பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, September 27, 2025

முஹ்யித்தீன்_மவ்லித்_அபாயங்கள் 16

#முஹ்யித்தீன்_மவ்லித்_அபாயங்கள்

16. எல்லா நேரமும் இரட்சகர்!

انت حقا محيى الدين *انت قطب باليقين

كنت غوثا كل حين *فادفعن عنا حينا

நிச்சயமாக நீங்கள் இம்மார்க்கத்தை உயிர்ப்பித்தவராவீர். உறுதியாக நீங்கள் அச்சாணியாகத் திகழ்கிறீர்கள். எல்லா நேரமும் நீங்கள் இரட்சகராக இருக்கிறீர்கள். எனவே நாங்கள் அழிவதை விட்டும் எங்களைக் காப்பாற்றுங்கள்.

ஏறத்தாழ தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன் மரணித்து விட்ட அப்துல் காதிர் ஜீலானியிடம் பிரார்த்தனை செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா? எல்லா நேரத்திலும் இரட்சிக்கக் கூடியவர் என்ற அடைமொழியை அல்லாஹ்வைத் தவிர யாருக்கேனும் பயன்படுத்த அனுமதி உண்டா?

31:29 اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَكُلٌّ يَّجْرِىْۤ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى وَّاَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏
அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன் 31:29)

35:13 يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ ۙ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ‌ۖ  كُلٌّ يَّجْرِىْ لِاَجَلٍ مُّسَمًّى ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَـهُ الْمُلْكُ ؕ وَالَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مَا يَمْلِكُوْنَ مِنْ قِطْمِيْرٍؕ

35:14 اِنْ تَدْعُوْهُمْ لَا يَسْمَعُوْا دُعَآءَكُمْ‌ ۚ وَلَوْ سَمِعُوْا مَا اسْتَجَابُوْا لَـكُمْ ؕ وَيَوْمَ الْقِيٰمَةِ يَكْفُرُوْنَ بِشِرْكِكُمْ ؕ وَلَا يُـنَـبِّـئُكَ مِثْلُ خَبِيْرٍ

அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

(அல்குர்ஆன் 35 :13,14)

7:191 اَيُشْرِكُوْنَ مَا لَا يَخْلُقُ شَيْـًٔـــا وَّهُمْ يُخْلَقُوْنَ‌ ‌ۖ

7:192 وَلَا يَسْتَطِيْعُوْنَ لَهُمْ نَـصْرًا وَّلَاۤ اَنْفُسَهُمْ يَنْصُرُوْنَ

7:193 وَاِنْ تَدْعُوْهُمْ اِلَى الْهُدٰى لَا يَتَّبِعُوْكُمْ‌ ؕ سَوَآءٌ عَلَيْكُمْ اَدَعَوْتُمُوْهُمْ اَمْ اَنْـتُمْ صٰمِتُوْنَ

7:194 اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ عِبَادٌ اَمْثَالُـكُمْ‌ فَادْعُوْهُمْ فَلْيَسْتَجِيْبُوْا لَـكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْن

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

(அல்குர்ஆன் 7:191-194)

7:197 وَالَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا يَسْتَطِيْعُوْنَ نَـصْرَكُمْ وَلَاۤ اَنْفُسَهُمْ يَنْصُرُوْنَ‏
அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.

(அல்குர்ஆன் 7 : 197)

22:73 يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ ؕ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ‌ ؕ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــًٔـا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ‌ ؕ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ‏
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன் 22 : 73)

39:38 وَلَٮِٕنْ سَاَ لْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَيَـقُوْلُنَّ اللّٰهُ‌ ؕ قُلْ اَفَرَءَيْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اِنْ اَرَادَنِىَ اللّٰهُ بِضُرٍّ هَلْ هُنَّ كٰشِفٰتُ ضُرِّهٖۤ اَوْ اَرَادَنِىْ بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكٰتُ رَحْمَتِهٖ‌ ؕ قُلْ حَسْبِىَ اللّٰهُ‌ ؕ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُوْنَ‏
‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? ‘ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்! ‘ என்று கேட்பீராக! ‘அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள் ‘ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 39:38)

16:20 وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَخْلُقُوْنَ شَيْــًٔا وَّهُمْ يُخْلَقُوْنَؕ‏

16:21 اَمْوَاتٌ غَيْرُ اَحْيَآءٍ‌ ۚ وَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்’ என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 16:20, 21)

மவ்லிது அபிமானிகள் நாம் கேட்க விரும்புவது இது தான். அல்லாஹ்வுடைய இந்த வசனங்களை நீங்கள் நம்பப் போகிறீர்களா? இதற்கு முரணாக அமைந்த மனிதக் கற்பனையில் உருவான மவ்லிதை நம்பப் போகிறீர்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட எவருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அவர்களும் அல்லாஹ்வின் அடிமைகளே. இறந்தவர்கள். எதையும் அவர்களால் செய்ய முடியாது என்பதையெல்லாம் இந்த வசனங்கள் மிகத் தெளிவாக இரண்டாவது கருத்துக்கு இடமின்றி அறிவிக்கின்றன. இதற்கு நேர் எதிராக அமைந்த மவ்லிதை உண்மை முஸ்லிம்கள் எப்படி அங்கீகரிக்க முடியும்.

முஹ்யித்தீன்_மவ்லித்_அபாயங்கள் 15

#முஹ்யித்தீன்_மவ்லித்_அபாயங்கள்

15. ஜின்னிடமிருந்து மீட்டவர்!

ادى لعبد الله ذي النبالة *بنتا له اذ بلغوا الرسالة

قدموس جن الكرخذو الضخامة *من قطبهم هادي اولى الضلالة

அப்துல்லாஹ் என்பாரின் மகனை கர்க் எனும் பகுதியில் இருந்த சக்தி வாய்ந்த ஜின்னிடமிருந்து அப்துல் காதிர் மீட்டுக் கொடுத்தார். வழிகேடர்களுக்கு வழிகாட்டக்கூடிய மக்களுக்கு அச்சாணியாகத் திகழ்ந்த அப்துல் காதிரிடம் அவர் முறையிட்ட போது இவ்வாறு நிகழ்த்திக் காட்டினார்.

இந்தக் கவிதை வரியில் என்ன கூறப்படுகின்றது என்பதை ஹிகாயத் பகுதியின் துணையுடன் விளங்குவோம். அதன் பிறகு இதிலுள்ள அபத்தங்களை அலசுவோம்.

அப்துல் ஹக் கூறுகிறார்.

என் மகள் மாடியின் மேற்பகுதியிலிருந்து அடையாளம் தெரியாமல் கடத்தப்பட்டாள். நான் அப்துல் காதிர் ஜீலானியிடம் வந்து விபரம் கூறினேன். அதற்கவர் கர்க் எனும் பகுதியில் உள்ள பாழடைந்த இடத்துக்குச் சென்று மன நிம்மதியுடன் அமர்வீராக.

அல்லாஹ்வின் பெயரால் அப்துல் காதிரின் எண்ணப்படி எனக் கூறி உம்மைச் சுற்றி ஒரு வட்டம் போடுவீராக. இரவு சூழ்ந்தததும் ஜின் பயங்கரமான தோற்றத்தில் உம்மைக் கடந்து செல்லும். பின்னர் ஜின்களின் அரசர் புடை சூழ வருவார். அவர் உமது நோக்கத்தைப் பற்றிக் கேட்பார்.

என்னைப் பெரியார் அப்துல் காதிர் அனுப்பியதாகக் கூறிவிட்டு உன் மகள் காணாமல் போனதைக் கூறு என்றார். அவ்வாறே நான் சென்று அவர் கட்டளையிட்டவாறு செய்தேன். அவர் கூறியவாறு நடந்ததைக் கண்டேன். ஜின்களின் அரசர் குதிரையில் ஏறி வந்தார். அவரது படையினர் அவரைச் சுற்றிக் காவலுக்கு வந்தனர். அவர் நின்று மனித இனத்தைச் சேர்ந்தவனே! உனக்கு என்ன நேர்ந்தது எனக் கேட்டார். அப்துல் காதிர் உம்மிடம் என்னை அனுப்பினார் என்று நான் கூறினேன்.

