பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, August 2, 2012

தொப்பி ஓர் ஆய்வு

தொப்பி ஓர் ஆய்வு

அறிமுகம்

தொப்பி அணிவது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடையாளம் என இந்திய முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.
தொழுகை நோன்பு போன்ற வணக்கம் ஒருவரிடம் இல்லாவிட்டாலோ தாடி போன்ற வலியுறுத்தப்பட்ட சுன்னத் ஒருவரிடம் இல்லாவிட்டாலோ அதைப் பெரிதுபடுத்தாத முஸ்லிம்கள், ஒருவர் தொப்பி அணியத் தவறினால் அதைப் பெரிதுபடுத்துவதைக் காண முடிகிறது. தமிழகத்தில் பல பள்ளிவாசல்களில் தொப்பி அணியாதவர் பள்ளிவாசலில் தொழ அனுமதிக்கப்பட மாட்டார் என்று அறிவிப்பு பலகையே வைத்துள்ளதைக் காண முடிகிறது.
எல்லா நேரத்திலும் தொப்பி அணியாவிட்டாலும் தொழுகை, திருமணம், மற்றும் இஸ்லாமியப் பொது நிகழ்ச்சிகளில் கட்டாயம் தொப்பி அவசியம் என்று கருதப்படுகிறது. சில ஊர்களில் சினிமாவுக்குச் சென்றாலும் சூதாட்டத்தில் இறங்கினாலும் கூட தொப்பி அணிந்தே காட்சி தருவதையும் காண முடிகிறது.
இஸ்லாத்தின் முதன்மையான அடையாளமாக இந்திய முஸ்லிம்களால் கருதப்படும் தொப்பி குறித்து திருக்குர்ஆன் என்ன கூறுகிறது? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ன கூறுகிறார்கள்? தொப்பிக்கு இந்திய முஸ்லிம்கள் கொடுக்கும் முக்கியத்துவத்துக்கு ஆதாரம் உள்ளதா? என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நூலை வெளியிடுகிறோம்.
தொப்பி அவசியம் எனக் கூறுவோரும் அவசியம் இல்லை எனக் கூறுவோரும் தமது வாதத்தை நிலை நாட்ட எடுத்து வைக்கும் ஆதாரங்கள் யாவை? இவற்றில் எந்தக் கருத்து சரியானது? என்பதை முழுமையாக விளக்கும் ஆய்வு நூலாக இது அமைந்துள்ளது.
தொப்பி குறித்து இஸ்லாத்தின் நிலைபாடு என்ன என்பதை தக்க சான்றுகளுடன் அறிந்து கொள்ள விரும்புவோருக்கு இது போதுமான நூலாகும் என்பது எங்களின் நம்பிக்கை.
நபீலா பதிப்பகம்

தொப்பி ஓர் ஆய்வு

முஸ்லிம்கள் என்று காட்டிக் கொள்வதற்கு தொப்பி முக்கிய அடையாளமாக கருதப்பட்டு வருகிறது. தொப்பியே இஸ்லாத்தின் அடையாளம் என்றும் பெரும்பாலான முஸ்லிம்கள் நம்பிச் செயல்படுத்தி வருகின்றனர். இஸ்லாத்தின் ஏனைய கடமைகளை விட  தொப்பி முஸ்லிம்களிடம் முதலிடம் பெற்று வருகிறது.
முஸ்லிம்கள் நடத்தும் நிழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முஸ்லிமல்லாத அரசியல் தலைவர்களும் தொப்பி அணிந்து முஸ்லிம்களைக் கவர முயற்சிப்பதையும் நாம் பார்க்கிறோம். முஸ்லிமல்லாதவர்கள் கூட தொப்பி தான் இஸ்லாத்தின் அடையாளம் என்று கருதும் அளவுக்கு இந்தக் கருத்து ஆழமாக வேரூன்றி விட்டது.
குறிப்பாக தொழுகை நேரங்களில் ஒருவரிடம் தொப்பி இல்லையென்றால் அவர் தொழுவதற்குத் தகுதியற்றவர் என்று பொது மக்களும் ஆலிம்களும் எண்ணுகின்றனர். எனவே பல பள்ளிவாசல்களில் "தொப்பி அணியாமல் தொழக் கூடாது!' என்ற கடுமையான வாசகம் பள்ளிவாசலின் முகப்பில் எழுதப்பட்டுள்ளது.
மேலும் சில பள்ளிவாசல்களில் ரெடிமேட் தொப்பிகள் வாங்கி வைத்துள்ளனர். இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் தொப்பிக்கு அல்லாஹ் முக்கியத்துவம் கொடுத்துள்ளானா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்களா? இதற்கு ஆதாரங்கள் உண்டா? என்பதைக் காண்போம்.

திருக்குர்ஆனில் ஆதாரம் இல்லை.

இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமையாகக் கருதப்படும் தொப்பி அணிவது பற்றி திருக்குர்ஆன் என்ன கூறுகிறதுதொப்பி அணிவதை வலியுறுத்தியோ ஆர்வமூட்டியோ திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை என்பது தான் இக்கேள்விக்கான விடையாகும்.
தொப்பியை வலியுறுத்துவது ஒரு புறமிருக்கட்டும். தொப்பியைக் குறிப்பதற்கு அரபு மொழியில் பல சொற்கள் உள்ளன. அந்தச் சொற்களில் ஒரு சொல் கூட குர்ஆனில் கூறப்படவில்லை. தொப்பி என்ற சொல்லே குர்ஆனில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் சொல்லாமல் இருக்க மாட்டான்.

