பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, October 10, 2017

அலோபதி எனும் ஆங்கில மருத்துவத்தால

அலோபதி எனும் ஆங்கில மருத்துவத்தால் கேடுகள் ஏற்படுவதால் அந்த மருத்துவம் செய்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். கேடு தரும் அனைத்தும் மார்க்கத்தில் ஹராம் என்ற நபிமொழியை எடுத்துக் காட்டுகிறார்கள்.

சில நோய்கள் வாராமல் இருக்க தடுப்பூசி போடுவதும், போலியோ சொட்டு மருந்து போடுவதும், காய்ச்சல், சர்க்கரை நோய்க்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதும் கூடாது எனவும் பிரச்சாரம் செய்கிறார்கள்.

நோய்கள் அனைத்தும் நமது உடலை சரி செய்வதற்காகவே வருகிறது. எனவே எந்த மருத்துவமும் பார்க்கக் கூடாது. அந்த நோய்கள் தானாக குணமாகும் வரை பொருத்து இருந்தால் உடலில் உள்ள குறைபாடுகள் நீங்கி விடும் என்று சிலர் கூறுகின்றனர்.

மற்றும் சிலர் ஹோமியோபதி, ஆயுர்வேதிக், யூனானி, சித்தா, அக்கூ பஞ்சர், ஆகிய மருத்துவம் பார்க்கலாம். அல்லோபதி மருத்துவம் மட்டும் கூடாது என்று கூறுகிறார்கள்.

மருந்துகளை விற்பதற்காகவே நோயாக இல்லாத ஒன்றை நோய் என்று சொல்லி அலோபதி மருத்துவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.

இஸ்லாமிய அடிப்படையில் இது குறித்து என்ன முடிவு எடுப்பது?
-அப்துர் ரஹ்மான், திருத்துறைப்பூண்டி
****************************************

இன்னின்ன ஆங்கில மருந்துகள் இன்னின்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்; பாரதூரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்; இது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கேடு தரும் அனைத்தும் ஹராம் என்ற நபிமொழியின் அடிப்படையில் ஆங்கில மருத்துவம் கூடாது என்பதுதான் மார்க்க அடிப்படையில் வைக்கப்படும் வாதமாகும்.

இது குறித்து முதலில் நாம் ஆய்வு செய்வோம்.

கேடு தரும் அனைத்தும் ஹராம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைச் சட்டங்களில் ஒன்றாக இருக்கிறது உண்மைதான்.

கேடு தரும் வழியைத் தவிர்த்தால், அதைவிட அதிகக் கேடு ஏற்படும் என்றால் அதிகக் கேட்டிலிருந்து விடுபடுவதற்காக சிறிய கேட்டை சகித்துக் கொள்ளலாம் என்பதும் இஸ்லாத்தின் அடிப்படைச் சட்டங்களில் ஒன்றாகும்.

மதுபானத்தையும், சூதாட்டத்தையும் அல்லாஹ் தடை செய்தபோது அதில் மனிதர்களுக்கு சில பயன்கள் உள்ளன. அதன் பயனை விட அதன் கேடு அதிகமாக உள்ளது என்று கூறுகிறான்

மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்கு சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும்1 மிகப் பெரியது'' எனக் கூறுவீராக!
(திருக்குர்ஆன் 2:219)

பயன்களையும், கேடுகளையும் எடை போட்டு, கேடுகள்தான் அதிகம் என்பதால் மதுவையும், சூதையும் அல்லாஹ் தடை செய்ததாக இவ்வசனம் கூறுகிறது.

ஆங்கில மருந்துகள் பெரும்பாலும் ரசாயண முறையில் தயாரிக்கப்படுவதால் அதனால் பக்க விளைவுகளும், சில பாதிப்புகளும் ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால், அதனால் ஏற்படும் குணமடைதல் என்ற நன்மைக்காக அந்தப் பக்க விளைவுகளைச் சகித்துக் கொள்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட அம்சம்தான்.

ஒருவன் தனது மனைவியை விவாகரத்து செய்தால் அது அவளுக்குக் கேடுதான். ஆனால் விவாகரத்து செய்வதில் கணவன் உறுதியாக இருக்கும்போது அதை அனுமதிக்காவிட்டால் அவளது உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும் என்பதை எண்ணிப் பார்க்கும்போது பெரிய தீமை ஏற்படாமல் தடுக்க விவாகரத்து எனும் சிறிய தீமை அனுமதிக்கப்படுகிறது என்று புரிந்து கொள்கிறோம்.

