பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, March 1, 2018

உம்ரா_மற்றும்_3_வகை_ஹஜ்_வேறுபாடு_என்ன

#ஹஜ்_உம்ரா

#உம்ரா_மற்றும்_3_வகை_ஹஜ்_வேறுபாடு_என்ன?

#பதில்_சுருக்கமாக

நபில் தொழுகை 2 ரகஅத், பின் லுஹர் தொழுகை 4 ரகஅத் ஆகியவை எப்படி தனித்தனி வணக்கங்களோ, அதே போன்று உம்ரா மற்றும் ஹஜ் ஆகிய இரண்டும் தனித்தனி வணக்கங்களாகும்.

உம்ரா என்பது குறைவான செயல்களைக் கொண்ட ஒரு வணக்கம். உம்ரா கட்டாயக் கடமையில்லை.
ஹஜ் என்பது கூடுதலான செயல்களைக் கொண்ட ஒரு வணக்கம். பர்ளான தொழுகையைப் போன்று, சக்தி பெற்றவர் மீது ஹஜ் கட்டாயக் கடமை.
குறிப்பு: ஹஜ்ஜை தமத்தூ என்ற வகையில் செய்தால், அதிலேயே ஹஜ்ஜும், உம்ராவும் அடங்கி விடுகின்றன. எனவே, பெரும்பாலானவர்கள் ”தமத்தூ ஹஜ்” செய்வதையே விரும்புகின்றனர்.

#விரிவாக

#உம்ரா_என்பது :

இஹ்ராம் கட்டி
கஅபாவில் தவாஃப் செய்து
இரண்டு ரக்அத்கள் தொழுது
ஸஃபா மர்வாவுக்கிடையே ஏழு தடவை ஓடுவது
பிறகு தலையை மழித்து அல்லது சிறிதளவு முடியை குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபடுவது.
ஆகியவையே உம்ராவாகும்.
குறிப்பு : ஹஜ்ஜை குறிப்பிட்ட நாட்களில் தான் நிறைவேற்ற முடியும். ஆனால், உம்ராவுக்கென்று குறிப்பிட்ட நாட்கள் கிடையாது. வருடத்தின் எல்லா நாட்களிலும் உம்ராவை நிறைவேற்றலாம்.

ஹஜ் என்பது :

மினா, அரஃபா, முஸ்தலிஃபா, மீண்டும் மினாவில் சில காரியங்கள், தவாஃபுல் இஃபாளா, பிறகு துல்ஹஜ் 11, 12, 13 நாட்களில் கல்லெறிதல் என ஏராளமான கிரியைகள் ஹஜ்ஜில் உள்ளன. மூன்று வகையான ஹஜ்ஜுகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை மட்டும் தற்போது காண்போம்!

மூன்று வகை :

ஹஜ்ஜில் மூன்று வகைகள் உள்ளன.  வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஹஜ் எனும் வணக்கத்திற்காக மூன்று வகையாக இஹ்ராம் கட்டலாம். அதில் முதல் வகை தமத்துவ் எனப்படும்.

(இஹ்ராம் என்றால் சில கட்டுப்பாடுகளை பின்பற்றிய நிலையில், குறிப்பிட்ட வார்த்தைகளை கூறுவதாகும்)

தமத்துவ்

முதலில் உம்ரா: ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்கள் ஹஜ்ஜுடைய மாதங்கள் என்பதை நாம் அறிவோம்.  ஹஜ்ஜுடைய இந்த மாதங்களில் இஹ்ராம் கட்டுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளில், முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு இஹ்ராம் கட்டியவர் மக்கா சென்று, முதலில் உம்ராவை நிறைவேற்றி விட்டு, தலை முடியை சிறிதளவு குறைத்துக் கொண்டு இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.

பின்னர்: இஹ்ராம் இல்லாமல் அவர் மக்காவிலேயே தங்கியிருக்க வேண்டும்.

பிறகு ஹஜ் : துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று, மீண்டும் ஒரு தடவை ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்ட வேண்டும். அதன் பிறகு ஹஜ்ஜுடைய கிரியைகளை நிறைவேற்றி முடிக்க வேண்டும்.