உடனே அவர் கீழே இறங்கி மண்ணை முத்தமிட்டு வட்டத்தின் வெளியில் அமர்ந்தார். நான் மகள் விஷயத்தைத் தெரிவித்தேன். உடனே அவர் தம்மைச் சூழ நின்றவர்களை நோக்கி இவர் மகளைக் கடத்தியவர் யார்? எனக் கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. பின்னர் சீன நாட்டைச் சேர்ந்த முரட்டு ஜின் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதன் கழுத்தை அவர் வெட்டி விட்டு என் மகளை என்னிடம் ஒப்படைத்தார்.

முஹ்யித்தின் மவ்லிதின் ஹிகாயத்தில் கூறப்படும் விளக்கம் இது தான். இந்தக் கவிதையிலும், விளக்கத்திலும் கூறப்படும் அபத்தங்களை ஒவ்வொன்றாக நாம் ஆராய்வோம்.

இந்தக் கவிதையின் நாயகனாகக் கூறப்படும் அப்துல் ஹக் என்பார் யார்? இவரது வரலாறு என்ன? யாருக்கும் தெரியாது.

ஜின்கள் இவரது மகளைக் கடத்திச் சென்ற விபரமும் அதன் பிறகு நடந்த நிகழ்ச்சிகளும் முன் கூட்டியே அப்துல் காதிர் ஜீலானிக்கு எவ்வாறு தெரிந்தது? மறைவான விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்பதைத் தக்க சான்றுகளுடன் முன்னர் நாம் விளக்கியுள்ளோம். இந்தச் சான்றுகளுக்கு முரணாக இந்தக் கதை அமைந்துள்ளது.

ஜின் என்றொரு படைப்பு இருப்பது உண்மை தான். ஆயினும் அவை மனிதர்களைக் கடத்திச் செல்லும் என்பதற்கு எந்த ஆதாரமும் குர்ஆனிலோ, ஹதீஸிலோ கிடையாது. கெட்ட ஜின்களாக இருந்தால் கூட அவை இறைவனது கட்டளைக்கு மாறு செய்யுமே தவிர மனிதர்களைக் கடத்திச் செல்லும் என்பதற்கு எந்தச் சான்றுமில்லை.

அப்துல் காதிர் ஜீலானி காலத்திற்கு முன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலம் வரையிலுள்ள ஐநூறு வருடங்களில் எந்த ஆணும் பெண்ணும் ஜின்களால் கடத்திச் செல்லப்பட்டதாகவும் ஆதாரம் இல்லை.

ஜின்கள் மனிதர்களைக் கடத்திச் செல்லும் வழக்கமுடையவை என்றால் அறுநூறு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் இன்றைய உலகில் எந்த மனிதனும் ஜின்களால் கடத்தப்படாத மர்மம் என்ன?

இந்தக் கதையில் சீனாவைச் சேர்ந்த முரட்டு ஜின் கடத்தியதாகக் கூறப்படுகின்றது. ஒரு வேளை சீனாவில் தான் மனிதக் கடத்தலில் ஈடுபடும் ஜின்கள் இருக்க கூடுமோ? என்று கருத முடியவில்லை. ஏனெனில் சீனாவிலும் கூட ஜின்களால் எந்த மனிதனும் கடத்தப்படவில்லை. எவனோ கற்பனை செய்து உளறியிருக்கிறான் என்பதே உண்மை.

ஜின்கள் மனிதர்களைக் கடத்திச் சென்று விடும் என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் கூட ஜின்கள் அப்துல் காதிர் ஜீலானிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் என்பது குர்ஆனுடைய போதனைக்கு மாற்றமாகும்.

ஜின்கள் மனிதர்களை விட அதிகமான ஆற்றலுடையவை. மனிதர்களால் செய்ய முடியாத பல காரியங்களை அவை செய்து முடித்து விடும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. சுலைமான் நபி காலத்தில் அண்டை நாட்டு அரசியின் சிம்மாசனத்தைக் கண் மூடி திறப்பதற்குள் கொண்டு வருவதாக ஒரு ஜின் கூறிய விபரம் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 27:40)

மனிதனைப் போல் பகுத்தறிவும் ஜின்களுக்கு உள்ளது. என்னை வணங்குவதற்காகவே ஜின்களையும் மனிதர்களையும் படைத்துள்ளேன் என்று இறைவன் கூறுகிறான். (51.56)

குத்தறிவு வழங்கப்பட்டவர்களுக்குத் தான் இறைவன் சட்ட திட்டங்களை வழங்கியுள்ளான். மனிதனைப் போலவே ஜின்களும் இறைவனை வணங்கக் கடமைப்பட்டுள்ளன என்பதிலிருந்து ஜின்களுக்குப் பகுத்தறிவு உள்ளதை அறியலாம்.

மனிதனைப் போலவே பகுத்தறிவு வழங்கப்பட்டு, மனிதர்களை விடப் பல மடங்கு ஆற்றலும் வழங்கப்பட்ட ஜின்களை மனிதன் ஒருக்காலும் வசப்படுத்த முடியாது. யானை சிங்கம் போன்ற விலங்குகளை மனிதன் வசப்படுத்தலாம்; அவற்றின் வலிமை மனிதனை விட அதிகம் என்றாலும் பகுத்தறிவு அவற்றுக்கு இல்லாததால் அவற்றை மனிதன் வசப்படுத்திக் கொள்கிறான். ஜின்களுக்குப் பகுத்தறிவும் மனிதனை விட அதிகமான ஆற்றலும் இருப்பதால் அவற்றை மனிதனால் கட்டுப்படுத்த முடியாது என்பது தான் உண்மை.

சுலைமான் நபிக்கு அல்லாஹ் தனிச் சிறப்பாக ஜின்களை வசப்படுத்திக் கொடுத்திருந்தான். இது அவர்களுக்கு மட்டும் இறைவன் வழங்கிய தனிச் சிறப்பாகும்.

‘என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல் ‘ என (சுலைமான்) கூறினார்.

அல்குர்ஆன் 38:35)

சுலைமான் நபியவர்கள் தமக்கு வழங்கப்பட்ட அளவு அதிகாரம் யாருக்கும் வழங்க வேண்டாம் என துஆச் செய்துள்ளதில் ஜின்களை வசப்படுத்தும் அதிகாரமும் அடக்கம்.

நேற்றிரவு ஒரு ஜின் அட்டூழியம் செய்தது. அதைப் பிடித்து துணில் கட்டி வைத்து காலையில் உங்களுக்குக் காட்ட நினைத்தேன். என் சகோதரர் சுலைமானின் துஆ நினைவுக்கு வந்ததால் அதை விட்டு விட்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ள

சுலைமான் நபியின் பிரார்த்தனையில் ஜின்களை வசப்படுத்தியிருந்ததும் அடங்கும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

இந்தக் கதையில் அப்துல் காதிருடைய பெயரால் போடப்பட்ட வட்டத்துக்குள் நுழைய ஜின்களின் அரசர் அஞ்சியுள்ளார். அப்துல் காதிருடைய பெயரைக் கேட்டதும் குதிரையிலிருந்து (ஜின்களுக்கு ஏன் குதிரை?) இறங்கி மண்ணை முத்தமிட்டுள்ளார். அப்துல் காதிருக்கு ஜின்களும், ஏனைய படைப்புக்களும் கட்டுப்பட்டன என்று பிரமையை ஏற்படுத்தி அவரால் ஆகாதது ஏதுமில்லை என்று நம்ப வைத்து அப்துல் காதிரை குட்டித் தெய்வமாக ஆக்குவதே இந்தக் கதையின் நோக்கம்.

இது போன்ற கப்ஸாக்களைப் படிப்பதால் பாவம் சேருமா? புண்ணியம் கூடுமா? மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும். புராணங்களிலிருந்து காப்பியடிக்கப்பட்ட இது போன்ற கதைகளைக் கேள்விப்படும் மற்ற மதத்தவர்கள் இஸ்லாத்தின் பால் அபிமானம் கொள்வார்களா? ஓரிறைக் கொள்கையை ஐயமற வலியுறுத்துகின்ற மார்க்கத்திற்கு இந்தக் கதைகள் களங்கத்தை ஏற்படுத்துகின்றன. இஸ்லாத்தை நாடி வரும் மக்களைத் தயங்கி நிற்க வைக்கிறது. மவ்லிது அபிமானிகள் இதை உணர்ந்து மவ்லிது பக்தியிலிருந்து விடுபடுவார்கள் என்று நம்புகிறோம்.