நபிவழியில் ஆதாரங்கள் உண்டா

சாதாரணமாக தொப்பி அணியாவிட்டாலும் தொழுகையின் போது தொப்பி அணிய வேண்டும் என்று தான் அதிகமான முஸ்லிம்கள் நம்புகின்றனர். ஆனால் தொழுகையின் போது தொப்பி அவசியம் எனக் கூறும் ஒரு நபி மொழியும் இல்லை. தொழுகையின் போதோ தொழுகை அல்லாத மற்ற சந்தர்ப்பங்களிலோ தொப்பி அணிவது அவசியம் என்றோ அல்லது விரும்பத்தக்கது என்றோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் எந்தச் சான்றும் இல்லை.
இன்னும் சொல்வதாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையிலும் மற்ற சந்தர்ப்பங்களிலும் தொப்பி அணியாமல் இருந்துள்ளனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. நபிகள் நாயகம் ஸல் அவர்கள் முன்னிலையில் நபித்தோழர் பலர் தொப்பி இல்லாமல் காட்சி தந்துள்ளனர் என்பதற்கும் சான்றுகள் உள்ளன.
(ஒரு நாள்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. வரிசைகள் சரி செய்யப்பட்டன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். தொழுகைக்காக அவர்களுடைய இடத்தில் போய் நின்றதும் தமக்கு குளிப்பு கடமையானது நினைவுக்கு வந்ததால் எங்களைப் பார்த்து "உங்களுடைய இடத்தில் நில்லுங்கள்'' என்று சொல்லி விட்டு (வீட்டிற்குள்) சென்றார்கள். பின்னர் அவர்கள் குளித்து விட்டுத் தலையில் ஈரம் சொட்டச் சொட்ட வந்தார்கள். தக்பீர் சொல்லி தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுடன் தொழுதோம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 275

புகாரியின் 571ஆவது ஹதீஸில்  
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீர் சொட்ட, தம் கையைத் தலையில் வைத்தவர்களாகப் புறப்பட்டதை இன்று பார்ப்பது போல் உள்ளது'' என்று இடம் பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில் குளித்துவிட்டு வரும் போது அவர்களின் தலையில் நீர் சொட்டிக் கொண்டிருந்தது. மேலும் அவர்களின் கையை தலையில் வைத்தவர்களாகவும் வந்துள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தால் தம் கையைத் தொப்பியின் மீது வைத்துக் கொண்டு வந்தார்கள் என்று நபித்தோழர் குறிப்பிட்டிருப்பார்கள். அவ்வாறு கூறாததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெறும் தலையுடன் தான் வந்து தொழுவித்துள்ளார்கள் என்பதை அறியலாம். மேலும் யாரும் தலையில் நீர் வடிய தொப்பியணிந்து கொண்டு வர மாட்டார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணியாமல் தலையைத் திறந்த நிலையில் தான் பெரும்பாலும் இருந்துள்ளர்கள் என்பதைப் பின்வரும் நபிமொழிகள் மூலம் நாம் அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலையை வாரி இரண்டு சிவப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தார்கள். அப்போது அவர்களை விட அழகான ஒருவரை அதற்கு முன்பும் பின்பும் நான் பார்த்ததில்லை.
அறிவிப்பவர்: பரா (ரலி)
நூல்: நஸயீ 5219

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போதும் தொப்பி அணிந்திருந்தால் அவர்கள் தலை வாரி இருக்கிறார்களா? இல்லையா? என்பதை அறிய முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலை வாரி இருந்தார்கள் என்ற வாசகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலை திறந்த நிலையில் இருந்தது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.  
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமுடி எப்படி இருந்தது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவர்களது தலைமுடி அலையலையானதாக இருந்தது. சுருள் முடியாகவும் இல்லை; படிந்த முடியாகவும் இல்லை. அது அவர்களது காது மடல்களுக்கும் தோள்களுக்கும் இடையே தொங்கிக் கொண்டிருந்தது'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: கதாதா
நூல்: முஸ்லிம் 4666

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமுடி அலையலையானதாக இருந்தது; சுருள் முடியாகவும் இல்லை, படிந்த முடியாகவும் இல்லை என்று கூற வேண்டுமானால் தொப்பி அணியாமல் தலை திறந்த நிலையில் இருந்தால் தான் மற்றவர்களால் கூற முடியும்.
ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நரை முடி பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தலையில் எண்ணெய் தேய்த்திருந்தால் அவர்களது தலையிலிருந்து ஒரு சில நரை முடி கூடத் தென்படாது; அவர்கள் எண்ணெய் தேய்த்திருக்காவிட்டால் சில நரைமுடிகள் தென்படும்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஸிமாக் பின் ஹர்ப்
நூல்: முஸ்லிம் 4680

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எண்ணெய் தேய்த்திருக்கும் போது தெய்க்காமல் இருந்த போதும் தலையை தொப்பியால் மறைக்காமல் இருந்துள்ளனர் என்பது இதில் இருந்து தெரிகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையில் அல்லாஹ் அவர்களை இறக்கச் செய்தான்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3548

தாடியில் உள்ள நரை முடி எத்தனை என்று சொல்வதற்கு ஏற்றவாறு எவ்வாறு தாடி மறைக்கப்படாமல் இருந்ததோ அப்படித்தான் தலையும் மறைக்கப்படாமல் இருந்துள்ளது என்பதை இதில் இருந்து அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது முடியை (நெற்றியின் மீது) தொங்க விடும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். இணை வைப்பவர்ர்கள் தங்கள் தலை முடியைப் பிரித்து (நெற்றியில் விழ விடாமல் இரு பக்கமும்) தொங்க விட்டு வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த விஷயங்களில் தமக்கு இறைக் கட்டளை எதுவும் இடப்படவில்லையோ, அந்த விஷயங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப் போக விரும்பி வந்தார்கள். பிறகு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் (தலை) முடியை (இரு பக்கங்களிலும்) பிரித்து (வகிடெடுத்துக்) கொண்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3558

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எத்தனை நரை முடிகள் இருந்தன? எப்படி வகிடு எடுத்தார்கள்? என்றெல்லாம் அறிவிக்க வேண்டுமானால் திறந்த நிலையில் அவர்களின் தலை இருந்திருக்க வேண்டும் என்பதைச் சாதாரணமாக நாம் அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமல்லாமல் நபித் தோழர்களும் கூட தலையை மறைக்காதவர்களாகப் பெரும்பாலும் காட்சியளித்துள்ளார்கள் என்பதற்கும் சான்றுகள் உள்ளன.

