பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, March 23, 2017

உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதன் பொருள் என்ன?

உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதன் பொருள் என்ன?

மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா? 
உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதன் பொருள் என்ன?
"உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்'.
திருக்குர்ஆன் 49:7
உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்ற வாக்கியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இன்று வரை உயிருடன் உள்ளனர் என்பதற்கு ஆதாரமாகும் என்று வாதிடுகின்றனர்.
இவ்வசனம் அருளப்படும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்மக்களுடன் இருந்தனர் என்பதைத் தான் இவ்வசனம் சொல்கிறது. மரணிக்காமல் இப்போதும் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தை இவ்வசனம் தராது என்பதை அறியாமல் பிதற்றுகின்றனர்.
இவ்வசனம் அருளப்பட்டது முதல் இப்போது வரை உயிருடன் இருக்கிறார்கள் என்றால் உயிருடன் இருக்கும் போது செய்ய வேண்டிய கடமைகளை ஏன் அவர்கள் செய்யாமல் உள்ளனர்? தூதர் என்ற முறையில் உலகம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்யும் கடமையை அவர்கள் விட்டிருப்பார்களா?
இன்று சமுதாயம் எழுபத்திரண்டு கூட்டங்களாகப் பிரிந்துள்ள நிலையில் அதை ஏன் தடுக்க வராமல் உள்ளனர்?
முஸ்லிம் நாடுகள் தமக்கிடையே போர் செய்து கொண்டு பல்லாயிரம் உயிர்கள் பலியாகிக் கொண்டு இருக்கும் போது அவர்கள் வந்து ஒரு வார்த்தை சொன்னால் போதுமே? ஏன் அதைச் செய்யவில்லை? தூதருக்கு அதுதானே முதல் கடமை?
அவர்கள் உயிருடன் இருந்தால் அவர்களைக் குழி தோண்டி அடக்கம் செய்வது ஆகுமா? உயிருடன் உள்ளவரைத் தான் நபித்தோழர்கள் அடக்கம் செய்தார்களா?
இப்படிச் சிந்தித்துப் பார்த்தால் இது போல் உளற மாட்டார்கள்.
திருக்குர்ஆனில் உலகம் உள்ளளவும் கடைப்பிடிக்க வேண்டிய போதனைகளும் உள்ளன. அருளப்பட்ட காலத்து வரலாறும் உள்ளது. அது அந்தக் காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டதாகும்.
உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்ற சொல்லுக்கு இவர்கள் கூறுகிறபடி பொருள் கொண்டால் நபித்தோழர்களும் உயிரோடு உள்ளனர் என்று அவர்கள் சொல்ல வேண்டும். உங்களிடையே என்று யாரை அல்லாஹ் அழைத்துப் பேசுகிறார்களோ அவர்களும் உயிருடன் உள்ளனர். அவர்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கலந்து வாழ்கின்றனர் என்று சொல்ல வேண்டும். அவ்வாறு இவர்கள் சொல்வதில்லை.
மேலும் இவ்வசனத்துக்கு முன்னுள்ள வசனங்களும் இவர்களின் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும் என்று இதற்கு முன்னுள்ள 49:2 வசனம் கூறுகிறது.
நபிகள்  நாயகத்தின் குரலை விட மற்றவர்கள் குரலை உயர்த்தக் கூடாது என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. அவர்களின் குரல் எந்த அளவில் இருக்கும் என்பதை அன்றைய காலத்தில் வாழ்ந்த மக்கள் தான் அறிய முடியும். அவர்களின் குரலைக் கேட்டு அதைவிட குரலைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்றால் இது அன்றைய காலத்தவர்களுக்குத் தான் பொருந்தும். எனவே இது வரலாற்று நிகழ்வாகச் சொல்லப்படுகிறதே தவிர நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்காமல் என்றென்றும் உயிருடன் இருப்பார்கள் என்ற கொள்கையைச் சொல்லவில்லை என்பது இதில் இருந்து உறுதியாகின்றது.
மேலும் அதற்கு அடுத்த வசனத்தைப் பாருங்கள். தீய கொள்கை உள்ளவர்களுக்கு மரண அடியாக அமைந்துள்ளது.
(முஹம்மதே!) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை அழைப்பவர்களில் அதிகமானோர் விளங்காதவர்கள். நீர் அவர்களிடம் வரும் வரை அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்திருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 49:4, 5
