பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, May 4, 2018

குகைவாசிகள்_மீது_கட்டப்பட்ட_தர்கா_ஆதாரமாகுமா

#நம்பிக்கை

#குகைவாசிகள்_மீது_கட்டப்பட்ட_தர்கா_ஆதாரமாகுமா?

#பதில்

தெளிவான வார்த்தைகளால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தர்கா கட்டுவதைத் தடுத்த பின்பும் பொருத்தமில்லாத வாதங்களை வைத்து தர்கா கட்டலாம் என்று சிலர் வாதிடுகின்றனர்.

குகைவாசிகள் பற்றிய பின்வரும் வசனத்தை தர்கா கட்டலாம் என்பதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதையும், யுகமுடிவு நேரம் சந்தேகம் இல்லாதது என்பதையும் அறிந்து கொள்வதற்காக (குகைவாசிகளைப் பற்றி) அவர்களுக்கு இவ்வாறே வெளிப்படுத்தினோம். அப்போது அவர்கள் தமக்கிடையே முரண்பட்டனர். “அவர்கள் மீது ஒரு கட்டடத்தை எழுப்புங்கள்! அவர்களைப் பற்றி அவர்களது இறைவனே அறிவான்” என்றனர். தமது காரியத்தில் யாருடைய கை ஓங்கியதோ அவர்கள் “இவர்கள் மீது ஒரு வழிபாட்டுத் தலத்தை ஏற்படுத்துவோம்” என்றனர்.

திருக்குர்ஆன் 18:21

இறந்து விட்ட சில நல்லடியார்கள் மீது வழிபாட்டுத் தலத்தை எழுப்புவோம் என்று சிலர் கூறியதாக இவ்வசனத்தில் கூறப்படுகின்றது.

சமாதி வழிபாட்டை நியாயப்படுத்துவதற்குரிய சான்றாக இந்த வசனத்தை இவர்கள் கருதுகின்றனர். குகைவாசிகள் நல்லடியார்களாக இருந்ததன் காரணமாகத்தான் அவர்கள் மீது வழிபாட்டுத்தலம் எழுப்பப்பட்டதாக அல்லாஹ் கூறுகின்றான் என்பது இவர்களது வாதம்.

அவர்கள் மீது வழிபாட்டுத் தலம் எழுப்பியதற்கும், அந்த நல்லடியார்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. வழிபாட்டுத் தலம் எழுப்பியோர் வலிமை பெற்றவர்களாக, மிகைத்தவர்களாக இருந்தார்கள் என்று தான் அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகின்றான். அவ்வாறு வழிபாட்டுத் தலம் எழுப்பியவர்கள் நல்லடியார்கள் என்று அல்லாஹ் கூறவில்லை.

இவ்வாறு வழிபாட்டுத் தலம் எழுப்பியவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? ஏன் இப்படி எழுப்பினார்கள் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் தேவையான விளக்கம் கிடைக்கின்றது.

யூதர்களும், கிறித்தவர்களும் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கியதால் அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டதால் இக்காரியத்தைச் செய்தவர்கள் நன்மக்களாக இருக்க முடியாது என்பது உறுதி.

நல்லடியார்களின் அடக்கத்தலத்தின் மீது வழிபாட்டுத்தலம் எழுப்புவது யூதர்கள், மற்றும் கிறித்தவர்களின் வழக்கமாக இருந்ததை இந்த நபிமொழிகளிலிருந்து நாம் அறிகின்றோம். அந்த வழக்கப்படி தான் அவர்கள் குகைவாசிகள் மீது வழிபாட்டுத்தலம் எழுப்பினார்கள்.

சில நடவடிக்கைகள் முந்தைய சமுதாயங்களுக்கு அனுமதிக்கப்பட்டு, பிந்தைய சமுதாயத்திற்குத் தடுக்கப்படுவதுண்டு. அத்தகைய காரியங்களில் கூட இதைச் சேர்க்கவே முடியாது.

முந்தைய காலத்திலும் தர்கா கட்டுவது தடை செய்யப்பட்டே இருந்தது. அனுமதிக்கப்பட்டதை அவர்கள் செய்து இருந்தால் தர்கா கட்டியதால் சாபத்துக்குரியவர்களானார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள்.

எனவே குகைவாசிகளான நல்லடியார்கள் மீது வழிபாட்டுத் தலத்தை எழுப்பியவர்கள் இறைவனின் சாபத்துக்குரியவர்களே தவிர நல்லடியார்கள் அல்ல.

No comments:

Post a Comment