அப்துல் காதிர் ஜீலானியைக் கடவுள் நிலைக்கு உயர்த்திக் காட்டக்கூடிய கதைகள் முஹ்யித்தீன் மவ்லிதில் மலிந்து கிடப்பதை இது வரை கண்டோம். இறைவனின் தன்மைகளை அவருக்கு வழங்கி அவரை நேரடியாக அழைத்துப் பிரார்த்தனை செய்யும் வகையிலும் பல வரிகள் முஹ்யித்தீன் மவ்லிதில் இடம் பெற்றுள்ளன. அவற்றை இங்கு காண்போம்.

முஹ்யித்தீன்_மவ்லித்_அபாயங்கள் 14

#முஹ்யித்தீன்_மவ்லித்_அபாயங்கள் 

14. கனவில் நடந்த கொலை!

قد قال سافر لامرء ابيل *لمنعه الحماد عن رحيل

لما راى من قتله الوبيل *فانني لكم ذو زعامة

قصار ذاك القتل فى المنام *والنهب نسي ماله القوام

بما دعى الله على اهتمام *مقدار عين كاشف الندامة

ஒரு மனிதர் கொடூரமாகக் கொலை செய்யப்படுவார் என்பதை அறிந்த ஹம்மாம் அம்மனிதரைப் பயணம் செய்வதை விட்டும் தடுத்தார். அப்போது அப்துல் காதிர் ஜீலானி பொறுப்பாளர் என அம்மனிதர் கூறினார்.

இதன் பிறகு அப்துல் காதிர் ஜீலானி முக்கியத்துவம் கொடுத்து அல்லாஹ்விடம் துஆச் செய்ததால் அம்மனிதர் கொல்லப்படுதல் கனவு மூலமும், கொள்ளையடிக்கப்படுதல் அவர் பொருளை மறப்பதன் மூலமும் நிறைவேறியது.

முஹ்யித்தீன் மவ்லிதில் கூறப்படும் இந்த வரிகளுக்கு விளக்கவுரையாக ஹிகாயத் பகுதியில் கூறப்படுவதையும் அறிந்து விட்டு இதை அலசுவோம்.

எழுநூறு தங்கக் காசுகள் பொறுமானமுள்ள பொருட்களை சிரியா நாட்டிற்கு வியாபாரத்திற்காக கொண்டு செல்ல நாடுகிறேன் என்று அபுல் முளப்பர் என்பார் ஹம்மாத் எனும் பெரியாடம் கூறினார்.

அதற்கு ஹம்மாத் அவ்வாறு செய்யாதே. நீ பயணம் செய்தால் கொல்லப்படுவாய். உன் உடமைகள் பறிக்கப்படும் எனக் கூறினார். (இதைக் கேட்டு) மனம் உடைந்தவராக அபுல் முளப்பர் வெளியே வந்தார். அவரை அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் வழியில் கண்டார்கள். ஹம்மாத் கூறியதை அபுல் முளப்பர் விளக்கினார்கள்.

அப்போது அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நீ பயணம் செய். எவ்வித இடையூறுமின்றி புறப்பட்டு இலாபத்துடன் திரும்பி வருவாய். உன் உயிரையும், உடமைகளையும் பாதுகாப்பது என் பொறுப்பு என்று கூறினார்கள். உடனே அபுல் முளப்பர் புறப்பட்டார். தமது பொருட்களை ஆயிரம் தங்கக் காசுகளுக்கு விற்றார். ஒரு நாள் மல ஜலம் கழிக்கச் சென்ற அவர் பணப்பையை மறதியாக வைத்து விட்டார். தமது கூடாரத்தை அடைந்ததும் அவருக்குத் தூக்கம் மேலிட்டது. வணிகக் கூட்டத்துடன் அவர் செல்லும் போது கொள்ளைக் கூட்டம் ஒன்று வழிமறித்து அவரையும், வணிகக் கூட்டத்தையும் தாக்கி வணிகக் கூட்டத்தினர் உடைமைகளையும் பறித்துக் கொண்டது போல் கனவு கண்டார். உடனே விழித்துப் பார்த்ததும் தமது கழுத்தில் இரத்தக் கறையைப் பார்த்தார். கடுமையான வேதனையையும் உணர்ந்தார்.

உடனே தங்கக் காசு நினைவுக்கு வந்தது. அதைத் தேடிய போது அவர் வைத்த இடத்தில் அப்படியே இருந்தது.பின்னர் பாக்தாத் வந்தார். பெரியவரான ஹம்மாதை முதலில் சந்திப்பதா? சொன்ன சொல்லைக் காப்பாற்றிய அப்துல் காதிர் ஜீலானியைச் சந்திப்பதா? என்று குழம்பினார். அப்போது வழியில் பெரியார் ஹம்மாதைக் கண்டார். அவரிடம் அபுல் முளப்பரே பெரியார் அப்துல் காதிரை முதலில் சந்திப்பீராக.!

ஏனெனில் அவர் உனக்காகப் பதினேழு தடவை அல்லாஹ்விடம் துஆச் செய்தார். உமக்கு எழுதப்பட்ட விதியை மாற்ற எழுபது தடவைகள் துஆச் செய்தார். நீ கொல்லப்பட வேண்டும் என்ற விதி கனவில் கொல்லப்பட்டதன் மூலம் நடந்தேறியது. உமது உடமைகள் பறிக்கப்படுவது என்ற விதி உடமையை நீ மறந்து வைத்ததன் மூலம் நடந்தேறியது எனக் கூறினார். இதை அபூமஸ்வூத் அறிவிக்கிறார்.

அல்லாஹ்வை மறக்கடிக்கச் செய்து அல்லாஹ்வின் ஆற்றலைக் குறைத்து அப்துல் காதிரையும், ஹம்மாதையும் அல்லாஹ்வுக்கு நிகராக ஆக்குவதே இந்தக் கவிதையின் நோக்கம் என்பது இந்த ஹிகாயத்திலிருந்து புலனாகிறது.

அபுல் முளப்பர் என்பார் பிரயாணம் சென்றால் அவர் கொல்லப்படுவார்; அவரது உடமைகள் பறிக்கப்படும் என்ற விபரம் ஹம்மாதுக்கு எப்படித் தெரிந்தது?

எந்த ஆத்மாகவும் தன் மரணத்தையே அறிய முடியாது என்று அல்லாஹ் கூறும் போது

(அல்குர்ஆன் 31:34) இன்னொருவன் மரணம் பற்றி ஹம்மாத் முன்கூட்டியே அறிய முடிந்தது எப்படி?

இது ஹம்மாத் என்பவரை அல்லாஹ்வாக ஆக்கும் விபரீதப் போக்கல்லவா? மவ்லிது அபிமானிகள் இதைச் சிந்திக்கட்டும்.

அபுல் முளப்பர் பிரயாணம் செய்வார் என்பதும், அதிலே கொல்லப்படுவார் என்பதும் அல்லாஹ்வின் விதியாக இருந்தால் அதை ஹம்மாத் ஒரு வாதத்துக்காக அறிந்திருந்தால் அந்த விதி நிறைவேறுமாறு விட்டிருக்க வேண்டுமே தவிர அந்த விதியை வெல்லும் வழியைக் கூறியிருக்கக் கூடாது. அபுல் முளப்பர் சாவார் என்ற அல்லாஹ்வின் விதியை ஹம்மாத் அறிந்து கொண்டது மட்டுமின்றி அல்லாஹ்வின் விதியை மாற்றியமைக்கவும் முயன்றுள்ளார். அல்லாஹ் பலவீனமானவனாகவும் ஹம்மாத் பலம் பொருந்தியவராகவும் சித்திக்கப்படுகின்றனர்.

அவர் கொல்லப்படுவார் என்பது மட்டும் விதியன்று அவர் பயணம் செய்வார் என்பதும் விதி தான். இந்த விதியை வெல்ல முயன்றிருக்கிறார்.

இந்த விதியை அப்துல் காதிர் ஜீலானியும் அறிந்திருக்கிறார். அல்லாஹ்வின் விதி இது தான் என்று தெரிந்திருந்தும் அபுல் முளப்பர் என்பாரிடம் வெற்றிகரமாகத் திரும்பி வருவீர் எனக் கூறி அனுப்புகிறார். இவையெல்லாம் அல்லாஹ்வின் மகத்துவத்தைக் குறைத்து மனிதர்களுக்கு மகத்துவத்தை அதிகப்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட திட்டமிட்ட சதி என்பதை நிரூபிக்கின்றது.

