பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, March 31, 2018

பிறை_மற்றும்_பெருநாள்

#பிறை_மற்றும்_பெருநாள்

#பிறையைப்_புறக்கண்ணால்_பார்க்க_வேண்டும்_என_ஹதீஸ்_உள்ளதா?

#பதில்

பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று நேரடியாக ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்று கேட்கிறார்கள். எதற்கு நேரடியாக ஆதாரம் உள்ளதோ, அதுகுறித்து கேள்வி கேட்கும் இவர்களை என்னவென்று சொல்ல?

புறக்கண்ணால் பார்த்துத் தான் பிறையை முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு, பிறை குறித்து வரும் அனைத்து ஹதீஸ்களுமே ஆதாரம் தான்.

வாகனக் கூட்டத்தினர் நேற்று பிறை பார்த்ததாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் வந்து சொல்கின்றனர். “நேற்று பிறை பார்த்தோம்”, என்பது புறக்கண்ணால் பார்த்ததைத் தான் குறிக்கும்.

நீங்கள் பிறையைப் பார்ப்பது வரை அல்லாஹ் முந்தைய மாதத்தை நீட்டித் தருவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளதும் புறக்கண்ணால் பார்க்கப்படுவதைத் தான் குறிக்கிறது.

இன்னும் சொல்லப் போனால், பிறையைப் பார்த்து நோன்பை வையுங்கள், பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள், என்பதற்கும் புறக்கண்ணால் பார்த்து முடிவு செய்வது தான் பொருள்!

எதற்கு நேரடியாக ஆதாரம் இருக்கிறதோ, அதில் கேள்வி கேட்கும் இவர்களை நோக்கி நாம் ஒரு கேள்வி வைக்கிறோம்.

முன்கூட்டியே கணித்துத் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்களே , அதற்குரிய குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் என்ன?

ரஃயல் ஐன் என்ற வார்த்தை வந்தால் தான் புறக்கண்ணால் பார்த்ததாக அர்த்தம் வருமாம். அதாவது ரஃய் என்றால் பார்த்தல் என்பது பொருள். ஐன் என்றால் கண் என்பது பொருள். பார்த்தல் என்பதுடன் கண்னைச் சேர்த்து கண்ணால் பார்த்தல் என்று ஆதாரம் உண்டா எனக் கேட்கின்றனர்.

சாப்பிட வேண்டும் என்றாலும் வாயால் சாப்பிட வேண்டும் என்றாலும் ஒரே அர்த்தம் தான். அது போல் பார்த்தல் என்றாலும் கண்ணால் பார்த்தல் என்றாலும் ஒரே அர்த்தம் தான்.

ஆனால் எந்த மொழியாக இருந்தாலும் பார்த்தல் என்பதற்கு கண்ணால் பார்த்தல் என்று தான் பொருள் செய்ய வேண்டும். அந்த அர்த்தம் பொருந்தாத இடத்தில் மட்டும் தான் வேறு பொருத்தமான அர்த்தம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ரஃயல் ஐன் என்ற வார்த்தை இருந்தால் தான் கண்ணால் பார்த்தல் என்று அர்த்தம் செய்வார்களாம்.

அல்லாஹவைக் காட்டு என்று மூஸா நபி சமுதாயம் கேட்ட போது வெறும் ரஃய் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்ணுக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா? கருத்துக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா? இது போல் நூற்றுக் கணக்கான வசனங்களில் ஐன் என்ற வார்த்தை சேராமல் தான் ரஃய் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அதற்கு கண்களால் பார்த்தல் என்று பொருள் இல்லை என்று சொல்வார்களா?

இவர்கள் சுட்டிக் காட்டும் 3:13 வசனத்தில் பார்த்தல் என்பதுடன் ஐன் அதாவது கண் என்ற சொல் ஏன் சேர்த்துச் சொல்லப்ட்டது என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை. கண் பார்வைக்கு இரு மடங்காகத் தெரிந்தது ஆனால் உண்மையில் அப்படி இல்லை என்ற கருத்தைக் கூறுவதற்காக இவ்வாறு கூறப்பட்டது. இதை அந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் மூளையுள்ள யாரும் அறிந்து கொள்ளலாம்.