நான் நீண்ட முடியுடையவனாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது ஆட்சேபணை செய்வது போன்ற ஒரு சொல்லைக் கூறினார்கள். உடனே நான்  சென்று என் முடியைக் கத்தரித்து விட்டுச் சென்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நான் உன்னைச் சொல்லவில்லை என்றாலும் இது (முன்பை விட) அழகாக உள்ளது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல்கள்: நஸயீ 4980, அபூதாவூத் 3658

முக்கியமான மார்க்க அறிஞர் முன்னால் செல்லும் பொது தொப்பி போட்டுக் கொண்டு போக வேண்டும் என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஒரு நபித்தோழர் தலையைத் திறந்த நிலையில் இருந்துள்ளார். முடியைக் குறைப்பதற்கு முன்னாலும் குறைத்த பிறகும் தலை திறந்தவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் அவர் வந்த போதும் தொப்பி போட்டுக் கொண்டு வரக்கூடாதா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை
தலைவிரி கோலத்துடன் ஒரு மனிதரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது, "இவர் தமது முடியைப் படிய வைக்கும் ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளவில்லையா?'' என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: நஸயீ 5141, அபூதாவூத் 3540

தொப்பி தான் முக்கியமானது என்று இருந்தால் உனக்கு ஒரு தொப்பி கிடைக்கவில்லையா என்று அவர்கள் கேட்டிருப்பார்கள்.
மக்கா வெற்றி நாளில் (அபூபக்ரின் தந்தை) அபூகுஹாஃபா, (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரது தலைமுடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4270

தலைவிரி கோலமாக வந்தது, தலை வாராமல் வந்தது, வெள்ளை முடியுடன் வந்தது என்று பல நபித் தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் முன்னால் காட்சியளித்த போது எண்ணெய் தேய்த்து தலை வாரச் சொன்னார்களே தவிர, தலைக்குத் தொப்பி அணியுமாறு கூறவில்லை என்பதைக் கவனியுங்கள்.  
ஷரீக் அவர்கள் ஒரு ஜனாஸா தொழுகை நடத்தும் போது தமது தொப்பியைக் கழற்றி முன்னால் வைத்துக் கொண்டு தொழுகை நடத்தினார்கள் என்று கூறப்படுகின்றது.
நூல்: அபூதாவூத் 592

தொழுகைக்கு வெளியே அணிந்திருந்த தொப்பியை தொழுகையின் போது கழற்றி வைத்திருக்கின்றார் என்பதிலிருந்து அன்றைக்குத் தொப்பி தொழுகையுடன் சம்மந்தமில்லாத சாதாரண ஆடையாக இருந்துள்ளது என்பதை அறியலாம்.
ஜாபிர் (ரலி) அவர்கள் தமது கீழாடையை (பிடரி வரை தூக்கிக்) கட்டிக் கொண்டு தொழுதார்கள். அவர்களது உபரியான ஆடை மரச் சட்டத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஒருவர், ஒரு ஆடையுடனா தொழுகின்றீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், உன் போன்ற அறிவிலிகள் என்னைப் பார்க்க வேண்டுமென்றே இவ்வாறு செய்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எங்களில் எவரிடம் இரண்டு ஆடைகள் இருந்தன?'' என்று விடை யளித்தார்கள்.
நூல்: புகாரி 352

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தொப்பி போன்ற உபரி ஆடைகள் பலரிடம் இருந்ததில்லை என்பதற்கும், ஆண்கள் தலையை மறைப்பது அவசியம் இல்லை என்பதற்கும் இது மேலதிக ஆதாரமாக அமைந்துள்ளது.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ஒரேயொரு ஆடையை அணிந்து தொழுதார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரேயொரு ஆடை அணிந்து தொழுததை நான் பார்த்துள்ளேன் எனவும் கூறினார்கள்.
நூல்: புகாரி 353

இடுப்புக்கு மேல் ஒரு ஆடை, இடுப்புக்குக் கீழ் ஒரு ஆடை என இரண்டு ஆடைகள் அணியாமல், இரண்டுக்கும் சேர்த்து ஒரு ஆடை மட்டும் அணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள் என்பதிலிருந்து அவர்கள் தலையை மறைக்காமல் தொழுதுள்ளது உறுதியாகின்றது.
பழக்க வழக்கம் என்ற அடிப்படையில் விரும்பியவர் தொப்பியை அணிந்து கொண்டால் தவறில்லை. தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ அவ்வாறு ஒருவர் அணிந்து கொண்டால் அதைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.
அது போல் ஒருவர் தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணியாமல் இருந்தால் அவரைத் தொப்பி அணியுமாறு கட்டாயப்படுத்துவதற்கும், ஆர்வமூட்டுவதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை.

தலையை மறைத்துக் கொள்ள உபரியான ஆடை இருந்தும் வேண்டுமென்றே மறைக்காமல் நபித்தோழர்கள் தொழுதுள்ளனர் என்பதற்கும் ஆதாரங்கள் கிடைக்கின்றன.
தொப்பி அணியுமாறு அல்லாஹ்வோ அவனது தூதரோ கூறியதற்கு ஆதாரம் ஏதும் இல்லாததால் தொப்பி அணிவது மார்க்க சம்மந்தப்பட்டது அல்ல என்பதைச் சந்தேகமற அறியலாம்.

தொப்பி அவசியம் என்போரின் ஆதாரங்கள்

தொப்பி அணிவது அவசியம் என்ற கருத்துடையவர்கள் சில ஆதாரங்களை எடுத்துக் காட்டுகிறார்கள். அவற்றுள் சில ஆதாரங்கள் பலவீனமானவையாக உள்ளன.
மற்றும் சில ஆதாரங்கள் அவர்களின் கருத்தை நிலைநாட்டும் வகையில் இல்லை.
இன்னும் சில ஆதாரங்கள் அவர்களின் வாதத்துக்கு எதிராக உள்ளன. அவர்களின் ஆதாரங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
தொப்பி அணிவது அவசியம் என்பதற்கு அவர்கள் பின்வரும் ஹதீஸை தங்களின் ஆதாரமாக முன்வைக்கிறார்கள்  

....அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவருக்கு கியாமத் நாளில் கிடைக்கும் பதவிகளை மக்கள் தம் தலைகளை உயர்த்தி (அண்ணாந்து) பார்ப்பார்கள்'' என்று கூறிய அவர்கள் தமது தலையை உயர்த்திக் காட்டினார்கள். அப்போது அவர்களின் தொப்பி கீழே விழுந்தது... அவர்களின் தொப்பி என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொப்பியா? அல்லது உமர் (ரலி) அவர்களின் தொப்பியா? என்பது எனக்குத் தெரியவில்லை என்று அறிவிப்பாளர் ஐயத்திற்கிடமான வார்த்தைகளால் அறிவித்துள்ளார்.