அல்லாஹ்விடம் துஆச் செய்து இந்த விதியை மாற்றியமைக்குமாறு அப்துல் காதிர் ஜீலானி துஆச் செய்து தானே விதியை மாற்றினார் என்று யாரும் கூற முடியாது. ஏனெனில் துஆச் செய்வதற்கு முன்பே விதியை மாற்றியமைக்கும் உத்திரவாதத்தை அப்துல் காதிர் ஜீலானி வழங்கி விட்டார். அல்லாஹ்விடம் துஆச் செய்து அதனால் அபுல் முளப்பர் என்பாரின் விதி மாற்றியமைக்கப்பட்ட விதத்தைக் கவனியுங்கள். கோமாளித்தனமாக நாடகம் ஒன்றை இதற்காக மவ்லுது எழுதியவர் கற்பனை செய்கிறார்.

கனவில் அவர் கொல்லப்பட்டதாகக் காண்கிறாராம். இதன் மூலம் அவர் கொல்லப்படுவார் என்ற விதி நிறைவேறியதாம். அவர் பணப்பையை மறதியாக ஓரிடத்தில் வைத்து விட்டாராம். இதன் மூலம் உடைமை பறிக்கப்படும் என்ற விதி நிறைவேறியதாம். கனவில் கொல்லப்பட்டதாகக் காண்பது உண்மையில் கொல்லப்பட வேண்டும் என்ற விதிக்கு நிகராகுமா?

ஒரு மனிதன் ஒரு தடவை தான் சாவான் என்பது விதி. கனவில் தாம் செத்ததாக கனவு காண்பவர்கள் பிறகு சாகவே மாட்டார்களா? அபுல் முளப்பர் கனவில் செத்து விட்டதால் இன்று வரை உயிருடன் இருக்கிறார் என்று கூறப் போகிறார்களா?

அபுல் முளப்பர் கொல்லப்படுவார் என்பது அல்லாஹ்வின் விதியானால் அதை அல்லாஹ் செயல்படுத்தியிருப்பான். அதை மாற்றியமைக்க அல்லாஹ் நாடினால் நேரடியாக அதை மாற்றியமைப்பான். இப்படி நாடகம் நடத்தி யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் இறைவனுக்கு இல்லை.

அபுல் முளப்பர் கொல்லப்படுவார் என்ற விதி என்னவயிற்று என்று யாரோ கேட்டது போலவும் அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காக கனவில் அதை நிறைவேற்றியது போன்றும் அல்லாஹ் நடந்து கொண்டதாக கற்பனை செய்துள்ளனர்.

இஸ்லாத்தைப் பற்றிய அறிவு சிறிதுமற்ற முகவரியில்லாத யாரோ அறிவிலி எழுதிய இந்தப் பாட்டைப் படிப்பதால் நன்மை கிடைக்குமா? பாவம் சேருமா? அர்த்தம் தெரியாமல் மவ்லிது பக்தியில் கிடப்போர் சிந்திக்கட்டும்.

அப்துல் காதிர் ஜீலானியைப் புகழ்கிறோம் என்ற பெயரால் புராணங்களைத் தோற்கடிக்கும் அளவுக்குக் கற்பனைக் கதைகளை உருவாக்கி அதையே முஹ்யித்தீன் மவ்லிது என்று அறிமுகம் செய்தனர் என்பதை நிரூபிக்கும் மற்றொரு சான்றைப் பார்ப்போம்.

முஹ்யித்தீன்_மவ்லித்_அபாயங்கள் - 13

#முஹ்யித்தீன்_மவ்லித்_அபாயங்கள்

13. கனவில் கட்டளையிட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்?

كم من رجال بشر النبي *ان الزم الذي هو النقي

الشيخ عبد القادر الرضي *فى العالمين دافع الملامة

துன்பங்களை நீக்கக்கூடிய அகில உலகிலும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்ற தூயவரான பெரியார் அப்துல் காதிரைப் பற்றிப் பிடியுங்கள் என்று எத்தனையோ மனிதர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறியுள்ளனர்.

அப்துல் காதிர் ஜீலானியின் காலத்துக்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவரைப் பற்றிப் பிடிக்குமாறு எப்படிக் கூறியிருப்பார்கள்? அவர்கள் அவ்வாறு கூறியிருந்தால் அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூல்களில் பதவு செய்யப்பட்டிருக்குமே? எந்த ஹதீஸ் நூல்களில் இந்த முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது? என்றெல்லாம் யாரும் விளக்கம் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக ஹிகாயத் பகுதி பின்வருமாறு விளக்கம் தருகின்றனர்.

நான் சிறுவனாக இருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டேன். அல்லாஹ்வின் வேதம் உங்கள் வழிமுறை இரண்டினடிப்படையில் நான் மரணிக்க அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள் என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ பைஅத் செய்வதற்கு ஏற்ற பெரியார் அப்துல் காதிர் தாம் என்று கூறினார்கள். மூன்று தடவை இதை நான் கேட்டேன். மூன்று தடவையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதே பதிலையே கூறினார்கள். நான் விழித்தவுடன் என் தந்தையிடம் இதைக் கூறினேன். இஸ்லாமியப் பெரியார்களுக்கெல்லாம் பெரியாரைச் சந்திக்கப் புறப்பட்டோம். அவர்கள் உரை நிகழ்த்தத் தயாராக ஆசனத்தில் அமர்ந்திருந்தார்கள். மக்கள் நெருக்கத்தினால் அவர்களை நாங்கள் நெருங்க முடியவில்லை. எனவே தொலைவில் தங்கி விட்டோம். அவர்கள் தம் உரையை இடையில் நிறுத்தி அவ்விருவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள் என்று சைகை செய்தார்கள். சிலரது தோள்களில் சுமக்கப்பட்டு அவர்களது ஆசனத்தின் அருகில் கொண்டு செல்லப்பட்டோம். முன்னறிவிப்பின்றி நம்மிடம் வந்திருக்க மாட்டீர்கள் என்று எங்களிடம் கூறிவிட்டு தமது சட்டையை என் தந்தைக்கும் தமது கிரீடத்தை எனக்கும் அணிவித்ததார்கள். இஸ்னாத் (அறிவிப்பாளர் தொடர்) சீட்டை எங்களுக்கு எழுதித் தந்தார்கள் என்று அபுல் ஹஸன் கூறுகிறார்.

இந்த ஹிகாயத்தில் எவ்வளவு அபத்தங்கள் உள்ளன என்பதை ஆராய்வோம். அப்துல் காதிர் ஜீலானியிடம் பைஅத் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கனவில் கட்டளையிட்டதாக இந்தக் கதை கூறுகிறது.

பித்அத்களை உருவாக்கியவர்களும், தமக்கு மக்கள் கூடுதலான மயாதை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாகக் கூறி வருகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமா? இது பற்றி மார்க்கம் சொல்வது என்ன என்பது கூட இவர்களுக்குத் தெயவில்லை.

யார் என்னைக் கனவில் காண்கிறாரோ, அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6993

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண்பவர் விழித்தவுடன் நேலும் அவர்களைக் காண்பார் என்பதன் பொருள் என்ன? விழித்தவுடன் நேரிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காண்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிரோடு இவ்வுலகில் வாழ்ந்த காலத்துக்கு மட்டுமே பொருந்தும். நபித்தோழர்கள் தமது கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கண்டால் விழித்த பின் நேரடியாகவும் அவர்களைக் காண்பார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின்னால் வாழ்ந்து வரும் மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நிச்சயமாகக் கனவில் காண முடியாது. கனவில் கண்டால் விழிப்பிலும் காண்பார்கள் என்பது இந்த மக்களுக்குக் கடுகளவும் பொருந்தாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தப் பொன்மொழியில் நம்பிக்கை உள்ள யாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாக கூற மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாகக் கூறும் யாரும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதை இந்த நபிமொழியிலிருந்து அறியலாம்.