இப்போது மீண்டும் தவாஃபுல் குதூம், 2 ரகஅத், ஸஃபா-மர்வா, முடி குறைத்தல் உண்டா? அல்லது இஹ்ராம் கட்டி, நிய்யத் கூறி, துல்ஹஜ்-8 அன்று நேரடியாக மினாவிற்கு செல்ல வேண்டுமா?

இதற்கு தமத்துவ் என்று கூறப்படுகின்றது.

முதலில் உம்ராவுக்கு இஹ்ராம் கட்டும் போது ”லப்பைக்க உம்ரதன்” என்றும்,

பிறகு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டும் போது, ”லப்பைக்க ஹஜ்ஜன்” என்றும் கூறி இஹ்ராம் கட்ட வேண்டும்.

கிரான்

கிரான் என்றால் சேர்த்துச் செய்தல் என்பது பொருள். அதாவது, இஹ்ராம் கட்டும் போது, ஹஜ்ஜுக்காகவும், உம்ராவுக்காகவும் சேர்த்து இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும். ”லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்” என்று கூறுவதன் மூலம் இவ்வாறு இஹ்ராம் கட்டலாம்.

ஒரு இஹ்ராமில் உம்ராவையும், ஹஜ்ஜையும் நிறைவேற்றுவதால் இது கிரான் (உம்ராவையும், ஹஜ்ஜையும் சேர்த்துச் செய்தல்) எனப்படுகின்றது.

இதில் மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவ்வாறு இஹ்ராம் கட்டியவர் உம்ரா என்று எதையும் தனியாகச் செய்வதில்லை. ஆனால், தமத்துவ் செய்பவர் முதலில் உம்ரா செய்வார். பிறகு, ஓய்வு எடுத்து விட்டு, பிறகு ஹஜ் செய்வார். கிரான் செய்பவர் ஹஜ்ஜை மட்டும் செய்துவிட்டு, ஹஜ்-உம்ரா இரண்டின் நன்மைகளையும் பெற்றுவிடுகிறார்.

அதாவது, கஅபாவில் நுழைந்தவுடன் செய்யும் தவாஃபுல் குதூம் செய்து விட்டு, இஹ்ராமைக் களையாமல் எட்டாம் நாளில் இருந்து ஹஜ்ஜின் கிரியைகளை அவர் செய்ய வேண்டும். ஹஜ் செய்பவர் எவற்றைச் செய்வாரோ அவற்றை மட்டும் செய்ய வேண்டும். ஆனாலும் இவர் ஹஜ்ஜும், உம்ராவும் செய்தவராகக் கருதப்படுவார்.

அப்படி எனில், நாம் கிரானே செய்து விடலாமே!

ஹஜ்ஜை மட்டும் செய்து, ஹஜ், உம்ரா ஆகிய இரண்டின் நன்மைகளையும் பெற்றுத் தரும் கிரானை செய்ய விரும்பினால், நீங்கள் கிளம்பும் போதே ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பலிப் பிராணியை உங்களோடு அழைத்து வந்திருக்க வேண்டும். மேலும், பலியிடும் வரை இஹ்ராமைக் களைய முடியாது. இந்த இரண்டு நிபந்தனைகளையும் உங்களால் நிறைவேற்ற முடியுமெனில் நீங்கள் கிரான் செய்ய முடியும். இல்லையெனில் தமத்துவ் தான் சிறந்தது.

ஹஜ் செய்பவர் எவற்றைச் செய்வாரோ என்றால் என்ன? ஹஜ் செய்பவர் எவற்றை செய்வார்?

அதாவது மினாவில் 5 வேளை தொழுவதிலிருந்து ஆரம்பிக்கும் கிரியைகள், மினா, அரஃபா, முஸ்தலிஃபா, மீண்டும் மினா, பிறகு கல்லெறிதல், குர்பானி கெடுத்தல், முடி மழித்தல், தவாஃபுல் இஃபாளா, பிறகு துல்ஹஜ் 11, 12, 13 நாட்களில் கல்லெறிதல் – இவைகள் தான் ஹஜ் செய்பவர் செய்யும் கிரியைகள்.

இஃப்ராத்

இஃப்ராத் என்றால் தனித்துச் செய்தல் என்பது பொருள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுமிடத்தில் ஹஜ்ஜுக்காக மட்டும் லப்பைக்க ஹஜ்ஜன் என்று கூறி இஹ்ராம் கட்ட வேண்டும். அதைத் தொடர்ந்து ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்ற வேண்டும். ஹஜ்ஜின் கிரியைகளை முடித்த பிறகு விரும்பினால் உம்ராச் செய்யலாம்.