திர்மிதீ 1568, அஹ்மத் 145 ஆகிய நூற்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் இரண்டு பலவீனங்கள் உள்ளன. சொர்க்கத்தில் கிடைக்கும் உயர்ந்த பதவிகளை மக்கள் அண்ணாந்து பார்ப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறு கூறும் போது அவர்கள் அண்ணாந்து பார்ப்பதை செயல் மூலம் காட்டினார்கள். இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் போது அவர்களும் தமது தலையை உயர்த்தி அண்ணாந்து பார்த்து இப்படி அண்ணாந்து பார்ப்பார்கள் என்று கூறினார்கள்.
இப்படி அண்ணாந்து பார்ப்பதைச் செயல் மூலம் காட்டிய போது அவர்களின் தொப்பி கீழே விழுந்தது என்று அடுத்த அறிவிப்பாளர் கூறுகிறார். அவர்களின் தொப்பி விழுந்தது என்று கூறியது உமர் (ரலி) அவர்களின் தொப்பி கீழே விழுந்தது என்ற கருத்தில் கூறினாரா? அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொப்பி கீழே விழுந்தது என்ற கருத்தில் கூறினாரா? என்பதை அறிவிப்பாளர் தெளிவுபடுத்தவில்லை என்று அவருக்கு அடுத்த அறிவிப்பாளர் கூறுகிறார். இது அந்த ஹதீஸின் வாசகத்திலேயே கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ் இந்த ஒன்று மட்டுமே. இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்தது உறுதிப்படுத்தப்படவில்லை.

இது இந்தச் செய்தியில் காணப்படும் முதல் பலவீனம். இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள் குறித்தும் குறைபாடுகள் உள்ளதால் இந்தச் செய்தி மொத்தமாக நிராகரிக்கப்படும் நிலையில் இருப்பது இதில் உள்ள இரண்டாவது பலவீனமாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூயஸீத் அல்கவ்லானி என்பார் யாரென அறியப்படாதவர் ஆவார். மேலும் இப்னு லஹ்யஆ என்ற அறிவிப்பாளரும் இதில் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் ஆவார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்தது உறுதி இல்லாவிட்டாலும் உமர் (ரலி) தொப்பி அணிந்திருக்கலாம் என்று முடிவு எடுப்பதைக் கூட  மேற்கண்ட பலவீனங்கள் தடுத்து விடுகின்றன. இந்தச் செய்தி ஒட்டு மொத்தமாக பலவீனமாக உள்ளதால் இதை வைத்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தனர் என்று கூறும் எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நரை முடிகளைக் கூட எண்ணிச் சொன்ன நபித் தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாகக் கூறவில்லை என்றால் அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்திருக்கவில்லை என்பது உறுதி.

"நமக்கும் இணை வைப்பவர்களுக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு, தொப்பிகளின் மீது தலைப்பாகைகளை அணிவதாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ருக்கானா (ரலி)
நூல்கள்: திர்மிதீ 1706, அபூதாவூத் 3556

இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம்களில் ஒருவரான திர்மிதீ அவர்கள் இந்தச் செய்தியின் தரத்தை அதன் கீழே இவ்வாறு பதிவு செய்துள்ளார்கள்: "இதன் அறிவிப்பாளர் தொடர் வலிமையானதல்ல. இதில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் அபுல் ஹஸன் அல்அஸ்கலானீ என்பவரையும் இரண்டாவது அறிவிப்பாளர் (முஹம்மத் பின் ருக்கானா என்ற) ருக்கானாவின் மகனையும் நாம் யாரென அறிய மாட்டோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஹதீஸ் கலையின் மற்ற அறிஞர்களும் இவர்கள் யார் என்ற விபரத்தைக் கூறவில்லை.
யார் என்றே தெரியாத இரண்டு அறிவிப்பாளர்கள் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இந்தச் செய்தி பலவீனமானது என்பதால் இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

மேலும் இந்தச் செய்தியை ஆதாரமாகக் காட்டுபவர்கள், இதை முழுமையாகவும் செயல்படுத்துவதில்லை. இந்தச் செய்தியின்படி தொப்பி அணிந்து அதன் மேல் தலைப்பாகையும் அணிய வேண்டும். இது தான் இந்த ஹதீஸின்படி முஸ்லிம்களின் அடையாளம். இதை யாரும் செயல்படுத்துவதில்லை. வலியுறுத்துவதும் இல்லை. தொப்பி அணிவதை வலியுறுத்துவோர் வெறும் தொப்பி மட்டும் அணிந்தால் போதும் என்றே கூறுகின்றனர். ஆனால் தொப்பி மட்டும் அணிபவர்கள் இணை வைப்பவர்களுக்கான அடையாளத்தைக் கொண்டவர்கள் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்தாக உள்ளது.
இது பலவீனமான ஹதீஸாக இருப்பதுடன் தொப்பி அணிவதற்கு எதிரான ஆதாரமாகவே உள்ளது.