ஒருவரைக் கனவில் கண்டு அவரைத் தான் கனவில் கண்டோம் என்று உறுதி செய்வதென்றால் அவரை நாம் முன்னரே நேரடியாகப் பார்த்திருப்பது அவசியமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேரடியாகப் பார்க்காதவர்கள் கனவில் வந்தது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் என்று எப்படி உறுதிப்படுத்திக் கொண்டார்கள்? இதையும் நாம் சிந்திக்க வேண்டும். மார்க்கத்தின் எல்லா அம்சத்தையும் முழுமையாக மக்களுக்கு அறிவித்துத் தரும் பணியைப் பூரணமாக நிறைவேற்றிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று விட்டனர். கனவில் வந்து எதையும் அவர்கள் சொல்லித் தரவேண்டிய அவசியம் ஏதுமில்லை என்பதையும் நாம் உணர்ந்தாக வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் கனவில் இதைக் கூறினார்கள். அதைக் கூறினார்கள் என்றெல்லாம் பல பெரியார்கள்(?) கூறியுள்ளனர். அந்தக் காரியங்கள் உயிரோடு வாழ்ந்த காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்த காரியங்களாக உள்ளன. தாம் உயிரோடு வாழ்ந்த போது தடுத்த காரியங்களை தம் மரணத்திற்குப் பின் கனவில் வந்து அனுமதிப்பார்கள் என்பதை அறிவுள்ள எவரும் ஏற்க மாட்டார்கள். இதிலிருந்து கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்ததாகக் கூறுவது வடிகட்டிய பொய் என்பதை அறியலாம். மக்கள் தங்களைப் பெரியார் என்று நம்பி மதிக்க வேண்டும் என்பது தான் இதற்குக் காரணம்.

அப்துல் காதிர் ஜீலானியிடம் சென்று பைஅத் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று தடவை வலியுறுத்திக் கூறியதாக கூறப்படுவது மற்றொரு அபத்தமாகும்.

பைஅத் என்றால் உறுதிமொழி எடுத்தல் என்பது பொருள்

ஒருவருடன் மற்றொருவர் செய்து கொள்ளும் ஒப்பந்தம் (பைஅத்) செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கின்றது.

ஒரு நிறுவனத்தின் பணிபுரியச் செல்பவர் அந்த நிறுவனத்தினருடன் நான் இந்த நிறுவனத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு விசுவாசமாகப் பணியாற்றுவேன் என்று பைஅத் (உறுதிமொழி) எடுக்கலாம். ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவர் அந்த நிறுவனத்தின் பணிகள் குறித்து மற்றொரு நிறுவனத்தில் உறுதிமொழி எடுத்தால் அதை முட்டாள்தனம் என்போம்.

தொழுகை, நோன்பு போன்ற பல வணக்க வழிபாட்டு முறைகளை முறையாக நிறைவேற்றுவேன் என்று உறுதிமொழி எடுப்பதில் தவறில்லை. யாரிடம் எடுக்க வேண்டும் என்பது தான் பிரச்சினை. இந்த வணக்க வழிபாடுகள் யாவும் இறைவனுக்குச் சொந்தமானவை . அதை நிறைவேற்றுவதன் பயனையும் நிறைவேற்றாவிட்டால் ஏற்படும் தண்டனையையும் இறைவன் தான் வழங்குவான்.

நிச்சயமாக துய இந்த மார்க்கம் அல்லாஹ்வுக்கே சொந்தமானது.

(அல்குர்ஆன் 39:3)

மார்க்கம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது என்பதால் மார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒழுங்காக நிறைவேற்றுவேன் என்று இறைவனிடம் தான் பைஅத் செய்ய வேண்டும். இந்த வணக்கங்களை நம்மைப் போலவே நிறைவேற்றக் கடமைப்பட்ட ஒருவரிடம் இந்த வணக்கங்களுக்கான கூலியைத் தர முடியாத ஒருவரிடம் இவற்றை நிறைவேற்றாவிட்டால் தண்டிக்கும் உரிமையில்லாத ஒருவரிடம் இந்த வணக்கங்கள் பற்றி நம்மைப் போலவே இறைவனால் விசாரிக்கப்படும் நிலையிலுள்ள ஒருவரிடம் இது பற்றி உறுதி மொழி எடுப்பது அபத்தமானதாகும். அவரை அல்லாஹ்வுக்குச் சமமமாக கருதுவதுமாகும்

ஒருவர் சம்பந்தப்பட்ட . பைஅத் உறுதிமொழியை அவரால் நியமிக்கப்பட்ட அவரது தூதரிடம் எடுக்கலாம். இதை யாரும் அபத்தமாகக் கருத மாட்டார்கள். ஒரு நாட்டுடன் மற்றொரு நாடு செய்து கொள்ளும் ஒப்பந்தங்களில் அந்தந்த நாட்டு ஆட்சித் தலைவர்களால் நியமிக்கப்பட்ட தூதர்கள் கையொழுத்திடுவதை நாம் பாக்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதராக இருப்பதால் அல்லாஹ்வுக்குச் சொந்தமான விஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பைஅத் செய்யலாம். பைஅத் வியாபாரம் செய்யும் பெரியார்கள்(?) இறைவன் சம்பந்தப்பட்ட காரியங்களில் உறுதிமொழி பெற எந்த அதிகாரமும் பெற்றிருக்கவில்லை. அவர்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர்களுமல்லர். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நபித் தோழர்கள் செய்த உடன்படிக்கையை ஆதாரமாகக் கொண்டு தங்களின் பைஅத் வியாபாரத்தை நியாயப்படுத்தினால் அவர்கள் தங்களை இறைவனின் தூதர்களாகவும் இறைவன் சார்பாக உறுதிமொழி பெற அதிகாரம் வழங்கப்பட்டவர்களாகவும் கருதுகின்றார்கள் என்பதே பொருள்.

உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.

(அல்குர்ஆன் 48:10)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் செய்த உறுதிமொழியைத் தன்னிடம் செய்து கொள்ளும் உறுதிமொழியாக இறைவன் அங்கீகரிப்பதற்கு இவ்வசனமே சான்று.

ஒருவர் கனவு கண்டால் அதை மற்ற எவராலும் அறிந்து கொள்ள முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் காலையில் உங்களில் யாரேனும் நேற்றிரவு கனவு கண்டீர்களா? என்று விசாரிக்கும் பழக்கமுடையவர்களாக இருந்தனர்.

நீங்கள் இன்னின்ன கனவுகளைக் கண்டீர்கள் என்று கனவைக் கண்டுபிடித்துக் கூறாமல் மக்களிடமே கேட்டுத் தெரிந்துள்ளனர். ஆனால் அபுல் ஹஸன் கண்ட கனவை அப்துல் காதிர் ஜீலானி தாமே அறிந்து கொண்டதாக இந்தக் கதை கூறுகிறது. மறைவான ஞானம் அப்துல் காதிருக்கு இருப்பதாகக் காட்டி அவரை அல்லாஹ்வுக்குச் சமமமாக அல்லாஹ்வின் தூதருக்கும் மேலாக ஆக்குவது தான் இந்தக் கதையின் நோக்கம். இது போன்ற அபத்தங்கள் தாம் முஹ்யித்தீன் மவ்லிது.

அப்துல் காதிர் ஜீலானியைப் புகழ்கிறோம் எனப் பெயரால் புராணங்களைத் தோற்கடிக்கும் அளவுக்குக் கற்பனை செய்து எழுதப்பட்டது தான் முஹ்யித்தீன் மவ்லிது. இதை நிரூபிக்கும் மற்றொரு சான்றைப் பார்ப்போம்.

அப்துல்_காதிர்_ஜீலானி_குதுபுல்_அக்தாபா?

#அப்துல்_காதிர்_ஜீலானி_குதுபுல்_அக்தாபா?

#குர்ஆனை_மறுக்கும்_ஆலிம்கள்

வானம் பூமியின் அச்சாணி

கவிதையின் முதல் அடி

يا قـطب أهل السما والأرض غوثهما

வானம் பூமி இரண்டிலும் வாழ்பவர்களின் குத்பு அவர்களே! என்று துவங்குகிறது. இதிலிருந்து தான் இக்கவிதையையே யா குத்பா’ குத்பை அழைத்துப் பாடப்பட்ட கவிதை என்று குறிப்பிடுகின்றனர்.