Friday, March 30, 2018

பெருநாள்_தொழுகை_தக்பீரில்_கைகளை_உயர்த்துதல்

#பிறை_மற்றும்_பெருநாள்

  #பெருநாள்_தொழுகை_தக்பீரில்_கைகளை_உயர்த்துதல்?

#பதில்_ளயீஃபான_செய்தி.

பெருநாள் தொழுகையில் 7+5 தக்பீர்கள் சொல்லும் போது கைகளை உயர்த்த வேண்டியதில்லை என்று தவ்ஹீது மவ்லவிகள் கூறுகின்றார்கள். ஆனால் ருகூவுக்கு முன்பு கூறும் ஒவ்வொரு தக்பீரிலும் நபி (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்துவார்கள் என்று பைஹகீயில் இப்னு உமர் (ரலி) அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளதே! இதன் நிலை என்ன?

பதில்:
! நபி (ஸல்) அவர்கள் தொழத் தயாராகும் போது தமது இரு கைகளையும் உயர்த்துவார்கள். அவ்விரு கைகளையும் தோள் புஜத்திற்கு நேராக வைத்துப் பிறகு அதே நிலையில் தக்பீர் சொல்வார்கள். பிறகு ருகூவு செய்வார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்த விரும்பினால் கைகளை புஜங்களுக்கு நேராக அமைகின்ற வரை உயர்த்தி, பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று சொல்வார்கள். பிறகு ஸஜ்தா செய்வார்கள். சுஜூதின் போது தமது கைகளை உயர்த்த மாட்டார்கள். தமது தொழுகை முடிகின்ற வரை ருகூவுக்கு முன்னால் சொல்கின்ற ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை உயர்த்துவரர்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல்கள் : அபூதாவூத் (822), பைஹகீ (5983)

இந்த ஹதீஸைத் தான் தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். இமாம் பைஹகீ அவர்கள் இந்த ஹதீஸை பெருநாள் தொழுகையில் கைகளை உயர்த்தல் என்று தலைப்பிட்டு பதிவு செய்திருக்கின்றார்கள். எனினும் பெரு நாள் தொழுகைக்கும் இந்த ஹதீசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பொதுவாக நபி (ஸல்) அவர்களின் தொழுகை குறித்து இந்த ஹதீஸில் விளக்கப்பட்டுள்ளது.

இதில் ருகூவுக்கு முன்னர் சொல்கின்ற ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை உயர்த்துவார்கள்” என்ற வாசகத்தை வைத்து பெருநாள் தொழுகையில் கைகளை உயர்த்த வேண்டும் என்று கூற முடியாது. அந்த வாசகம் சொல்லப்படுகின்ற வரிசையைக் கவனித்தால் இது சாதாரண தொழுகைகளில் அடுத்தடுத்த ரக்அத்துக்களைக் குறித்துச் சொல்லப்பட்டது என்பதை அறிய முடியும்.

பெருநாள் தொழுகையில் ஒவ்வொரு தக்பீரிலும் கைகளை உயர்த்த வேண்டும் என்ற கருத்துடைய இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூட தமது கருத்துக்கு ஆதாரமாக இந்த ஹதீஸைக் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. எனவே பெருநாள் தொழுகையில் கூடுதல் தக்பீர்களில் கைகளை உயர்த்துவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் கைகளை உயர்த்த வேண்டியதில்லை என்பதே சரி!

மற்றொரு செய்தியையும் சில அமைப்பினர் தமது நூல்களில் ஆதாரமாகக் குறிப்பிட்டு பெருநாள் தொழுகையின் ஒவ்வொரு தக்பீரிலும் கைகளை உயர்த்த வேண்டும் எனக் கூறுகின்றனர்.

பெருநாள் தொழுகையிலும் ஜனாஸா தொழுகையிலும் ஒவ்வொரு தக்பீரிலும் கைகளை உயர்த்த வேண்டும். பைஹகி-உமர் (ரலி)

என்று குறிப்பிடுகிறார்கள். அந்த ஹதீஸ் இது தான்.

السنن الكبرى للبيهقي – (ج 3 / ص 293)

(اخبرنا) أبو عبد الله الحافظ ثنا أبو بكر ابن اسحق انبأ بشر بن موسى ثنا أبو زكريا انبأ ابن لهيعة عن بكر بن سوادة ان عمر بن الخطاب رضي الله عنه كان يرفع يديه مع كل تكبيرة في الجنازة والعيدين وهذا منقطع *

உமர் ரலி அவர்கள ஜனாஸா தொழுகையிலும் பெருநாள் தொழுகையிலும் ஒவ்வொரு தக்பீரிலும் உமர் ரலி அவர்கள் கைகளை உயர்த்தினார்கள்.

இதில் உமர் ரலி அவர்களின் சொந்தக் கூற்றாகத் தான் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது ஆதாரமாகாது. மேலும் இதன் அற்விப்பாளர் வரிசை தொடர்பு அறுந்ததாகும் என பைஹகி அவர்களே இதன் இறுதியில் கூறுகிறார்கள். உமர் ரலி அவர்கள் உயர்த்தியதாகக் கூறும் இச்செய்தி பலவீனமாக இருப்பதால் எந்த வகையிலும் இது ஆதாரமாகாது.

பிறையைக்_கணிக்கலாமா

#பிறை_மற்றும்_பெருநாள்

  #பிறையைக்_கணிக்கலாமா?

#பதில்_கூடாது.

நோன்பு என்பது ஒரு வணக்கம் ஆகும். வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் எந்த அடிப்படையில் காட்டித் தந்தார்களோ அந்த அடிப்டையிலேயே நாம் செயல்படுத்த வேண்டும். இதில் நம்முடைய மனோ இச்சையைப் பின்பற்றுதல் என்பது மார்க்கத்திற்கு மாற்றமான நடைமுறை ஆகும். இந்த அடிப்படையை முதலில் நீங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். நபியவர்கள் பிறையைக் கண்களால் பார்த்து நோன்பை முடிவு செய்ய வேண்டும் என்றே கூறியுள்ளார்கள்.

“அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நீங்கள் நோன்பை விட்டு விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் (1959)

“அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நீங்கள் நோன்பை விட்டு விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தின் எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1909)

“நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு பிடியுங்கள் பிறையைக் காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்கள் நோன்பு பிடியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (1972)

மேற்கண்ட ஹதீஸ்கள் பிறையைக் கண்களால் கண்டே நோன்பை முடிவு செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறது. பின்வரும் ஹதீஸ் பிறையைப் பார்க்காமல் முடிவு செய்யக் கூடாது என்று கட்டளையிடுகிறது. எனவே கண்களால் பிறை பார்க்க வேண்டும் என்பது மேலும் உறுதியாகிறது

“பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி (1906, 1907), முஸ்லிம் (1961)

இந்த ஹதீஸ் மிகத் தெளிவாக பிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்கக் கூடாது என்று கட்டளையிடுகிறது. எனவே தான் நபியின் கட்டளைப்படி (நம் விருப்பப்படி அல்ல) பிறையைப் பார்த்துத் தான் நோன்பு வைக்க வேண்டும்; பெருநாள் கொண்டாட வேண்டும். பிறையைக் கணிக்கக் கூடாது என்று கூறுகிறோம்.

பிறை_விஷயமாக_சாட்சிகள்_கூறுவதை_அப்படியே_ஏற்கலாமா

#பிறை_மற்றும்_பெருநாள்

#பிறை_விஷயமாக_சாட்சிகள்_கூறுவதை_அப்படியே_ஏற்கலாமா?

ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29ம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாமா?

#பதில்:

இரண்டு சாட்சிகள் பிறை பார்த்ததாகக் கூறினால் அதை அப்பகுதியினர் ஏற்க வேண்டும் என்பதற்கு ஹதீஸில் ஆதாரம் உள்ளது. ஆனால் அவர்கள் எந்த நேரத்தில் பார்த்ததாகக் கூறினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பொருள் கொள்ளக் கூடாது.

இரவு பத்து மணிக்கு தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினால் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அந்த நேரத்தில் தலைப் பிறையைப் பார்க்க முடியாது.

நண்பகலில் தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினாலும் அதையும் ஏற்க முடியாது. ஏனெனில் நண்பகலில் தலைப் பிறையைப் பார்க்க முடியாது. மாலை நேரத்தில் கூட கிழக்கில் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் கண்ணால் பார்க்கும் வகையில் தலைப்பிறை தோன்றுவது மேற்குப் பகுதியில்தான்.

பிறை 25ல் தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினாலும் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அது தலைப் பிறை பார்ப்பதற்குரிய நாள் அல்ல.

இது போன்று தான், சாதாரணக் கண்களுக்குப் பிறை தென்படாது என்று அறிவியல் உலகம் உறுதியாகக் கூறும் ஒரு நாளில் பிறை பார்த்ததாக நம்பத் தகுந்த சாட்சியங்கள் கூறினாலும் அதை ஏற்க வேண்டியதில்லை.

வேண்டுமென்று பொய் கூறாத சாட்சிகளாக இருந்தாலும் கண்கள் தவறு செய்வதுண்டு. சிறிய மேகத் துண்டு கூட பிறையாகத் தோற்றமளிக்க வாய்ப்பு உள்ளது. நாம் வானத்தில் ஓரிடத்தை உற்று நோக்கும் போது அந்த இடத்தில் ஒரு நட்சத்திரம் இருப்பது போல் தெரியும் உடனே மறைந்து விடும். ஆனால் உண்மையில் அந்த இடத்தில் நட்சத்திரம் எதுவும் இருக்காது. இந்தத் தவறு பிறை விஷயத்திலும் நடக்க வாய்ப்புள்ளது.

வெளிநாடு_செல்லும்_போது_பிறை_வித்தியாசம்_ஏற்பட்டால்

#பிறை_மற்றும்_பெருநாள்

#வெளிநாடு_செல்லும்_போது_பிறை_வித்தியாசம்_ஏற்பட்டால்?

#தற்போது_இருக்கும்_ஊரின்_அடிப்படையில்_பெருநாள்_கொண்டாட_வேண்டும்.

சவூதியில் பிறை பார்த்த அடிப்படையில் நோன்பு நோற்றவர் தாயகம் வருகிறார். தாயகத்தில் 30 வது நோன்பு அன்று அவருக்கு 31 வது நோன்பு ஆகிறது. அவர் அன்று நோன்பு வைக்க வேண்டுமா? அல்லது நோன்பு நோற்காமல் இருக்க வேண்டுமா?

#பதில்

பொதுவாக தொழுகை, நோன்பு போன்ற அனைத்துக் காரியங்களையும் நாம் எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் நேரக்கணக்கின் அடிப்படையில் தான் அமைக்க வேண்டும். ஒரு ஊரில் இருந்து கொண்டு வேறொரு ஊரின் அல்லது நாட்டின் நேரக் கணக்கைப் பின்பற்ற முடியாது.

இந்தியாவில் இருந்து கொண்டு சவூதி நேரத்துக்குத் தொழ முடியாது என்பது போன்று அங்குள்ள நேரக் கணக்கின் அடிப்படையில் இந்தியாவில் நோன்பு நோற்கவோ, துறக்கவோ முடியாது.