இவ்வாறு ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டியவர்கள் குர்பானி எதனையும் கொடுக்க வேண்டியதில்லை.

குர்பானி கொடுப்பது. இஹ்ராம் கட்டும் போது நிய்யத் செய்வது ஆகிய இரண்டு விஷயத்தைத் தவிர இஃப்ராத் என்பதற்கும் கிரான் என்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஆயினும், கிரான் என்று நிய்யத் செய்தவர் ஹஜ், உம்ரா இரண்டையும் செய்த நன்மையை அடைகிறார்.

இஃப்ராத் என்று நிய்யத் செய்தவர் ஹஜ் மட்டும் செய்தவராக ஆகின்றார்.

மக்காவில் வசிப்பவர்கள்,  இந்த வகையான இஹ்ராம் மட்டுமே கட்டி ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். மற்றவர்கள் இந்த மூன்று வகைகளில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். இவற்றுக்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம், உங்களில் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் இஹ்ராம் கட்டுபவர் அவ்வாறே செய்யட்டும். உம்ராவுக்கு இஹ்ராம் கட்டுபவர் அவ்வாறே செய்யட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினார்கள். அவர்களுடன் சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினார்கள். மற்றும் சிலர் ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கும் இஹ்ராம் கட்டினார்கள். இன்னும் சிலர் உம்ராவுக்கு இஹ்ராம் கட்டினார்கள். நான் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரி 317, 1562

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்ததும் உங்களில் கையோடு குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்தவர் ஹஜ்ஜை நிறைவேற்றும் வரை இஹ்ராமிலிருந்து விடுபட முடியாது. உங்களில் குர்பானிப் பிராணியைக் கொண்டு வராதவர் கஃபாவைத் தவாஃப் செய்து, ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி முடியைக் குறைத்து (உம்ராவை முடித்தவராக) இஹ்ராமிலிருந்து விடுபடட்டும்; பிறகு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி, (ஹஜ்ஜை நிறைவேற்றிய பின்) குர்பானி கொடுக்கட்டும்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 319

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக ஆரம்பத்தில் இஹ்ராம் கட்டினாலும், பிறகு இறைவனது கட்டளைப் பிரகாரம் அதற்குள் உம்ராவையும் சேர்த்துக் கொண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகீக் எனும் பள்ளத்தாக்கை அடைந்த போது, ”என் இறைவனிடமிருந்து ஒரு (வான)வர் என்னிடம் வந்தார். இந்தப் பாக்கியம் நிறைந்த பள்ளத்தாக்கில் தொழுவீராக! உம்ரதுன் பீஹஜ்ஜதின் (ஹஜ்ஜுடன் உம்ராவையும் சேர்க்கிறேன்.) என்று கூறுவீராக என்று கூறினார்” எனக் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 1534, 2337, 7343

ஹஜ்ஜுடன் உம்ராவையும் சேர்த்துச் செய்வதாக முடிவு செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியாக உம்ராச் செய்யவில்லை. ஆரம்பமாக நாம் குறிப்பிட்டுள்ள ஹதீஸ்களில் இருந்து இதை நாம் அறியலாம்.
கையோடு குர்பானிப் பிராணியைக் கொண்டு சென்றவர் கிரான் அடிப்படையில் இஹ்ராம் கட்டுவதே சிறந்தது. அவ்வாறு கொண்டு செல்லாதவர்கள் தமத்துவ் அடிப்படையில் இஹ்ராம் கட்டுவது சிறந்ததாகும்.

மேலே நாம் எடுத்துக்காட்டியுள்ள ஹதீஸிலிருந்தும் பின்வரும் ஹதீஸிலிருந்தும் இதை நாம் அறியலாம்.

மக்களெல்லாம் உம்ராவை முடித்து, இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில் நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே ஏன்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான் குர்பானிப் பிராணியைக் கையோடு கொண்டு வந்து விட்டேன். எனவே ஹஜ்ஜை முடிக்காமல் நான் இஹ்ராமிலிருந்து விடுபட மாட்டேன் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹஃப்ஸா (ரலி)

நூல்கள்: புகாரி 1568

No comments:

Post a Comment