பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Sunday, October 29, 2017

உயர் கல்விக்காக வங்கியில் கடன் வாங்கலாமா?

*உயர் கல்விக்காக வங்கியில் கடன் வாங்கலாமா?*

பதில் :

வட்டி வாங்குவதையும், வட்டி கொடுப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

صحيح مسلم

4177 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَعُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ قَالُوا حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ.

வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அவர்கள் பாவத்தில் சமமானவர்கள் எனவும் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம்

எனவே வங்கியில் லோன் வாங்கி வட்டி செலுத்துவது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை. படிப்பு வகைக்காகவும் இவ்வாறு செய்வது கூடாது. வங்கியிலிருந்து கடன் தொகையை வாங்கிக் கொண்டு வட்டி செலுத்தாமலிருக்க ஏதேனும் வழி இருந்தால் அந்த வழியைக் கடைப்பிடிக்கலாம்.

முஸ்லிம்கள் வட்டிக்கு கடன் வாங்க மாட்டார்கள் என்பதை அறிந்து வைத்திருக்கும் மத்திய மாநில அரசுகள் வட்டி இல்லாத வகையில் கடன் கொடுப்பதே முறையாகும்.

வட்டி இல்லாமல் கடன் கொடுத்தால் வங்கிகள் செயல்பட முடியாது என்று காரணம் சொல்லப்படுகிறது. மேலும் முஸ்லிம்களுக்கு மட்டும் இப்படி சலுகை அளிப்பது மற்றவர்களின் அதிருப்தியைப் பெற்றுத்தரும் எனவும் கூறப்படுகிறது.

இந்தப் பிரச்சணை எழாமல் முஸ்லிம்களுக்கு வட்டியில்லா கடன் கொடுக்க அரசுக்கு வழி உள்ளது.

வங்கியில் சேமிப்பு வைத்திருக்கும் முஸ்லிம்கள் அதற்கான வட்டியைப் பெறுவதில்லை. முஸ்லிம்களால் வாங்கப்படாத வட்டிப்பணம் பல்லாயிரம் கோடிகள் வங்கிகளில் முடங்கிக் கிடக்கின்றன. அந்தப் பணத்திலிருந்து அரசாங்கம் வட்டியைச் செலுத்திக் கொள்ளலாம்.

இப்படி செலுத்தினால் கடன் வாங்கிய மாணவர்கள் வட்டி செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட மாட்டார்கள்.

முஸ்லிம்கள் வாங்காமல் விட்டு வைத்திருக்கும் பணத்தில் இருந்து வங்கிகளுக்கான வட்டியைச் செலுத்துவதால் வங்கிகளும் நட்டமடையாது. முஸ்லிமல்லாத மக்களும் இதை விமர்சிக்க வழி இல்லாமல் போகும்.

அல்லது கல்விக்காக முழுச் செலவையும் மாணியமாகவே கொடுத்து கல்வி கற்க ஊக்குவிப்பது அரசின் கடமை. வியாபாரத்துக்கு கொடுக்கும் கடனுக்கும், படிப்புக்கு கொடுக்கும் கடனுக்கும் வித்தியாசம் உண்டு என்று உணர்ந்து முஸ்லிம் மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் வட்டியில்லாமல் கடன் கொடுக்கலாம். அதற்கான வட்டியை அரசாங்கம் சுமந்து கொள்ளலாம்.

இதுதான் கல்விக்குச் செய்யும் சரியான உதவியாகும். இதனால் இதைச் செய்தவர்களுக்கு ஓட்டுக்கள் ஆதாயமாக கிடைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Source: www.onlinepj.com

எனக்காக துஆ செய்யுங்கள் என கேட்கலாமா?

❓எனக்காக துஆ செய்யுங்கள் என கேட்கலாமா?

✔கேட்டகலாம்

இறைவனுடைய இடத்தில் பிறரை வைப்பதே இணைவைப்பாகும். நமக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு பிறரிடம் கூறும் போது இறைவனுடைய எந்தத் தகுதியையும் அவருக்கு நாம் வழங்கவில்லை. மாறாக நாம் யாரிடம் பிரார்த்தனை செய்யுமாறு கூறுகிறோமோ அவரும் அல்லாஹ்வின் அடிமை தான் என்ற கருத்து இந்தக் கோரிக்கையில் அடங்கியுள்ளது.