எனவே எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் நேரக் கணக்கின் அடிப்படையில் நம்முடைய தொழுகை நோன்பு போன்ற காரியங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இதனடிப்படையில் சவூதியிலிருந்து இந்தியா வந்து சோ்ந்த பிறகு இந்தியாவின் நேரக் கணக்கைப் பின்பற்றி நோன்பு நோற்க வேண்டும்.

அவ்வாறு நடந்து கொள்ளும் போது முப்பத்து ஒன்றாவது நோன்பு வைக்க வேண்டிய நிலை வந்தால் என்ன செய்வது?

மாதத்தைப் பற்றி இஸ்லாம் கூறும் போதனையை அறிந்து கொண்டால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வைக் காணலாம்.

ஒரு மாதம் என்பது இருபத்து ஒன்பது நாட்களாகவும் இருக்கும். முப்பது நாட்களாகவும் இருக்கும். முப்பத்து ஒரு நாட்கள் கிடையாது என்று இஸ்லாம் சொல்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மாதம் என்பது இருபத்து ஒன்பது நாட்களாகவும் இருக்கும். முப்பது நாட்களாகவும் இருக்கும். பிறையை நீங்கள் கண்டால் நோன்பு வையுங்கள். அதைப் பார்த்தே நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் குறுக்கிட்டால் எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : நஸாயீ 2109

ஒரு மாதத்திற்கு அதிக பட்சம் முப்பது நாட்கள் தான். முப்பத்து ஒரு நாட்கள் என்பது கிடையாது என்பதை இந்த நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

உங்களில் யார் ரமலான் மாதத்தை அடைவாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்ற வசனத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட நபர் சவுதியிலேயே ரமலான் மாதத்தை அடைந்து விட்டதால் அங்கு முதல் நோன்பு வைத்திருக்கிறார்.

அதன் பிறகு பாதியில் அல்லது இறுதியில் ஊருக்குத் திரும்பி வந்த போது ஊரில் உள்ளவர்களுக்கு முப்பதாவது நோன்பாகவும் இவருக்கு முப்பத்து ஒன்றாகவும் இருந்தால் அந்த நோன்பை அவர் நோற்கக் கூடாது. ஏனெனில் மாதம் என்பது அதிக பட்சம் முப்பது நாட்கள் தான் என்ற நபிமொழி இருப்பதால் அத்துடன் அவருக்கு ரமலான் மாதம் முடிந்து விட்டது.

எனவே இவர் தனக்கு மாதம் பூர்த்தியான பிறகு நோன்பு நோற்காமல் காத்திருந்து ஊர் மக்கள் பெருநாள் கொண்டாடும் போது இவரும் சேர்ந்து பெருநாள் கொண்டாடலாம்.

ஃபமன்ஷஹித_என்பதற்கு_சாட்சியமளிக்கிறாரோ_என்று_பொருளா

#பிறை_மற்றும்_பெருநாள்

#ஃபமன்ஷஹித_என்பதற்கு_சாட்சியமளிக்கிறாரோ_என்று_பொருளா?

#பதில்

“ஃபமன் ஷஹித மின்குமுஷ்ஷஹ்ர”  என்பதற்கு “யார் அம்மாதத்திற்கு சாட்சியாக இருக்கிறாரோ”, என்று பொருள் செய்வது முற்றிலும் தவறான ஒன்றாகும்.

ஷஹித என்பதற்கு சில இடங்களில் சாட்சி கூறுதல் என்ற அர்த்தம் இருந்தாலும் அதற்கு அடைவது என்ற பொருளும் உள்ளது. யார் சாட்சியாக இருக்கிறாரோ என்று இவர்கள் செய்வது போல் பொருள் கொண்டால் அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்பு கடமையாகாது. யார் பிறையைக் கண்ணால் பார்த்து அதற்கு சாட்சி கூறுகிறாரோ அவர் மீது மட்டும் தான் கடமையாகும்.