ஆண்கள் பலதார மணம் செய்வது, முதல் மனைவிக்கு பாதிப்பு என்ற போதும், ஆண்கள் விபச்சாரத்தில்தான் விழுவார்கள் என்ற நிலை ஏற்படும்போது அந்தப் பெரிய தீமையில் விழாமல் இருக்க பெண்களுக்கு சிறிய பாதிப்பாக உள்ள பலதார மணம் அனுமதிக்கப்பட்டது என்று புரிந்து கொள்கிறோம்.

இஸ்லாத்தில் இப்படி ஏராளமான சட்டங்கள் உள்ளன.

இந்த அடிப்படையை ஆங்கில மருத்துவம் தவிர, மற்ற விஷயங்களில் அனைவரும் சரியாகவே புரிந்து நடந்து கொள்கிறோம்.

உதாரணமாக, ஏர் கண்டிஷன், பிரிட்ஜ் ஆகிய சொகுசான சாதனங்களை நாம் பயன்படுத்துகிறோம். இவற்றில் இருந்து வெளிப்படும் கதிர்களால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகிறது. சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களைத் தடுக்கும் ஓசோன் படலம் பாதிக்கப்பட்டால் புற ஊதாக்கதிர்கள் வடிகட்டப்படாமல் பூமிக்கு வரும். இதனால் பல வித நோய்கள் ஏற்படும் என்று கண்டறிந்துள்ளனர்.

ஆனாலும் இந்த சாதனங்களால் நமக்குக் கிடைக்கும் உடல் சுகத்துக்காக அதை நாம் சகித்துக் கொள்கிறோம். ஓசோன் படல பாதிப்பை விட உடல் சுகம் நமக்குப் பெரிதாகத் தெரிவதால், அதை நாம் எந்த உறுத்தலும் இல்லாமல் பயன்படுத்துகிறோம்.

ஆங்கில மருத்துவத்துக்கு எதிராக வைக்கப்படும் வாதம் இதற்கும் பொருந்தும் என்றாலும், யாரும் பொருத்திப் பார்ப்பதாகத் தெரியவில்லை.

புவி வெப்பம் அதிகமாவதால் பனிமலைகள் விரைவாக உருகி கடலில் கலக்கும். இதனால் கடல் நீர் மட்டம் அதிகமாகி நிலப்பரப்பை விழுங்கி விடும். கடலை ஒட்டிய ஊர்கள் காணாமல் போய்விடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனாலும் கார், பேருந்து, லாரி, ரயில் என எரி பொருளில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்தி பூமியின் வெப்பத்தை நாம் அதிகமாக்குகிறோம்.

வீடுகளில் மிக்ஸி, கிரைண்டர், வாஷின் மிசின், ஓவன், டிவி இன்னும் பல நவீன சாதனங்களைப் பயன்படுத்தி பூமியின் வெப்பத்தை அதிகப்படுத்துகிறோம். இதனால் பாரதூரமான பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்தும் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் அதிகம் என்று நாம் கருதுவதால், பூமி வெப்பமாவது பற்றி கவலைப்படாமல் இருக்கிறோம்.

காற்று மாசுபடுவதால் தான் அதிகமான கேடுகள் மனிதனுக்கு ஏற்படுகின்றன. பயனற்ற பட்டாசு போன்றவற்றால் காற்றை மாசுபடுத்துவதை நாம் தவறு என்கிறோம். ஆனால் நமது வாகனங்களில் இருந்து வெளிப்படும் நச்சுப்புகையால் காற்று மாசு பட்டாலும் அவற்றை நாம் பயன்படுத்தவே செய்கிறோம்.

ஏனெனில், அதனால் நமக்கு ஏற்படும் நேரம் மிச்சமாவது, சிரமம் குறைவது, அதிக வேலைகள் செய்ய முடிவது போன்ற நன்மைகள் இருப்பதால் வாகனங்களைப் பயன்படுத்துகிறோம். வசதி இல்லாவிட்டாலும் வாடகை வாகனத்திலும், பேருந்துகளிலும் பயணம் செய்கிறோம்.

இதனால் ஏற்படும் பக்க விளைவுகளை நாம் பொருட் படுத்துவதில்லை.

