பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, May 7, 2018

ஆன்மாக்களின்_உலகம்

#நம்பிக்கை

#ஆன்மாக்களின்_உலகம்

மனிதன் மரணித்து விட்டால் அவனது செயல்பாடுகள் முடிந்து விடுகின்றன. மரணித்தவனால் சிந்திக்கவும், செயல்படவும் முடியாது என்பதைக் கண்கூடாக நாம் காண்பதால் இதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை.

அதனால் தான் இறந்தவரை நாம் அடக்கம் செய்கிறோம். அவரது சொத்துக்களை வாரிசுகள் பிரித்துக் கொள்கிறார்கள். அவரது மனைவியை மற்றவர்கள் மணந்து கொள்கிறார்கள். இந்த விஷயத்தில் எல்லா முஸ்லிம்களும், முஸ்லிமல்லாத மக்களும் சரியான கருத்திலேயே இருக்கிறார்கள்.

மனிதன் மரணித்த பின்னர் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவான் என்றும், உயிர்ப்பிக்கப்படும் வரை பர்ஸக் எனும் ஆன்மாக்களின் உலகில் மனிதன் வாழ்கிறான் என்று முஸ்லிம்களாகிய நாம் நம்புகிறோம்.

மரணித்த மனிதர்கள் ஆன்மாக்களின் உலகில் உயிருடன் உள்ளனர் என்பதை முஸ்லிம்களில் பலரும் பலவாறாகப் புரிந்து கொள்கின்றனர்.

ஆன்மாக்களின் உலகில் இருந்து கொண்டு இவ்வுலகில் நடப்பதை அவர்கள் கவனித்துக் கொண்டு உள்ளனர். நாம் பேசுவதைச் செவிமடுக்கின்றனர். இறந்தவர்கள் மகான்களாக இருந்தால் நமது தேவைகளை நிறைவேற்றி வைக்கும் அளவுக்கு ஆற்றல் பெற்றவர்களாக இருக்கின்றனர் என்று சில முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

இந்த நம்பிக்கை தான் தர்கா வழிபாட்டுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

இறந்த பின்னர் இன்னொரு உலகத்தில் உயிருடன் உள்ளனர் என்ற அடிப்படை சரியானது தான். ஆனால் அங்கே இருந்து கொண்டு இவ்வுலகில் நடப்பதை அறியவோ, பார்க்கவோ, கேட்கவோ, மற்றவருக்கு உதவவோ இயலாது என்பதுதான் சரியான நிலைபாடாகும்.

இன்னொரு உலகில் வாழும் மனித உயிர்கள் இவ்வுலகில் உள்ளவர்களுடன் எந்தத் தொடர்பும் கொள்ள முடியாது என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன.

அவற்றை முதலில் அறிந்து விட்டு, மாற்றுக் கருத்து உள்ளவர்கள் எடுத்துக் காட்டும் ஆதாரங்களும், வாதங்களும் எப்படி தவறானவை என்பதை இரண்டாவதாக அறிந்து கொள்வோம்.

உறுதி செய்யப்பட்ட நபியின் மரணம்

நல்லடியார்கள் என்று கருதப்படுபவர்களை மரணித்து விட்டதாக நாம் கருதக் கூடாது என்பதும், அவர்கள் உயிருடன் தான் உள்ளனர் என்பதும் சிலரது நம்பிக்கை.

இது முற்றிலும் இஸ்லாத்துக்கு எதிரான நம்பிக்கையாகும். ஏனெனில் நல்லடியார்களில் முதலிடத்தில் உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே மரணித்து விட்டார்கள் என்று திருக்குர்ஆனும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றன.

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

திருக்குர்ஆன் 3:144

“எனது தொழுகை, எனது வணக்கமுறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்” என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:162, 163

(முஹம்மதே!) உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருப்பவர்களா?

திருக்குர்ஆன் 21:34

(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே.

திருக்குர்ஆன் 39:30

(முஹம்மதே!) உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருப்பவர்களா? ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 21:34, 35

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணத்து விட்டார்கள் என்பதை இவ்வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது நாம் அன்பு வைத்திருப்பதால் அவர்கள் மரணிக்கவில்லை என்று முடிவு செய்ய நம் மனம் விரும்புகிறது என்பது தான் நபிகள் நாயகம் மரணிக்கவில்லை என்று நாம் நம்புவதற்குக் காரணம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நபித்தோழர்கள் நம்மை விட அதிகமான நேசித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது இது போன்ற குழப்பம் அவர்களுக்கும் ஏற்பட்டது. அந்தக் குழப்பம் அன்றைக்கே தீர்க்கப்பட்டு விட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

(நபியவர்கள் மரணித்த போது) அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு, “எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் “அல்லாஹ் (என்றும்) உயிராய் இருப்பவன்; அவன் இறக்க மாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்” என்று சொன்னார்கள். மேலும், “(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே’ என்னும் (39:30) இறை வசனத்தையும், “முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்’ என்னும் (3:144) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள்.

நூல்: புகாரி 3668

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்று அன்பின் மேலிட்டால் கருதிய நபித்தோழர்கள், அபூபக்ர் (ரலி) அவர்கள் சான்றுகளை எடுத்துக் காட்டிய பின்னர் தமது முடிவை மாற்றிக் கொண்டார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறிகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள்; உயிருடன் இல்லை என்பதை நபித்தோழர்கள் உறுதியாக அறிந்து கொண்ட காரணத்தினால் தான் அபூபக்கர் (ரலி) அவர்களை ஆட்சியாளராக ஒருமித்து ஏற்றுக் கொண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆன்மாக்களின் உலகில் தான் உயிரோடு உள்ளனர். அவர்கள் மட்டுமின்றி மரணித்த அனைவரும் ஆன்மாக்களின் உலகில் உயிருடன் தான் உள்ளனர். இவ்வுலகைப் பொருத்தவரை அவர்களுக்கு எந்தத் தொடர்பும் உறவும் இல்லை என்பதுதான் இஸ்லாத்தின் நிலைபாடாகும்.

No comments:

Post a Comment