வானத்தில் வாழ்பவர்கள் என்பதற்கு மலக்குகள் (வானவர்கள்) என்பதைத் தவிர வேறு பொருளிருக்க முடியாது. அப்படியானால் வானவர்களின் தலைவரே! அல்லது வானவர்களுக்கும் அச்சாணி போன்றவரே! என்பது பொருளாகிறது. வானவர் தலைவர்களான ஜிப்ரீல் (அலை) மீக்காயில் (அலை) போன்றவர்களுக்கும் இவர் தலைவரா? அவர்களுக்கெல்லாம் இவர் தலைவர், அச்சாணி போன்றவர் என்பது வரம்பு மீறிய புகழ் அல்லவா?

அதே போன்று பூமியில் வாழ்பவர்கள் என்பதில் நபிமார்கள், அண்ணலாரின் அன்புத் தோழர்கள், இமாம்கள் அனைவரும் அடங்குவர். அவர்கள் அனைவருக்கும் இவர் தலைவர் என்பதையோ அவர்களுக்கெல்லாம் அச்சாணி போன்றவர் என்பதையோ ஒரு முஸ்லிம் எப்படி ஏற்க முடியும்? இது இஸ்லாத்தின் கொள்கைக்கே முரணான ஒன்றில்லையா? இதுவல்ல அதன் பொருள் என்றால் அதற்கு என்ன தான் பொருள்? சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் தருவார்களா?

மகத்தான ரட்சகர்

يا غــوث الأعظم كل الدهر والحين

எல்லாக் காலங்களிலும், நேரங்களிலும் (எங்களைக்) காப்பாற்றும் மகத்தான ரட்சகரே!

என்பது யாகுத்பாவின் மற்றொரு வரியாகும். எப்போதோ இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்ட ஒரு மனிதரை இவ்வாறு கூவி அழைப்பது இஸ்லாமியக் கொள்கைக்கு எவ்வளவு முரணானது? மிகப் பெரும் தீர்க்கதரிசிகளில் ஒருவரான ஈசா (அலை) அவர்கள் தமது சமூகத்தவரின் குற்றங்கள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படும் போது,

‘மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும்,

என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!’ என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?’ என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, ‘நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்’ என்று அவர் பதிலளிப்பார். ‘நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.’.’அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்’ (எனவும் அவர் கூறுவார்)

(அல்குர்ஆன்: 5:116, 117, 118)

எனத் திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான்.

இதிலிருந்து ஒருவர் எவ்வளவு பெரிய மனிதராயிருப்பினும் இவ்வுலகை விட்டுப் பிரிந்த பின்னர் யாருக்கும் எதுவும் செய்து விடவோ, காப்பாற்றிக் கரை சேர்த்திடவோ இயலாது என்பது திட்டவட்டமாகத் தெகிறது.

இன்றளவும் உயிருடன் உள்ள தீர்க்கதரிசியின் நிலையே இதுவென்றால் அவர்களை விடத் தரத்தால் பலமடங்கு குறைந்த ஒருவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்த பின்னர் பிறரது செயல்களுக்குப் பொறுப்பேற்கவோ, அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்திடவோ இயலாது என்பது திட்டவட்டமாகத் தெகிறது.

நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக! அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காண மாட்டேன்’ என்றும் கூறுவீராக
(அல்குர்ஆன்: 72:21, 22)

‘அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 7:188)

அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக்
கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

(அல்குர்ஆன்: 35:13,14)

என்பன போன்ற திருவசனங்கள் இறைவனல்லாத எவராக இருப்பினும், அவர்கள் வாழ்வு, சாவு முதல் அனைத்துப் பிரச்சனைகளும் இறைவனின் அதிகாரத்திற்குட்பட்டவை தான் என்பதையும், அவனைத் தவிர எவருக்கும் எந்த விதமான சுய அதிகாரமும் கிடையாது என்பதையும், மறைவானவற்றை அறிந்திட எவராலும் இயலாது என்பதையும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி விடுகின்றன.

‘எல்லாக் காலங்களிலும், நேரங்களிலும் எங்களைக் காப்பாற்றும் மகத்தான இரட்சகரே’ என்று மரணித்தவரை அழைத்திட எவ்வாறு ஒரு முஸ்லிம் மனந்துணிவான்?

இறைவனைத் தவிர எவரை அழைத்துப் பிரார்த்தனை செய்தாலும் அவ்வாறு பிரார்த்திக்கப்படுபவர் நபியாக ஆனாலும், நல்லடியாராக இருந்தாலும் அவர்களும் இறைவனின் அடிமைகளே. ஒருக்காலும் அவர்கள் இரட்சகராக முடியவே முடியாது. இந்த அடிப்படையை உணராத காரணத்தாலேயே ‘எல்லாக் காலங்களுக்கும் மகத்தான இரட்சகரே’ என்று இந்தக் கவிஞனும், இவனது அபிமானிகளும் அழைக்கத் துணிந்து விட்டனர்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

(அல்குர்ஆன்: 7:194)

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.

(அல்குர்ஆன்: 7:197)

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன்: 22:73)

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால்’அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 39:38)

திருக்குர்ஆனின் இந்த வசனங்களையும், இது போன்ற கருத்தில் வருகின்ற ஏராளமான வசனங்களையும் மீண்டும் ஒரு முறை கவனியுங்கள்! இந்த வசனங்கள் கூறும் உண்மைக்கு மாறாக யாகுத்பா’வின் மேற்கண்ட வரிகள் அமைந்திருப்பதை உணர முடியும்.

‘எவராக இருந்தாலும் அவரும் அல்லாஹ்வின் அடிமையே. அணுவத்தனையும் அவர்களுக்கு அதிகாரம் இல்லை. தங்களுக்கே கூட சுயமாக அவர்களால் உதவிக் கொள்ள முடியாது. ஈயைப் படைக்கும் அளவுக்குக் கூட அவர்களுக்கு ஆற்றல் இல்லை’ என்ற போதனைகளையும் ‘எல்லாக் காலங்களிலும் மகத்தான இரட்சகரே’ என்ற இந்தப் புலம்பலையும் ஒரு நேரத்தில் ஒருவன் எப்படி நம்ப முடியும்?

இந்த வரியை நம்பினால் அவன் இறை வசனங்களை மறுக்கிறான். இறை வசனங்களை நம்பினால் அவன் இந்த யாகுத்பாவை மறுக்க வேண்டும்.

மகத்தான இரட்சகரே’ என்று அழைப்பது ஒரு புறமிருக்கட்டும். சாதாரணமாக அவரது பெயரைச் சொல்லியாவது அழைக்கலாம்? என்றால் அதற்கும் கூட திருக்குர்ஆன் அனுமதி தரவில்லை.

சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் அப்பெரியார். அவர் மரணித்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிருந்து கொண்டு அழைத்தால் அதை அவரால் செவியுறவே முடியாது.

இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.

(அல்குர்ஆன்: 30:52)

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

(அல்குர்ஆன்: 35:22)

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்’ என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 16:20,21)

இறைவனின் இவ்வளவு தெளிவான போதனைகளுக்குப் பிறகும் என்றோ மரணித்து விட்ட அப்துல் காதிர் (ரஹ்) அவர்கள் கூப்பாடுகளைக் கேட்பார்கள் என்று நம்புவது இந்த வசனங்களை மறுத்ததாக ஆகாதா?

Friday, September 26, 2025

முஹ்யித்தீன்_மவ்லித்_அபாயங்கள் 12

#முஹ்யித்தீன்_மவ்லித்_அபாயங்கள்

12. பார்த்தாலே நேர்வழி?

فوز واقبال لمن هداه *ومن راى من اقتدى هداه
அவர் யாருக்கு நேர்வழி காட்டினாரோ அவருக்கும் அவரது நேர்வழியைப் பார்த்தவருக்கும் வெற்றியும், முன்னேற்றமும் உண்டு.