இப்படி ஆயிரமாயிரம் உதாரணங்களை நாம் கூறலாம்.

ஆங்கில மருத்துவத்தால் பக்க விளைவுகள் உண்டு என்றாலும், அதனால் கிடைக்கும் நன்மை அதிகம் என்றால் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

தலை வலி வந்தால், காய்ச்சல் வந்தால், ஜல தோசம் வந்தால் மருத்துவம் செய்ய வேண்டாம் தானாக குணமாகி விடும் என்ற வாதமும் மடமையான வாதமாகும்.

மேற்கண்ட வியாதிகள் தானாக குணமாகும் என்பது பெரும்பாலும் உண்மைதான். ஆனால் ஒரு நிறுவனத்தை நடத்துபவன் தானாக குணமாகட்டும் என்று பத்து நாட்கள் படுத்துக் கிடந்தால் சோற்றுக்கு என்ன செய்வது? நிறுவனத்தின் நிர்வாகம் என்னாவது?

ஒரு நிறுவனத்தின் ஊழியர் காய்ச்சலுக்காக ஒரு நாள், இரு நாட்கள் விடுமுறை எடுத்தால் முதலாளி சலுகை கொடுப்பார். அடிக்கடி பத்து நாட்கள், இருபது நாட்கள் விடுமுறை எடுத்தால் வேலை காலியாகி விடும். யாரும் அவரை வேலைக்கு வைத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே ஒரு மாத்திரையைப் போட்டுக்கொண்டு காய்ச்சல் குறைந்த பின் பணிகளில் ஈடுபட்டால் அதனால் கிடைக்கும் நன்மைகள் அதிகம். இதுதான் நடைமுறைக்கு ஏற்றது.

தானாக குணமாகும்  என்று படுத்துக் கிடப்பவன் உழையாத் தடியனாக, சோம்பேறியாக இருப்பான். குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பை உணராத வனாக இருப்பான். அல்லது பரம்பரைச் சொத்து அதிகம் இருந்து படுத்துக் கொண்டே சாப்பிடுபவனாக இருப்பான்.

இந்தத் தத்துவத்தை ஒரு வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டுப் போன பெண் கடைப்பிடித்தால் என்னவாகும்? காய்ச்சல் வந்தவுடன் மாத்திரை ஊசி போட்டுக் கொண்டு ஓரிரு நாட்களில் எழுந்துவிட்டால் பிரச்சனை இல்லை. தானாக குணமாகும் என்று ஜலதோசத்துக்கு பத்து நாட்கள், காய்ச்சலுக்கு பத்து நாட்கள் படுத்துக் கிடந்தால் விவாகரத்தில்தான் முடியும்.

எந்தக் கருத்தைக் கூறுவதாக இருந்தாலும் அது பிராக்டிகலாக சரிப்படுமா என்று கவனிக்க வேண்டும். வரட்டுத் தத்துவத்தைப் பரப்பினால் மருத்துவம் செய்வதால் ஏற்படும் கேடுகளை விட பெருங்கேடு வாழ்க்கையில் ஏற்பட்டுவிடும்.

மேலும் இந்த நோய்கள் தானாக குணமாகும் என்று கூறுவோர் தலைவலி காய்ச்சலைத்தான் உதாரணம் காட்டுகின்றனர். ஒருவனுக்கு கேன்சர் வந்து விட்டால் அது தானாக குணமாவதில்லை. மருத்துவத்தினாலும் சரிபாதி பேருக்கு குணமாவதில்லை. ஒவ்வொரு நாளும் அது வளர்ந்து வருவதை ஸ்கேன் செய்து பார்க்க முடியும். கேன்சர் வந்த ஒருவன் எந்த மருத்துவமும் செய்யாமல் குணமானான் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் கூட இல்லை.

என்னை ஒரு ஊரில் உரை நிகழ்த்த அழைத்துள்ளனர் என்று வைத்துக் கொள்வோம். எட்டு மணிக்கு நான் உரை நிகழ்த்த வேண்டும். ஏழு மணிக்கு எனக்குத் தலைவலி வந்து விட்டால் என்னால் உரை நிகழ்த்த முடியாது. இது தானாக குணமாகும் நோய் என்றாலும் ஒரு மாத்திரையைப் போட்டால் தலைவலி அரை மணி நேரத்தில் போய்விடுகிறது. இப்போது என்னால் உரை நிகழ்த்த முடியும். இதற்காக செய்த ஏற்பாடுகளும், செலவுகளும் வீணாகாமல் தவிர்க்கப்படும். அந்த மாத்திரையால் சிறு பக்க விளைவு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்பதுதான் பிராக்டிகலான முடிவாகும்.