பின்வரும் செய்தியையும் தங்களின் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பிக்கு மேல் தலைப்பாகை அணிவார்கள். (சில நேரங்களில்) தலைப்பாகை இல்லாமல் தொப்பி மட்டும் அணிவார்கள். (சில நேரங்களில்) தொப்பி இல்லாமல் தலைப்பாகை மட்டும் அணிவார்கள்.
நூல்: ஸாதுல் மஆத், பாகம்: 1, பக்கம்: 130

ஸாதுல் மஆத் எனும் மேற்கண்ட நூலாசிரியர் இப்னுல் கையும் ஆவார். இவர் ஹதீஸ்களைத் தொகுத்த இமாம்களில் ஒருவர் அல்ல. இவர் ஹிஜ்ரி 691-751 ஆண்டில் வாழ்ந்தவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியை இவர் குறிப்பிடுவதாக இருந்தால் அந்தச் செய்திக்கான ஹதீஸ் நூலை இவர் குறிப்பிட வேண்டும். அப்படி எந்த நூலையும் குறிப்பிடாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்தார்கள் என்று இவர் கூறுவதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
மேலும் இவர் கூறுவது போல் ஹதீஸ் நூல்களில் எந்தச் செய்தியும் இல்லை என்பதே உண்மை.  

"அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?'' என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இஹ்ராம் கட்டியவர் சட்டை அணியக் கூடாது. முழுக்கால் சட்டை அணியக் கூடாது. புர்னுஸ் அணியக் கூடாது. அவருக்குக் காலணிகள் கிடைக்காவிட்டால் அவர் காலுறைகளைக் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி அணிந்து கொள்ளட்டும்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 134, 36 6, 1838,
1842, 5794, 5803, 5805, 5806

இந்தச் செய்தியில் இடம் பெறும் "புர்னுஸ்' என்ற சொல்லுக்கு தொப்பி என்று மொழி பெயர்த்து, இந்த ஹதீஸ் தொப்பி அணிவதற்கு ஆதாரம் என்று இவர்கள் கூறுகின்றனர். அதாவது "இஹ்ராம் கட்டியவர் தொப்பியை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இஹ்ராம் கட்டாதவர் தொப்பி அணியலாம் எனவும், நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தொப்பி இருந்துள்ளதையும் விளங்கலாம்' எனவும் இவர்கள் கூறுகின்றனர்.
முதலில் "புர்னுஸ்' என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பதைப் பார்க்கலாம்.
1. தலையை மறைத்து உடல் முழுவதும் போர்த்திக் கொள்ளும் ஆடை 2. நீண்ட தொப்பி. இதை இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஹஜ் செய்பவர்கள் அணிந்திருந்தனர். (நூல்: லிஸானுல் அரப், பாகம்: 6, பக்கம்: 26)

அரபி மொழி அகராதி நூலாகக் கருதப்படும் லிஸானுல் அரப் என்ற நூலில் இந்த இரண்டு பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
புகாரியில் இடம் பெறும் புர்னுஸ் என்ற வார்த்தைக்கு நீண்ட தொப்பி என்று பொருள் கொண்டாலும் இவர்கள் அணியும் இந்தத் தொப்பியை அது குறிக்காது. ஏனெனில் தற்போது அணியும் தொப்பி நீண்ட வகை தொப்பி கிடையாது. மிக மிகச் சிறிய வகை தொப்பியையே தொப்பி எனக் குறிப்பிடுகின்றனர்.

மேலும் அன்றைய காலத்தில் இருந்த தொப்பி (புர்னுஸ்)யை வைத்து மற்றவர்களைத் தாக்க முடியும். அவ்வளவு பெரியது, கனமானது. இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக இடம் உள்ளது.
உமர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் புகாரியில் விரிவாக இடம் பெற்றுள்ளது.
அதில் ...உமர் (ரலி) அவர்கள் கத்தியால் குத்தப்பட்ட நாளன்று அதிகாலை (தொழுகைக்காக) நான் (தொழுகை அணியில்) நின்று கொண்டிருக்கிறேன். எனக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. உமர் (ரலி) அவர்கள் (மக்களுக்குத் தொழுவிப்பதற்கு முன்) இரு தொழுகை அணிகளுக்கு இடையில் சென்றால் "சீராக நில்லுங்கள்'' என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அணிகளுக்குக்கிடையே சீர்குலைவு தென்படாத போதே முன் சென்று (தொழுகைக்காக) தக்பீர் (தஹ்ரீமா) கூறுவார்கள். சில சமயம் யூசுஃப் அத்தியாயம் அல்லது நஹ்ல் அத்தியாயம் அல்லது அது போன்ற (வேறோர் அத்தியாயத்)தை மக்கள் தொழுகைக்காக வந்து சேரும் வரையில் முதல் ரக்அத்தில் ஓதுவார்கள். (சம்பவ தினத்தன்று) அப்போது தான் தக்பீர் கூறியிருப்பார்கள். "என்னை நாய் கொன்று விட்டது... அல்லது தின்றுவிட்டது'' என்று கூறினார்கள். (அப்போது அபூலுஃலுஆ ஃபைரோஸ் என்பவன் பிச்சுவாக் கத்தியால் அவர்களைக் குத்தி விட்டிருந்தான்) உடனே இந்த இல்ஜ் (அரபியல்லாத அந்நிய மொழி பேசும் இறை மறுப்பாளன்) தனது பிச்சுவாக் கத்தியை எடுத்துக் கொண்டு தனது வலப்பக்கம், இடப்பக்கம் நிற்கும் எவரையும் விடாமல் குத்திக் கொண்டே விரைந்தோடலானான். முடிவாக பதிமூன்று ஆண்களை அவன் குத்தி விட்டிருந்தான். அதில் ஏழு பேர் இறந்து விட்டனர். இதைக் கண்ட (அங்கிருந்த) முஸ்லிம்களில் ஒருவர் தமது நீண்ட தொப்பியை (புர்னுஸ்) (கழற்றி) அவன் மீது வீசி எறிந்தார். அந்த அந்நிய மொழிக்காரனான இறை மறுப்பாளன், தாம் பிடிபட்டு விடுவோம் என்று எண்ணிய போது தன்னைத் தானே அறுத்துக் (கொண்டு தற்கொலை செய்து) கொண்டான்.
நூல்: புகாரி 3700