 

وروي ان الشيخ رضي الله عنه قال طوبى لمن راني فى حياتي او راى من راني او راى من راى من راني بعد وفاتي وان آخذبيد من عثر عن الاستقامة من مريدي ومحبي ليوم القيامة

என் வாழ்நாளில் யார் என்னைப் பார்த்தாரோ அவருக்கும், என் மரணத்திற்குப் பின் என்னைப் பார்த்தவர்களைப் பார்த்தவர்களுக்கும், என்னை யார் பார்த்தார்களோ அவர்களைப் பார்த்தவர்களைப் பார்த்தவருக்கும் நல் வாழ்க்கை உண்டு. எனது முரீதுகளிலும், எனது நேசர்களிலும் யாரேனும் நேர்வழியிலிருந்து விலகினால் அவரது கையை நான் பிடித்துக் கொள்வேன். இது கியாமத் நாள் வரையிலும் நடக்கக் கூடியதாகும் என்று அப்துல் காதிர் ஜீலானி கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எவ்வளவு அபத்தங்கள் உள்ளன என்று ஆராய்வோம்.

அப்துல் காதிர் ஜீலானி இவ்வாறு கூறி இருந்தால் இது அவரது நூல்களிலோ, அவரது உரைத் தொகுப்புக்களிலோ நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் இதைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் இப்படி எந்த வரலாற்றுக் குறிப்பும் இந்தக் கூற்றுக்குக் கிடையாது.

அப்துல் காதிர் ஜீலானியைப் பார்த்தவர்களுக்கு நல்வாழ்க்கை உண்டு என்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணாகும். அப்துல் காதிர் ஒரு மனிதர். மனிதனை மனிதன் பார்ப்பதால் நல் வாழ்க்கை கிடைத்து விடாது. கடுகளவுக்கு அறிவுடையவனுக்குக் கூட தெரிந்த இந்த உண்மை மவ்லிதை இயற்றியவருக்குத் தெரியவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எத்தனையோ காபிர்கள் பார்த்தனர். அபூஜஹ்ல் போன்ற கொடியவர்களும் பார்த்தனர். இவ்வாறு பார்த்தது அவர்களுக்கு இம்மையிலோ, மறுமையிலோ எந்த நல்வாழ்க்கையையும் அளிக்கவில்லை. நபிகள் நாயகத்தைப் பார்த்ததால் நல்வாழ்வை அடைய முடியவில்லை. ஆனால் அப்துல் காதிர் ஜீலானியைப் பார்த்துவிட்டால் நல்வாழ்வு நிச்சயம் என்ற நச்சுக் கருத்தை எந்த முஸ்லிமாவது ஏற்க முடியுமா?

ஒருவரைப் பார்ப்பதால் பாக்கியம் ஏற்படும் என்பது ஒரு புறமிருக்கட்டும். நல்லடியார் ஒருவருக்குச் சந்ததிகளாக இருப்பது கூட எந்தப் பயனுமளிக்காது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

நூஹ் நபி, லூத் நபி ஆகியோரின் மனைவியர் அந்த நபிமார்களைப் பார்த்தது மட்டுமன்றி அவர்களுடன் இரண்டறக் கலந்தவர்கள். அவர்களும் கூட நரகை அடைவார்கள் என்று குர்ஆன் கூறுகிறது.

நூஹ் நபியின் மகன் நூஹ் நபியை ஏற்கவில்லை. நூஹ் நபியின் இரத்தம் அவன் உடலில் ஓடியும் கூட அவனும் அழிந்து போனதாகக் குர்ஆன் கூறுகிறது.

இப்ராஹீம் நபி அவர்களின் தந்தையின் நிலையும் இது தான். அவரும் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் பெய தந்தையாக இருந்தும் அபூலஹப் அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளாளான்.

மிகப் பெரிய நபிமார்களை நேரடியாகப் பார்த்தது மட்டுமின்றி அவர்களுடன் இரத்த சம்பந்தமான உறவும் உள்ளவர்களின் நிலை இது. ஆனால் அப்துல் காதிரைப் பார்த்து விட்டாலே மோட்சம் கிடைத்து விடுமாம். அது மட்டுமின்றி அவரைப் பார்த்தவர்களை யார் பார்க்கின்றார்களோ அவர்களுக்கும் மோட்சம் கிடைத்து விடுமாம். அவரைப் பார்த்தவர்களை பார்த்தவர்களுக்கும் மோட்சம் உண்டாம். நபிமார்களை விட அப்துல் காதிருக்கு இருக்கும் மகிமை சிறந்தது என்று இந்தக் கதை கூறுகிறதே உண்மையான முஸ்லிம்கள் இதை நம்பலாமா?

இதைவிடப் பயங்கரமான மற்றொரு அபத்தத்தைக் கேளுங்கள்.

அப்துல் காதிர் தம் முரீதுகளின் கைகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறாராம். அவர்கள் தவறான வழியில் சென்றால் உடனே கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தி விடுவாராம். அவர் வாழ்நாளில் மட்டுமின்றி கியாமத் நாள் வரை இதே வேலையாக இருப்பாராம்.

மவ்லிதை இயற்றியவர்கள் சுய சிந்தனையுடன் தான் இவ்வாறு எழுதியுள்ளார்களா? இந்த விபரீதத்தை விளங்காமல் தான் மவ்லவிமார்கள் இதை ஆதரிக்கிறார்களா?

உயிருடன் வாழும் போது கூட ஒருவர் தமது நேசர்களின் கையைப் பிடித்து அவர்களை நேர்வழியில் கொண்டு செல்ல முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் போது அவர்கள் வாழ்ந்த ஊரிலேயே சில நபித்தோழர்கள் விபச்சாரம் செய்தனர், திருடினர், கனீமத் பொருட்களை மோசடி செய்தனர். அந்தச் சந்தர்ப்பங்களில் அவர்களது கைளைப் பிடித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் நபித்தோழர்களுக்கிடையே மோதல்களும், பிரச்சனைகளும் உருவாயின. இன்றளவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தினர் பலர் பாவங்களில் மூழ்கியுள்ளனர். இவர்களின் கைகளைப் பிடித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை.

ஆனால் அப்துல் காதிர் ஜீலானி என்ற மனிதர் மரணித்த பின் கியாமத் நாள் வரை முரீதுகளின் கைகளைப் பிடித்துக் கரை சேர்ப்பாராம். இதை நம்ப முடிகின்றதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மட்டம் தட்டி அல்லாஹ்வுக்கு நிகராக அப்துல் காதிரை உயர்த்த வேண்டும் என்ற சதியின் ஒரு பகுதியே இந்த மவ்லிது என்பது இப்போதாவது புரிகின்றதா?

அப்துல் காதிரின் முரீதுகள் எனப்படுவோர் பலர் இன்று சினிமாத் தயாரிப்பில் ஈடுபடுவதையும் சினிமா விநியோகிஸ்தர்களாக உள்ளதையும் ஹராமான பல வழிகளில் பொருளீட்டுவதையும் காண்கிறோம். தொழுகையைக் கூட நிறைவேற்றாமல் அவர்களில் பலர் இருப்பதைக் காண்கிறோம். இவர்களின் கையைப் பிடித்து அப்துல் காதிர் தடுக்கவில்லை. தடுக்க முடியாது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

அப்துல் காதிர் ஜீலானியை அல்லாஹ்வுக்குச் சமமாக்கும் கதைகளின் தொகுப்பே முஹ்யித்தீன் மவ்லிது என்பதற்கு மற்றொரு சான்றைப் பார்ப்போம்.

முஹ்யித்தீன்_மவ்லித்_அபாயங்கள் 11

#முஹ்யித்தீன்_மவ்லித்_அபாயங்கள் 

11. கொள்ளையர்கள் மீது மிதியடிகளை வீசித் தாக்கியவர்

 

رمى بقبقابيه من قد نهبا *حتى ينال المال من قد سلبا

منهم فادوا ما عليهم وجبا *بالنذر معهما بايدى الخدم

முஹ்யித்தின் மவ்லிதில் காணப்படும் நச்சுக் கருத்து இது. இதன் பொருள் வருமாறு.

கொள்ளையடித்த பொருட்களை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காகக் கொள்ளையர்கள் மீது மரக்கட்டையலான தமது இரு மிதியடிகளை அப்துல் காதிர் ஜிலானி வீசினார்கள். அந்த மக்கள் அந்த மிதியடிகளுடன் நேர்ச்சை செய்த காணிக்கைகளையும் கொண்டு வந்து பணிவுடன் அப்துல் காதிர் ஜிலானியிடம் சமர்ப்பித்தார்கள்.

இந்த நச்சுக் கருத்துக்கு விளக்கவுரையாக ஹிகாயத் எனும் பகுதியில் கூறப்படுவதையும் பார்த்துவிட்டு இதிலுள்ள அபத்தங்களை ஆராய்வோம்.