ஒரு ஊரில் பத்து பேர் பிறை பார்த்தார்கள் என்றால் அவர்கள் மட்டுமே பிறைக்கு சாட்சிகளாக உள்ளனர். அந்த ஊரைச் சேர்ந்த மற்றவர்கள் அதற்கு சாட்சிகளாக இல்லாததால் அவர்கள் மீது நோன்பு கடமையாகாது என்று இவர்கள் கூற வேண்டும். அவ்வாறு கூற இவர்கள் தயங்கினால் யார் சாட்சி கூறுகிறாரோ என்ற அர்த்தத்தை இவர்களே மறுத்துக் கொள்கின்றனர்.

மாதத்தை அடைந்தவர் என்று பொருள் கொண்டால் சிலர் பிறை பார்த்து சாட்சி சொன்னாலும் அவர்களின் சாட்சியம் மூலம் மற்றவர்களும் மாதத்தை அடைந்து விடுகின்றனர் என்று பொருத்தமாக அமைந்துள்ளது. இதை விளங்காமல் உளறியுள்ளனர்.

புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளதா என்று கேட்பதன் மூலம் தங்களுக்கும் சிந்தனைக்கும் அறவே தொடர்பு இல்லை என்று நிரூபித்துக் கொள்கின்றனர்.

ஒரு குறிப்பிட்ட வசனம் அல்லது ஒரு ஹதீஸின் வாசகம் நான் விரும்புகின்ற முறையில் இருந்தால் தான் ஏற்றுக் கொள்வேன் என்பதும், அனைத்து விஷயங்களும் ஒரு ஹதீஸில் அல்லது ஒரு வசனத்தில் கூறப்பட்டிருக்க வேண்டும் என்பதும் மார்க்க அறிவு அற்றவர்களின் நடவடிக்கையாகும்.

இது குறித்து வந்துள்ள அனைத்து ஆதாரங்களையும் திரட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல் விளக்கத்தையும் பார்த்து அதற்கு ஏற்ப புரிந்து கொள்வது தான் அறிவுடையோரின் செயலாகும்.

யார் ரமளானை அடைகிறாரோ என்றால் அனைவரும் ஒரே நேரத்தில் அடைய மாட்டார்கள் என்ற கருத்து அதனுள் இருக்கிறது. ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நேரங்களின் அடைவார்கள் என்பது பிறை பார்த்து மாதத்தை முடிவு செய்தால் தான் சாத்தியமாகும். பிறையைக் கணித்தால் அனைவரும் ஒரு நேரத்தில் மாதத்தை அடையும் நிலை ஏற்பட்டு மேற்கண்ட வசனத்தை நிராகரிக்கும் நிலை ஏற்படும்.

புறக்கண்ணால் பார்த்துத் தான் மாதத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்பதை ஏராளமான ஹதீஸ்களின் துணையுடன் நாம் நிரூபித்துள்ளோம். அவை இந்த வசனத்தின் விளக்கமாக அமைந்துள்ளது என்பதையும் இவர்களுக்கு அறிந்து கொள்ளும் திறன் இல்லை.

ஒரே நாளில் பெருநாளை அமைத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தும் கூட, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைச் செய்யாமல் இரண்டு நாளட்களில் பெரு நாள் ஏற்படுவதை அங்கீகரித்து நமக்கு முன்மாதிரியாக விட்டுச் சென்றார்கள் என்பதற்கு சிரியா – மதினா பிறை வேறுபாடு சம்மந்தமான ஹதீஸ், வாகனக்கூட்டம் அறிவிப்பு கொண்ட ஹதீஸ் போன்றவை நமக்கு தெளிவான ஆதாரமாக உள்ளன.

வாய்ப்பிருந்தும் செய்யவில்லை என்பது எதைக் காட்டுகிறது? ஒரே நாளில் உலகம் முழுவதும் முதல் நாள் வராது என்ற குர்ஆன் வசனத்தை நடைமுறையில் உணர்த்தும் முகமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்துள்ளார்கள் என்பதையே காட்டுகிறது.