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபாவின் அறிவிப்பில் அவனைப் பிடிப்பதற்காக நீண்ட தொப்பியை எறிந்தார் என்று இடம் பெற்றுள்ளது.
ஒருவரைத் தாக்கிப் பிடிக்கும் அளவுக்கு அந்தத் தொப்பி நீளமானதாகவும், கனமானதாகவும் இருந்துள்ளது. நம்மிடம் இருக்கும் நூல் தொப்பி குறிப்பிட்ட இடத்துக்குக் கூட போய் சேராது. கனமில்லாததால் இடையிலேயே விழுந்து விடும். எனவே ஹதீஸில் குறிப்பிடப்படும் புர்னுஸ் எனும் தொப்பியும் நமது காலத்தில் நடைமுறையில் இருக்கும் தொப்பியும் ஒன்றல்ல என்பதை இதில் இருந்து விளங்கிக் கொள்ளலாம். புர்னுஸ் என்ற வார்த்தை இடம் பெறும் இந்தச் செய்தியை தொப்பி அணிய ஆதாரமாகக் காட்டுவோர் ஹதீஸில் கூறப்படுவது போன்ற இரும்புத் தொப்பியை அணியுமாறு தான் கூற வேண்டும். னவே நடைமுறையில் அறியப்பட்டுள்ள தொப்பிக்கும் இந்த ஹதீஸுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

தொப்பி என்பதற்கு இப்போது நமது காலத்தில் வழக்கத்தில் உள்ள தொப்பி என்பது தான் பொருள் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் இந்த ஹதீஸ் வாசகத்தில் இருந்து தொப்பி அணியலாம் என்ற கருத்து தான் கிடைக்கும் அவசியம் என்ற கருத்தோ சிறந்தது என்ற கருத்தோ கிடைக்காது. 
குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஒரு காரியத்தைச் செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டால் மற்ற சந்தர்ப்பங்களில் அந்தக் காரியத்தைச் செய்யலாம் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். மற்ற சந்தர்ப்பங்களில் அதைச் செய்தாக வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.

நோன்பாளிகள் பகலில் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்றால் இரவில் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் என்று தான் பொருள் வரும். இரவில் கண்டிப்பாக தாம்பத்தியத்தில் ஈடுபட்டே ஆக வேண்டும் என்று யாரும் பொருள் கொள்ள மாட்டார்கள்.
ஜும்மாவுக்குப் பாங்கு சொன்ன உடன் கடையைத் திறந்திருக்கக் கூடாது என்றால் இதை எப்படிப் புரிந்து கொள்வது? ஜும்மா முடிந்தவுடன் விரும்பினால் கடையைத் திறக்கலாம். திறக்காமலும் இருக்கலாம் என்று தான் புரிந்து கொள்வோம். அது போல் தான் இந்த ஹதீஸையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இஹ்ராம் கட்டியிருக்கும் போது தொப்பி அணியக் கூடாது என்றால் மற்ற நேரங்களில் அணிவதற்கு அனுமதி உள்ளது என்று தான் விளங்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் தொப்பி அணிவது கட்டாயமான ஒன்றல்ல என்பதற்கு இந்த ஹதீஸ் சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது.

தொப்பி அணிவது அனுமதிக்கப்பட்டது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அது கட்டாயம் இல்லை என்பது தான் நமது நிலைப்பாடு. அந்த நிலைபாட்டுக்கு ஆதாரமாகத் தான் இந்த் ஹதீஸ் அமைந்துள்ளது.
தொப்பி அணிவது அவசியம் என்ற கருத்தைத் தான் இந்த ஹதீஸ் தருகிறது யாராவது பிடிவாதம் பிடித்தால் இந்த ஹதீஸில் கூறப்பட்ட அனைத்து ஆடைகளைப் பற்றியும் அவ்வாறு தான் அவர்கள் கருத்து கொள்ள வேண்டும்.
அதாவது இஹ்ராம் அணிந்தவர் தொப்பி அணியக் கூடாது என்பதை மட்டும் இந்த ஹதீஸ் கூறவில்லை. அத்துடன் சட்டை, பேன்ட், காலுறை ஆகியவற்றையும் இஹ்ராமின் போது அணியக் கூடாது எனக் கூறப்படுகிறது. இஹ்ராம் அல்லாத நேரத்தில் இம்மூன்றையும் அணிவது கட்டாயக் கடமை என்று இவர்கள் கூறுவார்களா?
மேலும் புகாரியின் இந்த ஹதீஸை வைத்து தொப்பி அணிவது சுன்னத் என்று சொன்னால் அந்த ஹதீஸில் உள்ள மற்றவைகளை அணிவதும் சுன்னத் என்று சொல்ல வேண்டும். சட்டை, முழுக்கால் சட்டை (பேண்ட்) செருப்பு, காலுறை (சாக்ஸ்) இவற்றையெல்லாம் அணிவது சுன்னத் என்று சொல்வார்களா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 1846, 3044, 4286, 5808

இந்த ஹதீஸை தொப்பி போடுவதற்கு ஆதாரம் காட்டுவோர் ராணுவ வீரர் போல் இரும்புத் தொப்பி போடுவது தான் சுன்னத் என்று கூற வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவை நோக்கி இணை வைப்பாளர்களிடம் போர் புரியச் சென்றார்கள். அதனால் அவர்கள் தலையில் இரும்பு கவசத் தொப்பி இருந்தது. போர்க் களங்கள் தவிர வேறு நேரங்களில் அவர்கள் இரும்புத் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் இல்லை.
இரும்புத் தொப்பியை எல்லாம் தொப்பிக்கு ஆதாரமாக இவர்கள் காட்டுவதில் இருந்து உருப்படியான ஆதாரம் ஒன்றும் இல்லை என்பது தெளிவாகிறது.
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.
அல்குர்ஆன் 7:31