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியத்தைச் செய்யுமாறு பிறரிடம் கூறுவது தவறல்ல. பிறருக்காக பிரார்த்தனை செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது மட்டுமின்றி மிகவும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ (10) 59

அவர்களுக்குப் பின் வந்தோர் “எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்திவிட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுகின்றனர்.

அல்குர்ஆன் (59 : 10)

رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا (28) 71

“என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே!” (எனவும் பிரார்த்தித்தார்)

அல்குர்ஆன் (71 : 28)

4914حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ صَفْوَانَ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ صَفْوَانَ وَكَانَتْ تَحْتَهُ الدَّرْدَاءُ قَالَ قَدِمْتُ الشَّامَ فَأَتَيْتُ أَبَا الدَّرْدَاءِ فِي مَنْزِلِهِ فَلَمْ أَجِدْهُ وَوَجَدْتُ أُمَّ الدَّرْدَاءِ فَقَالَتْ أَتُرِيدُ الْحَجَّ الْعَامَ فَقُلْتُ نَعَمْ قَالَتْ فَادْعُ اللَّهَ لَنَا بِخَيْرٍ فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لِأَخِيهِ بِخَيْرٍ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ آمِينَ وَلَكَ بِمِثْلٍ قَالَ فَخَرَجْتُ إِلَى السُّوقِ فَلَقِيتُ أَبَا الدَّرْدَاءِ فَقَالَ لِي مِثْلَ ذَلِكَ يَرْوِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه مسلم

ஸஃப்வான் கூறுகிறார் : நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்ற போது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரலிலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காண முடியவில்லை. (என் மனைவியின் தாய்) உம்முத் தர்தா (ரலி) அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம், “இந்த ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?” என்று கேட்டார். நான் “ஆம்” என்றேன். அதற்கு அவர் சொன்னார்: அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள். ஏனெனில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார். அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும் போதெல்லாம், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர், “இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக் கொள்வாயாக! என இறைவனிடம் பிரார்த்திக்கிறார். அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்” என்று கூறினார்கள்.

பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டுக் கடைத்தெருவுக்குச் சென்ற போது, அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். நபிகள் நாயகம் (ஸல் அவர்கள் அவ்வாறு கூறியதாக அவர்களும் என்னிடம் அறிவித்தார்கள்.

முஸ்லிம் (5281)

4912 حَدَّثَنِي أَحْمَدُ بْنُ عُمَرَ بْنِ حَفْصٍ الْوَكِيعِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ حَدَّثَنَا أَبِي عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ عَنْ أُمِّ الدَّرْدَاءِ عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَدْعُو لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ إِلَّا قَالَ الْمَلَكُ وَلَكَ بِمِثْلٍ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்திக்கும் போது, வானவர் “உனக்கும் அதைப் போன்றே கிடைக்கட்டும்!” என்று கூறாமல் இருப்பதில்லை.

அறிவிப்பார் : அபுத்தர்தா (ரலி)

முஸ்லிம் (5279)

நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம் பல சந்தர்ப்பங்களில் தங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு கூறியுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அந்தத் தோழர்களுக்காக பிரார்த்தனை செய்துள்ளார்கள். இவ்வாறு கூறுவது இணைவைப்பு என்றால் இதைகள் நாயகம் நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருப்பார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று பிரார்த்தனை செய்திருக்க மாட்டார்கள்.

5652حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ عِمْرَانَ أَبِي بَكْرٍ قَالَ حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ أَلَا أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ قُلْتُ بَلَى قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنِّي أُصْرَعُ وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي قَالَ إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ فَقَالَتْ أَصْبِرُ فَقَالَتْ إِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي أَنْ لَا أَتَكَشَّفَ فَدَعَا لَهَا حَدَّثَنَا مُحَمَّدٌ أَخْبَرَنَا مَخْلَدٌ عَنْ ابْنِ جُرَيْجٍ أَخْبَرَنِي عَطَاءٌ أَنَّهُ رَأَى أُمَّ زُفَرَ تِلْكَ امْرَأَةً طَوِيلَةً سَوْدَاءَ عَلَى سِتْرِ الْكَعْبَةِ رواه البخاري

கறுப்பு நிறப் பெண்மணி ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும் போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (5652)

