடைய பெயர்களையும், அவர்களுடைய தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, “இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்ததை நாங்கள் அடைந்து கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்ததை நீங்கள் அடைந்து கொண்டீர்களா?” என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை இவர்களை விட நீங்கள் நன்கு செவியேற்பவர்களாக இல்லை” என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 3976

உயிருடன் உள்ளவர்களை விட பாழுங்கிணற்றில் போட்டப்பட்டவர்கள் நன்கு செயுறுவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் இறந்தவர்கள் இவ்வுலகில் பேசுவதைச் செவியுறுகிறார்கள் என்பது சமாதி வழிபாட்டுக்காரர்களின் வாதமாகும்.

இது குறித்து இந்த ஒரே ஒரு ஆதாரம் மட்டும் இருந்து இதற்கு மாற்றமாக வேறு ஆதாரம் ஏதும் இல்லாவிட்டால் இறந்தவர்கள் செவியுறுவதற்கு ஆதாரமாக இதைக் கருதலாம்.

ஆனால் இறந்தவர்கள் இவ்வுலகில் நடக்கும் எதையும் அறிய மாட்டார்கள் என்றும், எதையும் செவியுற மாட்டார்கள் என்றும் திருக்குர்ஆன் கூறுவதை முன்னர் நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். அதற்கு முரணில்லாத கருத்தில் தான் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.

உர்வா பின் ஸுபைர் அவர்கள் கூறியதாவது: “குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப்படுகின்றார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள். இது ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் இவர் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்’ என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று சொன்னார்கள்.

(மேலும்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இது எப்படியிருக்கிறதென்றால், “இணை வைப்பவர்கள் பத்ரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டு, அவர்களைப் பார்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது அவர்களிடம், “உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?’ என்று உமர் (ரலி) அவர்கள் கேட்ட போது) “நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் கூறியதைப் போன்றது தான் இதுவும். ஆனால், “நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மையென்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்” என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்” என்று நபியவர்கள் சொல்லவில்லை.)

பிறகு, ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும் வசனங்களை) ஓதினார்கள்:

(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது.

திருக்குர்ஆன் 27:80

(நபியே!) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியேற்கச் செய்ய முடியாது.

திருக்குர்ஆன் 35:22

நூல் : புகாரி 3978

அறிகிறார்கள் என்பதற்கும், செவியுறுகிறார்கள் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

செவியுறுகிறார்கள் என்றால் நபிகள் நாயகம் பேசியது அவர்களின் காதுகளில் விழுந்தது என்று பொருள். செவியேற்க மாட்டார்கள் என்ற வசனத்துக்கு முரணாக இது அமைகிறது.

அறிகிறார்கள் என்றால் தமக்கு ஏற்பட்ட துன்பத்தை அனுபவித்து உணர்ந்தார்கள் என்று பொருள். செவியேற்க மாட்டார்கள் என்பதற்கு இது முரணாக அமையாது.

பாழும் கிணற்றில் அவர்கள் போடப்பட்ட பின் அவர்கள் ஆன்மாக்களின் உலகத்துக்குச் சென்று விட்டனர். இவ்வுலகில் தாம் தவறான மார்க்கத்தில் இருந்ததை அப்போது அறிந்து கொள்வார்கள். இதைத் தான் நபியவர்கள் சொன்னார்கள். செவியுறுகிறார்கள் என்று சொல்வது குர்ஆனுக்கு முரணாக உள்ளதால் அவ்வாறு நபியவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று காரணத்துடன் விளக்குகிறார்கள்.

குர்ஆனுக்கு முரணில்லாத வகையில் இன்னொரு விதமாகவும் விளக்கம் கொடுக்க இவ்வசனத்திலேயே வழி உள்ளது.

செவியுற மாட்டார்கள் என்று சொல்லும் வசனங்களில் அல்லாஹ் நாடியவரை செவியேற்கச் செய்வான். மரணித்தவரைச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

தான் நாடும் போது செவியேற்கச் செய்வான் என்று கூறப்படுவதால் மக்காவின் இணைகற்பிப்பாளர்கள் மேலும் இழிவை அடைவதற்காக நபிகள் நாயகம் இவ்வாறு இடித்துரைத்ததைச் செவியேற்கச் செய்தான். அதை வஹீ மூலம் அறிந்து நபியவர்கள் சொன்னார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்.

அதாவது இது பாழும் கிணற்றில் போடப்பட்ட இவர்களுக்கு மாத்திரம் உரியது என்று புரிந்து கொண்டால் முன்னர் நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுக்கு இது முரண்படாது.

மரணித்தவர்களில் அல்லாஹ் நாடும் சிலர் தவிர மற்ற யாரும் செவியேற்க முடியாது. அல்லாஹ் யாருக்கு நாடுகிறான் என்பது வஹீயின் தொடர்பில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர யாரும் அறிய முடியாது.

மேலும் இது மகான்கள் செவியுறுவார்கள் என்பதற்கு ஆதாரமாகாது. அல்லாஹ்வின் எதிரிகளாக மரணித்தவர்களை மேலும் வேதனைப்படுத்துவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசியதை அல்லாஹ் கேட்கச் செய்தான் என்பதால் இதை ஆதாரமாகக் கொண்டு மகான்கள் செவியுறுகிறார்கள் என்று முடிவு செய்ய முடியாது.

No comments:

Post a Comment