அடுத்து ஆங்கில மருத்துவம் வேண்டாம்; மற்ற மருத்துவம் சரி என்று வாதிட்டால் அதுவும் முழுமையாக சரியான வாதம் அல்ல.

ஆங்கில மருத்துவம் மட்டுமே ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டதாகும். மற்ற மருத்துவ முறைகள் ஆய்வு ஏதுமின்றி பாரம்பரிய அடிப்படையில் சொல்லப்பட்டதாகும். அவற்றில் பெரும்பாலும் வாயில் வந்தவாறு விட்டு அடிப்பவர்கள் அதிகமாகும்.

ஒருவருக்கு இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தால் நீங்காத நா வறட்சி ஏற்படும். பாதங்களில் வலி ஏற்படும். அடிக்கடி சிறு நீர் போகும். மலச் சிக்கல் ஏற்படும். உடல் அதிகமாக மெலியும். இப்படி பல அறிகுறிகள் உள்ளன. இவற்றைப் பார்க்கும் ஆங்கில மருத்துவர்கள் இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கலாம்; டெஸ்ட் எடுங்கள் என்று கூறுகிறார்கள்.

டெஸ்ட் எடுத்துப் பார்த்தால் சக்கரையின் அளவு அதிகமாக இருப்பது தெரிகிறது. இதற்கு மாத்திரை உட்கொண்ட பின்னர் சர்க்கரை கட்டுக்குள் வருகிறது. அதன் பின்னர் அதையே தொடராமல் உணவுக்கட்டுப்பாடு, வாக்கிங், உடலுழைப்பு என்று வாழ்க்கையை அமைத்துக் கொள்வது நல்லது என்றுதான் அதிகமான மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நிலை எனக்கு ஏற்பட்டு சர்க்கரையைக் குறைக்கும் மாத்திரைகளை சில நாட்கள் எடுத்து அதன் பின்னர் டாக்டர்களின் ஆலோசனைப்படி மாத்திரை இல்லாமல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன்.

ஆனால் நாக்கைக் கட்டுப்படுத்த நாம் தயாராக இல்லாததாலும், உடலுழைப்புக்குத் தயாராக இல்லாததாலும் மாத்திரைதான் வாழ்க்கை என்று நாம் ஆக்கிக் கொள்கிறோம்.

இரத்தத்தில் சர்க்கரை ஆரம்ப நிலையில் இருக்கும்போது மாற்று மருத்துவம் சிறிய அளவில் பயன் தரலாம். ஆனால் சர்க்கரை முற்றிய பிறகு மாற்று மருத்துவம் என்று போனவர்கள் சீக்கிரமே போய் சேர்ந்து விட்டனர் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.

மருந்தை விற்பதற்காக சர்க்கரை நோய் என்கின்றனர் என்றும் வாதிடுகின்றனர்.

மருந்தை விற்பதில் என்ன தவறு உள்ளது? இரத்தத்தை சோதிக்காமல் ஒவ்வொருவருக்கும் சர்க்கரைக்கான மாத்திரையைத் தருவதில்லை. டெஸ்ட் செய்து பார்த்து இவருக்கு இவ்வளவு கொடுக்கலாம் என்று முடிவு செய்த பின் மாத்திரை கொடுக்கின்றனர். மாத்திரைதான் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் மாத்திரை கொடுத்தால் காசுக்காக எழுதித் தருகின்றனர் என்ற வாதம் அறிவுடைய வாதமா? எல்லாமே காசுக்காகத்தான் செய்கின்றனர்.

எந்த ஆய்வும் இல்லாமல் வாயில் வந்ததை உளறுவோரின் கூற்றை நம்பும் இவர்கள் ஆய்வு அடிப்படையில் இரத்தத்தை எடுத்து சோதித்துப் பார்த்து சர்க்கரையில் அளவு கூடியதையும், குறைந்து இருப்பதையும் சொல்லி மாத்திரை எழுதித்தந்தால் மாத்திரையை விற்கத்தான் இப்படி கூறுவதாகப் பிரச்சாரம் செய்கின்றனர்.