3805 حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ قَالَ نَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي قَالَ فَقَرَّبْنَا إِلَيْهِ طَعَامًا وَوَطْبَةً فَأَكَلَ مِنْهَا ثُمَّ أُتِيَ بِتَمْرٍ فَكَانَ يَأْكُلُهُ وَيُلْقِي النَّوَى بَيْنَ إِصْبَعَيْهِ وَيَجْمَعُ السَّبَّابَةَ وَالْوُسْطَى قَالَ شُعْبَةُ هُوَ ظَنِّي وَهُوَ فِيهِ إِنْ شَاءَ اللَّهُ إِلْقَاءُ النَّوَى بَيْنَ الْإِصْبَعَيْنِ ثُمَّ أُتِيَ بِشَرَابٍ فَشَرِبَهُ ثُمَّ نَاوَلَهُ الَّذِي عَنْ يَمِينِهِ قَالَ فَقَالَ أَبِي وَأَخَذَ بِلِجَامِ دَابَّتِهِ ادْعُ اللَّهَ لَنَا فَقَالَ اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ رواه مسلم

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தை (புஸ்ர் பின் அபீபுஸ்ர்-ரலி) அவர்களிடம் (விருந்தாளியாகத்) தங்கினார்கள். அப்போது அவர்களுக்கு அருகே உணவும் (பேரீச்சம் பழம், பாலாடை, நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட “வத்பா’ எனும்) ஒரு வகைப் பலகாரமும் வைத்தோம். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள். பிறகு பேரீச்சம் பழங்கள் கொண்டு வரப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, அவற்றின் கொட்டைகளை (பாத்திரத்தினுள்ளே போடாமல்) தம்மிரு விரல்களுக்கிடையே வைத்திருந்(துவிட்டு பிறகு வீசியெறிந்)தார்கள். பிறகு ஒரு பானம் கொண்டு வரப்பட்ட போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை அருந்தினார்கள். பிறகு மீதியிருந்ததைத் தமக்கு வலப் பக்கத்திலிருந்தவருக்குக் கொடுத்தார்கள். பிறகு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்படத் தயாரான போது) என் தந்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு, “எங்களுக்காகப் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இறைவா! நீ இவர்களுக்கு வழங்கிய உணவில் அருள்வளம் (பரக்கத்) புரிவாயாக! இவர்களை மன்னித்து, இவர்களுக்குக் கருணை புரிவாயாக!” (அல்லாஹும்ம, பாரிக் லஹும் ஃபீமா ரஸக்த்தஹும்,, வஃக்ஃபிர் லஹும், வர்ஹம்ஹும்) எனப் பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)

நூல் : முஸ்லிம் (4149)

மேலும் நாம் அன்றாடம் நமது தொழுகையில் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்காக ஸலவாத் எனும் துஆ செய்கிறோம். இவ்வாறு தனக்காக துஆ செய்யுமாறு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நம்மை வலியுறுத்தி உள்ளனர். மேலும் பாங்கு முடிந்தவுடன் எனக்காக துஆச் செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளனர். அதை ஏற்று நாம் அல்லாஹும்ம் ரப்ப ஹாதிஹித் … என்ற துஆவை பாங்குக்குப் பின்னர் ஓதுகிறோம். இதையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.

உயிருள்ளவர் தன்னைப் போன்று உயிருடன் இருப்பவரிடம் தனக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு கூறுவது தவறல்ல. ஆனால் உயிருள்ளவர் இறந்து போனவரிடம் இவ்வாறு கோரிக்கை வைப்பது இணை வைப்பாகும்.

நாம் உயிருள்ளவரிடம் பேசும் போது அவரை சாதாரண மனிதன் என்றே கருதுகின்றோம். ஆனால் இறந்து போனவரிடம் பேசும் போது அவருக்கு இறைவனுடைய தன்மைகள் இருப்பதாக கருதப்படுகின்றது.

சப்தமின்றி மனதுக்குள் கேட்கப்படும் கோரிக்கையை அல்லாஹ்வால் மட்டுமே அறிய முடியும். எந்த மொழியில் கேட்டாலும் அதை இறைவனால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். ஒரே நேரத்தில் எத்தனை பேர் அழைத்தால் அனைவரின் பிரார்த்தனையையும் அவனால் மட்டுமே பிரித்து அறிய முடியும். இந்தத் தன்மைகள் மனிதர்களுக்கு இல்லை.