"இந்த வசனம் பள்ளிவாசலுக்கு அலங்காரத்துடன் வருமாறு கட்டளையிடுகிறது;. எனவே தொப்பி என்பதும் ஒரு அலங்காரம். ஆகவே தொப்பி அணிந்து வர வேண்டும்'' என்று சிலர் வாதிடுகின்றனர்.
இவர்களின் வாதம் முற்றிலும் பலவீனமானதாகும். தொப்பி ஒரு அலங்காரப் பொருளாக நடைமுறையில் பயன்படுத்தப்படுவதில்லை. இவர்கள் மார்க்கக் கடமை என்று தவறான கருத்தை விதைத்ததாலும் நிர்பந்தப்படுத்துவதாலும் தொப்பி அணிந்து பள்ளிக்குச் செல்கிறார்கள். தொழுது முடித்தவுடன் அதை மடித்து சட்டைப் பைக்குள் வைப்பவர்களே அதிகம். இதிலிருந்து இதை ஒரு அலங்காரப் பொருளாக இவர்கள் பயன்படுத்துவதில்லை என்பதையும் அலங்காரத்துக்கு எதிரானதாக தொப்பியைக் கருதுகிறார்கள் என்பதையும்  விளங்கலாம்.
மேலும் உண்மையில் அலங்காரமாக அழகாக இருக்கும் பல பொருட்களை இவர்கள் அணிந்து வருமாறு கட்டளையிடுவதில்லை. கண்ணாடி, கோட், சூட், டை போன்ற பொருட்கள் அலங்காரப் பொருட்களாக இன்று பயன்படுத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் அணிந்து வருவது சுன்னத் என்று சொல்வார்களா?.
இறைவனை வணங்க வரும் போது நல்ல ஆடைகளை அணிந்து தூய்மையாக வர வேண்டும் என்பதையும், அன்றைய காலத்தில் நடைமுறையில் இருந்த நிர்வாணமாக தவாஃப் செய்வது போன்ற காரியத்தை செய்யக் கூடாது என்பதையும் தான் இவ்வசனம் கூறுகிறது. இவர்கள் கூறுவது போன்று தொப்பி அணிந்து பள்ளிவாசலுக்கு வருமாறு இந்த வசனம் கூறவில்லை.

இவை தான் தொப்பி போடுவது சுன்னத் என்று சொல்பவர்களின் ஆதாரம். இந்த ஆதாரங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்மந்தப்பட்ட செய்திகளில் தொழுகையில் தொப்பி போட்டிருந்தார்கள் என்ற வாசகம் இடம் பெறவில்லை.
அடுத்து இவர்கள் காட்டிய ஆதாரங்களில், தொப்பி என்று அவர்கள் மொழிபெயர்த்திருக்கும் அரபிச் சொல்லுக்கு நீண்ட தொப்பி என்றே பொருள் கொள்ள வேண்டும். மேலும் அவை அடுத்தவர்களைத் தாக்கும் அளவுக்குக் கனமானதாகவும் இருந்துள்ளது. இதற்கும் இப்போது தொப்பி எனக் கூறப்படுவதற்கும் சம்மந்தம் இல்லை.
தொப்பியைப் பற்றி இவர்கள் எடுத்துக் காட்டிய எந்தச் செய்தியிலும் தொப்பி அணிய வேண்டும் என்ற கட்டளையோ ஆர்வமூட்டுதலோ இல்லை.

மேலும் இவர்கள் தமிழில் வெளியிட்ட தொழுகை ஷாஃபீ, தொழுகை ஹனஃபீ ஆகிய நூல்களில் தொழுகையின் பர்லுகள், வாஜிபுகள், சுன்னத்துகள் என்று சில விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் தொப்பி அணிவது பர்லு என்றோ வாஜிபு என்றோ அல்லது சுன்னத் என்றோ குறிப்பிடவில்லை. இதிலிருந்து தொப்பி போடுவது சுன்னத் இல்லை என்பதை அவர்கள் நூலில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.
மேலும் தொப்பி போடாமல் தொழுதால் தொழுகை கூடாது என்றோ, அல்லது தொப்பி போடாமல் தொழுபவர்களைப் பள்ளியில் அனுமதிக்கக் கூடாது என்றோ எந்த மத்ஹப் நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

சுன்னத் என்பதன் இலக்கணம்

ஒரு பேச்சுக்கு இவர்கள் கூறுவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தார்கள் என்று ஏற்றுக் கொண்டாலும் அதை சுன்னத் என்று கூற முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகள் இரு வகைகளில் அமைந்துள்ளன. ஒன்று வணக்கவழிபாடுகள். மற்றொன்று உலகம் சம்மந்தப்பட்ட காரியங்கள். வணக்கவழிபாடுளைப் பொருத்தவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடைத்தால் அவை மார்க்கச் சட்டமாகி விடும். ஆனால் உலகக் காரியங்களைப் பொருத்தவரை அவர்கள் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடைத்தாலும் அவை மார்க்கச் சட்டமாகாது. தாம் செய்ததுடன் அவர்கள் வாயால் கட்டளை இட்டால் மட்டுமே அவை மார்க்கச் சட்டமாக ஆகும்.

ஒட்டகத்தில் பயணம் செய்தது, கோதுமை உணவை உட்கொண்டது, போன்ற காரியங்களை இரண்டாம் வகைக்கு நாம் உதாரணமாக நாம் குறிப்பிடலாம். மேற்கண்ட காரியங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்பது உண்மை என்றாலும் அவற்றை நாம் செய்வது சுன்னத் என்று ஆகாது. இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள தலைமுடி வளர்ப்பதையும், தாடி வைப்பதையும் உதாரணமாகக் கூறலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாடியும் வைத்துள்ளனர். தலைமுடியும் வளர்த்துள்ளனர். ஆனாலும் தாடி வைப்பதை சுன்னத் என்கிறோம். தலைமுடி வளர்ப்பதை சுன்னத் என்று யாரும் கூறுவதில்லை. தாடியும், தலைமுடியும் வணக்க வழிபாடுகளில் உள்ளவை அல்ல. எல்லா மனிதர்களும் செய்யக் கூடிய காரியங்களே. ஆனாலும் தாடி வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் தாடி வளர்த்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் மற்றவர்களுக்கும் அது குறித்து கட்டளை இட்டதால் அது சுன்னத் ஆகிறது. ஆனால் தலைமுடி வளர்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலை முடி வளர்க்குமாறு மற்றவர்களுக்கு கட்டளை இடாததால் அது சுன்னத் ஆக ஆகவில்லை. மற்றொரு உதாரணத்தின் மூலமும் இந்த வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ளலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை உணவாக உட்கொண்டனர். இதனால் பேரீச்சம் பழத்தை உணவாக உட்கொள்வது சுன்னத் என்று யாரும் கூற மாட்டோம். ஆனால் நோன்பு துறக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தின் மூலம் நோன்பு துறந்ததுடன் பேரீச்சம் பழத்தின் மூலம் நோன்பு துறங்கள் என்று அவர்கள் ஆர்வமூட்டியதால் அது சுன்னத்தாக ஆகி விடுகிறது.
எனவே மார்க்க விஷயங்களைப் பொருத்தவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதும் மார்க்கமாகும். அவர்கள் செய்ததும் மார்க்கமாகும். அவர்கள் அங்கீகரித்ததும் மார்க்கமாகும்.
உலக விஷயங்களைப் பொருத்த வரை அவர்கள் கட்டளையிட்ட அனைத்தும் மார்க்கமாக ஆகும். ஆனால் அவர்கள் செய்தவை அனைத்தும் மார்க்கமாகாது. அது போல் அவர்கள் அங்கீகரித்தவை அனைத்தும் மார்க்கமாகாது. மாறாக அவர்கள்  செய்ததுடன் மற்றவர்களுக்கும் அது குறித்து கட்டளையிட்டால் மட்டுமே அவை மார்க்கமாக ஆகும்.
தொப்பி என்பது ஒரு ஆடையாகும் இது வணக்க வழிபாடுகளில் ஒன்று அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில நேரங்களில் தொப்பி அணிந்து இருந்தாலும் அவர்கள் தொப்பி அணியுமாறு கட்டளையிடவில்லை. ஆர்வமும் ஊட்டவில்லை. எனவே தொப்பி அணிவது சுன்னத் ஆக ஆகாது.
தொழுகையிலோ, தொழுகைக்கு வெளியிலோ ஒருவர் தொப்பி அணிய விரும்பினால் அணியலாம்; விரும்பினால் அணியாமலும் இருக்கலாம்.

வரலாற்றுப் பின்னணியில்

இந்திய முஸ்லிம்களிடம் தொப்பி மிகுந்த முக்கியத்தைப் பெற்றதற்கு வரலாற்று ரீதியான காரணமும் உள்ளது.
உலக இஸ்லாமியர்களுக்கு ஒவ்வொரு காலத்திலும் ஒரு நாடு தலைமை வகித்து வந்தது. கிலாஃபத் என்று சொல்லப்பட்ட இந்த தலைமைத்துவம் கடைசியாக துருக்கி வசம் வந்தது. துருக்கி தான் இஸ்லாமிய உலகின் தலைமையாக கருதப்பட்ட நேரத்தில் இந்தியாவைப் போல் துருக்கியும் அடிமைப்படுத்தப்பட்டது. எனவே இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் சுதந்திரத்துக்கு பாடுபட்ட அதே நேரத்தில் துருக்கியின் கிலாஃபத்தை மீட்பதற்கும் பாடுபட்டனர். இதற்காக கிலாஃபத் இயக்கத்தையும் இங்கே உருவாக்கினார்கள்.
இந்திய முஸ்லிம்கள் துருக்கியின் விடுதலைக்காக பாடுபட்டதால் இந்திய முஸ்லிம்களை இங்குள்ள விஷமிகள் துருக்கர் எனக் குறிப்பிடலாயினர். இது தான் பேசு வழக்கில் துலுக்கர் என ஆயிற்று.
கவி பாரதி கூட தனது கவிதையில் முஸ்லிம்களைப் பற்றி கூறும் போது
தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி
பெண்ணின் முகமலர் திரையிட்டு மறைத்து வைத்தல்
எனப் பாடினான்.

அது போல் திக்கை வணங்கும் துருக்கர் எனவும் முஸ்லிம்களைப் பற்றி கூறியுள்ளான்.
இஸ்லாமிய உலகின் தலைமையாக கடைசி காலத்தில் கருதப்பட்ட துருக்கி மக்கள் அனைவரும் தொப்பி போடுவதை தங்களின் தேசிய அடையாளமாகக் கருதினார்கள்.
அவர்கள் இஸ்லாத்தைப் பேணுகிறார்களோ இல்லையோ தொப்பியைப் பேணுவதில் தவற மாட்டார்கள்.

போர்க்களத்தில் கூட தொப்பி அணிந்து வாளைப் பிடிப்பதை விட தொப்பி கீழே விழாமல் காப்பாற்ற முயன்றதால் தான் எதிரிகளிடம் துருக்கியர் தோற்றுப் போனார்கள் என்று வரலாறு கூறுகிறது. அந்த அளவுக்கு தொப்பி அவர்களின் வாழ்வோடு ஒன்றி இருந்தது.
நமக்கு தலைமை துருக்கி தான் என்ற எண்ணம் விதைக்கப்பட்டதன் விளைவாக இங்குள்ள் முஸ்லிம்கள் நாமும் தொப்பி போடுவது மார்கக்க் கடமை என்ற முடிவுக்கு வந்தனர். அதிலும் ஆரம்ப காலத்தில் ஒரு முழம் உயரமுள்ள துருக்கி தொப்பியையே அணிந்து வந்தனர். காலம் சென்ற ஜமாஅதுல் உலமா மாநிலத் தலைவரும் ரஹ்மத் மாத இதழ் ஆசிரியருமான கலீல் ரஹ்மான் ரியாஜீ அவர்கள் ஒரு முழ உயரம் கொண்ட துருக்கி தொப்பி அணிந்ததை நான் பார்த்துள்ளேன். இன்னும் பல மார்க்க அறிஞர்களையும் இவ்வாறு கண்டுள்ளேன்.

எனவே துருக்கியின் தாக்கம் காரணமாகவே தொப்பி இஸ்லாமியச் சின்னம் என்ற கருத்து இந்திய முஸ்லிம்களிடம் ஆழப் பதிந்ததே தவிர மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் அல்ல.
03.07.2011. 23:51
http://onlinepj.com/books/thoppi_or_ayvu/

No comments:

Post a Comment