பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Sunday, September 14, 2014

கெட்ட ஜின்கள் தான் பேய்களா

கெட்ட ஜின்கள் தான் பேய்களா


பேய்கள் போல் காட்சி தருவது கெட்ட ஜின்கள் என்று சொல்கிறார்களே இது உண்மையா?
”இறந்தவர்கள் ஆவியாக மாறி மீண்டும் உலகிற்கு வந்து, உயிருள்ளவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள்; இந்த ஆவிகள் தான் பேய், பிசாசுகள்’ என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
இந்த நம்பிக்கை குர்ஆன் ஹதீசுக்கு முற்றிலும் முரணானது.  பேய் பிசாசுகள் இருக்கின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் குர்ஆன் ஹதீஸை மறுத்தவராவார்.
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும்மரணிக்காதவற்றைஅவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. 
(அல்குர்ஆன் 39:42)
இந்த வசனத்தைச் சிந்தித்தால் இறந்தவரின் ஆவி பேயாக வரும் என்ற நம்பிக்கைக்கும் இஸ்லாத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம்.  இறந்து விட்ட மனிதர்களின் உயிர்களை அதாவது ஆவிகளை இறைவன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக இந்த வசனம் கூறுகின்றது.  இறைவனது கட்டுப்பாட்டை விட்டு தப்பித்துஆவிகள் இந்த உலகுக்கு வந்து விடுகின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
(அல்குர்ஆன் 23:99, 100)
நல்லறங்கள் செய்வதற்காக மீண்டும் என்னை உலகிற்கு அனுப்பி வை என்று மனிதன் கேட்கிறான். ஆனால் அது ஒரு போதும் நடக்காது.  அவனுக்கும் இந்த உலகத்திற்கும் மத்தியில் ஒரு திரை போடப்படும் என்று இந்த வசனம் கூறுகின்றது.  நல்லறங்கள் செய்வதற்காகக் கூட மனிதனை மீண்டும் அனுப்புவதில்லை என்றால்,மற்ற மனிதர்களின் மேல் பேய் பிடித்து தொல்லை தருவதற்காக ஆவிகள் எப்படி திரும்ப அனுப்பப்படும் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்
இறந்தவர்கள் மீண்டும் உலகிற்கு வர முடியாது என்பதற்கு ஹதீஸ்களிலும் ஆதாரம் உள்ளது.
உங்களில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும் மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும்.  சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலுள்ள அவரது இடம் காட்டப்படும்.  நரகவாசியாக இருந்தால் நரகிலுள்ள அவரது இடம் எடுத்துக் காட்டப்படும்.  கியாமத் நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நூல் : புகாரி 1290, 3001, 6034
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருத்த நிறமும் நீல நிறக் கண்களும் கொண்ட முன்கர்நகீர் என்ற இரு மலக்குகள் அவரிடம் வருவார்கள்.  (முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து) "இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதியிருந்தாய்?'' என்று கேட்பார்கள்.  "அவர் அல்லாஹ்வின் தூதராகவும் அவனது அடியாராகவும் இருக்கின்றார். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்'' என்று அந்த மனிதர் கூறுவார்.  "உலகில் வாழும் போதே இவ்வாறு நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்'' என்று அம்மலக்குகள் கூறுவார்கள்.  