இறந்து போனவரிடம் கோரிக்கை வைப்பவர்கள் மேற்கண்ட தன்மைகள் இறந்து போனவர்களுக்கு இருப்பதாக நினைக்கின்றனர். எனவே தான் அல்லாஹ்விடம் கேட்பது போன்று இவர்களிடம் கேட்கின்றனர். இது இணைவைப்பாகும்.

ஏகத்துவம்

Friday, October 27, 2017

கூட்டு துஆ

மறு ஆய்வு கூட்டு துஆ

கூட்டு துஆ தொடர்பாக ஏற்கனவே ஆய்வுத் தொடர்களை வெளியிட்டிருந்தாலும் தற்போது புதிதாக சில வாதங்களை சிலர் முன்வைத்திருப்பதால் அவற்றுக்குப் பதிலளிப்பது நமது கடமை என்ற அடிப்படையில் இந்தக் கட்டுரை இங்கே பதியப்படுகின்றது.

ஆதாரம்: 1

“ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அவர்களில் சிலர் பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் ஆமீன் கூறினால் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹபீப் பின் மஸ்லமா (ர-), நூல்: ஹாகிம் 5478

இதே செய்தி இமாம் தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு ஹாமித் பக்ரீ, கூட்டு துஆ ஓதலாம் என்று வாதிடுகிறார்.

இந்த இரண்டு நூற்களிலும் மூன்றாவது அறிவிப்பாளராக “இப்னு லஹீஆ’ என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறியுள்ளனர். இவருடைய புத்தகங்கள் எரிந்து விட்டதால் இவரது மனனத்தன்மை பாதிக்கப்பட்டது என்பதே இவரது பலவீனத்துக்குக் காரணம்.

எனவே இவருடைய நூல் எரிவதற்கு முன்பு இவரிடமிருந்து அறிவித்தவர்களின் அறிவிப்பை ஏற்கலாம். இதற்குப் பிறகு இவரிடமிருந்து அறிவித்தவர்களின் அறிவிப்பை ஏற்கக் கூடாது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

அரபி 1

இப்னு லஹீஆவிடமிருந்து இப்னு வஹப் அல்முக்ரிஉ மற்றும் முந்தைய காலத்தில் வாழ்ந்தவர்கள் அறிவித்த அறிவிப்புகள் தரமானவை.

இப்னு லஹீஆ ஹதீஸ் கலையில் பலவீனமானவராவார். இவருடைய புத்தகங்கள் எரிவதற்கு முன்பு இவரிடமிருந்து (ஹதீஸை) எழுதியவர்களின் அறிவிப்புகள் மிகச் சரியானவை. உதாரணமாக இப்னுல் முபாரக், அல்முக்ரிஉ ஆகியோரைப் போன்று. இவ்வாறு அபூ ஹஃப்ஸ் ஃபல்லாஸ் என்பார் தெரிவிக்கின்றார்.

நூல்: சியரு அஃலாமின் நுபலாஃ (பாகம் : 8, பக்கம் : 11)

அரபி 2

இப்னு லஹீஆவின் புத்தகங்கள் எரிவதற்கு முன்பு அவரிடமிருந்து கேட்டவர்களின் அறிவிப்புகள் சரியானவை. உதாரணமாக அப்துல்லாஹ் பின் வஹப், அப்துல்லாஹ் பின் முபாரக் மற்றும் அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ ஆகியோரின் அறிவிப்புகள் சரியானவை.

நூல்: மீஸானுல் இஃதிதால் (பாகம் : 4, பக்கம் : 166)

இப்னு வஹம், இப்னுல் முபாராக், முக்ரீ ஆகியோர் இப்னு லஹீஆவின் மாணவர்கள். இம்மூவரும் இப்னு லஹீஆவிடம் ஆரம்ப நேரத்தில் செவியுற்றவர்கள் என்றும் இவர்கள் இப்னு லஹீஆவின் வழியாக அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்றும் இமாம்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 5, பக்கம் : 330