Monday, March 26, 2018

பெருநாள்_தொழுகைக்கு_இரு_உரைகள்_உண்டா

#பிறை_மற்றும்_பெருநாள்

#பெருநாள்_தொழுகைக்கு_இரு_உரைகள்_உண்டா?

#பதில்_இல்லை.

பெருநாள் தொழுகை முடிந்த உடன் இமாம் உரை நிகழ்த்துவார். அதில் இரண்டு உரைகளை நிகழ்த்துவார்கள். ஆனால் நான் தொழுகைக்குச் சென்ற இடத்தில் இமாம் ஒரு உரையுடன் நிறுத்தி விட்டார். இது சரியா?

பெருநாட்களில் நிகழ்த்தப்படும் (குத்பா) உரையின் போது இடையில் உட்கார்வதற்கோ அல்லது இரண்டு உரைகள் நிகழ்த்துவதற்கோ நபிவழியில் ஆதாரமில்லை.

இரு உரைகளுக்கு இடையில் பிரித்துக் காட்டும் விதமாக அமர்வது நபிவழி (சுன்னத்) என்று இமாம் ஷாபி அறிவிப்பதாக ஒரு செய்தி கூறப்படுகின்றது. இந்தச் செய்தியை அறிவிக்கும் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவரல்லர். எனவே இந்த ஹதீஸ் ஏற்கத்தக்கதல்ல.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளிலோ அல்லது ஹஜ் பெருநாளீலோ நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு சற்று உட்கார்ந்து விட்டு எழுந்து நின்றார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: இப்னு மாஜா

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள அப்துர்ரஹ்மான் பின் உஸ்மான் பின் உமைய்யா என்ற அபூபஹ்ர் என்பவரும், இஸ்மாயீல் பின் அல் கவ்லானி என்பவரும் பலவீனமானவராவர். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளலாகாது.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆவைப் போன்று பெருநாளிலும் இரண்டு உரைகள் ஆற்றினார்கள் என்பதற்குத் தெளிவான சான்றுகள் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாளன்று தரையில் நின்று உரையாற்றினார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி)
நூல்: இப்னு குஸைமா.

மிம்பர் இல்லாமல் தரையில் நின்று நபியவர்கள் உரையாற்றியதால் இதில் உட்காருவதற்குரிய சாத்தியமில்லை என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே பெருநாளன்று ஒரு உரை நிகழ்த்துவது தான் நபிவழியாகும்.

குறையுள்ள_பிராணியை_குர்பானி_கொடுக்கலாமா

#ஹஜ்_உம்ரா

#குறையுள்ள_பிராணியை_குர்பானி_கொடுக்கலாமா?

#பதில்_கூடாது. #கொம்பு_உடைந்தால்_தவறில்லை.

குர்பானிப் பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி)
திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)

நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் குறை தெரியும் பிராணியைத் தடை செய்துள்ளார்கள். உதாரணமாக குருடு நொண்டி போன்ற குறைகள் இருக்கக் கூடாது. அவர்கள் கூறிய தெளிவாகத் தெரியும் என்ற வாசகம் குறை மறைமுகமாகவும் சிறியதாகவும் இருந்தால் பிரச்சனையில்லை என்பதை காட்டுகிறது. எனவே சிறிய அளவில் வெளிப்படையாகத் தெரியாத குறையுள்ள ஆட்டைக் குர்பானிக் கொடுப்பதில் குற்றமில்லை.

நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள, கருப்பு நிறத்தால் நடக்கக் கூடிய, கருப்பு நிறத்தால் அமரக் கூடிய, கருப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது முட்டுக்கால், கால், கண்பகுதி, கருப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானிக் கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
முஸ்லிம் (3637)

கொம்பு உடைந்த பிராணியை குர்பானி கொடுக்கக்கூடாது என்று வரும் ஹதீஸ் பலவீனமானது.