பின்னர் அவரது மண்ணறை விசாலமாக்கப் பட்டு ஒளிமயமாக்கப்படும்.  பின்னர் அவரை நோக்கி, "உறங்குவீராக'' என்று கூறப்படும்.நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறி விட்டு வருகின்றேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள், "நெருங்கிய உறவினர்களைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு உறங்கும் புது மாப்பிள்ளை போல் இந்த இடத்திலிருந்து இறைவன் உன்னை எழுப்பும் வரை உறங்குவீராக'' என்று கூறுவார்கள்.
இறந்த மனிதன் நயவஞ்சகனாக இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அவன், "இந்த முஹம்மதைப் பற்றி மனிதர்கள் பலவாறாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டிருக்கின்றேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்று கூறுவான்.  அதற்கு அவ்வானவர்கள், "நீ இப்படித் தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்'' என்று கூறுவார்கள்.  அதன் பின்னர் பூமியை நோக்கி, "இவனை நெருக்குவாயாக'' என்று கூறப்படும். அவனது விலா எலும்புகள் நொறுங்குமளவுக்கு பூமி அவனை நெருக்க ஆரம்பிக்கும்.  இறைவன் அவனது இடத்திலிருந்து அவனை எழுப்பும் வரை வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), 
நூல் : திர்மிதீ 991
இறந்தவர்கள் நல்லவர்களானாலும் கெட்டவர்களானாலும் கியாமத் நாள் வரை இந்த உலகத்திற்குத் திரும்பி வர வாய்ப்பே இல்லை என்பதை இந்த ஹதீஸ்கள் தெளிவாக உணர்த்துகின்றன.  எனவே இறந்தவரின் ஆவி உலகத்திற்கு வந்து பேயாக நடமாடுகின்றது என்று யாரேனும் ஒருவர் நம்பினால் அவர் மேற்கண்ட குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் மறுக்கின்றார் என்று தான் பொருள்.
பேய் நம்பிக்கை பொய்யானது என்பதை விரிவாக விளக்கும் வகையில் பேய் பிசாசு என்ற தலைப்பில் தனி புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரம் அறிய அதை வாங்கி படித்துக்கொள்ளுங்கள்.
ஜின்களும் பேய்களும் ஒன்றா?
பேய்கள் என்பது இறந்தவர்களின் ஆவிகள் அல்ல, கெட்ட ஜின்கள் தான் என்ற தவறான கருத்தை சிலர் பரப்பி வருகின்றனர். இக்கருத்தும் இஸ்லாத்திற்கு முற்றிலும் புறம்பானதாகும்.
ஜின்கள் என்று ஒரு கூட்டம் தற்போதும் பூமியில் வாழ்ந்து வருவதாக குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகிறது. ஜின்களை மறுத்தால் குர்ஆனையும் ஹதீஸ்களை மறுத்ததாகி விடும். எனவே ஒவ்வொருவரும் ஜின்கள் இருப்பதாக அவசியம் நம்பியாக வேண்டும்.
பேய் நம்பிக்கைக்கும் ஜின் நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தை விளங்கிக் கொண்டால் இரண்டும் ஒன்று என்று சாதாரண அறிவு படைத்தவர் கூட கூற மாட்டார்.
ஜின்கள் என்பது மனிதர்கள் அல்லாத வேறு ஒரு படைப்பாகும்.  ஜின்கள் என்பது மனிதர்களைப் போன்று பகுத்தறிவு வழங்கப்பட்டு இறைக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்ட உயிரினமாகும்.
மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது போல் சில வேற்றுமைகளும் உள்ளது. மனிதர்களை நம் கண்களால் காண முடியும். ஆனால் ஜின்களை மனிதக் கண்களால் காண முடியாது. மாறாக ஜின்களால் மனிதர்களைக் காண முடியும்.