அபாதிலாக்கள் என்று கூறப்படும் நபர்கள், அதாவது அப்துல்லாஹ் என்ற பெயரைக் கொண்ட நபர்கள் இப்னு லஹீஆவிடமிருந்து அவருடைய மூளை குழம்புவதற்கு முன்பு அவரிடமிருந்து அறிவித்தவர்கள் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே அப்துல்லாஹ் பின் முபாரக் அப்துல்லாஹ் பின் வஹப், அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ ஆகியோர் இப்னு லஹீஆவின் மனனத்தன்மை பாதிக்கப்படுவதற்கு முன்பு அறிவித்தவர்கள் என்பதால் இவர்களின் அறிவிப்பை ஏற்கலாம் என்று இந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஹாமீத் பக்ரீ கூட்டு துஆ ஓதுவதற்கு ஆதாரமாகக் காட்டும் மேலுள்ள செய்தியை இப்னு லஹீஆவிடமிருந்து அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ என்பவர் அறிவிக்கின்றார். இவர் இப்னு லஹீஆவின் மனனத்தன்மை பாதிக்கப்படுவதற்கு முன்பு அவரிடமிருந்து அறிவித்தவர் என்பதால் இது சரியான செய்தி என்று பக்ரீ வாதிடுகிறார்.

இந்த ஹதீஸில் இப்னு லஹீஆவின் விமர்சனத்தைத் தவிர்த்து வேறெந்த குறையும் இல்லாவிட்டால் இவரது இந்த வாதத்தை பரிசீலிக்கலாம். ஆனால் இச்செய்தி பலவீனம் என்பதற்கு வேறொரு குறையும் உள்ளது.

இந்த செய்தியை ஹபீப் பின் மஸ்லமா (ரலி) என்ற நபித்தோழரிடமிருந்து அபூ ஹுபைரா என்பவர் அறிவிக்கின்றார். ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 42 வது வருடத்தில் மரணிக்கிறார்கள். அபூ ஹுபைரா ஹிஜ்ரீ 41 வது வருடத்தில் தான் பிறக்கின்றார்.

அரபி 3

ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ நாற்பத்து இரண்டாவது வருடத்தில் மரணித்தார்கள்.

நூல்: சியரு அஃலாமின் நுபலாஃ (பாகம் : 3, பக்கம் : 189)

அரபி 4

அபூ ஹுபைரா ஜமாஅத் வருடம் என்றழைக்கப்படும் ஹிஜ்ரீ 41வது வருடத்தில் பிறந்தார்.

நூல்: தஹ்தீபுல் கமால்

ஆக ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் மரணிக்கும் போது அபூ ஹுபைராவின் வயது ஒன்றாகும். எனவே அபூஹுபைரா ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை. அவர்களிடமிருந்து எதையும் நேரடியாகக் கேட்கவில்லை என்பது உறுதியாகின்றது.

இந்த அடிப்படையில் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் முறிவு இருப்பதால் இந்தச் செய்தி பலவீனமாகிறது. இதை ஹாமித் பக்ரி விளங்கியிருந்தால் இதை ஆதாரமாகக் கொண்டு கூட்டு துஆ என்ற பித்அத்தைச் செய்திருக்க மாட்டார்.

ஆதாரம்: 2

கைஸ் அல்மதனீ கூறுகிறார்:

ஒருவர் ஸைத் பின் சாபித் (ரலி) அவர்களிடம் வந்து ஒரு விஷயம் குறித்து வினவினார். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள் அவரிடம் பின்வருமாறு கூறினார்கள்:

நீங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால் ஒரு நாள் நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் இன்னாரும் பள்ளியில் இருந்தோம். எங்கள் இறைவனான அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து அவனை நினைத்துக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்கள் மௌனமாகி விட்டோம். நீங்கள் முன்பு ஈடுபட்டிருந்த காரியத்தை மீண்டும் தொடருங்கள் என்று கூறினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு முன்பாக நானும் என்னுடன் இருந்தவரும் பிரார்த்தனை செய்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் பிரார்த்தனைக்கு ஆமீன் சொன்னார்கள்.

பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் (தனது பிரார்த்தனையில்) இறைவா, என்னுடைய இந்த இரு தோழர்கள் கேட்டதை உன்னிடம் கேட்கிறேன். மேலும் மறந்துவிடாத கல்வியையும் உன்னிடம் கேட்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறினார்கள்.

உடனே நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே மறந்துவிடாத கல்வியை நாங்களும் அல்லாஹ்விடம் வேண்டுகிறோம்’ என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இதில் தவ்சீ குலத்தைச் சாந்த வாலிபர் (அபூஹுரைரா) உங்களை முந்திவிட்டார்’ என்றார்கள்.

நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா

கூட்டு துஆ ஓதலாம் என்று கூறக் கூடியவர்கள் இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலான அல்இசாபா ஃபீ தம்யீசிஸ் சஹாபா எனும் நூலில் இச்செய்தி சரியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றார். இப்னு ஹஜர் அவர்களின் இக்கூற்றையும் மேற்கண்ட செய்தியைச் சரிகாணுபவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

தங்களுடைய பித்அத்திற்கு ஏதேனும் ஆதாரம் கிடைக்காதா என்று தேடித் திரிந்தவர்களின் கண்ணில் இச்செய்தி பட்ட மாத்திரத்தில் முழுமையான ஆய்வு செய்யாமல் அரைகுறை ஞானத்தோடு இதை ஆதாரமாகக் கருதி மக்களுக்கு மத்தியில் இச்செய்தியைப் பரப்பியும் வருகின்றனர்.

உண்மையை உணர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தச் செய்தியைப் பற்றி ஆய்வு செய்பவர்கள் இச்செய்தி பலவீனமானது என்ற முடிவுக்கே வருவார்கள்.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கைஸ் அல்மதனீ இடம்பெறும் மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரை தவறுதலாக சரி என்று கூறி விட்டார்கள். இவருடைய தவறைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கூட்டு துஆவை நியாயப்படுத்துகிறார்கள்.

ஆனால் இந்தச் செய்தியை அறிவிக்கும் கைஸ் அல்மதனீ என்பவர் பலவீனமானவர் என்று இமாம் இப்னு ஹஜர் அவர்களே தனது நூலான தக்ரீபுத் தஹ்தீப் எனும் நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

அரபி 5

கைஸ் அல்மதனீ என்பவர் யாரென அறியப்படாதவர்.

நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம் : 1, பக்கம் : 458

கைஸ் அல்மதனீ என்பவர் நம்பகமானவர் என்பது உறுதி செய்யப்படவில்லை. இவர் முகவரியற்றவர் என்பதால் இவர் பலவீனமானவர். இப்படிப்பட்டவர் அறிவித்த செய்தியை கூட்டு துஆ ஓதுவதற்கு எப்படி ஆதாரமாக எடுக்க முடியும்?

இவர் நம்பகமானவர் என்று ஒரு அறிஞர் கூட சான்று அளிக்கவில்லை.

இமாம் ஹைஸமீ அவர்கள் இந்த ஹதீஸைத் தனது நூலில் குறிப்பிட்டு இதில் இடம்பெறும் கைஸ் அல்மதனீ நம்பகமானவர் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.

அரபி 6

இந்தச் செய்தியை தப்ரானீ பதிவு செய்துள்ளார். இதில் கைஸ் என்பவர் இடம்பெறுகிறார். இவரிடமிருந்து இவருடைய மகனைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. இதில் உள்ள மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாவர்.

நூல்: மஜ்மஉ ஸவாயித், பாகம் : 9, பக்கம் : 347

இவரைத் தவிர உள்ள மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று ஹைஸமீ சான்றளிக்கிறார். எனவே இவர் நம்பகமானவர் இல்லை என்பது இதிலிருந்து புரிகின்றது.

திர்மிதீ நூலுக்கு விரிவுரை வழங்கிய இமாம் முபாரக் ஃபூரி அவர்களும் இப்னு மாஜா நூலுக்கு விரிவுரை வழங்கிய இமாம் நூருத்தீன் சனதீ அவர்களும் இமாம் அல்பானீ அவர்களும் மற்றும் தற்கால சில அறிஞர்களும் கைஸ் அல்மதனீ பலவீனமானவர் என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

எனவே ஹதீஸ் கலை அடிப்படையில் இவர் இடம்பெற்றுள்ள செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி பலவீனமானது என்பது நிரூபணமாகின்றது.

இந்தப் பலவீனமான ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டால் அந்தச் செயல் ஒருக்காலும் இறைவனால் அங்கீகரிக்கப்படாது. அது நரகத்திற்கு இழுத்துச் செல்லும் பித்அத் என்ற அனாச்சாரம் என்பதைக் கொள்கை வாதிகள் மறந்து விடக்கூடாது.

சரியான கொள்கையை விட்டு தடம் புரண்டு அசத்தியக் கொள்கைக்குச் செல்வதை விட்டும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!