அப்படியானால் மற்ற மருந்துகள் எல்லாம் இலவசமாகத் தருகிறார்களா? லேகியம், சூரணம், தைலம், அரிஷ்டம் என்று தருகிறார்களே அவை ஆங்கில மருந்துகளை விட அதிக விலை கொண்டவை. ஆங்கில மாத்திரை நாலணவுக்குக் கிடைக்கும். உடனே குணம் ஏற்படும். லேகியம், சூரணம் இரண்டாயிரம், மூன்றாயிரம் என்று பிடுங்கி விடுகின்றனர். ஒன்றும் ரிசல்ட் இல்லையே என்று கேட்டால் இன்னும் மூனு மாதம் சாப்பிடுங்கள்; மெதுவாகத்தான் குணமாகும் என்கிறார்கள்.

அறிவாளிகளுக்கு இதுவல்லவா மோசடியாகத் தெரிய வேண்டும்?

எனக்கு கேன்சர் வந்தது. ஆபரேசன் செய்வதற்குப் பயந்து கொண்டு ஹோமியோபதிக்குப் போனேன். ஆனால் மூன்று மாதம் அந்த மருந்தை எடுத்ததில் கட்டி மேலும் பெரிதாகியது. ஹோமியோபதியில் இதற்கு நிவாரணம் இல்லை என்று உணர்ந்து ஆப்பரேசன் செய்தேன். ஆரம்ப ஸ்டேஜில் அறுவை சிகிச்சை செய்ததால் அந்த அறிகுறி சிறிதும் இல்லாமல் ஐந்து ஆண்டுகளாக இருந்து வருகிறேன்.

அடிக்கடி மூச்சு இளைப்பு ஏற்பட்டதால் ஸ்கேன் செய்து பார்த்து இரத்தக் குழாயில் அடைப்பு  இருப்பது தெரிய வந்தது. நான் லேகியம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் சரிப்படாது என்று கருதி ஆஞ்சயோ பிளாஸ்ட் செய்து கொண்டேன். அதன் பின்னர் நான் முன் போல் நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் அளவுக்கு நன்றாக உள்ளேன்.

அம்மை, காலரா என்று ஊரையே வாரிச்சுருட்டிய கொள்ளை நோய்களை அறுபது வயதைக் கடந்தவர்கள் அறிவார்கள். இன்று அம்மை, காலரா அறவே இல்லை. அதற்கான தடுப்பு ஊசி மூலம் அவை ஒழிக்கப்பட்டு விட்டன.

உயிர்க் கொல்லி நோய்கள் விஷயத்தில் அலோபதி தவிர வேறு மருத்துவ முறைகளை மேற்கொண்டவர்கள் குணமடைய முடியவில்லை.

சாதாரண நோய்களாக இருந்தால் பாட்டி வைத்தியம்கூட செய்து கொள்ளலாம்.

ஆங்கில மருத்துவத்தை வைத்து பிழைப்பு நடத்துவோர் பலர் செய்யும் அநியாயம் காரணமாக மருத்துவ முறையை குறை காண்பது நியாயமல்ல. எதற்கெடுத்தாலும் ஸ்கேன் செய்யச் சொல்வதும், தேவையற்ற சோதனைகளை தமக்கு கிடைக்கும் கமிஷனுக்காக எழுதிக் கொடுப்பதும், கமிஷனுக்காக அதிக விலையுள்ள மாத்திரைகளை எழுதிக் கொடுப்பதும், பிணத்துக்கு வைத்தியம் பார்த்து பணம் பிடுங்குவதும் உண்மை.

ஆனால் நல்ல மருத்துவர்களைக் கண்டறிந்து விட்டால் ஆங்கில மருத்துவத்துக்கு நிகரான மருத்துவம் ஏதும் இல்லை. அது மட்டும்தான் பக்க விளைவுகள் இருந்தாலும் காரண காரியங்களை ஆய்வு செய்து கருவிகள் மூலம் உறுதி செய்து அந்தக் காரணத்துக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கும் முறையாக உள்ளது என்பதுதான் உண்மை.

பதில்கள் : பீ.ஜைனுல் ஆபிதீன்

நன்றி : உணர்வு வார இதழ்

No comments:

Post a Comment