ஜின்கள் பற்றி மேலும் விபரமறிய ஜின்களும் ஷைத்தான்களும் என்ற தலைப்பில் வெளியான புத்தகத்தை நீங்கள் படிக்கலாம்.

ஷைத்த்கானுக்கு எல்லா அதிகாரத்தையும் கொடுத்து விட்டு அவனை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவதில் அர்த்தம் இருக்கிறதா


சைத்தான் அல்லாஹ்விடம்  மனிதர்களை வழி கெடுக்கும்வாய்ப்பு  கேட்டு உலகிற்கு வந்துள்ளான் என நாம் அறிந்திருக்கிறோம். அப்போ சைத்தான் தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்க அல்லாஹ் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். நாம் அல்லாஹ்விடம் உதவி தேடினால் மட்டும் சைத்தானிடம் இருந்து அல்லாஹ் நம்மளைக் காப்பானா ?
பதில்
இறைவன் ஷைத்தானுக்கு எத்தகைய அதிகாரத்தை வழங்கியுள்ளான் என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு மனிதரையும் அவருடைய விருப்பமில்லாமல் வலுக்கட்டாயமாக தவறான பாதைக்கு ஷைத்தான் இழுத்துச் செல்வதில்லை
தவறான எண்ணங்களை ஏற்படுத்தி தீய காரியங்களின் பால் அழைப்பதும் நன்மையான காரியங்களைப் புறக்கணிக்குமாறு ஏவுவதும் தான் ஷைத்தானால் செய்ய முடியும். அவன் ஏற்படுத்திய எண்ணத்திற்குக் கட்டுப்படுபவர்கள் தீமையைச் செய்து விடுகிறார்கள். அவனது ஆசை வார்த்தைக்கு மயங்காதவர்கள் நன்மையின் பால் விரைகிறார்கள்.
மனிதன் தான் ஷைத்தானிற்குக் கட்டுப்பட்டு தவறிழைக்கிறானே தவிர ஷைத்தான் யாரையும் வலுக்கட்டாயமாக அவர்கள் விரும்பாமல் தீமைக்கு அழைத்துச் செல்வதில்லை. அது போன்று நல்ல விஷயங்களை வெறுப்பிற்குரியதாக நமக்குக் காட்டுவானே தவிர நன்மையான காரியங்களைச் செய்யவிடாமல் ஷைத்தான் யாரிடத்திலும் சண்டைக்கு வர மாட்டான். இதை நாம் நமது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அனுபவித்து வருகிறோம்.
தீய எண்ணங்களை ஏற்படுத்துவதும் தவறான வழிகளைக் காட்டுவதும் தான் ஷைத்தானுடைய வேலை என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
"அவர்களை வழி கெடுப்பேன்அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்;அவர்களுக்குக் கட்டளையிடுவேன்அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.
அல்குர்ஆன் (4 : 119)
அவன் தீமையையும்வெட்கக் கேடானதையும்நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான்.
அல்குர்ஆன் (2 : 169)
அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.
அல்குர்ஆன் (114 : 5)
ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் தீமை தவறான வழியைக் காட்டுவதைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்தும் விளங்கிக் கொள்ளலாம்.
"அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் என்னை (இறைவனுக்கு) இணையாக்கியதை மறுக்கிறேன்'' என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு
அல்குர்ஆன் (14 : 22)
மனிதன் மிகவும் பலவீனமானவன். ஒரு நேரம் இல்லாவிட்டால் மற்றொரு சூழ்நிலையில் ஷைத்தானின் ஆசை வார்த்தைகளுக்கு இனங்கி விடுகிறான். இந்த பலவீனத்தால் நாம் தவறான வழியைத் தேர்வு செய்து விடக் கூடாது. சரியான வழியில் உறுதியாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் அல்லாஹ்விடம் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடப்படுகின்றது.
ஷைத்தானுக்கு நல்லதாகக் காட்டும் தீய காரியங்களை நமக்கு தீய காரியங்களாகவே இறைவன் காட்டி ஷைத்தனுக்கு கட்டுப்படாமல் காப்பாறுவான். எனவே நாம் இந்தப் பிரச்சனையில் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவது அர்த்தமுள்ளது தான். இறைவனிடம் நாம் பாதுகாப்புத் தேடும் போது நாம் அடிமை என்பதையும் அல்லாஹ் எஜமான் என்பதையும் வெளிப்படுத்துகின்றோம். தன் அடியார்கள் தன்னிடம் உதவி தேடுவதை இறைவன் மிகவும் நேசிக்கின்றான்.