நபியின் வீட்டுக்கு வெளியே நின்று அவர்களை அழைக்கக் கூடாது; அவர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று இவ்வசனத்தில் சொல்லப்படுகிறது. அப்படியானால் இவர்கள் மதீனாவுக்குச் சென்று நபியவர்களின் வீடாகிய அவர்களின் அடக்கத்தலத்தின் வாசலில் காத்திருக்க வேண்டும். நபிகள்  நாயகம் (ஸல்) அவர்கள் வெளியே வரும் வரை காத்திருக்க வேண்டும். கியாமத் நாள் வரை இவர்களுக்கு வாழ்நாள் அளிக்கப்பட்டு  இவர்கள் காத்திருந்தாலும் நபியவர்கள் வெளியே வந்து இவர்களைச் சந்திக்க மாட்டார்கள்.
இவ்வசனம் அருளப்பட்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்லடக்கம் செய்வது வரை வாழ்ந்த முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளைத் தான் இவ்வசனம் கூறுகிறது என்பது இதிலிருந்தும் உறுதியாகிறது.
பினவரும் வசனமும் இது போன்றது தான். இவர்களின் தீய கொள்கைக்கு ஆதாரமாக ஆகாது.
அல்லாஹ்வின் வசனங்கள் உங்களுக்குக் கூறப்படும் நிலையிலும், அவனது தூதர் (முஹம்மத்) உங்களுடன் இருக்கும் நிலையிலும் எப்படி (ஏக இறைவனை) மறுக்கின்றீர்கள்? அல்லாஹ்வைப் பற்றிக் கொள்பவர் நேரான வழியில் செலுத்தப்பட்டு விட்டார்.
திருக்குர்ஆன் 3:101
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் நடப்பதை எப்போது அறிவார்கள், எப்போது அறிய மாட்டார்கள் என்பதை அல்லாஹ் பின்வரும் வசனங்களில் தெளிவுபடுத்துகிறான்.
(முஹம்மதே!) அவர்களுக்கு நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை நாம் உமக்குக் காட்டினாலோ, உம்மை நாம் கைப்பற்றிக் கொண்டாலோ (அதைப்பற்றி உமக்கென்ன?) எடுத்துச் சொல்வதே உமது கடமை. விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.
திருக்குர்ஆன் 13:40
(முஹம்மதே!) பொறுப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை. எனவே அவர்களுக்கு நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை உமக்கு நாம் காட்டினால் அல்லது உம்மை நாம் மரணிக்கச் செய்தால் நம்மிடமே அவர்கள் கொண்டு வரப்படுவார்கள்.
திருக்குர்ஆன்  40:77
அந்த மக்களுக்கு எச்சரித்தவற்றில் சிலதைக் காட்டினால் என்பதற்கு எதிர்ச்சொல்லாக மரணிக்கச் செய்தால் என்ற சொல் இவ்வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உம்மை மரணிக்கச் செய்யாமல் விட்டு வைத்தால் நீர் அதனைக் காண்பீர். மரணித்து விட்டால் அவர்களுக்கு நேரும் கதியைக் காண மாட்டீர் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் சொல்லித் தருகிறான்.
எனவே நபிகள் நாயகத்தை அல்லாஹ் கைப்பற்றிக் கொண்ட பின்னர் இவ்வுலகில் நடப்பதை அறியும் ஆற்றல் நபியவர்களுக்கு அறவே இல்லை என்பதை இவ்விரு வசனங்களும் அழுத்தமாகச் சொல்கின்றன.
திருக்குர்ஆனில் கூறப்படும் வரலாற்று நிக்ழ்ச்சிகளை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதைப் பின்வரும் வசனத்திலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களிலேயே கடுமையான பகைவர்களாக யூதர்களையும், இணை கற்பிப்போரையும் (முஹம்மதே!) நீர் காண்பீர்! "நாங்கள் கிறித்தவர்கள்'' எனக் கூறியோர் நம்பிக்கை கொண்டோருக்கு மிக நெருக்கமான நேசமுடையோராக இருப்பதையும் நீர் காண்பீர்! அவர்களில் பாதிரிகளும், துறவிகளும் இருப்பதும், அவர்கள் ஆணவம் கொள்ளாது இருப்பதுமே இதற்குக் காரணம்.
திருக்குர்ஆன் 5:82
முஸ்லிம்களுக்கு நெருக்கமானவர்களாக கிறித்தவர்களைக் காண்பீர்கள் என்று சொல்லப்படுவதன் கருத்து என்ன? இவ்வசனம் அருளப்படும் போது வாழ்ந்த கிறித்தவர்கள் அப்படி இருந்தார்கள் என்பதுதான் இதன் பொருள்.
காலாகாலம் கிறித்தவர்கள் முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பார்கள் என்று இதற்குப் பொருள் கொள்ள முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் கிறித்தவர்கள் முஸ்லிம்களின் முதல் எதிரிகளாக இருந்தார்கள் என்பதை சிலுவைப் போர்களும், இன்றுள்ள கிறித்தவ நாடுகளின் அத்துமீறல்களும் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றன. எனவே இது அன்றைய காலத்து வரலாற்று நிகழ்வு என்பதில் சந்தேகம் இல்லை. அது போல் தான் உங்களுடன் அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்ற வசனத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment