#ஹஜ்_உம்ரா
#ஹஜ்ஜின்_சிறப்புக்கள்_என்ன?
#பதில்
ஹஜ் கட்டாயக் கடமையாக இருப்பதுடன் அதை நிறைவேற்றுவதற்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கின்றன.
”அமல்களில் சிறந்தது எது?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புவது என்று விடையளித்தார்கள். அதற்கு அடுத்தபடியாக எது? என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதுஎன்றார்கள். அதற்கு அடுத்தபடியாக எது? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 26, 1519
சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை
”ஒரு உம்ராச் செய்து விட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1773
”அல்லாஹ்வின் தூதரே! ஜிஹாத் செய்வதையே மிகச் சிறந்த செயலாக நீங்கள் கருதுகிறீர்கள். எனவே (பெண்களாகிய) நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ”பெண்களாகிய உங்களுக்கு சிறந்த ஜிஹாத், ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1520, 2748
”உடலுறவு கொள்ளாமல், தீய காரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புகிறார்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1521, 1819, 1920
இன்னும் இது போன்ற ஏராளமான ஹதீஸ்கள் ஹஜ் செய்வதன் சிறப்பையும், அதனால் கிடைக்கும் பயன்களையும் அறிவிக்கின்றன.
No comments:
Post a Comment