நாங்கள் அப்துல் காதிர் ஜீலானியிடம் இருந்தோம். அவர்கள் மிதியடியணிந்து உளுச் செய்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். திடீரென்று இரு தடவை சப்தமிட்டுத் தமது இரு மிதியடிகளையும் வீசினார்கள். பிறகு மௌனமானார்கள். அவர்களிடம் (காரணம்) கேட்க மக்களுக்குத் துணிவில்லை. பின்னர் அரபியரல்லாத ஒரு கூட்டத்தினர் அப்துல் காதிர் ஜீலானிக்காக நேர்ச்சை செய்த தங்கம் மற்றும் ஆடைகளுடன் வந்தனர். அவர்களிடம் அந்த மிதியடியும் இருந்தது. அவர்களிடம் இந்த மிதியடி உங்களுக்கு எப்படிக் கிடைத்து? என்று நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள் நாங்கள் பயணம் செய்து கொண்டிருந்த போது கிராமப்புறத்திலுள்ள கொள்ளையர்கள் தங்களின் இரு தலைவர்களுடன் வந்து எங்களைத் தாக்கினார்கள். எங்களில் பலரைக் கொன்று விட்டு எங்களிடமிருந்த பொருட்களையும் கொள்ளையடித்தனர். அப்துல் காதிர் ஜீலானிக்காக நாம் நேர்ச்சை செய்யலாமே என்று இரண்டு வார்த்தைகளைத் தான் நாங்கள் கூறினோம். சொல்லி முடிப்பதற்குள் கடுமையான இரண்டு சப்தங்களைக் கேட்டோம். அவர்களில் ஒருவன் இங்கே வாருங்கள். நம் மீது இறங்கிய வேதனையைப் பாருங்கள் என்றான் நாங்கள் பார்த்த போது அவர்களின் இரு தலைவர்களும் பிணமாகக் கிடந்தனர். ஒவ்வொருவருக்கு அருகிலும் ஒரு மிதியடி கிடந்தது. என்று விளக்கினார்கள். இதை அப்துல் ஹக் என்பார் கூறுகிறார்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைக் கடுகளவு அறிந்தவன் கூட ஜீரணிக்க முடியாத இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக்கூடிய இந்தக் கதையைத் தான் மவ்லிது என்ற பெயரால் பக்தியுடன் முஸ்லிம்கள் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் ஓதி வருகின்றனர்.

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்.

(அல்குர்ஆன் 27.62)

நெருக்கடியான நேரத்தில் உதவி செய்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமுண்டா என்று இறைவன் கேட்கிறான். இதோ நானிருக்கிறேன் என அப்துல் காதிர் ஜீலானி கூறியதாக இந்தக் கதை கூறுகிறது.

அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள்

(அல்குர்ஆன் 76.7)

அல்லாஹ்வுக்கு வழிபடும் வகையில் யாரேனும் நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விதமாக நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றக் கூடாது என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி 6700, 6696

அல்லாஹ்வுக்கு மட்டுமே நேர்ச்சை செய்ய வேண்டும் என்பதை மேற்கண்ட வசனம் கூறுகிறது. இறைவன் தனக்காக எவற்றைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறானோ அவை அனைத்தும் வணக்கங்களாகும். வணக்கங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் செய்யக் கூடாது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்ற அடிப்படைக் கொள்கைக்கு இது முரணானதாகும்.

இந்த வசனமும் இந்த நபிமொழியும் இஸ்லாத்தின் அடிப்படையும் அந்தக் கூட்டத்தினருக்கும் தெரியவில்லை. அப்துல் காதிருக்கும் தெரியவில்லை. ஈமானை இழந்த அந்த மக்களைக் கண்டித்துத் திருத்த வேண்டிய அப்துல் காதிர் அதை அங்கிகரிக்கிறார். தமக்கு இறைத் தன்மை இருப்பது போல் நடந்திருக்கிறார் என்று இந்தக் கதை கூறுகிறது.

காலமெல்லாம் ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நிச்சயம் இப்படி நடந்திருக்க மாட்டார்கள். அவர்கள் பெயரால் வயிறு வளர்க்க எண்ணியவர்களால் இட்டுக் கட்டப்பட்டதே இந்தக் கதை.

அப்துல் காதிர் ஜீலானியைப் புகழ்கிறோம் என்று நினைத்துக் கொண்டு நானே கடவுள் என்று வாதிட்ட பிர்அவ்னைப் போல் அப்துல் காதிரை இந்தக் கதை மூலம் சித்தரிக்கின்றனர்.

நபித்தோழர்கள் எத்தனையோ துன்பங்களுக்கு ஆளானார்கள். அவர்களில் யாரும் நபியவர்களுக்காக நேர்ச்சை செய்ததில்லை. தந்திரமாகப் பல நபித்தோழர்களை அழைத்துச் சென்று எதிரிகள் வெட்டிக் கொன்றனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மிதியடிகளை எறிந்து அவர்களைக் கொல்லவில்லை.

நபியவர்களையே எத்தனையோ சந்தர்ப்பங்களில் அடித்தனர், உதைத்தனர், இரத்தம் சிந்தச் செய்தனர். அப்போதெல்லாம் மிதியடியை ஏவிவிட்டு அந்தத் துன்பத்திலிருந்து அவர்கள் தம்மைக் காத்துக் கொண்டதில்லை. இந்தத் துன்பங்களைச் சகித்துக் கொண்டார்கள். அல்லது அல்லாஹ்விடம் முறையிட்டார்கள். ஆனால் அப்துல் காதிரோ எல்லா அதிகாரமும் தம் கையில் உள்ளது போல் நடந்திருக்கிறார் என்பதை நம்ப முடிகிறதா? சிந்தியுங்கள்.

அப்துல் காதிர் ஜீலானியை இன்று ஏராளமான முஸ்லிம்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அகிலமெல்லாம் அவரை அறிந்து வைத்திருக்கவில்லை. அவரது ஊராரும் அவரைச் சுற்றியிருந்தவர்களும் மட்டுமே அவரை அறிந்திருந்தார்கள். அவரும் அவரது புகழும் அரபுப் பிரதேசத்தைத் தாண்டியதில்லை. உலகமெங்கும் ஒருவரது புகழ் பரவும் அளவுக்கு எந்த நவீன பிரச்சார சாதனங்களும் அன்று இருந்ததில்லை. அரபியரல்லாத கூட்டத்தினர் நேர்ச்சை செய்தார்கள் என்று இந்தக் கதையில் கூறப்படுவது பொய் என்பதை இதிலிருந்தும் அறியலாம்.

மேலும் கொள்ளையரைக் கொன்ற மிதியடி அப்துல் காதிருடையது தான் என்று அரபியரல்லாத அந்தக் கூட்டத்தினருக்கு எப்படித் தெரிந்தது?

இப்படி ஒரு நிகழ்ச்சி உண்மையிலேயே நடந்திருந்ததாக வைத்துக் கொள்வோம். அப்படி நடந்திருந்தால் அதுவே இந்த மவ்லிதைத் தீயிலிட்டுக் கொளுத்தப் போதுமான காரணமாகும். இஸ்லாத்துக்கும், குர்ஆனுக்கும் மாற்றமாக ஒருவர் நடந்தால் அவர் இறைநேசராக முடியாது. இறை நேசரல்லாத ஒருவரைப் புகழ்ந்து பாடுவது பெருங்குற்றமாகும்.

இந்தக் கதை உண்மையாக இருந்தால் அப்துல் காதிர் ஜீலானி தம்மைக் கடவுளாக எண்ணியதால் மவ்லிதை ஒழித்துக் கட்ட வேண்டும். இந்தக் கதை பொய்யாக இருந்தால் நல்லடியார் மீது அவதுறு சுமத்துவதால் மவ்லிதை ஒழித்தாக வேண்டும். எப்படிப் பார்த்தாலும் ஒழிக்கப்பட வேண்டிய இந்த அபத்தத்தைப் படிக்கலாமா? மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும்.

அப்துல் காதிர் ஜீலானியை அல்லாஹ்வுக்குச் சமமாக காட்டும் கற்பனைக் கதைகளின் தொகுப்பே முஹ்யித்தீன் மவ்லிது என்பது. இது போன்ற மற்றொரு கதையைப் பார்ப்போம்.